தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி

This entry is part [part not set] of 42 in the series 20110508_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரின் சுவடுகளைப் பற்றிக் கொண்டு ‘பாரதி கவிதா மண்டலத்தின்’ மூன்றாவது தலைமுறையில் முத்திரைப் பதித்த கவிஞர் தான் தமிழொளி. பாரதியையும், பாரதிதாசனையும் பலரும் பின்பற்றி அவர்களது சுவடுகளில் கால்பதித்து நடந்தாலும் அவர்களின் வழிநின்று பொதுவுடைமைக்குக் குரல் கொடுத்து இறுதிவரை பொதுவுடைமைவாதியாகவே வாழ்ந்து மறைந்தவர் கவிஞர் தமிழொளி.

தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடியை அடுத்த ‘ஆடூரில்’ சின்னையா – செங்கேணி அம்மாள் இவர்களின் தலைமகனாக 1924-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 21-ஆம் நாள் கவிஞர் தமிழொளி’ பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் விஜயரங்கம் என்பதாகும். அவரை வீட்டில் அன்பாகப் பட்டுராசு’ என்று அழைத்தனர். ஆனால் அவர் தனக்குப் பெற்றோர் இட்ட பெயரை விடுத்து பாரதிதாசனின் கவிதை ஒன்றிலிருந்தே எடுத்த ‘தமிழ் ஒளி’ என்ற பெயரைத் தனக்குப் புனைப் பெயராகச் சூட்டிக் கொண்டார். இதுவே இறுதி வரை நிலைத்து நின்றது எனலாம்.

பாவேந்தர் பாரதிதாசன் பணியாற்றிய புதுவை முத்தியாலுபேட்டையில் உள்ள கல்வே கல்லூரியில் கவிஞர் தமிழ்ஒளி தமது ஆரம்ப காலக் கல்வியைத் தொடங்கினார். தமிழ்ஒளி பாரதிதாசனைத் தனது வகுப்பு ஆசிரியராக மட்டுமின்றி வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆசிரியராகவும் கொண்டார். அக்கல்லூரியில் தமிழ்ஒளி புகுமுக வகுப்பு படித்துத் தேறினார்.

போராட்ட வீரர்களின் புகலிடமாகவும்-புரட்சிச் சிந்தனைகளின் பிறப்பிடமாகவும் விளங்கிய புதுவை மண்தான் தமிழ் ஒளிக்கு புதிய கனவுகளும், கருத்துகளும் உருவாவதற்கு களமாக-உரமாக அமைந்தது. ஒரு சுயமரியாதைத் தோழர் மரணம் அடைந்தபோது கவிஞர் எழுதிய இரங்கற் பாடல் அனைவரது பாராட்டையும் பெற்றது. அந்தப் பாடல் இளமைக்காலந்தொட்டே தமிழ்ஒளிக்கு சமூக அக்கறையும் உண்டு என்பதைப் பறைசாற்றுவதாக அமைந்த்து.

தமிழ்ஒளி பள்ளிச்சிறுவனாக இருந்த காலத்தில் புதுவையில் இருந்த பிரஞ்சு ஆளுநர் “போன் வேன்” (Bonvan) என்பவர் மக்களிடம் கொடூரமாக நடந்துகொண்டான். விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் புதுவை அரசியலில் தீவிரமாக இருந்த தோழர் வி.சுப்பையாவை ஆளுநர் பொன்வேன் புதுவையை விட்டு வெளியேற்றி நாடு கடத்தினார்.

ஆளுநரின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அவனுடைய குடும்பத்தாரும் ஆணவத்துடன் நடந்து கொண்டனர். போன்வேனின் மகளும் ஆணவத்துடன் அனைவரிடமும் நடந்து கொண்டாள்.

இதனைக் கண்ட இளைஞர்கள் இதனை எவ்வாறேனும் அடக்க வேண்டும் என்று எண்ணினர். ஒருநாள், புதுவை மணக்குள விநாயகர் கோயில் அருகே தமிழ்ஒளி செல்லும்போது போன்வேன் மகளின் அதிகாரம் நிறைந்த ஆணவத்தைக் கண்டு, சினமுற்று அவளைப்பற்றி “துண்டுப் பிரசுரம்” எழுதி புதுவை நகர் முழுதும் விநியோகம் செய்து விட்டார். இதனைக் கண்டு கோபமுற்ற ஆளுநர் போன்வேன் தமிழ்ஒளியைச் சிறையில் அடைத்தான். இரண்டு வாரங்கள் சிறைவாசத்தை அனுபவித்த கவிஞர் மாணவராக இருந்ததால் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பாண்டிச்சேரியில் தமிழ்ஒளியால் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் அவரைப் பாரதிதாசன் பெருமுயற்சிசெய்து தஞ்சை மாவட்டம் கரந்தைத் தமிழ்க் கல்லூரிக்குப் பயில அனுப்பினார். தமிழ்ழொளி கரந்தையில் படித்துக் கொண்டிருந்த போதுதான் “சிற்பியின் கனவு” என்னும் நாடகத்தை எழுதினார். அந்த நாடகம் சக்தி நாடக சபாவினரால் அரங்கேற்றப்பட்டது. பின்னாளில் இது ‘வணங்காமுடி’ என்னும் பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. ஆனால் திரையில் மூலக்கதை: தமிழ்ஒளி என்று குறிப்பிடப்படாமலேயே அவரது பெயர் இருட்டடிப்புச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கரந்தையில் கவிஞர் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தமிழுக்கு முதலிடம் இருந்ததைவிட, சாதிக்கே முதலிடம் இருந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தமிழ் ஒளிக்கு இந்நிலை பெரும்பாதிப்பை ஏற்படுத்தியதால் அவரால் கரந்தையில் தொடர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே, தமிழொளி மீண்டும் புதுவைக்குத் திரும்பினார். தமிழ் ஒளிக்குப் புதுவையில் பாரதிதாசனின் இல்லமே புகலிடம் அளித்தது. பாரதிதாசனின் இல்லத்தில் கவிஞர் தங்கியிருந்தபோது, பாரதிதாசனின் மகன் “கோபதி”, தமிழ் ஒளிக்கு உற்ற தோழனாக இருந்தார்.

1944-ஆம் ஆண்டில் கோபதி ‘முரசு’ என்னும் பெயரில் கையெழுத்துப்பிரதி ஒன்றை நடத்தி வந்தார். அந்தக் காலத்தில் தமிழில் கைப்பிரதி நடத்தக்கூடாது என்று புதுவை அரசு சட்டம் போட்டிருந்தது. அதனால் கோபதி பாரதிதாசனின் முன்னிலையிலேயே கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு ஆறு மாத காலம் நடந்தபோதிலும், அடுத்த இதழைக் கொண்டு வருவதற்காக கோபதி தமது பெயரை, ‘மன்னர் மன்னன்’ என்று மாற்றிக்கொண்டு முரசு பத்திரிக்கையை வெளியிட்டார். அந்தச் சமயத்தில் தமிழ்ஒளி முரசு பத்திரிகைக்கு வலக்கரமாக இருந்து செயல்பட்டார்.

தமிழொளி பாவேந்தரிடம் உதவியாளராகப் பணியாற்றிய காலத்தில் பாரதிக்கு ‘குயில்பாட்டு’ கருக்கொண்ட இடமாகிய புதுவைக் குயில்தோப்பிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அங்கே நிலவிய நிழலின் குளுமையும், குயில்களின் இன்னோசையும் கவிஞரது இதயத்தை ஈர்த்தன. அதனால் கவிஞர் தமிழொளி பற்பல கவிதைகளை எழுதினார். தமிழ் ஒளி தமது இருபது வயது வரை புதுவையில் வாழ்ந்தார். குறிப்பாகப் பாரதிதாசன் இல்லத்தில் இருந்தார் என்பது நோக்கத்தக்கது. அப்போது கவிஞர் தமது படைப்புகளை ஆசான் பார்வையில் வைத்து பாராட்டுப் பெற்றார்.

1945-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தமது கவிதைகள் அனைத்தையும் திரட்டி இரண்டு தொகுதிகளாக தமிழ்ஒளி உருவாக்கினார். பாரதிதாசன் நண்பராக விளங்கிய திருவாரூர் டி.எம்.இராமன் என்பார், அத்தொகுதிகளை நூலாக வெளியிடுவதாகக் கூறி கவிஞரிடமிருந்து பெற்றுக் கொண்டார். பின்னர் அந்தக் கவிதைத் தொகுதிகள் இரண்டும் தொலைந்துவிட்டதாகப் பொய் சொல்லிவிட்டார். இது குறித்து மேலும் தகவல் அறிய முயன்ற போது “இருபது வயது இளைஞன் பேரால் இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளி வருவதா? ” என்ற அவரின் எண்ணம் தெரிய வந்தது. புலமைக் காழ்ப்பு பொறி பறந்ததைப் புரிந்து கொண்டார் தமிழ் ஒளி. வலிமைப் படைத்தவர்களை எதிர்க்க வாய்ப்பில்லாமல் சென்னைக்குப் பயணமானார்.

