சொல்லவா கதை சொல்லவா…

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

சந்திரலேகா வாமதேவா-


கதை கேட்க விரும்பாதவர் இந்த உலகத்தில் யாராவது இருக்கிறார்களா ? சிறுவர் முதல் பெரியோர் வரை கதையானால் நின்று கேட்டு விட்டே செல்வார்கள். சிறுவர்களுக்குக் கதை கேட்பது என்பது மிகவும் விருப்பமான விஷயமாகும். எங்களுரில் பாட்டி கதை சொல்வது போல இங்கே சிறுவர் சிறுமியர்கள் படுக்கைக்குச் செல்லும் போது தந்தை அல்லது தாய் அருகிருந்து அழகான வண்ணப் படங்கள் போட்ட புத்தகங்களிலிருந்து கதை வாசிப்பது என்பது ஒரு மரபாகவே வளர்ந்திருக்கிறது. படுக்கை நேரக் கதைகள் என்று அழகான வண்ணப்படங்கள் நிறைந்த கதைப் புத்தகங்கள் நிறையவே உள்ளன. அக் கதைகள் பிள்ளைகளின் மனங்களில் கற்பனைகளைத் தூண்டி அவர்களை மிருகங்களும் பறவைகளும் அற்புதமான மனிதர்களும் நிறைந்த மாயா உலகில் மகிழ்ச்சியுடன் சஞ்சரிக்க வைக்கின்றன.

கதை சொல்லுதல் என்பது ஒரு பண்பாட்டுக்கு மட்டும் உரித்தானதன்று. அனைத்துப் பண்பாடுகளும் தத்தமது தேவைகளுக்கேற்ப கதை சொல்லும் மரபை வளர்த்துக் கொண்டுள்ளன. ஆங்கிலத்தில் fairy-tales என்றழைக்கப்படும் கற்பனைக் கதைகள் மகிழ்ச்சியூட்டுதலை மட்டும் நோக்கமாகக் கொண்டு பிள்ளைகளுக்கு பெரியோர் கூற வாய் வழி மரபாக வளர்ந்து வந்தவை. பிரான்சில் Charles Perrault என்பவராலும் ஜேர்மனியில் Grimm சகோதரர்களாலும் தொடர்ந்து ஸ்கந்திநேவியா உட்பட ஐரோப்பாவில் உள்ள ஏனைய தொகுப்பாளர்களாலும் இவை தொகுக்கப்பட்டுள்ளன. நவீன ஆங்கிலத்தில் இவை அதிசய கதைகள் (Wonder Tales) என்றும் பிரான்சிய மொழியில் contes என்றும் ஜேர்மானிய மொழியில் Mயூrchen என்றும் அழைக்கப்படுகின்றன.

ஆங்கிலத்தில் legend எனப்படுபவை வாய் வழியாகச் சொல்லப்பட்டு காலம் காலமாகப் பேணப்பட்டு வந்துள்ள இன்னொரு பிரிவு கதைகளாகும். கேட்பவரும் சொல்பவரும் தாம் சார்ந்துள்ள சமூகத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நம்பிக்கைகளையும் கற்பிதங்களையும் அவர்களது நாளாந்த வாழ்வில் கவனத்தில் கொள்ளும் விஷயங்களையும் அடிப்படையாகக் கொண்டமைவது இந்தக் கதைகளின் அடிப்படை வரைவிலக்கணமாகும். உதாரணமாக கொலை செய்யப்பட்ட உயிர்கள் அமைதி கொள்ளாது, பாவிகளைத் தண்டிக்க கடவுள் அனர்த்தங்களை ஏற்படுத்துவார் போன்ற நம்பிக்கைகளை இக் கதைகள் கொண்டிருப்பன. சாதாரணமாக இக்கதைகள் நடந்தவை என்று நம்பும் ஒருவரால், கேட்போர் இவற்றை உண்மையென்று நம்பி இவற்றால் தெரிவிக்கப்படும் நீதியை ஏற்றுக்கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் கூறப்படுகிறது. நம்பகமான அறிவில் மேலோங்கிய ஒருவரால் கூறப்பட்டது, அல்லது தனது உறவினருக்கு நடந்தது, அல்லது தன்னால் அனுபவிக்கப்பட்டது என்று கூறுவதன் மூலம் கதை கூறுபவர் கதையின் நம்பகத்தன்மையை வலுப்படுத்துவார். தான் கூறும் கதைக்குச் சான்றாக தேவாலயச் சுவரில் உள்ள ஒரு கறையையோ அல்லது நிலத்தில் உள்ள ஒரு தனித்தன்மையான அமைப்பையோ அவர் குறிப்பிடுவார். ஆயினும் சமூகத்தில் காணப்படும் நம்பிக்கைகள் காலப் போக்கில் மாறுவனவாகையால் ஒரு காலத்தில் உண்மை என்று கூறப்பட்ட கதைகள் பின்னர் தமது நம்பகத்தன்மையை இழக்கின்றன. இதனால் இக்கதைகளைப் பின்னர் கூறும்போது கதை கூறுபவர் அரை நம்பிக்கையுடன் கூறுவது போல கதை கேட்பவரை கவரும் வகையில் நகைச்சுவை கலந்த குரலில் கூறுவார். உள்ளுர் பின்னணியில் கூறப்படுவதாலும், மிகை எழுச்சியற்ற பண்பு கொண்டவையாக இருப்பதாலும் இந்நிலையில் கூட இவை அதிசயக் கதைகளை விட வேறுபடுபவை. எவ்வாறாயினும், பெரும்பான்மையான இக்கதைகள் ஒரு சமூகத்தின் நேர்மையானதும் தீவிரமானதுமான நம்பிக்கைகளைக் குறித்து நிற்பன.

Legend என்ற கதை வகையின் இன்னொரு முக்கிய இயல்பு என்னவெனின் எவ்வளவு சுருக்கமான கதையாயினும் அதில் ஒரு கரு இருக்கும். நிலையான, அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய வடிவில், மரபுக்கூடாக இக் கதைக் கரு ஒரு கதையில் நிலை நிறுத்தப்படும். இக்கதை வெறும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் கூற்றாகவோ கதை கூறுபவரின் அனுபவத்தைக் கூறும் வடிவமற்ற குறிப்பாகவோ இல்லாது முழு கதை வடிவில் அமைந்திருக்கும். இதன் அடிப்படை அமைப்பு அதிகளவு நினைவுச் சக்தியையும் நாடகத் தன்மையையும் கொண்டிருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அமைக்கப்பட்ட கதைகள், கதை கூறுபவரிடமிருந்து மற்றொரு கதை கூறுபவருக்கு வாய்வழி மரபாக பல தலைமுறைகளாக சில வேளைகளில் பல நூற்றாண்டு காலமாக கடத்தப்பட்டு வந்திருக்கலாம். இதனால் கதை கூறுபவர் தனக்குரிய வகையில் மாற்றங்களையும் விவரங்களையும் சேர்க்கக்கூடிய வகையில் இவை மிக வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ளன.

Legend கதைகள் அவை கூறப்படும் விஷயங்களைப் பொறுத்து உப பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவது முக்கிய பிரிவு கற்பனையாக உருவாக்கப்பட்ட பழைய கதைகள் அதாவது mythical stories. இப்பிரிவுக் கதைகள் உண்மை போல கூறப்பட்ட போதும் அமானுஷ்ய உயிரினங்கள், இயற்கை மீறிய சம்பவங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டிருக்கும். அடுத்த முக்கிய பிரிவு வரலாற்றுக் கதைகள். இப்பிரிவில் உள்ள கதைகள் நிஜ மனிதர்களையும் அவர்களது வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் கொண்டிருப்பன. இவை ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் பகைப்புலத்தில் கூறப்படுவதால் தூரதிஷ்டவசமாக வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களால் இவற்றை ரசிக்க முடியாதுள்ளது.

இக்கதைகளை அவற்றின் தொழிற்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கலாம். ஒரே கதை ஒரே நேரத்தில் இரண்டோ அதற்கு மேற்பட்ட தொழிற்பாடுகளையோ கொண்டிருக்கும். கதை கூறுபவர்கள் ஒரே கதையை வேறுபட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவார்கள். சில கதைகள் சாட்சிக் கதைகளாக இயங்குவன. ஒரு நம்பிக்கையின் உண்மைத்தன்மைக்கு ஆதரவளிப்பது இவற்றின் செயற்பாடு அல்லது நோக்கமாகும். இவை பெரும்பாலும் சூனியக்காரிகள், பேய்கள், தேவதைகள் ஆகியோருடன் ஏற்படும் தொடர்பை விபரிப்பன. சாட்சிக் கதைகளை ஒத்தவை நீதிக் கதைகள். அமானுஷ்ய உயிர்களுடன் தொடர்பேற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று கதை கேட்போருக்கு போதிப்பது இவற்றின் செயற்பாடு. அத்துடன் ஒழுக்க கட்டுப்பட்டை மீறியவர்களுக்கு என்ன நடக்கும் என்பதையும் இக்கதைகள் கூறி எச்சரிப்பன. சில கதைகள் விருப்பத்தை நிறைவேற்றுதல் என்ற தொழிற்பாட்டைச் செய்வதை நோக்கமாகக் கொண்டவை. அவை அதிஷ்டத்தைக் கொண்டு வரும் நல்ல ஆவிகள் பற்றியும் புதைந்துள்ள பொக்கிஷத்தைக் கண்டு பிடிப்பதைப் பற்றியும் கூறுவதை நோக்கமாகக் கொண்டவை. வேலை செய்யாது பணத்தைப் பெறலாம், மிக அதிஷ்டமுள்ளவர்களுக்கு இந்த பொக்கிஷங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இவை கேட்போருக்குக் கொடுக்கின்றன.

பல கதைகள் ஒரு இடத்தின் பெயர் அல்லது ஒரு வழக்கம் அல்லது ஒரு தடைக்கட்டுப்பாடு எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதைக் கூறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. சில கதைகள் நாளாந்த வாழ்வில் ஏற்படும் துர்ப்பாக்கியம், ஏற்றுக் கொள்ளமுடியாத அனுபவங்கள், ஆகியவற்றை விளக்குவன. மனிதரிலும் மந்தையிலும் ஏற்படும் நோய்கள், முடமான அல்லது மனோவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் பிறப்பு, காட்டில் ஒருவர் வழி தப்புதல் ஆகியன தேவதைகள், பேய்கள் அல்லது சூனியக்காரிகளின் வேலைகளாக இவற்றில் கூறப்படும். சில கதைகளின் முக்கிய தொழிற்பாடு கேட்போரை மகிழ்வூட்டுதல். இவ்வாறான கதைகளில் சொல்லப்படும் விஷயங்கள் அதிகமில்லாவிடினும் அவை கேட்போரை மகிழ்ச்சிப்படுத்தி அவர்களது இதயங்களை லேசாக்குவன. அவை திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் முடிவுற்றவுடன் அனைவரும் கூடியிருக்கும் போது கூறப்படுபவை.

இவ்வாறான வாய் வழி மரபுக் கதைகளைப் போல ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவரவர் குடும்பக் கதைகள் உள்ளன. வீடு என்பது கதைகள் கூறப்படுவதற்கான இடமாகும். இது வீடு என்பதற்கு அகராதியில் கூறப்படாத அடிப்படை வரைவிலக்கணமாகும். ஒரு குடும்பம் தன் கதைகளால் வாழுகிறது. கதைகள் இல்லையெனில் அதற்குக் கடந்த காலமும் எதிர்காலமும் மட்டுமின்றி கற்பனையும் அகத் தோற்றமும் குறிக்கோள்களும் இல்லை. குடும்பக் கதைகள் பல வகையாகும். சில கதைகள் குடும்பத்தின் வரலாற்றை உருவாக்குவன. அல்லது சீர்படுத்திப் பழைய நிலைக்குக் கொண்டு வருவன. சில எதிர்காலத்தில் குடும்பத்தை எப்படிக் கட்டியெழுப்புவது என்பது பற்றிய கதைகள். அடிக்கடி மெருகேற்றப்பட்ட நகைச்சுவை நிறைந்த அல்லது பரிதாபகரமான அல்லது இழிவான சம்பவங்களைக் கொண்ட கதைகளும் உண்டு. கொள்கை பிடிப்புக் கொண்ட அல்லது அறிவுறுத்திச் சொல்கிற கதைகளும் உண்டு. ஆரம்பத்தில் வேறு குடும்பங்களுக்குச் சொந்தமாக இருந்து பின்னர் இன்னொரு குடும்பத்திற்கு மாற்றப்பட்ட கதைகளும் உள்ளன.

