ஞானப் பெண்ணே

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

ஜெயந்தன்


என்னென்ன நடக்குது ஞானப் பெண்ணே
கொஞ்சம் நின்னுபாரடி ஞானப் பெண்ணே

சிரிப்பா சிரிச்சவ கைகளிலே
செங்கோல் சிரிக்குது ஞானப் பெண்ணே

செருப்பாய்க் கிடந்தவன் கால்களுக்கு
செங்கழல் ஆச்சே அதிகாரம்

குடிச்சாலும் தமிழனாம் ஞானப் பெண்ணே
குடல் வெந்து செத்தாலும் தமிழனாம் ஞானப் பெண்ணே

நடிகன்தான் இவனுக்கு ஈஸ்வர ரூபமாம் பெண்ணே
அந்த ஈஸ்வர தரிசனம் சாத்தியப்பட்டால்
இழவு கேட்டு வந்த இடத்திலும் தடியடி மிதியடி
சாக்கடைக் குளியல் சம்மதம் இவனுக்கு ஞானப் பெண்ணே
ஐயம் இருந்தால் கும்பகோணம் ஒரு நடை போய் வா தாயே

ஜாதியின் ஜோதிக்கு ஞானப் பெண்ணே- இவன்
இவன் இன்னொரு அப்பாவி நந்தன் ஞானப் பெண்ணே

இவர் இருவர் மோதலும் ஞானப் பெண்ணே
கொஞ்சம் நின்னு பாரடி ஞானப் பெண்ணே
பேட்டை ரெளடிகள் ஆட்டமெல்லாம்
பிச்சை வாங்குது ஞானப் பெண்ணே

படிச்சவன் பாவமும் சூதும் செஞ்சா ஞானப் பெண்ணே
போவான் போவான் சொன்னான் ஒருத்தன் – ஆனா
இருக்கான் இருக்கான் ஜோரா இருக்கான் ஞானப் பெண்ணே

ஊழல் காசில் மந்தைகள் வாங்கி
-ஊழல் ஒழிக – ஊர்வலம் விடுறான் ஞானப் பெண்ணே
மனட்சாட்சி என்பதே ஞானப் பெண்ணே
பொருட்காட்சிப் பொருளாச்சே ஞானப் பெண்ணே

விண்ணையும் மண்ணையும் கூட்டிப் பயிர் செய்ய-இவருக்கு
பொய்யொன்றே போதுமாம் ஞானப் பெண்ணே
மூன்று பத்து ஆயிரம் கோடி கொட்டுமாம் என் ஞானப் பெண்ணே

ஊரோரம் மலையடிவாரம்
எங்கே திரும்பினாலும் இந்த ஈனக்கூட்டம்.
சொல்லித் தொலையாத துக்கமடி என் ஞானப் பெண்ணே

இவைதான் நமக்கு லிபி என்றால்
எங்கு போய் நாம் முட்ட என் ஞானப் பெண்ணே ?
—-
jeyanthan@sancharnet.in

Series Navigation

ஜெயந்தன்

ஜெயந்தன்