சொன்ன கதைகளில் சொல்ல மறந்த கதைகள்: தேவர் மகனும் தலித் மகளும்

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

இரா மதுவந்தி


அரேபியன் பாப்லர் என்று ஒரு பறவை இருக்கிறது. இது மத்தியக்கிழக்கு தேசங்களான இஸ்ரேல், அரேபியா, சிரியா எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் பாலைவனப்பிரதேசங்களில் இருக்கும் ஒரு சிறு பறவை. நம் ஊர் சிட்டுக்குருவி போல உருவம். பாலைவனத்தில் தேடி அலைந்து ஒரு புழுவைக் கண்டுபிடிப்பது கஷ்டம். அப்படிக் கண்டுபிடித்த ஒரு புழுவை இந்த அரேபியன் பாப்லர் பறவை இன்னொரு சிறுபறவையிடம் கொடுக்கும். இது பரந்த மனப்பான்மை என்று இதனை பாராட்டலாம். ஆனால், ஒரு விஷயம் இருக்கிறது. அந்த பசித்த பறவை கெஞ்சவேண்டும். பசிக்கும் பறவை இறக்கைகளை விரித்து குனிந்து வணக்கம் செலுத்திய பின்னரே இந்தப் பறவை அதனிடம் தரும். பசித்த பறவை புழுவை வாங்கிக்கொண்ட பின்னர், கொடுத்த பறவை ஒரு சிறப்பு விசில் போல கொக்கலிக்கும்.

எங்கோ பார்த்தது போல இருக்கிறதா ? ஆம் நாம் தினம் பார்க்கும் விஷயங்கள் தான். பிச்சை எடுப்பவனுக்கு காசு போடும் மனிதர்கள் போலத்தான் இது. எய்ட்ஸ் ஆராய்ச்சிக்கு நிதி சேகரிக்கும் இடத்தில் சூழும் பெரிய பணக்காரிகள் போட்டோ எடுப்பவர்களுக்கு போஸ் கொடுப்பது போன்றதுதான் இந்த கொக்கலித்தல். (இது போன்ற உவமைகளை வைத்து ரிச்சர்ட் கானிஃப் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். நேச்சுரல் ஹிஸ்டரி ஆஃப் த ரிச்)

இன்னொரு மனிதனுக்கு வாரி வழங்குவது, கொடுப்பவனின் அந்தஸ்தை உயர்த்துகிறது. ஜெயலலிதா நடத்திய கல்யாணத்தில் ஊருக்கே போட்ட சாப்பாட்டை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். பெரியவன் என்று ஒருவன் தன்னைக் காட்டிக்கொள்ள மற்றவனை இழிவு பண்ணவேண்டும் என்பது அடிப்படை. ம்ம்ம்… சிட்டுக்குருவியிலிருந்து இதுதான் கதை… ஜீனில் ஊறிய சமாச்சாரம்.

பெரும் வளர்ச்சியடைந்த முதலாம் உலக நாடுகளிலேயே இது பலவேறு வடிவங்களில் தொடர்கிறது. இந்தியாவிலும், ஸ்டேட்டஸ் சிம்பல் என்ற அந்தஸ்துக்கான பொருட்கள் ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு வடிவம் எடுக்கின்றன. ஸ்கூட்டரிலிருந்து கார் வரை, ஓட்டுவீட்டிலிருந்து, அபார்ட்மெண்ட் வரை, டெலிபோனிலிருந்து செல்போன் வரை காலத்துக்குத் தகுந்தாற்போல அந்தஸ்து பொருட்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அந்தஸ்து பொருட்கள் மாறுகின்றனவே தவிர, அந்தஸ்து தேடும் ஜீனில் உறைந்த குணம் அப்படியேதான் இருக்கின்றது. அந்தஸ்து தேடும் மனித குணத்துக்கு ஒரு உயிர்வாழும் அடிப்படை இருக்கிறது. (ஸர்வைவல்). இது பல விதங்களில் ஒரு உயிருக்கு தன்னுடைய சந்ததியை நீட்டும் வழியாக ஆகிறது. இவ்வாறு தன் சொத்தின் பலத்தை வெளிப்படுத்தும்., தன்னுடைய வலிமையை வெளிப்படுத்தும் குருவி, சிறந்த துணையைத் தேடிக்கொள்கிறது. சிறந்த துணை தேடி வருகிறது.

