தமிழ் ஏன் கற்க வேண்டும்?

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

சுந்தரேஷ்(கலிபோர்னியா பாரதி தமிழ்ச்சங்க பொங்கல் விழாவில் வெளியிடப்பட்ட கட்டுரை)

“தமிழ் ஏன் கற்க வேண்டும்?”- இந்தக் கேள்வியை எனது அமெரிக்கத் தமிழ் நண்பர் ஒருவரின் பதினான்கு வயதுப் பையன் கேட்டபோது அந்தக் கேள்வியின் எளிமையும் அந்த எளிமையினாலேயே அதில் இருந்த கூர்மையும் என்மேல் பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. ஆனால் அமெரிக்காவில் வாழும் அனைத்து இந்தியக் குழந்தைகளின் மனதிலும் தமிழ்க்குழந்தைகளின் மனதிலும் – அவர்கள் வெளியிலே சொல்கிறார்களோ இல்லையோ- இது தோன்றக்கூடிய கேள்விதான். பெற்றோர்கள் என்ற நிலையில் இருந்து இதற்கு நாம் பதில் காண வேண்டியது நம் பொறுப்பு.

தமிழ்நாட்டில் கூட இந்தக்கேள்வி கேட்கப்படுகிறது என்பது ஒரு வருத்தமான விஷயம். ஆனால் மலையாளத்திலும், மராட்டியத்திலும், வங்காளத்திலும், ஒரிஸ்ஸாவிலும் அந்தந்த மொழிகளும் அவை சார்ந்த பண்பாட்டுக்கூறுகளும் வலுவாகவே உள்ளன. மலையாள உரைநடையும், மராட்டிய நாடகத்துறையும், கன்னட மற்றும் வங்காள இலக்கியங்களும் ஆரோக்கியமாக வளர்ந்துள்ளன. இந்த மாநிலங்களில் எல்லாம் மொழி என்பது அதன் வரலாற்று, கலாசாரப் பின்னலுடன் வளர்த்தெடுக்கப்படுகின்றன.

எந்த ஒரு வாழும் மொழிக்கும் மூன்று அம்சங்கள் முக்கியமாகின்றன: பழையனவற்றின் கலாசாரத்தொடர்ச்சி, அறிவு சாத்திரங்களை உள்வாங்கும் நெகிழ்ச்சி, புதியனவற்றை ஆக்கிடும் முயற்சி ஆகியன அவை. இதில் எதில் ஒரு குறை ஏற்பட்டாலும் அதன் தாக்கங்கள் அம்மொழியின் வளர்ச்சியில் குறுக்கிடவே செய்யும்.

உதாரணத்திற்கு கணியன் பூங்குன்றனாரின் இந்த சங்கப்பாடலை எடுத்துக்கொள்வோம்.

