ஞானோதயம் (நிறைவு பகுதி)

This entry is part [part not set] of 31 in the series 20091211_Issue

ஜோதிர்லதா கிரிஜா


3.

கிராமத்துக்குத் திரும்பிய ரத்தினத்துக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. சாந்தியின் புன்னகை தவழும் முகமும், அவனது கறுப்பை வெறுக்காமல், அவனது நல்ல உள்ளத்தை உள்ளுணர்வாய்ப் புரிந்து கொண்டு அதன் பொருட்டு அவன்பால் ஈர்க்கப்பட்ட அவளது நல்ல அடிப்படையும் அவனுக்கு ஞாபகம் வந்துகொண்டே இருந்தன. எனினும், ‘ஒரே மகள். பெற்றோரை விட்டுப் பிரிய மனமில்லை என்பது புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், அதற்காக நான் என்னுடைய கடமையையோ, சிறு வயதில் எடுத்த முடிவையோ, நான் டாக்டராக உதவிய கிராமத்து மக்களின் பால் எனக்கு இருக்க வேண்டிய நன்றி உணர்ச்சியையோ புறக்கணிக்க முடியுமா என்ன? பார்க்கலாம். அத்தை சொன்னது மாதிரி ஒருவன் பெண்டாட்டியை இன்னொருவன் கட்ட முடியாது. அது பிரும்மா போட்ட முடிச்சு. . .’ என்று அடிக்கடி நினைத்துத் தன் மனத்தைச் சமாதானப் படுத்திக் கொள்ள முயன்றான்.

. . .சாந்தியுடனான ரத்தினத்தின் சந்திப்பு நிகழ்ந்து ஆறு மாதங்களாகிவிட்டன. ஆனால் முன் பின் அறிமுகமோ பழக்கமோ இல்லாத அவனை அறவே மறந்து தன் நெஞ்சினின்று அகற்றுவது அவளுக்குக் கடினமாக இருந்தது. கன்னங்கரிய அந்த அழகான முகத்தின் வட்ட விழிகளும் அந்தக் கறுப்புக்கு மாறான விழிகளுடையவும், வரிசையான பற்களுடையவும் பளீர் வெண்மையும் அடிக்கடி ஞாபகம் வந்து அவளை அலைக்கழித்தன. கண்டதும் காதலிப்பதில் துளியும் நம்பிக்கை யற்ற தன்னால் அவனை ஏன் மறக்க முடியவில்லை என்னும் கேள்விக்கு அவளுக்கு விடை கிடைக்கவில்லை. ஆழமாக யோசித்த போது, “கண்டதும் காதல்” என்பதாய் ஒன்று இருக்கிறது போலும் என்றுதான் அவளுள் ஐயம் கிளர்ந்தது. அவனை மறந்து அவன் பற்றிய எண்ணங்களை உதறித் தள்ளிவிட்டுப் பழையபடி இருக்க முயன்று அவள் தோற்றுக்கொண்டிருந்தாள்.

ரத்தினம் அடிக்கடி அவள் கனவில் தோன்றினான். சினிமாவில் வருவது போல் இருவரும் அவள் கனவில் மரங்களைச் சுற்றி வந்து பாட்டுப் பாடவில்லைதான். ஒருவரை யொருவர் தொடவில்லை. பேசிக்கொள்ளக் கூட இல்லை. ஆனால், இறுதியாய்க் கைகூப்பி அவளிடமிருந்து அவன் விடை பெற்ற போது அவன் அவளைப் பார்த்த பார்வையும் மகிழ்ச்சி காணாமற்போயிருந்த அந்த முகமும் அவளை அடிக்கடி தொந்தரவு செய்த வண்ணம் இருந்தன. உடனே திடுக் கென்று தூக்கம் கலைந்து விழித்துக் கொள்ளுவாள். இப்படி அடிக்கடி கனவில் வந்து தன்னைத் தொந்தரவு செய்த அவனை மறக்க எத்தனை நாள்களாகும் என்பதும் அவளுக்குத் தெரியவில்லை.

ஒரு நாள் ஒரு திடீர் உந்துதலில் அவனுக்குக் கடிதம் எழுத அவள் தீர்மானித்தாள்.

4.

. . . சாந்தியிடமிருந்து வந்த கடிதத்தை ரத்தினம் அளவற்ற வியப்புடன் திரும்பத் திரும்பப் படித்தான்.

‘அன்புள்ள ரத்தினம் அவர்களுக்கு.

வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? அடிக்கடி எனக்கு உங்கள் ஞாபகம் வருகிறது. ஏனென்று புரியவில்லை. நீங்கள் மிகவும் நல்லவர் என்பதை நான் உங்களை முதன் முதலாய்ப் பார்த்த கணத்திலேயே புரிந்துகொண்டேன். அதனாலேயே உங்கள் நிறம் எனக்கு ஒரு பொருட்டாகவே படவில்லை. என்னுடைய அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என் சம்மதம் வியப்பைத் தந்தது. நீங்கள் நல்லவராக இருப்பதால்தான் கிராமத்து மக்களுக்கு மருத்துவச் சேவை செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள் என்பது எனக்குப் புரியாமல் இல்லை. ஆனால் ஏழை மக்கள் நம் நாட்டில் எங்கணும் அளவற்ற எண்ணிக்கையில் பரவிக் கிடக்கிறார்கள்.

சென்னையின் சுற்றுப் புறங்களில் உள்ள இலட்சக் கணக்கான ஏழைகள் கிராமத்து மக்களைவிடவும் எந்த வகையிலும் பொருளாதார ரீதியாக உயர்ந்தவர்கள் அல்லர். இந்த ஏழைகளும் இரக்கத்துக்கு உரியவர்களே. எனவே, நீங்கள் எடுத்துள்ள நிலையை மறு பரிசீலனை செய்ய வேண்டுகிறேன். நான் கடிதம் எழுதியுள்ளதைத் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். (இக் கடிதம் பற்றி என் பெற்றோருக்குத் தெரியாது.)

உங்களை மறக்க முடியாத,

சாந்தி.’

சாந்தியின்பால் தனக்கு ஏற்பட்டுள்ள ஈடுபாடு அவளுக்கும் தன் மேல் ஏற்பட்டிருந்தது கண்டு ரத்தினம் வியப்படைந்தான். எனினும், தாங்கள் இருவரும் ஒருவரை யொருவர் விரும்புவது பற்றி நிச்சயமாய்த் தெரிந்த நிலையிலும் தான் எடுக்க வேண்டிய முடிவைப் பற்றி அவன் அதிகத் தெளிவுடன் இருந்தான். அவனுடைய கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் பேர்

இருந்தார்கள். நடுத்தர மக்கள் இருநூறு பேரும், பணக்காரர்கள் நூறு பேரும் இருப்பார்கள். பணக்காரர்களில் சிலரும் அவனது மருத்துவப் படிப்புக்கு உதவினார்க ளென்றாலும், ‘நல்லாப் படிக்கிற ஏழைத் தம்பி’ என்னும் பரந்த பார்வையுடன் தங்கள் ஏழைமையிலும் ஐந்தும் பத்துமாய் அவனுக்குக் கொடுத்து உதவிய ஏழைகளின் பால் அவன் உள்ளத்தில் எழுந்த உருக்கமும் நன்றியும் துளியும் குறையாமல் அப்படியே இருந்தன. அந்தக் கிராமத்தில் பட்டதாரி ஒருவர் கூட இல்லை. பதினோராம் வகுப்பை முடித்த பணக்கார வீட்டுப் பிள்ளைகள் கூட உள்ளுரிலேயே தங்கி விவசாயம் செய்துகொண்டிருந்தார்கள். நடுத்தர வர்க்கத்துப் பிள்ளைகள் வேலை தேடி அக்கம்பக்கத்துப் பெரிய ஊர்களுக்குப் போய்விட்டார்கள்.

தன் தாயின் உயிர் பிரியக் காரணமாக இருந்த அவ்வூரின் மருத்துவ வசதிக்குறைவு _ ஏன்? வசதியின்மை என்றே கூடச் சொல்லிவிடலாம் – அவனைச் சின்னஞ்சிறு வயதிலேயே எடுக்க வைத்த முடிவிலிருந்து எத்தகைய காரணத்துக்காகவும் இம்மியும் விலக அவன் தயாராக இல்லை. எனவே ஒரு பெருமூச்சுடன் அவன் சாந்திக்குக் கடிதம் எழுத உட்கார்ந்தான். . .

5.

கடிதத்தை எழுதி அஞ்சலில் சேர்த்துவிட்டாளே தவிர, தான் அப்படி எழுதியது பற்றி ரத்தினம் என்ன நினைப்பாரோ என்கிற அச்சம் சாந்திக்கு உள்ளூற இருந்தது. தான் கூறிய யோசனையில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்டால், ஏழைகளுக்கு உதவுவது, அவளும் அவள் பெற்றோரும் அடிக்கடி பார்த்துக்கொள்ளுவதற்கான வசதியை ஏற்படுத்தித் தருவது ஆகிய இரண்டு காய்களை ஒரே கல்லால் அடிக்க முடியுமே என்கிற எண்ணம் அவருக்கும் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவள் ஏங்கினாள்.

மறு அஞ்சலில் ரத்தினத்தின் பதில் வந்துவிட்டது. கடிதத்தில் அவள் தன் அலுவலக முகவரியைக் கொடுத்திருந்ததால், அவன் புரிதலுடன் அந்த முகவரிக்கே அதை அனுப்பியிருந்தான்.

‘அன்புள்ள சாந்தி அவர்களுக்கு.

வணக்கம். உங்கள் கடிதம். மிக்க நன்றி. ‘ நம்ம ஊரு டாக்டரு’ என்று எனக்குப் பட்டம் சூட்டி வாயெல்லாம் பல்லாக மகிழ்ந்துகொண்டிருக்கும் எங்களூர் அப்பாவி ஏழைகளை ஏமாற்றும் எண்ணம் எக்காரணத்தைக் கொண்டும் – அதிலும் அவர்களக்கு இலவசமாக மருத்துவம் செய்யவேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்கும் – எனக்கு வரவே வராது என்பதை யறியவும். இது பற்றி நாம் மேற்கொண்டு விவாதித்து ஒரு நல்ல நட்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். எனது கடித வாசகம் கடுமையாகப் பட்டால், என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

உங்கள் அன்புள்ள,

ரத்தினம்’

ரத்தினத்தின் கடிதம் சாந்திக்கு ஏமாற்றத்தை அளித்தது. அவன் எடுத்த நிலைப்பாட்டை அவளால் ஏற்க முடியவில்லை. ‘அந்த ஊர் ஏழைகளுக்கு எதுவும் செய்ய வேண்டாமென்றா நான் சொன்னேன்? அதே ஊரில்தான் மருத்துவராக இருந்து சேவை செய்ய வேண்டும் என்பதை மட்டும் தானே ஆட்சேபித்தேன்? ஏன் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார் இந்த ரத்தினம்? – மறுபடியும் வாதிட்டுப் பார்க்கும் எண்ணம் அவள் உள்ளத்தில் தோன்றினாலும், அவனது கடித வாசகத்தின் கண்டிப்பு மனத்தில் உறைக்க, தோன்றிய மறு கணமே அது மறைந்து போனது. . . .

.

.

6.

. . . கதவைத் திறந்த பங்காரம்மா பக்கத்து வீட்டுப் பரமசிவமும் சிங்காரியும் புன்சிரிப்புடன் நின்றிருந்ததைப் பார்தததும், வியப்புடன், “வாங்க, வாங்க, உள்ளே வாங்க,” என்று உபசரித்தவாறு உள்ளெ சென்றாள்.

அவளைப் பின் தொடர்ந்த இருவரும் அவள் காட்டிய நாற்காலிகளில் அமர்ந்துகொண்டார்கள்.

“வேற ஒண்ணும் இல்லீங்க. நாங்க ரெண்டு பேரும் சிலுக்குப் பட்டிங்குற ஊருக்கு ஒரு கலியாணத்துக்குப் பொக வேண்டியிருக்கு. நெருங்கின சொந்தம். போகலைன்னாத் தப்பாப் பேசுவாங்க. பணக்காரங்கன்ற கெருவம், அது, இதுன்னுவாங்க. இன்னைக்குப் போயிட்டு மூணே நாள்லே திரும்பிடுவோம். அது வரைக்கும் நம்ம சாந்தி தனியாத்தான் இருக்கப் போகுது. வேலைக்கார அம்மாவைத் துணைக்கு இருக்கச் சொல்லியிருக்குறோம். ராத்திரியும் அது இங்கேதான் சாந்தி கூடத் துணைக்குப் படுத்துக்கும். இருந்தாலும் உங்க கிட்டேயும் ஒரு வார்த்தை சொல்லிவைக்கணும்னு தோணிச்சு. அதான். . .கொஞ்சம் பாத்துக்குங்கம்மா,” என்று பரமசிவம் சொல்ல, “அதுக்கென்னங்க? சாந்திக்கு நான் சாப்பாடு கூட கொண்டுட்டுப் போய்க் குடுத்துடறேன். ஒண்ணும் செரமம் இல்லீங்க,” என்ற பங்காரம்மா புன்னகை செய்தாள்.

“அதெல்லாம் வேணாங்க அதுவே சமையல் பண்ணிக்கும். தவிர வேலைக்கார அம்மாளுக்கு வேற சாப்பாடு குடுக்கணுமில்லே? எங்க சமையல்கார அம்மா அவங்க ஊருக்குப் போயிருக்குது. இன்னும் ஒரு வாரத்திலே வந்துடும். வந்துட்டாங்கன்னா, சாந்தியோடதுணையைப் பத்தின கவலை இல்லாம, இது மாதிரி வெளியூர் எங்கேயாச்சும் போகவேண்டிவந்தா நாங்க பாட்டுக்குப் போவோம். அவங்க இல்லாததுனாலதான். . .” என்று சிங்காரி தயக்கமாய்ச் சொல்ல, “அதுக்கென்னங்க? நான் என்ன சாந்தியைச் சொமந்துக்கிட்டா நிக்கப் போறேன்? எந்தச் செரமமும் இல்லீங்க. நான் கவனிச்சுக்குறேன். நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்க, “ என்று பங்காரம்மா கூறினாள். இருவரும் விடைபெற்றுப் போனார்கள்.

. . . சிலுக்குப் பட்டியில் திருமணம் முடிந்ததற்கு மறு நாள் மதியம் பரமசிவமும் சிங்காரியும் புறப்பட இருந்தார்கள். அவர்கள் புறப்படுவதற்கு இருந்த நாளில், முற்பகல் பத்து மணிக்குச் சிலுக்குப் பட்டியிலிருந்து சாந்திக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அன்று சனிக்கிழமை யாதலால் சாந்திக்கு அலுவலகம் கிடையாது. அவள் வீட்டில் இருந்தாள்.

“அம்மா, சாந்தி!” என்ற பரமசிவத்தின் குரலில் தொனித்த நடுக்கமும் குழறலும் சாந்தியின் முதுகுத் தண்டை அவளுக்கு விளங்காத ஏதோ காரணத்தால் சில்லிடச் செய்தன.

“என்னப்பா! ஏன் உங்க குரல் ஒருமதிரி பதட்டமா இருக்கு?”

“அம்மா, சாந்தி! நான் என்னத்தைச் சொல்லட்டும்? உங்கம்மாவை எடுத்துக்கிட்டு வர வேண்டிய நெலமையிலே இப்ப இருக்கேன் நான். . . அய்யோ!”

“எ எ எ.. . என்னப்பா சொல்றீங்க? எடுத்துக்கிட்டு வர்றதா? அப்படின்னா?”

“மனசைத் திடப்படுத்திக்கம்மா. . . உங்கம்மாவை ரொம்ப சீரியஸான நெலைமையில அங்க கொண்டுட்டு வர வேண்டியதாப் போச்சு .”

“வெவரமாப் பேசுங்கப்பா. என்னாச்சு அம்மாவுக்கு?”

“அவ தடுக்கி விழுந்ததுலே தலையிலே பலத்த காயம் பட்டிடுச்சும்மா. மண்டையிலே மூளைக்குள்ளே உள்காயமாம். என்னென்னமோ சொல்றாங்க. . .”

“மதுரைக்கு உடனே கார் அமர்த்திக் கூட்டிட்டுப் போக வேண்டியதுதானேப்பா?”

பரமசிவம் அழத் தொடங்கினர்: “மதுரைக்குத்தான் போனேம்மா. ஆரம்ப கட்டமா கொஞ்சம் வைத்தியம் பாத்தாங்கதான். அனா, அவங்கதான் என்னென்னமோ பாஷையிலே ஏதேதோ சொல்லி மெட்ராசுலதான் அதுக்கு வசதி யிருக்குன்னு சொல்லிட்டாங்க. . . அதான் கெளம்பி வர்றேன்.”

“அம்மா இப்ப எப்படி இருக்காங்க? பேசறாங்களா?”

“உங்கம்மா இப்ப கோமாவிலே இருக்கா.”

“சரிப்பா. உடனே வாங்க. மதுரைக்குப் போய் அங்கேருந்து ப்ளேன்ல வாங்க.”

“அப்படித்தாம்மா செய்யிறதா யிருக்கேன். சரி. நான் வெச்சுடறேன் நீ கவலைப்

படாதே, சாந்திம்மா. கடவுள் இருக்காரு. அவரு பாத்துப்பாரு . . . அழுவாதேம்மா.”

. . . தொலைபேசியில் பரமசிவம் சொன்னதெலாம் அவள் திகிலடையாதிருப்பதற்காகச் சொல்லப்பட்ட பொய்கள் என்பது சிங்காரியின் உயிரற்ற உடலோடு அவர் வந்து சேர்ந்ததும் சாந்திக்குப் புரிந்தது. மாடிப்படிகளில் தவறி உருண்டு விழுந்து, தலையில் பலத்த அடிபட்ட சிங்காரி மயக்கமுற்ற நிலையில் போதுமான வசதிகளற்ற உள்ளூர் அரசு மருத்துவ விடுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது, அங்கு இரத்தக் கசிவை நிறுத்த முடியாமல் மருத்துவர் திணறியது, பின்னர் மதுரைக்கு எடுத்துப் போகச் சொன்னது, மதுரையை அடையும் முன்னமே அவளது உயிர் பிரிந்து விட்டது, உயிரற்ற உடலே சென்னைக்கு வருகிறது என்பது தெரியவரின் தனியாக இருக்கும் சாந்தி உடைந்து போவாள் என்பதால் பரமசிவம் பொய் சொன்னது ஆகியவை யாவும் பிற்பாடு தெரிய வர, சாந்தி நொறுங்கித்தான் போனாள்.

சிங்காரியின் திடீர்ச் சாவை முன்னிட்டுப் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து குழுமியிருந்த உறவுக்காரர்கள் எல்லாரும் இறுதிச் சடங்குகள் ஆன பிறகு கிளம்பிச் சென்று விட, சாந்தியைத் தாங்க முடியாத அளவுக்கு தனிமை வருத்தலாயிற்று. எங்கு திரும்பினாலும், அம்மாவின் ஞாபகம், எதைப் பார்த்தாலும் அம்மாவின் ஞாபகம், எதைச் சொன்னாலும் அம்மாவின் ஞாபகம் என்றே அவள் மனத்தில் மறுபடியும் மறுபடியும் சிங்காரி தோன்றியவாறாக இருந்தாள். மொத்தத்தில் சாந்தியின் வாழ்க்கை சூனியமாயிற்று.

7.

. . . சிங்காரியின் இறுதிச் சடங்குகள் முடிந்து ஒரு வாரம் கழிந்த பின் வந்த ஞாயிறன்று, “அம்மா, சாந்தி! உங்கிட்ட ஒரு விசயம் சொல்லணும்,” என்றவாறு பரமசிவம் அவளுக்கு எதிரே வந்து அமர்ந்தார்.

“சொல்லுங்கப்பா.”

“எனக்கும் வயசாயிட்டிருக்கும்மா. நீ சீக்கிரமா ஒரு கலியாணத்தைப் பண்ணிக்கிறணும். உங்கம்மா வேற இல்லே, பாத்தியா? . . .”

“ . . . . . . .” – சாந்தியின் தலை தாந்ந்தது.

“அப்புறம் . . . உங்கிட்ட ஒரு விசயம் சொல்லணும்மா.”

“ . . . . . .?”

“நீ அந்தப் பக்கத்து வீட்டு பங்காரம்மாவோட அண்ணன் மகனைக் கலியாணம்

கட்டச் சம்மதிச்சேயில்ல? அது சம்பந்தமா உங்கம்மாவும் நானும் பேசியிருக்கோம். உங்கம்மா என்ன சொல்லிச்சு, தெரியுமா?”

“சொல்லுங்கப்பா.”

“ ‘சாந்தி இப்ப கலியாணம் வேணாம், கொஞ்ச நாள் போகட்டும், படிச்ச படிப்புக்கு வேலை பாக்கணும்னு சொல்லிட்டிருந்தவ, என்னமோ தெரியல்லே, அந்தப் பையனுக்குச் சரின்னு சொல்லிடிச்சு. அவனை சாந்திக்கு ரொம்பவே பிடிச்சுப் போயிறுச்சுன்னு தோணுது. அதனா அவளை அவனோட நிபந்தனையை ஏத்துக்கிட்டு அவனுக்கே கட்டி வெச்சுடலாம். கொஞ்ச நாள் கிராமத்திலேதான் அவ இருக்கட்டுமே. அப்பால அந்தப் பிள்ளையை எப்படியாவது நயிச்சியமாப் பேசிப் பட்டணத்துக்கு அழைச்சுக்கிட்டு வந்துட்டாப் போச்சு’ அப்படின்னிச்சு. ஆனா அதுக்கு நான் ஒத்துக்கல்லே. அப்பால, அந்தப் பிள்ளையாண்டான் மெட்ராசுக்கு வர மறுத்துட்டா வம்பு. தவிர, அவன் அம்புட்டுப் பிடிவாதமா கிராம சேவை, அது, இதுன்னு சொல்றப்ப, அநாவசியமா வாக்குவாதமெல்லாம் கூடாது. நாளைக்கு அவன் இங்கிட்டு வர மாட்டேன்னுட்டா நிரந்தரமா நாம நம்ம பொண்ணைப் பிரிஞ்சிருக்க வேண்டி வந்துடும். அதனால, சாந்தியாவே, தானா, அப்படி ஒரு பேச்சை எடுத்தாலொழிய நாமா எதுவும் யோசனை சொல்லக்கூடாது’ ன்னுட்டேன். இப்ப நடந்ததை யெல்லாம் பத்தி யோசிக்கிறப்ப . . . .”

சாந்தியின் வற்றிப் போயிருந்த கண்களில் நீர் திரையிட்டது. கலங்கிய விழிகளூடே தந்தையை ஏறிட்ட அவள், “நானே உங்ககிட்ட அது விஷயமாப் பேசணும்னு இருந்தேம்ப்பா. ஆனா அம்மா போய்க் கொஞ்ச நாள் கூட ஆகாததால, ஒருவருஷம் கழிச்சுப் பேசலாம்னு நினைச்சேன்,”

என்றவாறு கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

“சொல்லும்மா. என்ன சொல்லணும்னு இருந்தே? எதுவானாலும் சொல்லும்மா. உன் கலியாணம் உன்னோட சொந்த விசயம். உன்னோட விருப்பு,

வெறுப்புத்தான் அதுலே ரொம்ப முக்கியம்.”

“நாம ரெண்டு பேருமே கிராமத்துக்குப் போய் நிரந்தரமாத் தங்கிடலாமேப்பா! இப்ப பாருங்க. அம்மாவுக்கு நேர்ந்தது என்னோட கண்ணைத் திறந்திடிச்சு. இல்லாட்டி நான் இப்படி ஒரு மன மாறுதலுக்கு உட்பட்டிருப்பேனான்றது சந்தேகம்தான். சரியான மருத்துவ வசதி அந்தச் சிலுக்குப்பட்டியிலே இல்லாததுனாலதானே அம்மா போயிட்டாங்க? அவரோட அம்மாவும் அதனாலதானே அநியாயமாச் செத்துட்டாங்க? சின்ன வயசுலே அவரோட நெஞ்சிலே விழுந்த அடியோட வலியும் உணர்ச்சிகளும் இப்பதாம்ப்பா எனக்குப் புரியுது. . .”

மனைவியின் மறைவுக்குப் பின்னர், முதன் முறையாகப் பரமசிவத்தின் முகத்தில் புன்னகை அரும்பியது. மகளின் கன்னத்தைத் தட்டிவிட்டு, ரத்தினத்துக்குக் கடிதம் எழுத அவர் எழுந்தார்.

. . . . . . . . .

நன்றி – குமுதம் சநேகிதி

jjyothirllata@yahoo.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா