தலிபன் செய்யும் புத்தச்சிலைகள் உடைப்பு சரிதான்

This entry is part [part not set] of 16 in the series 20010304_Issue

சின்னக்கருப்பன்


முன்னுரை:

திண்ணை ஆசிரியராகப்பட்டவர் மஞ்சுளா நவநீதன் அவர்களைக் கூப்பிட்டு, தலிபன் செய்யும் பாமியான் புத்தச் சிலை உடைப்பைப் பற்றி எழுதச்சொன்னார் (எனக்கு முன்னாலேயே). பிறகு என்னிடம் திரும்பி இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அவரும் வழக்கம்போல தாலிபான் செய்வது மகாத்தவறு என்று சொன்னார். நான் அப்படி அதைப் பார்க்கவேண்டிய அவசியமில்லை என்று சொன்னேன். அவர் ஆச்சரியமாய் அதெப்படி என்றார். நான் விக்கிரமாதித்ய சிம்மாசன பொம்மை போல அவருக்கு ஒரு கதை சொன்னேன். அவர் இந்த நோக்கில் புத்தச்சிலை உடைப்பைப் பற்றி திண்ணையில் கட்டுரை எழுதச்சொன்னார். இதோ இங்கே அந்தக் கட்டுரை

கட்டுரை:

ஒரு மீன்விற்பவள் நெடுநேரம் சந்தையில் மீன் விற்றுக் கொண்டிருந்தாள். திடாரென இருட்டி கடும் மழை பெய்ய ஆரம்பித்தது. அவசர அவசரமாக ஒரு கடையில் ஒதுங்கினாள். கடையோ பூக்கடை. மழை விடும் மாதிரித் தெரியவில்லை. கொட்டலையும் நிறுத்தவில்லை. மழையையே பார்த்துக்கொண்டிருந்த மீன்காரியிடம், பூக்கடைக்காரி சொன்னாள், ‘அம்மா, நீ ரொம்ப தொலைவு போகவேணும்போல. நீ இங்கேயே இரவு தூங்கி விட்டு காலையில் உன் வீட்டுக்குப் போ ‘.

மீன்காரிக்கும் வேறு வழியில்லாததால், அவள் அங்கேயே தூங்க ஆரம்பித்தாள். மீன் காரிக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தாள். காரணம் தெரிந்து விட்டது. பூக்கடையில் இருக்கும் பூ வாடை அவளுக்கு நாற்றமாய் இருக்கிறது. மீன் காரி எழுந்து பூக்கடைக்காரியிடம் கொஞ்சம் தண்ணீர் வாங்கி தன் மீன் கூடையில் தெளித்து அதை தலையில் கவிழ்த்துப் படுத்ததும் ஆனந்தமாய் தூக்கம்.

மீன் காரிக்கு மீன் வாடைதான் வாசம். அது பூக்கடைக்காரிக்கு பூ மணம் நல்ல வாசனை. இது ரொம்ப பழைய தமிழ் நாடோடிக்கதை.

இந்த நாடோடிக்கதை சொல்லும் விஷயத்தைத்தான் இப்போது மானுடவியலில் Cultural Relativism என்று சொல்கிறார்கள். வேறொரு கலாச்சாரத்துக்கும் மக்களுக்கும் பிடிக்காத விஷயம் மற்றொரு கலாச்சாரத்துக்கும் மக்களுக்கும் பிடித்தவிஷயமாக இருப்பதை அங்கீகரிப்பது என்பதுதான் இந்த கலாச்சாரப்பின்னணி அமைப்பு.

நாய் மாமிசம் நாகாலாந்து மக்களிடம் முக்கியமான பெரும் விருந்துகளில் பரிமாறப்படும் உணவு. நாய் மாமிசம் சாப்பிடுவது மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்கமுடியாத விஷயமாக இருக்கும். பசு மாமிசம் இந்துக்கள் (முக்கியமாக வட இந்திய இந்துக்கள்) சாப்பிடுவது பாவம் என்கிறார்கள். முஸ்லிம்களும், கிரிஸ்தவர்களும் பசு மாமிசத்தை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். முஸ்லீம்கள் பன்றி சாப்பிடுவதில்லை, இந்துக்களில் பலரும், பல கிரிஸ்தவர்களும் பன்றி மாமிசத்தை விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

இந்த பார்வையில் பார்த்தால், புத்தச் சிலைகளை உடைப்பது மற்றவர்கள் பார்வையில் தவறானதாகத் தெரியலாம். அது முஸ்லீம்களுக்கு மதக்கடைமை என்று தாலிபான் முஸ்லீம்கள் கூறுகிறார்கள். நாம் யார் அதைக் கேட்க ?

