ஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே

This entry is part [part not set] of 35 in the series 20050304_Issue

தமிழில் – எஸ். ஷங்கரநாராயணன்


கதையில் பெயர்கள் எதுவுங் கிடையாது.

கதாபாத்திரங்கள் என்றால், பத்திரிகையாளர், ஒரு பத்திரிகையாளினி, ஒரு ரொம்ப அழகான சின்னப்பெண்குட்டி – அவள் ஜப்பானிய உடை அணிந்திருந்தாள், அப்புறம் ஒரு அம்மா. பக்கத்து அறையில் சின்ன வாலிபக் கூட்டணி, என்னவோ வார்த்தையாடியபடி இருக்கிறார்கள். பத்திரிகைக்காரரும், காரியும் அந்த அறைவழியே போகிற வருகிற சந்தர்ப்பங்களில் எல்லாம் அந்த சிநேகித வட்டம் எழுந்து கொள்கிறது.

மாலை நான்கு மணியளவில் அந்தப் பத்திரிகைக்காரரும், பத்திரிகைக்காரியும் அந்த வீட்டின் முன்வளாகத்தில் நிற்கிறார்கள். அழைப்பு மணி அழுத்தப் பட்டிருக்கிறது.

‘ ‘அவங்க நம்மை உள்ள விடப்போவதில்லை ‘ ‘ என்றாள் பத்திரிகையாளினி.

உள்ளறையில் யாரோ நடமாடுகிறார்கள். ஒரு குரல். ‘ ‘கீழ போயி யார்னு பாக்கறேம்மா. ‘ ‘

கதவு மெல்லிசாய் விரிசல் விட்டாப் போலத் திறந்து கொள்கிறது. நெட்டுக்குத்தான விரிசல். பாதி உயரத்துக்கு மேலே கருஞ்சாந்தான வெகு அழகான முகம் ஒன்று. மென்மையான கேசம். நடுவகிடு.

‘என்னமாய் இருக்கா ‘ என நினைத்துக் கொண்டார் பத்திரிகைக்காரர். நிறையப் பேட்டிகளுக்கு அவர் போயிருக்கிறார். நிறைய அழகான பெண்கள் தட்டுப்பட்டும் இருக்கிறார்கள். இவளைப் போல கடைசிவரை அழகாகவே மனசில் பதிந்த சிறுமி எவருங் கிடையாது.

‘என்ன வேணும் ? ‘ கதவில் இருந்து அந்தப்பெண் கேட்டாள்.

‘நட்சத்திரம், பத்திரிகைலயிருந்து வரோம். இவங்க குமாரி …. ‘

‘உங்ககிட்ட எங்களுக்குப் பேச ஒண்ணில்ல. நீங்க போகலாம் ‘ அந்தக் குட்டிப்பெண் சொன்னாள்.

‘ஆனா… ‘ நிருபர் விடாமல் பேசினார். பேச்சை நிறுத்தி விட்டால் கதவு படார்னு சாத்தப்படும். சந்தேகமேயில்லை. அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே போனார். பிறகு அந்தச் சிறுமி கதவை விரியத் திறந்தாள். ‘சரி வாங்க. நான் மாடிக்குப் போயி அம்மாகிட்டச் சொல்றேன். ‘

அவள் விரைந்து வளைவு நெளிவாய் மாடியேறிப் போனாள். கிமோனோ அணிந்திருந்தாள். அதற்கு வேறெதாவது பெயரும் இருக்கலாம். கிமோனோவுக்குள் நடைசரசரப்பு இப்படி இராது. விடியலின் மென்மை அதற்கு உண்டு. கிமோனோ அம்சங்கள் அதில் இல்லையென்றே படுகிறது. அழுத்தமான வண்ணங்கள் இதில். தனித்தனியாய், கலக்காத வண்ண அடுக்குகள். ஊடாடிய தையல் அடையாளம். இடுப்பு பட்டியில் இரண்டு வாட்கள் மாட்டிக் கொண்டிருக்கிறாப் போல இறுக்கம்.

உள்ளறையில் சோபா ஒன்றில் பெண் நிருபரும் அவரும் அமர்ந்தார்கள். ‘ச், வளவளன்னிட்டிருந்தேன் இல்லியா ? ‘ என்றார் அவர்.

‘சேச்சே. நீங்க பேசுங்க. நாம உள்ள நுழைய முடியுமான்னே நம்பிக்கை வரல்ல எனக்கு ‘ என்றாள் அவள். ‘குட்டி பாக்க லட்சணமா இருக்கா. இல்லியா ? ‘ ஆமாம் என்று நினைத்துக் கொண்டார் அவர். /அந்த கிமோனோவை எடுத்துப் போட்டுக்கிட்டப்போ அவ என்ன (தற்காப்பு நடவடிக்கை) பண்ணிக்கிட்டான்னு இவளுக்குத் தெரியுமா ?/

அவங்க கீழ வர்றாங்கப்பா.

ஜப்பானிய கிமோனோ உடையுடன் அந்தப் பெண் மாடியிறங்கி வந்தாள். கூடவே அவளது தாயார். இறுக்கமான முகம்.

‘அந்தப் படம்லாம் எங்க எடுத்தீங்க தெரியணும் எனக்கு ‘ என்றாள் தாயார்.

‘அழகான படங்கள். இல்லே ? ‘ என்றாள் பெண் நிருபர்.

எந்தப் படம் என்ன விஷயம் எதுவும் அவர்கள் ரெண்டு பேருக்குமே தெரியாது. சத்தியமாத் தெரியாது. ஆனா தெரிஞ்சாப்ல நம்ப வைக்க முடிந்ததே அதைச் சொல்.

‘நாங்க எதுவும் சொல்றதுக்கு இல்ல. பத்திரிகைல எங்களைப் பத்தி எதுவும் வரணுன்னிட்டில்ல. நிறைய வந்திட்டது. எங்களைவிட நிறையப் பேர் எங்களைவிட மோசமா இந்த பூகம்பத்துல பாதிக்கப் பட்டிருக்காங்க. இனியும் அதைப் பத்தி நாங்க பேச ஒண்ணில்ல. ‘

‘அவங்களை உள்ள வரச் சொல்லிட்டேனேம்மா ‘ என்றாள் சிறுமி. திரும்பி அவரைப் பார்த்தாள். ‘உங்களுக்கு எங்ககிட்ட என்ன தெரிஞ்சுக்கணும் சொல்லுங்க… ‘

‘என்ன நடந்ததோ, அதுல என்னென்னவெல்லாம் உங்க நினைவுக்கு வருதோ சொல்லலாம் ‘ என்றார் அவர்.

‘நாங்க சொன்னா அதை எங்க பேர் போடாம வெளியிடணும். அதற்கு சத்தியம் பண்ணுவீங்களா ? ‘ என்று கேட்டாள் சிறுமி.

‘அட பேர்ல என்ன ஆயிறப் போகுது ‘ என்றார் அவர்.

‘போடறதில்லைன்னு சத்தியம் பண்ணாத வரை நாங்க எதுவும் சொல்லப் போறதில்லை ‘ என்றாள் சிறுமி.

‘உனக்குத் தெரியாதுடி. இந்தப் பத்திரிகைக்காரங்க… போட மாட்டேன்னு கற்பூரம் அடிப்பாங்க. அப்றம் போட்டு விட்ருவாங்க ‘ என்றாள் தாயார்க்காரி. அவள் ஒத்துழைப்பாளா விஷயம் தேறுமா என்றே குழப்பமாய் இருந்தது. அவள் பேசிய தோரணையில் நிருபருக்கு ஆத்திரம் கிளம்பியது. இது ஒரேயொரு கேவலமான விஷயம். பத்திரிகையாளர்களால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கல்லியா ?

‘திருமதி … ‘ என்று அவர் பேசினார். ‘அமெரிக்க ஜனாதிபதியேகூட ஆபத்தான ரகசியங்களை, வெளிய தெரிஞ்சா தன் பதவியே பந்தாடப்படும்ன்றா மாதிரியான விஷயங்களையே எங்ககிட்டச் சொல்லியிருக்கார். வாராவாரம் பாரிஸ்ல பிரான்சின் பிரதமர் அரசாங்கத்தையே கவுத்தறா மாதிரி ரகசியங்களை ஒரு பதினஞ்சு பத்திரிகையாளர்களோட பரிமாறிக்கறாரு… நான் பத்திரிகை நிருபர்கள் பத்திச் சொல்றேன். சேதி சொல்லிகள் உள்ளூர் ஆசாமிகளைப் பத்தி நான் பேசல்ல. ‘

‘சரி சரி ‘ என்றாள் தாயார். ‘நிருபர்கள் பத்தி நீங்க சொல்றது உண்மையா இருக்கலாம் ‘.

பிறகு அந்தச் சிறுமி கதையை ஆரம்பிக்க, அம்மா சேர்ந்து கொண்டாள் –

‘(கனடாவின் பசிபிக் கடலில் புறப்படுகிற பயணிக்கப்பல் – ஆஸ்திரேலியப் பேரரசி) எங்க கப்பல் கிளம்பத் தயாராய் நின்னிட்டிருந்தது… ‘ என்றாள் சிறுமி. ‘அப்பாவும் அம்மாவும் கீழ. சரக்கேத்தற பக்கம் வெளிய வந்திட்டிருக்காவிட்டால் அவர்ிகளால் தப்பிச்சிருக்க முடியுமான்னே சந்தேகந்தான்… ‘

‘சனிக்கிழமைல மதியந்தான் அந்தக் கப்பல் கிளம்பும் ‘ என்றாள் அம்மா.

‘பன்னிரண்டு மணிக்குக் கொஞ்சம் முன்னால, சரசரன்னு பெரிய சத்தம். சகலமும் பூண்டோட இப்பிடியும் அப்பிடியும் அசைய ஆரம்பிச்சிட்டது. சரக்குக் கூடமே உருளுது புரளுது. தம்பியும் நானும் கப்பல்லேர்ந்து குனிஞ்சி எட்டிப் பார்த்தோம். கரைல எல்லாரும் கையை உசத்தி கொடியசைச்சி வழியனுப்பும் உற்சாகத்தில் இருந்தார்கள். எல்லாம் முப்பது விநாடிதான்… ‘ என்றாள் பெண்.

‘தளவாடத்துல தடார்னு நாங்க கீழ விழுந்தோம் ‘ என்றாள் அம்மா. ‘பெரிய காங்கிரீட் மேடை அது. மேடை மொத்தமுமே முன்னயும் பின்னயும் ஆடுது. எங்க அவரும் நானும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிக்கிட்டோம். இப்பிடியும் அப்பிடியுமா உருள்றோம். நிறையப் பேர் துாக்கியே வீசப் பட்டார்கள். ஒரு ரிக்ஷாக்காரன் தண்ணிக்குள்ளேர்ந்து எழுந்து வந்ததை நான் பார்த்தேன். கார்களும் சகல சாமான்களும் உள்ள போயிட்டது. எங்க காரைத் தவிர… எங்க கார் பிரஞ்சு துாதரக கார், /பேர்ன் அரசர்/ முத்திரை பொறிக்கப் பட்ட காரின் அருகில் நின்றிருந்தது. தீ பற்றிக் கொள்ளும் வரை… ‘

‘பூமியதிர்ச்சி நின்னதும் நீங்க என்ன பண்ணினீங்க ? ‘ என்று கேட்டார் நிருபர்.

‘நாங்கள் கடற்கரைப் பக்கம் வந்து விட்டோம். தாவி ஏறி வர்றாப்ல ஆயிட்டது. மேடையே நொறுங்கிப் போச்சு. அங்கங்க விரிசல். பாளம் பாளமாப் போச்சு. கரையோரமா படகுப்பாலம் பார்க்க நடந்தோம். வழியெல்லாம் பெரிய சரக்கு குடோனும், பட்டறைகளும், கொட்டடிகளும், குழிபாறிச்சிக் கிடந்தது. பிரிட்டிஷ் துாதரகம் இருக்கில்ல, அதுவரை எல்லாமே பொக்கைவாயா குழிஞ்சு கெடக்கு. மேல பொளந்து அப்பிடியே உள்ளாறவே விழுந்திட்டது, புனல் (funnel) மாதிரி. பாட்டில்ல மண்ணெண்ணெய் ஊத்த மாட்டமா, அந்தப் புனல் மாதிரி. சும்மா பொளிஞ்சு போய்க் கிடக்கு. நெடுஞ்சுவர் பூரா இடிஞ்சி போச்சு. நேர்ப்பார்வைக்கே கட்டடம் அதைத் தாண்டி பின் வெளி எல்லாம் தெரியுது.

அப்பதான் அடுத்த ஆட்டம்.

உடனே நாங்க முடிவு பண்ணினோம். இப்பிடியே போயிட்டிருக்கப்டாது. எழுந்து நேரா வீட்டைப் பார்க்கப் போயி பிரயோஜனம் இல்லை. எங்க இவரு விசாரிச்சாரு. ஆபீஸ்காரங்க சட்னு வெளிய வந்துட்டாங்க போல. ஆனா சரக்கு எடுக்கிற ஏத்துற இடத்து மனுஷங்களைப் பத்தி ஒண்ணுஞ் சொல்றதுக்கில்ல. அங்கங்க சரிஞ்சி விழுந்து கிடந்த கட்டடங்களால எல்லா இடத்துலயும் ஏராளமா புழுதி யெழும்பி கண்ணை மறைச்சி நிக்குது. எதையுமே பாக்க முடியவில்லை. அத்தோட எங்க பார்த்தாலும் குபீர்னு தீ. பத்தி எரிய ஆரம்பிச்சிட்டது… ‘

‘ஜனங்க என்ன செஞ்சிட்டிருந்தாங்க ? அவங்க என்ன மாதிரி நடந்துக்கிட்டாங்க ? ‘ என்று கேட்டார் நிருபர்.

‘யாருமே திகைச்சுப் போகவில்லை. அதான் விநோதம். பேதலிச்சாப்ல ஒருத்தரும் அலறி நான் பார்க்கவேயில்லை. ஆனா… ரஷ்யத் துாதரகத்தில் ஒரு பெண். பிரிட்டிஷ் துாதரகத்துக்குத் தொட்டடுத்து ரஷ்யத் துாதரகம். அது இடிஞ்சி சிதையவில்லை. ஆனாலும் செம குலுக்கல். அவள் வாசல் கதவண்டை அலறிக்கிட்டே வந்தாள். கூலிக்காரப் பட்டாளம் நிறையப்பேர் இரும்பு சுற்றுவேலிக்கு அப்பால் உக்கார்ந்திருந்தார்கள். அவள் தன்னுடைய மகளை வெளியே கொண்டுவந்து தரும்படி கெஞ்சிக் கொண்டிருந்தாள். ‘ரொம்பச் சின்னது அது… ‘ என்றாள் அவள் ஜப்பானிய மொழியில். ஆனால் எல்லாரும் அங்கங்க அப்பிடியப்பிடியே உட்கார்ந்திருந்தார்கள். யாரும் இம்மியும் நகர்கிறாப் போல இல்லை. அவர்களால் நகரவே முடியவில்லை போல இருந்தது. ஆமா, அப்போது யாரும் பிறத்தியார் யாருக்குமே உதவுகிறாற் போல இல்லைதான். ஒவ்வொருத்தருக்கும் தங்களைப் பார்த்துக்கறதே பிரதானமாய் இருந்தது. ‘

‘நீங்க படகுக்கு எப்பிடித் திரும்பி வந்தீங்க ? ‘ என்று கேட்டாள் பத்திரிகைக்காரி.

‘சில சாம்பன்கள், அதான் தோணிகள் இருந்தன. தேடித் திரிஞ்சி ஒரு சாம்பனை இவர் எட்டினார். நாங்க பழையபடி கிளம்ப ஆயத்தமானோம். ஆனா எங்கேயும் சும்மா திகுதிகுன்னு தீ பத்தி எரியுது. கடல்காத்து கூடவே நல்லா கிளம்பிட்டது. செமக்காத்து கொஞ்ச நேரம். நாங்க திரும்ப சரக்கேத்தற கூடம் எப்பிடியோ வந்தோம். மரப்பாலம் கட்டையெல்லாம் கிடையாது. ஆனா ஒரு கயிற்றை வீசிப்போட்டார்கள். பிடிச்சி ஏறி வந்தோம். ‘

அந்த அம்மாவுக்கு இனியும் அடியெடுத்துக் கொடுக்கவோ கேள்வி கேட்கவோ தேவை இருக்கவில்லை. யோகோஹாமா கடற்கரையில் அந்த நாளும், அதற்கடுத்த நாட்களும் இரவுகளும் அவள்ி நினைவுகளில் முட்டி மோதின. அவள் ஏன் பேட்டிக்ிகு மறுத்தாள் என்றும், அவளை அப்படி நிர்ப்பந்திக்க எவருக்கும் ஏன் உரிமை இல்லை என்பதும் நிருபருக்கு இப்போது புரிந்தது. மீண்டும் ஒருதரம் அவள் மனசைக் கலக்கிச் சேறாக்கி சேதாரப் படுதத வேண்டியிருக்கிறது. அவள் கரங்கள் மெல்ல அதிர்கின்றன.

பிரஞ்சுத் துாதரின் பையன் எங்கள் வீட்டில்தான் வந்து தங்கிக் கொண்டான். உடம்பு சரியில்லை அவனுக்கு. துாதர் யாரையோ வழியனுப்ப வந்திருந்தார். எங்கள் தெருக்களைப் பார்க்க வெளிநாட்டுக்காரர்களின் அடுக்குக் குடியிருப்புப் பகுதி கொஞ்சம் மேடுதான். ஆனா அந்தப் பகுதியே சரிந்திறங்கி ஊர்ப்பக்கமா வந்திருந்தது. துாதர் கடற்கரைப் பக்கம் நடந்து வீட்டுப்பக்கம் வந்தார். பையனை வெளியே மீட்டாச்சி. ஆனா முதுகுப் பக்கம் காயம் பட்டுக் கொண்டிருந்தான். மணிக்கணக்கில் போராடிதான் பையனை அவர்கள் மீட்டிருந்தார்கள். ஆனா அந்த வீட்டு பிரஞ்சு சமையல்காரன்… அவனை வெளியே கொண்டுவர முடியாமல் போச்சு. சமையல்காரனை அம்போவென்று விட்டுவிட வேண்டியிருந்தது. ஏன்னா ரொம்ப சுத்தி வளைச்சிட்டது தீ. ‘

‘நெருப்பு எரிய எரிய அவனை உயிரோட உள்ளேயே விட்டுட்டு வந்திட்டாங்களா ? ‘ என்று கேட்டாள் பெண் நிருபர்.

‘ஆமாம் ‘ என்றாள் அம்மா. ‘அவன் மனைவி எடுபிடி. வீட்டுவேலைகள் செய்கிறவள். அவளிடம் அவனை வெளியே கூட்டிட்டு வந்துவிட்டாற் போலச் சொன்னார்கள். ‘

அந்த அம்மாள் அலுத்துக் களைத்து தொடர்ந்து பேசினாள். ‘ஜெஃபர்சன் படகில் எங்களுடன் ஒரு பெண் வந்தாள். அவள் முகம்கூட நினைவில் இல்லை. கணவனை இழந்திருந்தாள் அவள். ஒரு இளஞ்ஜோடி. அப்பதான் வெளியே வந்திருந்தார்கள். புதுக் கல்யாணம். கடைத்தெருப் பக்கம் அவள் போயிருந்தாள். அப்பதான் எல்லாம் நடந்தது. அவளை அவனால் நெருங்க முடியவில்லை. அந்தளவு நெருப்பு எரிகிறது. அமெரிக்கன் ஆஸ்பத்திரி பெரிய டாக்டரை வெளியே எடுத்து விட்டார்கள், ஆனாலும் உதவி டாக்டர்… அவர் மனைவி தப்பிக்க வழியில்லாமல் போச்சு. அத்தனை விரைவா எல்லாம் தீ பத்திக்கிட்டது. மொத்த ஊரே தீக்காடா எரியுது.

‘நாங்க ஆனால், படகில் இருந்தோம். இருந்த புகையில் பாதிநேரம் கரையே கூட மறைஞ்சிட்டது. எப்ப நிலைமை ரொம்ப ரொம்ப மோசமாச்சின்னா, நீர்மூழ்கி எண்ணெய்க் கப்பல் பத்திக்கிட்டது பாருங்க… ஒவ்வொரு எண்ணெய்த் தொட்டியும் வெடிக்குது. எண்ணெய் பத்திக்குது. தீ தாவித் தாவி கடற்கரையை எட்டி சரக்குக் கூடத்துக்கு நகர்ந்தது. சரக்குக் கூடத்தை தீ எட்டி எல்லாம் எரிய ஆரம்பித்த போது நாங்கள் ஆச்சரியப் பட்டோம். அந்த நிலைமையில் நாங்கள் எங்கள் ‘பே ர ர சி ‘ கப்பலுக்கு வந்திருக்கத்தான் முடியுமா ? தீ கப்பலையே எட்டியிருக்குமே ? தீ எரிகிற எல்லைக்குத் தள்ளி எல்லாப் படகையுமே எங்கள் காப்டன் நகர்த்தி யிருந்தார். எங்களையும் ஏற்றிக் கொள்கிற ஏற்பாடெல்லாம் அருமையாச் செய்திருந்தார். நெருப்புக் கிட்டத்தில் போகவே முடியாது. என்ன ஒரு வெக்கை. பெருங் குழாய்கள் வழியா தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறார்கள். தீ எரிஞ்சிட்டுதான் இருக்கு.

‘நங்கூரத்தின் சங்கிலி எசகுபிசகா காத்தாடில மாட்டிக் கிட்டிருந்தது. அதை வெட்டியெறிய ஆட்கள் பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவழியா சரக்கு வளாகத்தில் இருந்து துண்டித்துக் கொண்டு புறப்பட்டோம். எத்தனை பரவசமாய் இருந்தது அப்போது. யோகோஹாமா கடற்கரையில் அப்பிடி வெட்டிக்கொண்டு ஓடுவதைப் பார்க்க முடியுமா ? நம்பவே முடியாத அற்புத அனுபவம்… ‘

‘பகலென்ன ராவென்ன நிறைய காயம்பட்ட ஆட்களையும் அகதிகளையும் கொண்டு வந்துக்கிட்டே இருந்தாங்க. சாம்பன்களிலோ எதுலயோ வந்து சேர்ந்தார்கள் அவர்கள். எல்லாரையும் எங்க படகுல கூட்டிக்கிட்டாங்க. நாங்க படகு மேல்த்தளத்தில்தான் படுத்துக் கொண்டோம்.

‘கடலோர எல்லை தாண்டியபோதுதான் எங்க இவருக்கு மன சமாதானம் ஆனது, ‘ அம்மையார் சொன்னார். ‘கடற்கரைப் பக்கமே பழைய எரிமலை வாய்கள் ரெண்டு இருந்தன. அது எந்நேரமும் திரும்பக் வெடித்துக் கிளம்பும் என்று அவருக்குக் கவலை. ‘

‘அலைக் கொந்தளிப்பு எதுவும் இல்லையா ? ‘ என்று கேட்டார் நிருபர்.

‘இல்லை. அந்த மாதிரி எதும் நடக்கவேயில்லை. கோப் நகரம் நோக்கி நாங்கள் போயிட்டிருந்தோம். ஒருவழியா யோகோஹாமா விட்டுக் கிளம்பியிருந்தோம். படகில் போகிறபோதே மூணு நாலு தரம் பூமி நடுக்கத்தை அசக்கலை உணர்ந்தோம். ஆனால் அலைஆவேசம் மாதிரி எதுவும் தெரியவில்லை. ‘

அவள் மனம் திரும்ப யோகோஹாமா கரைக்குப் போனது. ‘ராத்திரி முழுக்க கடல் தண்ணியில் நின்றே சிலர் ரொம்ப களைத்துப் போனார்கள்… ‘ என்று அவளே ஆரம்பித்தாள்.

‘ராப்பூராவுமா… தண்ணியிலேயேயா ? ‘ மெதுவாக நிருபர் அடியெடுத்துக் கொடுத்தார்.

‘ஆமா. நெருப்புகிட்டே யிருந்து தப்பிக்கலாம் அல்லவா ? அவர்களில் ஒருத்தி கிழவி. வயது எழுபத்தியாறு இருக்கணும். அவ ராப்பூரா கடல்த் தண்ணியில் நின்னுட்டிருந்தாள். அங்கங்கே வாய்க்கால்களிலும் நிறையப் பேர் நின்றிருக்கிறார்கள். யோகோஹாமா ஊர்முழுக்க குறுக்கிலும் நெடுக்கிலும் நிறையக் கால்வாய்கள் தெரியுமா ? ‘

‘பூமி யதிர்ச்சியினால் அது எதும் குழப்படி பண்ணவில்லையா ? ‘ என்று கேட்டாள் பெண் நிருபர்.

‘ச், அதெல்லாம் இல்லை. நெருப்பு பிடிச்சி எரிஞ்சிட்டிருக்கிற சமயத்தில் அவை ரொம்ப நல்ல விஷயமா இருந்தது ‘ என்றாள் அம்மாள் ஈர்ப்புடன்.

‘எல்லாம் ஆரம்பிச்சபோது நீங்க என்ன மனநிலையில் இருந்தீர்கள் ? ‘ என்று கேட்டார் நிருபர்.

‘ம், இது பூமியதிர்ச்சிதான் என்று எங்களுக்குத் தெரிந்து விட்டது ‘ என்றாள் அம்மையார். ‘ஆனால், அது இத்தனை மோசமாய் இருக்கும் என்று தெரியவில்லை. அங்க நிறைய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டிருக்கு. ஒரு தடவை, ஒன்பது வருஷங்கள் முன்னால், ஒரே நாளில் அஞ்சு முறை குலுக்கல் இருந்தது. அதேபோல இப்பவும், நாங்க ஊர் உள்ளே போய் எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்து வரலாம்னு நினைச்சோம். நிலைமை இத்தனை மோசம்னு தெரிஞ்சதும், சாமான்கள் ஊர் இதெல்லாம் முக்கியம் இல்லைன்னு ஆகிவிட்டது. திரும்ப வீட்டுக்குப் போக நான் யோசிக்கவேயில்லை. என் பெண்ணும் பையனும்தான் ஊருக்குப் போறதா இருந்தது. இவங்க அப்பா இன்னும் கோப் நகரத்தில்தான் இருக்கிறார். நிலைமையைச் சீரமைக்கிறதில் அவருக்கு அங்கே நிறைய வேலை இருக்கிறது. ‘

தொலைபேசி மணி ஒலித்தது அப்போது. அடுத்த அறையில் அந்தச் சிறுமி சிநேகித வட்டத்தில் ‘அம்மா நிருபர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ‘ என்று பேசுவது உள்ளே வந்தது. தொலைபேசி உரையாடல் இசையைப் பற்றி. நிருபர் காதைத் தீட்டிக்கொண்டு பூமியதிர்ச்சி பற்றி எதுவும் பேச்சு கிடைக்குமா என்று எதிர்பார்த்தார். ம்ஹும்.

அம்மையார் அயர்ந்து போயிருந்தார். பெண் நிருபர் எழுந்து கொண்டாள். பத்திரிகையாளரும் கிளம்பலானார்.

‘பெயர் வரக்கூடாது. புரிஞ்சதா ? ‘ என்றாள் அம்மையார்.

‘அதுனால ஒரு பிரச்னையும் வராது உங்களுக்கு. கவலைப் படாதீங்க. ‘

‘நீங்க பெயர் போடவில்லைன்னு ஒத்துக்கிட்டாங்க ‘ என்றாள் அம்மையார் அலுப்புடன். நிருபர்கள் வெளியேறினார்கள். சிநேகித வட்டம் எழுந்து நின்றது.

கதவு சாத்தப்படுமுன் அந்த ஜப்பானிய கிமோனோவை ஒரு பார்வை பார்த்துக் கொண்டார் நிருபர்.

‘கதை யார் எழுதப்போறாப்ல ? நீங்களா நானா ? ‘ பெண் நிருபர் கேட்டார்.

‘தெர்ல ‘ என்றார் நிருபர்.

– – – –

Japanese Earthquake – Ernest Hemingway

Toronto Daily Star 25 September 1923

தமிழில் – எஸ். ஷங்கரநாராயணன்

storysankar@rediffmail.com

01 03 2004

Series Navigation