தமிழின் மறுமலர்ச்சி – 6

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

பி.கே. சிவகுமார்


(தமிழின் மறுமலர்ச்சி – நூற்களஞ்சியம்: தொகுதி – 2 – பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை – வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், ‘வையகம் ‘, 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 28.)

‘பாரதியும் தமிழும் ‘ என்ற கட்டுரையிலிருந்து…

மூன்று விடுதலைகளுக்காக பாரதி உழைத்து வந்திருக்கிறார். அவை, நாட்டு விடுதலை, பெண் விடுதலை, தமிழ் விடுதலை. முதல் இரண்டு விடுதலைகளுக்காகப் பாடியவர் மூன்றாவது விடுதலைக்குப் பாடவில்லை என்பது உண்மை. ஆனால், ‘தமிழுக்கு விடுதலை ‘ என்பது பாரதியின் பாடல்களில் எளிதில் காணக் கிடைக்கிறது.

பல நூற்றாண்டுகளாய் வளர்ந்து பெருகிய தமிழ் கம்பர் காலத்தில் உச்ச நிலையை அடைந்தது. ஆரிய நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒன்றுகூடித் தென்னாட்டில் பரவிய கலப்பு நாகரிகத்தின் பேரெல்லையை அறிவுறுத்துவதாக, நமது தமிழும் செழிப்புற்றோங்கியது. ஆனால், கம்பருக்குப் பின் தமிழ்ப் பேராறு பல கால்வாய்களாகப் பிரிந்துவிட்டது. காதற் பிரபந்தங்களும், புராணங்களும், பலவகைப் பிரபந்தங்களும் தமிழில் நிரம்பலாயின. இவற்றால் தமிழின் வன்மையும் வேகமும் சிறிது சிறிதாகக் குறைவுபடலாயின. தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சியும் அனுபவ வளர்ச்சியும் தடையுற்று நின்றன. இந்நிலையைத்தான் ‘மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் ‘ என்று ஒரு ‘பேதை ‘ கூறியதாகப் பாரதியார் பாடினார்.

இப்படிக் கட்டுக்கிடையாகக் கிடந்த தமிழை விடுதலை செய்து அதற்குரிய இயற்கை வலிமையோடு மீண்டும் ஜீவநதியாகப் பெருகிப் பாயும்படிச் செய்தவர் பாரதி. இச் செயற்கரிய காரியத்தைப் பாரதி எவ்வாறு செய்து முடித்தார். இதற்கான விடையை தமிழ்ச் சொற்கள், தமிழ் நடை, நூற்பொருள் என்ற மூவகையிலும் தமிழ் இருந்த நிலையை நோக்கினால் எளிதில் அறியலாம்.

வழக்கொழிந்த சொற்கள்:

புலவர்கள் தங்கள் நூல்களில் பயன்படுத்திய சொற்களில் பாதி வழக்கொழிந்தவையாக இருந்தன. புலவர்கள் வழக்கற்ற, கரடுமுரடான, அருஞ்சொற்களைக் கையாளுவதில் மிகவும் கவனம் காட்டி வந்தனர். ஒரு உதாரணம்,

‘ஆயிடைச் செல்வோர், உடுத்தன வெள்ளுடையாய், உருநிறம் வெண்ணிறமாய்த் திகழ்தலின், பானிறக் கலிங்கம் உடுத்து மாலை காலத்திற் கூலத்தில் உலாவரும் வெண்ணிற மக்களை நிகர்த்தனர். அம்மறுகையடுத்துக் கொடிகள் துயல்வரப் பன்னிறக் கண்ணாடிச் சாளரம் அமைத்து நாற்றிசையுங் காண்வர ஏற்றிய விளக்கொடு நின்ற மாடங்கள், கலங்கரை விளக்கமென இலங்குற்றன. ‘

கையில் அகராதியை வைத்துக் கொண்டுதான் இத்தகைய வழக்கொழிந்த மாண்டுவிட்ட சொற்கள் நிரம்பிய நூலுக்குப் பொருள் காண முடியும்.

ஆடம்பரச் சொற்கள்:

ஆடம்பரச் சொற்களைப் பயன்படுத்துவோர் உயிரற்ற பிணத்தை அலங்கரிப்பதுபோல், பொருளற்ற தம் வாக்கியத்தைப் பகட்டு மொழிகளால் நிரப்பி விடுகின்றனர். தமிழ்ப் பகட்டு மொழிகளோடு வடமொழிப் பகட்டு மொழிகளை வழங்குவதிலும் தமிழர்கள் ஆர்வம் காட்டியுள்ளார்கள்.

‘மஹாராஜாவே, நின்னுடைய ஆஜ்ஞாலங்கள் பயத்தால் அவர்களைக் கொண்டு வனம்புக்கு, கிரிதுர்க்கா த்வாரத்துள் உறையும் முநீவரன் என நிர்ப்பய விவிக்த விஹாரியாகி நிர்மலமாகிய லேச்யை யுடையதொரு மஹாபல கேஸரி ஸந்நிஹித மாயினவாறே அதன்முன் அவரை உய்த்தேன். ‘

இனி,

இப்புலவர்கள் கையாண்ட தமிழ் நடையை நோக்குவோம்.

நாம் கற்ற பண்டை நூல்களிலிருந்து பல தொடர்களையும், செய்யுட்களையும் வசனமாக அமைத்து விடுதலே ‘உயரிய ‘ செந்தமிழ் நடை எனப்பட்டது.

‘கல்வியுடையவரே கண்ணுடையவர். கல்லாதார் முகத்திரண்டு புண்ணுடையவரே. கல்லாதார் மக்கள் உடம்பிற் பிறந்திருந்தும் விலங்கினை ஒப்பாவார். அன்றியும் மக்கட் பதடியுமாவார். கேடில் விழுச்செல்வமாகிய கல்வியைப் பெற்றவர் நீரால், நெருப்பால், கள்வரால், தாயத்தாரால், பிறரால் அழிவுறும் ஏனைச் செல்வத்தைச் செல்வமென மனங்கொள்ளார்… கற்றவர் குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சளழகையும் மதித்திடார் ‘

இதுபோன்ற தமிழ் நடையால், ஆசிரியரது கல்விப் பெருக்கமும், ஞாபக சக்தியும் நமக்குப் புலனாகின்றன. இவற்றை நாம் வியக்கலாம். ஆனால் இந்நடையை வியக்க முடியாது. பழஞ் சுண்டற் கறியை ஆசிரியர் வாசகர்களுக்கு விருந்து செய்ய முயன்றிருக்கிறார். தமிழ் வளர்ச்சிக்கு இத்தகைய நடை பெரியதொரு தடை.

சோலையை நாண்மலர்ச் சோலை என்றும், சந்திரனை பன்மீன் நடுவட் பான்மதி என்றும், உலகத்தை கடல்புடை சூழ்ந்த மலர்த் தலையுலகம் என்றும் எழுதுகிற போக்கும் இத்தகையதே. இத்தொடர்களைக் கிளிப்பிள்ளை போல திருப்பித் திருப்பிச் சொல்வதால் இவை பொருளற்றுப் போய்விட்டன.

ஒரு சிலர் எதுகை நயங்களையும் மோனை நயங்களையும் எதுகை-மோனை நயங்களையும் வசன நடையில் அமைத்துத் தன்னுள்ளே மகிழ்ந்து வாசகர்களுக்கு நகைப்பு ஊட்டி வந்தனர்.

‘இடியொலி கேட்ட பாம்பெனத் துடிதுடித்து அடியற்ற மரமெனப் படிமிசைத் திடாரென விழுந்து…

ஆராயாமற் காரியஞ்செய்து அரும்பழி பூண்டமைக்கு நெஞ்சு அயர்ந்து, அரியணை மீது வீழ்ந்து அன்றே உயிர் அகற்றினான். ‘

இங்ஙனம் எழுதுபவர்களும் தங்கள் அறிவுச் சூன்யத்தைச் செய்யுட்குரிய இந்த நயங்களால் மறைக்க முயல்கிறார்கள்.

இன்னும் சிலர் அற்பக் கருத்துகளை வெளியிடப் படாடோபமான பெரிய சொற்களைப் பயன்படுத்தினர்.

‘இழிதகவ! இஞ்ஞான்று ஈதென்னை ? வறுமைக் காலத்தில் முதுமைத் துறவி உறழ… ‘ என்று தொடர்கின்ற வாக்கியங்களைக் கேட்டதும் சிரிக்காமல் இருக்க முடியுமா ?

பழைய நூல்களில் விளங்காத பகுதியை தம் வசனத்தில் பயன்படுத்துவதும், இத்தகையதே. உதாரணமாக, பூமி சாஸ்திரம் தொடர்பான வடமொழி கட்டுக்கிடைச் சரக்குகளைத் தமிழில் அப்படியே எழுதுதல். வடமொழி கூட்டுறவால் தமிழ் எத்தனையோ நன்மை பெற்றுள்ளது. அக்கூட்டுறவைத் தக்கபடி பயன்படுத்தாததால் தீங்குகளும் தமிழில் புகுந்துள்ளன.

அணியிலக்கணம்:

அணியிலக்கணம் என்ற பெயரால் தமிழிற்கு விளைந்த துன்பங்களைச் சொல்லி முடியாது. இவ்விலக்கணம்தான் தமிழ் நடையை இயல்பிற்கு மாறாக விலங்கிட்டுத் தடை செய்து, முற்றும் கெடுத்து விட்டது. வடமொழி ஆசிரியர்களைப் பின்பற்றி வசனமும், செய்யுளும் எழுதத் தொடங்கி, தாம் கையாளுவது தமிழ்தானோ என்று ஐயுறும்படியாகச் செய்துவிட்டது. மாறனலங்காரம், தண்டியலங்காரம் முதலியவற்றில் வரும் உதாரணச் செய்யுட்களை நோக்கினால் மேற்கூறியதன் உண்மை புலப்படும்.

கற்பகப் பாவடி வாரணம் பாற்கடந் தோன் செந்தமிழ்க்

கற்பகப் பாவடி வாரணங் கண்டவர் கோனருள்வி

கற்பகப் பாவடி வாரணங் கார்மலர்க் காமொய்தில்லைக்

காற்பகப் பாவடி வாரணம் யான்பெறக் காட்டிடுமே

வாயாயா நீகாவா யாதாமா தாமாதா

யாகாவா நீயய்யா வா

என்பன போன்ற செய்யுட்கள் தமிழணங்கு குற்றுயிராகக் கிடக்கிறாள் என்பதை நமக்குப் புலப்படுத்துகின்றன.

புலவர் தம் காவியங்களில் நகர் வருணனை, மலை வருணனை வேண்டுமென்று அலங்கார நூல்கள் வற்புறுத்தின. அவ்வாறே செய்ய அப்புலவர்களும் முற்பட்டனர். ஆனால் பாவனாசக்தி வாய்ந்திருந்தால்தானே இவ்வருணனைகள் செய்ய இயலும் ? சிறிது முயன்று சில வருணனைச் செய்யுட்களை இயற்றுவார்கள். இதற்குள் இவர்களது பாவனா சக்தி வறண்டு மாய்ந்து விடுகிறது. உடனே, திரிபு, இரண்டடிப் பாடகமடக்கு, ஏகபாதம், ஓரெழுத்து விகற்பத்தான் வந்த மடக்கு, திரிபங்கி, கோமூத்திரி, முரசபந்தம், அஷ்டநாகபந்தம் முதலியவற்றில் இறங்கிப் பொருளற்ற கிருத்திரிம அலங்காரங்களில் தங்கள் அறிவாற்றலைப் பாழாக்குவர். இவ்வாறு வதையுண்ட தமிழுக்கு என்றேனும் விடுதலை ஏற்படுமா என்றூ யாவரும் கவலையுறுதல் இயல்புதானே ?

தமிழ் நூல்களில் நூற்பொருள்:

நூற்பொருள்கள் பெரும்பாலும் தெய்வங்களைக் குறித்த தோத்திரங்களாகவும், பிரபந்தங்களக்கவும் புராணங்களாகவும் இருந்தன. தோத்திரங்களெல்லாம் பெரும்பாலும் ஒரே தன்மையன. தாமோ, பிறரோ, சொல்லியவற்றையே திரும்பத் திரும்ப சொல்லுவதில் சுவை ஏதேனும் காண முடியுமா ? முடியாது. இவற்றிலே ஆழ்ந்த தத்துவங்களை நாம் எதிர்பார்க்கலாம். ஆனால், இவ்விஷயத்திலும்கூட நாம் ஏமாற வேண்டியதுதான். நமது தத்துவ நூல்களிலுள்ள சங்கேதபதங்களைக் காணலாம். ஆனால் கருத்து வளர்ச்சி, உண்மையறிவு, கவிதை உணர்ச்சி ஆகியவற்றைக் காண முடியாது.

