தன்னம்பிக்கை

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

கவியன்பன் கலாம், அதிராம்பட்டினம்


வானம் ஏகும் பறவைகட்கு
வாய்த்தச் சிறகே நம்பிக்கை;
கானம் பாடும் குயிலுக்கு
குரலின் மீதே நம்பிக்கை;
மானம் உள்ள மனிதனுக்குள்
மறைந்து கிடப்பதும் நம்பிக்கை;
ஆனதினால் சோம்பல் விலக்கினால்
ஆற்றல் பெறும் வாழ்க்கை…!!!!!
எப்படி புரண்டாய்? எப்படி தவழ்ந்தாய்?
எப்படி நின்றாய்? எப்படி நடந்தாய்?
அப்படித் தானே முயல்வாய்
அனைத்திலுமாய்; ஆயுள் முழுவதுமாய்
உந்து சக்தி நிரம்பியுள்ள
உன்னிடம் உண்டு திறமைதான்;
நொந்து காலத்தை வீணாக்கினால்
நொடியில் பாயும் வறுமைதான்!!!!!
ஒவ்வொரு நொடியும் உன்றன்
உழைப்பால் மட்டும் நிரப்பு;
அவ்வளவும் திரும்பி கிட்டும்
அளவற்ற செல்வத்தின் பரப்பு
காலம் வருமென்று வீணாகக்
காத்திருக்க வேண்டா கனவுடனே
ஞாலத்தில் உயர்ந்தோர் யாவரும்
நாளும் உழைத்தே வென்றனரே

Series Navigation

தன்னம்பிக்கை

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

அனந்த்


வாழ்க்கை என்பது குன்றும்தான்
… வளைந்து நெளியும் பாதையும்தான்
ஆழ்ந்து பரந்த ஆழியும்தான்
… அச்சம் விளைக்கும் அடவியும்தான்
சூழும் தடையைத் தனித்தனியாய்ச்
…சுட்டிச் சொல்வார் வழிபிறர்;நாம்
தாழா தெதிலும் முன்னேறத்
…தன்னம் பிக்கை தான்துணையாம்

அறிவு மிகுந்து அமைந்தாலும்
..அனுபவ ஞானம் அடைந்தாலும்
செறிந்த நண்பர் சேர்ந்தாலும்
…தேயா துழைப்பைச் சொரிந்தாலும்
உறுதி நெஞ்சில் இருந்தாலும்
.. .உடையா இதயம் படைத்தாலும்
அறுதி யாய்த்தன் னம்பிக்கை
… ஆமே அவற்றிற்(கு) ஆதாரம்

அஞ்சனை புதல்வன் கதைகேட்டோம்
…அறிவில், அனுபவம் ஆற்றலிலே
நெஞ்சத்(து) உறுதி நட்பினிலே
… நிகரில் லாத மாருதிக்குக்
கொஞ்சமும் அவைதாம் பயனற்றுக்
…குலைந்து நின்ற போதினிலே
வஞ்சப் பகையை வெல்லஒரே
…வழிதன் னம்பிக் கைஉணர்ந்தான்!

உம்திறன் கொண்டிவ் வுலகையெலாம்
… ஊர்வலம் வருவீர் எனச்சொல்ல
எம்பிக் குதித்து மயில்மீதில்
… ஏறிப் பறந்தான் ஆறுமுகன்
தும்பிக் கையா னோதன்னுள்
… சுதியோ(டு) ஒலிக்கும் மந்திரமாம்
நம்பிக் கையின் துணைகொண்டு
… நடந்தான், அடைந்தான் நற்கனியை!

காந்தி, *கெல்லர், நெப்பொலியன்
…கவிஞர், அறிஞர் கலைஞர்பலர்
ஏந்தும் தீபம் தம்திறனில்,
… எடுத்த முடிவில், செயல்முறையில்
ஆழ்ந்த நம்பிக் கையன்றோ ?
…அதன்ஒளி குன்றின் அனைத்தும்இருள்!
வாழ்ந்து காட்டிய மாந்தர்இவர்
… வழியினும் சிறந்த(து) ஏதுமுண்டோ ?

இன்றைய பாட சாலைகளில்
… இருக்கும் மாணவர் முன்னேற
இன்றி யமையாச் சாதனமாய்
… இருப்பது அவர்தம் ஆற்றலிலே
குன்றாத் தன்னம் பிக்கையெனக்
…கூறுவர் அறிவுரைத் துறையோர்**;நாம்
நன்றாய் வளர்த்தால் நம்பிக்கை
…நாளைய வாழ்விற்(கு) அடிகோலும்.

‘நான் ‘எனும் உணர்வே நமதுசெயல்
… நடுவே இழையும் உயிர்அதனால்
தான்அதன் தரத்தினை மேல்உயர்த்தும்
… தன்னம் பிக்கை நம்வாழ்வை
மேன்மேல் உயர்த்தும் வெற்றிதரும்
… வெவ்வே றான குணநலன்கள்
தாமே நம்மை வந்தடையத்
… தன்னம் பிக்கை முதல்தேவை!

முடிக்கும் முன்னே நினைவுறுத்த
… முனைவேன்: தன்னம் பிக்கையுளோர்
துடிப்பாய்ச் செயலில் இறங்குவர்பின்
… தோல்வி வரினும் தளராமல்
அடுத்த வழியை ஆராய்ந்தே
… அமைப்பார் தம்வாழ்(வு) அனைத்திலுமோர்
பிடிப்பாய் விளங்கும் தன்மதிப்பைப்
… பிறருக் காகப் பலிதாரார்.
====
குறிப்பு:
*ஹெலென் கெல்லெர் என்னும் கண்ணிழந்தும்
நம்பிக்கை இழக்காத அரிய பெண்திலகம்
**மாணவர் அறிவுரைத் துறை: student counselling
service.
ananth@univmail.cis.mcmaster.ca

Prof. V.S. Ananthanarayanan
Biochemistry Department
McMaster University
Hamilton, ON L8n 3Z5
tel: 905-525-9140 x-22783
web: http://www.fhs.mcmaster.ca/biochem/Faculty.htm

Series Navigation