தமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

மஞ்சுளா நவநீதன்


தமிழிசை இயக்கம் தொடங்கி எத்தனை வருடங்கள் ஆயின? ஐம்பது வருஷம் அறுபது வருஷம் ஆகியிருக்கலாம். இந்த இயக்கத்தால் தமிழுக்கும் பயனில்லை, தமிழருக்கும் பயனில்லை, இசைக்கும் பயனில்லை. யாருக்குப் பயன் இருந்தது? அரசியல்வாதிகளுக்கு நிச்சயம் பயன் இருந்தது. என்ன பயன் அவர்களுக்கு? தம்முடைய பிராமண எதிர்ப்பின் ஓர் அங்கமாக அதனை ஆக்கி அதில் குளிர் காய்ந்தார்கள் அவ்வளவு தான்.

முதலில் தமிழ் இசை என்பதே ஒரு தவறான வார்த்தைப் பிரயோகம். தமிழ் இசை என்று எதுவுமே இல்லை. ஆமாம், தமிழ்ப்
பாடல்கள் இருக்கின்றன. தமிழர்கள் பாவிக்கும் இசை இருக்கிறது. தமிழர்கள் தோற்றுவித்த, பேணி வளர்த்த இசை மரபு இருக்கிறது. இசைக்கென்றே இனக்குழுவைப் பாதுகாத்து வளர்த்த அந்த மரபும் கூட சுத்தமாய், தூய்மையாய்த் தன்னுள் தொடங்கி தன்னுள் முடிகிற ஒன்றல்ல. மற்ற மற்ற இசை மரபுகளிலிருந்து பெற்றும், மற்ற இசை மரபுகளுக்கு அளித்தும் வளர்ந்திருக்கிறது. இதை தமிழிசை இயக்கக்காரர்கள் அறிந்திருந்தால், இந்த இயக்கத்தை தமிழ்ப் பாடல் இயக்கம் என்று தான் சொல்லி அழைத்திருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு இருந்த இசைஞானம் தான் சூனியமாயிற்றே.

வாக்னரின் இசையை ஜெர்மானிய இசை என்றோ ஷைகாவ்ஸ்கியின் இசையை ரஷ்ய இசை என்றோ யாரும் குறிப்பிடுவதில்லை.
மேற்கத்திய இசை என்ற பெரும் ஆற்றுப்போக்கில் வெவ்வேறு கரைகளில் எழுந்த நாதங்கள் அவை. முதன் முதலில் இதாலியில் தான் இசை நாடகங்கள் (Opera) தோன்றின. அதனால் அவை இதாலி மொழியில் எழுதப்பட்டன. எனினும் இன்றும் மேற்குலகம் முழுவதிலும் அவை பாடப்படுகின்றன, நிகழ்த்தப் படுகின்றன. அவற்றை இதாலி மொழி என்று எவரும் வெறுத்து ஒதுக்குவதில்லை. அதை பிற்றி பிரெஞ்ச், ஜெர்மன் மொழிகளில் இசை நாடகங்கள் எழுந்தன. அவரவர் மொழியில் எழுந்த இசை நாடகங்கள் ஆங்காங்கே நிகழ்கின்றன என்றாலும், பாவரோட்டி இதாலிய மொழியில் பாடும்போது, யாரும் ஆங்கில இசையினைப் பாடு என்று குரல் கொடுப்பதில்லை. ( சமீபத்தில் கூட ஏ ஆர் ரஹ்மான் ஒரு ப்ராட்வே ஆங்கில நாட்டிய நாடகத்துக்கு இசை அமைத்தபோது அதன் பாடல் வரிகளில் பல இந்தி மொழியில் இருந்தன. அமெரிக்கர்கள் “ஆங்கில மொழியில்” பாடு என்று கூச்சல் போடவில்லை. )

நுஸ்ரத் பதே அலிகானின் இசையை யாரும் பாகிஸ்தானிய இசை என்று குறிப்பிடுவதில்லை. அந்த இசை வட இந்திய இசை மரபில் எழுந்து கிளைத்த ஒன்று. லதா மங்கேஷகரின் இசையை யாரும் இந்தி இசை என்று சொல்வதில்லை. இந்துஸ்தானி இசையில் வெவ்வேறு காரானாக்கள் உண்டு. ஒரு நகரில் பிரபலமான இசைக்குடும்பத்தின் கீழ் பயின்றவர்கள் தம்மை அந்தக் குறிப்பிட்ட பாணியிலான கரானாவைச் சேர்ந்தவர்கள் என்று இனங்காணலாம். ஆனால் அதுவும் இசையின் ஒரு பாணி தான்.

