தரிசனம்

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

எஸ் ஜெயலட்சுமி


வெளியே வெய்யில் தகித்துக் கொண்டிருந்தது.‘’வெயிலைப் பார்த்தால் மணி பதினொன்று ஆகி யிருக்கும் போல் இருக்கே”என்று சொல்லிக்கொண்டே ரேழியில் வந்து மணி பார்த்தேன். மணி பத்துதான் ஆகியிருந்தது. குழந்தைகள் இருவரும் ஸ்கூலுக்குப் போய் விட்டிருந்தார்கள். இவரும் பாங்க்கிற்குப் போய் விட்டார். சமையல் முடிந்து விட்டது. ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்று நினைத்தேன்.

“அம்மா” என்று வாசலில் யாரோ கூப்பிடும் சப்தம் கேட்டது. யாரென்று வாசலுக்குப் போய்ப் பார்த்தேன். சுமார்30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்
நின்று கொண்டிருந்தாள். யாரென்று தெரியவில்லை. கட்டம் போட்ட நாட்டுச் சேலையை, பின் கொசுவம் வைத்துக் கட்டியிருந்தாள். தலையை நன்றாக வாரி, அள்ளி முடித்திருந்தாள். உயரத்துக் கேற்ற பருமன். நல்ல கறுப்பு. சிரிக்கும் போது வரிசையான பற்கள் முகத்துக்கு ஒரு தனிக் கவர்ச்சியைக் கொடுத்தன. காதில் ஒரு பொன் தோடு. மூக்கில் ஒத்தைக்கல் மூக்குத்தி. கழுத்தில் வெறும் கறுப்புக் கயிறு. கறுப்பு என்றாலும் முகத்தில் ஒரு கவர்ச்சி இருந்தது. யாரென்று தெரியாமல் நான் திகைப்பதைப் பார்த்து, ” அம்மா, பால்கார பரமசிவத்திடம் வேலைக்கும் நெல்லுக் குத்தவும் ஆளு வேணுமின்னு சொல்லி யிருந்தீங்களாம், அதான் வந்தேன். எம் பேரு முத்தம்மா” என்றாள்.

“ஒ, நீதான் முத்தம்மாவா? உள்ளே வா” என்றேன்.”
“முத்தம்மா, பாங்க் மானேஜர் ஐயா வீட்டு வேலைக்குப் போறியா?” என்று கேட்டார்.
அதான் அம்மாவப் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்” என்றாள். பால்காரப் பரமசிவம் முத்தம்மாவை அனுப்பி வைக்கிறேனென்று சொன்னதிலிருந்து, அவள் எப்படி இருப்பாளோ என்று யோசனை செய்த வண்ணமாகவே இருந்தேன், நேற்றெல்லாம். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ரொம்பவும் வயதான கிழவியாக இருப்பாளோ என்றும் நினைத்தேன். நாங்கள் முன்பு இருந்த ஊரில் ஒரு கிழவி தான் வேலை செய்தாள். அடிக்கடி லீவு கேட்பாள். மகள் வீட்டுக்குப் போகணும், ஊரில் கொடை, துட்டி, என்று ஏதாவது சாக்குச் சொல்வாள். உடம்பு சரியில்லை என்று பேத்தியை அனுப்பி வைப்பாள். சிலசமயம் அதுவும் வராது. இருந்தாலும் கிழவி நல்லவள் தான், களவு கிடையாது, சத்தம் போட மாட்டாள். “சேவகரால் பட்ட சிரமம் மிகவுண்டு கண்டீர்” என்று பாரதி பாடியது போல சில தொந்தரவுகள் இருந்தாலும் எதிர்த்து வாயாட மாட்டாள். இந்த வயதிலும் உழைத்துச் சாப்பிடுகிறாளே என்று இரக்கமாகவும் இருக்கும்.

