தலாக் தலாக் தலாக்!

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

நந்தலாலா


இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்(AIMPLB), தனது 18வது கூட்டத்தை ஏப்ரல் 28, 29, 30 ஆகிய தேதிகளில் போபாலில் நடத்தியது. கூட்டத்தின் முடிவில், மாதிரி நிக்காநாமா என்ற ஒரு இஸ்லாமிய திருமண வரைவை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, வரவேற்றும், ஏமாற்றம் தெரிவித்தும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, குமுக சிந்தனையுடைய இஸ்லாமிய பெண்கள் மற்றும் அமைப்புகள் ஏமாற்றக்குரலையே எதிரொலிக்கின்றன.

இந்த வாரியத்துக்கு எவ்விதமான, சட்டப்பூர்வ அங்கீகாரமும் இல்லையென்பதையும், இஸ்லாமிய சட்ட முறைக்கு விளக்கம் கூறும் ஒரு (பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டு) அமைப்பாக மட்டுமே செயல் பட்டு வருகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

போபாலில் கூடிய, முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் 18வது கூட்டம், சில சிறப்புகளை கொண்டிருந்தது.

1. இந்தியாவில் உள்ள ஷியா முஸ்லீம்கள், தங்களுக்கென தனியான ஒரு சட்ட வாரியம் அமைப்பது குறித்து பேசி வரும் வேளையில், இக்கூட்டத்தில் பங்கேற்க ஷியா முஸ்லீம் தலைவர்களையும் அழைத்திருந்தது;

2. மாதிரி நிக்காநாமா வடிவைக்கப்படும் என்ற அறிவிப்பு, இஸ்லாமிய திருமண நடைமுறையில் உள்ள குறைகளை களையக்கூடியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு;

3. மேலும், இஸ்லாமிய குமுகத்தினரிடையே கடைபிடிக்கப்பட்டு வரும் பல பிற்போக்கு வழக்கங்கள் கண்டிக்கப்படும், அவற்றுக்கு ஒரு மாற்று முன் வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு;

இத்தகைய எதிர்பார்ர்ப்புகளுக்கு, இக்கூட்டத்தின் தொடக்க நாள் நிகழ்ச்சியிலேயே, பலத்த அடி கிடைத்தது.

இந்த அமைப்பின் தலைவர், மெளலானா ராபெ ஹஸ்னி நடாவி, தனது துவக்க உறையில், குடும்ப கட்டுப்பாடு என்பது, இஸ்லாத்தின் பார்வையில் தவறு என அறிவித்தார்.

::உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். அவர்களை பற்றி கவலை கொள்ள நானிருக்கிறேன்:: என்ற அல்லாவின் வசனத்தை கூறி, இந்திய இஸ்லாமியர்களின் வறுமைக்கு, அதிக குழந்தைகளை கொண்ட இஸ்லாமிய குடும்பம் காரணம் என்ற கருத்தை மறுத்தார்.

வறுமையால், தகுந்த மருத்துவ சிகிச்சையின்றியும், பசியாலும் வாடி இஸ்லாமிய குழந்தைகள் மரணமடைவதை, நியாயப்படுத்தவும் அல்லாவின் வேறொரு வசனம் நடாவிக்கு தெரிந்திருக்க கூடும்.

[இவ்வமைப்பின் துணைத்தலைவர், மெளலானா சையத் கால்பே சாதிக் சென்ற ஆண்டு, குடும்ப கட்டுப்பாடுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து, இஸ்லாமிய தலைவர்களின் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது]

இஸ்லாமிய சட்டங்கள், கருத்தரிப்பை தவிர்க்கும் தற்காலிக முறைகளுக்கு அனுமதி வழங்குகிறது. ஆணுறை, கருத்தடை மருந்து உட்கொள்ளுதல் ஆகியவை இதில் அடங்கும். ஆனால், கருக்கலைப்பு, மலடாக்கும் அறுவை சிகிச்சை ஆகியன இஸ்லாத்துக்கு எதிரானதாக நோக்கப்படுகிறது.

இஸ்லாமிய திருமண நடைமுறையில், வரதட்சனைக்கு இடமில்லை. மாறாக ஆண் தான் மணம் செய்யும் பெண்ணுக்கு மெஹர் என்ற மணத்தொகை அளிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில், இந்திய முஸ்லீம்கள் மத்தியிலும் வரதட்சிணை முறை புரையோடியுள்ளது என்பதே உண்மை. வரதட்சணை கொடுமை இந்திய இஸ்லாமிய பெண்களுக்கு இல்லை என்பது உண்மைக்கு மாறான தகவல் மட்டுமே. மற்ற எல்லா சமூகங்களைப் போலவும் இஸ்லாமியரிடையேயும் இப்பழக்கம் உள்ளது. இதையொட்டி, வரதட்சனையை கண்டித்துள்ளதுடன், மெஹர் தொகை வழங்குவதற்கு கால அளவையும் நிர்னயம் செய்துள்ளது.

போபால் கூட்டத்தின் இறுதி நாளன்று அறிவிக்கப்பட்ட மாதிரி நிக்காநாமா எனும், இஸ்லாமிய திருமண வரைவு இவற்றை கொண்டிருந்தாலும், ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

அதில்,

பல தார மணத்திற்கு கன்டனமோ தடையோ விதிக்கப்படவில்லை. ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க, தன்னை மணமுடித்தபின், தன் கணவன் மற்றொரு மணம் புரிவதை தடுக்க, ஒரு ஒப்பந்தந்தை நிக்காநாமாவில் அப்பெண் ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது எந்தளவு கடைபிடிக்கப்படும் என்பதும், பலனளிக்கும் என்பதற்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லை.

இத்தகைய ஒரு ஒப்பந்தம் மீறப்பட்டால், ஆணுக்கு என்ன தண்டனை என்பதோ, பெண்ணுக்கான பதுகாப்பு குறித்தோ எதுவும் கூறப்படவில்லை. இந்த ஒப்பந்தம், பேணப்படுவதையும், மீறப்படுவதையும் கண்கானிக்கப்போவது, அவர்கள் வாழும் பகுதியிலுள்ள ஜமாத் எனும் அமைப்பு. அது முழுக்க முழுக்க ஆண்களை மாத்திரமே கொண்ட ஒரு அமைப்பாகும். இதனிடமிருந்து பெண்களின் உரிமையை உறுதி செய்யும் வகையிலான தீர்வு கிடைக்குமா என தெரியவில்லை. இந்த ஜமாத்துகளின் ஆணாதிக்க, பெண்கள் விரோத போக்கு குறித்து, புதுக்கோட்டை STPES அமைப்பின் நிறுவனர் தாவுத் செரிபா கனம் என்ற முஸ்லீம் பெண் ஆர்வளர் சமீபத்தில் தெரிவித்து வரும் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

குழந்தைகள் மணம், அதாவது ஆறு, ஏழு வயது பெண்களை மணம் முடிக்கும் வழக்கம் இக்குமுகத்தில் இல்லாவிட்டாலும், பதிமூன்று வயதுக்கு மேற்பட்ட பெண்களை (பருவமடைந்த) மணம் முடிக்கும் வழக்கம் இந்திய இஸ்லாமியரிடையே பரவலாயிருக்கிறது. இந்நிலையில், இப்பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் காணப்படாதது வருத்தத்திற்குறியதே.

இறுதியாக, இஸ்லாமிய மண முறிவு முறை பற்றியது.

இஸ்லாத்தில், மணமுறிவு வழங்கும் அதிகாரம், ஆணுக்கு மட்டுமே உள்ளது. பெண்ணுக்கு ஆணைப்போல அதிகாரமல்ல, அடிப்படை உரிமைக்கூட மறுக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக கணவனிடமிருந்து, மணமுறிவை யாசித்து பெறும் நிலையே இஸ்லாமிய பெண்களுக்கு உள்ளது.

நடாவி இதை நியாயப்படுத்தி, ஆண், பெண் இருவருக்கான உரிமைகளை அல்லாவே வரையறுத்துள்ளதாக கூறுகிறார். மேலும், ஆண்களுக்கு அல்லாவால் அளிக்கப்பட்டுள்ள கூடுதல் உரிமையானது, அவர்களின் அதிகப்படியான பொறுப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

ஒரு கணவன் தன் மனைவியை விலக்க தலாக் என்ற வார்த்தையை மூன்று முறை கூறினால் போதும் என்பது இனியும் நீடிக்கும். ஆனால், மூன்றையும் ஒரே நேரத்தில் சொல்வது மட்டுமே இப்போது கண்டிக்கப் பட்டுள்ளது.

மணவிலக்கு பெற்ற பெண்களுக்கு, கணவனிடமிருந்து உதவி பெறுவதற்கு(ஜீவனாம்சம்) இஸ்லாத்தில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதற்கு காரணமாக, திருமணத்தின் போது மணமகனால், மணப்பெண்ணுக்கு அளிக்கப்படும் மெஹர் என்ற தொகை ஈடாக சொல்லப்படுகிறது.

ஆனால்,மஹர் என்பது, நடைமுறையில் வழங்கப்படும் தொகை மிக குறைவானது, அல்லது அப்படி ஒரு தொகையை திருமண ஒப்பந்தத்தில் எழுதுவதுடன் நிறுத்திக்கொண்டு பின் வழங்கப் படுவதில்லை, அல்லது வழங்கப்பட்டும், கணவனால் பிற்காலத்தில் அத்தொகை கைக்கொள்ளப் படுகிறது. இதற்கு மாறாக சொற்ப எண்ணிக்கையில் சிலர் இருக்கலாம்.

இந்நிலையில் தலாக் என மூன்று முறை கூறி ஒரு பெண்ணை நிர்கதியாக்கும் கணவனுக்கு உள்ள வசதி, பெரும்பாலும், தவறாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தலாக் முறை, முஸ்லீம்களால் பின்பற்றப்படும் வேதநூலான குரானில் சொல்லப்பட்ட முறை அல்ல என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இதனாலேயே பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற இஸ்லாமிய நாடுகளால் இந்த முறையை தடை செய்ய முடிந்துள்ளது. இந்திய இஸ்லாமியர்களிடையே இன்னும் அந்த துணிவு வராமையும், பழமை நோக்கும், பெண்ணியம் குறித்து பிற்போக்கு நிலையே நீடித்து வருவது வருந்தத்தக்கது.

வறுமையும், குறைவான கல்வி அறிவையும் கொண்ட பிற்பட்ட நிலையிலுள்ள இந்திய இஸ்லாமிய குமுகாயமானது, பெண்ணுரிமையை மறுப்பதன் மூலம், மேலும் தன்னை பின் தள்ளிக்கொள்கிறது என்றே கொள்ள வேண்டும்.

மதங்கள் பெயர்களாலும், சடங்குகளாலும் மாறுபட்டுள்ளதே தவிர, பிற்போக்குத்தனங்களை தாங்கி பிடிப்பதில் ஒன்றை ஒன்று விஞ்சுவதாகவே உள்ளன.

வெகு விரைவில் இந்திய இஸ்லாமிய குமுகாயம், பலதார மணத்திற்கும், தலாக் மூலம், ஒரு தலை பட்சமாக பெண்களை மணவிலக்கி நிர்கதியாகுவதற்கும், இறுதியாக ஒரு முறை ‘தலாக் தலாக் தலாக் ‘ சொல்ல வேண்டும். இதன் மூலமே தன்னை சார்ந்த பெண்களுக்கும், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்பதாக இருக்க முடியும்.

-நந்தலாலா

nandalaalaa@gmail.com

Series Navigation

நந்தலாலா

நந்தலாலா