கலாசார வித்தியாசங்கள் என்ற பெயரில் பல நடைமுறைகள் உண்டு. தமிழ் நாட்டிலேயே பல கிராமங்களில், முஸ்லீம்கள் பெரும்பான்மை உள்ள பகுதிகளில் பெண்கள் சினிமா பார்ப்பது தவறு என்று ஊர்க்கட்டுப்பாடு உண்டு.

பெந்தே கோஸ்தே கிறுஸ்தவ மதப்பிரிவினரில் பலர், நோயுற்ற மகனையோ, மகளையோ , தன்னையோ காப்பாற்றிக் கொள்ளக்கூட மருத்துவரிடம் செல்வது தவறு என்றும், பிரார்த்தனை மூலம் குணப் படுத்த முடியும் என்று நம்புகின்றனர். பல உயிர்கள் அதனால் பலியானதும் உண்டு. அப்படி இறந்தவர்கள் கடவுளுக்குப் பிரியமானவர்கள் என்றும், கடவுள் அவர்களைச் சொர்க்கத்தில் சேர்ப்பார் என்றும் அவர்கள் நம்பிக்கை. தம் நம்பிக்கைக்காக தம் உயிருக்குயிரான மக்களைப் பலிகொடுக்க அவர்களுக்கு உரிமையில்லை, என்றும், சமூக வாழ்வில் ஒவ்வோர் உயிரும் சமுகத்தின் பொறுப்பும் கூட என்ற் வழக்குத் தொடர்ந்த சமூகசேவகர்களும் வெளிநாடுகளில் உண்டு. சமீபத்தில் அமெரிக்காவில் இது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

அமெரிக்காவில் பழங்குடியினர் மத்தியில் நரமாமிசம் சாப்பிடும் பழக்கமும் இருந்ததுண்டு. கலாசார வித்தியாசம் என்று அதனையும் நியாயப் படுத்த வேண்டும். உலகம் முழுவதும் ஒரு விதமான நியதிகள், விதிகள் என்பதைக் கட்டாயமாய்த் திணிக்க முடியாது.

தாலிபான் ஆப்கானிய புத்தச் சிலைகளை உடைப்பதை நான் எதிர்க்கவில்லை. தாலிபான் அந்தச் சிலைகளை வெறும் கற்கள் என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கண்ணதாசன் பாடினார் ‘ தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலைதான் ‘. பார்வையில்தான் எல்லாம் இருக்கிறது.

இன்னும் நான் பாமியான் புத்தச் சிலைகள் உலகத்தின் பாரம்பரியச் சொத்து என்று கூறுவதைக் கூட நான் ஒப்புக்கொள்ளவில்லை. அவை ஆப்கானியச் சொத்துக்கள். அவ்வளவுதான்.

எங்கள் ஊரில் அய்யனார் சிலைகள் இருக்கின்றன. பெரிய குதிரை சிலைக்குப் பக்கத்தில் அய்யனார் வீரமாக சிமிண்டினால் செய்யப்பட்டு நின்று கொண்டிருக்கிறார். அவைகள் கிராமத்துச் சொத்து. அவைகளை உருவாக்குவதோ, உடைப்பதோ, மீண்டும் உருவாக்குவதோ, எல்லாம் எங்கள் உரிமை. உலகச்சொத்து உரிமையாளர்கள் என்று கூறிக்கொண்டு யாரும் எங்கள் ஊரில் வந்து எங்களைத் தடுப்பதை நாங்கள் விரும்பமாட்டோம். தாலிபான் உடைக்கும் சிலைகள் பெரியவையாக இருக்கலாம், மிகப்பழமையானவையாக இருக்கலாம். இருந்தால் என்ன ? எங்கள் ஊரில் இருக்கும் சிலர் கிரிஸ்தவர்களாகிவிட்டார்கள். அவர்கள் அய்யனாரைக் கும்பிடுகிறார்கள். அவர்களது பிள்ளைகள் கும்பிடுவதில்லை. பின்னால் எங்கள் ஊர் கிரிஸ்தவர்களும் முஸ்லீம்களும் வாழும் ஊராகி விட்டால், அய்யனார் சிலைக்கு என்ன மதிப்பு, என்ன தேவை ? நம்புபவர்களுக்குத் தானே தெய்வம் ?

ஆகவே தாலிபானைத் திட்டவேண்டிய அவசியம் என்ன ? நான் அவர்களது கொள்கைகளை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களது கொள்கைகளை வைத்துக்கொள்ள அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அவை அவர்களது கொள்கைகள். அவர்களது சிலைகள். அவர்களது கலாச்சாரம். அவர்களது வரலாறு. உங்களுக்கு அவர்களது கொள்கைகள் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அவர்களைப்போல ஆகாமலிருங்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போனவர்கள் ஒரு சில விஷயங்களைப் பார்த்திருப்பார்கள். பிரகாரத்தில் ஒரு உடைந்த சிவலிங்கம் இருக்கிறது. அதன் மேல் ஒரு அழுக்கான பழைய அறிவிப்புப் பலகை இருக்கிறது ‘மாலிக்காபூர் தெற்கே வந்தபோது, இந்த சிவலிங்கத்தை வெளியில் வைத்துவிட்டு ஒரிஜினல் சிவலிங்கத்தை மறைத்துவைத்து விட்டார்கள். மாலிக்காபூர் இந்த சிவலிங்கத்தை உடைத்துவிட்டுப் போனபின்னர் ஒரிஜினல் சிவலிங்கம் இப்போது இருக்கும் இடத்தில் வைத்துவிட்டு இந்த சிவலிங்கத்தை இங்கே வைத்திருக்கிறோம் ‘ என்பது போன்ற வரிகள். விஜய நகரத்தில் கோவிலில் சிலைகள் முழுவதும் உடைக்கப் பட்டன. அதுவும் கூட அங்கிருந்த செல்வத்தைக் கொள்ளையடிக்கத் தான், என்று இவர்களால் சொல்லப் படுகிறது. பாமியான் புத்தச் சிலை உடைப்புகள் பற்றிய செய்திகள், மீனாட்சி அம்மன் கோவில் பலகையைப் பார்த்தவர்களுக்கு மீண்டும் ஞாபகம் வரத்தான் செய்யும். முடிந்தால் உங்கள் கலாச்சாரத்தை நீங்கள் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு உங்கள் கலாச்சாரமும், உங்கள் மொழியும், உங்கள் இசையும், உங்கள் கட்டடங்களும், உங்கள் ஓவியங்களும் பிடித்திருந்தால் அவைகளை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அதை விட்டுவிட்டு தாலிபானை காட்டுமிராண்டிகள் என்று இந்தியப் பத்திரிக்கைகள் எழுதுவது சரியல்ல. தாலிபானின் பார்வையில் சிலையைக் கும்பிடுபவர்கள் காட்டுமிராண்டிகள் என்பது மற்றவர்களுக்கு ஞாபகம் இருக்க வேண்டும்.

தாலிபானும் தாம் கஜினி முகமதுவின் வழி வந்தவர்கள் என்றும் , சிலைகளை உடைப்பது மதத்தின் படி புனிதக்கடமை என்றும் சொல்கிறார்கள். இது தவறு என்று சொல்ல நமக்கு என்ன உரிமை இருக்கிறது ? மதத்தைப் பின்பற்றுவதில் பெரும்பான்மையாக – அல்ல , முஸ்லீம்கள் மட்டுமே- உள்ள நாடாகி விட்ட ஆஃப்கானிஸ்தானில் முஸ்லீம் மதச் சட்ட திட்டங்கள் படித்தானே நடக்க முடியும். முஸ்லிம்கள் தவிர மற்றவர்கள் கையில் பட்டி அணிந்து கொண்டு – நாஜிகள் கீழ் யூதர்களுக்கு நடந்தது போல – வெளியே வரவேண்டும் என்று சட்டம் இயற்றி , மற்ற மதத்தினரும் இப்போது முஸ்லிம்கள் ஆகி விட்டனர்.

இதை விமர்சனம் செய்கிற முஸ்லிம் அறிவு ஜீவிகளும் கூட ‘ இந்தச் சிலைகளை வழிபடுபவர்கள் இப்போது யாரும் அங்கே இல்லை. அதனால் அதனை உடைப்பது தவறில்லை ‘ என்று தான் ஆத்மார்த்தமாய் எழுதுகிறார்கள். ஆஃகான் மக்கள் பஞ்சத்தாலும் பசியாலும் , குளிரினாலும் இறந்து கொண்டிருக்கையில் இந்தச் சிலை உடைப்பு என்ன சாதித்து விடும் என்று கேட்பவர்களுக்கும், இந்த உடைப்பாளர்களின் மன நிலை புரிவதில்லை. மக்களின் துயர் போக்குவோம் என்று வாக்குறுதி அளித்தோ , அல்லது மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக நாங்கள் பாடுபடப் போகிறோம் என்றோ சொல்லி வாக்குகள் வாங்கியோ இவர்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றவில்லை. தூய்மையான இஸ்லாமிய அரசை நிர்மாணிப்போம் என்று தான் மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார்கள். அவர்கள் ஆதரவுடன் தான், துப்பாக்கி முனையில் எதிர்ப்பாளர்களைத் தாக்கி விட்டு அரசு செய்கிறார்கள்.