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

இதில் முதல் இரண்டு வரிகளும் பலர் கேள்விப்பட்டவையாய் இருக்கலாம். ஆனால் இதன் தத்துவ ஆன்மீகச் செழுமையை அறிய இந்த முழுப்பாடலின் பொருளையும் அறிந்து கொள்ள வேண்டும். இதன் முழுப் பொருள் வருமாறு: “எல்லா ஊர்களும் நமது ஊரே, எல்லா மக்களும் நம் மக்களே. நன்மையும் தீமையும் பிறரால் ஏற்படுவது இல்லை. வலியும் அவ்வலி நீங்கும் செயலும் நமக்கு உள்ளிருந்தே நிகழ்பவையாகும். சாவது புதுமை இல்லை. வாழ்வு மகிழ்ச்சியானது என நாம் கொண்டாடுவதும் இல்லை, கசப்பானது எனக் கொள்வதும் இல்லை. ‘இடிமின்னலுடன் கூடிய பெருமழையில் கருத்த மேகங்கள் கூடிய இரவில், மலையிலிருந்து பாறைகளுடன் மோதி வேகமாய் இறங்கும் ஆற்றினில் செல்லும் படகுபோன்றதுதான் நம் வாழ்வும்’ என்று சான்றோர் கண்டு தெளிந்ததை நாம் அறிவோம், ஆதலால் புகழடைந்த பெரியோரை நாம் வியப்பதும் இல்லை; சிறியோரை நாம் இகழ்வதும் இல்லை”
நிலையாமை, உலகத்தையே சக குடும்பமாக பாவிக்கும் பாரத மரபின் பெருந்தன்மை, தாமரை இலைத்தண்ணீர் போன்று வாழ்வை அணுகும் பார்வை, பெரியோரையும் சிறியோரையும் சமமாய்ப் பார்க்கும் ஒரு சித்தனின் மனநிலை, பிறர்மூலம் அன்றி தன் வினைப்பயனாலேயே தீதும் நன்றும் விளைகிறது என அறிவிக்கும் பாங்கு – இப்படி இந்தப்பாடல் முழுவதும் பாரத ஞான மரபின் அடிநாதம் இறவாத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது என்பது அப்பாடலை முழுவதும் படிக்கையில் உணர முடிகிறது. தமிழ்மொழி தொன்று தொட்டுத் தொடரும் ஒரு பெரும் கலாசாரத்தின் நின்று நிலைக்கும் ஒரு மகத்தான கூறு என நிறுவ இப்பாடலே சிறந்த சான்று.
அடுத்ததாக அறிவு சாத்திரங்களை உள்வாங்கும் நெகிழ்ச்சி என்று பார்த்தால், தமிழ் தனக்குள் இறுகிப்போகாமல் இருக்க, தமிழுடன் கூடி பிறமொழிகளைக் கற்பதும் புலமை பெறுவதும் அவசியமாகும். தமிழுக்கு ஆகப்பெரும் பங்காற்றிய பலர்- கால்டு வெல்லிலிருந்து பாரதி வரை- அனைவரும் பன்மொழி வித்தகர்கள். பன்மொழி அறிவு தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஊறு என்று அவர்கள் ஒருபோதும் கருதியது இல்லை. மொழியில் நெகிழ்வு நிலை இருப்பதும், பிறமொழி அறிவும் ஆரோக்கிய மொழிவளர்ச்சிக்கு அவசியமானவையாகும்.
இன்று வாழும், வளரும் மொழிகள் அனைத்திலும் -ஆங்கிலம், பிரெஞ்சு, ஜப்பானிய மொழி ஆகிய அனைத்திலும் – அந்தந்த நாகரீகங்களின் கலாசாரத்தொடர்ச்சி போற்றப்படுகிறது. பிற மொழி வார்த்தைகள் தேவைக்கேற்றவாறு வசதியாக உள்வாங்கப்படுகின்றன. அந்தந்தக் கலாசாரத்தின் புதிய பங்களிப்புகள் அந்தந்த மொழிகளிலேயே நடக்கின்றன. நம் அண்டை மாநிலமான கேரளாவில் கூட இதனை நன்றாகக் காண முடியும். கேரள சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட்ட அறிஞரும் ஞானியுமான ஸ்ரீநாராயணகுரு சமுதாய மேம்பாட்டையும் அறிவியக்கத்தையும் ஒன்றிணைத்து “மலையாளம், தமிழ், சமஸ்கிருதம்” என்ற மூன்று மொழிகளையும் பயில அறைகூவல் விடுத்தார். ஆரோக்கியமான மொழி வளர்ச்சி என்பதன் அடையாளம் இது. இந்தியாவில் இருக்கையில் நம் கண்ணில் படாத பல இந்திய கலாசார நல்ல அம்சங்கள் அமெரிக்காவில் வந்து வாழ்கையில் தெள்ளெனப் புலப்படுவதில்லையா?அதுபோலத்தான் பிறமொழி அறிவும் தாய்மொழியின் செம்மையை அறியப் பெரிதும் துணை செய்கிறது. பிற மொழியறிவே தன்மொழியின் சிறப்பு குறித்த வியப்பையும் பெருமிதத்தையும் அளிக்கிறது. தமிழ்மொழியுடன் கூட பிற மொழிகளையும் கற்பதும் பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை உள்வாங்குவதும் தமிழ்மொழிக்கு வலுவேற்றும் செயல்களாகவே அமையும்.

