‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.

This entry is part [part not set] of 51 in the series 20041007_Issue

சுந்தர ராமசாமி.


‘திண்ணை ‘ இதழில் வெளிவந்த வெங்கட் சாமிநாதனின், ‘தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள் ‘ என்ற தலைப்பிட்ட கட்டுரையைப் படித்தேன். கட்டுரையின் மையம் வெ.சாவுக்குப் பரிசு தந்ததை விமர்சித்து நுஃமான் எழுதிய குறிப்பை காலச்சுவடு வெளியிட்டது சார்ந்ததுதான். முன் பின்னாகவும், சேர்த்தும் சொல்லப்படுபவை எல்லாமே நுஃமானின் குறிப்பு வெளியிடப்பட்டதில் கொப்புளிக்கும் சீற்றம் கொண்டு வரும் புகார்கள், மனத்தாங்கல்கள், கழிவிரக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்புகளே.

காலச்சுவடில் எப்படி நுஃமானின் கடிதத்தை வெளியிடலாம் என்ற வெ.சாவின் கேள்வி அடிப்படையில் பத்திரிகைச் சுதந்திரம், எழுத்துச் சுதந்தரம் சார்ந்த கேள்விகள்தான். இந்தக் கேள்விகளில் எனக்கு அக்கறை உண்டு. இவை சார்ந்த என் கவனங்கள் என் எழுத்துக்களில் பரவலாகப் பதிவாகியிருக்கின்றன.

சாகித்ய அகாதமி அளித்துள்ள பரிசுகள் வெ.சாவின் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது. ஞான பீடம், சாகித்திய அகாதமி சார்ந்த முடிவுகளை விமர்சித்து நான் எழுதியிருக்கிறேன். நோபல் பரிசுத் தேர்வுகள் பற்றி விமர்சனங்கள் இருக்கின்றன. நோபல் பரிசு முடிவுகளுக்குப் பின்னிற்கும் ஊழல்களை அம்பலப்படுத்தும் ஆராய்ச்சி வலுக்கொண்ட அமெரிக்க நாவல் உலகளவில் லட்சக்கணக்கானவர்களால் படிக்கப்பட்டிருக்கிறது. விமர்சனத்திற்கு இலக்காகாத எந்தப் பரிசும் இன்றைய உலகில் இல்லை.

ஸ்டாலின் பரிசு பற்றி முந்தைய சோவியத் சமூகத்தில் விமர்சித்திருக்க முடியுமா ? கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கிய தத்துவவாதியான காலஞ்சென்ற கே. தாமோதரன் – ஒரு அறிவுவாதி என்ற அளவில் ஈ.எம். எஸ்ஸை விடவும் மதிக்கத் தகுந்தவர் – சோவியத் நாட்டில் தங்கியிருந்தபோது சோவியத் அரசை விமர்சித்து எழுதிய கடிதத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார ஏடானான ‘பிராவ்தா ‘ வெளியிட மறத்துவிட்டதாக அவரே எழுதியிருக்கிறார். கருத்துச் சுதந்திரம் தமிழ்நாட்டில் பழைய சோவியத் அரசை விட சற்று மேம்பட்ட நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.

நான் காலச்சுவடின் ஆசிரியராக இன்று இருந்திருந்தாலும் நுஃமானின் குறிப்பை வெளியிட்டிருப்பேன். இதற்குப் பெரிய தத்துவ அறிவு ஒன்றும் தேவையில்லை. வெ.சாவுக்கும் எனக்கும் இருக்கும் சுதந்திரம் நுஃமானுக்கும் உண்டு என்ற நம்பிக்கைதான் இதன் அடிப்படை. அக்குறிப்பை வெளியிடும் போது, ‘இவை நுஃமானின் கருத்துக்கள் ‘ என்ற அடிக்குறிப்புத் தேவையில்லை. ஆசிரியர் வாய் திறக்காத நேரத்திலும் அவை நுஃமானின் கருத்துக்கள்தான். அவர்தான் அவற்றிற்குப் பொறுப்பு.

இப்போது ‘திண்ணை ‘ வெ.சாவின் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. ஆசிரியர் ஸ்பெஷல் அடிக்குறிப்பு எதுவும் தரவில்லை. ஆகவே தனது அனைத்துக் கருத்துக்களுடனும் ‘திண்ணை ‘ ஆசிரியர் உடன்பாடு கொள்வதாகக் கற்பனை செய்வது கொள்வது சாமிநாதனின் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல. இப்போது சாமிநாதனுக்கு நான் பதில் எழுதிக்கொண்டிருக்கிறேன். இதையும் ‘திண்ணை ‘ வெளியிடுமென நம்புகிறேன். ஸ்பெஷல் அடிக்குறிப்பு எதுவும் இல்லாமல்தான். ‘ஐயோ, என்னையும் வெளியிட்டு அதை ஏற்காத சு.ராவையும் வெளியிடும் முனிசிப்பாலிட்டிக் குப்பைத் தொட்டியில் போயா என் அரிய ஆராய்ச்சிக் கட்டுரை விழுந்துவிடடது ‘ என்று சாமிநாதன் வருந்த வேண்டாம். வெவ்வேறு பார்வைகளுக்கு இடம் தருவதுதான் இதழியல் ஒழுக்கம் என்று சிலர் நம்புகிறார்கள். அதன் சாதக பாதங்களுக்கு அவர்கள் ஆளாகுகிறார்கள்.

வெ.சா முன் வைத்திருக்கும் கருத்துக்கள் அவர் இதற்கு முன் நுஃமான் பற்றி வெளியிட்டிருக்கும் கருத்துக்களின் தொடர்ச்சிதான். நுஃமான் வெளியிட்டிருக்கும் விமர்சனமும் அவர் வெ.சா பற்றி முன்னால் கூறியிருப்பவற்றின் நீட்சிதான். இவர்களது கூற்றுக்களை வாசிக்கும் வாசகன் வெ.சா, நுஃமானை கண்ணியமற்ற சொற்களால் தாக்குவதையும், நுஃமான் தனது கருத்துக்களை விவாதப் பண்புகளை ஏற்று வெளிப்படுத்தியிருப்பதையும் உணர முடியும். அத்துடன் நுஃமான் முன் வைக்கும் விமர்சனம் வெ.சாவின் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் தம் கருத்துக்களை நுஃமான் விரித்துக்கூற நேர்ந்தால் வெ.சாவின் எழுத்துக்களை முன் வைத்துப் பரிசீலனை செய்ய வாசகன் ஒரு சந்தர்ப்பத்தைப் பெறுவான். இவ்வாறு வாசகன் ஆராய்ந்து பார்க்க வசதியளிக்கும் ஒரு பொதுத் தளத்தை முன் வைத்துப் பேசுவதுதான் விமர்சனம். ‘நான் சொல்கிறேன், ஆகவே நீ நம்பு ‘ என்று முன் நிபந்தனை விதிப்பவை எல்லாம் விமர்சனங்கள் அல்ல.

நான் வெ.சாவுக்கு எழுதும் இப்பதிலில் மிக முக்கியமான பகுதியென நான் கருதுவது மேலே எழுதியுள்ள என் கருத்துக்களைத்தான். இதற்கு மேல் என்னை விமர்சிக்கும்

சில கீற்றுகளையும் அவர் தன் கட்டுரையில் உதிர்த்துக்கொண்டு போவதால் அவற்றில் சிலவற்றையேனும் நான் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.

இன்று வெ.சாவுக்கு என்னைப் பற்றிய மதிப்பீடு – குறிப்பிட்ட சில விஷயங்கள் சார்ந்து – என்ன என்பது அவரது கட்டுரை தெரிவிக்கிறது. அத்துடன் அவரது இன்றைய சார்பு நிலைகளும் கட்டுரையில் தெளிவாகின்றன. உடன்பாடோ மறுப்போ, எதுவாயினும் சரி வெளிப்படையாக இருப்பதுதானே நல்லது ?