ஒரே மரபணு அமைப்பு உள்ள இரண்டு பிராணிகளுக்கு இடையே நடக்கும் இந்த உறவுமுறை பல விதங்களில் நம்மிடம் இருக்கிறது. (இது தவறு, இது சரி என்ற நீதிபோதனை எல்லாம் என்னிடமிருந்து வராது). முதலாளி- தொழிலாளி, பண்ணையார்- பண்ணையாள், ஆண்- பெண் (இன்னும் முக்கியமாக கணவன்-மனைவி), இன்ன இத்யாதி. தேடினால் நிறையக் கிடைக்கும். உறவுமுறைகள் எல்லாமே கொடுக்கல் வாங்கலில் தான் உருவாகின்றன. யார் கொடுக்கிறானோ அவன் (அல்லது அந்த விலங்கு) உயர்ச்சியை அடைகிறான். கொடுக்கும் நிலைக்கு உயரவே எல்லா பிராணிகளும் முண்டுகின்றன. கொடுக்கும் நிலைக்கு உயருவது கொடுப்பவனின் சந்ததியை நன்றாக வாழ வழிவகை செய்கிறது. அது இன்னும் பிரிந்து நான் கொடுக்கும் நிலையில் இருக்கிறேன் என்று காண்பிப்பதன் மூலம் சுற்றுப்புரத்தை நம்பவைக்க (அல்லது ஏமாற்ற) ஜீன்கள் தூண்டுகின்றன. (வள்ளல் என்ற கருத்துக்கு இருக்கும் பாராட்டை நினைவு படுத்திக்கொள்ளுங்கள். தர்மம் தலைகாக்கும் போன்ற பழமொழிகள் உண்மைதான். தலை மட்டும் காக்காது, வரும் சந்ததியையும் காக்கும். கொடுக்கும் நிலைக்கு உயர்வதே முக்கியம். செத்தும் கொடுத்தான் சீதக்காதி போன்றவை உதவாத ஜீன்

ஓவர்டிரைவ்)

ஆனால் உறவு முறைகள் ஒரேமாதிரி இருந்துவிடுவதில்லை. பலவேறு விதமான சுற்றுச்சூழல் நிகழ்வுகள் உறவுமுறைகளைப் பாதிக்கின்றன. உதாரணமாக ஒரு இடத்தில் இருக்கும் உணவுதான்யப் பெருக்கமோ பஞ்சமோ குருவிகளின் உறவுமுறையைப் பாதிக்கிறது. உணவுதான்ய பெருக்கம் வந்துவிட்டால் எந்தக்குருவி இறைஞ்சி உண்ணும் ? போடா என்று சொல்லிவிட்டுப் போய்விடும், இல்லையா ? அதுவே மனித சமூகத்திலும் மாற்றங்களையும், வெவ்வேறு விதமான சமூக விளைவுகளையும் நிகழ்த்துகிறது.

சுதந்திர இந்தியாவில் நடந்திருக்கும் சமூக விளைவுகள் என்று சொல்லக்கூடியது, அல்லது கலைவடிவம் பெற்றவையாக நான் இங்கே குறிப்பிடப்போவது இரண்டு. முதலாவது ஜாதிகளுக்கு இடையே இருக்கும் உறவு. அடுத்தது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் உறவு.

கடந்த 20 ஆண்டுகளில், நுகர்கலாச்சாரம் என்ற ஒரு முக்கியமான மாற்றம் இந்தியாவில் நடந்திருக்கிறது. அது எல்லோரையும், சைக்கிள் ரிக்ஷா இழுப்பவரிடமிருந்து, கூலி விவசாயியிலிருந்து பெரும் பணக்காரர் வரைக்கும் இந்த நுகர் கலாச்சாரம் இழுத்துக்கொண்டு வந்திருக்கிறது. முன்பு, ‘அதெல்லாம் நமக்கெதுக்கு ‘ என்று இருந்தவர்கள் இன்று அதனை நோக்கி கை நீட்டும் அளவுக்கு நுகர் கலாச்சாரத்தால் ஆகர்ஷிக்கப்பட்டிருக்கிறார்கள். ரேடியோவின் இடத்தை டெலிவிஷன் எடுத்துக்கொண்ட அந்த காலத்திலிருந்து, சீகக்காய் இடத்தை சாஷே பிடித்துக்கொண்டுவிட்டது. (யோசித்துப் பாருங்கள், ரேடியோவின் மூலம் சாஷேவை விற்க முடியுமா ?)

ஆக, நுகர் கலாச்சாரம் என்று பலராலும் தூர்த்தப்படும் இந்த கலாச்சாரம், பெரும் ஆசைகளையும், பெரும் ஆர்வங்களையும், பெரும் நம்பிக்கைகளையும் பெருவாரியான மக்களிடம் அளித்திருக்கிறது. தமிழ்நாட்டின் பெருவாரியான மக்களுக்கு, இந்த பெரும் ஆசைகளே பெரும் விடுதலை. இந்த ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான வழிமுறையையும் கடந்த 20 ஆண்டுகளில் தமிழகத்தின் தமிழர்கள் பெற்றிருப்பதை நாம் கவனிக்கலாம். பெரும் தொழில் வளர்ச்சி, செய்தி தொடர்பு சாதனங்கள், வேலையில்லாத்திண்டாட்டம் குறைந்தது, கணினி தொழில்நுட்ப வளர்ச்சி, வேலைவாய்ப்பால் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது ஆகிய அனைத்தையும் இங்கு நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இது ஒரு நிலம் சார்ந்த விவசாய சமூகத்தில் எப்படி இருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. தேவர் மகன் அது போன்ற ஒரு கதையைச் சொல்கிறது. பெருவாரியான நிலங்கள் தேவர் குடும்பங்களுக்குச் சொந்தமானவை. தலித் சிறு விவசாயி அல்லது தேவருக்கு கூலி வேலையாள். தேவர் மகன் படத்தில் காட்டப்படுவது கூலி தாண்டி அவர்களுக்கு தேவர் குடும்பத்தினர் மீது இருக்கும் விசுவாசம். ( ‘கை போனா என்ன முதலாளி, நீங்க இருக்கும்போது எனக்கென்ன குறை ? ‘ விசுவாசம். அந்த விசுவாசம், முதலாளியிடமிருந்து தொழிலாளிக்கு ஒரு நன்றியாக பணம் வரும். அது அந்த கை போன ஆளின் சந்ததி நீட்டிக்க ஒரு

வழிமுறை. )

பொய்யா ? அது நிச்சயம் பொய்யில்லை. அது நடந்த கதை. இன்னும் சில கிராமத்தில் நடக்கும் கதை. ஆனால், சுதந்திரத்துக்குப்பின்னர் 50 வருடங்களில் நிறைய மாறிவிட்டது. அதைச் சொல்லாமல் விட்டது தான் கதையை போலியாக்கிவிட்டுவிட்டது.

தேவர் மகன் படத்தில் இரண்டு தேவர் குடும்பங்களுக்கு இடையே இருக்கும் பங்காளிச்சண்டைதான் ஊர்கள் எரியக்காரணம் என்று சொல்கிறது. இது ஒரு காலத்தில் இருக்கலாம். ஆனால், இன்று ஊர்கள் எரிவது அதனால் அல்ல. பழைய தேவர் பணக்காரர்களும், இன்றைய தலித் புதுப் பணக்காரர்களும் மோதுவதுதான் இன்றைய கதை. அடிக்கு அடி ரத்தத்துக்கு ரத்தம் என்று பழிவாங்க நின்று கொண்டிருப்பதுதான் இன்றைய கதை.