நிர்க்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப

….நிர்விஷய கைவல்யமா

நிஷ்கள வசங்கசஞ் சலரகித நிர்வசன

….நிர்த்தொங்க நித்தமுக்த

தற்பர விச்வாதீத வ்யோமபரி பூரண

….சதானந்த ஞானபகவ

சம்புசிவ சங்கர சர்வேச வென்றுநான்

….சர்வகாலமும் நினைவனோ

அற்புத வகோசர நிவிர்த்திபெறு மன்பருக்

….கானந்த பூர்த்தியான

அத்துவித நிச்சய சொரூபசா க்ஷாத்கார

….அனுபூதி யனுசூதமுங்

கற்பனை யறக்காண முக்கணுடன் வடநிழற்

….கண்ணூடிருந்த குருவே

கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு

….கருணாகரக் கடவுளே

இத்தாயுமானவர் பாடலில் வாய் நிரம்பிய சொற்கள் உள்ளன. தத்துவ-எலும்புச் சட்டகம் தோன்றுகிறது. ஆனால், ஆழ்ந்த தத்துவ உணர்ச்சியை எழுப்புவதற்கு இது வன்மையுடையதல்ல. கவிதை உணர்ச்சியோ, இப்பாட்டினுள் தங்கி நிற்க மறுத்துப் பறந்தோடி விட்டது. இதிலே வடமொழி என்னும் நாகபாசத்தால் கட்டுண்டு தமிழ்மொழி உயிர் குறைந்து மரணாவஸ்தை எய்தியுள்ளது.

பிரபந்த வகைகள்:

தெய்வம் பற்றித் தோன்றியுள்ள பிரபந்த வகைகளும் ஒரே மாதிரி உள்ளன. உதாரணம், கோவை, உலா ஆகிய பிரபந்தங்கள். இதிலே உலாப் பிரபந்த வகையிலாவது சில வேற்றுமைகள் உண்டு. கோவையில் அதுவும் இல்லை. கோவையில் காட்சி முதல் கார்ப்பருவம் கண்டு இரங்கல் வரையுள்ள பல துறைகளும் அழகு இல்லாமல், கவித்துவமில்லாமல் பாடப்பட்டுள்ளன. ஸ்தலம் பற்றிய சரித்திரக் குறிப்புகள்கூட இவற்றில் கிடைத்தல் அரிது. எனவே, இவற்றில் ஒரு சில தவிர, ஏனைய எல்லாம் ஒருவகைப் பயனும் தரத்தக்கன அல்ல. இவற்றில் காணும் தமிழும் ஒரே மாதிரியாகவும் சிறந்த நயமின்றியும் உள்ளது. ஏதேனும் ஒரு ஸ்தலத்தையோ மூர்த்தியையோ எடுத்துக் கொண்டு எல்லா வகையான பிரபந்தங்களையும் பாடி முடிக்க வேண்டும் என்ற வழக்கமாகி விட்டது. தமிழ்க் கவிதைப் பயிரை வேரோடு அழித்துவிட்ட விஷப்பூண்டுகள் என்று இவற்றைச் சொல்லலாம்.

புராணங்கள்:

புராணங்களால் தமிழும் தமிழ்நாட்டு மக்களும் சீர்கெட்டுப் போயுள்ளனர். வடமொழியில் உள்ள பதினெட்டுப் புராணங்களின் மொழி பெயர்ப்புகள் சில தமிழில் உள்ளன. இவை போதாது என்று தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஸ்தலத்துக்கும் புராணம் எழுதத் தொடங்கி விட்டனர். இப்புராணங்களைக் காவிய லட்சணமுள்ளன போல எழுதி இவற்றில் பலவகையான பொய் வரலாறுகளையும் புனைந்து புகுத்தி வந்தனர். சூரியன், சந்திரன், இந்திரன், மஹரிஷிகள், பிரம விஷ்ணு சூத்ரர்கள், உமா தேவியார், அரசர்கள் முதலானவர்களுக்கெல்லாம் ஒரே கடமை ஏற்பட்டு விட்டது. அவர்கள் தினந்தோறும் பல தலங்களுக்கும் சென்று இறைவனைப் பூஜித்து தங்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ள சாபத்தினின்றும் விமோசனம் பெறுதலே அவர்கள் வேலை.

இவர்கள் சில இடங்களிலுள்ள கட்டுக்கிடை நீரைத் தீர்த்தமெனக் கொண்டு, மோக்ஷதாயினி, பாபநாசினி என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்து, தங்களுடைய பக்தியை வெளியிட்டிருக்கிறார்கள். இக்கட்டுக்கிடை நீர் நாற்றம் எடுப்பது போலுள்ளது. அதுவே, இப்புலவர்களது தமிழும் உண்மையான தெய்வப் பற்றும், உண்மையான நாட்டுப் பற்றும், உண்மையான தமிழ்ப் பற்றும் நமக்கு உண்டாகாதவாறு செய்துவிட்டது. நேர்மாறாக, இவர்கள் செய்துள்ள கட்டுக்கதைகளின்மீது அருவருப்பும், இவர்கள் எழுதியுள்ள தமிழின்மீது அருவருப்பும், உண்டாகும்படி செய்துவிட்டார்கள்.

இனி, மக்களைக் குறித்து சிலர் எழுதியுள்ள பாடல்களைப் பார்க்கலாம். மக்களைப் பற்றிப் பாடுவதில் புராணங்களுக்கு இடமில்லை. ஆகவே, தோத்திரப் பாடல்களும், பிரபந்தங்களுமே மக்களைப் பற்றியுள்ளன. பொய்யின் பேரெல்லையை இந்நூல்களில் நாம் காணலாம். உண்மை என்பது மருந்துக்கும் இல்லாமல், உயர்வு நவிற்சியையே எப்போதும் பயன்படுத்தி உண்மையின் இயல்பை இப்புலவர்கள் மறந்துவிட்டார்கள். சொல்வதை ஆத்ம சுத்தியோடு சொல்ல வேண்டும் என்ற நினைப்பும் இவர்களுக்கு இல்லை. ‘மனம் வேறு, சொல் வேறு, மன்னு தொழில் வேறு ‘ என்ற கூற்றிற்கேற்ப, இவர்களின் இயற்கை அமைந்துவிட்டது.

கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்

….காடெறியும் மறவனை நாடாள்வாய் என்றேன்

பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்

….போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்

மல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை

….வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்

இல்லாது சொன்னேனுக்கு இல்லையென்றான்

….யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே

என்று ஒரு புலவர் தாம் செய்த பாபத்திற்காக இரங்குகிறார். தமிழ்ப் புலவர்களுள் இவர் ஒருவர்தான் தாம் செய்தது பாபம் என்று இரங்கிப் பாடியவர்.

இப்படிப்பட்ட புலவர்களின் பாடல்களால் தமிழுக்கே உண்மையை உணர்த்தும் ஆற்றல் இல்லையோ என்று சிலர் சந்தேகம் கொள்ளும்படி ஆகிவிட்டது. இவ்வாறு, சொல், நடை, கருத்துப் பொருள், நூற்பொருள் முதலிய பல விஷயங்களிலும் தமிழ் மிகவும் சீர்கெட்டு இருந்தது. இதை நன்னிலைக்கு மீண்டும் கொண்டு வருவது ஒரு பெருங்கவிஞனாலும் கடினம் என்ற நிலை இருந்தது. அப்படி முயல்கிற பெருங்கவிஞன் அறிவும் ஆற்றலும் கல்வியும் நிரம்பியவனாக இருக்க வேண்டும். புத்துணர்ச்சிகள் பல கொண்டு, பிறநாட்டு இலக்கியங்களை உணர்ந்தவனாய், தன் நாடு மேம்பட வேண்டும் என்ற நிலைத்த நோக்கம் உடையவனாய், உண்மை உரைப்பதிலே பெருநாட்டம் உடையவனாய், அஞ்சாமையே தனக்கு அரணாய் உடையவனாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் உண்டாயிற்று.

இவ்வியல்புகளுக்கெல்லாம் லட்சியமாகத் தோன்றியவர் தேசீயகவி பாரதி. பொய்யாக மக்களைப் பாடும் பொய்வாழ்வின் பெரும்பகைவர் இவர். அடிமை வாழ்வு அழிய இரவும் பகலும் சிந்தித்து முயன்றவர். அதற்குரிய ஆத்ம சக்தி தம் மக்களுக்கு வேண்டுமென்று பராசக்தியை வணங்கிப் போற்றியவர். நாட்டில் ஒற்றுமை மனப்பான்மை ஓங்க சங்கநாதம் செய்தவர். சாதி வேற்றுமை அறவே ஒழியவும், தீண்டாமைப் பேய் ஓடவும் முழங்கியவர். நாட்டுப் பற்று இவர் இதயத்தில் சுரந்து பொங்கி வழிந்தது. உண்மை ஒளியானது இவர் வாக்கினிலே சுடர்விட்டு இலங்கியது.

உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்

….வாக்கினிலே ஒளியுண் டாகும்

என்று அருமையாகப் பாடியவர் இவரே.

விடுதலை பெற்ற தமிழில்:

பாரதி விடுதலை பெற்ற தமிழில் தமது அரிய பாடல்களை இயற்றினார். இவர் தமிழ் கட்டுக்கிடை அன்று. தினந்தோறும் வழங்கிவரும் மொழி. பேச்சு வழக்கிற்கு ஒத்த நடை. வருணனைகள், அலங்காரங்கள் நீக்கி, தனக்கு இயல்பாகவுள்ள பேரழகோடு விளங்குவது. இயல்பாக உள்ள ஆற்றலோடும் சிறப்போடும் செல்லுவது. இவரது தமிழ் இவருடைய கருத்துகளை வெளிப்படாமல் மறைப்பதற்கு இட்ட திரையல்ல. இவர் பாடல்களைப் படித்த உடனேயே, பொருள் உணர்த்த வேண்டும் என்ற அவசியம் இன்றி, கருத்துகள் நம் மனத்தில் நேரே பாய்கின்றன. பாட்டினுடைய பொருள்கள் நம் அறிவை முற்றும் கவர்ந்து விடுகின்றன. பாட்டினுடைய வடிவும் அழகும் நம்மைப் பரவசப்படுத்துகின்றன. இவ்வாறாக, தமிழை விடுதலை செய்த இப்பெருங்கவிஞரைத் தமிழ்நாடு என்றும் மறவாது.

இத்துடன் ‘பாரதியும் தமிழும் ‘ என்ற கட்டுரை நிறைவுறுகிறது.

பாரதி தமிழுக்குப் புத்துணர்வு தந்தவர் என்று பலரும் எழுதப் படித்திருக்கிறேன். ஆனால், நான் படித்த வரையில் யாரும் அதற்கு முன் தமிழ் எப்படியிருந்தது, பாரதி அதை எப்படி மாற்றினார் என்று விவரமாகவும் ஆதாரபூர்வமாகவும் சொன்னதில்லை. யாரேனும் சொல்லி நான் படிக்காமல் இருந்திருக்கலாம். வையாபுரிப் பிள்ளையின் பாரதி யுகம், பாரதியும் தமிழும் ஆகிய கட்டுரைகள் ஆதாரபூர்வமாக தமிழ் அன்றிருந்த நிலையைச் சொல்லிப் பின் பாரதி அதற்கு மறுவாழ்வு தந்ததை விளக்குகிறது. 1940களிலேயே – பாரதியின் பெருமை பாருக்கு முழுதும் பரவாத நாள்களிலேயே – பாரதியை இப்படிச் சரியாகப் புரிந்து கொண்ட, பாரதியின் இடத்தைத் தமிழில் ஆதாரபூர்வமாக நிறுவிய பேராசிரியரின் பங்களிப்பு போற்றத்தக்கது. பழந்தமிழிலும் பழைய இலக்கியங்களிலும் மொழியாராய்ச்சியிலும் தமிழின் வரலாற்றிலும் தேர்ந்த தமிழ்ப் பேராசிரியரான வையாபுரிப் பிள்ளையின் பாரதி பற்றிய இக்கட்டுரைகள் பாரதிக்கு திறமான புலமை பெற்ற ஒருவரால் சூட்டப்பட்ட மணிமகுடங்கள். பாரதிதாசன் வையாபுரிப் பிள்ளையைத் திட்டியபோது, பாரதி பற்றிய பேராசிரியரின் இக்கருத்துகளை அறிந்திருந்தாரா என்று தெரியவில்லை. பாரதி அன்பர்கள் அனைவரும் தவறாமல் படிக்க வேண்டியவை பேராசிரியரின் பாரதி பற்றிய இக்கட்டுரைகள்.

அடுத்த கட்டுரை ‘தமிழ்மொழிப் பற்றும் பிறமொழி வெறுப்பும் ‘ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இப்பொருளில் ஏற்கனவே பேராசிரியர் சொன்ன கருத்துகளை இன்னும் விவரித்து இதிலே அவர் பேசுகிறார். பழைய பொருளொன்றையே திரும்பப் பேச நேர்கிற தருணங்களில்கூட ஒவ்வொரு முறையும் பேராசிரியர் புதிய புதிய உதாரணங்களைக் காட்டி விளக்குவது அவர் அறிவின் ஆழத்தையும், தெளிவையும் காட்டுகிறது.

(தொடரும்)

http://pksivakumar.blogspot.com

Series Navigation

author

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்

Similar Posts