டயரி

0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

ஞாநி


பொருள் இல்லார்க்கு இவ்வுலகில்லை என்று வள்ளுவன் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நொந்து சொன்னது இன்னும் 2000 ஆண்டுகளுக்கு சாகாமல் இருக்கும் என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு ஜுன் ஜுலை மாதங்களிலும் ஏழை மாணவர்கள் பீஸ் கட்டப் படும் பாடுகள், வீட்டுக் கடன் வாங்குவதற்கு ஆள் பிடிக்க அலையும் நவீன வங்கிகள் கல்விக்கடனுக்கு மாணவர்களைப் படுத்தும் பாடுகள் காந்தியவாதியைக் கூட நக்சல்பாரியாக்கிவிடும்.

ஆனால் வள்ளுவன் சொன்ன பொருள் என்பது பணம் என்று கருதத் தேவையில்லை. அர்த்தம் இல்லாத வாழ்க்கை வாழ்வோருக்கானது அல்ல இந்த உலகம் என்றும் வள்ளுவன் சொன்னதாக கருதிக் கொள்பவர்கள் உண்டு. அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் பணத்தைத் தேடுவதை விட அர்த்தத்தைத் தேடுபவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் கலை, இலக்கியவாதிகள் அப்படிப்பட்டவர்கள். (எல்லாரும் அல்ல.)

இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன என்று தேடும் கலை இலக்கியப் படைப்புகளைக் கூட மக்களிடம் சென்று பகிர்ந்து கொள்ள வேண்டுமானால், திரும்பவும் அதற்கும் பணம் தேவைப்படுகிறது ! சிறந்த கலைஞர்கள், படைப்பாளிகள் இதனால்தான் எப்போதும் புரவலர்களை, வள்ளல்களை நம்பி வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

நம்முடைய சம காலத்தில் சிறந்த திரைப்படக் கலைஞரான சத்யஜித் ரே தன் முதல் படத்துக்கான பணத்துக்காக சிரமப்பட்ட கதையை நினைவு கூரும் சந்தர்ப்பத்தை தமிழ் நாடு திரைப்பட இயக்கத்தின் ரே பட விழாவில் அண்மையில் எனக்குத் தந்தது. ரே ஒரு பரம்பரைப் பணக்காரர். சொந்தப் பணத்தில் எளிதாக வறுமையைப் பற்றி படம் எடுத்து தள்ளிவிட்டார் என்று ஒரு அவதூறு நம்முடைய நாடாளுமன்றம் முதல் பல அரங்குகளில் ஒரு காலத்தில் பேசப்பட்டிருக்கிறது. ரேவின் தாத்தா ஓவியர். எழுத்தாளர். பெரும் அச்சகம் நடத்தி பணம் குவித்தவர். ரேவின் அப்பாவும் ஓவியர் எழுத்தாளர். ஆனால் ரே சிறு குழந்தையாக இருந்தபோதே அப்பா இறந்தார். தாத்தாவின் அச்சகம் நொடித்துப் போய் குடும்ப சொத்தையெல்லாம் கடனுக்காக விற்க வேண்டியதாயிற்று. ரேவின் அம்மா ஆசிரியையாக வேலை பார்த்து ரேவை படிக்க வைத்தார். ரேவும் ஓவியராகி விளம்பர கம்பெனியில் பணியாற்றினார். 30ம் வயதில் படம் எடுக்க முற்பட்டபோது இன்சூரன்ஸ் பாலிசி மீது கடன் வாங்கி, மனைவியின் நகைகளை அடகு வைத்துதான் ஆரம்பித்தார். கொஞ்சம் படம் எடுத்துவிட்டு அதை விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டினால் மீதி பணம் கிடைத்துவிடும் என்று நம்பினார். இரண்டு வருடமாகியும் அது நடக்க வில்லை. கடைசியில் மேற்கு வங்க காங்கிரஸ் முதல்வர் பி.சி ராய்க்கு படத்தைப் போட்டுக் காட்டியதும் , இது கிராம முன்னேற்றம் பற்றிய படம் என்று அவர் அப்பாவித்தனமாக நம்பி அரசுப் பணத்தைக் கொடுத்தார். சர்க்கார் அதிகாரிகளுடன் ரே பட்ட பாட்டை அவர் பகிரங்கமாகப் பேச விரும்பவே இல்லை. கடைசி வரை முதல் படமான பதேர் பாஞ்சாலியிலிருந்து ரேவுக்கு ஒரு காசு கூட கிடைக்கவில்லை.

சினிமாவைப் பொறுத்தவரை இன்று கோடிக்கணக்கான பணம் செலவானாலும், அத்தனையும் மக்கள் கொடுக்கும் டிக்கட் காசிலிருந்துதான் வருகிறது. ஆனால் நவீன தீவிர நாடகத்தின் நிலை அப்படியில்லை. புரவலர்களை நம்பியே இயங்க வேண்டியிருக்கிறது. (இதைப் பிடிவாதமாக 25 ஆண்டுகளாக எங்கள் பரீக்ஷா நாடகக்குழு மறுத்து வருகிறது.) ப்ரெஞ்ச் கலாசார அமைப்பான அலையன்ஸ் பிரான்சே அரங்கில் இரண்டு தமிழ் நாடகங்கள் அண்மையில் நடந்தன. டெல்லி தேசிய நாடகப்பள்ளி பட்டதாரியான பாலகிருஷ்ணன் இதுவரை ஆங்கில, ஹிந்தி நாடகங்களையே இயக்கி நடித்தவர். அந்தி வெளி அவருக்கும் பல நடிகர்களுக்கும் முதல் தமிழ் நாடகம். ( என்னுடைய ‘அய்யா ‘ தொலைக்காட்சித் தொடரில் அவர் இளம் பெரியார் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.)

அவரது நாடகம் எந்த காலத்திலும் சுவையாகவும் காலத்துக்குப் பொருத்தமானதகவும் இருக்கக்கூடிய மகாபாரதத்தில் போருக்குப் பிந்தைய கதை. சாகும் தருவாயில் மனம் திருந்திய துரியோதனன், பழி வாங்கத் துடிக்கும் அஸ்வத்தாமா, சூழ்ச்சிக்கார கண்ணன், அவனை சபிக்கும் காந்தாரி, தன்னால் நடந்த இந்தப் போரால் தன் நிலையில் என்ன மாற்றம் என்று யோசிக்கும் திரெளபதை என்று அருமையான பாத்திரங்கள். பொதுவாக எல்லாருமே சீரான தரத்தில் நடிப்பு. இருந்தும் நாடகம் பெண்ணியத்துக்கும் அழுத்தம் தரவில்லை.. யுத்த எதிர்ப்புக்கும் தரவில்லை.

இன்னொரு நாடகம் தேசிய நாடகப்பள்ளியின் பயிற்சிப் பட்டறையில் அதன் இணைப்பேராசிரியர் கே.எஸ்.ராஜேந்திரன் உருவாக்கியது. (எழுபதுகளில் சென்னையில் வீதி நாடக இயக்க உருவாக்கத்தில் ராஜேந்திரனும் நானும் ஒன்றாகப் பணியாற்றியவர்கள்) மராத்தியில் சதீஷ் அலேகர் எழுதிய மகா நிர்வாண் மறைந்த கே.வி.ராமசாமியால் தமிழாக்கப்பட்டது. செத்தபிறகு தனக்கு மனைவியும் மகனும் சடங்குகள் செய்வதை தானே ஒருவன் பார்ப்பதாக அமைக்கப்பட்ட கற்பனையின் ஊடே குடும்ப உறவுகள், மரணத்தின் அர்த்தம், சடங்குகளின் அர்த்தமின்மை முதலியவை பற்றி சிந்திக்க வைப்பது அலேகரின் நோக்கமாக இருந்திருக்கலாம். அடையாறு திரைப்படக்கல்லூரி பட்டதாரியான ராஜேஸ்வரியும், பாரதி மணியும் தங்கள் சிறந்த நடிப்பால் நாடகத்தைக் காப்பாற்றினார்கள். மற்றபடி நாடகம் மேம்போக்கான சபா நாடக காமெடி திசையில் போய்க் கொண்டிருந்தது.