பங்காளிச் சண்டை தான் இந்தியக் கதை சொல்லலில் பிரதானமான அம்சம் – முக்கியமாக சினிமா என்ற நிகழ்-நிழல் கலை வடிவத்தில் . (மேநாட்டில் ஆடிஸி தான் பிரதான கதை அம்சம் என்று சொல்வார்கள்.) தமிழிலும் பழனி தொடங்கி, விசுவின் படங்கள் வரை இதே உட்கரு பயன்படுகின்றன. மகாபாரதம் , ராமாயணம் இரண்டிலுமே தம்பியர் – அதாவது தந்தை வழிச் சமூகத்தின் அடுத்த வாரிசுகள்- முதன்மைப் படுத்தப் படுவதைக் கவனியுங்கள். மகாபாரதத்தில் சேவகர்களும், ஆதிவாசிகளும் (ஏகலைவன்) பெறும் இடத்தைப் பாருங்கள். ஆனால் மாறிவரும் இந்தியாவில் இதே மாதிரிக் கதைசொல்லல் எதை முன்வைக்கிறது ? அதிலும் முக்கியமாக எதை மறைக்கிறது ?

***

வெகுகாலத்துக்கு முன் வந்த தேவர் மகன் கதையைப் பற்றி இங்கு நான் எழுத என்ன காரணம் ? முதலாவது, இது போன்ற சாதி சம்பந்தப்பட்ட படங்கள் சமீப காலத்தில் அதிகம் வெளிவர ஆரம்பித்துவிட்டன. திகட்டும் அளவுக்கு கவுண்டர் படங்களும், தேவர் படங்களும் வந்து இப்போதுதான் முடிந்த வேளையில், சொல்ல மறந்த கதை என்ற சாதிப்படம். சொல்ல மறந்த கதை, ஒரு படையாச்சி கதை. ஆனால், தேவர் மகன் அளவுக்கு அவ்வளவு போலி அல்ல.

சினிமாவின் தரத்தைப் பற்றியல்ல, அது சமூகம் முன்பு வைக்கும் மதிப்பீடுகள் பற்றியது என் பார்வை. அதுவும் நன்றாக ஓடியவை நான் பேசவிருக்கும் இந்தப் படங்கள். இந்தப் படங்கள் எந்த அதிகார மையத்தை முன்வைக்கின்றன என்பது என் கேள்வி.

நடுத்தர ஜாதிகளிடையே உருவாகி இருக்கும் பூசல் பற்றி நேர்மையுடன் அணுக தமிழ்நாட்டில் எவருக்கும் தைரியமும் இல்லை, கருத்து நேர்மையும் இல்லை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பார்க்கக்கூடிய எல்லா ஜாதி படங்களிலும் கதாநாயகனும் வில்லனும் ஒரே ஜாதியைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். கதாநாயகன் எல்லா ஜாதிகளையும் சமமாகப் பார்ப்பவராகவோ, அல்லது ஒரு தலித் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்வதாகவோ வரும். வேறு வேறு சாதிகள் கொள்ளும் பூசல் வராதது மட்டுமல்ல, தொடர்ந்து பூசி மெழுகப் படுகிறது. அல்லது ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் சண்டை என்று வரும். அல்லது அரசியல் வாதிகளால் உருவான சண்டையாகக் காண்பிக்கப் படும் . (யதார்த்தம் : சாதிச் சண்டைகளை அரசியல் வாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள், உருவாக்குவதில்லை.)

நான் முன்பு ரஜினி பற்றி எழுதிய கட்டுரையில் சொன்னதையே சொல்கிறேன். அது ஒரு காலத்தில் தலித் பெண்கள் கவுண்டச்சியாகவோ, ஆச்சியாகவோ ஆன வழியாக இருக்கலாம். இன்று தலித் பெண்கள் கலெக்டராக, என்ஜினியராக, மருத்துவராக சுயமாக வெற்றிக்கொடி கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை இன்னும் பழைய முறையிலேயே பேசி, இப்படிக் கொச்சைப் படுத்துவது சரியல்ல. தேவர் மகன் படத்தில் ஏறக்குறைய ரிட்டார்டட் போல வரும் ரேவதியைக் கவனியுங்கள். அது ஒரு தேவரின் கனவு என்றுதான் நினைக்கிறேன். எந்த தலித் பெண் அப்படி இருப்பாள் ? என் தலித் தோழிகள் எல்லோரும் முணுக் என்று கோவம் வந்தால் வீச்சரிவாளை எடுத்துவிடக்கூடியவர்கள். ஆனால் இந்தப் படத்திலும் கூட ‘யதார்த்த ‘த்தை மறைக்க முடியவில்லை. பட்டாம்பூச்சியைத் துரத்தும் சுதந்திரப் பெண் ரேவதி தேவர் மகனைத் திருமணம் செய்து கொண்டவுடன், தேவருக்குப் பின்னால் பயந்து நடுங்கி , ஒரு சிறு சத்தம் கேட்டாலும் என்னவோ ஏதோ என்று திகைத்து, அடங்கி அடைபட்டுப் போகிறாள். தேவர் மகன் கோலோச்சுகிறான். பெண்கள் பின்னணியில் தான் இருக்கிறார்கள் இருக்க வேண்டும். ‘போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே ‘ என்று பாடல் கூட வருகிறது. அடங்கிப் போய் வீட்டுக்குள் கிடப்பது பெண்களின் வேலை. ஆண்களுக்கு வரட்டு கெளரவத்திற்காககச் சண்டை போடுவது ஒன்று தான் வேலை.

***

தங்களை ஆளும் வர்க்கமாகப் பார்ப்பது எல்லா ஜாதிகளுக்கும் உள்ள குணம்தான். எங்கள் தாத்தாவுக்கு யானை இருந்தது சமாச்சாரம் உண்மையும் கூட. எல்லா சாதியினரும் பல்வேறு காலங்களில் தமிழ்நாட்டில் ஆண்டவர்களாகவும், ஆளப்பட்டவர்களாகவும், முன்னால் ஆண்டவர்களாக இருந்ததாலேயே, பின்னால் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டவர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். உச்சத்தில் வைக்கப்பட்டிருந்தவர்கள் உரிமைகளற்று ஒடுக்கப்பட்டார்கள். முன்னாளைய ஒடுக்கப்பட்டவர்கள், தங்களை ஒடுக்கியவர்களை ஒடுக்குவதாலேயே தங்களது வாழ்வு எதிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்குமென்று கருதினார்கள். மனித இயற்கை. ஆண்ட நாடார்கள் அடிமைகளாக துரத்தப்பட்டதும், சுதந்திரத்துக்கு முன்னர் பிரிட்டிஷார் தயவில் உச்சத்தில் உட்கார்ந்திருந்த பிராம்மணர்கள் தூக்கி வீசப்பட்டதும், தேவேந்திர குல வெள்ளாளர் சரித்திரமும், குற்றப்பரம்பரை என்று பிரிட்டிஷாரால் ஒடுக்கப்பட்டவர்கள் சுதந்திரத்துக்குப்பின்னர் ஆளும் வர்க்கமாக நிமிர்ந்ததும் சமீபத்திய வரலாறுதானே. ஒவ்வொரு மாறுதலுக்கும் ஆதரவளிக்க ஒரு கொள்கை பிரச்சாரமும் கூடவே.