வெ.சா வைப் போலவே, தார்மீகமிழந்த சாமர்த்தியங்கள் இலக்கியச் சூழலைப் பாழ்படுத்தி வருகின்றன என்பதுதான் என் மதிப்பீடும். ஆனால் அந்த சாமார்த்தியசாலிகள் யார் யார் என்பதில் எனக்கும் வெ.சாவுக்கும் கருத்தொற்றுமை இல்லை. அத்துடன் தன் கட்டுரையில் தன் கருத்துக்களை நிறுவ வெ.சாவிடம் நிரூபணம் சார்ந்த பலம் எதுவும் இல்லை. அவர் நம்ப விரும்பும் பெருந்தகைகளின் பேச்சுக்களை தடயங்களாக சுருளவிழ்க்கிறார். கைவசம் ஆதாரங்கள் எதுவுமில்லாத நிலையில் வதந்திகளை மட்டுமே நம்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர் கட்டுரை காட்டுகிறது.

கட்டுரையில் கண்ணனைப் பற்றி வெ.சா கூறிக்கொண்டு வரும்போது, ‘எனக்கும், கண்ணன் அப்பாவை ஒரு சிகரத்தில் அமர்த்திவிட எடுத்துக்கொள்ளும் தீவிர முயற்சிகளும் பாராட்டத் தகுந்தவையாகவே தோன்றின ‘ என்கிறார். என் மீது வெ.சா கொண்டிருக்கும் மதிப்பின் அளவுக்கு, என் மீது எனக்கு மதிப்பில்லை. என்னைச் சிகரத்தில் உட்காரவைக்க யார் முயற்சி எடுத்துக்கொண்டாலும் அது எனக்கு உடன்பாடானதல்ல. என் எழுத்துக்களை முன்வைத்து எவர் என்னைப் பாராட்டினாலும் சரி, அவர்கள் மீது எனக்கும் அடிப்படையில் மதிப்பிருந்தால்தான், அவர்களது பாராட்டை நான் ஏற்றுக்கொள்வேன். இந்த நிலைபாடுகளில் நான் உறுதியாகவே இருக்கிறேன்.

மேலே நான் தந்திருக்கும் வெ.சாவின் வாக்கியத்திலும் சரி, கட்டுரையின் பொதுத்தொனியிலும் சரி, பிறரால் உருவாக்கப்படும் உச்சாணிக் கிளையைப் பற்றிக்கொள்ள நானும் முண்டுவதான தொனி இருப்பதுபோல் படுகிறது. ஆகவே இரண்டு கேள்விகளை வெ.சாவிடம் கேட்கிறேன்:

என்னைச் சிகரத்தில் அமர்த்த என்னென்ன தீவிர முயற்சிகள் இன்றுவரையிலும் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன ? அம்முயற்சிகள் சாத்தியமாக்கிய பலன்களில் எவற்றையெல்லாம் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன் ?

இக்கேள்விகளுக்குப் பதிலாகக் ‘காற்றினிலே வரும் கீத ‘ங்களைத் தவிர வேறு எதுவும் சொல்ல அவருக்கில்லையென்றால் அவற்றைத் தெரிந்துகொள்வதில் எனக்கு ஆர்வம் இல்லை.

தமிழ்ச்சூழலில் யார் மதிப்பீடுகள் சார்ந்து செயல்பட முற்பட்டாலும் சரி, அவர்கள்அவற்றை ஒட்டி ஒழுகும்போதும், அவை நற்பலன்களைத் தரும்போதும், நேர்ந்து விடும் சறுக்கல்களை எதிர்கொள்ளும்போதும், வேதனை கொள்ள வேண்டிய நிலையே இருக்கிறார்கள். ஈட்டும் வெற்றிக்குத் தர நேரும் மித மிஞ்சிய விலை வெற்றியையும் மனநிறைவு கொள்ள முடியாததாக மாற்றி விடுகிறது.

