தமிழின் மறுமலர்ச்சி – 5

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

பி.கே. சிவகுமார்


(தமிழின் மறுமலர்ச்சி – நூற்களஞ்சியம்: தொகுதி – 2 – பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை – வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், ‘வையகம் ‘, 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 28.)

‘பாரதி யுகம் ‘ என்ற கட்டுரையிலிருந்து…

தேசீய கவி:

தமிழ்நாட்டில் தேசபக்தியை விதைத்து வளரச்செய்தவர்களில் பாரதியும் ஒருவர். நாட்டுப்பற்றைப் பல பெரியவர்கள் பலவிதமாக வளர்த்தார்கள். கற்றவர், கல்லாதவர், செல்வர், வறிஞர், முதியர், இளையர், ஆண், பெண் அனைவரையும் வசீகரிக்கச் செய்த தன் கவிதை மூலம் பாரதி தேசபக்தியை வளர்த்தார். எனவே, தேசிய கவியென்று அவரை அழைத்துவருவது பொருத்தமே.

பாரதியின் கனவு பலிக்கும் காலம் வந்துவிட்டது. நாமே நம்மை ஆளத் தொடங்கிவிட்டோம். வறுமையைப் போக்க முயல்கிறோம். பொதுமக்கள் நன்மை ஒன்றையே அரசாங்கம் போற்ற வேண்டும் என்ற கொள்கை வேரூன்றி விட்டது.

வையம் மன்னுயி

…ராக அவ் வையகம்

உய்யத் தாங்கும்

…உடலன்ன மன்னவன்

என்ற கம்பன் வாக்கு பலித்துவிட்டது.

அரசியலில் மட்டுமின்றி இலக்கிய உலகிலும் பாரதி கனவு நனவாகிறது. முன்னர் தெய்வம், அரசர், சிற்றரசர், பிரபுக்கள் மீது கவிதை புனையப்பட்டது. சொற்களும் பொருளற்று கவிதைகள் உயிரற்றுக் கிடந்தன. சன்மானம் பெறுவதே முதல் நோக்கமாக இருந்தது. கலையுணர்ச்சி, கவிதையுணர்ச்சி முதலியன இரண்டாம்பட்சமாக இருந்தன. இக்குறைகளை நீக்க பாரதி முயன்றார். வெற்றியும் பெற்றுவிட்டார். யாசகத்தின் பொருட்டுப் பாடும் கவிஞர்கள் இக்காலத்தில் பெரும்பாலும் இல்லை.

கவிதைப் பொருள்:

பாரதி கவிப்பொருளாகப் புது விஷயங்களைக் கண்டார். பழம்பொருள்களையும் புதிய முறையில், கலைநயம் தோன்ற கவித்துவத்தோடும் உணர்ச்சி வேகத்தோடும் பாடியுள்ளார். உதாரணமாக, ஸரஸ்வதி ஸ்தோத்திரத்தை எடுத்துக் கொள்வோம். இதற்குப் பழம்பெருமை உண்டு.

சொல்லின் கிழத்தி

….மெல்லியல் இணையடி

சிந்தை வைத்து இயம்புவல்

….செய்யுட்கு அணியே

என்று தண்டியலங்காரம் தொடங்குகிறது.

தவளத் தாமரை

….தாதார் கோயில்

அவளைப் போற்றுதும்

….அருந்தமிழ் குறித்தே

எனச் சேனாவரையர் தம் உரையைத் தொடங்குகின்றனர். கம்பராமாயணத் தனியன்களில் ‘பொத்தம் படிக மாலை ‘ என்று தொடங்கும் செய்யுளொன்று உளது. கம்பர், ஸரஸ்வதய்யந்தாதி ஒன்று பாடினரென்றும் கட்டுரைப்பர். அதில்,

ஆய கலைகள்

….அறுபத்து நான்கினையும்

ஏய உணர்விக்கும்

….என்னம்மை – தூய

உருப் பளிங்கு போல்வாள் என்

….உள்ளத்தினுள்ளே

இருப்பள் இங்கு

….வாராது இடர்

என்பதும் உள்ளது. குமரகுருபர சுவாமிகளும் சகலகலாவல்லி மாலை ஒன்று பாடினார். ஸரஸ்வதி தேவியைக் குறித்துப் பலத் தனிப்பாடல்களும் உள்ளன. அவற்றில் ஒன்று.

கடிமலர்கள் கொய்திட்டுக் கையிரண்டும் கூப்பி

அடிபணிய வேண்டிற் றளிக்கும் – நொடிவரையின்

வண்டார் கருங் கூந்தல் வஞ்சியிடைக் கிஞ்சுகவாய்

வெண்டா மரைமேல் விளக்கு

மேற்கண்ட பாடல்களில் உயிரும் ஆற்றலும் காண்பது அரிது.

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

….வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்

கொள்ளை இன்பம் குலவு கவிதை

….கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்

உள்ள தாம்பொருள் தேடி உணர்ந்தே

….ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்

கள்ளம் அற்ற முனிவர்கள் கூறும்

….கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள்

என்ற பாரதி பாடலின் இனிமையும், புதுமையும், கருத்து நயமும், உண்மை உணர்ச்சியும், கவித்துவப் பெருமையும், முற்காலத்து ஸரஸ்வதி ஸ்தோத்திரங்களில் சிறிதும் இல்லை. ஸரஸ்வதி தேவியின் மனம் பாரதி எழுதியது போன்ற கவிதைகளாலேயே கனியும்.

இவ்வகைப் பாடக்களைப் பாடிய பாரதி கவிதை உலகில் ஒரு நூதன யுகத்தைத் தொடங்கி வைத்தார். அதை, ‘பாரதி யுகம் ‘ என்று அழைக்கலாம். பாரதி கனவும், கவிதையும் கவிஞர்கள் உள்ளத்தில் தூண்டா விளக்காக நின்று ஒளிர்க.

இத்துடன் ‘பாரதி யுகம் ‘ என்ற கட்டுரை நிறைவுற்றது.

அடுத்த கட்டுரை ‘பாரதியும் தமிழும் ‘ என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இதில் பாரதி தமிழுக்கு எவ்விதம் புத்துயிர் அளித்தார் என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறார் பேராசிரியர்.

(தொடரும்)

http://pksivakumar.blogspot.com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்