புதுவைக் குயில்தோப்பில் கருக்கொண்டு எழுதிய கவிதைகள் பலவற்றைப் பெரியாரின் ‘குடியரசு’, அண்ணாவின் ‘திராவிட நாடு’ ஆகிய இதழ்களில் தமிழ்ஒளி பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவுடைமை இயக்கத்தில் சேர்தல்

மாணவப் பருவத்திலேயே பெரியாரின் சுய மரியாதைக் கருத்துக்களில் பெரிதும் ஈர்க்கப்பட்ட தமிழ்ஒளி 1945-ஆம் ஆண்டில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் “தீவிரகருஞ்சட்டை வீரராக இணைந்து செயல்பட்டார். 1947-ஆம் ஆண்டில் சுதந்திர நாளை துக்க நாளாகக் கொண்டாடுமாறு பெரியார் கூறியதை ஏற்க முடியாத நிலையில் தி.க.கொள்கையில் வெறுப்புற்று தோழர் ப.ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்து “பொதுவுடைக் கட்சியில்” தமிழ்ஒளி உறுப்பினராகச் சேர்ந்தார்.

அந்தச் சமயத்தில்தான் பதினேழு வயது இளைஞரான எழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ஒளியை சந்தித்தார். இச்சந்திப்பே ஒரு அரிய சிறுகதை எழுத்தாளரைத் தமிழ் இலக்கிய உலகிற்குத் தந்தது எனலாம். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ‘ஜெயகாந்தன் காலம்’, ‘ஜெயகாந்தன் பாணி’ என்றெல்லாம் போற்றுமளவிற்குச் சிறுகதைகளைத் தமக்கே உரிய எதார்த்தமான பாணியில் எழுதி, புகழின் உச்சியில் நின்றவர் ஜெயகாந்தன். இப்படிப்பட்ட உன்னதமான படைப்பாளி தமிழ்ஒளியின் இலக்கியப் பாசறையிலிருந்து உருவானவர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

தமிழ்ஒளியால் தாம் வார்த்தெடுக்கப்பட்ட வித்தத்தை, “நான் தமிழ் இலக்கியப் பாடம் யாரிடமாவது முறையாக நெடுநாட்கள் பயின்றிருப்பேன் என்றால், அது தமிழ்ஒளி அவர்களிடம்தான். படிக்கிற விஷயத்தில் எனது சனாதனத்தை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்வதோடு அன்றி, எத்தனையோ விஷயங்களில் எனது கண்களைத் திறந்தவர் அவர்; பாரதியின் படைப்புகளையே தாண்டிவரக்கூடாது என்றிருந்த என்னை புதுமைப்பித்தன் வரை இழுத்து வந்தவர் தமிழ் ஒளிதான்” எனச் ஜெயகாந்தன் குறிப்பிடுவது நோக்கத்தக்கதாகும்.

தமிழ் ஒளி, சுயமரியாதை இயக்கத்தில் இருந்தபோது எழுதியதைவிட, கம்யூனிசத்திற்கு வந்தபிறகுதான் பொதுவுடைமைக் கொள்கைகள் பற்றி அதிகம் எழுதியுள்ளார். புதுவையிலிருந்து சென்னைக்கு வரும் போதெல்லாம் சென்னையின் பல்வேறு இடங்களில் கால்நடையாகவே சுற்றிவந்தார். குறிப்பாக சென்னை-வால் டாக்ஸ் சாலையில் இருந்த பட்டறைகளை ஒட்டினாற்போன்று வசித்து வந்த கூலித் தொழிலாளிகளின் வாழ்வு அடிக்கடி இவரது கண்களில் பட்டது. வெய்யிலுக்கும்-மழைக்கும் பாதுகாப்பு இல்லாத அந்தக் குடிசைகளில், வாழ்வுக்கும் பாதுகாப்பு இன்றி வாழும் ஏழை மக்களின் அவலம் தோய்ந்த வாழ்க்கைநிலை கவிஞரின் நெஞ்சை வருத்தியது.

அதனால் தான் சென்னைக்கு வரும் போதெல்லாம் உழைக்கும் மக்களின் வாழிடங்களையே இவரது கால்கள் சுற்றிச்சுற்றி வந்தன. வர்க்க எழுச்சியைத் தோற்றுவிக்கவும், களப்பணிகளில் ஈடுபடவும் சென்னையே சிறந்த இடம் எனக் கருதியதால்தான் 1945-ஆம் ஆண்டு முதல் சென்னையிலேயே அவர் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.

நிலைபெற்ற சிலை’, ‘வீராயி’, ‘கவிஞனின் காதல்’ என்னும் மூன்று காவியங்களும் இவர் சென்னையில் நிரந்தரமாகத் தங்கிய காலத்தில் எழுதப்பட்டது எனலாம். தமிழ்ஒளி எழுதிய‘. இந்த மூன்று நூல்களும் 1947-ஆம் ஆண்டில் ஒரே சமயத்தில் வெளியாகி தமிழ் ஒளியின் ‘இலக்கியப் போக்கை’ இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தின.

சென்னைக்கு வந்த தமிழ்ஒளி தாம் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு வரை தமது பெற்றோர்களைப் பார்ப்பதற்காகவோ, அல்லது வேறு ஏதேனும் நிகழ்வுகளுக்காகவோ புதுவைக்கு செல்லவே இல்லை. அவருக்கு குடும்பம் என்ற ஒன்றும் இல்லை; உறவினர்களையும் நாடவில்லை.

கவிஞருக்குத் திருமணம் செய்து வைக்க (1948இல்) அவரது பெற்றோர்கள் விரும்பியபோதும் அவர் அதை மறுத்துவிட்டார். தமது எண்ணங்களைப் புரிந்து நடக்கக்கூடிய ஒரு பெண்ணைத் தமது பெற்றோரால் தேர்ந்தெடுக்க முடியாது என்று கருதியதால் திருமணத்தை நிராகரித்தார்.

சென்னையில் தனிமனிதனாக வாழ்ந்த தமிழ்ஒளி அதே சமயத்தில் தனக்கென்று ஒரு நண்பர்கள் வட்டத்தையும் அமைத்துக்கொண்டு செயல்பட்டார். அந்த வட்டத்தில், இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பாளர்கள், தொழிற்சங்கத் தோழர்கள்… எனப் பலரும் இருந்தனர். தற்போது ‘மின்ட்’ என்று அழைக்கப்படும் தங்கசாலையிலும், திருவொற்றியூரிலும் பொதுவுடைமைக்கட்சித் தோழர்களின் இருப்பிடங்கள் அமைந்திருந்ததால், அங்கெல்லாம் தமிழ்ஒளி தங்கினார். ஆனால், அவர் ஓரிடத்திலேயும் நிலைத்திருந்ததில்லை. அதேபோன்று பத்திரிகைகளுடன் அவருக்கு நெருங்கிய உறவு இருந்தபோதிலும் எந்த ஒரு பத்திரிகையிலும் அவர் மாத ஊதியத்திற்காகப் பணியாற்றியதில்லை.

எழுத்துப் பணி

தமிழ்ஒளி எப்போதும் எவருக்கும் கட்டுப்பட்டு எழுதியதில்லை. அவருக்கு எப்போது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது எழுதினார். மற்ற நேரங்களில் நிகழ்வுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தார். எழுத்துத் துறையில் அவர் எவருக்கும் கட்டுப்பட்டு வாழவில்லை என்பதை,

“நான் எந்த நேரத்தில் எதை எழுதுவேன் என்பது எனக்கே தெரியாது. ஏனெனில் எதையும் நான் திட்டமிட்டு செய்வதில்லை… அவ்வாறு செய்வது ஒரு கலைஞனின் பணியுமன்று. அது ஒரு எந்திரத்தின் போக்கு. நான் எந்த நேரத்தில் எதைப் படிக்கிறானோ, எதைப் பார்க்கிறேனோ அதுவே என்னுள் கிளர்ந்தெழுந்து கவிதை, கதை, கட்டுரை என்று பரிணமிக்கின்றன. அதனால்தான் இந்த நேரத்தில் இதை எழுது என்று எவர் பணித்தாலும் எனக்கு எரிச்சலாக இருக்கிறது; அப்படி எழுதுவது இலக்கியமாக இருக்காது என்றும் தோன்றுகிறது” என்ற கவிஞரின் கூற்றுத் தெளிவுறுத்துவதாக அமைந்துள்ளது. இஃது “கவிஞர்கள் சுதந்திரப் பறவைகள்” என்ற எமர்ஸன் கருத்தை அடியொற்றியதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இணை ஆசிரியர் பணி

1948-ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. “ஜனசக்தி” பத்திரிகை அலுவலகமும் மூடி சீல் வைக்கப்பட்டது. கட்சித் தலைவர்கள் ‘தலைமறைவு வாழ்க்கை’ நடத்தினர். அந்த நெருக்கடியான காலகட்டத்தில் “முன்னணி” என்னும் இதழ்தான் தலைமறைவாளர்களுக்குத் தொடர்பு சாதனமாக விளங்கியது. இவ்விதழைக் ‘கவிஞர் குயிலன்’ தொடங்கினார். அவருடன் இணை ஆசிரியராக பொறுப்பேற்று கவிஞர் தமிழ்ஒளி கடுமையாக உழைத்தார்.

தமிழ்ஒளி வாரந்தோறும் கவிதை, கதை, ஓரங்க நாடகம், விமர்சனம்… என்று பலவாறு எழுதி, வாசகர்களை எழுச்சிபெறச் செய்தார். அந்த நாட்களில் பொதுவுடைமைக் கருத்துக்களை மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் வாயிலாக மட்டுமே மக்கள் அறிந்து வந்தனர். ஆனால் தமிழ்ஒளி அந்த நிலையை மாற்றியமைத்தார். தமது படைப்பிலக்கியத்தின் மூலம் பொதுவுடைமைக் கருத்துக்களைப் பரப்பினார்.

முன்னணி பத்திரிக்கையில் தமிழ்ஒளியின் பணி குறித்து,
“அந்நாளில் தலைமறைவாய் இருந்த என் போன்றோர்க்கு கிடைக்கப்பெற்ற பத்திரிகைகளில் முன்னணி தான் முதலிடம் பெற்றது. இந்தப் பத்திரிகையில் கவிஞர் தமிழ்ஒளி எழுதிய கவிதைகள் மகா சக்தி வாய்ந்தவை; மறக்க முடியாதவை. அந்த அளவிற்கு பாரதி போன்று உலகு தழுவிய பார்வையும்-உரத்த சிந்தனையும் உடையவை தமிழ்ஒளியின் கவிதைகள்” என்று சுதந்திரப் போராட்ட வீரர் திரு.சு.மு.கண்ணன் கூறியுள்ளது தமிழ்ஒளியின் ஒப்பற்ற உழைப்பினை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. முன்னணி பத்திரிகையில் மட்டுமன்றி எழுத்தாளர் ‘விந்தன்’ நடத்திய ‘மனிதன்’ பத்திரிகையிலும் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

பத்திரிக்கை தொடங்குதல்

தாமே ஒரு பத்திரிகையைத் தொடங்கி நடத்த வேண்டும் என்ற எண்ணம் கவிஞருக்கு உதயமானது. அதனால் அவர், ‘ஜனயுகம்’ என்னும் பத்திரிகையை 1950-ஆம் ஆண்டில் தொடங்கினார். இவ்விதழின் இரு வெளியீடுகளை மட்டுமே தமிழ்ஒளியால் வெளியிட முடிந்தது. இரு இதழ்களை வெளிகொணர்வதற்குள் அவரிடமிருந்த பணம் கரைந்து போனது. ‘ஜனயுகம்’ பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற வெறி தமிழ்ஒளிக்குள் ஏற்பட்டது. எனவே அவர் தமது கிராமத்திற்குச் சென்று பெற்றோரின் உதவியை நாடினர். அவர்கள் உதவ மறுத்ததால் குடும்பச் சொத்தாக இருந்த தென்னந்தோப்பை விற்க முயன்றார். அதிலும் அவரது முயற்சி பலிக்கவில்லை. அதனால் மனம் உடைந்த அவர் பெற்றோரிடம் சொல்லிக்கொள்ளாமலேயே சென்னை திரும்பினார்.

அன்று சென்னைக்கு வந்த தமிழ்ஒளி அதன் பின்னர் 1962-ஆம் ஆண்டு வரை பன்னிரெண்டு ஆண்டு காலம், தமது பெற்றோர்களை மறந்து, “போகும் வழி நீளமென்று புத்தி உணர்ந்தாலும் போகும்வழி எனது போக்குக்கு இயைந்த வழி” என்று அவர் போக்கில் போய்க்கொண்டிருந்தார்.

1951-ஆம் ஆண்டில் ‘விஜயன்’ என்னும் புனைப்பெயரில் தமிழ்ஒளி, “மாமாவின் சாகசம்” என்ற சிறுநாவலை எழுதினார். இதனை சக்தி வை.கோவிந்தன் வெளியிட்டார். தமிழ் ஒளியின் இந்த நாவல் அன்றைய மலிவுவிலைப் பதிப்பாக வெளிவந்து விற்பனையில் பெரிய சாதனையைப் படைத்தது எனலாம்.

பொதுவுடைமை இயக்கப் பாவலர்

சோவியத் நாட்டில் நடைபெற்ற எழுத்தாளர் மாநாட்டின் தாக்கத்தால் தமிழகத்திலும், ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ முதலிய அமைப்புகள் உருவாயின. இச்சங்கத்தின் செயலாளர்களில் ஒருவராக தமிழ்ஒளி செயல்பட்டுள்ளார். இந்த ஈடுபாட்டின் காரணமாக, தேசியக்கவி பாரதியைப் போல, மக்கள் கவியாகிய, தமிழ்ஒளியும் 1952-ஆம் ஆண்டில் ‘மே தினத்தை’ ,

“கோழிக்கு முன்னெழுந்து
கொத்தடிமைப் போலுழைத்துக்
கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!”
“மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி
விண்ணில் மழையிறக்கி
மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி
வாழ்க்கைப் பயிரிட்டு
வாழ்ந்த தொழிலாளிகையில்
விலங்கிட்டுக் காலமெலாம்
கொள்ளையிட்ட பொய்யர் குலம் நடுங்க
பொங்கிவந்த மே தினமே!”
என்று முதன்முதலில் வரவேற்றுக் குரல் கொடுத்தார்.

மே தினத்தைப் போற்றி அதில் தொழிலாளர்களின் நிலையைத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றார் கவிஞர். அத்துடன் சீனப் புரட்சியையும்-ஆசிய நாடுகளின் விடுதலைச் சூழலையும் பாடினார். பொதுவுடைமை என்றால் பாமர மக்கள் அறியாத காலத்தில் லெனினைப் போல, ஏங்கல்ஸ் போல தாமாகவே சிந்தித்து முடிவுகள் மேற்கொண்டு எதிர்நீச்சல் போட்டு பொதுவுடைமை இயக்கத்தின் பாவலனாகத் தமிழ்ஒளி விளங்கினார்.
தமிழ்ஒளியின் கவிதைகளில் நேரடியாகவே ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றி பேசப்பட்டிருக்கும். மேலும், சமூக-பொருளாதாரத்திற்குத் தனியிடம் கொடுத்து நிரப்பப்படாத இலக்கிய வெற்றிடத்தை முதன் முதலில் நிரப்பியவர் தமிழ்ஒளி. அதனால்தான் அவரைப் ‘பொதுவுடைமைப் பாவலன்’ என்று அழைத்தனர்.

மே தினத்தை முதன்முதலில் கொண்டாடியவர் தோழர் சிங்காரவேலர் என்றால், அதனை வரவேற்று முதன்முதலில் கவிதை வடித்தவர் தமிழ்ஒளி. இதனைக் கருத்தில் கொண்டே பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார், “பாரதி-பாரதிதாசன் இருவரையும் தாண்டி உலகத் தொழிலாளர்களின் இயக்கமாகிய பொதுவுடைமைப் போர்க்களத்தில் களப்போர் வீரனாக விளங்கியவன்” என்று கவிஞர் தமிழ் ஒளிக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார்.

தமிழ் உணர்வு

மே தினத்தைப் பாடி வெளியிட்ட நூலின் விற்பனையில் பாதித்தொகையை அக்காலகட்டத்தில் மலேசியாவில் நாடு கடத்தப்பட்ட தமிழர்களுக்காகத் தமிழ்ஒளி வழங்கினார். இது அவரின் தமிழ் உணர்வுக்கு ஓர் எடுத்துக் காட்டாக விளங்கும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். இதனைத் தொடர்ந்து அவர், “விதியோ? வீணையோ?” என்னும் இசை நாடகத்தை 1955 –ஆம் ஆண்டில் எழுதினார். இந்தச் சமயத்தில் ஒரு பெண்ணைக் காதலித்து அதில் தோல்வியுற்றுப் பல துன்பங்களுக்கு ஆளான கவிஞர் தமிழ்ஒளி“கண்ணப்பன் கிளிகள்”, “மாதவி காவியம்” என்ற இரு படைப்புகளைப் படைத்தார். இவ்விரண்டிலும் முழுக்க முழுக்க தமிழ் ஒளியின் காதல் தோலவியால் ஏற்பட்ட மனத்துயரத்தை நாம் நன்கு உணரலாம். கண்ணப்பன் கிளிகள் உருவகக் காப்பியத்தில் ஒலிக்கின்ற ஆண் கிளியின் சோகம் தமிழ்ஒளியின் குரலே என்பது படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் நன்கு விளங்கும்.

‘தமிழ்ஒளி’ என்று தாம் புனைந்து கொண்ட பெயருக்கு ஏற்ப தமிழுக்கும்-தமிழருக்கும் அவர் ஆற்றியுள்ள பணிகள் அளப்பறியன. அந்தக் காலக்கட்டத்தில் சி.பா.ஆதித்தனார் தொடங்கிய “நாம் தமிழர்” என்னும் இயக்கத்தில் தீவிரமாக செலாற்றிய தமிழ்ஒளி அவ்வியக்கத்தின் சார்பாக வெளிவந்த ‘தமிழன்’, ‘சமநீதி’ ஆகிய இதழ்களில் பல இந்தி எதிர்ப்புக் கவிதைகளை எழுதினார்.

இலக்கியப் பணி

தமிழ்ஒளி ஏறக்குறைய 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவரது நூல்களை ஊ.கோவிந்தன், மா.சு. சம்பந்தன், பெண்ணாடம் வீ.இராமசாமி, செ.து.சஞ்சீவி ஆகிய தோழர்கள் வெளியிட்டுள்ளனர். கவிதை-நாடகம்-ஆராய்ச்சி என்ற வட்டத்திற்குள் மட்டும் தமிழ்ஒளி இயங்கவில்லை. திரைப்படத் துறையிலும் அவர் கால் பதித்தார். 1957இல் வெளியான ‘உலகம்’, ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ ஆகிய திரைப்படங்களுக்குப் பாடல் எழுதினார். ஆனால் திரைத்துறை அவருக்குச் சரிப்பட்டு வராததால் விலகிவிட்டார்.

1962-ஆம் ஆண்டிற்குப் பிறகு தமிழ்ஒளி காசநோய்க்கு ஆளானார். தமிழ்ஒளியின் உடல் நலம் குன்றியது. அவரின் உடல் நலம் குன்றிய போதிலும்கூட கடைசி வரையிலும் அவர் எழுதிக் கொண்டேதான் இருந்தார். 1964-ஆம் ஆண்டில் தனது குருவான பாவேந்தர் பாரதிதாசன் இறந்தபோது,

“உயிரில் உணர்வில் கலந்த கவிஞன்,
என் உயிரில் உயிர் கொண்டு உலவுகிறான்”
என்று மிகவும் வருந்தி எழுதினார். இது தான் கவிஞர் தமிழ்ஒளி எழுதிய கடைசி கவிதை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
“மண்ணில் முளைத்தவன் நான்-அதன்
மார்பில் திளைத்தவன் நான்!
எண்ணித் துணிந்துவிட்டேன்-இனி
எங்கும் பறந்து செல்வேன்”

என்று பாடித் திரிந்த நமது பாட்டாளிகளின் கவிஞன் தாம் பிறந்த ‘ஆடூர்’ மண்ணிலேயே 1965-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 29-ஆம் நாளன்று மறைந்தார். தமிழுக்கு ஒளியூட்டிய தமிழ் ஒளி மறைந்தது. ஆனாலும் அத்தமிழ் ஒளியின் கதிரொளி என்றும் பாட்டாளி வர்க்கத்தினரின் இதயங்களில் கலந்து, அவர்தம் இதயங்களில் எல்லாம் நீங்காத இடம்பெற்றுவிட்டது. தமிழ் ஒளியின் புகழ் தமிழிலக்கிய உலகில், தமிழர் தம் நெஞ்சில் என்றும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.

Series Navigation