தமிழ் புத்தாண்டு சித்திரை 1 மற்றும் தை 1

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

இரா. குரு ராகவேந்திரன்


சித்திரை பிறக்கும் இவ்வேளையில் தமிழ் புத்தாண்டு பற்றி சில விஷயங்களை தெளிவுபடுத்தலாம்.

காலங்காலமாக சித்திரை 1 ஐ தமிழ்புத்தாண்டாக கொண்டாடி வந்த வழக்கத்தை மாற்றி, தமிழக அரசு தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்தது. சித்திரை ஒன்று அன்று வழக்கமான பஞ்சாங்கம் படிப்பதைக்கூட கோவில்களில் வாய்மொழியாக தடைசெய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆண்டு என்பது மாதம், வாரம் மற்றும் நாள் ஆகிவற்றால் ஆனதால் இவைபற்றி பார்ப்போம்.

காலத்தை அளவு செய்வதன் அளவுகோல் வானவியலை சார்ந்தது. பருப்பொருள்களின் நகர்தலினால்தான் காலம் என்பதே உருவானது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் நமது பாரம்பரிய வானசாஸ்த்திரம் வான் கோள்களின் மாறாத இயக்கத்தை காலக்கடிகாரத்தின் முற்களாய் கொண்டு அளந்தது. நாள், வாரம், திங்கள்,வருடம் எல்லாம் கோள்களின் சுழற்சியினால் கணிக்கப்படுவது. நாளின் மணித்துளிகளை ஹோரை என்றனர் (இதுவே Hour ஆனது). நாழி, விநாழி (தமிழில் வினாடி ஆனது) என்பன நேரத்தின் அளவுகோல்கள்.

நமது வானசாஸ்த்திரம் அனைத்து வகையான காலப்பகுதிகளுக்கும் கோள்களின்/கிரஹங்களின் பெயரைச் சூட்டியது. எனவேதான் கிழமைகளின் பெயர்கள் ஞாயிறு மற்றும் ஏனைய கிரஹங்களின் பெயரில் அமைந்தது. [கிரஹிக்கும் அதாவது ஈர்க்கும் சக்தியினால் (Gravitation) இயங்குவதால் கிரஹம் என்றனர். எனவேதான் சூரியனும் ஜோதிட நோக்கில் மையத்தில் உள்ள ஒரு கிரஹம்தான், நவகிரஹங்களில் காண்பது போல். (சுய ஒளி உடையது நட்சத்திரம், பூமி முதலியன கோள்கள்/கிரஹங்கள் என்பது சமீபகாலத்தில் நம் பள்ளிகளில் எழுதப்பட்டது). ராகு கேது ஆகியன வெறும் நிழற்கோள்களானதால் அவை கிழமைகளில் இல்லை. திதி என்பது தமிழில் தேதி என ஆனது. பனிரெண்டு ராசிகளால் பனிரெண்டு மாதங்களாயின. இந்தப் பதிவின் முக்கியமான விஷயம் கிழமைப்பெயர்களைப் போன்று தமிழ் மாதங்களின் பெயர்களும் வானவியலை சேர்ந்தது என்பதும் அதில் சித்திரைதான் வருடத்தின் முதல் மாதமாக வைக்கப்பட்ட காரணங்களும் இதனை மாற்றக்கூடாததிற்கான காரணங்களைப் பற்றி விவரிப்பதற்காகவும்.

சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ்மாதத்தில், அம்மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே மாதத்தின் பெயராக வைத்துள்ளனர்(விவரம் கீழே காண்க). எனவே தமிழ் மாதப்பெயர்கள் வானசாஸ்த்திரத்தை அடிப்படையாக கொண்டவை. ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர ஆகும் காலம். ஒரு வட்டத்தின் முதற்புள்ளியை எப்படி கணிப்பது? சுற்றும்போது பூமியின் சாய்வினால் சூரியன் வடக்கு தெற்க்காக நகர்கிறது. சூரியன் பூமத்திய ரேகையில் நேராக பிரகாசிக்கும் மாததை முதற்புள்ளியாய் ஆண்டின் தொடக்கமாக கொண்டுள்ளனர் நமது பெரியோர். பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நமது நாட்டிக்கும் இதுதான் சரி (சித்திரை கத்திரி வெயில்). பனிரெண்டு ராசியினால் பனிரெண்டாக பகுக்கப்பட்ட ஆண்டில் நம்மீது நேராக பிராகசிக்கும்போது சூரியன் மேஷ ராசியில் இருப்பான். எனவேதான் மேஷம் முதல் ராசியானது. இப்படி நேராக பிரகாசிக்கும் மாதம் சித்திரை. எனவேதான் சித்திரை முதல் மாதமானது. தைமாதத்தில் சூரியன் கீழே ஆஸ்திரேலியா மீது நேராக பிரகாசித்துக்கொண்டிருப்பான். எனவே முதல் மாதமாக சித்திரை தவிற வேறு எந்தமாதமும் நமக்கு பொருத்ததமாகாது. ஆதலின் சித்திரை முதலான மாதப்பெயர்களை உடைய ஆண்டின் முதல் மாதம் சித்திரையாக மட்டுமே இருக்கமுடியும். எப்படி அர்த்தமே இல்லாமல் தை முதல் மாதமாகமுடியும்?

மேலும் நமது வானசாஸ்த்திரத்தினை அடிப்படையாக கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கத்தில் முதல் மாதம் சித்திரையாக மட்டுமே இருக்கமுடியும். முதல்மாதத்தில்தான் பஞ்சாங்கம் படிக்கமுடியும். முக்கால்வாசி வருடம் முடிந்தபின் படிப்பது அனாவசியம். மகரராசியை முதல் ராசியாக கொள்ள அரசு உத்தரவு இடமுடியுமா? இதுபோன்ற அறிவியலான காரணங்கள் அனேகம் இருக்க வீம்புக்காக முதல் மாதமாக இருக்கும் சித்திரை மாதத்தை மாற்றமுயற்சிப்பது தவறு மற்றுமல்லாது மாற்றுபவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. இந்துமதத்தின் ஒரு பகுதியாக உள்ள கணிதபூர்வமான வானசாஸ்த்திரத்தை, பஞ்சாங்கத்தினை நம்பாதவர்களிடம் இதை எதிர்பார்க்கமுடியாது என்றாலும் தவறான செயலை பார்த்துக்கொண்டு சும்மா இருந்தால் அது தவறுக்கு துணைபோனது போலாகும். ஒரு கூட்டத்தின் முடிவால் ஆயிரக்ககணக்கான வருடங்களாய் வரும் நம் பூர்வீக அறிவியலை இழந்துவிடக்கூடாது. இது நம் பெரியோர்களுக்கு செய்யும் அவமரியாதையாகும்.

ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே தமிழ்மாதத்தின் பெயராக வைத்துள்ளனர். மட்டுமல்லாது அன்றைய தினம் விஷேச தினமாகவும் இருக்கும். சித்திரை மாதம் பெளர்ணமி அன்று சித்திரை நட்சத்திரம் வரும். எனவே மாதத்தின் பெயர் சித்திரையானது. அந்நாளும் சித்ராபெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது.

சித்திரை = சித்திரை [சித்திரா பெளர்ணமி]
விசாகம் = வைசாகம் = வைகாசி [வைகாசி விசாகம்]
அனுசம் = ஆனி
பூராடம் – பூராடி = ஆடி
சிரவணம் – ச்ராவணி = ஆவணி [திருவோணம் வடமொழியில் ஸ்ராவண நட்சத்திரம்]
பூரட்டாதி = புரட்டாசி [புரட்டாசி பெளர்ணமி பூரட்டாதி நட்சத்திரத்தில் வரும்]
அஸ்வினி = ஐப்பசி [வடமொழியில் ஆஸ்வீஜம்]
கார்த்திகை =கார்த்திகை [கார்த்திகை பெளர்ணமி]
மிருகஷீர்சம்= மார்கஷீர்சம் =மார்கழி
பூசம் வடமொழியில் புஷ்யம் என்பது. இதற்கு தைஷ்யம் என்று மற்றொரு பெயருண்டு. இது தை ஆனது. [தை பூசம்]
மகம் – வடமொழியில் மாக = மாசி [மாசி மகம்]
உத்திரம் -வடமொழியில் உத்திரப் பல்குனி = பங்குனி [பங்குனி உத்திரம்].

ஒவ்வொரு மாதத்தின் பெளர்ணமியன்று அதற்குரிய நட்சத்திரம் வருவதை காணலாம். இந்த நட்சத்திரப் பெயர்கள் ஏதோ வலிந்துபொருத்துவதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுக்கப்பட்டவை அல்ல. சித்திரையில் தொடங்கி பிற நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக 30 அல்லது 31 நாட்சுழற்சியில் வரும். சித்திரையிலிருந்து 31 வது நாள் விசாக(வைசாக) நட்சத்திரம் மற்றும் இதுபோல. மேலும் வைகாசி விசாகம், தை பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற பண்டிகைகளில் மாதத்தின் பெயருக்கும் நட்சத்திரதிற்கும் உள்ள தொடர்பை தெளிவாக காணலாம்.

இன்னும் அனேகவிஷயங்கள் உள்ளன. இப்படி காலஅளவுகள் நமது பெரியோர்களால் வானசாஸ்த்திரத்தில் அறிவியல் பூர்வமாக கணித்து வழக்கத்தில் உள்ள வருடத்தின் முதல் நாளை மாற்றுவது தவறு. தமிழ் உணர்வு என்பது எல்லாருக்கும் உண்டு. இதனை தேவையில்லாத இடங்களில் புகுத்தி மக்களை உசிப்பேற்றி குளிர்காயக்கூடாது. தமிழை காரணங்காட்டி வங்கிக் கணக்குகளுக்கான வருட ஆரம்பத்தை தை 1 க்கு மாற்ற அரசு உத்தரவிட முடியுமா? தேவையா?

முடிவாக, மாதங்களின் பெயர் சித்திரை முதல் பங்குனி வரை இருக்கும்போது, சூரியன் சித்திரையில் நம்மீது நேராக பிராகசிக்கும் வரை சித்திரை தான் வருடத்தின் முதல் மாதமாக இருக்கமுடியும். முதல்மாதம் தை என்பது வெறும் வீம்பாகத்தான் இருக்க முடியும். இதை மக்கள் உணர்ந்து தெரிந்தவர்கள் இவ்விஷயங்கள் தெரியாதுபோன்று இருக்கும் நம் அரசுக்கு உணர்த்தவேண்டும். தெரியாதவர்களுக்கு எடுத்துச்சொல்வோம்.

இந்த அரசு கவனிக்காவிட்டால் அடுத்த அரசிடம் எடுத்துச் சொல்வோம். தவறை தான் சரிசெய்யாது பிறர் சரிசெய்தால் அது அழகன்று. சரியில்லாதது நெடுநாள் தங்காது.

காலம் மாறும், காலத்தின் அளவுகோல் அல்ல.

இரா. குரு ராகவேந்திரன்
gururagav@gmail.com

Series Navigation

author

இரா. குரு ராகவேந்திரன்.

இரா. குரு ராகவேந்திரன்.

Similar Posts