ஜெயமோகனின் ஏழாம் உலகம்

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

பொ கருணாகர மூர்த்தி


ஏழாம் உலகம் ஜெயமோகனின் படைப்புக்களில் உயர்வாதொன்றாகும். இதுவரை எந்த எழுத்தாளருக்குமே தோணாத சமூகத்தின் விளிம்புநிலைக்குக் கீட்பட்ட அங்கவீனர் ,பிச்சைக்காரர், தீராதபிணியாளர், அவர்களின் முதலாளிமார்கள்பற்றி அதில் அவர் விலாவாரியாகப்பேசியுள்ளார். பெற்றவர்கள் யாரென அறியப்படாயப்படாத உலகின் உண்மை அனாதைகளான அவர்கள் ஏதோ பண்டங்களைப்போல விலைபேசப்படுவதும், விற்கப்படுவதுவும், வாங்கப்படுவதும், புணரவைக்கப்படுவதும், ஈனவைக்கப்படுவதும், வதைக்கப்படுவதுமான கொடுமைகள் படிப்போர் மனதை உறைய வைக்கும். வேலப்பன்கோவில் பூசகர் (நம்பூதிரி) போத்தியாக இருப்பதுவும் நடுவில் வேலுப்பண்டாரம் போத்தியாக இருப்பதுவும் ஆரம்பத்தில் வாசகனுக்கு எந்தப்போத்தியைச் சொல்கிறாரென்று சற்றே குழப்பத்தைத்தருகின்றன. வேலுப்பண்டாரம் பச்சைச்சிசு ரஜனிகாந்தின் முதுகில் எண்ணையைத்தடவி வெய்யிலில் காயப்போட்டு அழவைத்துப்பிச்சையெடுக்கவிடும் ஒருபாவி, தான் செய்யும் கொடுமையின் ஆழம் புரியாமல் அதைப்பற்றிய எண்ணமேயின்றித் தனது சொந்தப் பிள்ளைகளின் மீதான பாசத்தில் மாய்கிறான் அவனது மூத்தமகள் திருமணத்துக்குப் பண்ணிவைத்த நகைகளையும் பணத்தையும் அள்ளிக்கொண்டு இரண்டாமவள் லோறன்ஸ் என்கிற ஒரு ரௌடியுடன் கம்பி நீட்டுகிறாள். பின்னர் அவன் கொஞ்சிக்கொஞ்சி வளர்க்கும் பிள்ளைகளில் மூத்தவளின் திருமணத்தைத் தன் ‘உருப்படி’களில் சிலவற்றைவிற்றே நிறைவேற்றி வைக்கிறான். அவளோ மாப்பிள்ளைவீடு புறப்படுமுன் தனக்கு தங்கை களவாடிக்கொண்டு போனது மாதிரியான மாங்காய் நெக்லெஸ்தான் வேணுமென்று தகப்பனுடன் மல்லுக்கு நிற்கவும் துவண்டுபோகிறான் மனிதன்.

ஆரம்பத்தில் போத்திவேலுவுடன் கதவுக்குப்பின்னால் நின்று பேசும் அவனது சம்பந்திஅம்மாள், “என் மகளை உங்களுக்குத்தரமாட்டேன் பய்யனுக்கு வேலை ஸ்திரம்னு சொன்னிய……ஸ்திரம் வேலை இல்லை……… சம்பளம்கூட எட்டாயிரம் என்னீக, வெறும் ஆயிரத்துஐநூறுதானாம் வெசாரிச்சுட்டுத்தான் வர்றேன்” என்று அவன் உடைத்துப்போடவும்
” நான் உம்மகிட்ட சொன்னேனாவோய்……உம்மகிட்ட சொன்னேனா?” என்றபடி இதுநாளும் கதவுக்குப்பின்னால் ஒளித்து வைத்திருந்த தன் தாட்டியான கரிய சரீரத்தை வெளியிளுத்து வந்து “தரகன்மாரு பலதும் சொல்லுவானுக. உம்ம கட்டினவள வேலிக்குப்பொறத்தால போறவன் மல்லாத்திக் கெடத்தினான்னு சொன்னாவ உள்ளதாவோய்?” என்று கத்தவும் வேலுப்பண்டாரம் “இது சரிவராது ஓய், பிள்ளையளுக்க ஜீவிதமாக்கும்” என்று எழுந்து நடக்கத்தொடங்குகிறான்.

சம்பந்தியம்மாளோ அவனைத் துரத்திக்கொண்டுபோய் “உம்ம பெட்டையளுக்குப் பலஜீவிதம் உண்டுவே, பழனிக்கும் திருச்செந்தூருக்கும் பிள்ளையள கூட்டிட்டுப்போயி சம்பாதிச்சுட்டுவாற பைசாதான்லே உனக்கு? எரப்பாளிப்பயலே? என்ன கோயில்லெ பூக்கட்டியா லெச்சம் லெச்சமா சம்பாதிச்சாய்? நானும் அறிஞ்சுதான் உள்ளேன் வோய்.” என்று அவமரியாதை செய்து அனுப்பிய பின்னாலும் அதே வீட்டில் திரும்பப்போய் சம்பந்தம் செய்யவேண்டிய ஒரு தந்தையாக வேலுப்பண்டாரத்தின் பாத்திரம்.

உருப்படிகளைக்கொண்டான சம்பாத்தியத்தில் தன் மகளுக்குக் கல்யாணத்தை நடத்திவைக்கும் போத்திவேலு அரும்பொட்டான சமையல் செய்வதால் கடைசியில் மாப்பிள்ளையின் ஆபீஸ் நண்பர்களுக்கே சாப்பாடு பாயாசம் போதாமல் போய்விடுகிறது. பாயாசத்துள் பிழிந்த தேங்காய்ப்பூ மிளகைப்பொடிசெய்துகொட்டி , லட்டை உடைத்துப்போட்டு தண்ணீர்விட்டுப்பெருக்கி ஒருவாறு சமாளிக்கிறார்கள். சாப்பாடு எஞ்சினால் தன் உருப்படிகளுக்கும் ஏதாவது தரலாமென்றிருந்த போத்திவேலு உருப்படிகள் ஒருவனான குய்யன் எங்களுக்குச் சாப்பாடெங்கே முதலாளியென்று அலறும்போது அதைக்காதிலேயே போட்டுக்கொள்ளாமல் அப்பால் போகிறான். இன்னொரு உருப்படியான அகமது “முதலாளி உங்க மகள் திருமணம் பற்றி எங்களுக்கும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்” என்னும்போது ” ஆமா பெரிய ராஜவம்சம்ல்லா அழைத்து சல்க்காரம் பண்றதுக்கு” என்றும் இளக்காரம் பறைகிறான்.

