தப்பிக்க இயலாத பொறி (எனக்குப் பிடித்த கதைகள்- 38 -தி.ஜானகிராமனின் ‘கண்டாமணி ‘)

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

பாவண்ணன்


மூச்சுக்கு மூச்சு கிண்டல் பேச்சும் சிரிப்புமாக இருக்கும் நண்பரொருவர் இருந்தார். அருவி மாதிரி பொழிகிற அவருடைய கிண்டல் பேச்சைக் கேட்க ஆனந்தமாக இருக்கும். ஏதாவது ஒரு ஞாயிறு அன்று அவரைச் சந்தித்தால் பசியோ தாகமோ எதுவுமே தோன்றாது. அவர் பேச்சும் சிரிப்புமே அமுதமாக இருக்கும். அப்படிப்பட்ட நண்பர் திடுமென மெளனவிரதம் பூண்டவர் போல ஊமையாகி விட்டார். குடும்பத்தினரும் நண்பர்களும் எவ்வளவோ வேண்டிக் கேட்டுக் கொண்ட போதும் சிறிய கசப்பான புன்னகையோடு பேசமறுத்து விட்டார் அவர்.

காரணம் இதுதான். அலுவலகத்தில் அவரும் மற்றொரு சக அதிகாரியும் சிக்கமகளூருக்கு அலுவல் நிமித்தமாகக் காரில் சென்றார்கள். பின்னிருக்கையில் இடது பக்கம் நண்பரும் வலது பக்கம் அவருடைய சக அதிகாரியுமாக உட்கார்ந்து கொண்டார்கள். வழிநெடுகத் துாறல். இதமான காற்று. சாரல். பாட்டும் சிரிப்புமாகப் பயணம் தொடர்ந்திருக்கிறது. ஹாஸனைக் கடக்கும் போது வண்டியை நிறுத்திச் சாப்பிட்டிருக்கிறார்கள். புகைத்திருக்கிறார்கள். மறுபடியும் பயணத்தைத் தொடங்கியதும் நண்பர் ஏதோ நினைப்பில் பின்னிருக்கையின் வலது பக்கம் உட்கார்ந்து கொண்டார். ‘ஒரே பக்கம் பாத்து கழுத்து வலிக்குதுப்பா. கொஞ்ச நேரம் நீ அந்தப் பக்கம் உக்காரு ‘ என்று கூட வந்தவரை இடது பக்கம் உட்கார வைத்து விட்டார்.

மழை வலுக்கத் தொடங்கி விட்டது. நகரத்தைத் தாண்டி குறுகலான காட்டுப் பாதையில் வண்டி ஓடத் தொடங்கிய போது ஏதோ ஒரு திருப்பத்தில் வண்டி சரியான கோணத்தில் வளைய மறுத்து வழுக்கிச் சென்று அருகில் இருந்த மரத்தில் மோதி, தரையில் உருண்டு விட்டது. எல்லாம் ஒரே கணம். மரத்துடன் மோதிய இடது பக்கம் அப்பளமாக நசுங்க, அங்கே உட்கார்ந்திருந்த நண்பரின் சக அதிகாரி அதே நொடியில் மரணமடைந்து விட்டார். அதிர்ச்சியில் இருக்கையிலேயே மயக்கமுற்ற நண்பர் இரு நாட்களுக்குப் பிறகு விழித்தெழுந்து அதிகாரியைப் பற்றிக் கேட்டிருக்கிறார். நிரம்பத் தயக்கங்களுக்குப் பிறகு உண்மை சொல்லப்பட்டது. துடிதுடித்துப் போன நண்பர் அவர் மரணத்துக்குத் தானே காரணம் என்ற குற்ற உணர்வில் தவிக்கத் தொடங்கி விட்டார். எவ்வளவோ பேர்கள் எடுத்துச் சொன்ன சமாதானங்கள் எதுவுமே அவர் மனத்தை மாற்ற உதவவில்லை.

