தமிழவன் கவிதைகள்-எட்டு

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

தமிழவன்


எழுகிறது பிரளயம்.

உயிரின் வாயிலிருந்து
நிற்காத விசும்பலாயும்.

அறையைச் சாத்துகிறது காற்று.

மழைவடிந்த மறுநாள்
பள்ளிக்கு அழைக்க வரும் சிறுமி
வரவில்லை.
காத்திருந்த ஞாபகம் இருட்டும்வரை.

அந்நிய நகரம்
சுழற்றியடிக்கும் தகரஒலிக் காற்று
இரவெல்லாம்,
காலைக்காய் ஏங்கிய மனம்.

விடிவதற்கும் முன்னிருட்டில்
ஓசையின்றிப் புறப்படுகிறது தினமும்
நிழல்

உலக மகாயுத்தத்தில் சீரழிந்தும்
இந்த நகரம்
என்னை யாரெனத் தெரியாமல் இன்னும்.

மஞ்சளாய் பூக்கும் சுரபுன்னை
அதன்கொத்தில் மறைந்திருக்கும் சிறுகுருவி

குறுக்காய் புல்லில்
ஓடுகிறது சிறுஅணிலும்

தூக்கம் வரும்வரை
அந்நிய நகரம் கிடந்து ஒலிக்கிறது

மறுநாளில் சலனமின்றி
பதிகின்றன
அவசரமாய்சில பாதங்கள்.

மரங்களுக்கிடையில் பால்யத்தில்
மறைவதற்காய்
சதாதேடி ஓடிய குழந்தையின்
உறைந்த கண்கள்

யாரோ அழும் மெலிதானகுரல்
நகரில்.

நாளையும்
ஒரு மழை பெய்யும்
மண்ணில்.
—-
carlossa253@hotmail.com

Series Navigation

தமிழவன்

தமிழவன்