தனக்கான நிகழ் காலங்கள்

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

திலகபாமா சிவகாசி


இல்லந்தோறும் இருக்கின்றன

நிலைப்படிகளுக்கடுத்ததாய்

கூண்டுக் கிளிகள்

தரப்படுகின்ற நெல்மணிகளுக்காய்

கொத்தி வருகின்றன சீட்டுக்களை

யாருடைய எதிர்காலங்களையோ சொல்ல

சிறகடிக்க நினைத்த காலங்களிலும்

பழகிப் போயிருந்தனகூண்டுப் பாரங்களை

மறந்த வாறே தூக்கித் திரிய

கூண்டுகள் பெயர்த்து பறக்க நினைத்த போது

சிறகுகள் மறந்திருந்தன

காற்றில் விரிப்பதை

தொலைக்க வைக்கப் பட்டிருந்த இயல்புகளை

நினைக்கப் பழகாது

பறக்க மறந்து விட்ட சிறகுகளையும்

எதிர்த்தவர் பிய்த்து எடுத்துக் கொள்ள

வாகாய் இருந்த சிறகுகளையும்

தானே உதிர்த்து

உடல் தெரிய நின்று சிரிக்கின்றன

இனி எவரும் அதிகாரம் செலுத்த முடியாதென்

சிறகுகளின் மேலென்று

பறக்க கைதூக்கி

பழகிய பறவையொன்று

சிறகுகளால் காற்றையும் கிழித்து

வான வீதியில் வெள்ளி முளைக்க

விதை தூவ

அம்மணமாய் நிற்பதை எண்ணி

உடல் தெரிய நின்ற பறவைகள்

வெளிச்சம் கூச இருள் தேடி

மீண்டும் சிறைப்படும்

நான் தூவிய விதைகளில்

சிறைப்பட்ட பறவைகளுக்கான

சிறகுகளும் முளைக்கின்றன

நாளையாவது தனக்கான

எதிர்காலங்களை யல்ல

நிகழ்காலங்களை மட்டுமாவது

சொல்லும் சீட்டுக்களைத் தேடட்டும்

mathibama@yahoo.com

Series Navigation

திலகபாமா,சிவகாசி

திலகபாமா,சிவகாசி