மழை நாட்களில் பிள்ளைகளைக் களிப்பூட்டுவதற்காக உருவாக்கப்படும் கதைகள் உள்ளன. இக்கதைகளைத் திரும்பத் திரும்ப வாரக்கணக்கில் சிலவேளைகளில் மாதக்கணக்கில் கூறுவதனால் கதையை உருவாக்கியவர்களுக்கு அலுப்பேற்பட்ட போதும் அவற்றைக் கேட்கும் பிள்ளைகளுக்கு சலிப்பேற்படுவது இல்லை. பிள்ளைகள் தங்கள் பாட்டில் உருவாக்கிக் கூறும் கதைகளும் உள்ளன. கடந்த காலத்தை உருவாக்குவதற்கு, நிகழ் காலத்தை விளக்குவதற்கு, இப்போது இங்கே என்ற உண்மையைக் கற்பனையால் தாண்டிச் செல்வதற்கு என்று கதைகள் பல காரணங்களுக்காகக் கூறப்படுகின்றன.

குடும்பத்தின் மூத்த அங்கத்தவரின் நினைவால் குடும்பங்களில் அதிக சந்தோஷம் கொடுக்கப்பட்டும் ஏற்கப்பட்டும் வருகிறது. அம்மா நான் எப்போது பிறந்தேன் என்பது பற்றிக் கூறுங்கள் என்று சிறுமியும், தாத்தா பழைய நாட்களில் எப்படியிருந்தது என்று பேரனும் கேட்கிறார்கள். குடும்பக் கதைகள் எங்கள் பிறப்புடன் ஆரம்பிப்பதல்ல. நாம் ஒரு குடும்பப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இருக்கிறோம் என்பதை அக்கதைகள் உறுதிப்படுத்துகின்றன. இத்தொடர்ச்சியைப் பேணுவதற்காகக் குடும்பத்தில் தொடர்ந்து கூறப்படும் கதைகள் போல நாம் ஒரு பண்பாட்டினதும் ஒரு வரலாற்றினதும் தொடர்ச்சியாக இருப்பது என்பது எம் அனைவருக்கும் முக்கியமானது.

கதைகளில் ஒரு வகை நீதிக் கதைகள். இனிப்பு பூசப்பட்ட மாத்திரைகள் போல பிள்ளைகளுக்கு சொல்லவேண்டிய அறிவுரைகள் இந்த வகைக் கதைகளில் பொதிந்திருக்கின்றன. நீ பொய் சொல்லக் கூடாது என்பதை விட பொய் கூறாமையால் ஒரு சிறுமியோ சிறுவனோ அடைந்த சிறப்புக்களைக் கதை வடிவில் கூறும் போது அது அவர்களது நெஞ்சில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. இதனால் ஈசாப்பு நீதிக் கதைகள் பஞ்சதந்திரக் கதைகள் போன்ற கதைகள் காலத்தைக் கடந்து நிலைத்து வாழ்கின்றன.

சமஸ்கிருதத்தில் பஞ்சதந்திரக் கதைகள் முக்கியமானவை. பேசும் மிருகங்கள் பறவைகளால் விஷ்ணுசர்மன் என்பவர் பிள்ளைகளுக்காக ஒரு கதைக் களஞ்சியத்தை உருவாக்கியுள்ளார். இது ஏறக்குறைய கிபி 1ம் 2ம் நூற்றாண்டாண்டளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த பஞ்சதந்திரக் கதைகளின் செல்வாக்கு மிக அதிகம். மூன்றாம் நூற்றாண்டிலேயே இவற்றின் செல்வாக்கு அரபு மொழிக்குச் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இன்றைய நிலையில் இக்கதைகள் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இக் கதைகளில் 200 வேறுபட்ட versions உள்ளதாகவும் கூறப்படுகிறது. Grimm ‘s fairy tales க்கும் ஈசாப்பு நிதிக் கதைகளுக்கும் பஞ்சதந்திரக் கதைகளே அடிப்படையில் செல்வாக்கு ஏற்படுத்தின என்று நம்பப்படுகிறது.

பஞ்சதந்திரத்துக்கு மூலமாக பலரும் அறியாத ஒரு கதை நூல் உள்ளதாக ஒரு கருத்து உள்ளது. இந்த மூல நூலின் ஆசிரியராக வஷுபாகபட்டர் (Vashubagabhatta) என்பவர் குறிப்பிடப்படுகிறார். இதற்கு தெய்விக மூலம் கற்பிக்கும் நோக்கத்துடன் சிவன் பார்வதிக்கு கூறிய கதைகளை ஒட்டுக் கேட்ட பஷ்பதத்தன் என்பவர் பின் பூமியில் பிறந்து அப்போது ஆண்ட அரசனின் சபையில் அறிஞனாக நியமிக்கப்பட்டார் என்றும் அப்போது அவர் இக் கதைகளை பிருகத்கதம் (Ocean of stories) என்ற தலைப்பில் தொகுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் வஷுபாகபட்டர் அவற்றிலிருந்து சில கதைகளை எடுத்து பஞ்சதந்திரம் என்ற பெயரில் தொகுத்ததாகக் கதை செல்கிறது. இந்த மூல பஞ்சதந்திரம் பற்றி ஜாவா, லாவோஸ் சியாமிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பஞ்சதந்திரங்களிலும் சில இந்திய பஞ்சதந்திரங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விஷ்ணுசர்மன் பஞ்சதந்திரக் கதைகள் எழுதியதே ஒரு கதையாகச் சொல்லப்படுகிறது. அமரசக்தி என்ற பெயர் கொண்ட அரசன் தனது மூன்று மைந்தர்களும் அதிகம் அறிவு பெறாதவர்களாக இருப்பதை அறிந்து கவலை கொண்டு அரச சபையில் தனது புதல்வர்களுக்கு அறிவூட்டும் வழியைக் கூறும் படி கேட்டான். சபையில் இருந்த சுமதி என்ற அறிஞர் இதனைச் செய்ய வல்லவர் விஷ்ணுசர்மனே என்று கூறினார். எனவே அரசன் அவரை அழைத்து 6 மாதங்களுள் தனது குமாரரர்களுக்கு அறிவூட்டும் படி கூறிவே அவரும் ஒப்புக் கொண்டு அவர்களை அழைத்துச் சென்றார். தனது பிள்ளைகள் விஷ்ணுசர்மனின் உதவியுடன் அறிவு பெறுவதை அரசன் நம்பமுடியாத நிலையில் நிதர்சனமாகக் கண்டான். ஒரு கதைக்குள் ஒரு கதையாக நீதிகளையும் அறிவுரைகளையும் இணைத்துப் பின்னி பஞ்சதந்திரத்தை விஷ்ணுசர்மன் உருவாக்கினார். ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் தக கதைகள் அமைக்கப்பட்டன. இளவரசர்கள் கதைகளினூடே வாழ்க்கையையும் நீதியையும் உணர்ந்து கொண்டனர்.

பஞ்சதந்திரம் என்பதன் கருத்து ஐந்து உபாயங்கள் என்பதாகும். ஐந்து தலைப்புகளின் கீழ் கதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிர்வாகம், தனிப்பட்ட வாழ்வு, குள்ளத்தனம் என்று வாழ்வுக்கு அவசியமான விஷயங்கள் இக் கதைகளில் கூறப்பட்டுள்ளன. மித்திரபேதம் என்ற முதலாவது அத்தியாயத்தில் நண்பர்கள் எவ்வாறு குள்ளத்தனம் உள்ள மூன்றாவது நபரால் பிரிக்கப்படுகின்றனர் என்பதைக் கூறுகிறது. மித்திர பேதம் என்ற பகுதி ஒரு சிங்கம் எருது இரு நரிகள் பற்றிய கதையுடன் ஆரம்பமாகிறது. அவற்றிற்கு பெயர்கள் உண்டு. தனியாக வாழ்ந்த எருது ஒன்று காட்டு மிருகங்களால் வேட்டையாடப்பட்டுவிடுமோ என்ற தொடர்ச்சியான அச்சத்துடன் வாழ்ந்து வந்தது. சிங்கம் ஒன்று அதனைக் கண்ட போது அதன் பெரிய உருவத்தால் கவரப்பட்டு இரண்டும் சிறிது சிறிதாக நண்பர்களாகிவிட்டன. எருது காட்டு சட்டங்களுக்கு மாறாக உள்ள நகர வாழ்க்கைச் சட்டங்கள் பற்றி சிங்கத்துக்கு எடுத்துக் கூறியது. அத்துடன் இன்னும் பல விஷயங்கள் பற்றி அதற்கு கூறி அறிவூட்டியது. அறிவூட்டப்பட்ட சிங்கம் வேட்டையாடுவது தவறு என்றெண்ணி அதனை முற்றாகக் கைவிட்டுவிட்டது. இதனால் சிங்கம் வேட்டையாடும் மிருகங்களின் மிகுதியை உண்டு வாழ்ந்து வந்த இரு நரிகளுக்கு உணவு கிடைக்கவில்லை. எனவே சிங்கத்துக்கும் எருதுக்கும் இடையில் உள்ள நட்பை பிரிக்கத் திட்டம் தீட்டின. எருதுக்கு சிங்கம் மறு நாள் அதனைக் கொல்ல உத்தேசித்திருப்பதாகக் கூறின. சிங்கத்துக்கு அது வேட்டையாடுவதை மறந்து விட்டது என்றும் அதனால் எருது அதனைக் கொல்ல திட்டம் தீட்டுகின்றது என்றும் கூறின. நரிகளது திட்டம் பலித்தது. மறுநாள் சிங்கம் எருதைக் கொன்றது. மித்திரபேதம் என்ற தலைப்பில் வந்த இவ்வாறான கதைகள் எவ்வாறு வேறு வேறு யுத்திகளைக் கையாண்டு எதிரியின் பலத்தை அழிப்பது என்பதை இளவரசர்களுக்குப் போதித்தது. எதிரி பலமிக்கவனாக இருந்தால் அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்பதை சிங்கமும் முயலும் கதை அறிவுறுத்துகிறது. அக்கதை எம் அனைவருக்கும் தெரியும். கிணற்றுக்குள் சிங்கத்தின் நிழலைக்காட்டி இன்னொரு சிங்கம் அங்குள்ளதாக நம்ப வைத்து அதற்குள் குதிக்க வைத்த முயலின் கதையை நாம் சிறிய வயதில் படித்திருக்கிறோம்.

மித்திர சம்பிரப்தி என்ற பகுதி நண்பர்கள் ஒருவருக்கொருவர் உதவுவதைக் குறிக்கும் கதைகளைக் கொண்டுள்ளது. வலையில் அகப்பட்ட புறாக்கள் ஒன்றாகப் பறந்து சென்று ஓரிடத்தில் இறங்கியதும் அவற்றின் நண்பனான எலி வலையைத் தன் கூரிய பற்களால் அறுத்து புறாக்களை விடுவித்தது. ஒரு அண்டங்காகமும், எலியும் மானும் ஆமையும் மிகுந்த நட்பு கொண்டிருந்தன. அவை எது வந்தாலும் ஒன்றாக இருப்பதாக சபதம் எடுத்திருந்தன. ஒருநாள் மான் வேடன் விரித்த வலையில் சிக்கிக் கொண்டது. காகத்தின் முதுகில் ஏறி அந்த இடத்திற்குப் பறந்து சென்ற எலி வலையைக் கடித்து மானை விடுவித்து மூன்றும் அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்தன. வழியில் தமது நண்பனான ஆமை வருவதைக் கண்டு நீ இப்படி மெதுவாக வருகிறாயே இப்போது வேடன் வந்தால் என்ன செய்வது என்று கூறிக் கொண்டிருக்கும் போதே வேடன் உண்மையில் அங்கு வந்து விட்டான். அறிவு நிறைந்த காகம் உடனே தனது திட்டத்தைக் கூறியது. அதன்படி வேடனை அறியாததது போல மான் தனது கால் பாதிக்கப்பட்டது போல பாசாங்கு செய்து படுத்துக் கொண்டது. ஆமை அங்கங்களை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது. எலி ஆமை அருகில் ஓடி வேடனின் கவனத்தை ஆமையின் பால் திருப்பவே அவன் முதலில் ஆமையைப் பிடித்துக் கட்டி வைத்து விட்டு மானின் அருகில் சென்றான். அது அவன் எதிர்பாராத வகையில் எழுந்து ஓடத் தெடங்கியதும் அவனும் பின்னே ஓடத் தொடங்கினான். அதற்கிடையில் எலி ஆமையின் கட்டுக்களை பற்களால் வெட்டவே அனைத்தும் தப்பி ஓடின. இக்கதைகள் துணிச்சலையும் தந்திரத்தையும் பற்றிப் போதிக்கின்றன. அதிஷ்டம் வந்தாலும் ஒரு கோழையால் அதனைப் பயன்படுத்த முடியாமல் போகும் என்கிறார் விஷ்ணுசர்மன்.

ககலோக்கியம் என்ற பகுதி உலகப் போக்கு பற்றி விவரிக்கிறது. விஷ்ணுசர்மன் எல்லோரையும் நம்ப வேண்டாம் அதுவும் முன்னர் விரோதிகளாக இருந்து பின் நண்பரானவரை நம்பவே வேண்டாம் என்கிறார். இக்கதைகள் எமக்கு நம்பிக்கை தரும் வண்ணம் தீமை நன்மையிடம் அழியும் என்ற முறையில் அமையவில்லை. சிக்கலான வேறுபாடுகள் நிறைந்த உலகில் ஒருவர் தன் வாழ்வின் சகல அம்சங்களையும் எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதில் கூறப்பட்ட நீதிகள் விஷ்ணுசர்மனிடம் படிக்கப்போன இளவரசர்களுக்கு மட்டுமல்ல மனிதர்கள் அனைவருக்கும் உதவுவன. இக் கதைகளைப் படிப்பவர்களது நாளாந்த வாழ்வில் வரக்கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அவர்களைத் தயாராக்கி துணிச்சலுடனும் அவதானத்துடனும் அவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றன.

எம் அனைவருக்கும் தெரிந்த குரங்கும் முதலையும் கதை மூடத்தனத்தால் கைக்கெட்டும் விஷயம் வாய்க்கெட்டாமல் போவது பற்றிக் கூறுகிறது. பஞ்சதந்திரத்தின் இறுதிப் பகுதியில் ஒரு புது நெருக்கடி வரும்போது எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றிய நீதி கூறப்படுகிறது. செய்வதன் முன் எப்போதும் சாதகமான பாதகமான விஷயங்களை ஆராய்தல் வேண்டும். நான்கு மிக அறிவுள்ள நண்பர்கள் ஒரு தடவை தாம் பெற்ற அறிவைப் பரிசோதிக்க விரும்பினார்கள். இறந்த சிங்கம் ஒன்றை அவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்க விரும்பிய போது அவர்களுள் ஒருவர் அது ஆபத்தானது என்று கூறி மறித்தார். ஆனால் மற்ற மூவரும் அதைக் கேட்காது சிங்கத்துக்கு உயிர் கொடுக்கவே உயிர் பெற்ற சிங்கம் அம்மூவரையும் கொன்று தின்றது. புத்தக அறிவு மட்டும் போதாது ஒரு காரியத்தைச் செய்யும் போது ஏற்படும் நிலமையை நன்கு ஆராய்ந்தே அதைச் செய்ய வேண்டும் என்ற நீதியை அது கூறுகிறது. விஷ்ணுசர்மனின் கதைகள் பொதுவாக அனைவருக்கும் தேவையான நீதிகளைக் கூறுகிறது. மிருகங்கள் மனிதருக்கு உரிய உணர்ச்சிகளுடனேயே இக் கதைகளில் இயங்குகின்றன. கதைகள் முழுவதும் கவனிப்புகளும் பழமொழிகளும் நீதிகளும் விரவிக்கிடக்கின்றன. உலக ஞானம், புத்திக்கூர்மையின் அவசியம், சுய பாதுகாப்பு, நண்பர்களின் முக்கியத்துவம் போன்ற அரிய போதனைகள் நிறைந்த கதைப் பொக்கிஷமாக பஞ்சதந்திரக் கதைகள் திகழ்கின்றன. இக்கதைகள் பிள்ளைகளையும் பெரியவர்களையும் ஒருங்கு சேர முடிவின்றி மகிழ்விப்பதுடன் வாழ்வியல் முறைகளையும் போதிக்கின்றன.

—-

vamadevk@bigpond.net.au

Series Navigation

சந்திரலேகா வாமதேவா

சந்திரலேகா வாமதேவா