தலைவன் இருக்கிறார்

This entry is part [part not set] of 30 in the series 20090919_Issue

பா பூபதி


பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே – இவர்
துயர்களை தீர்க்கவோர் வழியில்லையே – பாரதி

மக்கள் தங்களின் வாழ்வியல் தேவைகளை பூர்த்தி செய்ய, தங்களை வழிநடத்த, தங்களின் உரிமைகளை மீட்டுத்தர இரண்டு பேர்களை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கடவுள், மற்றொருவர் மக்களின் தலைவர். கடவுள் மக்களின் நம்பிக்கையை சார்ந்தவராக இருக்கிறார். ஆனால் தலைவர்கள் மக்களின் நடைமுறை வாழ்வின் ஒரே நம்பிக்கையாக விளங்குகிறார்கள். மக்களின் அடிப்படை தேவைக்காக, மக்களின் உரிமைக்காக, மக்களின் முன்னேற்றத்திற்காக பல தலைவர்கள் தங்களின் வாழ்க்கையையே அர்பணித்துள்ளார்கள். காமராஜர், பெரியார், ஜீவாணந்தம் என மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பல தலைவர்கள் தோண்றியிருக்கிறார்கள். எனவே மக்களின் வாழ்வில் ஒரு பிரச்சனை ஏற்படும் போதும், உரிமை மறுக்கப்படும் போது அவர்கள் மனதில் எழும் ஒரே நம்பிக்கை வாசகம் நம் ‘தலைவன் இருக்கிறார்’ என்பதுதான்

தலைவனின் தகுதி:

முன்பு இருந்த தலைவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதையும் மக்களின் நலனுக்காக போராடுவதிலேயே அர்பணித்துக்கொண்டார்கள். அந்த தலைவர்கள் தாங்கள் போராட எந்த வழியை தேர்வு செய்திருந்தாலும் அந்த போராட்டத்தின் முடிவு மக்களின் நலன் என்பதில்தான் வந்து நின்றது. இதனால் தலைவர்களாக அவர்கள் செயல்பட அவர்களுக்கு தகுதியிருக்கிறதா என ஆராய்வது தேவையற்றதாக இருந்தது. அந்த தலைவர்களின் ஒவ்வொரு செயலின் முடிவுகளும் தங்களுக்கு நன்மை ஏற்படுத்துவதை உணர்ந்த மக்கள் கேள்விகளுக்கு இடமளிக்காமல் அந்த தலைவர்கள் கை காட்டிய திசை நோக்கி சென்றனர், அந்த தலைவர்கள் சொன்ன கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு போராடினர். அந்தகால தலைவர்களும் மக்களின் நம்பிக்கைகளை வீணாக்கவில்லை. இப்படி கேள்விகளுக்கு இடமளிக்காமல் தலைவர்கள் பின்னாடியே சென்று கொண்டிருந்த மக்கள் காலப்போக்கில் ஒரு தவறான புரிதல்களை மேற்கொண்டார்கள். அதாவது தங்களுக்கு தலைவனாக வருபவர்களின் தகுதியை பற்றி கவலைப்படாமல், அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சொன்னதை கேள்வி கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டார்கள், அவர்கள் காட்டிய வழியை அப்படியே பின்பற்றினார்கள். முன்பு இருந்த தலைவர்களின் நோக்கம் மக்களின் நலன் சார்ந்து இருந்தது அதனால் கண்மூடித்தனமாக அவர்களை பின்பற்றுவது தவறாக இருக்கவில்லை ஆனால் இப்படி கண்மூடித்தனமாக கேள்வி கேட்காமல் எல்லோரையும் எல்லா சூழ்நிலையிலும் பின்பற்றுவது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை மக்கள் உணரவில்லை. இப்படி பின்பற்றுவதை ஒரு பழக்கமாகவே ஏற்படுத்திக்கொண்ட மக்கள் நல்ல தலைவர்களின் பின்னால் கேள்வி கேட்காமல் சென்றதைப்போலவே இப்போது உள்ள தலைவர்கள் பின்னாலும் செல்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளால் தலைவனாக ஒருவர் வருவதற்கு தகுதி என்பது அவசியமில்லை என்பது போன்ற ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது.

அரசியல் தவிர மற்ற துறைகளில் ஒருவர் தலைவராக வர பல தகுதிகளை நாம் எதிர்பார்க்கிறோம். நாம் பணிபுரியும் அழுவலத்தில் நமக்கு பிறகு பணியில் சேர்ந்த ஒருவரை நமக்கு தலைவராக நியமித்தால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறாதா? நம்முடைய அனுபவம், தகுதியை காரணம் காட்டி நம்முடைய அதிர்ப்தியை உயர் அதிகாரிகளிடம் வெளிப்படுத்துகிறோம்.

விளையாட்டுத்துறையை எடுத்துக்கொண்டோமானால் ஒரு குழுவிற்கு ஒருவர் தலைவராக வர அவருக்கு போதுமான அளவுக்கு அனுபவம், ஒரு குழுவை வழிநடத்தும் பண்பு, சிக்கல்களை எதிர்கொண்டு சமாளிக்கும் திறன், சாதனைபடைக்க வேண்டும் என்ற துடிப்பு போன்ற குணங்களை பெற்றவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அவர் போட்டிகளில் வெற்றி பெற்று சாதிக்க வேண்டும். நம் நாட்டிற்கு பெருமை தேடித்தர வேண்டும் . அப்படி அவரால் சாதிக்க இயலாமல் போனால் அவர் தொடர்ந்து பதவியிலிருக்க நாம் அனுமதிபதில்லை. இந்திய கிரிக்கெட் அணி மோசமாக விளையாடும்போது அனைத்து ஊடகங்களின் வழியாகவும் நம்முடைய கண்டனத்தை தெரிவித்து அணியின் தலைமையை மாற்ற நாம் காரணமாக அமைகிறோம். சாதாரணமான விளையாட்டுப்போட்டிக்கு தலைவனை தேர்ந்தெடுக்க இவ்வளவு கவனம் செலுத்தும் நாம். நமக்கு முக்கிய தேவையான அரசியலில் தலைவரை தேர்ந்தெடுத்தலில் விளையாட்டுத்தனமாக இருந்துவிடுகிறோம்.

கேள்விகளுக்கு இடமளித்த தலைவர்கள்:

”நான் கூறுவதை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, உங்கள் அறிவு கொண்டு சிந்தியுங்கள். உங்கள் புத்திக்குச் சரி என்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள் தவறு என்றால் தள்ளிவிடுங்கள்.” என்றார் தந்தை பெரியார். உண்ணதமான அந்த தலைவர்களே தங்களின் வாழ்க்கையில் மக்களின் சிந்தனைக்கு இடமளித்தார்கள். கண்மூடித்தனமாக என்னை பின்பற்றுங்கள் என்று மக்களை கட்டாயப்படுத்தவில்லை. வெளிப்படையாக உண்மையாக உழைத்த அந்த தலைவர்களின் வாழ்க்கையில் கூட எதிர்மறையான சில விசயங்கள் இருந்ததாக விமர்சிக்கப்படுகிறது. அந்த கால தலைவர்களின் குற்றங்குறைகளை தற்போது இனையதளங்களில் ஆதாரத்துடன் அலசி ஆராய்ந்து விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் தொண்டிற்கு தங்களை அர்பனித்துக்கொண்டு வெளிப்படையாக வாழ்ந்து காட்டியவர்களையே விமர்சனத்திற்குள்ளாக்கி அவர்கள் சிறந்த தலைவர்களா என விவாதிக்கும் போது, தலைவர் என்ற பதவிக்குறிய தகுதி, மரியாதை, என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தலைவனைத் தேடி:

நீங்கள் சினிமா தியேட்டர் வழியாக பயணம் செய்யும் நபராக இருந்தால் காலையில் வேலைக்கு செல்லும் நேரத்தில் அந்த சினிமா தியேட்டரை கவணித்து பாருங்கள். திறக்கப்படாத சினிமா தியேட்டரின் வாசற்கதவு முன்பு ஒரு கூட்டம் நின்று கொண்டு உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டிருப்பார்கள். எதை எதிர்பார்த்து எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள். அவர்கள் உள்ளே எட்டிப்பார்த்துக்கொண்டிருப்பது ஒரு நல்ல திரைப்படத்தை பார்க்க வேண்டுமென்ற ஆர்வத்தினாலோ, பொழுதுபோக்குவதற்காவோ அல்ல, அவர்கள் அங்கே தங்களுடைய தலைவனை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இது நடப்பது பண்டிகை தினத்திலோ, விடுமுறை நாட்களிலோ அல்ல, வேலை நாட்களில் இப்படி நடக்கிறது. சினிமா நடிகர்கள் அரசியலில் தற்போது பெரும் பங்கு வகிக்கிறார்கள். இனப்பிரச்சனையா, மொழிப்பிரச்சனையா, தண்ணீர் பிரச்சனையா, நாட்டில் எந்தப்பிரச்சனையாக இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு முன்பாக அல்லது அவர்களைவீட தீவிரமாக நடிகர்கள்தான் மக்கள் பிரதிநிதியாக முன்வந்து போராடுகிறார்கள், தட்டி கேட்கிறார்கள். சினிமாவில் இவர்கள் பேசும் வசனங்களை உண்மை என மக்கள் நம்பத்தொடங்க அதை உண்மையாக்கும் முயற்சியாக பொருத்தமான பட்டங்களையும் இவர்கள் சூட்டிக்கொள்கிறார்கள். நாட்டில் ஒரு பிரச்சனை ஏற்பட்டால் அதைப்பற்றி ஊடகங்களில் கருத்து சொல்பவர்களில் பாதிபேர் நடிகர்களாகத்தான் இருக்கிறர். பத்திரிக்கை, தொலைக்காட்சி, தொழில் சார்ந்த விளம்பரங்கள் என அனைத்திலும் நடிகர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். நடிகர்களின் பேட்டி, புதிய சினிமா இல்லாமல் ஒரு பண்டிகை தினத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா! இனி நடிகர்கள் இல்லாமல் சுதந்திர தினம் கூட கொண்டாட முடியாது என்பதுதான் உண்மை. அவர்களின் பேட்டியில்லாமல் இனி எதுவும் நடக்காது. பாரம்பரியமிக்க அரசியல் கட்சிகள் கூட பிரபலமான நடிகர்களை அருகில் வைத்துக்கொள்ளவும் அவர்களுடைய செல்வாக்கை பயன்படுத்திக்கொள்ளவும் விருபுகின்றன.

தலைவனுக்கான புதிய தகுதி:

தற்போதுள்ள சூழ்நிலையில் ஒருவரைச் சுற்றி கூடும் கூட்டத்தின் அளவுதான் அவர் தலைவராக முடியுமா முடியாதா என்பதை தீர்மானிக்கிறது. பி.காம் தேர்வில் ஒரு நடிகர் காப்பியடித்து மாட்டிக்கொண்ட விசயம் பரபரப்பான செய்தியாக கொஞ்ச நாளைக்கு முன்பு வந்தது. இப்போது அந்த நடிகருக்கு கனிசமான கூட்டம் உண்டு இன்னும் கொஞ்ச நாளில் இந்த கூட்டம் அதிகரித்தால் வருங்கால அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. முறையாக படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று தேறியவர்கள் எங்காவது குறைந்த சம்பளத்தில் பணியாற்றிக்கொண்டிருக்க, இந்த நடிகரைப்போன்ற முட்டாள்கள் தலைவர்களாக உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு முரண்பாடு! இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம். யாரைச் சுற்றி கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பதுதான்.

நடிகர்களுக்கு சினிமா துறையில் நம்பர் ஒன் நடிகராக வரவேண்டும் என்பதுதான் இலட்சியமாக இருந்தது. தற்போது அந்த ஆசையை சற்று விசாலப்படுத்திக் கொண்டார்கள். நான்கு படம் நன்றாக ஓடிவிட்டால் தன்னை சுற்றியுள்ள மக்களை மூலதனமாகக் கொண்டு சினிமா துறையை தாண்டி நம்மால் என்ன செய்ய முடியும் என யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டை இலக்காக வைத்துக்கொண்டு விரைவில் மக்கள் தலைவனாகிவிடுவோம் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்கள் தங்களுடைய ஓவ்வொரு அசைவையும் பணமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சிரித்தால், அழுதால், கோபப்பட்டால், நடந்தால் எல்லாமே பணம்தான். மரம் வெட்டுபவன், கல் உடைப்பவன் போல நடிகர்களும் ஒருவையான தொழிலாளிகள்தான் என்பதை மறந்த மக்கள், பணம் சம்பாதிக்க முயலும் ஒரு தொழிலாலியை எந்த தகுதியை அடிப்படையாக கொண்டு அவர்களை வருங்கால முதல்வர்களாக கற்பனை செய்கிறார்கள் என்பதை யோசித்தோமானால், மக்கள் மனதிலுள்ள தவறான புரிந்துந்கொள்ளல்தான் காரணம் என்பது தெரியவரும்.

தவறாக புரிந்துகொள்ளுதல்:

மக்களாகிய நாம் நம் மனதில் சில விசயங்களை தவறாக புரிந்துவைத்திருக்கின்றோம். ஒருவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ஒரு வேலையை சிறப்பாக செய்து புகழடையும்போது. நாம் அந்த நபரை அவர் செய்துமுடித்த வேலையை அடிப்படையாக வைத்து மட்டும் பார்ப்பதில்லை, அவருடைய திறமை மற்ற துறைகளிலும் சிறப்பானதாகத்தான் இருக்கும் என நம்பிவிடுகிறோம். உதாரணமாக கிரிக்கெட்டில் இளம் புயலாக வர்ணிக்கப்பட்ட டெண்டுகரை கூப்பிட்டு கேப்டன் பதவி கொடுத்தார்கள். ஆனால் அவரால் ஒரு சிறந்த கேப்டனாக ஜொலிக்க முடியாமல் பல விமர்சனங்களுக்கு ஆளாகி மன உளைச்சளுக்கு உள்ளானார். இப்போது மீண்டும் கேப்டன் பதவி என்றதும் சூடுபட்ட பூனைபோல வேண்டாம் என மறுத்துவிடுகிறார். அவர் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கலாம் அதில் சந்தேகமில்லை ஆனால் சிறந்த பேட்ஸ்மேன் நிச்சயம் சிறந்த கேப்டனாகவும் இருப்பார் என எதிர்பார்ப்பது தவறு. பிரபலமான டாக்டர்கள், நடிகர்கள், மற்றும் மற்ற துறைகளில் பிரபலமாக இருப்பவர்களை திருமனம் செய்துகொண்ட பெண்கள் கூடிய விரைவிலேயே விவாகரத்து கேட்டு பிரிந்துவிடுவது இதனால்தான். நல்ல டாக்டர்கள், சிறந்த நடிகர்கள் போன்றோர் நல்ல கனவராக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது ஒரு பொதுவான கருத்து. ஆனால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் கிடையாது. குடும்ப வாழ்க்கையை பொருத்தவரையில் அவர்கள் ஒரு மோசமன மனிதர்களாகவும் இருக்கலாம். இப்படி பொதுவான கருத்துக்களை மனதில் நினைத்துக்கொண்டு நாம் செய்யும் முட்டாள் தனங்கள் ஏராளம்.

ஒருவர் ஒரு வேலையை சிறப்பாக செய்தால் அதை பாராட்டுவதோடு நிறுத்திக்கொள்ள மாட்டோம். இந்த வேலையை இவ்வளவு சிறப்பாக செய்கிறானே! இவன் நிச்சயம் எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்வான் என எண்ணத்தொடங்கிவிடுகிறோம். இந்த மாதிரி தவறான புரிந்துகொள்ளல் அனைத்து துறைகளிலும் நடக்கிறது சற்று அதிகமாக சினிமாதுறையில் நடக்கிறது. திரையில் ஒருவர் தோண்றி ஏழைகளுக்காக போராடுவதைப்போல் நடித்தாலோ, ஏழைகளை காப்பாற்றுவதுபோல் வசனம் பேசினால் சிறந்த நடிகர் என்று பாராட்டிவிட்டு வந்து தங்களுடைய வேலையை பார்க்காமல், இவர் அரசியலுக்கு வந்தால் இதே போல நமக்காக போராடுவார் என கற்பனை செய்துகொண்டு, தங்களை காப்பாற்ற வந்த ரட்சகராக அவரை நினைக்கத்தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் உண்மை என்ன என்று யோசித்தோமானால் நடிகர்கள் தங்களுடைய வாழ்வை காப்பாற்றிக்கொள்ள, தொடர்ந்து சினிமா துறையில் நிலைத்திருக்க எந்தமாதிரி வசனம் பேச வேண்டும் என்பதை புரிந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். தங்களை காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் மக்களை காப்பாற்ற வந்தவர் போல மாறிவிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு துறையிலும் ஒருவர் தன் திறமையை வெளிப்படும்போதும் அவர் எல்லா விசயத்திலும் திறமையானவர் என எண்ணி பொருப்புகளை கொடுத்து நாம் ஏமாற்றமடைந்து விடுகிறோம். மக்களின் இந்த மன ஓட்டத்தினால்தான் விளையாட்டு வீரர்களிலிருந்து, சினிமாதுறைவரை அனைவரும் அரசியல் கணவு காண்கிறார்கள்.

நமக்கு யார் சரியான தலைவன், நமக்கு யார் நல்லது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஒவ்வொருவர் பின்னாலும் ஓடிச்சென்று ஒரு தவறான தலைவர்கள் உருவாக நாமே காரணமாக இல்லாமல், சற்று நின்று யோசிக்க வேண்டும். இருப்பவர்களில் யார் உயர்ந்தவர்கள், யார் தவறானவர்கள் என்று அலசி ஆராய்ந்து கொண்டிக்காமல் அந்த மாற்றத்தை நாமே உருவாக்க வேண்டும். நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தலைவனாக நாமே மாற வேண்டும். மற்றவர்களுக்காக வேலை செய்து அவர்களை உயர்த்தி நம்மை நாமே தாழ்த்திக்கொண்டது போதும்.

saireader@gmail.com

Series Navigation

author

பா.பூபதி

பா.பூபதி

Similar Posts