தாகூரின் கீதங்கள் -1 புவியில் வாழ விரும்புகிறேன் !

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


காவிய மேதை தாகூர்.
(1861-1941)

சி. ஜெயபாரதன், கனடா

பாரத நாட்டில் இராமயணம் எழுதிய வால்மீகி, பாரதம் படைத்த வியாசர் ஆகியோருக்குப் பிறகு ஆயிரக் கணக்கான பாக்களை எழுதியவர், இதுவரைத் தாகூரைத் தவிர வேறு யார் இருக்கிறார் என்று தெரியவில்லை எனக்கு. எண்பது ஆண்டுகள் சீருடன் வாழ்ந்த தாகூரின் அரிய காவியப் படைப்புகள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு நீடித்தன. கவிதை, நாடகம், இசைக்கீதம், கதை, நாவல், என்னும் பல்வேறு படைப்புத் துறைகளில் ஆக்கும் கலைத் திறமை கொண்ட தாகூருக்கு ஈடிணையானவர் உலகில் மிகச் சிலரே! ஏழை படும்பாடு (Les Miserables), நாட்டர் டாம் கூனன் (The Hunchback of Notre Dame) போன்ற நாவல்கள் எழுதிய, மாபெரும் பிரெஞ்ச் இலக்கியப் படைப்பாளி விக்டர் ஹ¥கோ[Victor Hugo (1802-1885)] ஒருவர்தான் தாகூருக்குப் படைப்பில் நிகரானவர் என்று சொல்லப்படுகிறது.

1913 ஆம் ஆண்டில் அவரது ஆங்கிலக் கீதாஞ்சலி இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்றவர் இரவீந்தரநாத் தாகூர். அவர் ஒரு கவிஞர், இசைப் பாடகர், கதை, நாவல் படைப்பாளர், ஓவியர், கல்வி புகட்டாளர், இந்தியாவிலே வங்காள மொழியில் மகத்தான பல காவிய நூல்கள் ஆக்கிய மாபெரும் எழுத்தாளர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக் குறைய இருபது பெரு நாடகங்கள், குறு நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புத் தொடர் நூல்கள் எழுதியவர். எல்லாப் பாடல்களை எழுதி அவற்றுக்கு ஏற்ற மெட்டுகளையும் இட்டவர் தாகூரே. அத்துடன் அவரது ஓவியப் படைப்புகள், பயணக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாரதியாரைப் போல் மாபெரும் தேசீயக் கவியான தாகூர், தேசப்பிதா காந்தியின் மீது மதிப்புக் கொண்டவர். காந்திக்கு “மகாத்மா” என்னும் பட்டம் அளித்தவர் தாகூர் என்பது பலருக்குத் தெரியாது. நோபெல் பரிசு பெற்ற தாகூருக்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் 1915 இல் நைட்கூட் (Knighthood) கௌரவம் அளித்தது. ஆனால் 1919 இல் ஜாலியன் வாலா பாக் தளத்தில் ஆயுதமற்றுப் போராட்டம் நடத்திய 400 மேற்பட்ட இந்திய சீக்கியரைப் பிரிட்டிஷ் படையினர் சுட்டுக் கொன்ற பிறகு தாகூர் அவர்கள் அளித்த கௌரவப் பட்டத்தைத் துறந்தார். எட்டு வயது முதலே தாகூர் தான் கவிதை புனையத் தொடங்கியதாய்த் தனது சுய சரிதையில் கூறுகிறார். அவரது முதல் கவிதைத் தொகுப்பு 17 ஆவது வயதில் வெளியானது. தாகூரின் படைப்புகளில் பரம்பரை இந்தியக் கலாச்சாரமும் மேற்கத்திய முற்போக்குக் கருத்துக்களும் பின்னிக் கிடக்கின்றன. 1901 ஆம் ஆண்டில் கொல்கத்தா நகரின் வெளிப்பகுதியில், “விசுவ பாரதி” என்னும் கலைப் பள்ளியை ஆரம்பித்தார். காலஞ் சென்ற பிரதமர் இந்திரா காந்தி விசுவ பாரதி கலைப் பள்ளியில் பயின்றவர்.

வங்காள மூலத்தில் எழுதிய தாகூரின் கீதாஞ்சலிக்கு வங்காளிகள் முதலில் நல்ல வரவேற்பு அளிக்கவில்லை. பிறகு தாகூரே அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட போது, மேற்திசை நாடுகள் கீதாஞ்சலியை பாராட்டிப் போற்றின. அதன் மகத்தான வரலாற்று விளைவுதான் கீதாஞ்சலிக்குக் கிடைத்த நோபெல் பரிசு. கீதாஞ்சலிப் பாக்களில் தாகூர் தன்னோடு உரையாடுகிறார். உன்னோடும், என்னோடும் உரையாடுகிறார். எல்லாம் வல்ல இறைவனுடன்
உரையாடுகிறார்.

எலிஸபெத் பிரௌனிங் காதல் நாற்பது கவிதைகள் இப்போது முடிந்து விட்டன. திண்ணையில் மறுபடியும் தாகூரின் கீதங்களைத் தமிழில் ஆக்க முனைகிறேன்.

**********************

தாகூரின் கீதங்கள் -1
புவியில் வாழ விரும்புகிறேன் !

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

வனப்பு மிகும் இந்த வையத்திலே நான்
இறக்க விரும்ப வில்லை !
வாழத்தான் விழைகிறேன்
மானிடரிடையே !
பரிதியின் வெளிச்சத்திலே
மலர்கள் விரியும் வனங்களிலே
அனைத்து உயிர்களின்
இதயத்திலே
எனக்கொரு தனியிடம் வேண்டுகிறேன் !
உறவும், பிரிவும் சேர்ந்து
முறுவலும், கண்ணீரும் பெருகி
ஓயாத அலைகளாய்ப்
பூதளம் நெடுவே
உயிரினப் பிறவிகள்
விளையாடி வருகின்றன
இடைவிடாது !
மானிடரின்
இன்ப துன்பத்தைப் பின்னி
அழிவில்லா ஓர் அவனி தன்னை
வடிவாக்க விரும்புகிறேன் !
அப்பணி
முடியாமல் போயினும் உம்மோடுதான்
வாழ்நாள் முழுதும்
வாழவே விழைகிறேன்,
காலையிலும் நடுப்பகலிலும் நீ
பறித்திட ஏதுவாய்
புதியதாகப்
பூக்கள் மலர்வதுபோல் இசைப்
பாக்களை எழுதிக் கொண்டு !
நான் சமர்ப்பிக்கும்
பூக்களை ஏற்றுக்கொள்
பூரிப்புடன் !
அந்தோ அவற்றை நீ
அகற்றிட வேண்டும், அவை யெல்லாம்
வாடி வதங்கி
மாய்ந்து போவதால் !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan October 29, 2007]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா