தமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். )

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

வருணன்


தமிழக முதலமைச்சரும் இலங்கைத் தமிழரும். ( இக்கட்டுரை அக்னிபுத்திரனுக்கு மறுப்பாக இருக்கலாம். )

திரு அக்னிபுத்திரன் அவர்கள் எழுதிய கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையைப் படிக்கும் அன்பர்களுக்கு அது தன் தலைவனுக்காக உணர்ச்சிவசப்பட்ட ஒரு தொண்டன் எழுதியதாகத்தான் தெரியுமே தவிர நடுநிலையான தமிழரான ஒருவர் எழுதியதாகத் தெரியாது. ஏனென்றால் அவர் திரு கருணாநிதி செய்த முயற்சிகளைப் பட்டியலிட்டு இருக்கிறாரே ஒழிய அந்த முயற்சிகளுக்கு கிடைத்த பலன்கள என்ன என்பது பற்றி ஒன்றும் இல்லை. இலங்கைத் தமிழரைப் பற்றி பேசும் யாராலும் திரு எம் ஜி ஆரை மறக்க முடியாது. 1971 இலிருந்து 5 முறை முதல்வர் வகித்த ஒருவர் ஏதோ நேற்றுதான் தமிழ் மக்கள் பிரச்சினை தொடங்கியது மாதிரி பாவ்லா காட்டி வருவதை வக்கலாத்து வாங்குகிறார். எனக்குத் தனிப்பட்ட முறையில் முதல்வர் மீது வருத்தமோ கோபமோ இல்லை. ஆனால் ஒரு முதல்வர் தனக்கு வயதான போதும் தனக்குக் கீழ் எத்தனையோ பேர் இருந்தும் தள்ளாத வயதில் நாட்டுக்கு உழைப்பதாக்கக் கூறிக்கொண்டு இவர் நடத்தும் நாடகத்தை இந்த உலகமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது

.திரு அக்னிபுத்திரன் கட்டுரையில் எங்கே தன் தலைவரின் ஆட்சி போய்விடுமோ என்ற கவலை தெரிகிறது. உண்மைதான். தன் நாட்டில் இருக்கும் தமிழருக்கே பாதுகாப்பு கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் ஒரு முதல்வரால் அடுத்த நாட்டு மக்கள் எப்படிப் போனால் என்ன என்று நினைப்பதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால் அந்த நாட்டு மக்களுக்காக தன் உயிரையே தருவேன் என்று கூறிவிட்டு தன் கையில் வைத்திருக்கும் சட்டம் ஒழுங்குக்காக உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறுகிறாரே. அதுதான் அவரது கதை வசனத்தின் உச்சக்கட்டம்.தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழை தனது வருமானம் ஈட்டித் தரும் (தொல்காப்பியப் பூங்கா போன்ற) தொழிலாளி யாக அல்லவா மாற்றி விட்டார்.

திரு அக்னிபுத்திரன் கட்டுரையில் தமிழக அரசியலைப்பற்றி மட்டுமே அதாவது வரப்போகிற பாராளுமன்ற தேர்தலை மையமாக வைத்து மட்டுமே திரு கருணாநிதி அவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறார் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார். நான் கேட்பதெல்லாம் ஒன்றுதான். இலங்கைத் தமிழர் பிரச்சினையை இவரால் தீர்த்து வைக்க முடியுமா? அல்லது முடியாதா ? அதைவிட்டுவிட்டு இவர் பட்டியலிடுவதை இவர் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அதான் தமிழறிந்த அனைவருக்கும் இந்த மெகா சீரியல் தெரியுமே. இவர் என்ன விளக்கத்தைக் கொடுத்துள்ளார். ஆட்சி போனால் இலங்கை பிரச்சினை தீர்ந்து விடுமா என்று. தீராது என்றே வைத்துக்கொள்வோம். அப்புறம் இந்த ஆட்சியை வைத்துக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறார். 1 ரூபாய்க்கு அரிசி கொடுத்து கடத்தலை ஊக்கப்படுத்தினார், இலவசமாக டிவி கொடுத்து எல்லாரையும் சோம்பேறி ஆக்கினார். இதனால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல குடும்பத்திலேயே பூகம்பத்தை உண்டு பண்ணிவிட்டார். மக்களுக்கு உபயோகமான எந்த ஒரு நல்ல திட்டத்தையும் அறிவிக்காமல் ஓட்டு வாங்குவதையே மையமாக வைத்து அரசியல் நடத்துகிறார். திருமங்கலம் இடைத்தேர்தலைப் பார்த்தோம். உள்ளாட்சித் தேர்தலைப் பார்த்தோம். இப்படியெல்லாம் ஆட்சிக்கு வருவது மக்களுக்கு நல்லது செய்யவா? காங்கிரஸ் இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஜெயிக்க முடியாது என்று நினைக்கும் அளவுக்கு காங்கிரஸைத் தூக்கிப் பிடிக்கும் இவரிடம் தமிழ் மக்களின் நலனைப் பற்றி என்ன எதிர்பார்க்க முடியும் என்று நினைக்கிறீர்கள் திரு அக்னிபுத்திரன் அவர்களே. ஒரு தமிழனாக இருந்து உங்களிடம் ஒரு கட்டுரையை எதிர்பார்க்கிறேன். திமுக அனுதாபியாக உங்கள் கட்டுரையை எழுதாதீர்கள். நீங்கள் எழுதிய கட்டுரையில் ஜெயலலிதாவைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். தமிழர்கள் பிரச்சினையில் இந்த அம்மா எங்கிருந்து வந்தார். அவருக்கும் தமிழர் பிரச்சினைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏனென்றால் அவர் இதில் மாற்றி மாற்றி பல்டி அடித்துக் கருத்து எதுவும் கூறியதாகத் தெரியவில்லை. முதல்வரின் கடந்த கால பேச்சுகள் செயல்முறைகளெல்லாம் எடுத்துப் படித்துப் பாருங்கள். இலங்கைத் தமிழருக்காகப் போராடுவதாய்க் கூறிக்கொண்டு அரசியல் பிழைப்பு நடத்தும் நாலாந்தர அரசியல்வாதி ஆகிவிட்டாரே நம் முதல்வர் என்ற அளவில் எனக்கு வருத்தம் உண்டு. அவரது செய்கைகளும் பேச்சுகளும் சில சமயங்களில் குழந்தைத் தனமாக இருப்பதுபோலுள்ளது. 70 வயதைத் தாண்டிய முதியவர்களெல்லாம் கிட்டத்தட்ட குழந்தைகள் மாதிரிதானே. இப்போது ஆட்சி மாற்றம் தேவையில்லை. நல்ல முதலமைச்சர் தேவை. அதுவும் இளையராக நல்ல கொள்கை உள்ளம் கொண்டவராக இலங்கைத் தமிழருக்கு உதவி செய்பவராக வேண்டும். திமுகவில் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அதைவிட்டுவிட்டு அண்ணனும் தொலைய மாட்டான் திண்ணையும் காலியாகாது என்று கூறுவது ஒரு பழுத்த அரசியல்வாதி கூறும் கூற்று போலவா இருக்கிறது ?

இந்தக் கட்டுரையில் நான் அரசியல் பேசவில்லை. இன்றைய நிலையில் முதல்வர் எடுத்துக்கொண்ட எந்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. ஏனென்றால் வலிந்து கேட்கப்பட வில்லை.( மத்திய அமைச்சர்கள் பதவியைப் பெறுவதில் எடுத்துக்கொண்ட முயற்சியைப்போல்) ஆட்சியைத் தன் கையில் வைத்துக்கொண்டு போராடுகிறவனையும் தடுத்துக்கொண்டு மருத்துவமனையிலும் படுத்துக்கொண்டு இருக்கும் முதல்வரால் அவ்வளவுதான் முடியும் என்று எங்களுக்கும் தெரியும். அப்படிப்பட்ட முதல்வர் தமிழ்நாட்டிற்கு எதற்கு ? ஆட்சி வேண்டாம் என்று துறந்து இருந்தால் மக்கள் திமுகவைத்தூக்கி தங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடியிருப்பர். அதான் திருமங்கலம் பார்முலா இருக்கிறதே என்று மக்களை மடையர்களாக நினைத்து விட்டனர். வரும் தேர்தலில் மக்கள் மீண்டும் தங்களை மடையர்களாக நினைத்துக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ் ஈழ மக்களே எங்களை மன்னித்துவிடுங்கள்
எங்கள் அரசியல்வாதிகளுக்கு தங்கள் நாற்காலியைவிட பெரிதாக எதுவும் தெரிந்து விடப் போவதில்லை. அவர்களை நம்பி நீங்கள் ஏமாந்து போகாதீர்கள். தன் கையை தனக்கு உதவி. என்பதை மனதில் கொள்ளுங்கள். உங்கள் வீரத்தை நாங்கள் மதிக்கிறோம். நாங்களெல்லாம் அரசியல்வாதிகள் அல்லர். உண்மையான இதய துடிப்புடன் உங்களுக்காக கடவுளை வேண்டிக்கொள்கிறோம். வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் வெற்றி பெறும்போது இந்தத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களால் தான் ஈழம் கிடைத்தது என்று சொல்லுவார்கள். அவர்களை மன்னித்து விடுங்கள். அவர்களுக்கு நாற்காலியின் மீது ஆசை வந்ததால்தான் வெள்ளைக்காரனே 300 வருடங்கள் நம்மை அடிமையாக வைத்திருந்தான். அந்த அடிமைத் தளையிலிருந்து மீளத்தான் இவர்கள் நாற்காலிக்காக சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள். இன்றைய தேதியில் மக்களுக்கு உதவ எந்தத் தலைவரும் இல்லாத சூழலில்தான் இந்தியா இருக்கிறது. இந்தச் சூழலில் உங்களின் நிலை எங்களை நிலை குலைய வைக்கிறது. ஆனாலும் உங்கள் வீரத்திற்கும் துணிவிற்கும் இணையாக இந்த உலகத்தில் எவனும் இல்லை. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

அன்புடன்
வருணன்

Series Navigation

வருணன்

வருணன்