ஆனால் இந்த முத்தம்மாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே மனதுக்குப் பிடித்து விட்டது. நான் நினைத்ததற்கும் மேலாக, முத்தம்மா நன்றாகவே வேலை செய்தாள். நல்ல சுறுசுறுப்பு. அவள் புருஷன் ஏதோ கடையில் வேலை செய்வதாகவும் சொன்னாள். இரண்டு பெண் குழந்தைகள், 8,6 வயசில். வீடு பெருக்கினாலும், தரையைத் துடைத்து மெழுகினாலும், பாத்திரங்கள் தேய்த்தாலும் துணி துவைத்தாலும் அவற்றை உலர்த்தினாலும்- முத்தம்மாவின் எந்த வேலையிலும் ஒரு நேர்த்தி தெரியும். புழுங்கல் அரிசிக்காகவும், பச்சரிசிக்காகவும் நெல் அளக்க வருவாள். நெல் மூட்டையை அனாயசமாகத் தலையிலும் இடுப்பிலும் வைத்துத் தூக்கிக் கொண்டு போவதை ஆச்சரியமாகப் பார்ப்பேன். காலையில் சீக்கிரமாகவே வந்து தெரு அடிபம்பிலிருந்து தண்ணீர் எடுத்து, வாசல் தெளித்து, மாடக்குழியிலிருந்து கோலப்பொடி எடுத்து விதவிதமாகக் கோலம் போடுவாள். வெள்ளி செவ்வாய் மற்றும் பண்டிகை நாட்களில் மட்டுமே நான் கோலம் போடுவேன்.
“அம்மா நானும் எவ்வளவோ போட்டுப் பாத்துட்டேன்; உங்க மாதிரி ரெட்டைக் கோடு போட்ட கம்பிக் கோலம் வரவே மாட்டேங்குதே” என்பாள். காலையில் வேறு சில வீடுகளிலும் வாசல் தெளித்துக் கோலம் போட்டுவிட்டு, 6அல்லது 7க்கெல்லாம் வந்து விடுவாள். வீடு பெருக்கித் துடைக்கும் போதே காபி கொடுப்பேன்.”அம்மா உங்க வீட்டுக் காப்பி எல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு. எங்க மாதிரி ஆளுக்கெல்லாம் இவ்வளவு திக்காகக் குடுத்தல் குடிக்க முடியாதம்மா என்பாள். அவளுக் கென்று கொஞ்சம் கூடுதலாகவே ஜீனி போட்டுக் கொடுப்பேன்.

சாதம் மீந்து போயிருந்தால் தண்ணீர் ஊற்றி வைத்திருக்கச் சொல்வாள். சாதத்திலிருக்கும் தண்ணீரை இறுத்து குடித்து விட்டுச் சாதத்தையும் குழம்பையும் தன் குழந்தைகளுக்குக் கொண்டு போய்க் கொடுப்பாள்.
“ஏன் முத்தம்மா ஒரு இலை தரேன், இங்கேயே சாப்பிட்டுப் போயேன்” என்றால், “வேண்டாம்மா; சாப்டா வேலை செய்ய முடியாது’ என்பாள்.
”ரைஸ்மில்லுக்கெலாம் போகணுமில்லே லைட்டாகத்தான் சாப்பிடணும் என்பாள். இட்டிலி, பூரி, தோசை உப்புமா என்று எது கொடுத்தாலும், வீட்டுக்காரனுக்கும் பிள்ளைகளுக்கும் தான் எடுத்துக் கொண்டு போவாள். இதனாலேயே, அவளுக்கென்றே தனியாக ஏதேனும் கொடுப்பேன்
.”எப்பத்தான் சாப்பிடுவே” என்றால், “ராத்திரிதான்” என்பாள். அங்கங்கே கிடைக்கும் காப்பி, டீ, நீராகாரம் தான் அவளின் பகல் நேர உணவு. பகல் பூராவும் இடிக்கவும் புடைக்கவும், நெல் அரைக்கவும் வீடு பெருக்கி மெழுகித் துடைக்கவுமே நேரம் சரியாக இருக்கும் அவளுக்கு.

“இவளுக்கு அலுப்பே கிடையாதோ” என்று நினைத்துக் கொள்வேன். அவள் குழைந்தைகள் இருவரும் பள்ளியில் சத்துணவு சாப்பிட்டு விடுவார்கள். கோவில் திருவிழாவுக்காக வந்திருந்த என்அம்மா, அப்பாவும் கூட முத்தம்மாவுக்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்து விட்டார்கள். என் கணவரும் கூட”அப்பாடா, இப்பல்லாம் நீ வேலைக்காரி புராணம் பாடுவதேயில்லை. முன்பிருந்த கிழவியைப்பத்தி ஏதாவது சொல்லிண்டேயிருப்பியே இவளை பற்றிக் கம்பிளையண்ட் ஒண்ணுமே காணுமே !” என்றார்.

ஒரு நாள் பெட்டி பீரோ எல்லாவற்றையும் ஒழித்துக் கொண்டிருந்தேன். என் குழந்தைகளின் துணிமணிகள் வைக்கும் பீரோவைத்திறந்து ஒழுங்கு பண்ணிக் கொண்டிருக்கும் போது, அந்தப் பை கிடைத்தது. அந்தப் பையில் நாலு ஸ்கர்ட்டும் சட்டைகளும் இருந்தன. என் தங்கையும் தம்பியும் வாங்கிக் கொடுத்தவை. அவர்கள் வாங்கிவந்த போதே சைஸ் சரியாக இல்லை.
குழந்தைகள் ஒன்றிரண்டு தடவைகளேனும் போட்டுக் கொண்டிருப்பர்களா என்பது கூட சரியாக ஞாபகம் இல்லை. இருவரும் அவற்றைப் போட்டுக் கொள்ள மாட்டேனென்று அடம் பிடித்து விட்டார்கள். நல்ல துணி. நல்ல டிஸைன் வேறு. என்ன செய்வதென்று தோன்றாமல் பின்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாமென்று எண்ணி அப்போதைக்கு பீரோவில் வைத்துப் பூட்டி விட்டேன். இந்த ஊருக்கு மாற்றலாகி வந்த பிறகு பார்க்கவே இல்லை. ஸ்கர்ட்டுகள் சட்டைகள் எல்லாவற்றையும் எடுத்து பிரித்துப் பார்த்தேன். புதுக்கருக்கு அழியாமல் அப்பபடியே இருந்தன.

முத்தம்மாவுக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் என்று சொன்னது ஞாபகம் வந்தது. அவர்களுக்கு அளவு சரியாக இருக்குமா என்று பார்க்கச் சொல்லலாமென்று அவற்றை எடுத்துத் தனியே வெளியில் வைத்தேன். சாயங்காலம் முத்தம்மா வந்தவுடன் அவற்றை எடுத்து காட்டினேன். “எடுத்துண்டு போறியா உம் பிள்ளைகளுக்கு”? என்று கேட்டேன்.’ ‘ரொம்பவே நல்லாயிருக்கம்மா, பிள்ளைகளுக்கு
அளவும் சரியாக இருக்கும் வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போகயிலே வாங்கிட்டுப் போறேன்மா” என்றாள்.அப்படியே கொடுத்தனுப்பினேன்.

இரண்டு நாள் கழித்து முத்தம்மா ரைஸ் மில்லுக்கு நெல் கொண்டு போக வந்தாள். நெல் அளக்கும் போது பேச்சுவாக்கில்,
“முத்தம்மா அன்னிக்கு எடுத்துட்டுப் போன ஸ்கர்ட், சட்டைகள், பிள்ளைகளுக்கு சரியாக இருந்ததா? பிள்ளைகளுக்குப் பிடிச்சிருந்ததா?” என்று கேட்டேன். முத்தம்மா பதில் சொல்லச் சற்றுத் தயங்கினாள். பின் சுதாரித்துக் கொண்டு,
“அம்மா, உங்க கிட்ட வாங்கிட்டுப் போனேனா, வடக்குத் தெரு வழியாகப் போறப்போ ஒரு யோசனை வந்திச்சு அம்மா. நானும் என் மாமியாரும் காலம் காலமா வேலை பாத்த ஐயர் வீடு அந்தத் தெருவுலே தாம்மா இருக்கு. அத்தத் தாண்டிப் போறச்சேதாம்மா பொறிதட்டிச்சு. அந்த ஐயர் வீட்ல ஒரு காலத்துலே ஓஹோன்னு இருந்தவங்க. நெலம் நீச்சு வண்டி மாடு வெவசாயம் பண்ணக்காரங்க அப்படின்னு எப்படி இருந்தாங்க தெரியுமா? அந்தம்மா கழுத்திலும், காதிலும் மூக்கிலும் வைரம் போட்டுக் கிட்டு சும்மா தகதகன்னு எப்படி சொலிப்பாங்க அம்மா! வரவங்களும் போறவங்களுமாக அந்த வீடு தெனைக்கும் கல்யாண வீடு கணக்கா இருக்கும்மா.

