டார்வீனியத்திற்கு அப்பாலான உயிரியல் ? (ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் குறித்து)

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

அரவிந்தன் நீலகண்டன்


1996 இல் வெளிவந்த ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் ‘உயிரின் வலைப் பின்னல் ‘ (The Web of Life). அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளின் தலைவரான சியாட்டில் கூறியதாக பிரபலமாக அறியப்படும் ஓர் உரையிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகள் இவை. ( ‘…உயிரின் வலைப்பின்னல் மனிதரால் நெய்யப்பட்டதல்ல. அவ்வலைப் பின்னலில் ஒரு இழையே மனிதன். ‘) நியூட்டானிய குறுகியல் வாத இயற்பியல் தன் அறிதல் பரப்பளவு பிரபஞ்ச பிரம்மாண்டத்தில் ஒரு மிகச் சிறிய குறுங்கணமே என அறிந்த போது ஏற்பட்ட மனமண்டல மாற்றம் அச்சமயத்தில் நம் அறிதலின் அனைத்து துறைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியது. பல் துறைகள் இணைந்த அறிதல் புலங்கள் உருவாகின. ரஷ்யாவில் புவி வேதியியல் மேதை விளாதிமீர் வெர்னாட்ஸ்கி முதல் அமைப்பு சார் அறிதலை உருவாக்கிய வியன்னா உயிரியிலாளர் லுட்விக் வான் பெர்த்தலான்பி ஊடாக சைபர்னெட்டிக்ஸ் பிதாமகர்களான நாபர்ட் வெயினர், ஜான் வான் நியூமான், கிளாடே ஷெனான் வரையாக பல துறைகளில் அச்சமயத்திலும் அதனைத் தொடர்ந்தும் பல மகத்தான மானுட மேதைகளுடனான அறிவுப் பிரயாணமாக முதல் நான்கு பகுதிகளும் அமைகின்றன. முதல் பகுதி குறிப்பாக வலுவற்று காணப்படுகிறது. சமுதாய மதிப்பீடுகள் நம் அறிவியல் உண்மைகளை எவ்வாறோ நிர்ணயிக்கின்றன எனும் கருத்து பல மார்க்சீய, பெண்ணிய மற்றும் பின்நவீனத்துவ ஆசிரியர்களிடம் காணமுடிகிறது. இக்கருத்தினை ஒட்டியவாறான சில கருத்துகளை கேப்ரா முன்வைக்கிறார்.ஆனால் முன் கூறிய போலி அறிவியல் அல்லது அறிவியல் எதிர்ப்பாளர்களிடமிருந்து கேப்ரா நுண்ணிய ஆனால் முக்கியமாக மாறுபடவும் செய்கிறார். நம் அறிதலே நம் மதிப்பீடுகளை நிர்ணயிப்பதாக கேப்ரா கொள்கிறார்.

அடுத்த இரண்டு பகுதிகளில் மிக நயமாக சுயமுகிழ்வமைப்புகளை (autopietic structures) குறித்து விளக்குகிறார் கேப்ரா. மிகுந்த கணித அறிவு தேவைப்படும் இந்த அறிதலை கேப்ரா மிகவும் எளிதாக ஆனால் தன்மை நீர்ப்பு ஏற்படாமல் விளக்குகிறார். இப்பகுதிகளே இந்நூலின் வாதகதியின் இருதயம் எனலாம். மத்துரானா மற்றும் வரேலா ஆகியோரது உயிரியல், இலையா பிரிகோகைனின் சமசீர்தன்மை இழந்த ஆற்றலுதிர் வேதியியல் அமைப்புகள் (dissipative structures) , ஜேம்ஸ் லவ்லாக் மற்றும் லின் மர்குலிஸின் கயா (Gaia) எனும் ‘புவி ஓர் அதி உயிரி ‘ எனும் முன்யூகம், அதனை தொடர்ந்து உருவாக்கப்பட்ட ‘டெய்சி உலகம் ‘ எனும் கணினி மாதிரி இயக்கம் ஆகியன இங்கு விவரிக்கப்படுகின்றன. அடுத்த பகுதி ‘புதிய உருவாக்கம் ‘ என தலைப்பிடப்பட்டு இந்த அறிதல்களின் மூலம் உயிரின் தன்மைகளை அறிய முற்படுகிறது. முக்கியமாக வரேலாவின் சுயமுகிழ்வமைப்பு மூலம். இந்த சிலி தேச உயிரியலாளர் நோய் தடுப்பு செல்களையும் நரம்பியலையும் ஆழமாக ஆய்வு செய்தவர். செல்லளவில் கூட ஒருவித அடிப்படை பிரக்ஞை முகிழ்த் தெழுவதாக இவர் கருதுகிறார். இம்முகிழ்த்தெழும் தன்மையின் அடிப்படை பருப் பொருளின் கூட்டினால் உருவானதோர் நியூட்டானிய விளைவல்ல மாறாக நம் வீட்டில் போடப்படும் கோலத்திற்கும் அதன் புள்ளிகளுக்குமான உறவு போன்றதென கருதலாம். இக்கோட்பாடு மானுட சமூகங்களுக்கும் விஸ்தீரிக்கப்படுகிறது. இறுதி நான்கு பகுதிகளில் மானுட பரிணாமம் குறித்த சில பார்வைகளும் நூலின் தத்துவ தரிசனமும் விளக்கப்படுகிறது மையப்படுத்தப்பட்ட ஓர் உறுப்பியக்கமாக அல்லாது பிரக்ஞை என்பது உயிரியின் அமைப்பு முழுவதுமாக இழைகளில் முகிழ்தெழுந்து வியாபிக்கும் ஒன்றாக மத்துரானாவும் வரேலாவும் காண்கின்றனர்.இரத்த வெள்ளை செல்கள் சுயத்திலிருந்து அயலை பிரித்தறியும் தன்மையை ஆராய்ந்த இவர்கள் ஒரு கூட்டமைப்புத் தொடராந இயக்கத்தினை காண்கின்றனர்.

1975 இல் வெளியான ‘இயற்பியலின் தாவோ ‘ எனும் நூலின் மூலம் உலகப்புகழ் பெற்ற அணு உட்துகள் இயற்பியலாளரான ப்ரிட்ஜாஃப் கேப்ரா அதன் பின் தொடர்ந்து பன்மை சார்ந்த அறிதல் முறைகளின் சாத்தியக்கூறுகளை அறிவியலின் பல புலங்களிலும் தேடி வருகிறார். அறிவியல் புலங்கள் அனைத்திலும் மிகவும் கடினமான ஒருங்கிணைவு தன்மை கொண்ட உயிரியலில் பொருள்முதல் வாத அடிப்படையிலான குறுகியல் பார்வை மேலோங்கி விளங்கிவரும் சூழலில் நிறுவன அறிவியலின் நீரோட்டத்திற்கு அப்பாலாக அதேசமயம் (ஷெல்டிரேக் போன்ற) போலி அறிவியல் தன்மையற்ற நிலைபாடுகளுக்கான சாத்திய கூறுகளை கேப்ரா முன் வைக்கிறார். உயிரினை பொருள் கூட்டமைப்பில் அல்லது பருப்பொருள் சாராததோர் விசையாக காண முயலும் பொருள்முதல்வாத மற்றும் உயிர் தனித்தன்மை வாதிகளுக்கு அப்பால் உயிரினை ஆற்றோட்டம் போன்றதோர் நிகழ்வாக காண முற்படும் தரம் வாய்ந்த ஆய்வுகளின் மூலம் நிறுவன அறிவியல் வரைந்த உயிர் வரையறைகளை மறுஆக்கம் செய்கிறார் கேப்ரா. துரதிர்ஷ்ட வசமாக டார்வினியம் குறித்த தேவையற்ற குறை கூறல்கள் ( ‘குறுகியல் வாதம் ‘ போன்றவை) இந்நூலில் திருஷ்டிப்பொட்டு. டார்வினியம் பலவிதங்களில் புவியின் அதி உயிரித்தன்மையினை எதிர் நோக்குகிறது. மரபணுவியல் இணைந்த டார்வினியம், நியோ டார்வினியம் எனப்படுகிறது. லின் மர்குலிஸ் மற்றும் டோரியன் சாகன் முன்வைத்த ‘உள்ளுறை ஒத்திசைவு ‘ (endosymbiosis) இயற்கை தேர்வு போன்றதோர் பரிணாம இயங்கியல். அது நுண்ணுயிர் உலகிலும் நம் செல்களிலும் வரை பரவி இயங்குகிறது. இயற்கை தேர்வின் ‘அறிதல் சட்டகம் ‘ வேறு, உள்ளுறை ஒத்திசைவின் அறிதல் சட்டகம் வேறு. டார்வினியம் மிக உணர்ச்சி பூர்வமான மதிப்பீடுகளை உயிரியலுக்கு அளித்துள்ளது. ஜேன் குடாலின் அறிதலும் ரோஜர் பவுட்ஸின் அறிதலும் எந்த மானுடனையும் ஆன்மிக வளர்ச்சி பெற வைப்பவை. கேப்ரா கூறும் ‘ஆழ் சூழலியல் ‘ (Deep ecology) மதிப்பீடுகளை அவர்களுக்கு டார்வினிய அறிதல் அளித்தது. மேலும் ஆபிரகாமிய பிரபஞ்ச தரிசனங்களான கிறிஸ்தவம், இஸ்லாம், கம்யூனிசம், பின்நவீனத்துவம் ஆகியவை போன்றல்லாமல் டார்வின் பல இயக்கங்களின் சாத்தியங்களை மறுக்கவில்லை. இது ஒரு பெரும் அறிவுலக பரிணாம தாவல். இதுவே டார்வினியம் நியோ டார்வினியமாக வழி வகுத்தது. ஜேம்ஸ்லவ்லாக்கே கூட புவி அதி உயிரியாகுதலில் டார்வினிய இயக்கங்களின் இருப்பினை மறுக்கவில்லை.

அறிவியல் எதிர்ப்பு பின் நவீனத்துவ ‘கட்டுடைப்பு ‘ நிகழ்த்தப்பட முடிந்த கற்பனை உலகல்ல டார்வினியம்* மாறாக நம் இருப்புடன் கலந்த சத்தியம். இச்சிறு குறைப்பாட்டினைத் தவிர இந்நூல் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

நூலிலிருந்து சில மேற்கோள்கள்:

‘ஆழ் சூழலியல் அனைத்து உயிர்களின் தன்னியல்பான மதிப்பினை ஏற்கிறது. மானுடம் உயிரின் வலைப்பின்னலில் மற்றோர் இழையென கருதுகிறது. ‘

‘அறிவியலாளர்களும் சரி பொதுமக்களும் சரி , ‘முழுமையான இறுதி விளக்கம் இயற்பியலாளரிடமிருந்து வர வேண்டும். ‘ என கருதுகின்றனர். ஆனால் இது ஒரு கார்ட்டாசிய உலகப்பார்வையின் தவறான விளைவு. இன்று அறிவியலின் மனமண்டல மாற்றம் இயற்பியலிலிருந்து உயிரியல் நோக்கிய நகர்வினை உருவாக்கியுள்ளது. ‘

‘ஓடும் ஓர் பிரவாகத்தில் தோன்றும் சுழல்கள் நாம். (விதிகளை பற்றி) ஒழுகுபவர்கள் அல்ல நாம். நம் இருப்பினை நாமே உருவாக்கும் கோலங்கள் ‘

– வெய்னர்

‘சுய முகிழ்வமைப்புகள் குறித்த அனைத்து அறிவியல் கோட்பாடுகளிலும் நிறுவன அறிவியலின் மிகவும் தீவிர எதிர்ப்பினை எதிர் நோக்குவது அதி உயிரியாக புவியினை அறியும் ‘கயா ‘ தான். பழம் பெரும் புவி தேவதை தொன்மம்தான் இந்த அறிவின் கண் அடங்காத எதிர்ப்புக்கு காரணமா ? ‘

‘இன்று சிக்கலான அமைப்புகள் குறித்த கணித அறிதல் என்பது வறட்சியான கணித சமன்பாடுகளுக்கு அப்பால் நமது உயிரின பிரபஞ்சத்தினை அதன் இயக்கம், அமைப்பு, கோலம், சிக்கல் தன்மைகள் ஆகிய அனைத்து தன்மைகளிலும் அறிதல் பற்றியது. ‘

‘ இருகிளைபிரிவு புள்ளிகளில் (bifurcation points) ஆற்றலுதிர் அமைப்புகள் (dissipative structures) தம் சூழலின் மிக நுண்ணிய மாற்றங்களுக்கும் அதீத உணர் தன்மையுடன் விளங்குகின்றன…அனைத்து தீர்மான கணிப்பியக்கங்களும் இங்கு பொருளற்றுெ போய்விடுகின்றன.மிக நுண்ணிய மாற்றங்களும் முகிழ்த்தெழும் மாற்றங்களை நிர்ணயிக்கலாம். ‘

‘பிரபஞ்சம் குறித்து நாம் நிச்சயமாக கூறமுடிந்த ஒன்று உநூடன்றால், உயிரின் நிகழ்வுக்கான சாத்திய கூறுகள் பிரபஞ்ச வெளியெங்கும் நிரம்பி உள்ளன. ‘

‘மத்துரானா மற்றும் வரேலாவால் அமைப்பியல் இணைசேர்தல் மூலம் உயிருக்கும் உயிரற்ற தன்மைக்குமான வேற்றுமை விளக்கப்படுகிறது. ஒரு கல் மிதி படும் போது தொடர் நிகழ்வுகள் நியூட்டானிய காரண காரிய சங்கிலியினை பின்பற்றி நிகழும்.

ஒரு நாய் மிதிபடும் போது அவ்வாறல்ல. ‘

‘நியோ டார்வினியத்திலோ அனைத்து பரிணாம மூலங்களும் மரபணு பிறழ்தலின் மூலமே பெறப்படுகின்றன…டார்வினியத்தின் அடிப்படைத் தவறு அதன் குறுகியல்தன்மை மாத்திரமல்ல லின் மர்குலிஸ் கூறுவது போல ‘உயிரின் மொழி அல்ஜீப்ராவும் சதாரண கணிதமுமல்ல. மாறாக வேதியியல். ஆனால் நியோ டார்வினிஸ்ட்களோ வேதியியல், நுண்ணுயிரியல் ஆகியவற்றில் போதுமான அறிதல் கொண்டவர்களல்ல. ‘

‘ஜேம்ஸ் லவ்லாக் கூறுவது போல உயிரின் பரிணாமமும் அதன் சூழலின் பரிணாமமும் மிகவும் பின்னி பிணைந்து ஒரே இயக்கமாக செயல்படுகின்றன. ‘

‘பாரபட்சமற்ற அறிவியலாளர்கள், அவர்கள் திமிங்கிலங்களாகவோ டால்பின்களாகவோ இருந்தால், மனிதர்கள் சிம்பன்ஸிகள் ஒராங்குட்டான்கள் ஆகியவற்றை ஒரே உயிரியல் பிரிவாக வகைப்படுத்துவார்கள். மானுடர்கள் தனி உயிரியல் குடும்பமாக அங்கீகரிக்கப்பட எந்த ஒரு உயிரியல், உயிரியங்கியல் காரணங்களும் கிடையாது. பொதுவாக எடுத்துக் கொண்ட இரண்டு வெவ்வேறு வண்டினங்களிடையே இருப்பதைக் காட்டிலும் குறைவான வேறுபாடுகளே சிம்பன்சிகளும் மனிதர்களுக்கும் உள்ளது. ‘ (நூலில் காட்டப்பட்ட லின் மர்குலிஸ் மேற்கோள்)

‘உயிரினங்கள் சுயத்தன்மை கொண்டவை. சூழல் அமைப்பியல் மாற்றங்களை உருவாக்கலாம். வழிநடத்துவதில்லை. ‘

‘மத்துரானா மற்றும் வரேலாவின் வார்த்தைகளில் ‘வாழ்தல் என்பது அறிதலே ‘ ‘

*(அதற்குதான் அபத்த நாடகங்களும் இலக்கியங்களும் மலை போல குவிந்திருக்கின்றனவே. அறிவியல் புலங்களில் கட்டுடைப்பு நடத்த முற்படும் அதி தீவிர பின்நவீனத்துங்களின் மூக்குகள் சோகலால் உடைக்கப்பட்டது பலருக்கு நினைவிருக்கலாம். மறந்து விட்டவர்கள் சோகலின் வீட்டு முற்றத்திலிருந்து நியூட்டனின் விதி அவரது காலத்திய சமுதாய மதிப்பீடுகளால் உருவாக்கப்பட்ட ஒன்று என கட்டுடைக்கலாம். சோகலின் வீடு பதினோராவது மாடியில் உள்ளது.)

***

infidel_hindu@rediffmail.com

Series Navigation

author

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

Similar Posts