அரவிந்தன் நீலகண்டன்
எல்லோருமமர நிலையெய்து நன்முறையை
இந்தியா உலகுகளிக்கும் – ஆம்
இந்தியா உலகுகளிக்கும் – ஆம் ஆம்
இந்தியா உலகுகளிக்கும் – வாழ்க
என்றார் பாரதி. மகாகவி வாக்கு பொய்ப்பதில்லை. அமர வாழ்வு மறு உலகிற்கென்றில்லை. இவ்வுலக வாழ்வில் வாழ்வாங்கு வாழ்தலே அமர நிலை எய்தும் மிகச்சிறந்த வழி என்று திண்மையாகக் கருதலாம். அந்நிலையில் உலகின் அனைத்து மக்களின் வாழ்வில், குறிப்பாக, துன்புறுவோர் வாழ்வில், துயர் துடைத்து ஒளி ஏற்ற நம் வாழ்வை அர்ப்பணிப்பதினும் மேலாக அமர வாழ்விற்கு உகந்ததோர் பாதை வேறேதும் இல்லை. அத்தகைய அமர நிலை எய்தும் நன்முறைகளை பாரதம் உலகிற்கு என்றென்றும் அளித்து வருகின்றது. அவற்றுள் ஒன்றுதான்,
ஜெய்ப்பூரின் செயற்கைக்கால்கள்
இராமச்சந்திரர் என்பவர் இராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் வாழும் ஐந்தாவது தலைமுறை எளிய சிற்பக்கலைஞர். கோவில்களுக்கு சிலைகள் செய்வது அவரது குடும்பத்தொழில். ஜெய்ப்பூர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்வது வழக்கம். அத்தகைய விபத்துக்களில் சிக்கியவர்களை ஜெய்ப்பூரில் உள்ள சாவாய் மான்சிங் மருத்துவமனைக்கு கொண்டு வருவார்கள். அவர்களில் பலர் நிரந்தரமாக கை-கால்களை இழந்து ஊனமுற்றுவிடுவர். அம்மருத்துவமனைக்கு அருகில்தான் இராமச்சந்திரர் வாழ்ந்து வந்தார். இவ்வாறு ஊனமுற்றோர் தம் நிலை அவரது மனதை உருக்கியவண்ணம் இருந்தது. ஊனமுற்றோருக்கு தாம் ஏதாவது செய்ய வேண்டும் என அவரது உள்ளத்துக்குள் ஒரு குரல் கூறியவண்ணம் இருந்தது. விபத்துக்களில் கால்களை இழந்தவர்களுக்கு பொதுவாக செயற்கை கால்களை பொருத்துவார்கள். இந்த செயற்கைக் கால்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இவை விலை கூடுதல் என்பதுடன் அவற்றின் இயக்கம் கால்களின் இயற்கை இயக்கத்திற்கு உகந்ததாகவும் இல்லை. இதனை ஸ்ரீ இராமச்சந்திரர் கவனித்தார். ஏற்கனவே சிலைகளை வடிக்கும் சிற்பியான அவருக்கு இந்தப் பிரச்சனையில் தன்னால் பங்களிக்க முடியுமென தோன்றியது. எனவே அவர் மருத்துவமனையின் மருத்துவர்களை அணுகி காலின் அமைப்பு மற்றும் இயக்கங்கள் குறித்து அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார். பின்னர் செயற்கைக் காலை வடிவமைப்பதைக் குறித்த சிந்தனையில் ஆழ்ந்தார். அல்லும் பகலும் அதையே அவர் சிந்தனை செய்தார். ஒரு நாள் தன் மிதிவண்டியின் டயரில் ஏற்பட்டத் துளையை ஒட்டிக்கொண்டிருந்த போது அவருக்கு தன் பிரச்சனையின் தீர்வு திடாரென மின்னலடித்தாற் போல் உதித்தது. இரப்பரால் உருவாக்கப்படும் செயற்கைக் காலானது அன்றைய இறக்குமதி செயற்கைக் காலைவிட உகந்ததாக இருக்குமென அவர் உணர்ந்தார். ஒரு மரத்தாலான முட்டமைப்பினைச் சுற்றியணைக்கும் இரப்பர் போர்வைகளை கொண்ட அமைப்பினை வல்கனைசிங் எனும் முறையின் மூலம் செயற்கை காலாக மாற்றினார். இவ்வாறாக ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள் உருவாகின. இன்று ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள் பலவித கால் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் விதமாக உருவாகியுள்ளன. போலியோவால் கால் ஊனமுற்றவர்கள், குழந்தைகள், முட்டிற்கு கீழே மட்டும் காலை இழந்தவர்கள், முட்டிற்கு மேலிருந்தே காலை இழந்தவர்கள் என பலவிதங்களில் கால் ஊனமுற்றவர்களுக்கும் ஏற்றவகையில் தனித்தன்மைக் கொண்ட செயற்கைக் கால்கள் கிட்டுகின்றன.
ஜெய்ப்பூர் செயற்கைக் கால்களின் முக்கிய அம்சங்கள் அதன் எளிமையும், திறமையும் மற்றும் அனைத்து தர மக்களின் பொருளாதாரத்திற்கு ஏற்றவகையில் இருப்பதும் ஆகும். ஆனால் இந்த எளிமைக்குப் பின் சில மகத்தான தொழில்நுட்ப சாதனைகள் அடங்கியுள்ளன. பொதுவாக செயற்கைக்கால்கள் பொருத்துவதென்பது மிகவும் நேரமாகும் ஒரு வேலையாகும். ஆனால் ஜெய்ப்பூர் செயற்கைக்கால்களின் பொருத்தும் காலம் மிகவும் குறைவானது. சராசரி பொருத்தும் காலம் 45 நிமிடங்கள். குழந்தைகளுக்கு செயற்கைக்கால்களைப் பொருத்தும் நேரம் 30 நிமிடங்களே. மட்டுமல்ல தனிப்பட்டத் தேவையின் அடிப்படையில் ஒரு செயற்கைக்காலை உருவாக்கவும் ஒரு மணிநேரமே ஆகும். இதனுடைய எடையும் மிகவும் குறைவானது, சராசரி எடை 1.3 கிலோகிராம் மட்டுமே. ஜெய்ப்பூர் செயற்கைக்கால்களை 135 டிகிரிகளுக்குச் சுழற்ற முடியும். இயற்கையான காலியக்கத்திற்கு மிக அருகில் வரும் சுழல் தன்மை இதுவே. பட்டெல்லா – டெண்டான் முட்டமைப்புப்படி அமைக்கப்பட்ட இந்தச் செயற்கைக்கால்கள், அணிவோருக்கு மிகவும் செளகரியமளிப்பதாக அமைந்துள்ளன. இதனை அணிபவர்கள் ஓடலாம்; எடைகள் தூக்கி நடக்கலாம்; மரங்களில் ஏறலாம்; பரத நாட்டியம் ஆடலாம்; வயல் சேற்றில் இறங்கி உழைக்கலாம்; பத்மாசனமிட்டமர்ந்து தியானமும் செய்யலாம்.
இந்த செயற்கைக்கால் பொருத்துதல், உலகிலேயே மிகவும் குறைந்த விலையில், ஜெய்ப்பூர் செயற்கைக்கால்களால் நிகழ்கிறது. இது பாரதம் மட்டுமல்ல, பல வளரும் நாடுகளுக்கு சிறந்த சேவையாக விளங்குகிறது. ஆயுத விற்பனைச் சந்தைஉருவாக்கும் தேவையுடைய சில வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகள் வளர்ந்துவரும் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளில் கலகங்களையும் போர்களையும் உருவாக்கி வருகின்றன. அத்தகைய நாடுகளில் கண்ணிவெடியால் கால்களை இழக்கும் எளிய ஏழை மக்களுக்கு ஜெய்ப்பூர் கால்கள் அருமருந்தாக அமைகின்றன. பாரதத்திற்கு வெளியே முதன்முதலில் ரஷிய ஆட்சியுடனான போரில், கண்ணிவெடிகளில் கால்களை இழந்த ஆப்கானிஸ்தான மக்களுக்கு ஜெய்ப்பூர் செயற்கைக்கால்கள் பொருத்தப்பட்டன. சர்வதேச செஞ்சிலுவை அமைப்பு மலைப்பிரதேச ஆப்கானிஸ்தானின் சூழலுக்கு ஏற்ற உறுதிகொண்ட செயற்கைக்கால்கள் ஜெய்ப்பூர் செயற்கைக்கால்களே என தெரிவித்தது. அதன் பின்னர் கென்யா, நைஜீரியா, சூடான், ருவாண்டா, சோமாலியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளிலும் பிலிப்பைன்ஸ், நேபாளம், வியட்நாம், பங்களாதேஷ் ஆகிய ஆசிய நாடுகளிலும், ஹோண்ட்ராஸ், பனாமா ஆகிய தென்னமெரிக்க நாடுகளிலும் நடந்த/நடக்கும் உள்நாட்டு கலகங்கள் மற்றும் போர்களில் தங்கள் கால்களை கண்ணிவெடிகளுக்கு இழந்த மக்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளது இந்த பாரதிய தொழில்நுட்பம். 1968 முதல் 1978 வரை 59 நபர்களே இந்த செயற்கைக்கால் தொழில்நுட்பத்தால் பயனடைந்தனர். இன்றோ ஜெய்ப்பூரில் மட்டும் வருடத்திற்கு 60,000 செயற்கைக்கால்கள் பொருத்தப்படுகின்றன.
‘ஆப்கானிஸ்தானிலிருந்து ருவாண்டா வரை உலகின் பல போர் சூழ்ந்த பகுதிகளிலுள்ள மக்களுக்கு நியூயார்க்கும் பாரிஸும் தெரிகிறதோ இல்லையோ வட-பாரதத்தின் ஜெய்ப்பூர் எனும் நகரம் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும். போரின் கொடுமைகள் சூழ்ந்த இப்பிரதேசங்களில் கண்ணி வெடிகளால் கால்களை இழந்த இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வுகள் ஜெய்ப்பூரின் பிரசித்தி பெற்ற செயற்கைக்கால் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட, ஜெய்ப்பூர் செயற்கைக்கால்கள் ஒளியடைந்திருக்கின்றன. ஜெய்ப்பூர் கால்களின் அழகிய அம்சங்களென்னவென்றால், அதன் இலகுவான எடையும், இயங்குதன்மையும் மற்றும் அதன் குறைந்த எடையும். அதை அணிவோர் ஓடலாம், மிதிவண்டி ஓட்டலாம் மற்றும் பல வேலைகளைச் செய்யலாம். இத்தகையதோர் செயற்கைக்கால் பொருத்தல் என்பது அமெரிக்காவில் பல ஆயிரம் டாலர்கள் செலவாகும் மருத்துவ அறுவை சிகிட்சை ஆனால் ஜெய்ப்பூர் கால்களைப் பொருத்துவதற்கு ஆகும் செலவோ வெறும் 28 டாலர்கள்தான். வியக்கத்தகு விதத்தில், குறைந்த செலவேயாகும் இத்தொழில் நுட்பம் ரப்பர், மரம் மற்றும் அலுமினியம் என சுற்று வட்டாரங்களில் கிடைக்கும் பொருட்களாலேயே உருவாக்கப்படுவது. ‘ என வியந்து போற்றுகிறது டைம் (1997) பத்திரிகை.
இந்த கால்-சார்ந்த-தொழில்நுட்பத்திற்கும், ISRO எனும் பாரத விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விண்வெளி தொழில்நுட்பத்திற்கும் என்ன தொடர்பிருக்க முடியும் ?