இசையில் பாடல் என்பது ஒரு ( மிகச் சிறிய ) அங்கமே. வாத்திய இசை தான் பெரிதும் இசையின் உயிர். பாடல் புரிந்து கொள்வதற்காக இசையை ரசிப்பவர்கள் சிலர், பாடல்மொழியையும் மீறி இசையில் லயிப்பவர்களே ஏராளமானோர். ஆனால் இந்த நுட்பங்கள் எல்லாம் தமிழிசை இயக்கம் நடத்தியவர்களுக்குத் தெரியாது. ஏனென்றால் அவர்களுக்கு இசை அறிவு என்பது கிடையாது. முக்கியமாய் தியாகராயர் கீர்த்தனைகளை பாடுகிறார்களாம். அது தெலுங்கில் இருக்கிறதாம் பாடுபவர்களில் நிறையப் பேர் பிராமணர்களாம், அதை எதிர்க்க என்ன செய்யலாம் என்பது தான் அவர்களின் சிந்தனையாய் இருந்தது. தியாகராயர் தமிழகத்தில் வாழ்ந்தவர். தமிழகத்தில் வீட்டில் தெலுங்கு பேசிய எண்ணற்ற மக்களில் ஒருவர். அவர் சுந்தரத் தெலுங்கினில் இசைப்பாடல்கள் பாடினால் அதில் என்ன முரண்பாடு இருக்க முடியும்? தமிழ்ப் பாடலைப் பாடாதே என்று யார் கையைப் பிடித்துத் தடுத்தார்கள்?

தமிழ்ப் பாடலுக்கு எதற்கு இயக்கம்? பாரதியார் பாடல்கள், கண்ணதாசன் பாடல்கள், பட்டுக்கோட்டை பாடல்கள், ஆண்டாளின் பாடல்கள், என்று திரை இசை , மற்ற மொழிப் பாடல்களைக் காட்டிலும பிரபலமாகவும், தமிழர்களின் நாவில் அன்றாடம் புழங்கிக் கொண்டும் தானே இருந்தன, இருக்கின்றன? திரை இசைக்கு வெளியேயும், இந்து , இஸ்லாமிய, கிருஸ்துவ பக்திப் பாடல்கள் தமிழில் பெரும் அளவில் உருகி உருகி பாடியிருக்கிறார்கள். நான் தமிழில் பாடுவேன் என்று பெருமிதம் பொங்க எவருமே பாடியிருக்கலாம், பாடியிருக்கிறார்கள், இன்றும் கூடப் பாடுகிறார்கள்.

ஆனால் மற்றவர்களைப் பாடாதே என்று சொல்வதற்கு ஓர் இயக்கமாம் , வெட்கக்கேடு.

***

இதேபோல் தாம் தமிழர் மொழியும் கூட. சமஸ்கிருதம் தமிழர்களின் மொழியாய்த்தான் இருந்தது. அதனால் தான் தமிழ் மொழியில் எப்படி சமஸ்கிருதத்தை சுவீகரித்துக் கொள்ளவேண்டும் என்று தொல்காப்பியம் இலக்கணம் வடிக்கிறது. இனி தமிழர்களின் மொழியாக விரைவில் ஆங்கிலம் உருவெடுத்துவிடும். ஒரு விதத்தில் இப்போதே அப்படித்தான் உள்ளது என்று சொல்லவேண்டும். தமிழர்கள் தமிழ் அரசியல்வாதிகளை மீறிய ஒரு பரந்த நோக்குடனேயே இருந்திருக்கிறார்கள். லட்சக்கணக்கில் இந்துவும் இந்தியன் எக்ஸ்பிரசும் படிக்கிற தமிழர்கள், ஆங்கிலப் படங்களைப் பார்க்கிற தமிழர்கள், அறிவுத் தேட்டத்துக்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்திக் கொள்கிற தமிழர்கள், சமகால உலகுடன் தம்முடைய தொடர்பை ஆங்கிலம் வழியாக உறுதி செய்துகொள்பவர்கள் , ஏற்கனவே ஆங்கிலம் தமிழர்கள் மொழிதான் என்று அங்கீகாரம் அளித்துவிட்டார்கள் என்று சொல்லவேண்டும். அதன் பொருள் தமிழை ஆங்கிலப் படுத்த வேண்டும் என்பது அல்ல.