என்னவோ போறாத நேரம். என்னவோ கோர்ட்டு கேஸ¤ன்னு காதிலே விழுந்திச்சு அம்மா. எல்லா சொத்தும் போக ஆரம்பிச்சது. அந்த ஏக்கத்திலேயே அந்த அம்மாவும் நோவு நொடின்னு படுத்துட்டாங்க. வக்கீல்
வீட்டுக்கும் வைத்தியர் வீட்டுக்கும் போக ஆரம்பிச்சா என்ன ஆகும்? பிள்ளைகளும் சரியா தலையெடுக்கலை. நல்ல சகவாசம் இல்லை. வட்டிக்குக் கடன் வாங்க ஆரப்பிச்சாங்க. எப்படி இருந்தவங்க எப்படி ஆயிட்டாங்க தெரியுமா?” என்று அடுக்கிக் கொண்டே போனவளை இடை மறித்தேன்.
‘’என்ன முத்தம்மா சட்டையைப் பத்திக் கேட்டா நீ சகட்டு மேனிக்கு யார் வீட்டுக் கதையையோ சொல்லிண்டு போறே” என்றேன். மறுபடியும் தயங்கினாள். மீண்டும் சமாளித்துக் கொண்டு சொன்னாள்.

“அம்மா அந்த வீட்டத் தாண்டிப் போகயிலேதான் தோணிச்சு. நாங்க எதுவேணாலும் போட்டுக்கலாம். கிழிசலோ, அழுக்கோ பரவாயில்லம்மா. எங்கிட்டயில்லன்னாலும் நாலு இடத்துலே கை நீட்டி வாங்கிக் கொடுத்துருவேன். ஆனா அவங்க வாழ்ந்து கெட்டவங்க. யாரு கிட்டப் போயி கைநீட்ட முடியும்? இந்த மாதிரி வெல ஒசந்த துணிமணியெல்லாம் எங்க பிள்ளைகளுக்கு வேணுங்கறதில்லே. அதுக எத்தப் போட்டுக்கிட்டா என்ன? யாரு என்ன சொல்லப் போறாங்க? அப்படின்னு தோணிச்சு. ஐயமாரு வீட்டுச் சட்டையை ஐயமார் வீட்டுப் பிள்ளைகளே போட்டுக்கறது தானே நல்லது. அப்படின்னும் நெனப்பு வந்திச்சு. அப்படியே அவங்க வீட்டுக்குப் போயி, வெவரத்தைச் சொன்னேன்., நம்ம ஊருக்கு மாத்தலாகி வந்திருக்கங்களே புது பாங்க் மானேஜர் ஐயா வீட்டம்மா கொடுத்தாங்கன்னு சொல்லி ஸ்கர்ட் சட்டையைக் கொடுத்தேன்.

’’அவங்க வீட்டுப் பிள்ளைகளுக்குப் போட்டுப் பாத்தங்க அந்த அம்மா. அளவெடுத்துத் தச்ச மாதிரி நல்லா பொருந்திச்சு. அவங்களுக்கே கொடுத்துட்டேன். ஏம்மா நானு செஞ்சது தப்பில்லயே? சரி தானே நான் செஞ்சது?” என்றாள் முத்தம்மா திக்கித் தயங்கி. முகத்தில் துளிக்கூட வருத்தமோ, ஏக்கமோ தென்படவில்லை. நான் வாயடைத்துப் போய் திக்பிரமையாய், அவளையே ஆச்சரியத் துடன் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தேன்.

“மாமி, கோவிலுக்கு வரேளா, சாயங்கால தீபாரதனைக்கு நேரமாச்சு” என்ற பக்கத்து வீட்டுமாமி குரல் என்னை இந்த உலகத்திற்கு வரவழைத்தது.
மாமி, நான் வரலை. அம்பாள் தரிசனம் இங்கேயே ஆகிவிட்டது”என்றேன் நான்.

Series Navigation

தரிசனம்

This entry is part [part not set] of 44 in the series 20080410_Issue

சு. சிவக்குமார்


– சிறுகதை
காதலைப் பத்தி இந்த மண்ணாங்கட்டிகளுக்கு என்ன தெரியும். மாட்ட அடிக்கிற மாதிரி எல்லாவனும் சேந்து இப்படி அடிக்கிறானுங்களே. எல்லாத்துக்கும் காரணம் இந்த அப்பன்காரன் தான். மனுஷனா அவன். பெல்டை எடுத்து விளாசிட்டானே. முன்னப்பின்ன காதல் பண்ணியிருந்தா தெரிஞ்சிருக்கும் இந்த மரமண்டைகளுக்கு. அந்த ஆளு தான், ‘+2 முடிச்சு வீட்ல சும்மா உட்காராத, டைப் ரைட்டிங் கிளாஸ் போ’ அப்படின்னு விரட்டினாரு.

போன முதல் நாளே பார்த்தேன் அந்த அற்புதத்தை. என் மிஷினுக்கு நேர் மேலே ஜன்னல். அந்த ஜன்னல் வழியாக எதிர்வீட்டு ஜன்னல். அதன் வழியாக அந்த அற்புத தரிசனம். தரிசனத்துக்கு சொந்தக்காரி கீதா. இரண்டாம் நாள் தரிசனத்தில் கொஞ்சம் புன்னகை இழைந்தது. அதற்கடுத்த இரண்டு வாரங்களும் தரிசன வாரங்களாகிப் போனது. asdf (space) ;lkj இதுக்கு மேல் தாண்டவே முடியவில்லை.

மூன்றாவது வாரத்தில் கிளாஸூக்கு வரும் வழியில் அந்தக் குறுகலான சந்தில் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தாள். மனது ‘படபட’ வென அடிக்க ஆரம்பித்தது. எதாகிலும் பேசலாமான்னு நினைச்சேன். என்னுடன் நினைப்பாக மட்டும் நின்று போனதை அவளால் ஜெயிக்க முடிந்தது. உன் பெயர் என்ன? என்றாள். சொன்னேன். ‘ஏன் அப்படிப் பார்க்கிற’ ன்னு கேட்டா. ‘பார்க்கக் கூடாதா’ ன்னேன். ‘இன்னைக்கு காளியம்மன் கோவிலுக்கு சாயந்திரம் வருவேன்’ னு சொல்லிட்டு, மாயமா மறைஞ்சுட்டா. ஆமா, அவள் வார்த்தைகளை மட்டுமே நான் பார்த்துக்கிட்டு நின்று கொண்டிருக்கும் போது, சூன்யத்தில் நழுவி விட்டிருந்தாள். (கொஞ்சம் ஓவராகத்தான் பேசுறேனோ. இதுக்கு தான் கண்ட இலக்கிய புக் எல்லாம் படிக்கக் கூடாதுன்னு சொல்றது) அவள் விலகிச் சென்ற மாயமே புரியவில்லை. சத்தியமா. அப்புறம் அன்னைக்கு கிளாஸைப் பத்தி கேக்கவே வேண்டாம்.
asdf ;lkj
asdf ;lkj
qwef polk
ASD ‘;LK
AWDF PLKJ

மாடு வாங்கி மேய்ச்சு பால் வியாபாரம் பண்ணலாம். நல்ல பிஸினஸ். அப்படின்னு ட்யூட்டர் சொன்னாரு.

திருவிழா, செவ்வாய், வெள்ளி தவிர்த்து கோவில் பெரும்பாலும் வெறுமையாகத்தான் இருக்கும். வேப்ப மரத்தடியில உட்கார்ந்திருந்தேன். தரிசனம், தரிசனத்திற்காக உள்ளே சென்றது. வெளியே வருவதற்கு இரண்டு வாரமாவது ஆகியிருக்கும். நேராக என்னை நோக்கி தான் வந்தாள். இதயம் வெடித்து விட்டதா. இல்லை. ‘உட்காரு’ என்றேன். ஒரு புன்னகையைத் தந்தபடி எனக்கு எதிராக அமர்ந்தாள். ஏதேதோ பேசினோம். அதையெல்லாம் நான் எதுக்கு உங்ககிட்ட சொல்லனும். ம்கூம். சொல்லமாட்டேன். அது ரகசியம்.

அதற்குப் பின் ஜன்னல் தரிசனத்துடன் கோவில் உரையாடல்களுமாக நாட்கள் உவப்பாக நகர ஆரம்பித்தது.

‘நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா’, அவள் தான் கேட்டாள்.
‘பண்ணிக்கலாமே, ஆனா ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு பண்ணிக்கலாம். அதுக்குள்ள நானும் ஒரு நல்ல வேலையில் இருப்பேன். ஆனால் நீ வேற ஜாதி, நான் வேற ஜாதி,உங்க வீட்டில ஒத்துக்கிடுவாங்களா?’ என்றேன்.
‘எனக்கு ஒரு அண்ணன் இருக்கான். நீ கூட பாத்திருப்பியே, அவன் சொன்னா வீட்டில கேப்பாங்க’ என்றாள்.
‘அப்படியா’ என்றேன்.
அதற்கடுத்த சில ராத்திரிகளில் கனவில் அவளுடன், அவள் அண்ணனும் சேர்ந்து வரலானான். அவனை எப்படி சமாளிப்பது என்று தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்திருந்தேன்.
அடுத்த நாள் வழியில் அவனை சந்தித்தேன்.
‘ஹலோ பாஸ், ஒரு நிமிஷம்’ என்று அழைத்தேன்.
‘யாரு, என்ன’ என்று உளறினான்.
என்னை விடப் பெரிய பயந்தாங்கொள்ளியாக இருந்தான். நான் அவன் தங்கையைக் காதலிப்பதையும், ஜாதிப் பிரச்சனைகளையும் சொன்னேன். அவன் முகம் இருண்டது. அங்கு நிலவிய கனத்த மவுனத்தில் இரண்டு பேருமே கலங்கிப் போயிருந்தோம். அடுத்து என்னுடைய அஸ்திரத்தை எடுத்தேன்.
‘எனக்கு ஒரு தங்கச்சி இருக்கிறா. நான் எங்க வீட்டில பேசி அவளை உங்களுக்கு கல்யாணம் முடிச்சு வைக்கிறேன். எப்படியாவது இந்த பிரச்சனை தீர்ந்தால் சரி’ என்றேன்.
அவன் கொஞ்சம் யோசிப்பது மாதிரி இருந்தது.
‘உங்க வீட்ல ஒத்துக்கிடுவாங்களா’ என்றான்.
‘அதப் பத்தி நீங்க கவலைப் படவேண்டாம், நான் பார்த்துக்கிறேன்’ சொல்லி விடைபெற்றேன். மனம் நிறைந்திருந்தது. எப்படிப்பட்ட அஸ்திரம். பய ஆடிப்போய்ட்டான்ல.
ஆனால் மனதில் நிறைந்த மகிழ்ச்சி, ஒரு நாளைக்கு கூட நீடிக்கவில்லை. இதுக்கு மேலே நடந்ததை சொல்லமாட்டேன். எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. புரிஞ்சுக்கோங்க. என்னடா இவன் கிளைமாக்ஸ்ல கொண்டு வந்து கதையை நிப்பாட்டுறானேன்னு நினைக்கிறீங்களா? சரி மிச்சத்தையும் சொல்லிடுறேன். ஆனா விலாவரியா சொல்ல மாட்டேன்.
அந்தக் குறுகல் சந்துக்குள்ள வச்சு கீதா வோட சொந்தக்காரங்க ஆறு பேர் கிட்ட அடியும், மிதியும் வாங்கினேன். எதோ ஒரு நாய், இந்த விஷயத்தை எங்க வீட்லயும் வந்து சொல்லிடுச்சு. வசவு, பெல்ட் அடி, இப்போ தான் முடிஞ்சது.
உடம்பெல்லாம் வலி. மொட்டை மாடியில படுத்திருக்கேன், நட்சத்திரங்களைப் பார்த்தபடி. வானத்தில் ஜன்னல் திறக்கிறது. அதற்குள்ளே தரிசனம். அடுத்த அஸ்திரத்தைத் தயார் செய்தபடி, தரிசனத்தில் மூழ்குகின்றேன்.


sdotsiva@yahoo.com

Series Navigation