This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue
கிரிதரன் ராஜகோபாலன்
——————————————–
வெக்கையான அந்த இரவில், தண்ணீர் வரண்டுபோன தொண்டையில் ஜில்லென பட்டபோதுதான் ஆரோக்கியராஜுக்கு வேலைக்குப் போன முதல் தினம் ஞாபகத்திற்கு வந்தது.
அந்த வெள்ளிக்கிழமை ஆலயத்திற்கு போகும்வரை அவனுக்கு சத்தமே பிடிக்காது.அல்போன்சுடன் ஒட்டிக்கொண்டு நிற்கும்போதுதான் முதல்தடவையாக ஸ்பீக்கரை தொட்டுப்பார்கிறான்-இன்றும் தன் வாழ்கையை அடக்கிவிடுவதுபோல அந்த கம்பிவளைக்குள் சத்தத்தின் பிரவாகம்.ஒரு கையில் ஸ்பீக்கர் மற்றொரு கையில் பையுடன் ஆலயத்தைவிட்டு போகும்போது இடரிய அதன் பெல்ட் இன்றுவரை இடருகிறது.ஒவ்வொரு முறையும் பெல்டின் போக்கில் காலை வளைத்து நடந்து அவன் நடையே பையின் பக்கம் கோணலாகியது.
அதைவிட பெரிய பிரச்சனை தண்ணீர் தாகம். கால் வளைந்து கொடுத்ததுபோல நா ஒத்துழைக்கவில்லை.பல கூஜாக்கள் தண்ணீர் குடித்தாலும் தொடர்ந்து பத்து மணிநேரம் பேசும்போதெல்லாம் நா வரண்டுபோகும்.இந்த இரண்டு பிரச்சனைகளையும் சமாளிக்கவே ஆரோக்கியராஜுக்கு வாழ்நாள் சரியாகயிருந்தது.தாகம் தன் கீழ்நிலமையிலிருந்து விலகி சுய பச்சாதாபத்தின் வழியே போராட்டமாக உருவானது.இரவு நேரங்களில் அது ராட்ஸச உருவமெடுக்கும்.தொண்டையின் வழியே வழியும் ஒவ்வொரு துளியும் உயிர் துடிப்பில் கலந்து ரெளதிர வடிவெடுத்து அடங்கும்.அடுத்தடுத்த துளிகள் சென்றடையுமிடங்கள் தெரிவதற்குள் தொண்டை வரண்டு போகும்.
ஊர் பெரிய கோயில் மணியடிக்கும்போது தன் பையுடன் வீட்டிலிருந்து கிளம்புவான்.கூட்ரோடு அருகில் உள்ள ஸ்டேஷனுக்கு வருவதற்குள் பலமுறை கீழே விழப்பார்த்து சமாளித்துக்கொண்டு நடப்பான்.23 வருடங்களாக நடக்கையில் சோர்வுடன் நிதானமும் சேர்ந்து கொண்டது.அவன் ஸ்பீக்கர் செட்டை பார்த்துக்கொண்டே ராஜா ஸ்கூலுக்கு செல்லும் குழந்தைகளை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை,கோயில் மணிகேட்டு நடந்து வருவதற்குள்,ஸ்கூல் மணி அடித்துவிடும்.
கூஜா கைதவறி விழுந்ததில் சத்தம்;திருவிவிலியம் புதிய ஏற்பாடு 6:19 கூறியபடி,ஸ்கூலுக்கு வெளியே தன்னை அப்புறப்படுத்திய போது ஸ்பீக்கர் பெல்ட் தறையில் சிறிது தூரம் தேய்ந்தது-அதே சத்தம்.பள்ளிக்கு அருகே அவன் நிற்பதில்லை.ராஜாவிற்கு இல்லாத திருவிவிலியம் ஸ்டேஷன் பக்கம் திரும்பியது.
“ழே..என்ன கொடச்சலங்க..?”
-சகோதரர்களே இரண்டு பாதைகள் இருக்கிறது.ஒன்றில் கல்,முள் காலை வைக்குமிடமெல்லாம் நெருப்பு,ஆலகால விஷம் கொண்ட பழங்கள்,பாம்பு நிறைந்த வழிகள்,குடிக்க தண்ணீரில்லாமல் உதடுகள் காயும்.தீயோன் அழைக்கும்போது இல்லாதது சொல்லி உணர்வுகள் மரக்கும்வரை இன்பம் கொடுத்து,தன்னை தொடும்போது நெருப்பு போல சுடுவான்.அப்போது மற்றொரு பாதைக்காக ஏங்குவீர்கள்.
வழக்கமாக ஸ்டேஷனில் அவனை யாரும் பொருட்படுத்துவதில்லை,அப்புறப்படுத்துவதுமில்லை. தண்ணீர் குடிக்க மட்டும் சற்று தூரம் நடக்கவேண்டும்.ஆலயத்தில் அவனுக்கு நீலநிறத்தில் சட்டையும் பாண்டும் கொடுத்திருந்தார்கள்.ஸ்டூலுக்கு சொல்லியிருந்தான் – மார்கெட் மணிகூண்டு அல்போன்சுக்கு வந்துவிட்டதால் இவனுக்கும் சீக்கிரம் எதிர்பார்கிறான்.வந்தால் கன்னியாகுமரி வண்டிவரை இருக்கலாம்.கூடுதல் இரண்டு மணிநேரம்.