***

இசை ஒரு மொழியா என்பது பலருக்கு விவாதத்துக்குரியதாக இருக்கலாம். இசையும் மொழியும் மக்களோடு மக்களைதொடர்பு படுத்தும் கருவிகளில் ஒரு சில. மொழியும் இசையும் மனிதர்களை இணைக்கவேண்டுமே அன்றி பிரிக்க உதவக்கூடாது. அந்த வேலையை வெற்றிகரமாகச் செய்து வரும் அரசியல் வாதிகளின் கையில் இசை படும் பாடு யாருக்கும் கோபத்தை உருவாக்குவதில்லை என்பது வருத்தத்திற்குரியதே.

நஸ்ரத் படே அலிகான், படே குலாம் அலி கான், மைக்கல் ஜாக்ஸன், பாவரோட்டி, ஜாக்கிசான் (ஆமாம் ஜாக்கிசான். அவர் ஒரு சிறந்த பாடகரும் கூட) ஆகியோரின் இசை நம்மை மனிதர்களோடு மனிதர்களாக இணைக்கவேண்டும். எல்லைக்கோடுகளையும் மனச்சாய்வுகள் எழுப்பும் சுவர்களையும் தாண்டி மனித பாரம்பரியத்தில் நம்மை ஒன்றிணைக்க வேண்டும்.

ஆனால், எல்லாவற்றையும் கொச்சைப்படுத்தவென்றே தோன்றிய அரசியல்வாதிகளின் கையில் இசையும் மாட்டிக்கொண்டு படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. இந்த அவலத்திற்கு எதிராக உரத்த குரலெழுப்புவர்கள்தாம் இல்லை.

ஒன்று செய்யலாம். இளையராஜா ஒரு முறை செய்ததுபோல, “காற்றைத்தவிர வேறெதும் இல்லை” போன்று வெறும் மிருதங்கம், வயலின் போன்ற இசைக்கருவிகளையும், மொழியற்ற குரலையும் கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தலாம். மிருதங்கத்துக்கு என்ன மொழியை சொல்லித்தர முடியும்? வயலினுக்கு என்ன மொழியை சொல்லித்தர முடியும்?

அதனை ஒரு கலகக்குரலாக செய்யும்போது இந்த அரசியல்வாதிகளின் குரலை அடக்க முயலலாம். (ஆனால் அதிலும் தபலா வேண்டாம் மிருதங்கம் வேண்டும், சிதார் வேண்டாம், வீணை வேண்டும் என்று உதவாக்கரை அரசியல்வாதிகள் குரல் எழுப்பக் கூடும் தான்.)

*****

ஆனால் தமிழ் இயக்கம் நடத்திய அரைகுறை அறிவுஜீவிகளான, முழுநேர அரசியல் வாதிகளைக் காட்டிலும் தமிழ் மக்கள் மிகவும் அறிவுக்கூர்மையும் நுண்ணுணர்வும் மிக்கவர்கள். இவர்களின் அபத்தக்குரலின் அபஸ்வரத்தை ஒதுக்கிவிட்டு, “ரா ரா சரசக்கு ராரா” என்று சந்திரமுகியின் பாடலையும், சங்கராபரணம் திரைப்படத்தின் “சங்கரா” என்ற ஆலபனையையும், செம்மீனின் பாடல்களையும் இன்னமும் எம் தமிழரின் இசைஉணர்வு மிக்க நாவுகள் முணுமுணுக்கின்றன. இசை உணர்வு மிக்க காதுகள் செவிமடுத்து மகிழ்வு அடைகின்றன.

அவர்களுக்கு என் வந்தனம்.

——

manjulanavaneedhan@yahoo.com

Series Navigation