இது போன்ற செயல்பாடுகளின் மீது பிறருடைய பேச்சுக்கள் சார்ந்து கற்பனைகளைப் புனைவது வம்புகளைப் பரப்ப அலையும் அற்பங்களைச் சிறிது திருப்திப்படுத்தலாம். அதற்கு மேற்பட்ட சமூகப் பயன் எதுவும் இவற்றில் இல்லை. கட்டுரைகள் வனைய ‘சொல்லப்படுகிறது ‘, ‘நம்பப்டுகிறது ‘ போன்ற மரக் கால்களைக் கழற்றிவிட்டு சொந்தக் காலில் சில சிற்றடிகளையேனும் எடுத்து வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.உலகெங்கும் எழுதப்படும் மேம்பட்ட கட்டுரைகள் சில அடிப்படை ஒழுக்கங்களை உருவாக்கி வைத்திருக்கின்றன. இவையெல்லாம் நிகழ்ந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

கட்டுரையின் மற்றொரு இடத்தில், ‘ராமசாமியின் விரோதியல்ல ‘ என்று வெ.சாவிடமிருந்து நற்சான்று பெற்ற பெரியவர் ஒருவர், என் சரிவை மனதிற்கொண்டு

‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள் ? ‘ என்று என்னைக் கேட்டதற்கு, ‘எல்லாமே பாலிட்டிக்ஸாக இருக்கும் போது நாமும் அப்படிச் செய்ய வேண்டித்தான் இருக்கிறது ‘ ‘ என்று நான் சொன்னதாகப் பதிவு செய்கிறார் வெ.சா. அத்துடன், ‘எனக்குத் தெரிந்த முந்தைய ராமசாமி இப்படிப் பதில் சொல்லியிருக்க மாட்டார் ‘ என்று அவரது நேற்றைய மதிப்பீட்டையும் நினைவு படுத்துகிறார்.

வெ.சாவின் மேற்கோள் சார்ந்த மேற்படிப் பேச்சு எங்கு, எப்போது நிகழ்ந்தது ? நான் எந்தப் பெருந்தகையுடன் அப்போது பேசிக்கொண்டிருந்தேன் ? எங்களுக்குள் என்ன விவாதம் நிகழ்ந்தது ? நாங்கள் கேலிப் பேச்சில் ஈடுபட்டிருந்தோமா அல்லது

தீவிர கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டிருந்தோமா ? இவையெல்லாம் முக்கியமான கேள்விகள். நண்பர் பெருந்தகை வெ.சாவிடம் சொல்லியிருக்கும் வாக்கியத்தைச் சொன்ன நினைவு எனக்கில்லை. ஆனால் அது போன்றதொரு வாக்கியத்தை நான் சொல்லக்கூடியவன்தான். என்னைச் சந்தித்த பெருந்தகை இலக்கிய அரசியலில் தன் கழுத்தளவு மூழ்கியிருக்கும் நேரத்திலேயே எளிய உபதேசங்களை என்னை நோக்கி வீச முற்பட்டிருந்தால் நான் அவ்வாறு கூறியிருக்க சாத்தியமுண்டு. பேச்சில் பெருந்தகையை விமர்சிக்கும் என்னுடைய பாங்கு அது.

எதற்கு இந்தப் பெருந்தகையின் துணை ? எதற்கு காற்றினிலே வரும் கீதங்கள் ? நான் அரசியலில் திளைத்தால் வெ.சாவே அதை நேரடியாகப் பதிவு செய்யலாமே ?தடயங்களையும் ஆதாரங்களையும் தேடிச் செல்லும் முயற்சியையேனும் மேற்கொண்டு பார்க்கலாமே. ஒரு சில தடயங்களேனும் கிடைக்கக் கூடாது என்பதுண்டா ?

வெ.சாவைப் பற்றி எவ்வளவோ அபாண்டங்கள் தமிழ்ச் சூழலில் பரப்பப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பானவற்றை எல்லாம் அவருக்கு நண்பராக இருந்த, அவருடன் அடிப்படையில் கருத்தொற்றுமை கொண்டிருந்த, அவருடன் கூடி வாழ்ந்து உள் விபரங்கள் அறிந்த பெருந்தகை ஒருவர்தானே முன் வைத்தார் ? வெ.சாவுக்கும் அவருக்குமிருந்த உறவை மட்டும் கணக்கிட்டு அவர் சொன்னவற்றை எல்லாம் உண்மைகள் என்று எடுத்துக்கொண்டு விட முடியுமா ? அப்போது இந்த அவதூறுகளை வெ.சா எப்படி எதிர்கொண்டார் என்பது அவரது நினைவில் இன்று இருக்கிறதா ? ஆதாரமற்ற வதந்திகளை உண்மைகள் எனக் கொள்ள முடியாது எனவும், உண்மைகளை நிறுவத் தடயங்கள் வேண்டும் என்றும் அவர் சொல்லி வந்தார். அவதூறாளர்களுக்கு அன்று வெ.சா சொன்ன ஒழுக்கங்களை இன்று நான் அவருக்கு நினைவு படுத்த வேண்டி இருக்கிறது. காலத்தின் விளையாட்டை என்ன என்று சொல்வது ?

தமிழ்ச்சூழலில் ‘விரோதி ‘ என்றும் ‘விரோதியல்லாதவர் ‘ என்றும் ‘நண்பர் ‘ என்றும் எப்படி வெ.சாவால் எளிமையாகப் பாகு படுத்த முடிகிறது ? ஒவ்வொரு எழுத்தாளனுக்குமே நேற்றைய அவனது ஆருயிர் நண்பன்தானே இன்று அவனுடைய பிரதம விரோதி ? இந்த உண்மை வெ.சா அறியாத ஒன்றாக இருக்க முடியுமா ?

நான் முன்னால் கடைப்பிடித்து வந்த மதிப்பீடுகளைச் சமீப காலமாகக் காற்றில் பறக்க விட்டு வருகிறேன் என்றால் அதற்கு நான்தான் முழுபொறுப்பு. வேறு யாருமல்ல. சரிவை நோக்கி என்னைத் தூண்டிவிடும் சக்திகள் முன்னைவிட இப்போது தமிழ்ச்சூழிலில் சுறுசுறுப்பாக இருக்கின்றன. அந்த சக்திகளின் கீழான செயல்பாடுகளும், சாம்ராஜ்ய விரிவாக்கங்களும், வதந்திகள் சார்ந்தும், சமயோஜிதம் சார்ந்தும் பிடிக்காதவர்களை விழத்தட்ட நாள்தோறும் உருவாக்கப்படும் அளவுகோல்களும், அந்த அவசர அளவு கோல்களையே விமர்சனத் தத்துவங்களாக மாற்றும் சாமர்த்தியங்களும், என்னை நோக்கிக் கண் சிமிட்டுகின்றன. இவ்வாறு நான் சொல்வதை ஒரு கருணை மனுவாகக் கருத வேண்டியதில்லை. எனக்குத் தெரியும் விமர்சன ஜுவாலைகளை உண்மைகளிலிருந்து பிரிக்க முடியாது என்பது.

என் ‘சரிவு ‘களைப் பற்றி மட்டுமல்ல, தமிழ்ச் சூழலிலின் சரிவுகள் எல்லாவற்றைப் பற்றியுமே வெ.சா எழுத வேண்டும். ஆராய்ச்சிகள், ஆதாரங்கள், அவதானிப்புகள் சார்த்து காலத்தால் அசைக்க முடியாத கட்டுரைகளை அவர் கட்டி எழுப்ப வேண்டும். சரிந்து விழுந்து அள்ளியெடுப்பவர்கள் தமிழ்ச்சூழலையே கபளீகரம் செய்யும் பேராபத்து கோட்டைக்குள் நுழைந்து விட்டது. நேசப்படைகள் விலை போகின்றன. இந்த நேரத்தில் கச்சை கட்டி அவர் களத்தில் இறங்க வேண்டும். நல்ல தருணம். பக்கக் கட்டுப்பாடு விதிக்காத இண்டர் நெட் இதழுக்கு வந்து சேர்ந்து விட்டார் வெ.சா.

சாகித்திய அக்காதமிப் பரிசு பெற நான் ஆலாய்ப் பறக்கும் விமர்சனம் பற்றிச் சில தகவல்கள்: முன்னொரு காலத்தில், ‘இந்த சாகித்திய அகாதமி பரிசு எனக்குக் கொடுத்தால் அதைத் தூக்கி எறிவேன் என்றவர் இப்போது, அது தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு என்கிறார் இன்னொரு சு.ரா நண்பர் ‘ என்று குறிப்பிடுகிறார் வெ.சா. ‘இவ்வளவு தூரம் புழுத்து நாறிப்போன பரிசுக்கா ஏக்கம் ராமசாமிக்கு ? ‘ என்று என் மீது மிகுந்த பரிவோடு கேட்கிறார் அவர். நியாயமான கேள்விகள்தானே இவை ?

சாகித்திய அகாதமியை நான் எந்தஅளவுக்குக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன் என்பது வெ.சாவுக்கு நன்கு தெரியும். நான் அறிந்த மட்டில் தமிழில் எவரும் இந்த அளவுக்கு அந்த அமைப்பை விமர்சித்தது இல்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கூட, சி.சு. செல்லப்பாவின் மறைவுக்குப் பின் அவருக்கு அகாதமி பரிசு வழங்கப்பட்டதை விமர்சித்து ‘தினமணி ‘யில் எழுதியிருந்தேன். அதற்குப் பின்னரும் நான் தர நேர்ந்த நேர்காணல்கள் எல்லாவற்றிலுமே அகாதமியைத் தவறாது விமர்சித்தும் வந்திருக்கிறேன். என் விமர்சனக் கட்டுரைகளையும் நேர்காணல்களையும் என் புத்தகங்களில் சேர்த்து வருகிறேன். இருப்பினும் இளைய தலைமுறையினரின் வசதிக்காக, நான் கூறியிருக்கும் கருத்துக்களை இங்கு சுருக்கமாகத் தொகுக்கலாம் என்று நினைக்கிறேன்:

1.சாகித்திய அகாதமி ஒரு ஊழல் மிகுந்த நிறுவனம். அந்த நிறுவனத்தில் பரிசைத்

தீர்மானிக்கும் குழுவினர்களில் பெரும்பான்மையோருக்குச் சமகால இலக்கிய உணர்வில்லை.

2. நம் மொழியில் மிகச் சிறந்த படைப்புகள் இருந்தும் கூட அவற்றைத் தேர்வு செய்யாமல் சாரமற்ற படைப்புகளை அகாதமி தேர்வு செய்வதால் பிற மொழியினர் முன் தமிழுக்கு தலை குனிவு நேருகிறது.

3. சாகித்திய அகாதமின் பரிசு பெற்றவர்களில் பெரும்பான்மையோர் சிபாரிசு வழியாகவே பரிசு பெற்று வரும் அவலம்.

இக்கருத்துக்களுக்கு முரணாக நான் இன்றுவரையிலும் எதையும் எழுதவில்லை. இக்கருத்துக்களுக்கு முரண்பட்ட எந்தச் செயல்பாடிலும் இறங்கவும் இல்லை.

சாகித்திய அகாதமியின் தமிழ் ஆலோசனைக் குழுவில் ஒரு உறுப்பினராக நான் நியமிக்கப்பட்டேன். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. சாகித்திய அகாதமியின் உள்ளே சென்று அதை கட்டுப்படுத்தும் பணி எதையும் செய்ய இயலாது என்றும் வாசகர் எதிர்ப்புணர்வை வலுமைப் படுத்துவதின் வழியாகவே அதைக் கட்டுப்படுத்த முடியுமென்றும் என்று சொல்லியிருக்கிறேன். (அ.ராஜமார்த்தாண்டன் ‘தினமணிக் கதி ‘ருக்காக எடுத்த நேர்காணல்.) முக்கியமான தமிழ் எழுத்தாளர்களில் ஐம்பது பேர் இணைந்து, ‘எங்களுக்குச் சாகித்திய அகாதமி பரிசளிக்கப்பட்டால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் ‘ என்று கையெழுத்திட்டு கண்டன அறிக்கை வெளியிட வேண்டும் என்று எழுதியிருக்கிறேன். (சுபமங்களாவில் எழுதிய கட்டுரை.) தமிழில் சாகித்திய அகாதமியினரின் போக்கைக் கண்டிக்கும் முகமாகத் தில்லியில் சாகித்திய அகாதமி அலுவலகத்தின் முன் தமிழ் எழுத்தாளர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றும் எழுதியிருக்கிறேன். (மேற்படி சுபமங்களா கட்டுரை).