சனியன் பிடித்த கரண்ட் இருந்தால் பிரச்சனையில்லை.கடைசியாக வீட்டில் விளக்கு எரிந்தது எலெக்ஷன் சமயத்தில்தான்.ஒருநாள் ஸ்பீக்கரை கொடுத்ததால் கிடைத்தது;விடிவதற்குள் பிடுங்கப்பட்டது.அன்றிறவு முழுவதும் தூங்காமல் விளக்கையே பார்த்துக்கொண்டிருந்தான்.
உருண்டோடிய கூஜா கிடைத்தால், பையனுக்கு தெளிந்த பிறகு, கத்தல் கேட்க வேண்டியிருக்காது.
பத்துநாள் ஸ்டேஷனில் பிரசாரம் செய்தால்,ஆலயத்திலே மணிஅடிக்கவோ,கூட்டத்தை ஒதுக்கும் வேலையோ கிடைக்கக்கூடும் என
வேலையில் சேர்ந்த அன்று கேள்விப்பட்டான்.ஸ்டூல் கேட்பதா , ஆலயத்தில் மணியடிக்கும் வேலை கேட்பதா என ஒவ்வொருமுறையும் ஆலயத்திற்கு போகும்போது அவனுக்கு குழப்பமாகயிருக்கும்.அந்த குழப்பத்திலேயே ஆலய கல் படிக்கெட்டுகளில் உட்கார்ந்தால் ஸ்டேஷன் விளக்கின் ஒளி கண்ணில் ஜொலிக்கும்.உதடுகள் உலர்ந்தாலும் , கண்கள் கசியும்.
-அன்றாடம் வாழ்வில் ஒவ்வொறு கனமும் பாவ மூட்டைகளை சுமந்து கொண்டிருக்கிறோம்.இதுதான் வாழ்வு என எண்ணுபவர்களே! தேவதூதன் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறான்.நண்பர்களே!,ஒவ்வொரு நாளும் வீட்டை சுத்தப்படுத்துகிறோம்,நம் எண்ணங்களில் சேர்ந்துள்ள குப்பைகளை,பாவங்களை தாங்கிக்கொள்ள ஒரு ஆத்மா புனித கரங்களை விரித்து அழைக்கின்றது.வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் வருகிறார்.புனித பீட்டரின் திருநன்னாளில் ஆலயத்திற்கு வாருங்கள்.என்றுமிலாத இன்ப வாழ்விற்கான கதவின் சாவி அவரிடம் உள்ளது.வரும் அனைவருக்கும் அந்த வாசல் திறந்தேயிருக்கும்.
கூஜாவை அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டான்.
ஒவ்வொரு நொடியும் தாகத்திற்காக காத்திருக்கும் வேளையில் எல்லா இரவுகளைப்போல அன்றும் மேல்கூரை வழியாக அற்புதவெள்ளம் தோன்றியது.அவனுக்கு பழக்கமான அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அது வழிந்தோடி நிரப்ப ஆரம்பித்தது.ஸ்பீக்கர் ,கூஜா எல்லாம் அந்த வெள்ளத்தில் ஜொலித்து மேலெழும்ப ஆரம்பித்தன.வீட்டைத் தாண்டி தளும்ப ஆரம்பித்த அந்த வெள்ளம் ராஜாஸ்கூல் வழியாக எல்லா பொருட்களையும் களீபரம் செய்துகொண்டு ஸ்டேஷன் வரை நிரம்பியது.
எல்லா இரவுகளை போலவே அன்றும் தண்ணீருக்கு அடியில் அந்த ஊரின் எல்லைகள் விரிவடைந்துகொண்டிருந்தது.
This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue
தொ. பரமசிவன்
தமிழ்நாடு நிலநடுக்கோட்டை ஒட்டிய வெப்பமண்டலப் பகுதியைச் சேர்ந்ததாகும். எனவே நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுகின்றன. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என இரண்டு பண்புகள் நீருக்கு உண்டு. எனவே ‘தமிழ் ‘ என்னும் மொழிப் பெயருக்கு விளக்கம் தரவந்தவர்கள், ‘இனிமையும், நீர்மையும் தமிழ் எனல் ஆகும் ‘ எனக் குறிப்பிட்டனர். குளிர்ச்சியினை உடையது என்பதனால் நீரைத் ‘தண்ணீர் ‘ என்றே தமிழர்கள் வழங்கி வருகின்றனர். நீரினால் உடலைத் தூய்மை செய்வதனை குளிர்த்தல் (உடலைக் குளிர்ச்சி செய்தல்) என்றும் குறித்தனர். இது வெப்ப மண்டலத்து மக்களின் நீர் பற்றிய வெளிப்பாடு ஆகும்.
நீர் என்பது வானத்திலிருந்து வருவது என்பதனால் அதனை ‘அமிழ்தம் ‘ என்றே வள்ளுவர் குறிப்பிடுவார். நீர்நிலைகளுக்குத் தமிழர்கள் வழங்கிவந்த பெயர்கள் பல. சுனை, கயம், பொய்கை, ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை, மழை நீரின் சிறிய தேக்கமாகும். குளி(ர்)ப்பதற்குப் பயன்படும் நீர்நிலை ‘குளம் ‘ என்பதாகவும் உண்பதற்குப் பயன்படும் நீர்நிலை ‘ஊருணி ‘ எனவும் ஏர்த் தொழிலுக்குப் பயன்படும் நீர்நிலை ‘ஏரி ‘ என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை ‘ஏந்தல் ‘ என்றும், கண்ணாறுகளை உடையது ‘கண்மாய் ‘ என்றும் தமிழர்கள் பெயரிட்டு அழைத்தனர்.
மலைக்காடுகளில் உள்ள சுனைகளில் ‘சூர்மகள் ‘ ‘அரமகள் ‘ என்றும் அணங்குகள் (மோகினிகள்) வாழ்கின்றனர் என்பது பழைய நம்பிக்கை. அதுபோலவே தெய்வங்களின் இடப்பெயர்ச்சிக்கும் நீர் ஓர் ஊடகமாக அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும். விழாக்காலங்களில் சாமியாடுபவர்களின் தலையில் ஏற்படும் நீர் கரகத்துக்குள் சாமியின் அருளாற்றல் கலந்திருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
நிலத்துக்கும் நீருக்கும் உள்ள உறவு பிரிக்கமுடியாது. நீரின் சுவை அது பிறக்கும் நிலத்தால் அமையும். நிலத்தால் திரிந்துபோன நீரின் சுவையை மேம்படுத்தத் தமிழர்கள் நெல்லியினை ஒரு மருந்தாகப் பயன்படுத்தினர். கிணற்று நீர் உவராக இருந்தால் அதனுள் நெல்லி மரத்தின் வேர்களைப் போட்டுவைப்பதும் ஊருணிக் கரைகளிலே நெல்லிமரங்களை நட்டுவைத்து அதற்கு ‘நெல்லிக்காய் ஊருணி என்று பெயரிடுவதும் தமிழ் மக்களின் வழக்கம். நெல்லிக்காய் தின்று தண்ணீர் குடித்தால் இனிப்புச்சுவை தெரியும். இச்செய்தி சங்க இலக்கியத்தில் ஓர் உவமையாகவும் எடுத்தாளப்பட்டுள்ளது.
நீரின் தூய்மையினைப் பேணுவதிலும் தமிழர்கள் கருத்துச் செலுத்தியுள்ளனர். நீருக்குள் மனிதக் கழிவு இடுதல் பெரும்பாவமாகக் கருதப்படுகிறது. ‘நீருக்குள் ஜலபானம் செய்த பாவத்தில் போகக்கடவாராகவும் ‘ என்று ஆவணங்கள் இதனைக் குறிக்கின்றன. சங்கரன்கோயிலுக்கு வடக்கே பனையூர் என்ற ஊரில் உள்ள சிவன் கோவில் இறைவனுக்கு அக்கோயிற் கல்வெட்டுக்களில் ‘நன்னீர்த்துறையுடைய நாயனார் ‘ என்ற பெயர் காணப்படுகிறது இயற்கையின் பேராற்றலில் ஆரியர் நெருப்பினை முதன்மைப்படுத் தியது போல திராவிடர் நீரினை முதன்மைப்படுத்தினர். தெய்வ வழிபாட்டுச் சடங்குகளைப் போலவே தமிழர்களின் வீட்டுச் சடங்கு களிலும் நீர் சிறப்பிடம் பெறுகின்றது. செம்பு நீரில் அல்லது குவளை நீரின் மேல் பூக்களைவியரு பூவிதழ்களைவியரு இட்டு வழிபடுவது எல்லாச் சாதியாரிடமும் காணப்படும் பழக்கம். நெடுஞ்சாலைகளில் கோடைக் காலத்தில் நீர்தூ பந்தல் அமைப்பது ஒரு அறச்செயலாகக் கருதப்பட்டது. சோழர் காலத்துக் கல்வெட்டொன்று தண்ணீர்ப் பந்தலில் தண்ணீர் இறைத்துத் தருபவனுக்கும், அதற்குக் கலமிடும் குயவனுக்கும், தண்ணீர் ஊற்றித் தருபவனுக்கும் மானியமளித்த செய்தியினைக் குறிப்பிடுகிறது.
இயற்கையல்லாத முறையில் நெருப்பில் சிக்கி இறந்தவர்கள் நீர் வேட்கையோடு இறப்பது இயல்பாகும். எனவே அவ்வாறு இறந்த வர்களின் நினைவாக நீர்ப் பந்தல் அமைப்பதும் தமிழர்களின் வழக்கம்.
மொகஞ்சொதராவில் அகழ்வாய்வில் காணப்பட்ட படிக்கட்டுக ளுடன் கூடிய குளம் நீர்ச்சடங்குகள் செய்வதற்குரிய இடமாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். நீராடுவதே ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருதப்பட்டதற்குப் பரிபாடல், திருப்பாவை போன்ற இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன.
நீரை மையமிட்ட பழமொழிகளும், மரபுத் தொடர்களும் தமிழர்களிடத்தே உண்டு. ‘நீரடித்து நீர் விலகாது ‘, ‘நீர்மேல் எழுத்து ‘ ‘தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன் ‘ என்பவை அவற்றுட்சில.
This entry is part [part not set] of 19 in the series 20011125_Issue
கந்தர்வன்
வெயில் குரூரமாயடித்துவிட்டுத் தணியத் தொடங்கிய வேளை; பாசஞ்ஜர் ரயிலின் கூவல் வெகு தொலைவிலிருந்து அருவலாகக் கேட்டது. வல்லநேந்தல் தாண்டியதும் இன்ஜின் டிரைவர்கள் இப்படித்தான் ஒலி எழுப்புவார்கள். திண்ணைக்கு ஓடிவந்து, தூணைப் பிடித்துக் கொண்டு திரும்பிப் பார்த்தாள் இந்திரா. தூரத்தில் ரயில் வருவது மங்கலாகத் தெரிந்தது.
