டாவின்சி கோட்… டான் பிரவுன்… பாரதி !

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

ஜடாயுDaVinci Code திரைப்படம் ஒரு வாரம் உலகெங்கும் சக்கைப் போடு போட்டு ஓடிய பின், நமது மதச்சார்பற்ற காங்கிரஸ் அரசு ஒருவழியாக இந்தத் திரைப் படத்தை
இந்தியாவில் திரையிட அனுமதி வழங்கியிருக்கிறது, அதுவும் ஒரு உப்பு சப்பில்லாத “இது உண்மை சம்பவமல்ல” என்னும் அரை நொடி Disclaimer சமாசாரத்திற்காக, படத்- தயாரிப்பாளர்களான ஸோனி நிறுவனத்தை நகைப்புக்குரிய வகையில் நச்சரித்த பின்பு. “இந்த மாதிரி Disclaimer எல்லாத் திரைப்படங்களிலும் போடுவது போல சம்பிரதாயமாக இதிலும் போட்டிருக்கிறோமே ஐயா, நல்லாப் பாருங்க” என்று ஸோனி நிறுவனம் விளக்கம் அளித்த பின்பும் சோனியா ஆட்டுவிக்கும் காங்கிரசு அரசு ஒப்பவில்லை,
“அதெல்லாம் பொடி எழுத்துல போடுவீங்க, பெரிய எழுத்துல போட்டா தான் அனுமதி தருவோம்” என்று அராஜகம் செய்தது. சில காட்சிகளை வெட்டியிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இப்படித் தலைகீழாக நின்று இந்தப் படத்துக்கு எதிராக “கிறீச்” குரல் எழுப்பிய சிறுசிறு கிறிஸ்தவக் குழுக்களைத் திருப்திப் படுத்திய காங்கிரஸ் மதச்சார்பின்மை புல்லரிக்க வைக்கிறது!

இருக்காதா பின்னே? படத்தின் ஆதாரமான டான் பிரவுன் எழுதிய புதினம் மற்றும் படம் உருவானது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களை சமயப் பெரும்பான்மையினராகக் கொண்ட அமெரிக்காவில். கத்தோலிக்க கிறிஸ்தவம் அரசு மதமாக இருக்கும் பிரான்ஸில், Cannes திரைப்பட விழாவில் தான் இந்தப் படத்திற்கு ‘சிவப்புக் கம்பளம்’ விரிக்கப் பட்டு அரங்கேற்றம் நடந்தேறியது. இந்த நாடுகளில் எல்லாம் இந்தப் படத்துக்கு எதிராகக் கிளம்பிய குரல்களை அந்த அரசுகள் சிறிதும் சட்டை செய்யவில்லை. பேச்சுரிமையை
நிலைநாட்டும் தார்மீகக் கடமைக்காக கிறிஸ்தவத்தில் ஊறித் திளைக்கும் எந்த நாடுகளும் செய்யத் துணியாத ஒரு செயலை, ஒரு சதவிகித சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக (ஒருவேளை சோனியா அம்மையாரை மகிழ்விக்கவோ?) செய்து இந்தியாவின் காங்கிரஸ் அரசு உலகப் புகழ் பெற்று விட்டது. மெய் சிலிர்க்கிறது!

விஷயத்துக்கு வருவோம். டான் பிரவுனின் இந்தப் புதினம் வெளியான உடனேயே ஏகப்பட்ட பாராட்டுதல்களையும் பெற்று சர்ச்சைகளையும் கிளப்பி விட்டது. அடிப்படையில் ஒரு விறுவிறுப்பான, அபாரமான திருப்பங்கள் நிறைந்த ஒரு மர்ம நாவல் வகைதான் இது என்று மட்டுமே சொல்லிவிட முடியாமல், சமயம், சரித்திரம் பற்றிய பல சிக்கல்களையும்,
புதிர்களையும் கருப்பொருளாகக் கொண்டது தான் இந்த நூல் பற்றிய பரபரப்புக்கு முக்கியக் காரணம். காலம் காலமாக கத்தோலிக்க சர்ச்சின் அதிகார பீடம் கட்டவிழ்த்து
விட்ட வன்முறைகள், கட்டுப் பாடுகள், டாவின்சி, கலிலியோ, நியூட்டன் போன்ற கலைஞர்கள் மற்றும் அறிஞர்களை நடத்திய விதம், குறிப்பாக ஏராளமான அப்பாவிப் பெண்களை சூனியக் காரிகள் (witches) என்று பெயர் சூட்டிக் கொன்று குவித்தது இவை அனைத்தும் ஐரோப்பிய வரலாற்று ஆவணங்களிலும் இலக்கியங்களிலும் விலா
வாரியாகப் பதிவு செய்யப் பட்டவை தான்.. ‘டாவின்சி கோட்’ கூறும் முழுக் கதை முடிச்சு கற்பனை என்று பேச்சுக்காக சொன்னாலும், அது குறிப்பிடும் ஒவ்வொரு தனிப்பட்ட கண்ணிகளுக்கும் மிக உறுதியான சரித்திரச் சான்றுகள் உள்ளன. இதுவே இந்த நூல் மற்றும் திரைப் படம் இவ்வளவு கவனத்தைப் பெறுவதற்கு முக்கியக் காரணம்.

டாவின்சி கோட் இயங்கும் சமய, தத்துவ மற்றும் கருத்தியல் பின்புலம் பழைய இயற்கை வழிபாட்டுச் சமயங்கள் (pagan religions) மற்றும் பெண்மையின் புனிதம் (sacred feminine) பற்றியது. மரியா மக்தலேனா என்னும் தனது பெண் சீடரை இயேசு கிறிஸ்து மணம் புரிந்து அவள் மூலம் தனது சமயமும் சந்ததியும் தொடர வழி வகுத்ததாகவும்,
பிற்காலத்திய ரோமானிய அரசும் சர்ச்சும் இந்தத் தத்துவக் கோட்பாட்டையும், இதனை பின்பற்றுவோரையும் வேராடு அழித்து ஒழிக்க முற்பட, பல ரகசியக் குழுக்கள் மற்றும் புனித பரம்பரையின் வழியாக இந்த ரகசியம் காப்பாற்றப் படுவதாகவும், டாவின்சியின் புகழ்பெற்ற ஓவியங்களின் பின் ஒளிந்து கிடக்கும் புனித ரகசியம் இதுவே என்பதாகவும், கதை போகிறது. இதற்கு மேல் கதையைச் சொல்லி இந்த அற்புதமான புதினத்தை இன்னும் படிக்காதவர்களது சுவாரஸ்யத்தைக் கெடுக்க விரும்பவில்லை (இது போதாதா கண்ணா?? :))

ஒன்று மட்டும் நிச்சயம், ஒரு Bestseller மர்மக்கதையை எழுதுவது மட்டுமே டான் பிரவுனின் நோக்கம் அல்ல என்பது. அதீத உருவகங்கள், இயற்கையின் சாயலில் இறைமையை உணர்தல், ஆண்-பெண் உறவின் ஆன்மீகப் பரிமாணங்கள் போன்ற பண்டைய சமயத்தின் கூறுகளை கத்தோலிக்க சர்ச் திட்டமிட்டு அழித்தது பற்றிய கோபம் அவர் எழுத்துக்களில் வெளிப்படுவது கண்கூடு.. நாவலில் ஓர் இடத்தில், “.. அவள் எங்கே மறைந்தாள்? இயற்கையின் வர்ண ஜாலங்களில் இன்றும் வாழ்கிறாள்.. நீ எழுதும் புத்தகம் வழியாக அவளைப் பற்றி நீ உலகுக்குக் கூற வேண்டும்” என்று ஒரு மூதாட்டி கூறுவதாக வருகிறது. சர்ச் பற்றி மிக எதிர்மறையான கருத்துக்களைக்
கொண்டிருந்தாலும் இயேசு கிறிஸ்துவின் புனித வாழ்க்கை பற்றிய உயர்வான மதிப்பீடே உள்ளது. இயேசு-மக்தலேனா உறவின் உருவகம் பற்றிய கருத்தியலும் ஏறக்குறைய
இந்து ஆன்மீக மரபின் பிரக்ருதி-புருஷ, சிவ-சக்தி தத்துவங்கள், சீன மரபின் யிங்-யாங் தத்துவம் இவற்றுக்கு அருகிலேயே உள்ளது.

இந்தப் படம் பற்றிய சர்ச்சைகளுக்கு நடுவில், பாரதியைப் படிக்கலாம் என்று புத்தகத்தைப் பிரித்தேன்.. பக்கம் 156..
“பெண்மை காண் மரியா மக்தலேநா, பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து
நுண்மையான பொருளிது கண்டீர்…. ”
ஆச்சரியம் அடங்கவில்லை..மேலும் சில வரிகள்..
“அன்பு காண் மரியா மக்தலேநா, ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து.. ”
“நேசமா மரியா மக்தலேநா நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்..”

இயேசு கிறிஸ்து பற்றி பாரதி எழுதிய ஒரே ஒரு பாடலில், தேவி மக்தலேநாவைப் பற்றிய இத்தகைய உருவகம் வியப்பளிக்கிறது.. இந்தப் பாடலை முன்பு மேம்போக்காகப் படித்திருக்கிறேன்.. இப்போது அதற்கு ஒரு புதிய பரிமாணம் கிடைக்கிறது. “ஆஹா ! Holy Grail பற்றிய ரகசியக் குறியீடு 20ம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞரின் கவிதையில்..” என்றெல்லாம் கூடக் கரடி விட சாத்தியம் இருக்கிறது!

பராசக்தியின் தியானத்திலும் வழிபாட்டிலும் தோய்ந்த பாரதியின் ஆன்மீகப் பார்வையில், இந்தப் பாடல் மிக இயல்பாகவே வெளிப்பட்டிருக்கக் கூடும். கிறிஸ்வம் பற்றிய ஓரளவு ஆழமான அறிவு பாரதிக்கு இருந்தது. அவரது நெருங்கிய நண்பர் ஆர்யா ஒரு கிறிஸ்தவர். மதமாற்றத்தைக் கடுமையாக எதிர்த்தாலும், கிறிஸ்துவத்தின் அடிப்படை ஆன்மீக
நெறிகளை பாரதி போற்றினார். சில கட்டுரைகளில், பைபிளில் இருந்து மேற்கோள்கள் அளித்திருக்கிறார்.. பகவத்கீதை முன்னுரையில் “நீங்கள் குழந்தைகளைப் போல் ஆனாலன்றி மோட்ச சாம்ராஜ்யம் உங்களுக்கில்லை” என்னும் விவிலிய வசனத்தை கீதையின் உபதேசத்தில் பொருத்துகிறார்.

மேம்போக்கான பைபிள் வாசிப்பின்படி மக்தலேநா ஒரு கல்லெறி படும் விலை மாது என்பதாக சித்தரிக்கப் படுகிறார் (இது ஆணாதிக்க சர்ச்சின் திட்டமிட்ட பிற்காலத்திய புரளி என்று டான் பிரவுன் தன் நூலில் கூறுகிறார்)… ஆயினும் பாரதி கற்ற கிறிஸ்துவக் கருத்துக்களில், இயேசுவின் உயிர்த்தெழுதலை மக்தலேநா தரிசித்தது பற்றிய இந்த
பிரசங்கம் அவரது மனத்தை ஆட்கொண்டு விட்டதாகத் தெரிகிறது. இதே கருத்தமைந்த ஆங்கில நூல் ஏதாவதொன்றை அவர் படித்திருந்திருக்கவும் மிகக் குறைந்த வாய்ப்பு இருக்கிறது.

நிவேதிதா தேவியைத் தன் ஞான குருவாக ஏற்று “பெண்மை வாழ்வகவென்று கூத்திடுவோமடா” என்று பாடிய சக்தி தாசன், மக்தலேநா தேவியை பெண்மை மற்றும் சக்தியின் உருவாகக் கண்டது அவரது ஆன்மீக சாதனையின் ஆழத்தையே காட்டுகிறது. இயற்கை வழிபாட்டினின்று முகிழ்த்த சக்தி தத்துவம் மற்றும் சக்தி வழிபாடு பற்றிய சமயக்
கோட்பாடுகளின் உலகளாவிய தன்மை அற்புதமானது, வியக்க வைக்கிறது. சக்தியை வழிபடும் சாதகர்கள் பாக்கியவான்கள்!
——————————–

jataayu_b@yahoo.com

Series Navigation

ஜடாயு

ஜடாயு