“தரையில் இறங்கும் விமானங்கள்” நூல் விமர்சனம்

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

மோகன் குமார்


“தரையில் இறங்கும் விமானங்கள்” கல்லூரி காலத்தில் வாசித்த நாவல். மீண்டும் ஒரு முறை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது.

முதன் முதலாக வாசித்த இந்துமதியின் நாவல் இது தான். பின் கொஞ்ச நாள் இந்துமதி எழுத்துக்களை தேடி தேடி வாசிக்கும் அளவு இந்த புத்தகம் ஈர்த்தது. பிற கதைகள் படித்ததும், அவை இந்த புத்தகம் அளவு இல்லாது போனதாக உணர்ந்தேன். .

தரையில் இறங்கும் விமானங்கள் : கதை

விஸ்வம் ஒரு பட்ட தாரி இளைஞன். கொஞ்சம் அறிவு ஜீவி. தனக்கு பிடித்த மாதிரி இலக்கியம் வாசித்து கொண்டும், எழுதி கொண்டும், வருமானம் இன்றி காலம் கழிக்கிறான். இவன் அண்ணன் பரசு. சராசரி இளைஞன். பரசுவிற்கு திருமணம் நடக்கிறது. ருக்மணி என்ற அழகான, அறிவான மனைவி. ருக்மணி தன் கணவரின் தம்பியான விஸ்வத்துடன் இலக்கியம் குறித்து விவாதம் செய்யும் அளவு புத்திசாலி. விஸ்வத்துக்கு ஒரு காதலி உண்டு. (அவள் கதையில் மிக குறைவாகவே வருகிறாள்).

இலக்கியம், நண்பர்களுடன் அரட்டை என்று இருக்கும் விஸ்வம் தன் அண்ணன்- அண்ணி மூலம் வாழ்க்கையின் நிதர்சனம் புரிந்து கொண்டு தனக்கு பிடிக்காவிடினும் ஒரு வேலைக்கு செல்ல ஆரம்பிக்கிறான். இத்துடன் கதை முடிகிறது.

கதை உங்களுக்கு எந்த படத்தையாவது நினைவு படுத்துகிறதா? அஜித் நடித்த “முகவரி” கிட்ட தட்ட இந்த கதை தான்.

தரையில் இறங்கும் விமானங்கள் பிடிக்க மிக முக்கிய காரணம் அதை வாசித்த வயது. விஸ்வம் பாத்திரத்துடன் வாசிக்கும் பழக்கமுள்ள நம்மை போன்ற யாரும் பொறுத்தி பார்க்க முடியும் ! காரை பெயர்ந்த சுவர்களில் தெரியும் உருவங்களையும், தூரத்தில் செல்லும் மாட்டு வண்டிகளின் சிம்னி வெளிச்சத்தையும் ரசிப்பவனாக, ஒரு நல்ல ரசிகனாக இருக்கிறான் அவன்.

கதையில் விஸ்வம் தன அண்ணன் பரசுவுடன் உரையாடும் இடம் ஒன்று அற்புதமாக இருக்கும். போலவே விஸ்வம் தன் அண்ணியுடன் உரையாடும் பல இடங்கள் மிக அருமை !. கதையை எழுதிய விதத்திலும், இயல்பான உரையாடல்களிலும்தான் வெகுவாக கவர்ந்தார் இந்துமதி.

உதாரணத்திற்கு சில உரையாடல்கள் :

” நம்ம எல்லாருக்கும் எத்தனையோ ஆசை இருக்கு. எப்படியெல்லாமோ இருக்கணும்னு நினைக்கிறோம். ஆனா எது எதுவோ நடந்து போயிடுது. இதையெல்லாம் பார்க்கிற போது பலமான ஏதோ ஒண்ணு நம்மை வழி நடத்திட்டு போகிறதுன்னு தெரியுது. அது வழியிலே நாம போய்த்தான் ஆகணும்னு புரியுது”

” ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை ஒவ்வொருவர்கள்!!”

” எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறது நல்ல நினைப்பு தான். ஆனா தெரிஞ்சுகிட்டு என்ன பண்ண போறோம்! தெரிஞ்சுகிட்டவங்க எல்லாம் என்ன பண்றாங்க? நாம பண்ணறதைத்தான் பண்றாங்க. அதுக்காக தெரிஞ்சிக்கிறதே அவசியம் இல்லைன்னு சொல்லலை. தெரியாததாலே தப்பு இல்லைன்னு சொல்ல வர்றேன்”

“உங்க புத்திசாலித்தனத்தை நுழைச்சு எல்லாரையும் துருவி பார்க்கிறதை நீங்க விட்டுடனும். எல்லாரையும் அப்படியே ஏத்துக்கணும். நிறை குறைகளோட ஏத்துக்கணும். ஏத்துக்குட்டு சந்தோஷமா இருக்க தெரியனும். அவங்களையும் சந்தோஷ படுத்த தெரியணும்”

****
நண்பர் நிலா ரசிகன் சிறுகதை புத்தக வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் இந்து மதியை சந்திக்க நேர்ந்தது. அப்போதும் இந்த புத்தகம் பற்றி தான் அவரிடம் நான் சிலாகித்து பேசினேன். (மனதுக்குள் இந்த புத்தகம் பற்றி எத்தனைபேர் தான் இவரிடம் பேசியிருப்பார்கள் என்று ஓர் எண்ணம்). இனிமையாக பேசினார். அருகிலிருந்த கணவரை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த ஒரு நாவல் மூலம் இந்துமதிக்கு கிடைத்த பெயர் மற்ற அனைத்து நாவல்களையும் சேர்த்து கூட கிடைக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆயினும் ஒரு எழுத்தாளர் தன் வாழ்நாளில் தனது ஒரே ஒரு புத்தகம் மூலமாவது ஏராளமான மனிதர்களின் மனங்களை தொட்டார் என்றால் அதுவே போதுமே! அந்த விதத்தில் தரையில் இறங்கும் விமானங்கள் என்றும் மனதில் நிற்கிறது.

Series Navigation

author

மோகன் குமார்

மோகன் குமார்

Similar Posts