சாகித்திய அகாதெமியை விமர்சித்து நான் பல் வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகளும், அக்கட்டுரைக் கருத்துக்களுடன் முரண்படாத செயல்பாடுகளும் ஒரு பக்கம். சாகித்திய அகாதமிப் பரிசுக்காக நான் ஏங்கிக்கொண்டிருப்பதான ஊர்க்குருவி அளிக்கும் செய்தி மறுபக்கம். இவற்றை வெ.சாவின் தராசில் அவர் போட்டுப் பார்க்கும்போது கருத்துக்களையும் செயல்பாடுகளையும் வைத்த தட்டு மேலே சென்று விட, ஒருவர் வாய்மொழியாகக் கூறிய ஒற்றைச் செய்தியை வைத்த தட்டு தரையில் வந்து மோதுகிறது. இதற்கு நான் என்ன செய்ய முடியும் ? அவரது விருப்பங்கள் சார்ந்து அவரது நம்பிக்கைகள் இருக்கின்றன. விருப்பங்ளை விமர்சனங்களாக மாற்ற முடியுமா ?

வெ.சாவிடம் ஒன்றிரண்டு வேண்டுகோள்கள்: அவர் நீண்ட காலமாகத் தமிழில் செயல்பட்டு வரும் சகோதர எழுத்தாளர்களின் பெயர்களை இன்னும் சற்றுக் கவனமாக எழுத வேண்டும். அவர்களுக்குத் தங்கள் பெயர்களை தாங்கள் வைத்துக்கொண்டிருப்பதுபோல் பிறர் எழுத வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கலாம். நுஃமானை நுஹ்மான் என்றும் அப்துல் ரகுமானை அப்துல் ரஹ்மான் என்றும் எழுதுவது பார்வையை உறுத்துகிறது.

நான் குடியிருக்கும் சீரழிந்த ‘மட ‘த்திலிருந்து செய்திகளை ஒற்றை வழிக் கூரியர் சர்வீஸ் வழியாக வெ.சாவுக்கு அனுப்பி வைக்கும் நண்பர்கள் யார் யார் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். விரோதிகள் பெயர்களைச் சொல்ல வேண்டாம். விரோதிகள் அல்லாதவர்கள் பெயர்களைக் கூடத் தெரிவிக்க வேண்டாம். என் ‘சரி ‘வை எண்ணி உடல் மெலிந்து போகும் என் நண்பர்களைத் தேற்றவேனும் எனக்கொரு சந்தர்ப்பத்தை அவர் தர வேண்டாமா ?

நேற்று வரையிலும் என்னுடனிருந்த என் பக்தி கோடிகள் எல்லோருமே என்னை விட்டுப் போய்விட்டார்கள். ஐயோ, எப்பேர்ப்பட்ட நண்பர்கள்! என்ன அன்பு, என்ன சகோதரத்துவம்! மிச்சமிருக்கும் நண்பர்களோ என் சரிவை எண்ணி துக்கித்து நிற்கிறாரகள். வருந்துகிறார் வெ.சா. தேடிவரும் அல்லறை சில்லறை வாசகர்களையும் காவல் தெய்வம் முன் வாசலில் கைது செய்து விடுகிறது. வெம்பரப்பில் ஒற்றைப் பனைமரமாக நின்று விழிக்கும்படி ஆகிவிட்டதே என் வாழ்க்கை!

****

suraasantacruz@yahoo.com

Series Navigation

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி