தலைகீழாய் எரியும் ஜின்கள்

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

ஹெச்.ஜி.ரசூல்நான்கு அதிர்மூலைகளிலும்
பச்சைக் கொடிகுத்தி வேலிகள் கட்டிய
நூலிழைக் கோட்டை.
உள்நுழைந்து பரவ முடியாத துக்கத்தில்
புலம்பலைத் தொடர்ந்தது
அதான்முழங்கலில்
அதிர்ந்து போன் ஜின்னொன்று.
வெண்குதிரைமீதேறி
மின்னல்வெளிப் பாய்ந்து
போரிட்டு ஓய்ந்த சாக்காலம்.
பூட்டொன்று போட்ட
வசியம் பற்றி பேசிக் கொண்டே
காலம் தொற்றியது.
அஸ்மா எழுதிக் கரைத்த தண்ணீரில்
நம்பிக்கை மிச்சமிருந்தது.
எரியும் பாழ்கிணற்று தீக்குண்டில்
தலைகீழாய் தொங்கவிடப்பட்ட ஜின்கள்
நெருப்பு சவுக்குகளின்
அடிதாங்காமல் அலறல் நீள்கிறது.
நீரைக் கிழித்து மீன்குஞ்சாய்
நீந்தித் தொலைத்த போது
நீரெங்கும் பற்றியது நெருப்பு
நீருக்குள் திறந்த வாசலில்
ம அரிபாவை கண்டடைய தியானித்திருந்தது
ஒருநூறு குத்தப்பட்ட ஊசிகளோடு
நூல் பொம்மையொன்று.
தீராதவலிகளுடன்
பேரீச்சம் பாளையில் ஒளித்துவைக்கப்பட்ட
உயிரற்ற மந்திரக் குழந்தையின் பேச்சு..
இன்னமும் புரிபடவில்லை.
நீர்திரைகளைத் தாண்டி பெருநருப்பு எரிகிறது.


Series Navigation