தமிழ் எழுத்தாளன் : ஓர் அவல வரலாறு

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

கோ ராஜாராம்


தொண்ணூறுகளின் முதல் பகுதியில் நடந்தது இது. இந்தியா டுடேவிற்கு சிறுகதை எழுதி அனுப்பிய நண்பர் ஒருவர், இந்தியா டுடேயிலிருந்து வந்த காசோலையை அலட்சியமாய்த் தூக்கிப் போட்டவர் – என்ன பிசாத்து நூறு அல்லது இரு நூறு அனுப்பியிருப்பார்கள்- அடுத்த நாள் எடுத்துப் பார்த்து திடுக்கிட்டார். 1000 ரூபாய்க்கான காசோலை அது. கண்ணைக் கசக்கிக் கொண்டு நம்ப முடியாமல் கொஞ்ச நேரம் இஉட்கார்ந்து ஆசுவாசப் படுத்திக் கொள்ள வேண்டியதாயிறு என்று சொல்வார் அவர் ஆயிரம் ரூபாய் தன் எழுத்துக்கு வழங்குகிற ஒரு நிறுவனத்தைப் பார்த்து வியப்படைவது இன்றைக்கும் நடப்பது தான். இத்தனைக்கும் இந்த நிறுவனங்கள் எதுவும் ஏழையல்ல. கோடிக்கணக்கில் பணம் புரளும் பெரும் வர்த்தக நிறுவனங்கள். நினைத்தால் அரசாங்கத்தை ஆட்டிப் படைக்க வைக்கும் வலிமை கொண்ட பத்திரிகை சாம்ராஜ்யங்கள். கவர்ச்சி வார ஏடுகளில் தொடங்கி அரசியல் பரபரப்பு, பக்தி வெள்ளம் என்று தமிழ் நாட்டின் எல்லா தரப்புச் சமுதாயத்தையும் பாதிக்கிற, பாதிப்பின் மூலம் கோடிக்கணக்கில் பணம் ஈட்டுகிற பண மூட்டைகள் இவர்கள். இவர்களின் வளர்ச்சி – முழுக்க முழுக்க இல்லையென்றாலும், பெருமளவிற்கு – எழுத்தை மையமாய்க் கொண்டது. ஆனந்த விகடன் மணியன், ஜெயகாந்தன் போன்றோர் இல்லாமலோ, குமுதம் சாண்டில்யன், ஜ ரா சுந்தரேசன், ரா கி ரெங்கராஜன் , சுஜாதா போன்றோர் இல்லாமலோ இந்த உச்சத்தை அடைந்திருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் இந்த உயர்விற்குக் காரணமான எழுத்தாளனுக்கு இவை எப்படிப் பட்ட மரியாதையும் சன்மானமும் அளித்து வருகின்றன என்று ஆராய்ந்தால் அவலம் என்று சொல்வது ஒரு குறைந்த பட்ச வார்த்தை என்று தோன்றுகிறது. எழுத்தாளனுக்குத் தன் தொழிலில் ஏற்படவேண்டிய நியாயமன கர்வத்தைக் குலைத்து, சிறப்பான படைப்பிலக்கியகர்த்தாக்களைக் கூட எடுபிடிகளாகவும், வரப்பெற்றோம் அல்லது துண்டு துணுக்கு பத்திகள் எழுதுபவர்களாகவும் உருமாற்றி அவர்களுடைய தன்னம்பிக்கையைச் சிதைத்ததில் இந்த பத்திரிகைகளின் பங்கு பெரிதும் உண்டு. இதில் பிழைத்தவர்கள் சுயத்தையும் தன் எழுத்தையும் காப்பாற்றிக் கொண்டு வெளியே வருவதற்குள் அவர்களுடைய காத்திரமான படைப்புக் காலங்கள் கழிந்து போயிருக்கும். தன் சொந்தப் பெயரில் கூட இவர்களை எழுத விடாமல், ஏதோ பொத்தாம் பொதுவான புனைப்பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்தாளர்களின் படைப்பையும் வெளியிட்ட பத்திரிகைகள் இங்கே உண்டு.

உனக்கு தான் பெயிண்டிங் தெரியுமே, என்னுடைய ஆஃபிஸ் ரூமை கொஞ்சம் வெள்ளையடித்துவிட்டுப் போ என்று ஒரு ஜெயராஜிடமோ, மதனிடமோ, கோபுலுவிடமோ சொல்வதற்கு இந்தப் பெரும் பத்திரிகை ஆசிரியர்களுக்குத் துணிச்சல் இருக்காது. ஆனால் எழுத்தாளனிடம் , அதுவும் எழுத்து தானேய்யா, வரப்பெற்றோமில் இந்த சோதிடப் புத்தகத்தைப் பற்றி ரெண்டு வரி எழுது என்று ‘மெய்ப்புப் பார்ப்பதை ‘ பிரதான வேலையாய்க் கொண்ட ‘உதவி ஆசிரியர் ‘ என்ற கெளரவ நாமகரணம் தாங்கிய படைப்புஎழுத்தாளர்களிடம் இவர்கள் சொல்லத் தயங்கியதில்லை.

ஒருபுறம் கைக்காசைச் செலவு செய்து, பெண்டாட்டி நகையை அடகு வைத்து இலக்கியச் சிறுபத்திரிகைகளை பெரும் போராட்டத்துடன் நடத்துகிற ஆர்வமும், தமிழ் இலக்கிய ஈடுபாடும் கொண்ட சிலர். இன்னொரு புறம் கோடிக்கணக்கில் பணம் பண்ணியும் எழுத்தாளனுக்குச் சேரவேண்டிய நியாயமான சன்மானத்தையும் கபளீகரம் செய்து வெற்றிநடை போடும் பெரும் பத்திரிகைகள். அரசியல்வாதிகளின் ஊழல்களை அம்பலப் படுத்தி சமூகசேவக வேடம் போடும் ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர் போன்ற ‘சமூக அக்கறை ‘ ஏடுகள் பத்திரிகை அதிபர்கள் செய்யும் ஊழலைப் பற்றியும் இன்வெஸ்டிகேட் செய்து எழுதுவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

இன்றைய பத்திரிகை வினியோகங்கள் கிட்டத்தட்ட இந்த அளவு என்று எண்ணுகிறேன். குமுதம் 3 லட்சத்திற்கு மேல். ஆனந்த விகடன் 3 லட்சத்திற்குள். இந்தியா டுடே ஒரு லட்சம் . கல்கி 50,000. என்று சில சர்வேக்கள் தெரிவிக்கின்றன. ஆடிட் பீரோ சர்குலேஷன் புள்ளிவிவரங்கள் நம்பத்தக்கன அல்ல என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். எத்தனை பிரதிகள் அச்சில் என்று ஒவ்வொரு இதழுக்கும் வெளியிடுவது அமெரிக்க மற்றும் ஐரோப்பியப் பத்திரிகைகளில் சட்டத்தின் தேவை.(இந்த எண்ணிக்கைகளில் தில்லுமுல்லு செய்வது சட்டத்தின் பாற்பட்ட குற்றம். இந்தக் குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவிக்கிறவர்களும் உண்டு.) ஆனால் விளம்பரதாரர்களுக்காக இந்த பத்திரிகை வினியோக எண்ணிக்கைகள் கூட்டப் படுவது இந்தியாவில் சர்வசாதாரணம் என்று அறிகிறேன். இதில் வாசிப்பவர்கள் என்ற அளவில் ஒரு புள்ளிவிவரம் இந்தியாவில் தரப்படுவதுண்டு. உதாரணமாக் ஒரு லட்சம் பிரதிகள் அச்சில் ஆனால் ஒரு பிரதி பத்துப் பேரால் வாசிக்கப் படுகிறது, அதனால் வாசகர் எண்ணிக்கை 10 லட்சம் என்று சொல்வார்கள், இதற்கு விஞ்ஞான பூர்வமான அடிப்படை எதுவும் கிடையாது.

சரி, இப்படி லட்சக் கணக்கில் விற்கும் பத்திரிகைகளில் மாதத்திற்கு நான்கு கதைகள் எழுதும் ஒருவன் அல்லது வாரந்தோறும் பத்தி எழுதும் ஒருவன் எந்த பிரசினையும் இல்லாமல் அன்றாட வாழ்வினை வாழ்வதற்கான உத்தரவாதம் இருக்கும் என்பது மிக இயல்பான எதிர்பார்ப்பாய் இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. வருடத்திற்கொரு தரம் விளம்பர விகிதங்களை இந்தப் பத்திரிகைகள் உயர்த்துகின்றன. நினைத்தபோதெல்லாம் பத்திரிகை விலையை உயர்த்துகின்றன. ஆனால் எழுத்தாளனுக்கு நியாயமாய்க் கிடைக்க வேண்டிய சன்மானம் ஐந்து வருடத்துக்கு ஒரு தரம் கூட உயர்த்தப் படுவதில்லை. இதில் மணி ஆர்டர் கமிஷனைக்கூட எழுத்தாளனுக்கு அனுப்பும் பணத்தில் பிடித்தம் செய்கிற அற்பக் கோடாசுவரர்கள் இருக்கிறார்களாம். மூன்று லட்சம் விற்கும் குமுதம் கதைக்கு ‘500 ரூபாய் ‘ மனமுவந்து கொடுப்பதும், 50000 பிரதிகள் விற்கும் இந்தியா டுடே 1500 ரூபாய் கொடுப்பதும் என்ன வயிற்றெரிச்சல் சமாசாரங்கள் இந்தப் பத்திரிகைப் பணமூட்டைகளுக்கு மனசாட்சி ஏதும் இருக்கிறதா ? குமுதத்தில் ஒரு பக்கம் விளம்பரத்திற்கு வசூல் செய்யும் தொகை 40000 ரூபாய் போலவாகும். 10 பக்கங்கள் கதை எழுதினால் 500 ரூபாய் அதிலும் மணி ஆர்டர் கமிஷன் பைசா விடாமல் கழித்துக் கொண்டு அனுப்புவார்கள் . என்ன அவலம் இது ? (90களின் தொடக்கத்தில் இந்தியா டுடே கதைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தது என்றால், பண வீக்கத்தின் போக்குப் படி இப்போது இந்தத் தொகை 3000-4000 ஆகியிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஆக வில்லை. இந்தியா டுடேயைக் காட்டிலும் தமிழ்நாட்டில் வினியோகமும் பண வசூலும் அமோகமாக இருக்கும் பத்திரிகைகள் ராணி, தேவி, குமுதம், விகடன் போன்றவை இந்தியா டுடேக்கு ஈடாகக் கூட பணம் அளிப்பதில்லை.)

ஆனால் இதற்கு ஓரளவு எழுத்தாளர்களையும் குற்றம் சொல்ல வேண்டும் தான். தம்முடைய உழைப்பின் பயனைக் கேட்டுப் பெறுவதில் எப்போதுமே இவர்கள் தயக்கம் காட்டித்தான் வந்திருக்கிறார்கள். ஏதோ தான் பணம் கேட்டால் பணத்திற்காக எழுதும் அபசாரச் செயலைச் செய்வது போன்ற ஒரு குற்ற உணர்வை இவர்களிடம் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். பல் குத்தும் குச்சி கூட காசில்லாமல் கிடைக்காத சமூகத்தில், எழுத்தாளன் மட்டும் பணம் இல்லாமல் வறுமையில் வாடி இலக்கிய உத்தாரணம் செய்ய வேண்டும் என்பது என்ன தலையெழுத்து ? அதுவும் அவன் எழுத்தை உறிஞ்சி , பத்திரிகைகள் மேலும் மேலும் வளர்கின்றன. சாணித்தாளில் அச்சடித்து ராயல்டியே கொடுக்காமல் இலக்கிய சேவை செய்கிற பதிப்பாசிரியர்கள் மாடிக்கு மேல் மாடி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எழுத்தாளன் மட்டும் காசு கேட்டு விடக் கூடாதாம். என்ன அபத்தம் இது ?

இதிலிருந்து எப்படி மீள்வது ?

1. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் இதில் ஈடுபட வெண்டும். எழுத்தாளனுக்கு உரிய ஊதியம் கிடைக்கும் வரையில் பணமூட்டைகளின் பத்திரிகைகளின் அடுத்த இதழ் வராதபடிக்கு போராட வேண்டும். ஒவ்வொரு பத்திரிகையின் வினியோகத்தைப் பொறுத்து பக்கத்திற்கு இவ்வளவு என்று சன்மானம் நிர்ணயிக்க வேண்டும். இந்த சன்மானம் ஒழுங்காக வழங்கப் படுவதைக் கண்காணிக்க வேண்டும்.

2. பதிப்பாசிரியர்கள் ராயல்டியில் 50 சதவீதம் முன்பணமாக எழுத்தாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை விதியாக வைக்க வேண்டும்.

3. பதிப்பாசிரியர்கள் எத்தனை பிரதிகள் வெளியிடுவார்கள் என்பதையும் ராயல்டி எந்த தேதிக்குள் வழங்குவார்கள் என்பதையும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு வழங்கவேண்டும். இந்த ஒப்பந்தம் மீறப்பட்டால், காசோலை மோசடிக்குச் சமமானதாக இதைக் கருதி பதிப்பாளரின் சொத்து முடக்கம் உள்ளிட்ட தண்டனைகளை வழங்க நீதிமன்றம் முன்வரவேண்டும்.

4. பத்திரிகை நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பசாவத் கழிஷன் பரிந்துரைகளைத் தவிர்க்க – பத்திரிகை அலுவலகங்கள் அல்லாத – வேறு இடங்களில் வேலை செய்வதாக கணக்குக் காட்டி சம்பள மோசடி செய்வதைத் தடுக்க பத்திரிகை ஊழியர்களின் பட்டியல் பகிரங்கமாக வெளியிடப்படவேண்டும்.

5. எழுத்தாளர்கள் கூட்டுறவு நிறுவனம் அமைத்து பதிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

6. நூலக விற்பனைக்கான ராயல்டி தொகை நேரடியாக எழுத்தாளனுக்கு வழங்கப் படவேண்டும்.

7. நூலக ஆர்டரின் போது பதிப்பாளர்களிடம் முந்தைய ஆண்டின் ராயல்டிகள் வினியோகிக்கப் பட்டுவிட்டதற்கான சான்றிதழை எழுத்தாளர்கள் வழங்கி, எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் அதைச் சரிபார்த்து , சர்டிஃபிகேட் வழங்க வேண்டும் . இந்த சர்டிபிகேட் பெறாத பதிப்பகங்களிடம் நூலக ஆர்டர் வழங்கப் படலாகாது.

8. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படைப்புத் தமிழ் பாடமாக வைக்க வேண்டும். படைப்புத் தமிழைப் பயிற்றுவிக்க படைப்பெழுத்தாளர்கள் நியமிக்கப் படவேண்டும். இவர்களின் படைப்புத் தமிழ் பாடம் தமிழ் கதை கட்டுரை மட்டுமல்லாமல், தெளிவாக மக்கள் தொடர்பு , தகவல் தொடர்பு அதிகாரிகள் பணி போன்றவற்றுக்கு உதவும் வண்ணம் பாடத்திட்டம் அமைக்கப் படவேண்டும்.

இந்த யோசனைகள் எதுவும் அதீதமானவையல்ல. இன்றைய சூழ்நிலையில் நிச்சயம் செய்யத்தக்கவையே.

அடுத்த எழுத்தாளன் தற்கொலையை நோக்கி விரையும் முன்னால் இதில் ஒரு சிலவாவது நடைமுறைப்படுத்தப் பட்டால் சில பலன்கள் விளையலாம்.

—-

gorajaram@yahoo.com

Series Navigation

கோ ராஜாராம்

கோ ராஜாராம்