தக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

ஜெயமோகன்


சா. கந்தசாமி ஏறத்தாழ முப்பது வருடம் முன்பு எழுதிய சிறுகதை தக்கையின்மீது நான்கு கண்கள். அதேபேரில் கிரியா பதிப்பகம் ஒரு தொகுப்பையும் வெளியிட்டதனால் இக்கதை மிகவும் பிரபலமடைந்தது. சா கந்தசாமி ‘கசடதபற ‘ இலக்கிய இதழ் சார்ந்த இலக்கியக் கருத்துக்குழுவின் முக்கியமான உறுப்பினர். ‘நாங்கள் வல்லினங்கள் ‘ என்ற பிரகடனத்துடன் தமிழில் எழுபதுகளில் அரங்கேறிய இக்குழு அடிப்படையில் க.நா.சுப்ரமணியத்தின் உருவவாத நோக்கை சார்ந்தது. விரிவான முறையில் பார்த்தால் மேலைதிறனாய்வுமரபில் புதுத்திறனாய்வு மரபினர் உருவாக்கிய உருவவாத, சமநிலைவாத இலக்கியக் கோட்பாடுகள் மீது ஆழமான நம்பிக்கை கொண்டது . அனைத்துவகையிலும் ஒரு நவீனத்துவ [modernism] இயக்கம் அது . தமிழ் நவீனத்துவம் புதுமைப்பித்தனில் தொடங்கியது என்றால் கசடதபறவில் உச்சமடைந்தது எனலாம். அதை உச்ச நவீனத்துவத்தை தொடங்கிவைத்த படைப்பாளி சா. கந்தசாமி.

சா கந்தசாமி

இலக்கிய படைப்பில் உணர்ச்சிகர வெளிப்பாட்டை தவிர்ப்பது , கறாரான புற உலக சித்தரிப்பை அளிப்பது , நடையில் எவ்வித அலங்காரங்களையும் அனுமதிக்காமலிருப்பது , மிதமாகவே அனைத்தையும் சொல்ல முனைவது, சிறுகதையின் செவ்வியல்வடிவத்தை முழுமையாக அடைய முனைவது ஆகிய இயல்புகள் இவர்களால் வெளிப்படுத்தப்பட்டன. அதேசமயம் சிறுக்தையின் செவ்வியல் வடிவில் இருந்த உச்சகட்ட திருப்பம் என்ற அம்சத்தை இல்லாமலாக்கி , உச்சத்தை மெளனம் மிக்கதாக ஆக்கினர் . ஞானக்கூத்தன், ந. முத்துசாமி ஆகியோரை இந்த இலக்கியக் கருத்துக்குழுவின் முக்கிய உறுப்பினர்கள் எனலாம். அசோகமித்திரன் முழுமையாக இந்தப்போக்கை சேர்ந்தவரல்ல என்றாலும் அவரது இக்காலகட்ட இலக்கிய நோக்கு கசடதபறவின் தன்மை கோண்டதாகவே இருந்தது. ஜி.நாகராஜன் , கலாப்ரியா, ஆத்மாநாம் போன்றவர்களையும் இந்த கருத்துக்குழுவின் பாதிப்பு மிக்கவர்கள் எனலாம். புறவய உலகச்சித்தரிப்பே வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையேயான பொதுவானதும் திட்டவட்டமானதுமான தளமாக இருக்கமுடியும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை உடைய இவர்கள் நுணுக்கமான விரிவான புற உலகச் சித்தரிப்பை அளிக்க கவனம் கொண்டவர்கள். இக்குழுவால் உருவாக்கப்பட்ட கவிதைகள் அதுவரை கவிதையில் இருந்த வெளிப்படையான உணர்ச்சிவேகம் அல்லது எள்ளலை கைவிட்டு சமநிலையும் பூடகத்தன்மையும் கொண்ட புற உலகச்சித்தரிப்புகள் வழியாக பேசமுற்பட்டன. ஆனாலும் கசடதபற குழுவின் முக்கியப்பங்களிப்பு சிறுகதைகளிலும் குறுநாவல்களிலும்தான்

கசடதபற குழுவின் முக்கிய ஆசிரியரான சா. கந்தசாமியின் ‘சாயாவனம் ‘ நவீனத்துவ இயக்கம் இயல்புவாத அழகியலை தனக்கெனச் செதுக்கி உருமாற்றிக் கொண்டமையின் சிறந்த உதாரணமாகும். அசோகமித்திரனின் ‘தண்ணீர் ‘ , ‘கரைந்த நிழல்கள் ‘ முதலிய படைப்புகளையும் இக்காலகட்டத்து சிறந்த ஆக்கங்கள் எனலாம். கசடதபற குழுவின் சாதனைப் படைப்புகளாகச் சொல்லப்படும் சிறுகதைகள் மூன்று 1] அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன் ‘ 2] ந.முத்துசாமியின் ‘நீர்மை ‘ 3] சா. கந்தசாமியின் ‘தக்கையின்மீது நான்கு கண்கள் ‘ நான்குமே உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத ‘சாதாரண ‘ நடையில் சொல்லப்பட்டவை . நுட்பமாக உணர்ச்சிகளை தொனிக்க வைப்பவை. குறியீட்டுத்தன்மை மிக்கவை. ஒரு சொல்கூட மிகாத கச்சிதமான வடிவை அடைந்தவை.