50 வருட ஜனநாயகத்தில் எல்லோருக்கும் உடனே ஞானோதயம் வந்துவிடாது. அடுத்தவரை உள்ளார்ந்த முறையில் மதிக்க தோன்றிவிடாது. ஆயிரம் ஆயிரமாக குடும்பத்தில் பேசி வரும் அடுத்த ஜாதி பற்றிய கேவலப் பழமொழிகள் கொடுக்கும் மனச்சாய்வை 50 வருடங்களில் துடைத்துவிட முடியுமா ? அதுவும் அது துடைக்கப்படவேண்டும் என்ற ஒரு எண்ணமும் இல்லாதபோது ?

***

சொல்லமறந்த கதையில் மைய இழையாக ஓடும் ஒரு கருத்து ‘ஆண்மகன் ‘ என்ற கருத்து. ‘மகளிர் மட்டும் ‘ என்ற படத்தைத் தவிர வேறெந்த படத்திலும் கேள்வி கேட்கப்படாத ஒரு கருத்து, ‘ஆண் மகன் ‘ என்ற பதத்துக்கு சமூகம் அளிக்கும் பொருள்.

‘ஆண் மகன் ‘ என்பது குடும்பத்துக்கு பொருளாதார ரீதியில் தூணாக இருக்கும் ஒரு பாத்திரம். இந்த கருத்து எந்தப் படத்திலும் இதுவரை கேள்விக்கு உட்பட்டதே இல்லை. வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு, மனைவி வேலைக்குச் சென்று வருவதை ‘சகித்துக்கொள்ளும் ‘ ஆண் என்ற கருத்தை, ஆங்கிலப்படமான ‘9 டு 5 ‘ படத்தை இறு(க்க்)கத்தழுவி எடுக்கப்பட்ட ‘மகளிர் மட்டும் ‘ படம் விமர்சிக்கிறது. சொல்லப்போனால், தேவர் மகன், சொல்ல மறந்த கதை இரண்டைவிடவும் நேர்மையான படம் மகளிர் மட்டும். இது சென்னையில் பலரது நிதர்சன வாழ்க்கை. பெண் முக்கியமாக வேலைக்குப் போகிறாள். கணவன் வேலைக்குப் போனாலும் பணம் போதவில்லை. பெண்கள் ஆண்கள் இருவருமே நகரத்தில் வேலை பார்க்கும் இடத்தில் ஜாதி பார்ப்பதில்லை (பார்க்கவும்முடியாது). அதில் முக்கியமாக கறுப்பாக இருக்கும் வேலைக்காரியை தலித் ஸ்டாரியோடைப் என்று சொன்னாலும், அதனை வெகுவாக உண்மைக்குப் புறம்பானதாகச் சொல்ல முடியாது. அவள் வேலைக்காரியாக இருந்தாலும் பெண்களுக்குள் சமமாகவே பழகுவதும் உண்மைதான். சொல்லப்போனால், அந்தப் படம் புதிய அந்தஸ்து பிரச்னைகளையும், புதிய சமூகப் பிரச்னைகளையும், வேலையில் இருக்கும் பெண்கள் பாலுறவு பிரச்னைகளில் மாட்டிக்கொள்வதையும் வெளிப்படையாகப் பேசுகிறது. ஆண்களைப் பற்றி கடுமையான விமர்சனம் வைக்கிறது. இப்படிப் பட்ட ஆண்களிடையே வாழும் பெண்கள் எப்படியெல்லாம் தப்பித்து வெளியேற வேண்டியுள்ளது என்று சொல்கிறது.

***

நகரம் ஒரு புறம் மாற்றமடைந்துவருவதை மகளிர் மட்டும் சொன்னாலும், கிராமம் மாற்றமடைந்துவருவதை முதலில் சொன்னது ’16 வயதினிலே ‘ (அன்னக்கிளி அல்ல)

16 வயதினிலே படம் பலரும் பலமுறை பலபடி எழுதிய படம். ஆனால், அந்தப்படம், ஒரே ஒரு மாற்றத்தை மட்டுமே சொல்கிறது. அதாவது நகரத்திலிருந்து கிராமத்துக்கு வருபவன் கிராமத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறான். அதனைத் தாண்டி அந்தப்படத்திலும் ஒன்றுமில்லை, அந்தக் கதையிலும் ஒன்றுமில்லை. பேசப்பட்ட மாற்றங்களும் முக்கியமானவை அல்ல. அதனால் அது பற்றிப் பேசுவது இங்கு பொருந்தாது. பேசப்படும் ஒரே ஒரு விஷயம், கிராமமே சிறந்தது என்பது, நகரம் ஒரு கானல்நீர் என்பதும்தான். (பட்டணந்தான் போகலாமடி பாட்டில் பட்டணம் வேண்டாம் என்றுதான் முடியும்). பட்டிக்காடா பட்டணமா என்றால் பட்டிக்காடு தான் என்பது தமிழ் சினிமாவின் பதில். அந்த பதில் தேவர் மகனில் இல்லை.

தேவர் மகன் படத்தில் கிராமத்தான் பட்டணம் போய் படித்துவிட்டு கிராமத்தில் இருக்கும் பணக்கார தந்தையிடம் விடைபெறத்தான் வருகிறான். கிராமத்தில் தங்கும் விருப்பம் இல்லை. காரணம் கிராமம் அவனது சந்தை அல்ல. அவனது சந்தை நகரம். (கிராமத்தில் பணக்கார தந்தை கொடுக்கும் பணத்தை வைத்து நகரத்தில் மக்டொனால்ட் வைக்கப்போகிறான்). முன்பு நான் குறிப்பிட்ட நுகர் பொருள் கலாசாரத்தைப் பற்றி எண்ணிப் பாருங்கள். பங்காளிச்சண்டையில் ஊர் பற்றி எரியவும், தந்தையின் ஸ்தானத்தை எடுத்துக்கொள்கிறான் மகன். (படத்தில் அரசன் இறந்ததும் இளவல் பட்டம் சூட்டப்பெறுவதாகவே வருகிறது). ஆண்மகன் என்ற கருத்துருவாக்கம் உறுதி பெறுகிறது இங்கும். தலித்துடன் கூட்டணி வைக்கிறான். எதிராக இருக்கும் பங்காளியைக் கொன்று சிறைக்குச் செல்கிறான். ‘போங்கடா படிங்கடா ‘வுடன் படம் முடிகிறது. இந்த வன்முறைக் கலாச்சாரம் ஒரு மாயச்சுழல். வெளியே செல்ல முயற்சிப்பவனையும், உள்ளே இழுத்துவந்து துவம்ஸம் செய்துவிடும் என்பதாக கதை சொல்கிறது. இன்றைக்கு தலித்-தேவர் கலவரங்களுக்குக்கூட ஒரு விதத்தில் பங்காளிச் சண்டையில் விளைந்த வன்முறைக்கலாச்சாரத்தையே குறை சொல்கிறது இந்தப்படம் என்றும் பார்க்கலாம். அவர்கள் ஆரம்பித்துவைக்கும் வன்முறை, அங்கங்கு எதிர்வினையாக பற்றி எரிகிறது என்றே சொல்கிறது படம். முதலில் கமலஹாசன் கொண்ட எண்ணமே சரி, நகரம் தான் விடிமோட்சம் , கிராமத்தில் இருக்கும் வரையில் இந்த மாயச் சுழலிலிருந்து விடுபட எண்ணுபவனும் அதற்குள்ளேயே அமிழ்ந்து போவான் என்று சரியாகவே சொல்கிறது இந்தப் படம்.

சொல்லமறந்த கதையில், நடுத்தர குடும்பம் சொத்தை விற்று படிக்கவைத்த கிராமத்தான் வேலையின்றி மீண்டும் வீட்டுக்கே வந்து, ‘ஆண்மகன் ‘ என்ற பட்டம் துறந்து, பணக்காரன் வீட்டுக்கு வீட்டோடு மாப்பிள்ளையாகப் போகிறான். புகுந்த வீட்டில் அவமானப்பட்டு வெளியேறுகிறான். மனைவி, ‘ஆண்மகனோடு ‘ இறுதியில் இணைகிறாள். சொல்ல மறந்த கதையில் ‘தேவர் மகனின் ‘ பெரும்பாலான குணாம்சங்களும் இருப்பதைப் பார்க்கலாம். ஆண்மகனின் குணாம்சம் இதுதான், அதிலிருந்து ஆண்மகன் வெளியே செல்ல முடியாது, சென்றால் பெண்டாட்டியே மதிக்க மாட்டாள் என்பதாகத்தான் கதை சொல்கிறது.

இந்தக் கதையைக் கொஞ்சம் தலைகீழாக்கிப் பார்த்தால் தான் இது எப்படிப்பட்ட ‘ஆண்மை ‘ நிலைகளைக் கட்டமைக்கிறது, எப்படி பிற்போக்கான ஒரு பார்வையினை முன்வைக்கிறது என்று தெரியும். ‘வீட்டோடு மாப்பிள்ளை ‘ என்ற சொற்றொடரிலேயே ஒரு சாய்வு உள்ளது. வீட்டோடு மருமகள் என்று யாரும் சொல்வதில்லை. மாமியார்-மருமகள் சண்டையை பெண்மைக்கு இடப்பட்ட சவால் என்று யாரும் சொல்வது கிடையாது. ஒரே ஒரு ஆண் மாமனாருடன் தங்கிவிட்டால் அந்த மாமனார் வில்லனாகவும், மருமகன் கையாலாகாதவனாகவும் ஆகிவிடுகிறான். அந்தஸ்தின் குறியீடாக சொல்ல மறந்த கதையில் ஆண்மகனின் பொருளாதார சுதந்திரம் நிலை நிறுத்தப்படுகிறது. தேவர் மகனில் தேவர்களின் (ஆண்மகனின் சமூகத்தலைமை என்பது இரண்டாம்பட்சம் இந்தப்படத்தில்) சமூகத்தலைமை நிலை நிறுத்தப்படுகிறது.

அரேபியன் பாப்லரைப் பற்றி ஒரு படம் எடுத்தால் டாக்குமண்டரி மாதிரி விவரணப்படம் தான் எடுக்க முடியும். ஆனால் அது எப்போது கதையாகிறது ? கொடுத்த பறவை இறைஞ்சும் போது கதையாகிறது. கெஞ்சி வாங்கிய பறவை கொடுக்க வரும்போது கதையாகிறது. அந்த பாப்லரின் வாழ்க்கை மாறும்போது அது கதைக்கான கருவாகிறது. இன்றைக்கு மாறிவிட்ட விஷயங்களைக் கண்டுக்கொள்ளாமல் படம் எடுக்கும் தமிழ்நாட்டு கலைஞர்கள் எடுப்பது அவரவர் கனவுகளே தவிர கதைகள் அல்ல என்றுதான் தோன்றுகிறது.

நான் சொல்ல ஆரம்பித்த இரண்டில், முதலாவது விஷயம் மாறிக்கொண்டிருக்கிறது என்பதை சொன்ன வெளிநாட்டுபடப்பிரதியான மகளிர்மட்டும் படத்துக்கே, யதார்த்தவாதப் படம் என்ற முறையில் குறிப்பிட்ட பிரசினையை நேர்மையுடன் அணுகின படம் என்ற பட்டத்தை நான் அளிக்க முடியும்.

***

மேலும் படிக்க

***

அரேபியன் பாப்லர் பற்றி:

http://www.discover.com/dec_01/featrisks.html

***

rmadhuvanthi@yahoo.com

Series Navigation