பாஜக அரசு புத்தச்சிலை உடைப்புகளை எதிர்ப்பது எனக்கு ஆச்சரியமானதல்ல. மசூதியை உடைத்தவர்களுக்கு புத்தச்சிலை உடைப்பைப் பற்றிப் பேச அருகதை இல்லை.

ஆனால் மசூதி உடைப்புக்கும், புத்தர் சிலை உடைப்புக்கும் மிக முக்கியமான வித்தியாசம் உள்ளது. மசூதியை உடைப்பது தங்கள் மதம் விதித்த புனிதக் கடமை என்று இந்து தீவிரவாதிகளில் ஒருவர் கூடச் சொல்லிக் கொள்ளவில்லை. இந்துக்களை ஒரு ஓட்டு வங்கியாக்கும் அரசியல் உடைப்பாகத் தான் இருந்தது தவிர மதம் விதித்த உடைப்பாக இல்லை. இருக்கவும் முடியாது. ஏனெனில் ஆகம விதிகளின் படி, நிலத்தகராறு இருக்கும் இடத்தில் கோவில் கட்டுவது முறையாகாது. ஒரு சாரார் மக்கள் எதிர்க்கும் இடத்தில் கோவில் கட்டுவதும் முறையாகாது. ஒரு தெய்வச்சிலை இருந்த இடத்தில் இன்னொரு தெய்வச்சிலை வைத்துக் கோவில் கட்டுவதும் முறையாகாது. இதை எதிர்க்கும் பல இந்து மத மடாதிபதிகள் சொல்லும் காரணம் இதுவே. அது செளகரியமாக இருட்டடிப்புச் செய்யப்படுகிறது.

பாஜக செய்வது அரசியல். இந்த இந்து அரசியல், இந்துக்களுக்குத் தேவையாக இருக்கிறது. பரவி வரும் இஸ்லாமியத் தீவிரவாதத்தின் முன் முதல் எதிரிகளாக நிற்பது இந்துக்கோவில்களும் புத்த விகாரங்களும்தான் என்று அவர்கள் நினைக்கிறார்கள். காஷ்மீரில் 200க்கும் மேற்பட்ட இந்துக்கோவில்களும் புத்த விகாரங்களும் உடைக்கப்பட்டிருக்கின்றன இஸ்லாமியத் தீவிரவாதிகளால். (அது பற்றி செய்திகள் லேசுபாசாக வந்தும் பெரும் சர்ச்சையாகாமல் இருப்பதற்கு என்ன காரணம் ? காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் தன் ஓட்டு வங்கியை முஸ்லீம்களிடம் தக்கவைத்துக்கொள்ள விரும்புவதும், பாஜக அரசு தான் ஒரு கையாலாகாத அரசு என்று விளம்பரம் பெற விரும்பாததும், பத்திரிக்கையாளர்கள் இந்துச்சார்பாக எதையும் எழுத விரும்பாததும்தான் காரணம் என்று என் எண்ணம்). பெருகி வரும் இஸ்லாமியத் தீவிரவாதம், சுதந்திர இந்து, இந்திய வாழ்க்கைக்கு எதிரானது என்று இவர்கள் நம்புகிறார்கள். தங்களது கலாச்சாரத்தைக் காப்பாற்ற இது போன்ற விஷயங்களை எதிர்க்கிறார்கள். ஆகவே பாஜக செய்வது இந்துமதத்தில் இல்லாத ஒரு விஷயத்தை இந்து மதத்தில் இருப்பது போல பம்மாத்துச் செய்கிறார்கள். தாலிபானோ தங்கள் மதத்துக்கு உண்மையானவர்களாக இருக்கிறார்கள். இதை எதிர்த்து எழுதும் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர்கள் கூட ‘பெளத்த சிலைகளை கும்பிட ஆப்கானிஸ்தானில் யாரும் பெளத்தராக இல்லாதபோது, அவைகளை அழிக்க வேண்டிய கட்டாயமில்லை. ‘ என்று கூறுகிறார்கள். அப்படியென்றால் மக்கள் கும்பிடும் சிலைகளை அழிப்பது இஸ்லாமியரின் கடமை என்பதுதானே பொருள் ? ஆகவே அவர்கள் அழிப்பது சரிதான். அது அவர்களின் மதம். மனித உருவத்தை வரைவதோ, புகைப்படம் எடுப்பதோ இஸ்லாமுக்கு எதிரானது என்ற காரணத்தாலேயே பம்பாயில் அடையாள அட்டைக்காக முஸ்லீம்களை புகைப்படம் எடுக்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று போராட்டம் நடந்தது ஞாபகம் இருக்கலாம். அது இஸ்லாமியரின் மதக்கடமையாக இருக்கையில் அதை மதிப்பது தவிர வேறென்ன செய்வது ?

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்