உள்ளே அம்மா ‘பொட்டுத் தண்ணியில்லை ‘ என்று ரயில் ஊதல் கேட்டு அனிச்சையாகச் சொல்லிக் கொண்டிருந்தது. ஐயா, சினை ஆட்டைப் பார்த்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். ஐயாவுக்கு எப்போதும் கணக்குத்தான். ஆடு குட்டி போட… குட்டி பெருத்துக் குட்டிகள் போட்டுக் குபேரனாகும் கணக்கு.
இந்திரா குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு வாரியைத் தாண்டி ஓடினாள். மேட்டை எட்டும்போது ஏழெட்டுப் பெண்கள் இடுப்பில் குடங்களோடு ஓடிவந்து இந்திராவை முந்தப் பார்த்தார்கள். எல்லோரும் வாலிபப் பெண்கள். முந்துகிற பெண்களை பிந்துகிற பெண்கள் சடைகளைப் பிடித்து இழுத்தார்கள். கைகளைப் பிடித்து மடக்கினார்கள். அடுத்தவர் குடங்களைப் படபடவென்று கையால் அடித்தார்கள். சிரிப்பும் கனைப்புமாக ஓடினாலும் முந்துபவர்களைப் பார்த்து நொடிக்கொருமுறை கடுகடுவென்று கோபமானார்கள். அடுத்த நொடியில் முந்தும்போது சிரித்துக் கொண்டார்கள்.
மேட்டில் ஏறும்போது ஒருவரையொருவர் கீழே சறுக்கிவிடச் செய்தார்கள். ‘ஏய் செல்வி, இன்னொரு தடவை என்னை இழுத்து சறுக்கிவிட்டானா இழுத்த கையை முறிச்சுப்புடுவேன் ‘ ‘ என்று ஒரு பெண் கத்தியது. சறுக்கிவிட்டதில் முழங்கையில் அரைத்து ரத்தம் தெரிந்தது — இரண்டு மூன்று குடங்களைத் தூக்கிக்கொண்டு மறுபடி மேடு ஏறினார்கள். புயல் நுழைவது போல் ரயில் நிலையத்துக்குள் பாய்ந்தார்கள். கிளித்தட்டு விளையாட்டில் தங்கள் தங்கள் இடங்களில் ஓடிவந்து நிற்கும் ஆட்களைப் போல் பிளாட்பார நுனியிலிருந்து கடைசி வரை இடைவெளிவிட்டு இடம்பிடிக்க முடியாத பெண்கள் இங்கும் அங்கும் ஆலாகப் பறந்தார்கள். இடங்களை பிடித்துக் கொண்டுவிட்ட பெண்களிடம் கெஞ்சினார்கள். சில பூஞ்சையான பெண்கள் இடம் கிடைக்காததற்காக ஓரத்தில் நின்று அழுதார்கள். சில துடியான பெண்கள் இடம்பிடித்த பெண்களைத் தள்ளிவிட, அவர்களோ தங்கள் குடங்களாலேயே அடித்தார்கள். இரக்கமில்லாமல் விரட்டினார்கள். நேற்றோ முந்தாநாளோ போன சனிக்கிழமையோ தன்னை இதே போல் விரட்டியது ‘நல்லா இருந்திச்சா ? ‘ என்றனர்.
இந்திரா இதில் படுகெட்டியான பெண். எல்லோருக்கும் முன்பாக இடம்பிடித்ததோடு மட்டுமில்லாமல், பதட்டமேயில்லாமல் அலட்சியமாக நிற்கிற அழகைப் பார்த்தால் ஐந்தாறு வருசங்களாக அதே இடத்தில் நிற்பது போல இருந்தது. இடம் பிடிக்க முடியாத பெண்கள் சுவர்களில் சாய்ந்துகொண்டு எகத்தாளம் பேசினார்கள். ஸ்டேஷன் மாஸ்டர் வெள்ளை உடைகளோடும் பச்சைக் கொடியோடும் வந்தவர் இந்த சச்சரவைப் பார்த்துவிட்டு, ‘ஒரு நாளைக்கு ஸ்குவார்டை வரச்சொல்லி எல்லோரையும் அள்ளிக்கிட்டுப் போயி ஜெயில்ல போடுறேன் ‘ ‘ என்றார். பெண்கள் இடுப்புக் குடங்களுக்குள் முகங்களைக் கவிழ்த்து வக்கணையாகச் சிரித்தார்கள்.
ரயில் சத்தம் நெருங்கிக் கொண்டிருக்கையில் இந்திராவைப் படாரென்று தள்ளிவிட்டு, அந்த இடத்தில் டெய்லர் மகள் ராணி நின்று கொள்ள முயன்றாள். இந்திரா கொஞ்சம் தடுமாறிவிட்டு அவளை அலாக்காகத் தூக்கிப் போட்டுவிட்டு மறுபடி வந்து நின்றுவிட்டாள். கீழேவிழுந்த டெய்லர் மகள் ஆங்காரமாக ஒடிவந்துஇந்திராவின் தலைமுடியைப் பிடித்தாள். இந்திரா அவளைக் குடத்தால் முதுகில் அடித்தாள். அடிக்குப் பயந்து குனிகிறாளென்று நினைத்து நிமிர்ந்தவளுக்கு முழங்கையில் சுரீரென்று வலித்தது. டெய்லர் மகள் கடித்துவிட்டாள். பல் பதிந்துவிட்டது. அவளைக் காலால் எத்திவிட்டாள் இந்திரா.
ரயில், காட்டுயானை பிளிறிக்கொண்டு வருவதுபோல் நிலையத்துக்குள் நுழைந்தது. பயணிகள் யாரும் இறங்கு முன்பாக இந்திரா குடத்தோடு பெட்டிக்குள் பாய்ந்தாள். முகம் கழுவும் பேசின் குழாயை அழுத்தி செம்பில் தண்ணீர் பிடித்தாள். செம்பு பாதி நிறையுமுன் குடத்தில் ஊற்றினாள். ஊற்றிய வேகத்தில் மறுபடி செம்பில் பிடித்தாள்.
ரயில்களில் இந்த வசதியில்லை, அந்த வசதியில்லை என்று இந்திரா எதைப் பற்றியும் நினைத்ததில்லை. ஏனென்றால், ரயிலில் இதுவரை பயணமே செய்ததில்லை. ஆனால், திறந்தால் தண்ணீர் கொட்டுகிற மாதிரி ரயிலில் குழாயில்லை என்பது அவளது குறை. உள்ளங்கையை வைத்து அழுத்திக்கொண்டு முகங் கழுவுபவர்களே சிரமப்பட வேண்டியிருக்கிறது. குடம் தண்ணீர் பிடிக்க வேண்டுபவள் எவ்வளவோ பாடுபட வேண்டியிருக்கிறது.
கதவைப் பிடித்துக்கொண்டு கழுத்தை வெளியே நீட்டிப் பார்த்தாள். அந்தக் கோடியில் சிவப்பு விளக்குதான் எரிந்தது. வேகம் வேகமாக அரைச்செம்பும் கால் செம்புமாகப் பிடித்துக் குடத்தில் ஊற்றிக்கொண்டிருந்தாள். இந்தக் குழாயில் தண்ணீர் சனியனும் விறுவிறுவென்று வந்துவிடாது; இந்தப் பீடைக் குடமும் நிறைந்து தொலைக்காது.
இதுதான் நாளை சாயந்திரம் வரை வீட்டுக்குக் குடிதண்ணீர் இதுவும் கிடையாதென்றால், பிலாப்பட்டிக்குப் போக வேண்டும் நல்ல தண்ணீருக்கு.
இந்த ஊரும் அக்கம்பக்கத்து ஊர்களும் உவடு அரித்துப் போய்விட்டன. ஊருக்குள் நாலு இடங்களில் கிணறு வெட்டிப் பார்த்தார்கள். உப்பென்றால் குடலை வாய்க்குக் கொண்டுவருகிற உப்பு ‘ கடல் தண்ணீரை விட ஒருமடங்கு கூடுதலான உப்பு கிணற்றுத் தண்ணீரில் உப்பளம் போடலாம் என்றார்கள்.
எல்லா ஊர்களும் தீய்ந்துபோய்விட்டன. பஸ்ஸில் போகும் போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயற்காடுகளில் பச்சை நிறத்தையே பார்க்க முடியாது. ஜனம் எதைத்தின்று வாழ்கிறது என்று இந்தப் பக்கத்தில் பயணம் செய்கிறவர்கள் அதிசயமாகப் பார்ப்பார்கள்.
எழவெடுத்த காற்று பகலென்றும் ராத்திரியென்றுமில்லாமல் பிசாசாயடிக்கும். தடுக்கத் தாவரங்கள் இல்லையென்று பள்ளிக்கூடத்து வாத்தியார் சொல்வார். காற்று சுற்றிச்சுற்றி அடிக்கும். வறண்ட காற்று, ரத்தத்தை உறிஞ்சும் காற்று என்பாள் பாட்டி. மணலை அள்ளித் தலைகளில் இறைக்கும் காற்று ஈரமில்லாத எருக்கிழங்காற்று.
எல்லா ஊரிலும் பருவகாலத்தில் மழை பெய்யும். புயல் வந்தால்தான் இந்தப் பக்கம் பூராவுக்கும் மழை. மழை பெய்வதில்லை…பெய்தாய் பேய் மழை ‘ கண்மாய், ஊருணி எல்லாம் உடைப்பெடுத்து வெள்ளம் போய் மூன்றாம் நாள் மறுபடி நீரில்லா பூமியாகக் கிடக்கும். ஆகாயத்துக்கும் பூமிக்கும் இந்த ஊர்ப்பக்கம் நிரந்தரப் பகை.
ஐயா காலத்தில் உலகம்மாள் கோயில் கிணறு மட்டும் நல்ல தண்ணீர் கிணறாக இருந்தது. ஏற்றம் வைத்து இறைப்பார்கள். அதிகாலை முதல் டின் கட்டி நாலைந்து இளவட்டங்கள் இறைத்துக் கொண்டே இருந்தார்கள். பெண்கள் தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடமென்று எடுத்துவந்தார்கள். ஜனங்கள் இலுப்பை மரத்துக்காய், கண்மாய்க் கரம்பை என்று தலை தேய்த்து ஜன்னி வருகிற மாதிரி சுகமாகக் குளித்தார்கள். சனிக்கிழமைகளில் வானவில்லாக எண்ணெயும் வாசனையாகச் சீயக்காயும் மிதக்கும், நந்தவனத்துக்குப் பாயும் தண்ணீரில்.
இப்போது எல்லாமே பூண்டற்றுப் போய்விட்டன. முல்லை மணந்த நந்தவனம் குட்டிச்சுவர்களில் சின்ன அடையாளங்களோடு பாழடைந்து கிடக்கிறது. கிணற்றில் முள்ளை வெட்டிப் போட்டிருக்கிறார்கள். மழைபெய்து குண்டுக்கால் நிறையும் வரை குடிக்கத் தண்ணீர் வேண்டிப் பெண்கள் குடங்களோடு பிலாப்பட்டிக்குப் போகிறார்கள்.
இங்கிருந்து வில்லனூர் தாண்டி, பொன்னனூர் தாண்டி பிலாப்பட்டி போகவேண்டும். வழி பூராவிலும் காட்டுக் கருவேல் மரங்களைப் பார்க்கலாம், காக்காய் கத்துவதைக் கேட்கலாம். எதிர்ப்படுகிற ஆம்பிளைகள் முரட்டு மீசைகளோடு தெரிவார்கள். நிசப்தமான முள் காடுகளின் நடுவில் கரடு முரடான ஆம்பிளைகள் கறுப்புக் கறுப்பாயிருமுவது இந்திராவுக்குப் பீதியூட்டும். இரண்டு கண்மாய்கள், நான்கு ஊருணிகள் நஞ்சைகள் — புஞ்சைகள் தாண்டிப் போகையில், எல்லாமே வெடித்து விரிவோடிக்கிடக்கும். இதில் இரண்டு சுடுகாடுகளைத் தாண்ட வேண்டும். கர்ப்பஸ்திரீகள் குடங்களோடு செல்கையில் மற்ற பெண்கள் ஓரங்களில் நடந்து சுடுகாட்டை மறைப்பார்களாம்.
மூணு மைல் தூரம் நடக்கவேண்டும் பிலாப்பட்டிக்கு. ஊருணிக்குப் பக்கமாயிருக்கிறது அந்த நல்ல தண்ணீர் கிணறு. ஊற ஊறத்தான் இறைக்கவேண்டும். மதியம் வரை பிலாப்பட்டி ஜனம் மட்டும் இறைத்துக்கொள்ளும். மதியத்துக்குமேல் வெளியூர் ஆள்களுக்கு விடுவார்கள்.
வண்டித் தண்ணி, சைக்கிள் தண்ணி அப்புறம்தான் இடுப்புக் குடத்துக்கு. ஏழூர் பெண்கள் இளசும் கிழடுமாகக் குடங்களை வைத்துக்கொண்டு வானத்தையும் வையத்தையும் வைதுகொண்டு நிற்பார்கள். மாட்டாஸ்பத்திரி திண்ணைதான் இவ்வளவு ஜனத்துக்கும் நிழலிடம். காய்ந்து கருவாடாகக் கிடந்து, ஒரு சொட்டு சிந்தாமல் நடந்து ஊர் திரும்பி, வீட்டுப் படியேறினால் பொழுது சாய்ந்துகொண்டிருக்கும்.
அம்மாதான் தினமும் பிலாப்பட்டிக்குப்போய் வந்து கொண்டிருந்தது. வயிற்றில் கட்டி வந்ததிலிருந்து இந்திரா குடத்தை எடுத்தாள். நாலு மாசத்துக்கு முன்தான் ரயில் நிலைய ஓரத்து வீடுகளில் இந்தப் பேச்சு வந்தது. ‘ஒலகம் பூராவும் தண்ணில்லைன்னாலும் சரி, நாள் தவறாம ரயிலுக்கு மட்டும் எங்கெருந்தாவது கொண்டு வந்து ஊத்திவிட்டுருறான் பாரு. ‘ இப்படிப் பேசிப்பேசியே மூன்று மணிக்கு வரும் பாசஞ்சர் ரயிலைக் குறிவைத்துத் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தார்கள்.
மூன்று மணி ரயிலுக்கு மதியம் பன்னிரண்டு மணிக்கே பெண்கள் வந்தார்கள். நிலையத்தின் இரண்டு வேப்பமரங்களினடியிலும் ஒரு சிமெண்டு பெஞ்சின் மீதும் அட்டவர்க்கமா உட்கார்ந்தார்கள். இடம்பிடிக்கும் தகராறுகள் இரண்டு மூன்று மணி நேரங்களுக்கு நடந்து ரயில் நிலலியம் ஒரு இரைச்சலான முச்சந்தியானது. ஊர்க்கதை, உலகக் கதைகள் எல்லையில்லாமல் பேசப்பட்டன. இந்திரா இந்த நேரங்களில் அதிகமாகக் கனவு கண்டாள். உள்ளூரில் எவனுக்கும் கழுத்தை நீட்டிவிடக் கூடாதென்றும் பிலாப்பட்டி மாதிரி தண்ணீருள்ள ஊர்களிலிருந்து பெண்கேட்டு வருவது மாதிரி கனவு காண்பாள்.
பிலாப்பட்டிக்கு நடந்துப்போய் தண்ணீர் தூக்கிவந்த ராத்திரிகளில், கால் வலியோடு விடிய விடியக் கிடந்திருக்கிறாள். நோவோ நோக்காடோ, பொம்பிளை பிலாப்பட்டி போயாக வேண்டும். தண்ணீர் கொண்டுவந்து சோறு பொங்கவேண்டும். குடிக்கக் கொடுக்கவேண்டும்.
இந்திரா மாதிரி அமைதியாக மற்ற பெண்கள் கனவு காணாமல் இடம்பிடிக்க அடிதடி சண்டைகளில் இறங்குவதையும் ரயில் நிலையமே அவர்கள் ஆதிக்கத்துக்குப் போய்க்கொண்டிருப்பதையும் ஸ்டேஷன் மாஸ்டர் விரும்பவில்லை. சிப்பந்திகளைக் கொண்டு ஒருநாள் வீடு வரை விரட்டினார். அன்று ஒரு பொட்டுத் தண்னீர்கூட ரயிலிலிருந்து யாராலும் கொண்டுபோகமுடியவில்லை.
பாய்ண்ட்ஸ்மேன் பக்கத்து ஊர்க்காரர். அவரை வைத்துப் பேசித்தான் இந்த ஏற்பாடு. ரயில் வரும்போதுதான் வரவேண்டும். வந்து சத்தம் போடக்கூடாது. தண்ணீர் கொஞ்சம்தான் பிடிக்க வேண்டும். இவற்றுக்குக் கட்டுப்பட்டு வருவதாகப் பேர்; சண்டை இன்னும் நாறிக்கொண்டுதானிருக்கிறது. எந்தச் சண்டை எப்படி நடந்தாலும் இந்தப் பெண்களுக்கு ஆறாத ஆச்சரியம் ஒன்று உண்டு. நம் ஊர் தண்ணீரை விட ஒசத்தியான தண்ணீர் ரயில் குழாயில் வரும்போது, ஏன் சில ரயில் பயணிகள் வெள்ளை வெள்ளை பாட்டில்களில் தண்ணீரைப் பதினைந்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் வாங்கி வைத்துக்கொண்டு திரிகிறார்களென்று.
சாயங்காலங்களில் எப்போதாவது இந்திரா கடைத் தெருவுக்குப் போகும்போது, டாக்கடை வாசல்களில் பார்த்திருக்கிறாள். இடுப்பில் மல்லு வேட்டியும் தோளில் வல்ல வேட்டுமாக ஒரு கிலோ ரெண்டுகிலோ மீசைகளோடு கனம் கனமான ஆம்பிளைகள் வானத்தை வில்லாக வளைக்கப் போவதாகப் பேசினார்கள். எல்லா நேரங்களிலும் பிலாப்பட்டிக்குப் போகும்போதுகூட பெண்கள் அடுத்த வீட்டுச் சங்கதிகளைக் காது மூக்கு வைத்துப் பேசினார்கள். ஊருக்கு உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக்கும் மிஷின் மட்டு வருகிற கூறையே காணோம்.
இந்திரா உள்ளங்கையை இன்னும் அழுத்திக் கொண்டிருந்தாள். தண்ணீர் சன்னமாக வந்தது குழாயில். பாதிக்குடம் கூட நிறையவில்லை. இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தது. அம்மா ‘சொட்டுத் தண்ணியில்லை ‘ என்று முனகியது ஞாபகத்துக்கு வந்தது. சில நேரங்களில் இன்ஜினிலிருந்து ஊதல் ஒலி வந்தாலும் புறப்படத் தாமதமாகும். உள்ளங்கையில் ரத்தம் வரும்படி இன்னும் வேகமாகக் குழாயை அழுத்தினாள். ரயில் நகர்கிற மாதிரி இருந்தது. இன்னும் கொஞ்சம் மட்டிலும் பிடித்துக் குடத்தில் ஊற்றிவிட்டுக் குதித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டே உள்ளங்கையை மேலும் அழுத்தினாள்.
ரயில் வேகம் அதிகரித்து பிளாட்பார முனை வருவது போலிருந்தது. படபடவென்று செம்பை எடுத்துக் குடத்தைப் பாதையில் வைத்துவிட்டுக் குதிக்கப் போனாள். முழங்கை வரை கண்ணாடி வளையல்களணிந்த ஒரு வடக்கத்திப் பெண் ஓடிவந்து இவளை இழுத்து வண்டிக்குள் தள்ளிவிட்டுக் கோபமாகக் கத்தினாள். மொழி புரியவில்லையென்றாலும், ‘தற்கொலை பண்ணிக் கொள்ளவா பார்த்தாய் ? ‘ என்கிற மாதிரி ஒலித்தது.
லேசான பதட்டத்துடன் வீடு வந்தவரிடம் அம்மா படபடவென்று சொன்னாள். ‘ஓடுங்க… அந்த ரயிலைப் பிடிங்க. எம்மக அதிலெதான் போயிட்டா. அடுத்த டேசன்ல பிடிங்க போங்க ‘ அண்ணன் வீடு, தம்பிவீடு, மச்சினன் வீடுகளிலிருந்துஆட்கள் ஓடி வந்தார்கள். நாலைந்து பேர் சேரவும் வேட்டிகளை மடித்துக் கட்டிக்கொண்டு மெயின் ரோட்டுக்கு ஓடினார்கள். இரண்டு பஸ்கள் போய் மூன்றாவதாக வந்த ராமநாதபுரம் பஸ்ஸில் ஏறியும் ஏறாமலுமாக கண்டக்டரிடம் கத்தினார்கள். ‘பாசஞ்சர் ரயிலைப் பிடிப்பா… ‘
டிக்கெட் கொடுப்பதில் மும்முரமாயிருந்த கண்டக்டர், அதைச் சாதாரண முறையில் கேட்டுக்கொண்டு பதறாமலுமிருக்கவே ஐயாவின் மைத்துனர் பாய்ந்தார்… ‘பொண்ணு ரயிலோட போயிருச்சுனு நாங்க ஈரக்குலையைப் பிடிச்சுக்கிட்டுக் கத்துறோம். சிணுங்காமக் கேட்டுக்கிட்டு நிக்கிறீரு. டிரைவர்ட்ட சொல்லுமய்யா, வேகமா ஓட்டச் சொல்லி… ‘
விவகாரம் வேண்டாமென்று கண்டக்டரும், ‘வேகமாப் போங்கண்ணே ‘ என்று ஒப்புக்குச் சொல்லிவிட்டு டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தார். கும்பல், டிரைவரிடம் போய் கத்தியது. டிரைவர் விரட்டிக்கொண்டுபோய்ச் சேர்ந்தார்.
இவர்கள் போய்ச் சேர்ந்த போது ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஈ எறும்புகூட இல்லை. ஸ்டேஷன் மாஸ்டரிலிருந்து ஒவ்வொருவரிடமாக விசாரித்தார்கள். ‘குடத்தோட ஒரு பொண்ணு எறங்குச்சா… ? ‘வென்று. யாரும் பார்த்ததாகச் சொல்லவில்லை. போன ஆட்களில் குயுக்தியான ஒருவர் சொன்னார்; ‘புள்ளைட்ட டிக்கெட் இல்லைங்கிறதனாலெ யாருக்கும் தெரியாம ஒளிஞ்சு ஒளிஞ்சு வெளியே போயிருக்கும்யா. ‘
ரயில் நிலையத்துக்கு வெளியே ஆட்டோ ஸ்டாண்ட், ரிக்ஷா ஸ்டாண்ட், சைக்கிள் கடை, பேக்கரி எல்லா இடங்களிலும் கேட்டார்கள். ‘குடத்தோட ஒரு பொண்ணு இந்தப் பக்கமா போச்சா ? ‘வென்று. ராமநாதபுரம் வடக்குத் தெருவில், அத்தை வண்டிக்காரத் தெருவில், சின்னம்மா வீடு, தெரிந்தவீடு, அறிந்தவீடு பூராவும் தேடிவிட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போனார்கள். அந்த குயுக்திக்காரர் வெகு நம்பிக்கையாகச் சொன்னார். ‘புள்ளைட்ட காசிருக்காது. இங்கெதான்யா நிக்கணும்… நம்மூர் ஆளுக யாரும் வருவாகளான்னு ‘ பால்கடை, பழக்கடை, டாக்கடையென்று ராமநாதபுரத்தையே சல்லடை போட்டு சலித்துப் பார்த்துவிட்டுக் கவலையும் அசதியுமாக ஆட்கள் ஊர் திரும்பினார்கள்.
வீட்டு வாசலில் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்த கூடத்தில் ஒருவர் ‘மெட்ராஸ்உக்கே போயிருச்சோ புள்ளை ‘ என்று சந்தேகமெழுப்ப….ஐயா கத்தினார், ‘ஒன் கழுத்தைக் கடிச்சு மென்னுபுருவேன்; பேசாம இரு ‘ ஐயா கூட போய்த் திரும்பிய ஆள்களில் ஒருவர் கூட்டத்தின் கவலையைக் கவனித்து விட்டுச் சொன்னார். ‘நாம அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்குப் போய் பார்த்திருக்கணும் எங்கெயாவது புள்ளை எறங்கி தெசை தெரியாம நிக்குதான்னு… இங்கெ உக்காந்து என்ன செய்யிறது ‘ ‘
அம்மாவுக்கு இந்தப் பேச்சுக்களைக் கேட்டுக் குமட்டலும் மயக்கமுமாய் வந்தது. இந்தக் கூட்டத்தில் யாரும் எட்டமுடியாத யோசனைக்குப் போய் பொருமிக்கொண்டும் வாயில் முந்தானையை அழுத்திக்கொண்டும் சொன்னாள், ‘எம்புள்ளை எந்த ஊரு தண்டவாளத்திலெ விழுந்து கெடக்கோ ‘ அவளால் அடக்கமுடியவில்லை. அவளை யாரும் பிடித்து அடக்கவும் முடியவில்லை.
ஆவேசம் வந்தவள் போல் ரயில் நிலையத்துக்கு ஓடினாள். பின்னாலேயே ஐயாவும் ஊர் ஜனமும் ஓடியது. பொழுது இருட்டிக் கொண்டு வந்தது. அம்மா தண்டவாளத்தின் ஓரத்திலேயே ஓட ஆரம்பித்தாள். பத்தடி ஓடியதும் ஐயா, அம்மாவைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டுக் கூர்ந்து பார்த்தார். தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. நெருங்க நெருங்க அம்மாதான் முதலில் கத்தினாள். ‘அந்தா, இந்திரா வருது. ‘
இடுப்பில் தண்ணீர்க் குடத்தோடு இந்திரா. கூட்டத்தருகில் வந்தாள். அம்மா நிறை பூரிப்பில் விம்மிக்கொண்டு போய்க் குடத்தை வாங்கினாள். நிறைகுடம், சொட்டு சிந்தாமல் கொண்டு வந்துவிட்டாள். மகள் வந்து சேர்ந்ததில் மலர்ந்துபோய் ஐயா கேட்டார்… ‘பயமகளே.. இதையும் சொமந்துக்கிட்டா வரணும்; இத்தனை மைலுக்கும் ? ‘
இந்திரா சொன்னாள்.. ‘ஊக்கும்.. நாளைக்கு வரை குடிக்க எங்கெ போறது ? ‘