ஒரு உருப்படிகளில் ஒன்றை ஏதோ தன்னுடைய நாய்க்குட்டியை விற்பதைப்போல வேலுப்பண்டாரம் சிறுநீரகத்துக்காக விலைபேசிவிற்கிறான். இன்னொரு அங்கவீனமான பெண்ணை ஒரு பொலீஸ்காரன் தள்ளிகொண்டுபோய் புணர்ந்து அவள் நாரியை முறிக்கிறான். முத்தம்மை என்கிற இன்னொரு பெண் உருப்படியை அர்ச்சகர் போத்தி தான் நிர்வாணமாகப் பார்க்கவேணுங்கிறார்.

இச்சமுதாயத்தின் வாக்குரிமையற்று வாழுங்கூறுகளான உருப்படிகளின் அவல வாழ்வை பொதுமக்களில் எவருமோ, மனித உரிமை அமைப்புகளோ, மாதரமைப்புகளோ கண்டு கொள்ளாமலிருப்பதுதான் சமூகக் கொடுமைகளின் உச்சம். வறுமையையும் சுரண்டலையும் தேசத்தின் சிதைவுகளாக அரசும் அரசியல்வாதிகளும் கண்டுகொள்ளாதவரை ரஜனிகாந்துகள், போத்திவேலுக்கள், சகாவுக்கள் இன்னும் இன்னும் இன்னும் ஜனித்துக்கொண்டேயிருப்பர்.

நம் சமூகத்தின் முக்கால்வாசி மூடநம்பிக்கைகளுக்கும். அர்த்தமற்ற சடங்குகளுக்கும், ஐதீகங்களுக்கும் ஊற்றுக்கண்ணே பிராமணீயந்தான். மாறாக போத்தி புத்திசாலித்தனமும் எந்தப்பிரச்சனைக்கான தீர்வும் பிராமணனிடமிருந்துதான் வந்தால்தான் உண்டு, சூத்திரனாலெல்லாம் முடியாதென்பதுபோலப் பினாத்துவது நல்ல விதூஷகம். கம்யூனிசம் பேசுபவனும், ஆன்மீகம்பேசுபவனும் பணத்தின்முன்னே மண்டியிடும் நிதர்சனங்கள் நாவலில் நன்கு காட்சிமைப்படுகின்றன. மலையாளமும் தமிழும் கலந்து வேலப்பன்கோவிலும் அதன் சூழலின் மக்களும் பேசும் மொழியை செவ்வனே அவதானித்து அவர்களின் உரையாடலை உயிர்ப்புடன் பதிவு செய்திருக்கிறார் ஜெயமோகன்.

முத்தம்மை என்கிற விகாரதோற்றமுடைய பெண்ணைப் பிள்ளைபேறு செய்யவைத்து ஒவ்வொன்றாக விற்றுப்பணம் பண்ணிவரும் பண்டாரம் கடைசியாக அவள் பெற்றபிள்ளைக்கே சாராயத்தைப்பருக்கிவிட்டு அவளுடன் அணையவிடுகிறாள். அணையும் அக்கூனனுக்கு ஒற்றைவிரல் இருப்பதைப்பார்த்து அது தன் மகன் என்பதைப் புரிந்து அய்யோ “ஒத்தைவிரல் வேண்டாம்” என்று முத்தம்மை அலறுகிறாள். உதவுவார் யாருமில்லை.

ஒரு பிறப்பு அங்கவீனமாக/விகாரமாகப் பிறப்பதற்கு விகாரத்தால் (Mutation) ஒழுங்கை/வடிவம் இழந்துவிட்ட நிறமூர்த்தங்களின் சேர்க்கை, முளையம் உருவாகியபின் ஏற்படும் விகாரங்கள்/அதிர்ச்சிகள், ஒவ்வாமையுண்டுபண்ணும் இரசாயனங்கள், கதிர்வீச்சுக்கள் எனப்பல புறச்சூழல்காரணிகளும் உண்டு. ஆதலால் ஒரு விகாரியை இன்னொரு விகாரியுடன் அணையவிடுவதால் மேலும் ஒரு விகாரம் பிறப்பதற்கான சந்தர்ப்பம் 25%தான். அதற்கு அடுத்த தலைமுறையில் அது மேலும் பாதியாகும். இந்த மரபியல் உண்மை நாவலில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஒரு விகாரமும் இன்னொரு விகாரமும் இயைந்தால் இன்னொருவிகாரந்தான் ஜனிக்குமென ஒரு பாமரப் போத்திவேலுவோ குமரேசனோ கருதலாம், ஜெயமோகன் அப்படி எடுத்துக்கொள்ளமுடியுமா? ஜெயமோகனின் படைப்பாளுமைக்கு முன்னால் இது சிறியதொரு கவனயீனப்பிசகு. ஆனாலும் சுட்டாமலிருக்க முடியவில்லை.
நாம் படிக்கும் நாவல்களில் சிலவைதான் என்றைக்கும் மனதில் அழிந்துபோகாதபடி நிற்கும், பல மறந்துபோகும். ஏழாவது உலகமும் முதல்வாசிப்பிலேயே என்றைக்கும் மறந்துபோகாதபடிக்கு எங்கள் மனதில் ஆழமாக ஒரு கொத்துப்போட்டுவிடுகிறது. முகாரிதான். வாசிப்பின் அற்புதத்தால் அது மனதை இனிப்பிசைந்துகொண்டுதான் இருக்கும்.


பொ.கருணாகரமூர்த்தி. பெர்லின்,
22.08.2007

karunaharamoorthy@yahoo.ie

Series Navigation

பொ கருணாகர மூர்த்தி

பொ கருணாகர மூர்த்தி

ஜெயமோகனின் ஏழாம் உலகம்

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

அ.முத்துலிங்கம்


ஓர் ஆங்கில எழுத்தாளர் தன் மனம் கவர்ந்த புத்தகம் ஒன்றைப் பற்றி எழுதும்போது இப்படி சொல்கிறார். ‘இந்தப் புத்தகத்தைப் படித்தபோது என் இருதயத் துடிப்பு இரண்டு மடங்கு அதிகமானது; மற்றவர்களுக்கும் அப்படியே ஆகும். இல்லாவிடில் அவர்களின் இருதயம் முன்பு துடிக்கவே இல்லை என்பதுதான் அர்த்தம். ‘ ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘ நாவலைப் படித்தபோதும் எனக்கு அப்படித்தான் பட்டது. மற்றவர்களுக்கும் அதேமாதிரி நடக்கும். இல்லாவிட்டால் அவர்களுடைய இருதயம் அதற்கு முன்பு துடிக்கவே இல்லை என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.

ஏழாம் உலகம் நாவல் வெளிவந்த சில நாட்களிலேயே அதை படித்து முடித்துவிட்டேன். ஆனால் அதற்கு பிறகு இரண்டு நாட்கள் என் மனம் உளைந்தபடியே இருந்தது. ஒன்றிலும் மனம் செல்லவில்லை. திருப்பி திருப்பி அந்த பாத்திரங்கள் என் கனவில் வந்தன. அதில் வரும் சம்பவங்கள் என்னை அச்சுறுத்தின; எனக்கு அருவருப்பூட்டின; இன்னும் சில ஆழமாகப்போய் இனியில்லை என்பதுபோல மனதைப் பிசைந்தன. இந்த நாவலைத் தப்பி வெளியே

வருவது பெரும் பிரயத்தனமாகிவிட்டது.

இப்படியான அனுபவம் என் வாழ்க்கையில் ஒருமுறை பல வருடங்களுக்கு முன் ஏற்பட்டது. Alex Haley என்ற எழுத்தாளர் எழுபதுகளின் பிற்பகுதியில் ROOTS என்ற நாவலை எழுதி வெளியிட்டார். இது அபூர்வமாக இலக்கியத்துக்கு கிடைக்கும் மிக உயர்ந்த விருதுகளான Pulitzer Prize, National Book Award இரண்டையும் வென்றது. புத்தகம் 100 லட்சம் பிரதிகள் விற்றுத்தள்ளின. 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

அப்பொழுது நான் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்தேன். நான் இருந்த இடத்தில் இருந்து சில நூறு மைல்கள் தள்ளித்தான் கதை ஆரம்பிக்கிறது. குன்ராகின்ரே என்ற ஆப்பிரிக்க சிறுவனைப் பிடித்து அடிமைக் கப்பலில் கடத்தி அமெரிக்கா சென்று அவனை விற்கிறார்கள். அவன் அடிமையாக அனுபவித்த அல்லல்களில் தொடங்கி, அடிமை வம்சாவளிகள் பட்ட கொடுமைகளையும், சிறுமைகளையும் விபரிக்கிறது புத்தகம். இதைப் படித்தவர்கள் எல்லாம் உருகினார்கள். இப்படியும் கொடுமைகள் நடந்தனவா என்று நம்பமுடியாமல் திகைத்தார்கள். இந்தப் புத்தகத்தைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வே ஏழாம் உலகத்தைப் படித்தபோதும் கிடைத்தது.

அது என்ன ஏழாம் உலகம் ? புராணத்தின் பிரகாரம் பூமிக்கு கீழே ஏழு உலகம் உண்டு. அதலம், விதலம், தலம், கபஸ்திமல், மகாதலம், சுதலம், பாதாளம். ஏழாவது உலகமான பாதாளத்தில் வசிப்பது வேதாளம். இப்படி எங்கள் கண் காணாத பல உலகங்களின் மேல் நாம் ன்று கொண்டிருக்கிறோம். நாம் குடிக்கும் தண்ரும், உண்ணும் தானியமும் அங்கே இருந்துதான் கிடைக்கிறது. ஆனாலும் அங்கு நடப்பது ஒன்றும் எங்கள் கண்களுக்கு புலனாவதில்லை. ஜெயமோகன் காட்டும் உலகமும் அப்படித்தான்.

இந்த நாவலை நான் அரை நாளில் படித்து முடித்தேன். சிக்கல் இல்லாமல் நேரடியாகச் சொல்லப்பட்டது. சரியாக 301 பக்கங்கள். பாத்திரங்களும் அதிகமில்லை. சில பாத்திரங்கள் கோட்டுச் சித்திரம்போல ஒரு சில வரிகளில் வந்தாலும் ஆழமாக மனதைப் பிடித்துவிடுகின்றன. விஷ்ணுபுரம் நாவலில் வந்த மொழி அந்த நாவலுக்கு பொருத்தமானது; ‘பின் தொடரும் ழலின் குரல் ‘ நாவல் மொழி முற்றிலும் புதியது. ஏழாம் உலகம் மொழியோ அதற்காகவே

உண்டாக்கப்பட்ட எளிமையான மொழி.

ஆகவே நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து முறைப்பாடு வைத்தபோது ஆச்சரியப்பட்டேன். அவர் 60 பக்கங்கள் படித்துவிட்டு அதற்குமேல் போகமுடியவில்லை என்றார். நாவலில் வரும் மனிதரின் குரூரத்தையும், கொடுமைகளையும் அவரால் தாங்கமுடியவில்லை.

‘எப்போது படித்தீர்கள் ? ‘ என்றேன்.

‘இரவு இரண்டு ம. ‘

‘எங்கே படித்தீர்கள் ? ‘

‘அலுவலகத்தில், இரவு நேர வேலையின்போது. ‘

இது எளிமையான் நாவல்தான். என்றாலும் இது ரயில் வண்டியிலோ, டிவி விளம்பர நேரத்திலோ, உங்கள் பிள்ளைகளை டான்ஸ் கிளாசுக்கு விட்டுவிட்டு காத்திருக்கும் சமயத்திலோ படிப்பதற்கான நாவல் அல்ல. உங்கள் முழுக்கவனிப்பும் அதற்கு தேவை. ஏனென்றால் சொல்ல வந்த விஷயம் அப்படி.

நண்பரிடம் சொன்னேன் நீங்கள் தனிமையான இடத்தை தேர்வு செய்யுங்கள். முதலில் 12வது அத்தியாயத்தை வாசியுங்கள். அதற்கு பிறகு எங்கே வேண்டுமென்றாலும் தொடங்கி நாவலை எப்படியும் படியுங்கள் என்றேன். அப்படியே செய்து அவர் நாவலை முடித்துவிட்டு, ‘ ஆ, தமிழுக்கு இது முற்றிலும் புதிது; ஒரு கொடை ‘ என்றார்.

இந்த நாவலில் அப்படி என்ன விசேஷம் ? இதை ஜெயமோகன் எழுதவில்லை. இது தன்னைத் தானே எழுதிச் செல்கிறது. இதில் வரும் பாத்திரங்கள் சம்பாஷணை மூலம் தங்கள் கதையை தாங்களே நகர்த்தி செல்கிறார்கள். ஆகவே ஆசிரியருக்கு பெரிய வேலை என்று இல்லை. அவர் சொல்வது குறைவு. சில சமயம் ஒரு இரண்டு மணி நேர சினிமாவில் வரும் வரும் 20 செக்கண்ட் காட்சி நம் மனதில் பதிந்துவிடும். அதுபோல ஒன்றிரண்டு வரிகளில் மட்டுமே

வரும் சில பாத்திரங்கள் நம் மனதில் ஆழமாக இடம் பிடித்துவிடுகின்றன. காரணம் அவை கலாபூர்வத்துடன் படைக்கப்பட்டிருப்பதுதான்.

உண்யம்மை என்று ஒரு கிழவி. ஒன்றிரண்டு வரிகளில் அங்கங்கே தலை காட்டுவாள். அவள் தலை மயிர் எப்படி இருக்கும் ? தெரியாது. என்ன சேலை கட்டியிருப்பாள் ? தெரியாது. கூன் விழுந்தவளா ? தெரியாது. ஆனால் அவளுடைய நறுக்கென்ற சம்பாசணை மூலம் அவளை அறிவோம். உயிர்துடிப்பான அவளுடைய சித்திரம் மனதை விட்டு அகலுவதே இல்லை.