சென்னை தொலைக் காட்சிக்காக இயக்குநர் வசந்த் தக்கையின் மீது நான்கு கண்களை குறும்படமாக எடுத்திருக்கிறார். மூலக்கதை மீன்பிடிப்பவரான தாத்தாவுக்கும் அவரது [தாயில்லாபிள்ளையான] பேரனுக்குமான உறவை சித்தரிப்பது. கிழவர் புகழ்பெற்ற மீன்பிடி நிபுணர். கடலில் அல்ல , தஞ்சை காவிரிகழிமுகத்தில் உள்ள பின்நீர்பரப்புகளில் . ஆற்றில் வரும் நன்னீர் மீன்களும் முட்டையிட வரும் கடல்மீன்களும் தூண்டில் மூலம் பிடிக்கப்படும் சூழல் அது . மீன்பிடிப்பதற்கான தன் திறன் குறைவதை, தனக்கு மீன் அள்ளித்தந்த ஆறு வேறு ஆறாக மெல்லமெல்ல மாறிவிட்டதை தாத்தா அறிவதில்லை . பேரன் வளர்ந்து புதிய காலத்தின் குரலாக ஒலிக்கும்போது எரிச்சலைடைகிறார் . பேரனை தன் காலத்தின் முடிவை அறிவிக்கும் அடையாளமாக ஓர் ஆழ்தளத்தில் தன் மரணமாக அறிகிறார் . அவருக்கு சவாலாக வருகிறது ‘கடலில் ‘ இருந்து ஒரு மீன். அதை அவரால் பிடிக்கமுடியவில்லை . ஆற்றல் மிக்க முன்னாள் நிபுணரை அலைக்கழித்து விளையாடும் அம்மீனை பேரன் எளிதாக பிடித்துவிடுகிறான். தாத்தா தன் காலம் முடிவதை மெல்ல உணர்கிறார். ‘பழையன கழிதல் ‘ உலகநீதி என்ற பிரக்ஞை அவரது தன்னகங்காரத்தை மீறி மெல்ல விடிகிறது . பேரன் தன் முடிவல்ல தன் நீட்சியே என உணர்கிறார்.

வசந்த் மூலக்கதையை நுட்பமாக உணர்ந்து திரைக்கதையையும் காட்சிகளையும் அளித்திருக்கிறார் . கதாபாத்திரங்களுக்கான நடிகர்களின் தேர்வில் அனுபவமும் நுட்பமும் தெரிகிறது . முக்கியமான மூன்று கதாபாத்திரங்களிலும் முகங்களும் உடலசைவுகளும் இயல்பாக உள்ளன. திடமான துடிப்பான பையன், பிடிவாதக்கார சிடுிசிடு கிழவர் , பிரியமான பாட்டி– மூன்று முகங்களும் இயல்பாக உள்ளன. கதை நிகழ்வுகள் இயல்பான தொடர்ச்சியைக் கொண்டிருக்கின்றன. மீண்டும் மீண்டும் ஒரேவழியில் சென்று ஒரே இடத்தில் தாத்தாமீன்பிடிக்க முயல்வதைக் காட்டும் பொருட்டு ஒரே ஓடையை கடந்துசெல்லுவதைக் காட்டியிருப்பது கவனமான காட்சி தேர்வுக்கு உதாரணம். கிழவரின் பிடிவாதத்தை அவர் அழுத்தமாக வெற்றிலை இடிப்பதன் மூலம் காட்டியிருக்கும் விதம் இன்னொரு உதாரணம்.

இத்தகைய கதையில் மூலக்கதையை காட்சிப்படுத்துவதே இயக்குநர் அதிகமாக செய்யக் கூடுவது . அதை செய்திருக்கிறார். அதற்குமேல் ஓர் இயக்குநராக வசந்த் தன் வாசிப்புசார்ந்த பங்களிப்பை நுட்பமாக நிகழ்த்தியிருக்கும் சில இடங்கள் உள்ளன. ஒரு கனவு அல்லது உருவெளி நிகழ்வின் ஒளியமைப்புடன் கிழவர் தன்னை விழுங்குவது போல பரந்துள்ள கடல்வெளியின் நீலத்துடன் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளமுடியாமல் ஆங்காரமும் கோபமுமாக குமுறும் இடம் ஒன்று. பேரன் மீனைப் பிடித்துவிட்டதை அறிந்து ஆத்திரம் கொண்டபிறகு தாத்தா பாலத்தில் மீது நிற்க அவரைச்சூழ்ந்து பறவையொலியுடன் இருளும் மாலையின் சித்தரிப்புஇன்னொன்று.

தாத்தாவாக நடித்தவர் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார் என்பதை குறிப்பிட்டாகவேண்டும். பேரனை திட்டிய அடிக்கமுயன்றபிறகு அவர் தனிமையில் கழிவிரக்கமும் வேகமுமாக குமுறும் காட்சி கண்ணிலேயே நிற்கிறது.

முழுமையான கலைப்படங்களை எடுப்பது இன்னும்கூட தமிழில் கனவாகவே உள்ளது. அதற்கான பார்வையாளர் முதலீட்டுப்புலம் இங்கே இல்லை . ஆனால் இம்மாதிரியான சிறிய முயற்சிகள் அரசு நிறுவனங்களின் உதவியுடன் நிகழ்த்தப்பட்டு தொலைக்காட்சி மூலம் பரவலாகமக்களிடையே செல்வது முக்கியமான கலாச்சார நடவடிக்கையே.

—-

jeyamohanb@rediffmail.com

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்