உடனடியாகத் தன்னிடமிருந்த காரை விற்று விட்டார். தெருவில் ஓடக் கூடிய கார்களைக் கண்டதும் நடுங்கத் தொடங்கினார். இப்படி நகருங்கள் அப்படி நகருங்கள் என்று சொல்லக் கூட அச்சம் கொள்ளத் தொடங்கினார். அந்த விபத்தை ஒரு விபத்து என்கிற அளவில் மட்டும் பார்க்க அவரால் இயலவில்லை. இருக்கையில் மாறி உட்காரச் சொல்லியிருக்காவிட்டால் அவர் பிழைத்திருப்பார் என்றும் தன்னைத் தேடி வந்த சாவு அவரைக் கொண்டு போய் விட்டது என்றும் புலம்பத் தொடங்கினார். புலம்பல் குற்ற உணர்வு கொள்வதில் முடிந்தது. காரைக் கூட கண்டதும் வெறுக்கிற அளவுக்கு அவர் குற்ற உணர்வு வளர்ந்தது. கார் ஒரு மரண துாதுவனைப் போலவும் தன் பேச்சு ஒருவரை அத்துாதுவனை நோக்கிச் செலுத்தி விடும் என்றும் நம்பத் தொடங்கியதால் மெளனத்தைக் கடைபிடிக்கத் தொடங்கி விட்டார். சதா காலமும் மரணம் தன்னைச் சூழந்து நிற்பதைப் போலவும் தன்னைத் தாவிப் பிடிப்பதில் விருப்பமில்லாத அவன் தன் சொல்லைக் காது கொடுத்துக் கேட்கிறவரைத் தாவிப் பிடிக்கத் தயாராக இருப்பதைப் போலவும் எண்ணங்களை வளர்த்துக் கொண்டார். அவர் எண்ணங்களே அவரை முடக்கி விட்டன. கார் சத்தத்தைக் கேட்டால் கூட நடுங்கி ஒடுங்கும் அளவுக்குச் சென்று விட்டது அவர் மிரட்சி.

அவர் மிரட்சியைப் பார்க்க நேரும் போதும் கேட்க நேரும் போதும் மனத்தில் மிதக்கும் சிறுகதை தி.ஜானகிராமனுடைய ‘கண்டாமணி ‘. அவருடைய சிறுகதைகளில் மிகச் சிறப்பான இடத்தைப் பெறக் கூடிய கதை. மார்க்கம் என்பவர் மனைவியின் துணையுடன் ஒரு சிறிய மெஸ் நடத்துகிறார். ஒரு நாள் சமையல் வேலையெல்லாம் முடித்துக் கொண்டு குளித்து பட்டை பட்டையாய் விபூதியைப் பூசிக் கொள்கிறார். பூசையையும் முடிக்கிறார். வாசலில் செருப்பைக் கழற்றி விட்டுத் தயக்கத்துடன் மேலேறி வரும் ஒருவர் சாப்பாடு கேட்கிறார். உள்ளூர் பள்ளிக் கூடத்தில் விஞ்ஞான வாத்தியாருக்கு உதவியாளராக இருப்பவர் அவர். எப்பவாவது வந்து சாப்பிடுபவர் அவர். மற்றவர்களிடம் எல்லாம் கஞ்சத்தனமுடன் நடந்து கொள்ளும் மார்க்கம் அவரிடம் தாராளமாக நடந்து கொள்கிறார். வந்தவர் நன்றாகச் சாப்பிட்டார். குழம்பு நன்றாக இருக்கிறதென்று மோர் சாதத்துக்கும் கொஞ்சம் கேட்டுச் சாப்பிட்டார். போட்டுவிட்டு உள்ளே சென்ற மார்க்கம் குழம்பைத் தற்செயலாகக் கிளறிக் கரண்டியைத் துாக்கிய போது ஏதோ நீளமாக வழுக்கி விழுவதைப் பார்த்து அதிர்ச்சியுறுகிறார். பாம்புக் குட்டி. மார்க்கத்தின் மனைவியும் அதை உறுதிப் படுத்துகிறார். அதற்குள் சாப்பிட்டை முடித்துக் கொண்ட கிழவர் கைகழுவக் கொண்டு ஏப்பம் விட்டபடி தெருவில் இறங்கி விடுகிறார்.