இரண்டாவது நாடகத்துக்கு அரங்கு நிரம்பி வழியும் கூட்டம். காரணம் டிக்கட் கிடையாது. பாலாவின் நாடகத்துக்கு டிக்கட் இருந்ததால் குறைவான கூட்டம். செலவை சந்திக்க புரவலர் உதவிகள் இருந்தும் பாலா சிரமப்பட வேண்டியிருந்தது. நாடகம் இலவசமாயிருந்தால் வந்து குவிகிற, ஆனால் டிக்கட் வாங்கத் தயங்கும் நடுத்தர வர்க்க பார்வையாளர்கள் மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

மகா நிர்வாண் நாடகத்தன்று நாடகத்தைப் பாராட்டிப் பேசிய நாடகாசிரியர் இந்திர பார்த்த சாரதி இவ்வளவு நல்ல நடிகர்கள் சென்னையில் இருந்தும் ஏன் அதிகம் நவீன நாடகங்கள் நடப்பதில்லை என்று வருத்தப்பட்டார். பணம் இல்லாததுதான் காரணம் என்று நான் ஆடியன்சிலிருந்து பதில் சொன்னேன். பாலா ஆமோதித்தார். இ.பா தான் பணம் ஏற்பாடு செய்வதாக அறிவித்தார். அவரிடமிருந்து பணம் கிடைத்ததும் நாடகம் போடுவதாக நானும் அறிவித்தேன். இருவரும் விரைவில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

பணத்துக்கான உத்தரவாதம் வாழ்க்கையில் கிடைத்த பிறகும் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடிய கலைஞர்கள் கே.வி.ரமசாமியும் பாரதிமணியும். ராமசாமி தபால் துறை அதிகாரியாக நிரந்தர வேலையில் இருந்தவர். ஆனால் எழுத்து, நாடகம் இரண்டிலும் தீவிரமான அக்கறைகளுடன் செயல்பட்டார். ஞானரதம் ஆசிரியர் குழுவில் இருந்தார். வீதி நாடக இயக்கத்தை உருவாக்குவதில் உழைத்தார். என் வீதி நாடகமான ‘குசேலன் கதை ‘யில் குசேலனாக நடித்தார். அவருடைய ‘ஹிரண்யகசிபு ‘ என்ற அற்புதமான சிறு நாடகத்தை பரீக்ஷா பல முறை நடித்திருக்கிறது. இன்றும் பொருத்தமன நாடகம் அது. நாராயணாய நமஹ என்று சொல்லும் மக்களை ஹிரண்யாய நமஹ என்று சொல்லும்படி கொடுமை செய்கிறான் ஹிரண்யன். அவனைக் கொல்ல ஆவேசமாக வருகிறது நரசிம்மம். சமாதான சக வாழ்வு முக்கியம். எனவே முதலில் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்கிறான் ஹிரண்யன். இரண்டு மூன்று சுற்று பேச்சு வார்த்தைகளும் தோல்வியடைகின்றன. கடைசியில் ஹிரண்யன் சொல்லும் தீர்வை நரசிம்மம் ஏற்றுக் கொண்டு போய்விடுகிறது. தீர்வு என்ன ? மக்கள் அவதிப்படக் கூடாது என்பதுதனே நரசிம்மத்துக்கு முக்கியம். அவர்கள் எப்போதும்போல நாரயணாய நமஹவே சொல்லட்டும். நான் இனி என் பெயரை நாராயண என்று மாற்றிக் கொண்டு விடுகிறேன் என்கிறான் ஹிரண்யன். எப்படி ? இன்றைய சூழலுக்கும் பொருத்தமயிருக்கிறதல்லவா ?

சூழல் என்றதும் புதிய சூழலில் தன்னைப் பொருத்திக் கொண்டு முதிர்ந்த வயதிலும் இயங்குபவர் என்று நடிகர் பாரதி மணியைச் சொல்லலாம். பாரதியாரின் அப்பாவாக பாரதி படத்தில் சிறப்பாக நடித்தும் உதவி இயக்கமும் செய்த பிறகு எஸ்.கே.எஸ்.மணி பாரதி மணியாகிவிட்டார். அறுபது வருடங்களாக நாடக நடிகராக இருக்கும் மணி டெல்லிக்காரர். அங்கே தொழில் துறையில் வசதியாக இருந்தபோதும் நாடக மேடை அவருக்கு பெரும் போதையாக இருந்தது. இ.பாவின் தமிழ் நாடகங்களை முதலில் மேடையேற்றினார். தொடர்ந்து நாடகம் எழுத இ.பாவுக்கு உந்துதலக இருந்தார். ( இ.பாதான் விமர்சகர் க.நா.சுப்ரமணியத்தின் மகளுக்கும் மணிக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்தாராம்.) இரண்டு தலைமுறைகளுக்குப் பின் பென்னேஸ்வரன் என்ற இளைஞர் டெல்லியில் நவீன நாடகங்கள் செய்தபோது அதிலும் மணியின் பங்களிப்பு தொடர்ந்தது. முதிர்ந்த வயதில் சென்னை வந்த பிறகு டி.வி , சினிமா உலகில் நுழைந்தபோதும் மணியின் மனம் நாடகத்திலேயே லயித்திருக்கிறது. மகா நிர்வாண் நாடகத்தில் மணியின் டைமிங் நவீன நாடகக்காரர்கள் கற்றுக் கொள்ள வேண்டியதாகும்.

மணி போன்றவர்கள் பங்கேற்க தமிழ் சினிமாவில் ரே, பெனகல் போன்ற இயக்குநர்கள் உருவாகாதது ஒரு குறைதான். பெனகல் என்றதும் சென்ற இதழில் பெனகலின் படத்தில் நரேந்திர மோடி வேடத்தில் சுந்தர ராமசாமியைப் போடலாம் என்று நான் எழுதியது சில சு.ரா பக்தர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது சு.ராவின் எழுத்தை படித்த பிறகும் அவர்கள் இப்படி இருப்பது விசித்திரம்தான். எம்..ஜி.ஆர் தன் படத்தில் நல்லவனாக ஏழைப்பங்காளனாக நடித்தால் நிஜ வாழ்விலும் அவர் அப்படியே என்று நம்பி ஏமாறும் பெரும் ரசிகர் கூட்டத்தின் பாமர மன நிலைக்கு ஒப்பானது இது. கிரீஷ் கர்னாட் மகளின் காதலனை கொலை செய்யத் துடிக்கும் வில்லன் அப்பாவாக நடித்தால் அவர் நிஜ வாழ்விலும் வில்லனாகிவிடுவாரா என்ன ?

கிரீஷ் கர்னாட் என்றதும் இந்த டைரியின் முதல் பத்தி விஷயம் மறுபடியும். ஒரு சிறந்த படைப்பாளி பணத்துக்காக வேறு துறையில் அசட்டுத்தனங்கள் செய்வதைப் பற்றி வள்ளுவர் எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. சொல்லியிருந்தால் தெரிவியுங்கள்.

—-

Series Navigation

டயரி

0 minutes, 3 seconds Read
This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

ஞாநி


ஒரு மனிதர்.. .. ..

பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வி.பி.சிங்கை சந்தித்தேன். கலைஞரின் முத்து விழாவில் பேசுவதற்காக சென்னை வந்திருந்தார்.

1987ல் அவர் ஜன் மோர்ச்சா தொடங்கியதிலிருந்து தேசிய முன்னணி உருவாகி அவர் 1989ல் பிரதமர் ஆகும்வரை தமிழகத்தில் அவருடைய பொதுக் கூட்டங்களில் பெரும்பாலும் நான்தான் அவருடைய பேச்சை மொழிபெயர்த்து வந்தேன். இதற்குக் காரணமாயிருந்த நண்பர் அரசியல் பிரமுகர் ஜெகவீரபாண்டியனுடன் சென்ற வாரம் தாஜ் கொரமேண்டல் ஓட்டலில் தங்கியிருந்த வி.பி.சிங்கை சந்தித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. அவருடன் நான் சென்ற தேர்தல் பிரச்சாரப் பயணத்தையும் என்னையும் நன்றாக நினைவு வைத்திருந்தார்.

சுமார் எட்டாண்டுகளக வாரம் மும்முறை சிறு நீரக சுத்திகரிப்பு சிகிச்சையில் ( டயாலிசிஸ்) உயிர் வாழ்ந்து வருகிறார் வி.பி.சிங். டெல்லி குடிசைவாசிகள் உரிமை போன்ற பிரச்சினைகளில் குரல் கொடுப்பது, அயோத்தியில் வேறு இடத்தில் ராமர் கோவிலும் மசூதியும் கட்ட ஏற்பாடு செய்வது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வரும் அவர் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அணியை ஆதரித்தார்.

பி.ஜே.பி ஆட்சி முடிந்ததில் பெரு மகிழ்ச்சியுடன் இருந்தார். மண்டல் கமிஷனை செயல்படுத்தியதற்காக அவர் ஆட்சியை 1990ல் பி.ஜே.பி கவிழ்த்தது. நானறிந்து ஃபெடரலிசத்தில் மெய்யான அக்கறை காட்டிய இந்திக்காரப் பிரதமர் அவர் ஒருவர்தான்.

தேர்தலினால் இரு மாதங்களாக ஓவியம் தீட்ட முடியவில்லை என்றார். விரைவில் சென்னையிலும் அவருடைய ஓவியக் கண்காட்சியை நடத்த விருப்பம் தெரிவித்தார்.

வி.பி.சிங்கை சந்திக்க வந்திருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஒரு நிகழ்ச்சிக்காக அவரிடம் தேதி வாங்கினார். ஆகஸ்ட் 12. திருச்சியில் ஒரு நூல் வெளியீட்டு விழா. வி.பி.சிங்கின் ஹிந்திக் கவிதைகளின் தமிழாக்கம் வெளியாகிறது. மொழிபெயர்த்திருப்பவர் தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதத்தின் வாரிசு கண்ணன். நானும் 1990ல் ஜுனியர் விகடனுக்காக அவருடைய ஓரிரு கவிதைகளை ஆங்கில வழியாக மொழிபெயர்த்திருக்கிறேன். கண்ணன் ஹிந்தியிலிருந்து நேரடியாக செய்திருக்கிறார்.

தமிழறிஞர்களின் குடும்பங்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று பல மொழி அறிவு பெற்றுத் திகழ்வதும், தாமாக விரும்பி எவரும் எந்த மொழியையும் கற்கும் உரிமையும் வாய்ப்பும் இருப்பதும் வரவேற்கத்தக்கது. எனக்கும் மலையாளம் கற்கவேண்டுமென்று நீண்ட காலமாக நிறைவேறாத ஆசை.

—-

ஒரு சிற்பம்.. ..

இன்னொரு நிறைவேறாத ஆசை சிற்பம் செய்வது. குறிப்பாக சுடுமண் சிற்பங்கள்.

ஐரோப்பாவிலும் பழைய சோவியத் யூனியனிலும் பொது இடங்களில், தெரு சந்திப்புக்களில் வைத்திருக்கும் விதவிதமான சிற்பங்களைப் படங்களில் காணும்போதேல்லாம் சென்னையிலும் இப்படி நல்ல சிற்பங்கள் வைக்கலாகாதா என்று ஏக்கமாக இருக்கும். சென்னையில் எனக்குப் பிடித்த சிற்பங்கள் மிகச் சில. ராய் சவுத்ரியின் உழைப்பாளர் சிலை. குதிரை வீரன் மன்றோ சிலை. அண்ணா மேம்பாலம் கீழே குட்டியாக உட்கார்ந்து புத்தகம் படிக்கும் அண்ணா சிலை. லலித் கலா அகாதமி வளாகத்தில் முன்பிருந்த பெண் முண்டம் சிலை ( female torso). சோழமண்டலம் ஓவிய கிராமத்தில் நந்தனின் சுடுமண் சிற்பங்கள்.

அண்மையில் ஒரு பழம் சிற்பத்தை புனரமைத்த செய்தி கவனத்தைக் கவர்ந்தது. உலகப்புகழ் பெற்ற சிற்பி மைக்கெல் ஏஞ்சலோ பளிங்குக் கல்லில் வடித்த டேவிட் என்ற சிற்பத்துக்கு இந்த செப்டம்பரில் 500 வயதாகிறது. இது சுமார் 350 வருடங்கள் திறந்த வெளியில் பொது இடத்தில் இருந்தது, பிறகு ஒரு பிரதியை அங்கே வைத்துவிட்டு அசலை ஃப்ளாரன்ஸ் நகரின் அகதமி கேலரியில் வைத்தார்கள். அசல் பழுதுபடாமல் கறைகளை நீக்கி, அழுக்கை சுரண்டி, சுத்தப்படுத்தும் வேலையை செய்தவர் இதில் தேர்ச்சி பெற்ற பெண்கலைஞர் சின்சியா பார்னிகோனி. இரு வருட காலமும் நான்கு லட்சம் யூரோ செலவும் பிடித்த இந்த வேலை முடிந்து சிலையை நிருபர்களுக்குக் காட்டிய சின்சியா ஆனந்தக் கண்ணீரில் அழுதார்.

இந்த சிற்பம் வரலாற்றில் பல சிக்கல்களை சந்தித்து மீண்டிருக்கிறது. ஒரு முறை வெள்ளம் மூழ்கடித்தது. பிறகு கிளர்ச்சியாளர்கள் ஒரு கையை உடைத்தார்கள். கணுக்காலில் சுத்தியால் உடைத்தார்கள். ஒரு முறை சிலையை மின்னல் தாக்கியது. இதற்கெல்லாம் மேல், டேவிட் அம்மணமாக நிற்பதைப் பொறுக்க முடியாத நகர நிர்வாகம் உலோக ஆலிலையை மாட்டியது. பிறகு அது எடுக்கப்பட்டுவிட்டது. சங் பரிவாரங்கள் கையில் டேவிட் சிக்கினால் என்ன ஆவான், யோசித்துப்பாருங்கள்

ஃப்ளாரென்ஸ் நகரம் தன் கலைச் செல்வங்களில் காட்டும் அக்கறையில் ஒரு துளி கூட நம் அரசுகள் காட்டுவதில்லை. குமரி முனை வள்ளுவர் சிலைக்கு விசேட பெயிண்ட் அடிக்காமல் அது நாசமாகிக் கொண்டிருக்கிறதாம். எனினும் எனக்கு அந்த சிலையை பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த வள்ளுவர் சிலை மயிலை லஸ் செல்லும் வழியில் உள்ளதுதான்.

—-

ஒரு சில மரணங்கள்.. ..

கடந்த சில மாதங்களில் பொது வாழ்க்கையில் இருந்த சில முக்கியமான மனிதர்கள் முடிவெய்தினார்கள்.

செத்தார், இறந்தார் என்பது மரியாதைக் குறைவாகக் கருதப்படுகிறது. காலமானார் என்றால் அதற்கு அர்த்தம் என்ன ? ஒருவர் கடவுளாகிவிட்டார் என்பது போல காலம் ஆகிவிட்டார் என்று அர்த்தமா ? காலாவதி ஆவது வேறு. ஒருவர் வாழ்க்கை முடிந்துவிட்டது. எனவே அவர் முடிவெய்தினார். முடிவடைந்தார். அவ்ர் வாழ்க்கை முடிந்தது என்பவைதான் சரியாக இருக்கின்றன. முடிவெய்தினார் என்ற பிரயோகம் பெரியார் உருவாக்கியது என்று ஒரு முறை விடுதலை ராஜேந்திரன் எனக்குச் சொன்னார். அப்படி அண்மையில் முடிவெய்தியவர்களில் சிலரைப்பற்றி.

தமிழில் மூன்று எழுத்தாளர்கள்:

கந்தர்வன் : முற்போக்கு, மார்க்சியம் பேசும் படைப்பாளிகளுக்கு கலை நயம் வராது என்று கட்டப்படும் கதைகளைப் பொய்யென்று தன் சிறுகதைகளால் நிரூபித்தவர். உண்மையான மார்க்சியவாதி எதையும் திறந்த மனதுடன் அணுகவேண்டும் என்று நம்பியவர் அவர். தீம்தரிகிட மீது அன்பும் நம்பிக்கையும் காட்டியவர். ஏப்ரல் ஆண்டு விழாவுக்கு முன் நாள் போனில் பேசியபோது உடல் தளர்வின் விரக்தியை மீறி நம்பிக்கையுடன் ஒலித்தது அவர் குரல்.

தி.சா.ராஜு: ராணுவத்தில் பணியாற்றிய காந்தியவாதி. அகிலன், நா.பார்த்தசாரதி கால எழுத்துக்களில் இருந்த லட்சியவாதத்தை இன்னும் கவித்துவமாகவும் பரந்துபட்டதாகவும் ஆக்க முயற்சித்த இவர் ஹோமியோபதி மருத்துவராகவும் மனிதராகவும் ஆற்றிய தொண்டு பற்றி அ.மார்க்ஸ் எழுதிய அஞ்சலிக் கட்டுரை சிறப்பானது.

காசியபன்: இவருடைய அசடு நாவல் தமிழ் நாவல்களில் நிச்சயம் ஒரு மைல் கல். முஹம்மது கதைகள் யதார்த்த நிகழ்ச்சிகளிலிருந்து மனித மன சிக்கல்களைப் புரிந்து கொள்ளச் செய்யும் படைப்பு.

இரண்டு சமூகப் போராளிகள்:

நீதிபதி வி.எம்.தார்குண்டே: எழுபதின் குழந்தைகளான என் போன்றோருக்கு மனித உரிமைகள் சிவில் உரிமைகள் முதலியன பற்றிய ஆழமான அக்கறையை எழுப்பிய பி.யு.சி.எல்லைத் தோற்றுவித்தவர். நல்ல படிப்பும் வசதியான வாழ்க்கை முறையும் வாய்த்ததும் சமூகத்தில் தீவாக வாழ்ந்துவிட்டுப் போய்விடாமல், ஏதோ ஒரு புள்ளியில் எல்லா மனிதர்களுடனும் தன்னை இணைத்துக் கொள்ளும் மனம் அபூர்வமானது. அந்த மனம் இருந்ததால்தான், தார்குண்டே மதுரையில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் போலீஸ் அடிகளைத் தாங்கிக் கொண்டு மனித உரிமைகளுக்காக அயராமல் உழைக்க முடிந்தது. எஸ்.வி.ராஜதுரை தார்குண்டேவுக்கு எழுதிய அஞ்சலி செறிவானது.

ஈ.கே. நாயனார்:

ஒரு இடதுசாரி விதூஷகராகவே மீடியாவால் பெரிதும் சித்தரிக்கப்பட்டுள்ள கேரள முன்னாள் முதல்வர் நாயனாரின் வாழ்க்கை விவரங்களைப் படித்தால், மீடியாவின் அநீதி புரியும். நாயனாரின் தலைமறைவு வாழ்க்கையும் , சாதாரண மக்களுடன் இடைவிடாமல் அவர் கொண்டிருந்த தொடர்பும், ஒரு வறட்டு இடதுசாரி இயந்திரமாக இல்லாமல் மக்கள் தலைவனாக மாறுவது எப்படி என்பதற்கான கைட்புக் மாதிரி இருக்கிறது. நகைச்சுவை உணர்ச்சியையும் இர்ரெவெரென்ஷியல் ஆட்டிட்யூடையும் (புனித மறுப்பு மனநிலை ?) அவரிடமிருந்து எல்லா இடதுசாரிகளும் கற்க வேண்டும்.

ஒரு அமெரிக்க அதிபர்:

ரொனால்ட் ரீகன் : நடிகராக இருந்து முதல்வராகி ஜனாதிபதியானதால், ரீகனை அமெரிக்காவின் எம்.ஜி.ஆர் என்று வர்ணித்தது மீடியா. மற்றபடி ரீகனுக்கும் எம்.ஜி.ஆருக்கும் பெரிய ஒற்றுமைகள் இல்லை. அமெரிக்க அரசை மிகவும் பிற்போக்கான, உலக மக்களுக்கு விரோதமான திசையில் தீர்மானமாக இழுத்துச் சென்ற கன்சர்வேட்டிவ் அதிபராகவே ரீகனை நினைவு கூர முடிகிறது. முதுமையும் நோயும் எவருக்கும் அனுதாபத்துக்குரியவைதான்.

—-

dheemtharikida june 2004

dheemtharikida @hotmail.com

Series Navigation

author

ஞாநி

ஞாநி

Similar Posts