தமிழ்நாட்டின் கோவில் காடுகள் – 2

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

எம். அமிர்தலிங்கம்


மண்ணால் ஆன உருவங்கள்

மண்ணால் ஆன உருவங்கள் முக்கியமானவை. இவை களிமண்ணால் செய்யப்பட்டு பூமியின் மறுஉயிர்ப்பை பிரதிநிதித்துவம் செய்கின்றன. மண்ணிலிருந்து தோன்றும் புதிய தாவரங்களையும், விலங்குகளையும் உருவகப்படுத்துகின்றன. பிறப்பு இறப்பு மீண்டும் பிறப்பு என்ற இந்து தத்துவத்தை குறிக்கும்படிக்கு, பழைய உருவத்தை விட்டு புதிய உருவம் எடுக்கும் விலங்குகளும், பழைய தாவரம் இறந்ததும் அதன் மீது புதிய தாவரம் தோன்றுவதையும் குறிக்கின்றது. களிமண்ணின் வாழ்க்கையும் அதனைப் போலவே என்பதை கிராம மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். களிமண்ணால் செய்யப்பட்ட குதிரை புதிதாக செய்யப்படுகிறது. அது மெல்ல மெல்ல அழிந்து மண்ணாகிறது. அந்த மண்ணிலிருந்து இன்னொரு உருவம் செய்யப்பட்டு அதே இடத்தில் வைக்கப்படுகிறது. தாய்த்தெய்வமும், இன்னும் இதர ஆண் தெய்வங்களும், ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை புதிதாகவே செய்யப்படுகின்றன. பாரம்பரியமாக களிமண்ணைத்தவிர வேறெந்த பொருளும் இதற்காக உபயோகப்படுத்தப்படுவதில்லை. இந்த முழுமையும் வளமைக்கான பிரார்த்தனையுடன் மிகவும் நெருங்கியே இருக்கின்றன.

வேண்டுதலுக்காக வைக்கப்படும் இந்த அர்ப்பணிப்புகள், குதிரைகள், மாடுகள், யானைகள், ஆடுகள் ஆகியவை களிமண்ணால் செய்யப்பட்டு திறந்த வெளியில் வைக்கப்பட்டு மீண்டும் மண்ணாக அனுமதிக்கப்படுகின்றன. காட்டு விலங்குகள் அடிக்கடி இந்த காடுகளுக்கு வருகின்றன என்றாலும் இவ்வாறு வேண்டுதலுக்காக வைக்கப்படும் விலங்கு பிம்பங்கள் பெரும்பாலும் வீட்டு விலங்குகளே அன்றி காட்டு விலங்குகள் அல்ல என்பதும் கவனிக்கத்தக்கது. (சமீப காலங்களில் காட்டுவிலங்குகள் இல்லாமல் போய்விட்டன. அதனால் இவை வருவது அருகி வருகின்றது)

குயவனாரே இந்த கோவில் காட்டுக்கு பூசாரியாக இருக்கிறார். இந்த மண்ணால் ஆன உருவங்களை செய்யும் சடங்குகளுக்கும், அந்த பிம்பங்களை அய்யனாருக்கு அர்ப்பணிக்கும் சடங்குகளுக்கும் அவரே பூசாரியாக இருக்கிறார். இவர் விஸ்வகர்மா (உலகத்தை உருவாக்குபவர்) என்ற ?ாதியைச் சேர்ந்தவர். இவரது தொழிற்கருவிகள் சிலவையே. குயவனாரின் சக்கரமும் அவரது கையுமே அவரது தொழில் கருவிகள். இந்த உருவங்களுக்காக களிமண்ணும் மணலும் கலந்த கலவையை பயன்படுத்துகிறார். இந்த அர்ப்பணிப்புகள் காடுகளில் மரத்தின் கீழே அமைக்கப்படுகின்றன. காலப்போக்கில், அந்த காடு மண்ணால் ஆன கடவுள் பிம்பங்களால் நிறைந்துவிடுகிறது. முக்கியமாக பெண் கடவுள்கள், மிருகங்கள், அதிகமாக குதிரைகள்.

ஏன் குதிரைகள் ? ஏனெனில் குதிரை மனிதனுக்கு அடுத்தபடி மிக முக்கியமான மிருகம் என்று கிராம மக்கள் சொல்கிறார்கள். ரிக் வேத அஸ்வமேத யாகத்தின் காலத்துக்குப் (2500 பிஸி) முந்தைய முக்கியமாக இருக்கலாம். யாக்குதிரை ஒரு வருடம் அலைந்த அத்தனை பிரதேசமும் இந்த பழங்குடி குழுவால் உரிமை கொண்டாடப்பட்ட காரணமாக இருக்கலாம்( ஷா-1985). மண்குதிரை செய்வதும், அந்த குதிரையை அர்ப்பணிப்பதும் கிராமமே கலந்து கொள்ளும் முக்கியமான நாளாக விழாவாக கொண்டாடப்படுகிறது. சிலவேளைகளில் குதிரைக்கு பதிலாக மாடு அல்லது யானை அர்ப்பணிப்பு செய்யப்படுகிறது. மீன்பிடிக்கும் சமூகங்களில் மிகவும் விரும்பப்படும் அர்ப்பணிப்பு யானையாக இருக்கிறது.

குதிரைகளின் உயரம் 12 இஞ்சிலிருந்து 20 இஞ்ச் வரைக்கும் இருக்கிறது. இது மாவட்டம், பிராந்திய கிராம பழக்கம், பண நிலைமை பொறுத்து மாறுபடுகிறது.

கோவில் காடுகளின் அளவு

தமிழ்நாட்டில் இருக்கும் கோவில் காடுகளின் அளவு மிகவும் சிறியது. சுமார் 1/2 ஹெக்டேரிலிருந்து 20 ஹெக்டேர் வரைக்கும் இருக்கிறது. மேற்கு தொடர்சி மலையைச் சார்ந்த கிராமங்களில் இதன் அளவு பல நூறு ஹெக்டேர் அளவுக்குப் பெரியது.

தாவரங்கள்

கோவில்காடுகளில் இருக்கும் தாவரங்கள் அந்த பிராந்திய மரம் செடி கொடிகளைச் சார்ந்தவை. இவை சிறிய உயிரின பாதுகாப்பு மண்டலமாக விளங்குகின்றன. இவை தாவர உயிரின பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமான பங்கை அளிக்கின்றன. வளமையான கட்டுப்பாடற்ற தாவர வளர்ச்சி தரைக்குக் கீழ் இருக்கும் தண்ணீரை காப்பாற்றுகிறது. கடும் வெப்பமான கோடை மாதங்களில், இந்த காடுகளுக்குள் இருக்கும் புனித குளமே, குடிக்கும் தண்ணீருக்கான ஒரே மூலமாக இருக்கிறது.

தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, இந்த காடுகளில் பலவிதமான தாவரங்கள் காணப்படுகின்றன. வருடம் முழுவதும் பசுமையாக இருக்கும் தாவரங்கள், வருடத்தில் ஒரு காலம் பசுமையாக இருக்கும் தாவரங்கள், இலையுதிர் மரங்கள், பால்நிலம் தாங்கும் மரங்கள், செடிகள் கொடிகள் ஆகியவை காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் 929 மிமி வருடத்து சராசரி மழை பெய்கிறது. வடகிழக்கு பருவக்காற்றுக் காலத்தில் மட்டுமே முழு தமிழகமும் மழை பெறுகிறது. (438 சாதாரணம், 479 உண்மையாக). கோடைக்காலத்தில் (136 மிமி சாதாரணம், 203 உண்மையாக) மழை பெறுகிறது.

காய்ந்த நிலங்களில் இருக்கும் கோவில்காடுகளில் Memecylon umbellatum (ironwood tree), Chloroxylon swietenia (east Indian satinwood), Albizzia amara (siris), Glycosmis cochinchinensis, Capparis divaricata (capparis bush), Gmelina asiatica (small Cashmere tree), ஆகியவை காணப்படுகின்றன. இருப்பினும், Atalantia monophylla (Indian wild lime), Terminalia glabra (hardwood tree), Zizyphus nummularia, Terminalia arjuna (arjuna), Hardwickia binnata, Santalum album (sandal wood) போன்ற தாவரங்கள் திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், மாவட்டங்களில் இருக்கும் கோவில் காடுகளில் காணப்படுகின்றன. முக்கியமாக மலை மீது இருக்கும் கோவில்காடுகளில் இவை காணப்படுகின்றன. Aerva tomentosa மரம் திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மட்டுமே காணப்படுகிறது. Flacourtia ramontchi இன்னும் உயரமான இடங்களில் காணப்படுகிறது.

திருவிழாக்களும் கொண்டாட்டங்களும்

கிராமத்தின் காவலனான அய்யனார் தினசரி வணங்கப்படுகிறார். இந்த தினசரி வழிபாடு தவிர, வருடாந்தர திருவிழாவான ஊரணி பொங்கல் என்பது தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. அருகாமையில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் கோவிலுக்கு வந்து சாதத்தை சமைக்கிறது. மாவட்டத்தின் மக்கள் சமைக்கப்பட்ட சாதம், பழம், சர்க்கரை, ஊதுபத்தி கர்ப்பூரம் ஆகியவைகளை படைக்கிறார்கள். மார்ச் அல்லது ஏப்ரலில் இந்த வருடாந்தர திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த காலத்தில், சமைத்த சாதம், மாவிலக்கு மாவு, வெல்லம், அரிசி மாவு, சர்க்கரை, தேங்காய் ஆகியவற்றை கொண்டுவந்து பெரும் வாழை இலைகளில் பரப்பி தெய்வத்தின் சிலைக்கு முன் வைக்கிறார்கள். பூசாரி ஊதுபத்தி கர்ப்பூரம் ஆகியவற்றை கொளுத்தி வணங்குகிறார். இதன் பின்னர் கொண்டுவந்த படையல்கள் வந்திருக்கும் மக்களிடம் வினியோகம் செய்யப்படுகிறது. பூசாரி ஒவ்வொரு வீட்டு பொங்கலிலிருந்தும் சிறிதளவு பொங்கல் எடுத்து அதனை சர்க்கரை தேங்காய் மாவு வெல்லம், மசிக்கப்பட்ட வாழைப்பழம் ஆகியவற்றோடு கலந்து வைக்கிறார். இது தாய்தெய்வத்துக்கு படைக்கப்பட்டு பிறகு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த திருவிழாவின் முக்கியத்துவத்தை எல்லா கிராமத்தினரும் உணர்ந்தே இருக்கிறார்கள். இது ‘ஊரில் உள்ள அனைவரும் அணைத்துச் செல்லும் ஒரு சமூக பொங்கல் வைக்கும் விழாவாக ‘ அனைவராலும் புரிந்து கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் ஊரணி என்பது ஊறணியாகவும் (ஊற்று, ஈரமான மண், வருமானத்தின் ஊற்று) கருதப்பட்டு பேசப்படுகிறது. இந்த திருவிழா பெரும்பாலும் பங்குனி மாதத்தில் (மார்ச் ஏப்ரல்) கொண்டாடப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்த திருவிழா கிராம முழுமையின் வளத்துக்காக அனைவராலும் கொண்டாடப்பட்டு, அய்யனார், முனியப்பன், கருப்பசாமி கடவுள்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

தீமிதி என்பது மாரியம்மனுக்காக தீக்கங்குகளின் மீது வெறும் காலோடு பக்தர்கள் நடக்கும் ஒரு சடங்கு. ஈரமான மஞ்சள் உடை உடுத்தி மாலை அணிந்து பக்தர்கள் தங்கள் பாவங்கள் போவதற்கும், கெட்ட சகுனங்களை உதறுவதற்கும், பணக்காரர்களாகவும் வளமையாகவும் ஆவதற்கும் வேண்டி இந்த சடங்கினை செய்கிறார்கள். இந்த திருவிழாவின் போது, கிராம மக்கள் தெருக்கூத்து நிகழ்ச்சியை இரவில் கிராமத்தில் நடத்துகிறார்கள். இந்த தெருக்கூத்து நிகழ்ச்சியில் பழைய புராணக்கதைகளும், காவியங்களும், பொழுது போக்கு நோக்கத்திலும், படிப்பினை நோக்கத்திலும் கிராம மக்களுக்காக நடத்தப்படுகின்றன.

விலங்கு பலிகள்

கோழி, ஆடு, எருதுகள், எருமைகள் ஆகியவை பெண் தெய்வங்களுக்கும், வீரனுக்கும் பலியிடப்படுகின்றன. விலங்கு பலியிடப்படும்போது அய்யனாரின் உருவம் ஒரு திரை கொண்டு மறைக்கப்படுகிறது. அய்யனாருக்கு எந்தெந்த ஊரிலெல்லாம் விலங்குகள் பலியிடப்படுவதில்லையோ அங்கெல்லாம், கருப்புசாமி, காளியம்மன், சேலையம்மன் போன்ற பெண் தெய்வங்களுக்கு பலிகள் கொடுக்கப்படுகின்றன என்பது ஒரு சுவாரஸ்யமான செய்தி. கருப்புசாமி தெய்வத்துக்கு ஆண் ஆடுகளும், இளைய பெண் ஆடுகளும் பலி கொடுக்கப்படுகின்றன. காளியம்மனுக்கு ஆடுகள் பலியிடப்படுகின்றன.

ஆனி மாதத்தில் பக்தர்கள் தீச்சட்டியை கைகளில் ஏந்திக்கொண்டு அழகு மாரியம்மன், காளியம்மன், சேலையம்மன் ஆகிய தெய்வங்களுக்கு ஊர்வலமாகச் சென்று விலங்கு பலியிடுகிறார்கள். இந்த திருவிழாவின் போது, தலையும் கால்களும் பூசாரிக்கு கொடுக்கப்பட்டுவிடுகின்றன.

இவ்வாறு கொடுக்கப்படும் பலிகள் கோரமாகவும் குரூரமாகவும் இருக்கின்றன. இது கழுவேற்றியும், உயரத்திலிருந்து விலங்குகளை தூக்கி எறிந்தும், வெறும் கைகளால் இரண்டாகக் கிழித்தும், உயிரோடு கோழிகளை கடித்தும் பலி கொடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட முறையில் தெய்வங்களை வணங்குவது குரூரமானது என்று இந்த மக்களுக்கு படிப்பிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது.

வீரநாயகர்கள் வணக்கம்

வீரநாயகர்களை வணங்குவதும், வீரநாயகர்களுக்கு கல் வைப்பதும் தொன்றுதொட்டு இருந்துவரும் ஒரு தமிழ்நாட்டு பாரம்பரியம். இது ஒன்றல்ல பல வகைகளில் இந்த வழக்கம் உயிரோடு இருந்து வருகிறது. 13ஆம் நூற்றாண்டுவரை பெரும் கல் மண்டபங்களை கட்டி வழிபடுவதும், வீரநாயகர்களை வணங்கி கவுரவிப்பதும் பெரும் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது என்பது தொல்பொருள் துறை ஆய்வுகளிலிருந்து தெரிகிறது.

வீரநாயகர் கல்கள் நட்டுக்கல் என்று வழங்கப்பட்டு போர்க்களத்திலோ அல்லது சண்டையிலோ வீரமாக உயிரிழந்த வீரர்களுக்காகவும், கிராமத்தை கொள்ளையிட வரும் கொள்ளையர்களிடமிருந்து கிராமத்தைக் காக்கவென்று போர்புரிந்து மறைந்த வீரர்களின் நினைவுக்காகவும், கிராமங்களுக்கு இடையே நடந்த போர்களிலோ, அல்லது வன விலங்குகளிலிருந்து கிராமத்தைக் காப்பாற்ற போர்புரிந்து மறைந்த வீரர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட கற்கள் இவை.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் கோவில்காடுகளை சர்வே எடுக்கும்போது செங்கம் தாலுகா, கீழ்வணக்கம்பாடியில் ஒரு வீரக்கல் கண்டறியப்பட்டது. இந்த வீரக்கல் நீள் சதுர வடிவில், ஒரு வீரன் வலது கையில் வாளை எடுத்து சுழற்றுவதையும், இடது கையில் கேடயத்துடனும் இருப்பதைக் குறிக்கிறது. இவருக்கு வலது புறத்தில் இவரது மனையாள் இருக்கிறார்.

இந்த கல் தவிர, இரண்டு பெண்களின் உருவங்கள் பொறித்த நீள் சதுரக் கற்களும் கிடைத்துள்ளன. இவை சதி கற்களாக இருக்கலாம். இந்த கற்களின் மீது எந்த எழுத்து குறிப்புகளும் காணப்படவில்லை.

இந்த கற்கள் பொதுவாக அம்மாசாரு என்று அழைக்கப்பட்டு கிராம மக்களால் வணங்கப்படுகின்றன. இந்த கடவுள்களை கொண்டாட வருடாந்தர பலிகளும் கொண்டாட்டமும் நடக்கின்றன். பழங்கால மூதாதையர் வணக்கம் என்ற பழக்கம் இன்னும் இந்த கிராமத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

http://cpreec.org/sacgrove.htm

Series Navigation

எம். அமிர்தலிங்கம்

எம். அமிர்தலிங்கம்

தமிழ்நாட்டின் கோவில் காடுகள் -1

This entry is part [part not set] of 27 in the series 20030413_Issue

எம். அமிர்தலிங்கம்


தமிழ்நாட்டு கிராமிய இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஒரு முக்கிய அங்கமாக விளங்குவது கோவில்காடுகள் என்பது. ஒவ்வொரு கிராமத்திலும் இப்படிப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஒரு இடம் கிராம தெய்வங்கள் வசிக்கவென்று அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் கிராமத்தில் இது கிராமத்தில் கட்டாயம் இருக்கவேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. கிராமத்தில் ஒரு ஏக்கரா நிலமாவது இந்த கோவில்காடுக்காக ஒதுக்கப்பட்டு அதில் அம்மன் சிலைகளும் அய்யனார் சிலைகளும் வைக்கப்பட்டு அங்கு மண்ணால் செய்யப்பட்ட குதிரை மற்றும் மற்ற விலங்குகள் சிலைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அம்மன், அய்யனார், மண்ணால் செய்யப்பட்ட குதிரை இல்லாத ஒரு கோவில்காட்டைப் பார்ப்பது அரிது.

கோவில்காடுகள் அந்தந்த கிராமத்தில் கிராம தெய்வங்கள் வசிக்கவென்று மனிதர் தொடாமல் விடப்பட்டிருக்கும் பகுதி. இப்படிப்பட்ட புனித காடுகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருக்கின்றன. இந்த காடுகள் காடுவளத்தை பாதுகாக்கவும், தொடர்ந்து எடுத்துச்செல்லவும் உதவும் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் இயற்கை வளத்தின் இறுதி எச்சம் இந்த கோவில் காடுகள். இவை பெரும்பாலும் அந்தந்த பகுதி சமூகங்கள் தங்களது இயற்கை காட்டு வளத்தை விவசாயத்துக்கும், குடியிருப்புக்கும் இறையாகிக்கொண்டுக்கும் போது, அவற்றை ஓரளவுக்கேனும் காப்பாற்றவும் தக்கவைத்துக்கொள்ளவுமென்று எடுத்திருக்கின்ற விடாமுயற்சியின் விளைவே.

தெய்வங்கள்

பெரும்பாலான தெய்வங்கள் சிறியவையாகவும் உயர்ந்த மரங்களும் செடிகளும் அடர்ந்திருக்கும் இடத்தில் தனியாகவும் காணப்படுகின்றன. இந்த இடம் பெரும்பாலும் மரநிழல் கொண்டதாகவும், வளைந்து தரையைத்தொடும் கிளைகள் கொண்டதாகவும் இருக்கிறது. இந்த காடுகளில் சிலவேளைகளில் ஒரு ஊன்றப்பட்ட கல்லே வீடாக இருக்கும். இந்த கற்களிலிருந்து வரும் ஒலிகள் சுற்றுப்புரங்களை அச்சுருத்தக்கூடியதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மண்ணால் செய்யப்பட்ட பெரிய சிறிய குதிரைகளும், யானைகளும், நாய்களும், இன்னும் சில விலங்குகளும், இந்த மரங்களைச் சுற்றி மரநிழலில் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்துக்கும் தனிப்பட்ட சில தெய்வங்கள் இருக்கின்றன. கோவில்காடுகளில் இருக்கும் தெய்வங்கள் பெரும்பாலும் அம்மன் – பல சேவகர்களுடன், அய்யனார் – தன் குதிரைகளுடன், யானை இன்னும் மாடுகள் ஆகியவை இருக்கின்றன். இதனருகில் பெரும்பாலும் செயற்கையாகவோ இயற்கையாகவோ அமைந்த சிறு குளமும் காணப்படும்.

கிராமத்தின் மக்கள் அய்யனாரின் இந்த மண்ணால் ஆன குதிரைகளுக்கும், மாடுகளுக்கும், யானைகளுக்கும் படையல் செய்கிறார்கள். அய்யனாரே கிராமத்தின் காவலாள். நல்ல விளைச்சலுக்கும், நல்ல ஆரோக்கியத்துக்கும் வரம் கொடுப்பவர். கிராமத்து கோவிலின் பூசாரி அந்த கிராமத்தின் குயவனார். (பூமியின் சுழன்று செல்லும் பருவகாலங்களை பிரதிநிதித்துவம் செய்பவரான குயவனாரே பூசாரி)

இந்த கோவில்காடுகள் அம்மன் கொடுக்கும் வளமைக்கும், நல்ல ஆரோக்கியத்துக்கும் படைக்கப்பட்டது. மாரியம்மனுக்கு அடுத்தபடியாக அதிகமாக பூசிக்கப்படும் தெய்வம் அய்யனார். அய்யனார் இரவுப்பொழுதுகளில் பேய்த்தனமான குதிரையில் ஏறி தீய சக்திகளை விரட்டி கிராமத்தை வலம் வருகிறார் என்று நம்பப்படுகிறது. அவருக்கு பொதுவாக தனியான கோவில் இருக்கிறது. பக்தர்களால் அவருக்கு மண் குதிரைகள் கொடுக்கப்படுகின்றன. அய்யனார் நல்லவராகவும் கிராம மக்களை காப்பவராகவும் கருதப்படுகிறார்.

தாய் தெய்வம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

காளி – கோபமான தெய்வம் மக்களை பேய் பூதங்களிலிருந்தும் தீய சக்திகளிலிருந்தும் காப்பாற்றுகிறது.

மாரி – இவளது கெட்டகோபத்தின் காரணமாகவே நோய்களும், தீய விளைவுகளும் (முக்கியமாக அம்மை) நடப்பதாக நம்பப்படுகிறது. தீய விளைவுகள் நடக்கக்கூடாதென்றே இவள் வணங்கப்படுகிறாள்.

எல்லை – கிராமத்தின் எல்லையைக் காப்பவள். இவள் சிலவேளைகளில் தலையில்லாத ரேணுகாவுடன் தொடர்பு செய்யப்படுகிறாள். இவள் ஜமதக்னியின் மனைவியாக இருந்து பரசுராமனால் தலை கொய்யப்பட்டவள்.

பிடாரி – தீய சக்திகளுக்கும், தீய நோய்களுக்கும் எதிரான பாதுகாப்பு (முக்கியமாக காலரா). இவளது பின்னே பெரும் பேய் பூதங்கள் வருகின்றன. இந்த பூதங்கள் இயற்கை மரணமெய்தாத (கொலை, தற்கொலை, மூழ்கி இறத்தல் தூக்கு) உயிர்கள்.

அங்காளம்மன் – அங்காரம்மன் – கோபமும் அழிவுச்சக்தியும் நிறைந்த நெருப்பு தெய்வம் (அங்காரம் என்றால் எரிக்கும் கரி- சமஸ்கிருதத்தில்) இவள் நெருப்பை கொளுத்தி வணங்கும் பெண்களுக்கு அருளுவாள் என்ற நம்பிக்கை. இவளது பலியாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக பூசிக்கப்படும் தெய்வம்.

கன்னியம்மன் – கன்னி தெய்வம். சப்த மத்ரிகா என்ற ஏழு கன்னிப்பெண் தெய்வங்களில் ஒருத்தி. இரக்க குணமும், தாராள குணமும் கொண்ட தெய்வம்.

துரபதிஅம்மன் – கற்பின் கடவுள். ஐந்து பாண்டவர்களின் மனைவி. இசக்கி அம்மன் (யக்ஷி என்பதன் மருஉ) ரத்த ஆசை கொண்ட ஜைன பெண்தெய்வம், மீனாட்சி அம்மன், மீனவர்களின் பெண் தெய்வம்.

பெண் தெய்வங்களுக்கு ஆண் தெய்வங்களும் உண்டு. இவர்கள் வீரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். எரியும் கண்களுடனும், பெரும் மீசைகளுடனும், நீண்ட வாட்களுடனும், சில வேளைகளில் கையில் கபாலத்துடனும் காட்சி அளிக்கிறார்கள்.

சில முக்கிய ஆண் தெய்வங்கள்

மதுரை வீரன் – பெரிய விரிந்த கண்களுடனும், இருக்கும் இவர் நாயக்க தலைவரின் மகளை கடத்தி திருமணம் செய்தவர்.

முனீஸ்வரன் – முனியாண்டி – ரத்த பலியுடனும், சாராயத்துடனும் வணங்க வேண்டிய தெய்வம். (மதுரை வீரனைப் போல)

கருப்பண்ணன் – கருப்பையா – பெண் தெய்வங்களுடன் செல்லும் துணை தெய்வம்

கூத்தாண்டவர் – உடலற்ற தெய்வம்

http://cpreec.org/sacgrove.htm

Series Navigation

எம். அமிர்தலிங்கம்

எம். அமிர்தலிங்கம்