பண்டாரத்தின் தொழில் ரோகிகளையும், குறைப்பிறவிகளையும் வைத்து பிழைப்பது. வண்டியில் ஏற்றிக்கொண்டு கோயில் கோயிலாகச் சென்று வசூலிப்பது. அவர்களைப் பிச்சைக்காரர்கள் என்றுகூட அழைப்பதில்லை. மனித உயிர்கள் அல்ல. உருப்படிகள். ஒரு உருப்படிக்கு ஐந்து ரூபா செலவு செய்தால் வரும்படி ஐம்பது ரூபா. அவர்களை விற்கலாம், வாங்கலாம். கேட்டுக்கேள்வியே கிடையாது. இரண்டு உருப்படிகளை இணையவிட்டு இன்னும்

ஒரு சிறந்த குறைப்பிறவியை உருவாக்கலாம். அதையும் பிச்சைக்கு விடலாம் அல்லது விற்றுக் காசாக்கலாம்.

உடமைக்காரப் பண்டாரம் தீயவராக சித்தரிக்கப்படவில்லை. பஸ்சிலே குலுங்கி குலுங்கி அழுகிறார்; கோயில் உண்டியலிலே 1200 ரூபா தாள் கட்டை சர்வசாதாரணமாக திணிக்கிறார். சராசரி நல்ல மனிதர். அவர் தன் மனைவியிடமும், மூன்று மகள்களிடமும் மிகவும் பிரியமாக இருக்கிறார். மூத்தவளுக்கு பார்த்து பார்த்து நல்ல இடத்தில் கல்யாணம் செய்து வைக்கிறார். ஓடிப்போன இரண்டாமவளை னைத்து ஏங்குகிறார். கடைக்குட்டி வளையல் கேட்டாள் என்று அதைத் தேடி இரவிரவாக அலைகிறார். பாசமான அப்பா, அன்பான கணவர்.

ஆனால் வாசல்படி தாண்டியதும் அவர் வேறு மனிதர். பிறந்து ஒரு வாரம் தாண்டாத குழந்தையை கொதிக்கும் வெய்யிலில் பிளாஸ்டிக் தாள் விரித்து, தண்ணீர் தெளித்து பிச்சை எடுக்க விடுகிறார். அது கதறக் கதற வரும்படி கூடுகிறது. கொலை செய்வதற்கு பேரம் பேசுகிறார். உருப்படிகளின் உடம்பில் வேலை செய்யும் அங்கங்களை தெரிந்து விற்றுக் காசாக்குகிறார். அவருக்கு மனதை உறுத்தவே இல்லை.

ஒரு கால், ஒரு கை, ஒற்றை முலை முத்தம்மை தன் குழந்தையை நாய் இழுத்து போகாமல் தன் சதை மடிப்புகளிடையே மறைத்து வைத்து படுத்திருப்பாள். அவள் குழந்தையை ஈவிரக்கமில்லாமல் பிரித்து விற்றுவிடுவார்கள். அவள் ‘ரசனிகாந்து, ரசனிகாந்து ‘ என்று அரற்றியபடி அன்ன ஆகாரம் இல்லாமல் காய்வாள். ROOTS நாவலில் குன்ராகின்ரேயின் 16 வயது மகள் லிஸ்ஸ’யை விற்றபோதும் இதே லைதான். யார் மனதும் உருகிவிடும்.

ஒரு பெரிய வித்தியாசம். அங்கே அடிமைகளின் எசமானர்கள் மிகவும் கொடூரர்களாக காட்டப்பட்டிருப்பார்கள். அடிமைகள் அவர்களை வெறுப்பார்கள். அவர்களிடையே குரோதம் புகைந்தபடியே இருக்கும். இங்கே உருப்படிகள் பண்டாரத்தை வெறுக்கவில்லை. ‘மோலாளி, மோலாளி ‘ என்று ஒரு குடும்பமாக பழகுகிறார்கள். அவருடைய மகள் கல்யாணம் நல்லபடி நடக்கவேண்டும் என்பதில் ராமப்பனும், அகமதும் காட்டும் அக்கறை வியக்க வைக்கிறது. பண்டாரம் எவ்வளவுதான் கொடுமைக்காரராக வந்தாலும் அவரை வெறுக்க முடியவில்லை. அதுதான் நுட்பமான படைப்பு என்பது.

குஷ்டரோகி தன் பிளந்த சதை மடிப்புக்குள் பணத்தை பதுக்கி வைப்பது; இரண்டு கால்களும் இல்லாத, உருண்டு போகமட்டுமே சாத்தியம் கொண்ட பெண் உருப்படியை பொலீஸ்காரரின் ஆசையை தீர்க்க அனுப்பி வைப்பது; சிறு பிள்ளைகளைப் பிடித்து அமிலம் ஊற்றி உருமாற்றி விற்பது, தாலிகட்டி ஐந்து மிடம்கூட ஆகவில்லை, அருமை அருமையாக வளர்த்த பெண் ‘நான் அவிகவிட்ட பேசி எல்லாத்தையும் களட்டி தாறேன் ‘ என்று சொல்வது; இந்த இடங்களில் எல்லாம் சொல்லமுடியாத அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் நம்பகத்தன்மை குறையவில்லை. நேரடி அனுபவத்தில் எழுதிய நாவல் என்றபடியால் உண்மை ஒளி வசனத்துக்கு வசனம் வீசுகிறது.

நாவல் திடாரென்று முடிகிறது. பல சிலும்பல்கள் அப்படியே முடியப்படாமல் ற்கின்றன. இனி என்ன நடக்கும் ? தெரியவில்லை. ‘The in-tray is never finished ‘ என்று சொல்வார்கள். வாழ்க்கையிலும் அப்படித்தானே.

‘ஒரு நாவலில் வரும் பாத்திரங்களை ஆழமாக விளங்கிக்கொள்ள வேண்டுமானால் அதன் ஆசிரியருடைய குறுக்கீடு இல்லாமல் இருக்கவேண்டும். ‘ இப்படி சொல்கிறார் ரஸ்ய எழுத்தாளர் அன்ரன் செக்கோவ். அந்த மேதை சரியாக நூறு வருடங்களுக்கு முன்பு கூறியது இப்பொழுதுதான் எனக்கு புரிந்தது, ஜெயமோகனுடைய இந்த நாவலை படித்தபோது.

சாம்பிளுக்கு நாவலின் 12வது அத்தியாயம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை விளங்குவதற்கு இதற்கு முன்போ, பின்போ ஒன்றும் படித்திருக்க தேவையில்லை. இதன் சுவையில் இருந்து முழுப்பழத்தின் ருசியை ஓர் அளவுக்கு நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்.

கண்டக்டர் ‘நாரோயில் நாரோயில் ‘ என்று கூவ பண்டாரம் விழித்துக் கொண்டார். பக்கக் கம்பியில் நன்றாகச் சாய்ந்து தூங்கியபடி இருந்திருப்பது தெரிந்தது. வாயைத் துடைத்துக்கொண்டு பெட்டியுடன் இறங்கினார். தலையில் கம்பியில் முட்டி வீங்கிய இடம் வலித்தது. ‘பனி விழும் மலர்வனம் ‘ என்ற சொல் மனதில் வந்தது. உடனே பரபரவென்று நினைவுகள் எழ கால்கள் தளர்ந்தன. இரவு பத்துமயாகி விட்டிருந்தது. சிறுநீர் கழித்து ஒரு டா சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் இனிப்பும் காரமும் ஆப்பிள்களும் வாங்கிக்கொண்டார்.

திருவனந்தபுரம் பஸ்ஸ’ல் காற்று நன்றாகக் குளிர்ந்தது. என்னவென்றே தெரியாத ஒரு லை கொள்ளாமை, பதற்றம் இருந்தபடியே இருந்தது. ஜன்னல் வழியாகக் காறித்துப்பினார். நடுவே அந்த திரைப்பட பாடல் வரி. ‘பனிவிழும் மலர் வனம் ‘ எவன் எழுதினானோ என்று னைத்துக்கொண்டார்.

வேலப்பகோவில் விலக்கில் இறங்கியதும் இலேசான ம்மதியும் உற்சாகமும் கூட வந்தன. ஆட்டோ பேசி இருளில் ஒளிர்ந்து பின்னகரும் வாழைத்தோட்டங்களைப் பார்த்தபடி வந்து கோயில் முற்றத்தில் இறங்கினார். அப்பிராந்தியமே இருளில் மூழ்கிக் கிடந்தது. மின்சாரம் இல்லை. இரவு ஒன்பது மயானால் அந்தப் பகுதிக்கு மட்டும் மின்சாரம் இல்லாமலாகிவிடும். கேட்டால் எப்போதும் ஒரே பதில்தான். லைன் கட்டாகிவிட்டது.

ஆட்டோவை அனுப்பிவிட்டு படி ஏறி மேற்குவாசல் படிகளில் ன்று கும்பிட்டார். ஒன்றும் சொற்களாகத் தோன்றவில்லை. ‘முருகா முருகா முருகா ‘ என்றுமட்டும் சொல்லிக்கொண்டார். பெருமூச்சுடன் பையை எடுத்தபோது வேட்டியின் மடிப்பில் கை பட்டது. அங்கே சுருட்டி வைக்கப்பட்டிருந்த ரூபாய்களை எடுத்தார். ஆயிரத்தி இருநூறு இருக்கும். இல்லை மேலேயா…. அப்படியே உண்டியலில் தித்து குத்தி இறக்கினார். உண்டியலை இருமுறை தட்டினார். வெகுநேரம் தொண்டையை அடைத்த எதையோ விழுங்கிவிட்ட உணர்வு ஏற்பட்டது.

வீட்டுக் கதவைத் தட்டினார். உள்ளே ‘ஆரு ? ‘ என்று ஏக்கியம்மை குரல் கேட்டது.

‘நாந்தாம்ளா. ‘

‘வாறன். ‘

கூந்தலைச் சுருட்டிச் செருகியபடி ஏக்கியம்மை கதவைத் திறந்தாள். வியர்வையும் எச்சிலும் மணத்தன. அவருக்கு அவளைக் கட்டிக் கொள்ளவேண்டும் போல இருந்தது. அவர் அவளைத் தொட்டு பத்து வருடத்திற்கு மேல் இருக்கும்.

‘வாருங்க ‘ என்றாள் அவள் பெட்டியை வாங்கியபடி. ‘குளியுங்க. ‘

‘குளிக்கேன். ‘

‘அப்படியே வாருங்க. வென்னீரு ஸ்டவ்வில வைக்கேன். சட்டெய களட்டுதேளா ? ‘

ஏக்கியம்மை எப்போதுமே அவர் பயணம் போய் வந்தால் குளித்த பிறகுதான் வீட்டுக்குள் சேர்ப்பாள். பயணம் பற்றி ஒரு வார்த்தை கேட்கவும் மாட்டாள்.

‘சட்டெய களட்டுயது…. ‘

‘களட்டுதேன் ‘ என்றபடி கழட்டி வென்னீர் அறை மூலையில் போட்டார். வேட்டியையும் கழற்றிவிட்டு துண்டு கட்டிக்கொண்டார்.

‘அம்மா, அப்பா வந்திட்டாவளா ? ‘ என்றாள் மூத்தவள்.

‘ஆமாட்டி. சின்னவள எளுப்பிடாத. ‘

பெரியவள் எழுந்து வந்து அவரது பெட்டியைத் திறந்து துகளை வெளியே எடுத்துப் போட்டாள்.

‘அம்பிடயும் எடுத்து வென்னிமுறியில போடுட்டி. ‘

‘அப்பா செண்டு மணம் அடிக்குவு… ‘

ஏக்கியம்மை ‘அதை அங்கின வைட்டி ‘ என்றாள்.

‘திருவிழால்ல குட்டி, உனக்கு மைசூர்பாகு அந்தால பிளாஸ்டிக்ல இருக்கு. ‘

பெரியவள் பையைப் பார்த்தாள்.

‘அப்பா வந்திட்டாவளா ? ‘ என்றபடி மீனாட்சி சின்னவளைத் தாண்டி ஏறி வந்தாள். ‘அப்பா எப்பம் வந்தியோ ? ‘

‘இப்பம்தான் குட்டி. ‘

‘எனக்கு வளவி ? எங்க வளவி ? ‘ மீனாட்சி நேராக பெட்டியை நோக்கிப் பாய்ந்தாள்.

பண்டாரம் மூத்திரம் வந்து இறுகுவதாக உணர்ந்தார்.

‘குட்டி, நீ வலிச்சு போடாத. உனக்கு ஒண்ணும் இல்ல அதில ‘ என்றாள் பெரியவள்.

‘அப்பா வளவி ? ‘

‘அதில இல்லியா குட்டி ? ‘

‘இல்லியே. ‘

‘அப்பம் பெருமாளுக்க பையில மாட்டிக்கிட்டிருக்கும் குட்டி. நாளைக்கு வாங்கி தாரேன். ‘

‘பொய்யி பொய்யி.. எனக்கு வளவியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். நான் எங்கியாம் போறேன். செத்துப் போறேன். ‘

‘இந்தா குட்டி அழப்படாது. சத்தியமா வாங்கிட்டேன். அப்பா உங்கிட்ட பொய் சொல்லுவேனா ? ‘

‘வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். நான் இமயமலைக்குப் போறேன். செத்துப் போறேன். ‘

‘இந்தா குட்டி… ‘

‘அவள விடுங்கோ. ஒரு வீட்டுக்கு போயி ஆக்கிப் போடவேண்டிய குட்டி. சீராட்டி சீராட்டி வரிக்களுதையாப் போச்சு. போயி படுடா போ. ‘

மீனாட்சி விசும்பி விசும்பி அழுதபடி தரையில் உட்கார்ந்தாள்.

‘மைசூரு பாகு வேணுமாட்டி ‘ என்றாள் பெரியவள்.

‘ஒண்ணும் வேண்டாம். நான் செத்துப் போறேன். ‘

‘வாய தெச்சுப் போடுவன் பாத்துக்க. ராத்திரில அச்சானியமாட்டு பேசுத பேச்சப் பாரு ‘ என்றபடி ஏக்கியம்மை மூன்று அடுப்புகளிலாகப் போட்டிருந்த வெந்நீரை இறக்கி அண்டாவில் கலந்தாள். ‘குளியுங்க. ‘

பெரியவள் மைசூர்பாகை தின்றுவிட்டு கையைத் துடைத்தபடி வெளியே போய் ஒன்றுக்கு இருந்துவிட்டு வந்து படுத்தாள்.

சின்னவள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். ‘இவளுக்கு ஏது நேரமும் உறக்கம்தானா குட்டி ? ‘ என்றார் பண்டாரம் பெரியவளிடம்.

‘படிச்சா. ‘

‘ஆமா, படிச்சா. இங்க பாருங்க அவளை வளக்க எனக்குக் கட்டாது. ஒரு சோலி செய்யமாட்டா. கேட்டா ஆயிரம் பேச்சு. ஆனை குதிரை அடைக்கா முட்டைன்னுட்டு. ஏது நேரமும் அந்த பாட்டு படிக்குத பெருவட்டன் வீட்டிலே போயி கெடக்கா. கேட்டாக்க அறுமினியம் படிக்காளாம். அந்த ஒரு கொறவுதான் மூதிக்கு. ‘

‘ செரி. நீ கெடந்து மூளாதே… ‘ என்றபடி பண்டாரம் தலை துவட்டி வந்தார். மீனாட்சி தலையணையில் முகம் புதைத்து தூங்குவதுபோலக் கிடந்தாள். தோள்கள் குலுங்கின.

பண்டாரம் அவள் அருகே அமர்ந்து தலையைத் தொட்டு ‘ சத்தியமா குட்டி.. பை மாறிப்போச்சு…. ‘ என்றார்.

அவள் அவர் கையை எடுத்து உதறிவிட்டு உடலைக் குறுக்கிப் படுத்தாள்.

‘இஞ்ச பாரு குட்டி. ‘

‘ நீங்க வந்து ரெண்டு தோச திம்பியளா ? ‘

‘மாவு இருக்கா ? ‘

‘வருவியன்னுட்டு பெருமாளு சொன்னான். அதனால கொஞ்சம் மாவெடுத்து சுப்பு கடயில ஐஸ் கட்டி வேங்கிப் போட்டு வச்சேன். ‘

இருந்தாலும் தோசை சற்றுப் புளித்துதான் இருந்தது.

‘சின்னவ காரியம் சும்மா சொல்லல்ல ‘ என்றாள் ஏக்கியம்மை அடங்கிய குரலில். ‘அந்தப் பெருவட்டனுக்க மகனுக்க கூட்டுக்காரனுவ மூணு பேரு பைக்கில வாறானுவ, எரும மேல காலன் வாற மாதிரி. எமகிங்கரனுங்க மாதிரி. இவ அவனுக கூடயாக்கும் பல்ல காட்டுதது. ‘

‘என்ன பல்ல காட்டினா ? ‘

‘வண்டிச் சத்தம் கேட்டாக்க பவுடரப் பூசிக்கிட்டு ஓடுயது. ‘

‘நீ சொல்லி வை. வீட்டில இருக்கிற பிள்ளை வல்ல பாட்டோ டான்சோ படிக்க இஷ்டப்படும். ‘

‘இருந்தாலும்.. ‘

‘நீ சும்மா பச்சப் பிள்ளயப்பத்தி கண்டமானிக்கு பேசாண்டாம் கேட்டியா. ‘

ஏக்கியம்மை ‘கருப்பட்டி காப்பி போடட்டா ? ‘ என்றாள்.

‘போடு. ‘

தன் கட்டிலில் வந்து உட்கார்ந்ததும் பண்டாரத்திற்கு மிகவும் ம்மதியாக லேசாக இருந்தது. ஏக்கியம்மை பக்கத்தில் இருந்தாலே எதற்கும் பயப்படவேண்டாம்.

ஏக்கியம்மை காபியை தந்துவிட்டு தரையில் குந்தி அமர்ந்தாள். ‘நாணுகுட்டன் நாயரு வந்திட்டு போனாரு. ‘

‘என்ன காரியம் ? ‘

‘ஒரு தரம் இருக்கு. பய்யனுக்கு கோவாப்பரேட்டிங்கில சோலி. சர்க்காரு சோலியாக்கும்… ‘

‘கோவப்பரேடிவ் சர்க்காருன்னு ஆரு சொன்னா ? ‘

‘சர்க்கார் இல்லியா ? ‘

‘சர்க்காருக்கு உறப்பு உண்டு. ‘

‘பிறவு என்ன ? பையன் கறுப்புதான். படிப்பு வீயே உண்டு. ‘

‘என்ன கேக்கானுக ? ‘

‘அம்பது கேக்கான் இவன். கைல ஒண்ணரை லட்சம். வயலு. ‘

‘கோவாப்பரேடிவ்ல சம்பளம் கொறவாக்கும். ‘

‘சம்பளம் ஆரு பாக்கா இந்த காலத்தில. மே வரும்படி உண்டுமாம். பின்ன குடும்பம் கொள்ளாம். மூணு பய்யனுங்க. இவன் ரண்டாமத்தவன். எனக்கு கொள்ளா முண்ணாக்கும் தோணுது. இவளுக்கும் இப்பம் வயசு இருபத்தஞ்சாவுது. ‘

‘இருபத்தஞ்சுதானே ? ‘

‘இது கூத்தால்ல இருக்கு. பின்ன முப்பத்தஞ்சிலயா கெட்டிக் குடுப்பாவ ? நான் உங்கள கெட்டும்பம் எனக்கு பதினெட்டு வயசு. ‘

‘அந்தக் காலமா இது ? ‘

‘என்னத்துக்குப் பேச்சு ? அவனை நான் வரச்சொல்லியிருக்கன். பைசாய்க்கு குறவு உண்டுமா ? ‘

‘பைசா இருக்கு. ‘

‘பின்ன ? ‘

‘ஒண்ணுமில்ல. வரச்சொல்லு பாப்பம். ‘

மாங்கண்டி சாமி விலை போனதை சொல்லலாமா என்று யோசித்து தவிர்த்தார். ஏக்கியம்மைக்கு மாங்கண்டி சாமி மீது பக்தி உண்டு. சிறுநீர் கழித்துவிட்டு வந்தபோது மீனாட்சியைப் பார்த்தார். தூங்கிவிட்டிருந்தாள். பக்கத்தில் அமர்ந்து அவள் நெற்றி மயிரை வருடினார். ஒரு சுருளை எடுத்து காதோரம் செருகினார்.

‘ஏமிட்டி பிள்ளை கொஞ்சம் மெலிஞ்சு போச்சுண்ணு தோணுது ‘ என்றார்.

‘ஆமா. மாடு மெலியும் கொம்பு கனமாக்கும். வாய நீட்டுற நீட்டுக்கு கொளுப்பு ஏறுமாக்கும். வந்து படுங்க. ‘ மீனாட்சியின் கன்னம் முழுக்க கண்ணீர் உலர்ந்து உப்போடி இருந்தது.

‘ஏளா… சட்டெய எடு. ‘

‘ஏன் இந்நேரத்தில.. ‘

‘நாரோயிலுவரை போயிட்டு வாறேன். ‘

‘என்னத்துக்கு இப்பம் ? ‘

‘நீ சட்டெய எடுட்டி ‘ என்றார். சட்டையைப் போட்டபடி ‘நாரோயிலுக்கு போயி வளவி வேங்கிட்டு வாறேன். ‘

‘எல்லாம் காலம்பற போனாப் போறும். ‘

‘நீ உன் சோலியப் பாரு. ‘

‘இது என்னத்துக்க நீக்கம்பு ? ‘ என்றபடி ஏக்கியம்மை பின்னால் பதறி வந்தாள்.

வெளியே இறங்கி செருப்பைப் போட்டுக்கொண்டு நடந்தார். ஊரே அடங்கிக் கிடந்தது. விடுகளின் ரீங்காரம் மட்டும்தான். நன்றாகக் குளிர் அடித்தது. சாலையில் குறுக்காக பெருச்சாளி ஒன்று ஓடியது. கைகளை மார்போடு கட்டியபடி வேகமாக நடந்தார். இரு பக்கமும் இருண்ட வாழைத் தோப்புகளில் காற்று இலைகளை அளைந்தபடி ஓலமிட்டது.

நாகர்கோவில் சாலைக்கு வந்தபோது மூச்சு இளைத்தது. மணி பன்னிரெண்டு தாண்டியிருக்கும். இனிமேல் எக்ஸ்பிரஸ் பஸ்கள்தான் உண்டு. கம்பத்தில் சாய்ந்தபடி நின்றார். யாரோ வரும் ஒலி. ஒரு பெரிய பசு குளம்பு அதிரச் சென்றது. லாரிகள் மட்டும் ஒளியை கட்டிடங்கள் மீது இறைத்து முழுக்காட்டி அணைந்தபடி ஓலமிட்டுச் சென்றன.

அரைம நேரம் கழித்து கன்யாகுமரி எக்ஸ்பிரஸ் வந்தது. கைகாட்டிவிட்டு பின்னால் ஓடினார். வெகுதூரம் தாண்டித்தான் றுத்தினான். ஓடி ஏறிக்கொண்டபோது மூச்சு வெகுவாக இரைத்தது. உட்கார்ந்து கால்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

கண்டக்டர் டிக்கெட்டை விரலைச் சுண்டிக் கேட்டார். கேரளத் திமிர். குளிர் நடுக்கி எடுத்தது. நீல ஒளியில் பேருந்து முழுக்க ஆட்கள் சாய்ந்தும் சரிந்தும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

வடசேரியில் இறங்கி திறந்திருந்த ஒரு டாக்கடையில் டா குடித்துவிட்டு ஆட்டோ பேசி மீனாட்சிபுரம் போனார். தட்டான் சண்முகவடிவேலுவின் வீடு ஆசாரிமார் புதுத் தெருவில் சந்து மடிப்புக்குள் இருந்தது. ஆலைகள் முன் நிழல்போல மெளனமாக பலர் அமர்ந்து தரைமண்ணை தேங்காய்நார் பிரஷ்ஷால் கூட்டிக் கொண்டிருந்தார்கள். அவரைப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அசைவுகள் நின்றன. சிலர் சிறிய அரிப்பானால் சாக்கடை நீரை அரித்துக்

கொண்டிருந்தனர். பரட்டைத் தலைப் பெண்கள், பையன்கள். தெருமுழுக்க கூட்டிச் சேமித்துச் சலித்தாலும் அரைக் கிராம் தேறுமா என்று எண்ணிக் கொண்டார். ஆனால் ஏதோ கிடைக்கிறது. இல்லாவிட்டால் தொடர்ந்து இதைச் செய்ய மாட்டார்கள்.

வேலுவின் வீட்டு முகப்பில் ஒரு சைக்கிள் ன்றது. திண்ணைமீது ஒரு கிழம் பெரிய கம்பளிப் பொட்டலமாகத் தூங்கிக் கொண்டிருந்தது. படி ஏறி மரக்கதவை தட்டி ‘வேலு வேலு ‘ என்றார்.

உள்ளே ‘ஆரு ‘ என்ற ஒலியுடன் ஒரு பெண் தூங்கி எழுந்தாள்.

‘நான் போத்திவேலுப் பண்டாரம். வேலப்பன் கோயில். ‘

‘ஆரு ? ‘ என்றாள்.

‘போத்திவேலு. வேலுக்குத் தெரியும். ‘

‘இஞ்சேருங்க. இஞ்சேருங்க… ‘

வேலு குழறியபடி எழுவதும் கிசுகிசுப்புகளும் கேட்டன. அவன் சிறிய ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து ‘ஆரு ? ‘ என்றான்.

‘நான் போத்திவேலு. வேலப்பன் கோயில். ‘

‘நக எடுக்கிறதில்ல. பைசா இல்ல. ‘

‘நக வாங்கணும். ‘

‘இந்நேரத்திலயா ? ‘

‘ஆமா. தெற. ‘

திறந்து விளக்கைப் போட்டான். ‘உள்ள வாங்க..நீங்க வேலப்பன் கோயிலுல்லா. ‘

‘பின்ன நான் இம்பிடு நேரமாட்டு என்னத்த சொன்னேன் ? ஒரு ரெண்டு வளவி வேணும் பாத்துக்கோ. ‘

‘செஞ்சு போடலாம். ‘

‘செய்யியதுக்கு இல்ல. இப்பம் வேணும். ‘

‘இப்பம்னு சொன்னா. விடிஞ்சா… ‘

‘விடிஞ்சு நான் கிஷன் நாயருக்க கடைல வேங்க மாட்டேனா. இப்பம் வேணும். பைசா தாரேன். ‘

‘என்னவாக்கும் காரியம் ? ‘

‘சின்னக்குட்டிக்கு பழனீல வாங்கிட்டு வாறதாட்டு சொன்னேன். மறந்துபோட்டேன். ஒரே அழுகை. மனசலிஞ்சு போச்சு. காலம்பற அவ முளிக்கும்பம் கொண்டு போயி கைல போடணும். ‘

‘இப்படி கேட்டியள்னா என்ன செய்யியது. அளவு இருக்கா ? ‘

‘எடுக்கல்லியே. பத்து வயசு பிள்ளையாக்கும். ‘

‘ஒல்லியா ? ‘

‘துரும்பு. எளவு வல்லதும் திண்ணாதானே. பாலோ மோரோ ஒரு குறயும் இல்ல. குருவி மாதிரி கொத்திட்டு அலையும். ‘

வேலு சிரித்தான். ‘கெட்டிக்குடுங்க அண்ணாச்சி. அடுத்த வரிசம் ஆனைக்குட்டி ஆயிப்போடும். அதாக்கும் கணக்கு. ‘ எட்டி மேஜையை இழுத்துப்போட்டு பின்னால் சப்பணமிட்டு அமர்ந்தான். பாயை எடுத்துப் போட்டு விட்டு அவன் மனைவி ‘கடுஞ்சாயா எடுக்கட்டுமா ? ‘ என்றாள்.

‘வேண்டாம்மா. இப்பம்தான் குடிச்சேன். ‘

‘அண்ணாச்சி, செஞ்சு வச்ச வளவி ரெண்டு இருக்கு. ஓரொண்ணும் ஒண்ணரை பவுன். ஆனா சைசு பெரிசு. தாழக்குடி பார்ட்டி ஆர்டர் பண்னது. எடுக்கேளா ? அவிகளுக்கு வேற சொல்லிக்கிடுதேன். ‘

‘சைசு மாத்தணுமே. ‘

‘அது இப்பம் தட்டி எடுக்கேன். ஒரு அரமணிக்கூர். ‘

‘செரிடே ‘ என்றார். ‘இந்தப் பிச்சைக்காரனுக என்னடே அரிச்சு கூட்டுதானுக ? ‘

‘அண்ணாச்சி. பொன்னுல்லா தேடுகானுக. ‘

‘உடைஞ்சு தெறிக்குமா ? ‘

‘இல்லண்ணாச்சி. கழுவுறோம்ல அப்பம் கொறெ போவும். பின்ன தட்டும்பம் வாற தூளு. ‘

‘ஒரு கிராம் கிட்டுமா ? ‘

‘மேலேயே கிட்டும். இதுக்கு என்னா அடிபிடாங்கிய. இந்நேத்து ஒருத்தன் இன்னொருத்தனை கல்லால அடிச்சுப் போட்டான். கிளவனாக்கும். அங்கேயே ஆளு காலி. ‘

‘பிறவு ? ‘

‘பிறவென்ன.. முனிசிபாலிடி வண்டி வந்து இளுத்து போட்டானுக. அவன் மடியில் குறெ ரூபா வச்சிருப்பாம்போல. அது எங்கேன்னுட்டு மூணு தோட்டிக இங்க கெடந்து அடிச்சு மறியுதானுக. அண்ணாச்சி மண்ணும் பெண்ணும் பொன்னும் கடசிவர ஆளவிடாது. என்னங்கிய ? ‘

‘அது செரி. ‘

சிறிது கண்ணசந்திருப்பார். தட்தட் ஒலி கேட்டபடியேதான் இருந்தது. சுத்தியலால் யாரோ ஒரு குழந்தையை அடித்து அடித்துச் சப்பி நீட்டினார்கள். ரயில் ஓடியது.

‘அண்ணாச்சி பாக்குதியளா ? ‘

வளையல் நன்றாகவே இருந்தது, சிறிய பூக்களூம் விளிம்பில் அலை வளைவுகளுமாக.

‘என்ன ரேட்டு ? ‘

‘கிராமுக்கு நானூற்றி எட்டு. மொத்தம் பத்தாயிரத்து எரநூறு. சேதாரம் செய்கூலி சேத்து பதினாலாயிரம். ‘

‘பாத்து போடுடே. ‘

‘என்னண்ணாச்சி உங்ககிட்ட கணக்கு பாப்பமா ? உள்ளது சொன்னா குறச்சாக்கும் போட்டிருக்கு. ‘

‘குறைப்பே குறைப்பே. பாத்து போடுடே. லட்சுமி, உறங்குதவன எளுப்பியாக்கும் விளிக்குது. ‘

‘போட்டு. நம்ம அண்ணாச்சி. அஞ்நூறு கொறயுங்க. ‘

‘பதிமூணு இருக்கு. பிறவு பாப்பம். ‘

‘அண்ணாச்சி.. ‘

‘இருக்கட்டும்டே. நீ நம்ம பய. மூத்தவளுக்கு வேற இப்பம் பொன்னுருக்கணும். ‘

‘உறப்பிச்சாச்சா ? ‘

‘அமஞ்சு வருது. ‘

‘வாருங்க அண்ணாச்சி. ஆச்சியக் கூப்பிட்டு வாருங்க. மனம்போல பாத்துக்கிடலாம். மனம்போல மாங்கல்யம்னா பொன்னுக்கும் சேத்து சொன்னதாக்கும் கேட்டேளா ? ‘

‘பொன்னு கண்ட தட்டானும் நெல்லு கண்ட கோளியும்னு சும்மாவா சொன்னாக.. ‘ என்றபடி பணம் தந்து படியிறங்கினார். நான்கு மணி ஆகிவிட்டிருந்தது.

மீண்டும் பஸ் பிடித்து வேலப்பகோயில் விலக்கில் இறங்கியபோது ஆட்டோக்கள் வந்திருந்தன. உஷத் பூஜை கும்பிட வருபவர்கள் சிலர் இருந்தார்கள். ஏறி நேராக வீட்டருகே போய் இறங்கினார்.

ஏக்கியம்மை கதவைத் திறந்தாள்.

‘இது என்னது, வல்ல பேயோ பூதமோ கூடியுட்டுண்டா ? ‘ என்றாள்.

‘நீ போடி ‘ என்றபடி உள்ளே புகுந்தார்.

மீனாட்சி நமஸ்காரம் செய்வதுபோல தூங்கிக்கொண்டிருந்தாள். பிருஷ்டம் உயர்ந்து ன்றது.

‘ ஏட்டி ஏட்டி ‘ என்றாள் ஏக்கியம்மை.

‘சும்மாரு ‘ என்றபடி வளையல்களை அவள் அருகே பிரித்து வைத்தார்.

‘நல்லாருக்கே, காட்டுங்க. ‘

‘நீ பிறவு பாரு. என் தங்கக்கொடம்லா மொதல்ல பாக்கணும். ‘

‘சீராட்டி சீராட்டி… ‘

‘ஆனை மேல அம்பாரியில ஏத்துவேன். நீ போடி நாறக் களுதை. ‘

சிறிது நேரம் பார்த்தபடியே நின்றார் பண்டாரம். ‘இது என்னது இப்பிடி உறங்குது ? ‘

‘ஓரொண்ணுக்கு ஓரோ ரீதி. சின்னவளைப் பாருங்க. தாடகை மலை மாரில்லா கெடக்கா. ‘

‘ஒரு சாயா போடு கடுப்பமா.. ‘

‘கோயிலுக்கு போறேளா ? ‘

‘போணும். ‘

‘வய்யெண்ணா படுத்துட்டு பிறவு போறது… ‘

முற்றும்

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்