மூன்றாவதாக புதியனவற்றை ஆக்கிடும் முயற்சி. இதில் தமிழ் சமுதாயம் புத்தக வெளியீடு உள்ளிட்ட பல விஷயங்களில்- குறிப்பாக கணிணி கொண்டு தமிழ் செய்யும் முயற்சிகளில் – முனைப்புடன் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் புதியன என்று ஆக்கம் செய்கையில் பழையன குறித்த அறிதல் வேண்டும். “மரபைக் கற்றுக்கொள், பின் மீறு” என்பார் ஜெயகாந்தன். நம் மரபையும் கலாசாரத்தையும் வரலாற்றையும் குறித்த புரிதலும் பெருமிதமும் இல்லாத யாரும் நம் காலம் தாண்டி வாழும் புதிய விஷயங்களைப் படைத்திட முடியாது.

தமிழை மதிப்பெண்ணுக்காக மட்டுமே பயின்று வேற்று மொழியிலும் புலமை இல்லாமல், கணிணி மொழி மட்டுமே அறிந்து கரைகடந்து வந்த பலர் உண்டுதான். அந்நிலைக்கு பல சமூக மற்றும் அரசியல் சூழல்கள் காரணமாய் இருந்திருக்கலாம். ஆனால் அடுத்த தலைமுறைக்கு நாம் கடத்தக் கடமைப்பட்டுள்ள விஷயங்களில், அவர்களுக்கு அடையாளம் என்று சொல்லும் வகையில் உள்ள பாரத ஆன்மீக மரபு, அதனுடன் பின்னிப்பிணைந்த மூத்த தமிழ்க்கலாசாரம், அதில் விளைந்த தமிழ் மொழியின் தொன்மை ஆகியவை முக்கியமானவை. வரலாறு, ஆன்மீகம், பண்பாடு ஆகியவற்றை வடிகட்டி விட்டுக் கொடுக்கப்படும் தமிழறிவு உயிர்ப்பற்ற யந்திர அறிவாக, பாறையில் விழுந்த விதையாகப் பயனற்றுத்தான்போகும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். கம்பராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியபுராணம், தேவாரம், பாசுரங்கள் ஆகிய பண்பாட்டு வேர்களை வெட்டித் தள்ளி விட்டு, வெறும் வறட்டு இலக்கண வார்த்தைக்கோர்வைகளாக மட்டுமே தமிழ் கற்பிக்கப்படுமானால், குழந்தைகளுக்கு “ஏன் தமிழ் படிக்க வேண்டும்?” என்ற கேள்வி ஏன் எழாது? மொழியுடன் கூடி நமது கலாசார மதிப்புகள் கற்றுத்தரப்படவில்லையெனில், அதற்குப்பதில் ஸ்பானிஷ் அல்லது சீன மொழியை- ஏன் ஏதாவது நவீன கணினி மொழியைக்கூடக்- கற்றுக்கொடுத்து விடலாம்தானே.

எனவே தமிழ் ஏன் கற்க வேண்டும் என்ற கேள்விக்கான பதில் எப்படிப்பட்ட தமிழ் அவர்களுக்குக் சொல்லித்தரப்பட வேண்டும் என்பதிலேயே அடங்கியுள்ளது.

மண்ணைப் பிரிந்து வேற்றிடம் வளரும் செடிகளான நமது அடுத்த தலைமுறைக் குருத்துகளுக்கு தங்கள் வேரைக் குறித்த வியப்பும் விளக்கமும் விழிப்புணர்வும் தேவை. தங்களது வரலாறு, ஆன்மீக மரபு மற்றும் பண்பாட்டின் தொடர்ச்சி குறித்த பெருமிதம்தான், இவற்றைப் பல நூற்றாண்டுகளாகச் சுமந்து நமக்குக் கொண்டு தரும் மொழியின் மீது அவர்களுக்கு உண்மையான ஈர்ப்பையும் உருவாக்கும். எனவே அத்தகைய பெருமிதமும் தன்னம்பிக்கையும் தரும் வகையில் தமிழ் குறித்த அறிவை அவர்களுக்குத் தர முன் வருவது அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ்ப் பெற்றோர்களின் கடமையாகும்.


sundaresh.veda@gmail.com

Series Navigation

சுந்தரேஷ்

சுந்தரேஷ்