ஹைதராபாத்தில் செயற்கைக்கால் பொருத்தப்பட்ட ஒரு குழந்தை அதனை அதிக எடை கொண்டதாக உணர்ந்து கஷ்டப்படுவதை கண்ணுற்ற ஏவுகணை அறிவியலாளரான டாக்டர்.அப்துல் கலாம் தன் சக-ஆராய்ச்சியாளர்களிடம் இது குறித்து விவாதித்தார். பாலியூரிதேன் எனும் பொருளை ISRO தன் உந்து வாகனத் (launch vehicles) தயாரிப்பில் பயன்படுத்தி வந்தது. இப்பொருள் எடை குறைவான அதே சமயம் உறுதியான கரிம மூலக்கூறுகளால் (organic molecules) ஆனது. பொதுவாக ஜெய்ப்பூர் கால்களில் பயன்படுத்தப்பட்ட கரிமப்பொருட்கள் உறுதியானதெனிலும் எடை அதிகமாக இருந்து வந்தன. ISRO விஞ்ஞானிகள் தம் உந்து வாகனங்களில் பயன்படுத்தும் பாலியூரிதேனைப் பயன்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இதற்கான ஆய்வுகள் கடந்த பத்து வருடங்களாக நடந்து வந்துள்ளன. பாரதத்தின் தென்கோடிப்பகுதியினைச் சார்ந்த திருவனந்தபுரம் விக்கிரம் சாராபாய் ராக்கெட் மையத்தின் உந்து வாகன ஆராய்ச்சிப் பிரிவினைச் சார்ந்த திரு.நாராயண மூர்த்தி அவர்கள் ராஜஸ்தானின் P.K.சேதியுடன் இணைந்தாற்றிய கடும் உழைப்பின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ள இச்செயற்கைக்கால் தொழில்நுட்பம் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் கள-ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ரூபாய் 300க்கு உலகத்தரம் வாய்ந்த ஒரு செயற்கைக்காலை மக்களுக்கு அளிக்கிறது. இதே தரம் வாய்ந்த செயற்கைக்கால் உலகச்சந்தையில் ரூபாய் 40,000/- க்குத்தான் கிட்டும். மேலும் இத்தொழில்நுட்பத்தின் விளைவாக செயற்கைக்காலின் ஆயுட்காலமும் மூன்றுவருடக் காலத்திலிருந்து ஐந்து வருடம் ஆகியுள்ளது. செயற்கைக் கால்களின் எடையும் 40 சதவிகிதம் இலகுவாகியுள்ளது. ISRO தான் உருவாக்கிய இத்தொழில்நுட்பத்தை இராமச்சந்திரரின் ‘பகவான் மகாவீர் விகலங்க சகாயதா சமிதி’க்கு இலவசமாக அளித்துள்ளது.
இராமச்சந்திரர் நான்காம் வகுப்பு வரை கூட படித்தவர் அல்ல. இன்று 79 வயதாகும் இம்மாமனிதர் காலையில் நான்கு மணிக்கு எழுகிறார்; பசுவிலிருந்து பால் கறந்துவிட்டு பின் பகவானை வணங்குகிறார்; அதன் பின் காலை உணவு; அதன் பின் அவரது கர்ம யோகம். அவரும் சேதியும் நினைத்திருந்தால், இந்த செயற்கைகாலை காப்புரிமை செய்து இன்று உலகப்பெரும் செல்வந்தர்களாகியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. ஏன் ? இராமச்சந்திரரிடம் மேலைநாட்டு பத்திரிகையாளர்கள் இக்கேள்வியைக் கேட்டபோது அவர் கூறிய பதில் இதோ (பஸ் விபத்தில் கால்களிழந்து செயற்கை கால் பொருத்த வந்ததோர் சிறுமியை காட்டி) ‘ மக்கள் எதோ நான் பணக்காரனாகியிருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த சிறுமி மீண்டும் நடக்கையில் அவள் முகத்தை பார்க்கும் திருப்தி எனக்கு போதும். நான் இன்னமும் இங்கு வருபவர்களிடமிருந்து கற்று வருகிறேன். நான் இன்னமும் எதுவும் சாதித்துவிடவில்லை. ‘
மக்களுக்கு ஆற்றும் தொண்டே மகேஸ்வரனுக்கு செய்யும் பூஜை எனும் உன்னத பாரத மதிப்பீட்டால் உந்தப்பட்டு தம் 79-ஆவது வயதிலும் பணியாற்றி வருகிறார் ஜெய்ப்பூர் கால்களை உருவாக்கிய உத்தமரான இராமச்சந்திரர். அவரது உதாரணம் பல்லாயிரம் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறது. இவ்வாறாக உலகெங்கும் ஊனமுற்றோருக்கு ஒளி அளிக்கும் சேவை தீபத்தை பாரதம் உலகிற்கு அளித்துள்ளது.
நலிந்தவர் கண்ணீரைத் துடைத்திட இயலாத சமயம் எனக்குத் தேவையில்லை என்றார் சுவாமி விவேகானந்தர். சமயத்திற்கு மட்டும்தான் அது பொருந்துமா ? டாக்டர்.அப்துல்கலாம் கூறுவார்: ‘தொழில்நுட்பம் கண்ணீரைத் துடைத்திடவும்தான். ‘
-அரவிந்தன் நீலகண்டன்
மேலதிக விவரங்களுக்கு:
பகவான் மகாவீர் விகலங்க சகாயதா சமிதியின் இணையதளம்: www.jaipurfoot.org
ஆப்கானிஸ்தானில் காலிழந்தவர்களுக்கு ஜெய்ப்பூர் கால்கள் (பிபிசி செய்தி): news.bbc.co.uk/2/hi/south_asia/1742792.stm
மற்றும் காண்க: www.jaipurlimb.org
***
infidel_hindu@rediffmail.com
- ….நடமாடும் நிழல்கள்.
- நாற்சந்தியில் நாடகம்
- முரண்பாடுகள்
- வணக்கம்
- ரகசியமில்லாத சிநேகிதனுக்கு…
- மேகங்கள்
- நினைவின் கால்கள்
- துளிகள்.
- நிஜக்கனவு
- அம்மா தூங்க மறுக்கிறார்
- ஏழாவது வார்டு
- அந்தி மாலைப் போது
- ‘கவி ஓவியம் ‘
- அவளும்
- கணக்கு
- மின்மீன்கள்
- எங்கே போகிறேன் ?
- சீறும் எனக்குள் சில கவிதைகள் துளியாய்..
- காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு….
- தேர்வு
- அமெரிக்காவில் ஒரு ‘தனுஷ் ‘
- வைரமுத்துவின் இதிகாசம்
- யானை பிழைத்த வேல்
- ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு – 02
- கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை
- A Mighty Wind (2003)
- கடிதங்கள் மார்ச் 18 2004
- கருத்தரங்கம் – கவியோகி வேதம் அவர்களின் புத்தகம் பற்றி
- Saiva Conference 2004 Youth Forum
- கடிதம் – அரவிந்தன் நீலகண்டன், தலிபன் , ஜெயமோகன் ஸ்ரீதரன் பற்றி
- சாதிப்பிரச்சனையின் ஆழங்கள் (1)
- பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?
- பிரபஞ்சத்தில் பால்மய வீதி கோடான கோடிப் பரிதிகள் கொண்ட ஒரு விண்வெளித் தீவு (Our Milky Way Galaxy)
- வளரிளமை அல்லது புதுமலர்ச்சிப் பருவம்
- ஜெய்ப்பூரின் செயற்கைக்கால்கள்
- திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 16
- உலகம் : ஒரு பெரிய எழுத்து கதை
- கேண்மை
- நான் ஊட்டிக்கு வரமாட்டேன்..
- ஆத்தி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐம்பது
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 11
- எதிர்ப்பு
- கனவான இனிமைகள்
- ஒ போடாதே, ஒட்டுப் போடு
- பெண் கவிஞர்களின் மீது விமர்சனம்: சமயத்தளையா ? எந்த சமயத்தளை ?
- நூல் அறிமுகம்: புற்றுநோயை வெல்லுங்கள். ஆசிரியர்: மா.செ.மதிவாணன்
- தமிழினக் காவலர் பில் கேட்ஸ்
- சிந்தனை வட்டம் நியூ ஜெர்ஸி வழங்கும் தமிழ் குறும்பட விழா
- இந்தியா இருமுகிறது!
- வாரபலன் – மார்ச் 18- எழுத்தாணி தொழில், வழக்கு, பெக்கம், சமணச்சிலை, கோடாலித்தைலம்
- தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் – 1
- அவுட்-சோர்சிங்கும், அரசியல் சதுரங்கமும்
- மதச்சார்பின்மையும், அரசியல் கட்சிகளும்
- ஆண்களுக்கு உத்தியோகம் கொடுக்கக்கூடாது
- தமிழ் எழுத்தாளன் : ஓர் அவல வரலாறு
- முரண்புதிரான சவுதி அரேபியா – பகுதி 1
- பிசாசின் தன்வரலாறு – 1 (நெடுங்கவிதை)
- முற்றுப் பெறாத….
- அன்புடன் இதயம் – 11 – தண்ணீர்
- உயர்வு