தமிழர் திருமகன் இராமன்

This entry is part [part not set] of 32 in the series 20071004_Issue

ஜடாயுஇராமசேது பற்றிய விவாதத்தின் மத்தியில், இராமகாதையையும், இராமனையும் பற்றிய தமிழக முதல்வரது இழிமொழிகளுக்கு நாடு தழுவிய எதிர்ப்பு அலை எழுந்துள்ளது. தமிழகத்திலும் மிக உறுதியான எதிர்ப்பு பதிவு செய்யப் பட்டிருக்கின்றது. பல ஆங்கில, தமிழ் இதழ்களும், ஊடகங்களும் முதல்வரின் பேச்சை வன்மையாகக் கண்டித்திருக்கின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி முடித்துள்ளது. ஊட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தலைமையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் “புண்படுத்தாதே புண்படுத்தாதே, இந்துக்களின் உணர்வைப் புண்படுத்தாதே”, “மமதை பிடித்த கருணாநிதியே, மன்னிப்புக் கேள், மன்னிப்புக் கேள்” என்ற கோஷங்கள் எழுந்து விண்ணை முட்டின. பாஜக, மதிமுக, தேமுதிக, சரத்குமாருடைய புதிய கட்சி இவையும் முதல்வரின் அருவருக்கத் தக்க பேச்சைக் கண்டிருத்திருக்கின்றன. ஆளும் கூட்டணியில் உள்ள, இந்து உணர்வுகளை ஓரளவு மதிப்பவை என்று எண்ணப் பட்ட பாமக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள், கூட்டணி (அ)தர்மம் கருதியோ என்னவோ, முதல்வரின் இந்த அப்பட்டமான இந்து விரோதப் போக்கைக் கண்டிக்காமல் இருந்து பெரும் தவறிழைக்கின்றன.

இந்த சூழலில், அறிவுலகத்தால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு விட்ட, வெறுப்பியலில் திளைத்த பழைய ஆரிய-திராவிட இனவாதத்தை உயிர்ப்பித்து, இந்தப் பிரசினையை விமரிசிக்கும் விஷமத் தனமான போக்கும் ஊடாகத் தென்படுகிறது. “ராமர் வழிபாடு என்பது தமிழ் நாட்டில் இல்லாத ஒன்று. தெற்கே ராமரை ஆரிய மன்னர் என்று தான் தமிழர்கள் பார்த்து வந்திருக்கிறார்கள்” என்ற அப்பட்டமான பொய்யை என்.டி.டி.வி, சி.என்.என் ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் சென்னை நிருபர்கள் அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒரு என்.டி.டி.வி கலந்துரையாடலில் இந்த அபாண்டத்தைக் கேட்கச் சகியாத பேராசிரியர் நந்திதா கிருஷ்ணா நடுவில் பாய்ந்து, “என்ன கதைக்கிறார் உங்க நிருபர், தமிழ் நாட்டில் ஊருக்கு ஊர் ராமர், அனுமார் கோயில்கள் இருக்கிறதே கண்ணுக்குத் தெரியவில்லையா?” என்று வெடிக்கும் நிலைமை ஏற்பட்டது.

எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (வன்னிய சத்திரியர் என்று தமிழக மக்களில் பெரும்பாலர் கருதும்) இராமர் “பிராமணர் அல்லாதவர்களான, தமிழர்களின் பார்வையில்” மிக எதிர்மறையாகவே எப்போதும் கருதப் படுவதாக, பழைய திராவிட இயக்க அபத்தங்களை ஆங்கில இதழ்களில் மறுசுழற்சி செய்யத் தொடங்கியிருக்கிறார் [1]. இவற்றுக்குச் சிகரம் வைத்தாற்போல இந்த வார ஜூனியர் விகடனில் திருமாவளவன் ‘சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இராவணனை’ போற்றுவதாகத் தெரிவிக்கிறார்.

கவிச்சக்கரவர்த்தி கம்பன் படைத்த தமிழின் ஒப்புயர்வற்ற இலக்கியமான கம்பராமாயணம் ஒன்று போதாதா, இராமன் தமிழர் போற்றும் தெய்வம் என்று நிறுவுவதற்கு? தமிழர் சமயத்தின் இரு கண்கள் சைவமும், வைணவமும். அதில் ஒன்றான வைணவத்தின் பன்னிரு ஆழ்வார்களும் தெய்வமாக இராமனைப் போற்றுகிறார்களே, அது போதாதா? ஆனால் விதி வலியது. ஈவேரா காலத்திலிருந்து, அப்பேர்ப்பட்ட கம்பனுக்கே ஆரியஅடிவருடி, மனுவாதி போன்ற முத்திரைகள் இந்த அறிவீனர்களால் குத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆழ்வார்கள் எம்மாத்திரம்?

ஆதாரமில்லாத இத்தகைய உளறல்கள் ஊடகங்களின் மூலம் தொடர்ந்து பரப்பப் படுவதால், உண்மையை உரக்க உரைப்பது மிக அவசியமாகிறது, ‘’புலிநகக் கொன்றை’ ஆசிரியரும், மார்க்சிய சார்புடையவராகக் கருதப் படும் அறிஞருமான பி.ஏ.கிருஷ்ணன் ‘பயனியர்’ இதழில் எழுதியுள்ள “Karunanidhi wrong, Ram an ancient Tamil icon” என்ற அருமையான ஆங்கிலக் கட்டுரையில் [2] சங்க இலக்கியம் தொட்டு பண்டைத் தமிழரின் போற்றுதலுக்குரிய தெய்வமாக இராமன் இருந்து வந்ததற்கான ஆதாரங்களை அளிக்கிறார். அரவிந்தன் நீலகண்டன் எழுதியுள்ள “சிலப்பதிகாரம் தெரியாத கருணாநிதி” என்ற பதிவில் [3] “கடுந்தெறல் இராமன்”, “வெல்போர் இராமன்” என்று இராமன் சங்கப் பாடல்களில் போற்றப் படுவதையும், சமண முனிவரான இளங்கோவடிகள் தனது காப்பியத்தில் திருமாலின் அவதாரமாக இராமனைப் பாடுவதையும் மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்.

சங்ககால பாமர மக்களின் வழக்கிலே கூட இராமாயணம் என்ற இதிகாசம் போற்றுதலுக்குரிய காவியமாக மட்டுமன்றி, உவமைகளைச் சுட்டும்போது கூட பண்டு நிகழ்ந்த சான்றுகளாய்க் கையாளும் வண்ணம் அமைந்திருப்பதை இந்த இரு கட்டுரைகளும் குறிப்பிடுகின்றன. வேறு சிலவற்றைப் பார்ப்போம்.

மணிமேகலையில் இராமாயணம்:

கம்பராமாயணத்திற்கு 6-7 நூற்றாண்டுகள் முற்பட்ட பௌத்த காவியமான மணிமேகலையில் ராமாயணச் செய்திகள் சான்றுகளாகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.

‘நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்

(உலக அறவி புக்க காதை, 10-20)

காயசண்டிகை கூறினாள் – “நெடியோனாகிய திருமால் இராமனாக மண்ணில் அவதாரம் புரிந்து, அவன் அடங்காத பெரிய கடலை அடைத்த போது, குரங்குகள் பெயர்த்துக் கொண்டு வந்து எறிந்த பெரிய பெரிய மலைகள் எல்லாம் கடலின் வயிற்றில் சென்று மறைந்தது போல, இந்த அடங்காப் பசியை நிரப்ப இடும் மலை மலையான உணவு எல்லாம் என் வயிற்றின் ஆழத்தில் சென்று மறைந்து விடுகிறது”.

இந்த வரிகளில் பல செய்திகள் அடங்கியுள்ளன – ராமன் திருமாலின் அவதாரம். அவனது ஆணையில் வானரர்கள் கடலை அடைத்து அணை கட்டியது. மேலும், இந்த வரலாறு உவமையாகக் கூறப் படும் அளவுக்கு பிரசித்தி பெற்றிருந்தது.

இதே காப்பியத்தில் பிறிதோரிடத்தில், வாத விவாதத்தில், “ராமன் வென்றால் என்றால் மாண்பில்லாத ராவணன் தோற்றான் என்று தானே அர்த்தம்?” என்று அடிப்படையான தர்க்கமாகவே இராமகாதைச் சான்று வைக்கப்படுகிறது, அதுவும் ஒரு புத்தமதம் சார்ந்த புலவரால் என்றால் அது பண்டைத் தமிழகத்தில் எவ்வளவு அறியப் பட்ட விஷயமாக இருக்க வேண்டும்!

“மீட்சி என்பது “இராமன் வென்றான்” என
மாட்சி இல் இராவணன் தோற்றமை மதித்தல்
உள்ள நெறி என்பது “நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்” எனக் கூறல்”

(சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை, 50-60)

இந்த வரிகளில் “மாட்சி இல் இராவணன்” என்று இராவணன் உரைக்கப் படுவதையும் காண்க.

சைவத் திருமுறைகளில் இராமாயணம்:

சைவம் தழைக்கப் பாடிய சமயக் குரவர்களது பாடல்களிலும் இராமாயணம் இருக்கிறது.

திருநாவுக்கரசர் இராமன் கட்டிய சேதுபந்தனத்தைக் குறிப்பிடும் பாடல் –

“செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ்
சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப்
பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற
போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ”

(திருநாவுக்கரசர் தேவாரம், திருவலம்புறப்பதிகம்)

திருஇராமேச்சுரம் என்று வழங்கும் ராமேஸ்வரம் திருத்தலத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பாடிய பதிகங்களில் சில பாடல்கள் –

“பலவுநாள் தீமை செய்து பார்தன் மேல் குழுமி வந்து
கொலைவிலார் கொடியராய அரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தலையினால் வணங்குவார்கள் தாழ்வராம் தவம் அதாமே

[சிலையினான் – வில்லை உடைய இராமன்]

வன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்
புன்கண்ணர் ஆகிநின்று போர்கள் செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே”

(திருநாவுக்கரசர் தேவாரம், திருவிராமேச்சுரப் பதிகம்)

தேவியை வவ்விய தென்னிலங்கை யரையன் திறல் வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச் சுரத்தாரை

[தேவியை வவ்விய – சீதையைக் கவர்ந்து சென்ற]

(திருஞானசம்பந்தர் தேவாரம், 3ம் திருமுறை, 101-10)

இந்த அனைத்துப் பாடல்களும், தருமத்தின் நாயகனான இராமனைத் திருமாலின் அவதாரமாகவே போற்றுகின்றன. சிவபக்தன் ஆயினும் அதர்ம வழியில் சென்ற இராவணனையும், அவன் கூட்டத்தாரையும் கொடிய அரக்கர் என்றே பல்வேறு அடைமொழிகளுடன் குறிப்பிடுகின்றன.

இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில், சிவபிரான் தம் கால் விரலால் அதை அழுத்தியதைக் கூறுகையில்,

“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே”

(திருஞானசம்பந்தர் தேவாரம், திருமறைக்காட்டுப் பதிகம்)

என்றே சம்பந்தர் பாடுவார்.

மேலும், இடர்கள் களையப் பாடிய கோளறு பதிகத்தில் ‘ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன்றனோடும் இடரான வந்து நலியா’ என்கையில் இராவணனை தீய சக்தியின் குறியீடாகவும், இடராகவும் உருவகித்து, அத்தகைய தீமைகளும் அணுகாதிருக்கும் என்று சம்பந்தர் உரைக்கிறார்.

சைவத் திருமுறைகள் இப்படி இருக்கையில், தங்களை சைவர்கள் என்று அழைத்துக் கொள்ளும் சிலர், நாத்திகவாத, தமிழ்ப் பண்பாட்டையே இழித்துரைக்கின்ற ஈவேராத் தனமான திராவிட சித்தரிப்புக்களின் வழியே இராமாயணத்தை நோக்க முற்படுவதை காலத்தின் கோலம் என்றும் நகைமுரண் என்றும் தான் கூறவேண்டும்.

திருப்புகழில் ராமாயணம்:

முருக பக்தி மரபில் முதன்மை பெறும் திருப்புகழ் உள்ளிட்ட அருணகிரிநாதரின் எல்லா நூல்களிலும் இராமபிரானைப் பற்றி நூற்றுக் கணக்கான குறிப்புகள் உள்ளன. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது பல இராமாயணத் தொடர் சொற்பொழிவுகளில் இவற்றை எடுத்துக் காட்டியிருக்கின்றார்.

கம்பனும், வால்மீகியும், ஏனையோரும் குறிப்பிடாதவற்றையும் அருணகிரியார் தமது பாடல்களில் சொல்லியுள்ளார். உதாரணமாக, கோசலை ராமனைக் கொஞ்சும் அழகு –

“±ó¨¾ ÅÕ¸ ÃÌ¿¡ ¸ÅÕ¸
¨Áó¾ ÅÕ¸ Á¸§É ¢ɢÅÕ¸
±ý¸ñ ÅÕ¸ ±É¾¡ Õ¢÷ÅÕ¸ …… «À¢Ã¡Á

þíÌ ÅÕ¸ «Ã§º ÅÕ¸Ó¨Ä
Ôñ¸ ÅÕ¸ ÁÄ÷Ý Ê¼ÅÕ¸
±ýÚ À¡¢Å¢ ¦É¡Î§¸¡ º¨ÄÒ¸Ä …… ÅÕÁ¡Âý”

(“தொந்தி சரிய” என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

இதற்கு வாரியார் சுவாமிகள் விளக்கம் கூறுகையில் “குடும்பத்தை வாழ்விப்பவன் மகன். தன் சுற்றம், குலம், நாடு எல்லாவற்றையும் வாழ்விப்பன் மைந்தன், அதனால் இந்த இரண்டு பெயர்களையுமே கூறி கோசலை இராமரை அழைக்கிறாள்” என்று அழகாகக் குறிப்பிடுவார்.

இன்னொரு பாடலில், சானகியை அபகரித்துச் சென்ற இராவணனை “திருட்டு ராக்கதன்” என்றே குறிப்பிடுகிறார்.

“ºÁò¾¢ É¡üÒ¸ú ºÉ¸¢¨Â ¿Ä¢×¦ºö
¾¢ÕðΠá츾 Û¼ÄРн¢¦ºöÐ
ºÂò¾ §Â¡ò¾¢Â¢ø ÅÕÀÅ É¡¢¾¢Õ …… ÁÕÁ¸ô À¡¢§Å¡§É”

(‘பழிப்பர் வாழ்த்துவர்’ எனத் தொடங்கும் மதுரைத் திருப்புகழ்)

இராமபக்திக்கு உரமூட்டிய தமிழகம்:

“வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்” என்று புகழ்பெற்ற நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ? என்று இராமபிரானுக்கு வைணவ மரபில் மிக உயர்ந்த இடத்தை அளித்திருக்கின்றார்.

கண்ணனைக் குழந்தையாக வரித்து வழிபடும் மரபு பிரசித்தமானது. இராமனைக் குழந்தையாகப் பாவித்துத் தாலாட்டுப் பாடிய முதல் பக்தர் குலசேகராழ்வார் தான்.

“மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!”

என்று தொடங்கி ராமாயணம் முழுவதையும் சொல்லித் தாலாட்டுகிறார் ஆழ்வார். இதன் நீட்சியாகவே நந்தலாலா போன்று “ராம லாலா” என்று குழந்தை ராமனின் உருவமும், வழிபாடும் உருவாயிற்று. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் இஷ்டதெய்வமாகக் குழந்தை ராமனை ஆராதித்திருக்கிறார். அயோத்தி ராமஜன்மஸ்தானம் கோயிலில் இருப்பதும் இந்தக் குழந்தைத் திருவுருவம் தான்.

தென் தமிழ் நாட்டிலிருந்து காசிக்குச் சென்று அங்கே சைவ மடம் அமைத்த குமரகுருபரர் கம்பனின் ராமாயணத்தை அங்கே பிரசாரம் செய்ததாகவும், துளசிதாசர் அதைக் கேள்வியுற்றதனாலேயே தமது ராமசரித்மானஸ் என்ற புகழ்பெற்ற ஹிந்தி ராமாயண நூலில் கம்பனின் ராமகாதைப் படி சில இடங்களை அமைத்திருப்பதாகவும் ஒரு வழக்கு உள்ளதாக காசி மடத்துடன் தொடர்புடைய நண்பர் ஒருவர் தெரிவிக்கிறார்.

இன்று பாரதம் முழுவதும் வழங்கும் எல்லா ராமாயணக் கதையாடல்களிலும் சிறப்பிடம் பெறும் ‘அணில் இராமருக்கு பாலம் கட்ட உதவிய” பிரசங்கம், தமிழகத்தில் உயிர்த்ததே ஆகும் என்றும் இது பற்றிய முதல் இலக்கியக் குறிப்பு கீழ்க்கண்ட திவ்வியப் பிரபந்த பாசுரம் தான் என்றும் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய ஒரு ஆங்கிலப் பதிவு [4] குறிப்பிடுகிறது –

“குரங்குகள் மலையைத் தூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டோடி
தரங்க நீரடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்”

(தொண்டரடிப் பொடியாழ்வார், திருமாலை 27)

ராமனுடைய முதன்மையான பெயராகிய புருஷோத்தமன் (புருஷ+உத்தமன்) என்பதன் தமிழ் வடிவமே பெருமாள் (பெரும்+ஆள்). வைணவர்கள் அனைவரும் கடவுளைக் குறிக்கையில் சொல்லும் முதன்மையான திருநாமம் ‘பெருமாள்’ என்பது தான்!

தென் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக-ஆன்மிக விடுதலைக் குரலாக எழுந்த அவதார புருஷர் அய்யா வைகுண்டர் இராமாயண வாசிப்பை தம்முடைய பக்தர்களுக்கு கட்டாயமாக்கினார். அதற்காகவே அருள் நூலில் இராம சரிதை இடம் பெற செய்து இரண்டாம் நாள் திருஏடு வாசிப்பு இராவண வதமாக அமைத்தார். கலிகால சாதியம், வெள்ளையர் காலனியாதிக்கம் மற்றும் மதமாற்ற கொடுமைகளாக உருவாகி வந்திருக்கும் இராவணன் என்ற தீய சக்தி அய்யாவின் அன்பு வழி இயக்கத்தால் அழிக்கப்படும் என்பதும் அதற்காக அனுமனைப் போன்ற தொண்டர்கள் தோன்றி தெய்வீகப் பணி செய்வார்கள் என்பதும் இன்றுவரை அய்யா வழி பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இப்படி இராமகாதை மற்றும் இராமபக்தியின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் தமிழகம் பெரும் பங்கு ஆற்றி வந்திருக்கிறது.

கலைகள் போற்றும் காகுத்தன்:

10-ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த இராமன், இலட்சுமணன், சீதை, அனுமன் ஆகிய மூர்த்திகளின் அழகு கொஞ்சும் செப்புத் திருமேனிகள் திருவாரூருக்கு அருகில் உள்ள பருத்தியூர் என்னும் ஊரில் கண்டெடுக்கப் பட்டவை.
ஒய்யாரமாக வில்லைப் பிடித்திருக்கும் ராமனின் கம்பீர வடிவமானது நடராஜ வடிவம் புகழ்பெறத் தொடங்கியிருந்த காலம் முதலே தமிழக சிற்பிகளின் உள்ளத்தை ஆட்கொண்டது இவை என்று உணர்த்துகின்றன.

தஞ்சைத் தரணியில் பிறந்த சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர், இன்றளவும் பல கச்சேரி மேடைகளிலும் இடம் பெறும் இராமநாடகக் கீர்த்தனைகளை இயற்றிய அருணாசலக் கவிராயர் ஆகியோர் தென்னகத்தின் தலைசிறந்த ராமபக்தர்களில் அடங்குவர்.

தெருக்கூத்து, பாவைக்கூத்து, வில்லுப் பாட்டு முதலிய கலைவடிவங்கள் உருவாகும்போது அவற்றின் முதல் கூறுபொருளாக அமைந்தவை ராமாயண, மகாபாரத கதைகள் தான்.

எனவே, செவ்வியல் இலக்கியம் மட்டுமின்றி, சிற்பம், நடனம், இசை, நாடகம், நாட்டுப் புறக் கலைகள் ஆகிய பல்வேறு தமிழகக் கலைகளிலும் இராமனும், சீதையும் அவர்கள் சரிதமும் வெகுகாலம் தொட்டு நீக்கமற நிறைந்திருக்கின்றன.

தமிழர் திருமகன் இராமன்:

திராவிட இயக்கம் சார்ந்த சில தமிழ் ஆர்வலர்களாலும் மதிக்கப் படும் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் ராம காதையை ஆரிய-திராவிட நோக்கில் பார்த்தது என்பது ஒரு குறுகிய காலத்திற்கு தமிழ்ச் சமுதாயத்தில் உண்டான, துரதிர்ஷ்டவசமான போக்கு என்றும் இது அந்த மாபெரும் இதிகாசத்தின் அடிப்படைகள் பற்றிய தவறான புரிதல் ஆகும் என்றும் குறிப்பிடுகிறார். [5]

“..I find it very sad that anyone would want to burn Kamban’s Ramayana. Kamban was, simply, the greatest poet India has produced and one greatest poets of the world. He is demonstrably greater than Kalidasa. Unfortunately, for a short period it became fashionable to read his epic in cultural terms — Aryan vs. Dravidian. This, in my view, is a misreading of the fundamental premise of the epic: the opposition between two views of life, one epitomized by Rama, the other by Ravana. What makes Kamban so great is that he presents both views in extremely convincing and beautiful terms — Ravana is the greatest of all kings and symbolizes this world, ama symbolizes another dimension. And don’t forget, Ravana is a Brahmin.”

திராவிட இயக்கத்தினர் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்ற தொனியில் வெறியூட்டி வந்தபோது, தென் தமிழகத்தில் அதை முன்னின்று எதிர்த்தவர் இஸ்லாமியரான சதாவதானி செய்குத் தம்பி பாவலர். கம்பர் அடிப்பொடி சா.கணேசன் இராமாயணம் என்ற மாபெரும் பொக்கிஷத்தைக் காக்க கம்பன் கழகம் தொடங்கியதன் பின் வந்த காலகட்டங்களில் இராமகாதையில் தோய்ந்து அதைப் பற்றியே தன் வாழ்நாளின் இறுதிவரை பேசியும் எழுதியும் வந்தவர் நீதிபதி மு.மு.இஸ்மாயில்.

எனவே சங்ககாலத் தமிழர் தொடங்கி, சைவ, வைணவ, சமண, பௌத்த தமிழர் வரை அனைவரும் இராமனைத் “தலைவன், திருமகன், திருமால், பெருமாள், தெய்வம்” என்றே கூறி வந்திருக்கின்றனர். இராவணனை “அரக்கன், திருட்டு ராக்கதன்” என்று அழைத்திருக்கின்றனரே அன்றி திராவிட மன்னன் என்றோ, வீரன் என்றோ, மதிப்பிற்குரியவன் என்றோ கூட எந்த மானமுள்ள தமிழனும் குறிப்பிடவில்லை.

‘செக்குலர்’ சங்கப்புலவனும், தமிழின் அனைத்து சமயப் பெருந்தகைகளும் ஏற்றுக் கொள்ளாத ஓர் அரக்கனை இங்கே தமிழ்ப் பாதுகாவலர்களாகக் கூறிக் கொள்ளும் பொய்ப்பிண்டங்கள் தங்கள் பிரதிநிதியாகச் சித்தரிப்பதும், இராமபிரானை இழித்துரைப்பதும் காலத்தின் கொடுமையன்றி வேறென்ன!

(பி.கு: இதில் கூறப்பட்டுள்ள சில தகவல்களை அளித்த திரு, ஹரி கிருஷ்ணன் மற்றும் பெயர் குறிப்பிடப் பட விரும்பாத இன்னொரு தமிழறிஞர் இவர்களுக்கு எனது ஆழ்ந்த நன்றிகள்).

http://jataayu.blogspot.com/

சுட்டிகள்:

[1] http://timesofindia.indiatimes.com/Opinion/LEADER_ARTICLE_We_Do_Things_Differently/articleshow/2395923.cms
[2] http://www.dailypioneer.com/columnist1.asp?main_variable=Columnist&file_name=ANANTHA10%2Etxt&writer=ANANTHA&validit=yes
[3] http://arvindneela.blogspot.com/2007/09/blog-post.html
[4] http://arvindneela.blogspot.com/2007/09/romila-thapars-double-standards-and.html
[5] http://www.infitt.org/tscii/archives/msg00310.html


jataayu.b@gmail.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு