தமிழின் செம்மொழித் தகுதிகள்

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

முனைவர் மு. பழனியப்பன்



முனைவர் மு. பழனியப்பன்

இணைப்பேராசிரியர்> மா. மன்னர் கல்லூரி>புதுக்கோட்டை

செம்மொழி என்ற நிலையில் ஒரு மொழி ஏற்கப்பட வேண்டுமானால் அதற்கென்று சில தகுதிப்பாடுகள் தேவைப்படுகின்றன. செம்மொழி என்று ஒரு மொழி அழைக்கப்பட வேண்டுமானால் அம்மொழி தொன்மைச் சிறப்பு வாய்ந்ததாக அதற்கென ஒரு தனித்த பண்பாடு உடையதாக, அந்தப் பண்பாடு எதனோடும் தொடர்பற்றதாக, வளமையான இலக்கியச் செழுமை வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்று கருதுகிறார் ஜார்ஜ் ஹர்ட். இவ்வளவில் சிறப்பு பெற்ற உலகச் செம்மொழிகளாக கிரேக்கம், இலத்தீன், அரபி, சமஸ்கிருதம், சீனம் போன்ற பல மொழிகள் திகழ்ந்து வருகின்றன. இவற்றோடு தற்போது தமிழும் செம்மொழியாக ஏற்கப் பெற்றுள்ளது. தமிழுக்கு எப்போதோ கிடைக்க வேண்டிய இந்தப் பெருமை தற்போதுதான் கிடைக்கப் பெற்றிருக்கிறது.

செம்மொழித்தகுதி என்பதன் பின்னணியில் உள்ள அரசியல், பொருளாதார பின்புலங்கள் இக்காலத்தாழ்விற்கு வகை செய்தன என்ற போதிலும் அவற்றை வென்றுத் தற்போது தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்றிருக்கிறது. இதன் முலமாக இந்திய அரசாங்கம் தமிழ் வளர்ச்சிக்கு என்று தனித்த நிலையில் பொருள் ஒதுக்கீடு செய்து அதனை ஆண்டுதோறும் மேம்படுத்திட வேண்டிய பொறுப்பிற்கு ஆளாகின்றது.

தமிழ் தொன்மையானதாக, தனித்த பண்பாடு உடையதாக, இலக்கிய வளம் மிக்கதாக இருப்பதனோடு வாழும் மொழியாகவும் அது திகழ்ந்து வருகின்றது. பெரும்பாலான செம்மொழிகள் வழக்கில் இருந்து நீக்கி விட்டன. மக்களிடம் அவை பேச்சு மொழியாகக் கூட இல்லை. குறிப்பாக சமஸ்கிருதம், பாலி, எகிப்து போன்ற இவ்வகைப்பட்டனவே ஆகும். ஆனால் தமிழின் தொன்மைச் சிறப்பு. மரபு பண்பாடு போன்றன மாறாமல், சிதறாமல் இன்னமும் காக்கப் பெற்று வருகின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் தமிழ் என்ற மொழியின் கட்டமைப்பு மட்டுமே ஆகும். தமிழ் என்பதை மன்னர்கள், புலவர்கள், மக்கள் வளர்த்தாலும் அவர்கள் மறைந்தபோதும் மறையாமல் தமிழ் காப்பற்றப்பட்டுக் கொண்டே வந்துள்ளது என்பது சிறப்பிற்கு உரியதாகும். இன்னமும் தமிழ் ஒன்றுதான் தமிழர்களைக் காக்கும். உலகைக் காக்கும். இந்தச் செயல்பாட்டிற்குத் தமிழ்ச் செம்மொழிக்கு ஒதுக்கப்படுகின்ற பொருளாதாரம் தக்க முறையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும். மேலும் தமிழின் செம்மொழித் தகுதியை இரண்டாம் தரமானது என்ற விமர்சனமும் உண்டு. அதாவது சமஸ்கிருதம் வளமை பெற இந்திய அரசால் செய்யப்படும் அளவிற்கான பெரும் பொருளாதாரம் தமிழுக்கு அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்தக் குற்றச் சாட்டும் நீக்கப் பெற்று தமிழ் தலையாய செம்மொழித்தகுதியைப் பெற்றே ஆகவேண்டும்.

இந்தியா உலகச் செம்மொழிகள் இரண்டினைப் பெற்றுள்ளது என்பதற்குத் தமிழும் சமஸ்கிருதமும் காரணங்களாகின்றன. இதன்முலம் இந்தியாவின் பழமை,மற்றும் பண்பாட்டுச் செழுமை, இலக்கிய வளமை உலக அளவில் நிலைப்படுத்தப் பெற்றுள்ளது என்பது கருதத்தக்கது. அறிவியல், இராணுவம், தொழில் நுட்பம், அரசியல் போன்ற பல நிலைகளில் உயர்வு பெற்றுள்ள பல உலக நாடுகளின் இடையில் பழமை மற்றும் பண்பாட்டுக் கூறு இவற்றின் வழியாக இந்தியா தகுதியான இடத்தைப் பெற்றுவிட்டது என்பதற்கு இவ்விரு மொழிகளும் அவற்றின் இலக்கியங்களும் அவற்றினைப் படைத்த தன்னலமற்ற மொழியறிஞர்களும், படைப்பாளர்களும் காரணம் என்பதை இந்நேரத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பொதுவாக, செம்மொழிக்கு உரிய தகுதிகளாகப் பதினோரு கூறுகளை எடுத்துரைக்கலாம்.

1. தொன்மை 2. தனித்தன்மை 3. பொதுமைப் பண்பு 4. நடுவு நிலைமை 5. தாய்மைப் பண்பு 6. பண்பாட்டுக் கலை அறிவு பட்டறிவு வெளிப்பாடு 7. பிற மொழித் தாக்கமில்லா தன்மை 8. இலக்கிய வளம் 9. உயர் சிந்தனை 10. கலை இலக்கியத் தனித்தன்மை 11. மொழிக் கோட்பாடு. இப்பதினொன்றும் தமிழுக்கு உண்டு.

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று திருக்குறளுக்குக் காலம் வகுக்கப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தொன்மைச் சிறப்பு வாய்ந்தது தமிழ் என்பது தெளிவு. செம்மொழித் தகுதிக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை போதும் என்று முடிவு செய்யப் பெற்றுள்ளது. இதன்முலம் முத்த பழமையான மொழி தமிழ் என்பது உறுதியாகின்றது.

ஆனால் கற்காலம் முதலே தமிழர்தம் நாகரீகம் மொழி பண்பாடு போன்றன தோன்றி வளர்ந்துள்ளன என்று காணும்போது தமிழின் பழமை இன்னும் முற்காலத்ததாக அறியப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திற்கே முன்பே வாளொடு முன் தோன்றி முத்த குடி என்ற தொடரின் உண்மைப் பொருள் இப்போதுதான் தெளிவுபடுகிறது. தமிழர்கள் கற்காலத்திலேயே வீரச் செறிவு மிக்க வாழ்வை வாழ்ந்தவர்கள் என்பதே இத்தொடர் உணர்த்தும் உண்மைப் பொருளாகும்.

செம்மொழித்தன்மைகள் பதினொன்றுக்கும் உரியதாகத் தமிழின் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. இதன் காரணமாக தமிழின் செம்மொழித் தன்மை உடைய இலக்கியங்களாகச் சங்க இலக்கியங்கள் அமைந்துள்ளன என்பது உறுதியாகின்றனது.

தமிழின் செம்மொழித் தன்மையை அறிந்து உணர்த்திய தமிழறிஞர்களுள் குறிக்கத்தக்கவர்கள் பரிதிமால் கலைஞர் பாவாணர் கால்டுவெல் போன்ற பலர் ஆவர். இவர்களின் செம்மொழிப் பற்றிய கருத்துக்கள் பல திறத்தன. இவர்கள் தரும் அனைத்து வரையறைகளும் தமிழுக்கு உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.

பரிதிமால் கலைஞர் ” திருத்திய பண்பும் சீர்த்த நாகரீகமும் பொருந்திய தூய்மொழி புகல் செம்மொழியாம் என்பது இலக்கணம். இம்மொழி நூலிலக்கணம் தமிழ் மொழியின் கண்ணும் அமைந்திருத்தல் தேற்றம். என்னை? இடர்ப்பட்ட சொன்முடிபுகளும் பொருண்முடிபுகளுமின்றிச் சொற்றான் கருதிய பொருளைக் கேட்டான் தெள்ளிதின் உணர வல்லதாய்ப் பழையன கழிந்து புதியன திருத்தமெய்தி நிற்றலே திருந்திய பண்பெனப்படுவது. இது தமிழ்மொழியின்கண் முற்றும் அமைந்திருத்தல் காண்க. நாட்டின் நாகரிக முதிர்ச்சிக் கேற்பச் சொற்களும் ஏற்பட்டு பாஷைக்கு நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்களேற்படுமிடத்துப் பிற பாஷைச் சொற்களின்றித் தன் சொற்களே மிகுதல் வேண்டும். இவையும் உயர்தனிச் செம்மொழிக்குப் பொருந்துவனவாகும். ஆகவே தமிழ் தூய் மொழியுமாம். எனவே தமிழ்ச் செம்மொழியென்பது திண்ணம் என்று தமிழை உயர்தனிச் செம்மொழியாகக் கருதுகின்றார்.

பாவாணர் பதினாறு தன்மைகளால் தமிழ் செம்மொழித் தன்மை பெற்றுள்ளது என்று கருதுகின்றார். 1.தொன்மை 2.முன்மை 3.எண்மை (எளிமை) 4.ஒண்மை (ஒளிமை) 5.இளமை 6.வளமை 7.தாய்மை 8.தூய்மை 9.செம்மை 10.மும்மை 11.இனிமை 12.தனிமை 13.பெருமை 14.திருமை 15.இயன்மை 16.வியன்மை என்ற பதினாறு தன்மையும் தமிழுக்கு இருப்பதாகப் பாவாணர் கருதுகின்றார். இதன் காரணமாகவும் தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்றிருக்கிறது என்பது அறியத்தக்கதாகும்.

கால்டுவெல் தமிழின் தனித்தியங்கும் தன்மை பற்றிப் பேசுகின்றார். ” திராவிடம் சமஸ்கிருத்தில் இருந்துப் பிறந்தது என்ற கருத்து முந்திய தலைமுறையினராய மொழிநூல் வல்லுநர்க்கு ஏற்புடைத்தாய் விளங்கினும் இக்காலை அறவே அடிப்படையற்றுப் போன கட்டுக்கதையாகி விட்டது என்பது இவரின் கருத்தாகும்.

இவ்வகையில் பல அறிஞர்கள் தமிழின் செம்மொழித் தன்மையைத் தகுதியை உலகம் உணரும் அளவிற்கு எடுத்துரைத்துள்ளனர். தொடர்ந்த இந்தச் செயல்பாட்டின் வழியாகத் தமிழ் தற்போது செம்மொழித் தகுதியைப் பெற்று விளங்குகிறது.

தமிழின் செம்மொழித் தன்மையைத் தற்போது உலகிற்கு உணர்த்தியவர் உணர்த்தி வருபவர் கலிபோர்னியாவில் வாழும் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் ஆவார். இவர் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் என்பவருக்கு எழுதிய மின்மடலில் தமிழ் செம்மொழியாகும் தன்மையைத் தெளிவுபட எடுத்துரைத்துள்ளார்.

தமிழ் செம்மொழித் தகுதியைப் பெற்றிருப்பதற்கான காரணங்களாக நான்கினை அவர் முன்னிறுத்துகிறார்.

தமிழ்மொழி பழமைச் சிறப்பு வாய்ந்தது. தமிழ் தனக்கான தனித்த இலக்கிய மரபினை உடையது. தமிழ் மொழியின் செவ்விலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மற்ற செம்மொழிகளின் இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கத்தக்கவை. இந்தியப் பண்பாடு மரபுகளின் தனித்துவம் உடையதாக தமிழ்ச் செவ்விலக்கியங்கள் விளங்குகின்றன.

இந்த நான்கு கருத்துக்களை அவர் எடுத்துக் கூறியதோடு மட்டுமில்லாமல் அதற்கான சான்றுகளையும் எடுத்துக் கூறி தமிழின் செம்மொழித் தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டினர். இவரின் மேலான இந்தக் கடிதம் இந்திய அரசின் பார்வைக்குச் சென்று மேலும் வலுவூட்ட அதன் காரணமாகத் தமிழ்ச் செம்மொழி என்று ஏற்கப் பெற்றது.

இந்தியக் குடியரசு தலைவரின் ஆணைப்படி இந்தச் செம்மொழித் தகுதித் தமிழுக்குக் கிடைத்துள்ளது. பழமையான இலக்கிய மரபுகளை இன்னும் தொடர்ந்து உணர்த்தி வரும் உலக மொழிகள் முன்றனுள் ஒன்று தமிழ் என்பதால் அதற்கு இந்நேரத்தில் செம்மொழித் தகுதி வழங்கப்படுகிறது என்று இந்தியக் குடியரசு தலைவரின் அறிக்கை இந்த நேர்வை குறிப்பிடுகிறது.

இந்தியக் குடியரசுத் தலைவரின் கருத்து தமிழ் மரபுக் காப்பினை முன்னிலைப் படுத்தியுள்ளது. தொடர்ந்து உலகிற்குத் தமிழ் செய்த பண்பாட்டுச் சேவையைப் போற்றியுள்ளது. மற்றவர்களின் கருத்தைத் தழுவியும் அதே நேரத்தில் தமிழின் உண்மையானப் பண்பினை அறிவிப்பதாகவும் இவ்வறிப்பு விளங்குகின்றது.

இவ்வகையில் தமிழின் செம்மொழித்தகுதி என்பது உலக அளவில் நிலைப் படுத்தப் பெற்று அதன் வழியாக உலக அளவில் நாட்டளவில் தமிழ் வளர வழி வகை செய்யப் பெற்றுள்ளது. தமிழ் செம்மொழியாவதற்கு தமிழ் இயக்கங்களும் அரசியல் இயக்கங்களும் முன்நின்றன என்ற போதிலும் அதற்கு மிக்க காலந் தள்ளியே இந்த நிலைப்பாடு தரப்பெற்றுள்ளது என்பது உணரத்தக்கது. தமிழச் செம்மொழியானதன் காரணமாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு பொருளாதார வளமை ஆகியனவற்றைப் பயன்படுத்தி நேரிய நிலையில் செம்மொழித்தமிழைக் காத்துச் செல்லவேண்டியது உலகத்தமிழர்கள் அனைவரின் கடமையாகும்.

Series Navigation