தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

நாக.இளங்கோவன்


தமிழ்க்கணிமை, இணையக் கணிமை துறைகளில் கவனம்

செலுத்தி வரும் தமிழர்களின் பணி போற்றத்தக்கது.

ஏறத்தாழ எட்டு ஆண்டுகளில் பல் வேறு முயற்சிகளில்

ஏற்றத்தையும் இறக்கத்தையும் கண்டுவருவது தமிழ்க் கணிமைக்கான

முயற்சிகள்.

பல பேர் தன்னார்வத்திலோ அல்லது தொழிலாகவோ பலவற்றைச் செய்து

வரினும் அடிப்படைச் சரவல்கள் தீர்ந்த பாடில்லை. எட்டு ஆண்டுகளில்

தமிழர்களால் ஒரு பொதுக் குறியீட்டுக்கு வர முடியாத நிலை என்பது

குறைபாடு என்பது அனைவரும் அறிந்த ஒன்றும் கூட. ஒவ்வொரு மின்னிதழ்களையும்

ஒவ்வொரு எழுத்துரு அல்லது குறியீட்டில் பார்க்க வேண்டிய அவசியத்தில்

நாமிருக்கிறோம்.

ஒருங்குறி (யூனிகோடு) தமிழுக்கு 128 பொந்துகள் (Slots) கொடுத்திருக்கிறதே

அது உலகத்தரமான ஒன்றாயிற்றே என்று சிலர் நினைத்து அதுவே போதும்

என்று சொன்னாலும், தற்போதைய ஒருங்குறி பெருங்குறைகளைக் கொண்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசு மற்றும் உத்தமம்(infitt.org) என்ற தன்னார்வக்

குழுவினர் முன்வந்து தகுதரம் (tscii) தாப்/தாம் (TAB/TAM) என்ற குறியீட்டு முறைகளை

ஏற்படுத்தினர்.

அதன்பின்னர் ஒருங்குறி வந்து தகு, தாப்/தாம் என்ற இவற்றில் உள்ள குறைபாடுகளைக்

களைந்து விடும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், ஒருங்குறி உருவில் மீண்டும்

வந்தது என்னவென்றால் தகு, தாப் என்ற இவற்றிற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட

பல குறைபாடுகளைக் கொண்ட இசுக்கி (ISCII) முறைக் குறியேற்றம்தான்.

இந்த இசுக்கி முறையானது இந்திய அரசால் இந்திய மொழிகளுக்கு ஏற்படுத்தப் பட்ட

ஒரு முறையாகும்.

பல தமிழ் மொழியியல் குறைபாடுகளையும், நுட்பக் குறைகளையும் கொண்ட

இந்த இசுக்கி குறியீட்டை, ஒருங்குறியில் அப்படியே அந்த 128 பொந்துகளில்

அடைத்து ‘இதுதான் உங்களுக்கு ‘ என்று தமிழர்களின் தலையில் கட்டப் பட்டிருக்கிறது.

தமிழ் மொழிக்கு தேவையான பொந்துகளை (340 +) ஒருங்குறி சேர்த்தியத்தில் (Unicode

Consortium) கேட்டபோது அவர்கள் ‘வேண்டுமெனில் 128ஐ வைத்துக் கொள்; இல்லாவிடில்

எப்படியோ போ ‘ என்றவாறு மறுமொழி அளித்து விட்டார்கள்.

இந்திய நடுவண் அரசும், தமிழக அரசும் உறுப்பினர்களாக இருக்கும்

இந்த சேர்த்தியத்திடம், தெளிவாக, தமிழ்ச் சரவல்களை தமிழரசு மற்றும்

இந்திய நடுவண் அரசும் சரியான முறையில் எடுத்துச் சொல்ல

முயலவில்லை. அதற்குக் காரணம் கடந்த நடுவண் அரசில் தமிழர்களுக்கு

சரியான பிடி இல்லாததும், தமிழக அரசு மற்றும் நடுவண் அரசிற்கான

இணக்கம் குறைவாக இருந்ததுமாக இருக்கக் கூடும்.

கடந்த 2003 ஆகட்டு மாதத்தில் உத்தமம் (infitt) நடத்திய இணைய மாநாடும்,

அதற்குப் பின்னர் உத்தமத்தின் செயல்பாடுகளும் தற்போதைய ஒருங்குறியை

வளர்ப்பதுவாகவும் இல்லை; அதே போழ்து அதை மறுப்பதுவாகவும் இல்லை.

இன்னும் சொல்லப் போனால், உத்தமக் குழுவினரின் வலைப்பக்கம் தாப் என்ற

குறியேற்றத்தில் இருக்கிறது. தமிழக அரசின் வலைப்பக்கமோ தமிழிலே கூட இல்லை.

எனினும், தற்போதைக்கு, இந்திய நடுவணரசில் தயாநிதி மாறன் தகவல் தொழில்

நுட்பம் மற்றும் குமுனேற்றத் (IT and Communicartions) துறைக்கும் அமைச்சராகப்

பொறுப்பேற்றிருக்கும் வேளை, ஒருங்குறி சேர்த்தியத்திடம் இந்திய நடுவணரசின்

சார்பாக தமிழ் மொழிக்கும், தேவையானால் பிற இந்திய மொழிகளுக்கும் தேவையான

பொந்துகளை ஒருங்குறியீட்டமைப்பில் ஏற்படுத்துவதற்குத் தேவையான முயற்சிகளைச்

செய்ய மிகச் சரியான தருணமாகும்.

தமிழ்க் கணிக் குறியீடு என்பது குறுகிய காலத் தேவை இல்லை. எதிர்காலம் மிகப் பெரியது

என்ற கருத்தை மனதில் வைத்து, தாப்/தாம், தகு தரங்களைப் பயன்படுத்தும்

தமிழ் மின்னேட்டுக் காரர்கள், தமிழ் மடற்குழு நடத்துவோர்கள், மற்றும் தற்போதைய

குறைபாடுகளையுடைய ஒருங்குறியைப் புழங்கும் மின்னேட்டுக் காரர்கள்,

தமிழ் ஆர்வலர்கள், பன்னாட்டுக் கணினி அமைப்புகளைச் சேர்ந்தோர்,

பன்னாட்டு தமிழ் மன்றங்கள், சங்கங்களைச் சேர்ந்தோர் ஒருங்கிணைந்து

தக்க முயற்சிதனை எடுத்திடல் அவசியமான ஒன்றாகும்.

நமக்குத் தேவை, நமது ஒருங்குறி சேர்த்தியத்தின் ஒருங்குறியமைப்பில்

தமிழ் எழுத்துக்களுக்குத் தேவையான இட ஒதுக்கீடு. இதைப் பெற்றுத்தர

தற்போதுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் பெரிதும் உதவக் கூடும்.

இம்மாதிரியான வாய்ப்பு அரிதாகக் கிட்டுவதாகும். அமைச்சருக்குத்

தற்போதைய ஒருங்குறியின் குறைகளை எடுத்துச் சொல்லி, அதற்காகப்

போராட அவரைத் தயார் செய்து, நற்பெயன் பெற வாய்த்திருக்கும்

இத்தருணத்தை காலம் தாழ்த்தாது நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

நடுவண் அரசின் தேனிலவுக் காலத்திற்குள்ளாகவே இதை நாம்

செய்து முடித்துக் கொள்ள வேண்டும். காலமும் அரசியலும்

வேகமாக மாறக்கூடியவை என்பதை நாம் நினைவு கொள்ளவேண்டும்.

அண்மையில் கூட தமிழ் உலக மடற்குழுவில் தற்போதைய-ஒருங்குறி

ஆதரவாளர்களும், அதன் பால் குறை கண்டு விளக்கிய அறிஞர்களும்,

உத்தமம் போன்ற முன்னணியினரும் தமிழ்க் குமுகாயத்தின் பல்வேறு

துறைகளைச் சேர்ந்த அறிஞர்களையும் கூட்டி, தமிழ்ப்பணி ஒன்றை

செவ்வனே செய்து விட வேண்டிய அவசியமும் அவசரமும் இருக்கிறது.

தற்போதைய ஒருங்குறியை வேறு வழி இன்றி ஏற்றுக் கொண்ட கணிஞர்களும்

அறிஞர்களும், தற்போது அமைந்திருக்கக் கூடிய வாய்ப்பினை கருத்தில்

கொண்டு ஒற்றுமையாக மேலும் ஒருங்குறியேற்றம் செம்மையுற ஒத்துழைக்க வேண்டும்

என்றும் இம்மடல் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

தற்போதைய ஒருங்குறியின் குறைகளை பல்துறை அறிஞர் முனைவர் இராம.கி

அவர்கள் ஏராளமாக விளக்கியிருப்பது தமிழ் உலக மடற்குழுவின் சேமிப்பில்

கிடக்கிறது; வேண்டுவோர் படிக்கலாம்.

இதற்காக உழைப்போர், தமிழக அரசு-தமிழக அரசியல் மற்றும்

நடுவண் அரசு-நடுவண் அரசியல் என்ற கூறுகளை நன்கு ஆய்ந்து

காய்களை நகர்த்த வேண்டும்.

இந்த வாய்ப்பை நாம் தவற விடும்போது, மைக்ரோசாஃப்ட் போன்ற

நிறுவனங்களும், ஒருங்குறி சேர்த்தியம் போன்ற அமைப்புகளும்

தருவனவே ‘உயர் தனிச் செம்மொழி ‘ என்ற உயர்வல்லாத நிலைக்கு

நாம் தள்ளப் பட்டிருப்போம்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்