அச்சத்தில் தம்பதியினர் இருவரும் இறைவனுடைய படத்துக்கு முன் சென்று வணங்கி பஞ்ச லோகத்தில் கண்டாமணி வாங்கிக் கட்டுவதாகவும் சேதி பரவாமல் காப்பாற்ற வேண்டுமென்றும் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். அவசரம் அவசரமாகத் திரும்பிப் பாம்பை எடுத்துப் புதைத்து விட்டு, எல்லாக் குழம்பையும் பள்ளத்தில் ஊற்றி விட்டு, புதிதாகக் குழம்பு வைத்து வாடிக்கைக் காரர்களுக்குப் பரிமாறுகிறார்கள்.

மறுநாள் காலை அந்தக் கிழவர் இறந்து விடுகிறார். மாரடைப்பு என்று பேசிக் கொள்கிறார். பிரார்த்தித்துக் கொண்டபடியே சேதி பரவாததால் உடனே கோயிலுக்குக் கண்டாமணி வாங்கிக் கட்டுகிறார் மார்க்கம். காரணம் கேட்பவர்களிடம் ‘என்னமோ மனத்தில் தோணியது, சாமிக்குச் செய்தேன் ‘ என்று சொல்லி விடுகிறார். கட்டப்பட்ட மணியிலிருந்து முதல் பூசைமணி ஒலிக்கிறது. சுருள்சுருளான மணியோசை பாம்பையும் இறந்து போன மனிதரையும் நினைவுக்குக் கொண்டு வருகிறது. குற்ற உணர்வு வாட்டுகிறது. எந்தப் பாவத்திலிருந்து மீட்சி கிட்டும் என்கிற எண்ணத்தில் கண்டாமணி கட்டினாரோ, அந்தப் பாவத்தின் ஞாபகத்தையே மீண்டும் மீண்டும் துாண்டுகிறது மணியோசை. அவரால் நிம்மதியாக ஒரு மணிநேரம் கூட துாங்க இயலவில்லை. முள்ளாகத் தைக்கிறது குற்ற உணர்வு. அந்தக் கண்டாமணியைக் கழற்றி விட்டால் குற்ற உணர்விலிருந்து தப்பிக்க இயலும் என்று தோன்றுகிறது. ஆனால், அதற்குள் கண்டாமணியின் புகழ் பெருகி, அதன் தேவை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விடுகிறது.

மனத்தில் முகிழ்க்கும் எல்லா உணர்வுகளுமே ஒரு பொறி போலத்தான். ஒவ்வொரு உணர்வும் ஏதோ ஒரு விதத்தில் மனிதர்களைத் தளைப்படுத்துகிறது. ஆட்சி செய்கிறது. ஆக்கிரமிக்கிறது. சிற்சில சமயங்களில் துாக்கலான அந்த உணர்வே சம்பந்தப்பட்ட மனிதர்களின் விசேஷ அடையாளமாகவும் மாற வாய்ப்புண்டு. ஆனால் குற்ற உணர்வுக்கு ஆட்படும் மனிதர்களுக்கோ பெரும்பாலும் மீட்சி இருப்பதில்லை. ஒவ்வொரு கணத்தையும் நரகமாக்கி விடும்.

*

தமிழ் நாவல் உலகில் தலைசிறந்த படைப்புகளாக முன்வைக்க முற்றிலும் தகுதியான மோகமுள், அம்மா வந்தாள் ஆகிய நாவல்களை எழுதியவர் தி.ஜானகிராமன். நாவல்களைப் போலவே இவரது சிறுகதைகளும் தரமானவை. கதைகளில் கையாளப்படும் இவரது நடையழகும் மொழியழகும் மீண்டும் மீண்டும் படிக்கத் துாண்டுபவை. 1967 ஆம் ஆண்டில் மீனாட்சி புத்தக நிலையத்தின் வெளியீடாக வந்த ‘யாதும் ஊரே ‘ என்னும் சிறுகதைத் தொகுப்பில் ‘கண்டாமணி ‘ இடம்பெற்றுள்ளது.

Series Navigation

author

பாவண்ணன்

பாவண்ணன்

Similar Posts