சேரனிடம் யார் சொன்னார்கள் ?

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

எஸ். பாபு


அமெரிக்காவுக்கு வரும் வரைக்கும் நம்ம நாட்டில் உள்ளது மாதிரி கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஊர்கள் அமெரிக்காவிலும் உண்டு என்பது எனக்குத் தெரியாது. க்ளீவ்லாண்டில் இருந்து பிட் ?பெர்க் செல்லும் பிரதான சாலையில் அமைந்திருக்கும் இந்த ஊர், நம்ம ஊரில் மதுரையிலிருந்து சென்னைக்கு திருவள்ளுவர் ப ? ?ில் போகும்போது உளுந்தூர்பேட்டைக்கு அருகே டா சாப்பிடுவதற்காக வண்டியை நிறுத்துவார்களே, அது மாதிரியான ஒரு ஊர். ஒரு கேஸ் ஸ்டேஷன், ஒர் சிறிய சூப்பர் மார்கெட், ஒரு டாலர் ஸ்டோர், ஒரு பீட்ஸா குடில், ஒரே ஒரு ரெஸ்டாரண்ட் (இத்தாலியன்), நான் பணியாற்றும் மிகச் சிறிய மருத்துவக் கல்லூரி மற்றும் சில குடியிருப்புகள் தவிர இங்கே எதுவும் இல்லை. அரிசியோ காய்கறிகளோ வாங்க வேண்டுமென்றால் 20 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய நகரத்துக்கு போக வேண்டும். நான் பணியாற்றுகிற கல்லூரியில் படிக்கிறவர்களும் பணியாற்றுகிறவர்களும் பெரும்பாலும் பல மைல் தொலைவில் இருக்கும் வெவ்வேறு நகரங்களில் இருந்து வந்து போகிறவர்களே (என்னைத் தவிர). பஸ் வசதி கூட கிடையாது. இப்படிப்பட்ட ரிமோட்டான இடத்தில் இருந்து கொண்டும் இணைய தளங்கள் வாயிலாக தமிழைப் படிக்க முடிவதும் எழுத முடிவதும் (உபயம்: சமீபத்தில் நான் வாங்கிய மடிக்கணனி) இந்திரா பார்த்தசாரதி அவர்கள் கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல – தெருவெல்லாம் தமிழ் முழக்கம் கேட்க வேண்டும் என்றான் பாரதி, இன்றோ கடல் தாண்டி முழங்கிக் கொண்டிருக்கிறது தமிழ் – என்பதில் பெருமையாக இருக்கிறது.

****

சரி, விஷயத்துக்கு வருவோம். திரைப்படங்களை விரும்பிப் பார்க்கின்ற என் போன்றவர்களுக்கு வசதியாக திரைப்படங்களை இணைய தளங்களில் வலையேற்றி வைத்திருக்கும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் நண்பர்களுக்கு கோடி நமஸ்காரங்கள். சமீபத்தில் அப்படிப் பார்க்கக் கிடைத்த படங்களுள் ஒன்று தவமாய் தவமிருந்து. இந்த படத்தைப் பற்றி தினத்தந்தி முதல் ஆனந்த விகடன்- குமுதம் இந்தியா டுடே வரையிலும்; பத்து பேர் மட்டும் படிக்கும் சிறு பத்திரிகை முதல் பல பேர் படிக்கும் காலச்சுவடு உயிர்மை வரையிலும் ஏராளமாய் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் விட்டன என்று நினைக்கிறேன். மேலும் நான் மேய்ந்து திரியும் எல்லா இணைய தளங்களிலும் இத்திரைப்படத்தைப் பற்றிய பதிவுகளைக் காணவும் முடிந்தது. எல்லாம் ஓய்ந்து விட்ட இச்சமயத்தில் என்னுடைய இந்தப் பதிவு. நடுக் குளத்தில் போட்ட கல், நீரில் உருவாக்குகின்ற வளையங்கள் விரிவடைந்து விரிவடைந்து குளத்துக் கரையைத் தொட்டதும் முடிந்துவிட்டதான தோற்றம் தருகிறது. எனக்கென்னவோ அவை முடிந்து விடுவதில்லை என்று தோன்றுகிறது. படம் பார்த்து முடித்து பல நாட்கள் ஆகியும் அவ்வப்போது சில காட்சிகள் நினைவுக்கு வந்து அதிர்வூட்டியபடி இருக்கின்றன. அம்மாவைப் போற்றி ஆயிரம் சினிமாக்கள் இருந்தும் நமக்கு வாய்த்தது போன்ற உன்னதமான அப்பாவை ஏன் சினிமாவில் சொல்லவில்லை என்ற கேளவி இருந்தது என்னிடம். சேரனின் படம் பார்த்து அது நிறைந்தது. சைக்கிளில் ராஜ்கிரண் மகன்களை வைத்துக் கொண்டு பள்ளிக்கு அழைத்துச் செல்லும் காட்சியில் பெருகத் தொடங்கிய கண்ணீரை அருகிலிருந்த மனைவிக்குத் தெரியாமல் அவ்வப்போது துடைத்துக் கொண்டேன்.

எங்கள் அப்பாவிடமும் சைக்கிள் இருந்தது (அது இன்னமும் ஒரு நினைவுச் சின்னமாய் வீட்டில் இருக்கிறது). எங்கள் அப்பாவும் 3 மைல் தூரம் எங்களை சைக்கிளில் அழைத்துப் போய் அழைத்து வருவார். நாங்கள் சகோதரர்கள் நான்கு பேர். மூன்று பேரை உட்கார வைத்து எதிர் காற்றில் சைக்கிளை மிதிப்பார் அப்பா. மூத்த அண்ணன் உயர்நிலைப் பள்ளிக்கு பஸ்ஸில் போகத் தொடங்கியதும் கடைசித் தம்பி ஆரம்பப் பள்ளிக்கு வந்து விட்டான். மீண்டும் மூன்று பேருடன் அப்பாவின் சைக்கிள் பயணங்கள்.

பள்ளிக்கு சென்று வருவதோடு மட்டும் முடிந்ததா ? எது வாங்க வேண்டுமானாலும் நாங்கள் குடியிருந்த மதுரை வேளாண்மைக்கல்லூரி குடியிருப்பிலிருந்து கிட்டத்தட்ட 5 மைல் தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு போனால்தான் பலசரக்கு முதல் எதுவும் கிடைக்கும். அது தவிர மாலை தொடங்கி இரவு வரையிலும் மற்றும் லீவு நாட்களிலும் சுற்றிலுமுள்ள கிராமங்களுக்கு சென்று மாடு ஆடுகளுக்கு வைத்தியம் பார்த்து பத்து இருபது ரூபாய் என்று சம்பாதித்துக் கொண்டு வருவார் அப்பா. பல மைல் கடந்து ஒற்றையடிப் பாதையிலெல்லாம் பயணித்து மாட்டை பரிசோதித்து மருந்து எழுதிக் கொடுத்தும் சிலர் காசு எதுவும் கொடுக்காமல் வெறும் டா மட்டுமே வாங்கிக் கொடுத்து அனுப்பி விடுவார்கள் என்றும் அவருடன் சில சமயம் செல்லும் உதவியாளர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

திடாரென்று கணக்கு வகுப்பில் நாளைக்கு ஜியாமெண்ரி பாக்ஸ் இல்லாதவர்கள் வகுப்புக்கு வர வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள். அப்பாவிடம் முறையிட்டு விட்டு நாங்கள் கிரிக்கெட் விளையாட போய் விடுவோம். அப்பாவிடம் காசு இருக்காது. உடனே தனது ஊசி மருந்து பையை (அதுவும் நினைவுச் சின்னமாய் இன்னமும் வீட்டில்) எடுத்துக் கொண்டு சைக்கிளில் கிளம்பி விடுவார். ஏதாவது ஊரில் ஏதாவது கால்நடைகளுக்கு சுகமில்லாமல் இருந்தால் வைத்தியம் பார்த்து பணம் புரட்டலாமே என்றுதான். அப்பா இரவில் வீடு வந்து சேர நேரம் ஆகும். நாங்கள் தூங்கி விடுவோம். காலையில் எழுந்து பார்த்தால் மேசை மீது புத்தம் புது ஜியாமெண்ரி பாக்ஸ் மற்றும் யார் யார் என்ன கேட்டோமோ அது இருக்கும். வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சாதாரண கால்நடை ஆய்வாளராக அப்பாவுக்கு கிடைத்த சம்பளம் நான்கு பசங்களை படிக்க வைக்க (அதுவும் இங்கிலீஷ் மீடியத்தில்) போதுமானதாக இல்லாததால் தான், மாலை வேளைகளில் அவர் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்து திரிந்து சம்பாதிக்க வேண்டியிருந்தது.

எங்கள் நால்வரின் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ பொதுத் தேர்வுகளின் போது எல்லா பரீட்சைக்கு முந்தைய இரவுகளும் அப்பாவுக்கு தூங்கா இரவுகளே. எனது பத்தாம் வகுப்பு சயின்ஸ் பரீட்சைக்கு நான் முழு இரவும் தூங்காமல் படித்தேன். அப்பா எங்கள் குடியிருப்புக்கு அருகிலிருக்கும் அவரது அலுவலகத்துக்கு (கால்நடை பராமரிப்புத் துறை) அழைத்துச் சென்று அவரது சீட்டில் உட்கார வைத்து கொசு கடிக்காமல் இருக்க கொசுவத்தி கொளுத்தி வைத்து ஓரிரு முறை அருகிலிருந்த ஊருக்கு சென்று டா வாங்கி வந்து, அறைக்கு வெளியே தொடர்ந்து சிகெரெட் புகைத்தபடி அங்குமிங்கும் நடந்தபடி..அப்பாவும் அன்று முழுவதும் தூங்கவில்லை. அண்ணன்கள் இருவரும் 400 மார்க் எடுக்கவில்லை நானாவது எடுக்க வேண்டும் என்றுதான் அப்பா போராடினார்.

வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு முழு இரவும் தூங்காத அனுபவத்தால் காலையில் எனக்கு படித்ததெல்லாம் மறந்துவிட்டது போல் இருந்தது. அப்பாவிடம் தயங்கி தயங்கிச் சொன்னேன். எனது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. சயின்ஸில் 90க்கு மேல் எடுக்க வேண்டும் என்று அது நாள் வரை கண்டிப்புடன் கூறி வந்த அப்பா கனிவோடு சொன்னார்.. ‘பயப்படாதே…உனக்கு எது ஞாபத்துக்கு வருதோ அதை எழுது. பெயிலானால் கூட பரவாயில்லை.. ‘. 72 மார்க் எடுத்து ஓரளவு அவரது நம்பிக்கையை காப்பாற்றினேன். ஆனால் அவரது 400 மார்க் ஆசையை ஒரு மார்க் வித்தியாசத்தில் நிறைவேற்ற முடியாமல் கோட்டைவிட்டேன். நான் எடுத்தது 399.

எங்கள் ஒவ்வொருவரின் ஒவ்வொரு பொதுத் தேர்வின் போதும் நாங்கள் தேர்வு எழுதும் மூன்று மணி நேரமும் பள்ளிக்கு அருகில் சிகரெட் பிடித்தபடி அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருப்பார் அப்பா. கேள்வித் தாள் எப்படி இருந்ததோ, பையன் நன்றாக எழுதுகிறானா, நேரத்துக்குள் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதி விடுவானா என்று பதட்டமாகவே இருப்பார். நான் ப்ள ? டூ தேர்வு எழுதியபோது, தேர்வு எழுதிய அறை முதல் மாடியில் இருந்தது. எனக்கு ஜன்னலோர இருக்கை. தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஒரு முறை லேசாக ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். சிகரெட்டை ஊதித் தள்ளியபடி அப்பா பதட்டமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். தேர்வு முடிந்து வெளியில் வந்ததும் கேள்வித் தாளை வாங்கி ‘இந்த கேள்விக்கு எத்தனை மார்க் வரும், அந்த கேள்விக்கு எத்தனை மார்க் கிடைக்கும்.. ‘ என்று ஒவ்வொரு கேள்விக்கும் கேட்டுக் கேட்டு மார்க் போடுவார் அப்பா. எல்லாம் கூட்டிக் கழித்து மொத்தமாய் எத்தனை மார்க் வரும் என்று ஒரு முடிவுக்கு வந்த பின்னர் தான் வீட்டுக்குச் செல்ல பஸ்ஸில் ஏறுவோம்.

மூத்த அண்ணனுக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. கவர்மெண்ட் கோட்டாவிலேயே சுயநிதிக் கல்லூரியில் இடமளித்தார்கள் ஆனால் கட்டிடநிதி மற்றும் பீஸ் என்று ஏராளமாய் பணம் கேட்டார்கள். அப்பாவால் புரட்ட முடியவில்லை. சுற்றம் நட்பு யாரும் உதவவில்லை. நமது சொந்த பந்தத்தில் யாரும் தொழிற்கல்வி படிக்கவில்லை. நமக்கெல்லாம் ஏன் அந்த ஆசை என்று சொந்தக்காரர்கள் கேலி பேசினார்கள். அப்பா உடைந்து போய்விடவில்லை. ஒரு வருடம் அண்ணனை பிஎஸ்ஸி கெமிஸ்டிரி படிக்கச் சொல்லி விட்டு, அந்த ஒரு வருடமும் படாத பாடு பட்டு தேவையான பணத்தைச் சேர்த்தார். அந்தக் காலகட்டம் அப்பாவின் உழைப்பின் உச்சம் என்று சொல்லலாம். அடுத்த வருடமே அண்ணனை மீண்டும் நுழைவுத் தேர்வு எழுதச்சொல்லி அதே போல் கவர்மெண்ட் கோட்டாவில் அதே சுயநிதிக் கல்லூரியில் இம்முறை¢ தேவையான பணத்தோடு போய் நின்றார் அப்பா. அண்ணனை பொறியியல் கல்லூரியில் அதுவும் கணிப்பொறி பொறியியலில் சேர்த்ததும் மிரண்டு போனார்கள் சொந்த பந்தங்கள். இரண்டாவது அண்ணனுக்கு அதே தவறு நடந்து விடக்கூடாது என்று முன்கூட்டியே பணம் திரட்டி தயாராகிக் கொண்டார். சொல்லி வைத்த மாதிரி அவனுக்கும் சுயநிதிக்கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் கிடைத்தது. அவர்கள் இருவருக்கும் காலே ? பீ ? ?ா ?டல் பீ ? எனக்கு ப்ள ? டூ வில் மூன்று பாடங்களுக்கு டியூசன் என்று பணத்துக்கு அப்பா பட்ட க ?டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. தவமாய் தவமிருந்தில் ரா ?கிரண் வாங்குவது போல கடன் மேல் கடன், பேங்க் லோன்…எல்லாம்.

இரண்டு பேர் இன் ?ினியரிங் என்று ஆகி விட்டதால் என்னை மருத்துவத்துக்கு தள்ள நினைத்தார் அப்பா. இரண்டு மார்க் வித்தியாசத்தில் அதையும் கோட்டை விட்டேன். அக்ரி (வேளாண்மை) தான் கிடைத்தது (ஆனால் இப்போது நான் ஆராய்ச்சி செய்வது மருத்துவத் துறையில்! காலத்தின் கோலம்!). ஆனாலும் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. அச்சமயம் கால்நடை பல்கலைக்கழகத்துக்கு மாறி காட்டுப்பாக்கத்துக்கு அவர் போய் விட்டாலும் 20 வருடங்களாக மதுரை வேளாண்மைக் கல்லூரியில் வேலை செய்ததால் ஒரு பையனையாவது அதே கல்லூரியில் படிக்க வைத்துவிட வேண்டும் என்பது அவரது மற்றொரு ஆசையாக இருந்தது. மேலும் மூத்த அண்ணனுக்கு எம்.ஈ படிக்க வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. ஆனால் குடும்பமும் கடன் சூழலும் அவனை வேலைக்குச் செல்ல நிர்பந்தித்தது. ஆகவே என்னையாவது மேல் படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும் என்று விரும்பினார் அப்பா. அவருடைய விருப்பப்படி எம்.எ ?.சி படித்தேன். அப்போது பயிர் நோயியல் துறையில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றேன். எனது பெயர் பேப்பரில் வந்தது. பல்கலைக் கழகத்துக்கே பெருமை சேர்த்ததாகப் பாராட்டி துணைவேந்தர் ஒரு பாராட்டுக் கடிதம் கொடுத்தார். அப்பா ஊரெல்லாம் சொல்லி சந்தோ ?ப்பட்டார். அவர் விருப்பப்படியே பிஎச்டியும் முடித்தேன்.

மதுரை வேளாண்மைக்கல்லூரியில் நாங்கள் இருந்த வீட்டு எண் 2. 1ம் எண் வீடு கல்லூரி முதல்வருடையது. நான் அக்ரியில் பிஎச்டி படித்து உதவிப் பேராசிரியராகி, பிறகு பேராசிரியராகி, பின்னர் முதல்வராகி அந்த 1ம் நம்பர் வீட்டுக்கு குடிபோக வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார் அப்பா. (அப்போது அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை – பிற்காலத்தில் ?ாதி, பணம் மற்றும் அரசியல் பின்புலம் எதுவும் இல்லாததால் உதவிப் பேராசிரியர் பணி கூட அந்த பல்கலைக்கழகத்தில் எனக்கு கிடைக்கப் போவதில்லை என்பது). மார்க்குகள் குறைவாக எடுத்திருந்தாலும் தம்பியை சட்டக் கல்லூரியில் படிக்க வைத்தார் அப்பா. எல்லோரையும் தொழிற்கல்வி படிக்க வைத்துவிட்ட நிறைவு அவரிடம். ஊரெல்லாம் பெருமையாக சொல்லிக் கொண்டார். நம் பரம்பரையில் அல்லது சொந்தத்தில் எவனாவது பிள்ளையை பிஎச்டி படிக்க வைத்திருக்கிறானா… நான் படிக்க வைத்திருக்கிறேன் என்று அடிக்கடி அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருப்பார்.

பின்னர் அதையும் கடந்து பிரான் ?, கனடா, அமெரிக்கா என்று போ ?ட் டாக்டரேட் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று இப்போது உயிருடன் இல்லாத அப்பாவிடம் எப்படிச் சொல்வது ?

எங்களை எல்லாம் படிக்க வைக்க அப்பா அவ்வளவு பாடு பட்டதற்குப் பிண்ணனியில் இருந்தது வெறும் ஆசையா ? கனவா ? ஏக்கமா ? இல்லை. வெறி. தீராத வெறி. பரமக்குடிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்த அப்பா பியூசி முடித்த பின்பு மதுரை தியாகராசர் கல்லூரியில் இடம் கிடைத்தது. சேருவதற்கு 150 ரூபாய் கட்டச் சொன்னார்கள். ஒரு பண்ணையாருக்கு கணக்கு எழுதிப் பிழைத்த தாத்தாவிடம் அவ்வளவு பணம் இல்லை அப்போது. மதுரையில் வாடகை லாரி சர்வீஸ் வைத்திருந்த அப்பாவின் அண்ணனிடம் பணம் இருந்தது. அப்பா அவரிடம் போய் கேட்டபோது ‘நீ படிச்சு கிழிச்சது போதும் அவ்வளவு பணமெல்லாம் தரமுடியாது ‘ என்று சொல்லி விட்டார். வெறும் 150 ரூபாய் இல்லாததால் அப்பாவின் படிப்புக் கனவு பொசுங்கிப்போனது. அப்புறமாய் அங்கே இங்கே வேலை செய்து சுயமுயற்சியில் கால்நடை ஆய்வாளருக்கான பயிற்சி முடித்து வேளாண் பல்கலைக் கழகத்தில் வேலை கிடைக்கப்பெற்றது தனி கதை. அன்று முதல் அவர் மனதில் நெருப்பு கனன்று கொண்டிருந்திருக்க வேண்டும். தான் படிக்க முடியாமல் போன வெறியில்தான் எங்களை படிக்க வைக்க அப்பா அவ்வளவு சிரமப் பட்டார். அதில் வெற்றியும் பெற்றார். இன்னமும் எங்கள் சொந்த பந்தங்களில் ‘பிள்ளைகளை படிக்க வைப்பதில் அவர் மாதிரி முடியுமா ? ‘ என்று அப்பாவை பெருமைப்படுத்துகிறார்கள்.

****

காலையில் இறந்த அப்பாவை நள்ளிரவு கடந்து தான் பார்க்க முடிந்தது. கோவையிலிருந்து போய்ச் சேர அவ்வளவு நேரமாகிவிட்டது. அவர் இறந்து விட்டதாக எனக்கு நேரிடையாக சொல்லப்படவில்லை என்றாலும் என்னால் ஊகிக்க முடிந்தது. வழிநெடுக குலுங்கி குலுங்கி அழுது கொண்டே தான் பயணித்தேன். வீட்டை நெருங்கியதும் படபடவென்று அடித்துக் கொண்டது. எனது வருகைக்காகத்தான் எல்லோரும் காத்திருந்தனர். நான்கு பேர் என்னை இரு புறமும் பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். வாசலில் நுழைந்தவுடன் ரோஜாப்பூ மாலைகள் அணிவிக்கப்பட்டு அப்பா கிடத்தப்பட்டிருந்தார். ‘என்னைப் படிக்க வச்ச அப்பா..ஆஆ.. ‘ என்று பெருங்குரலில் அலறி அவர் மீது விழுந்தேன். இப்போது நினைத்துப் பார்த்தால் எனது அடிமனதில் இருந்து அந்த வார்த்தைகள் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதுவரை சோகம் குறைந்து ஆசுவாசமடைந்திருந்த எனது சகோதரர்கள் தாங்களும் அலறி அழத் தொடங்கினார்கள்.

அப்பாவின் உடலை எரித்தபின் மறுநாள் அஸ்தி எடுப்பதற்காக இடுகாட்டுக்குச் சென்றோம். எரிந்து தணிந்திருந்த இடத்தில் இடுகாட்டுத் தோழர் (வெட்டியான்) குச்சியால் கிளறி சில எலும்புகளையும் சாம்பலையும் ஒரு மண் சட்டியில் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். சற்றே பெரிய எலும்பு ஒன்று தட்டுப்பட்டது ‘என்ன அது ‘ என்று கேட்டோம். ‘அது கால் எலும்பு தம்பி ‘ என்றார் வெட்டியான். எனது இளைய சகோதரன் என்னைப் பார்த்து ‘இந்த எலும்புதான்டா நம்மையெல்லாம் உட்கார வச்சு எதிர் காற்றில் சைக்கிள் பெடல் மிதிச்ச எலும்பு.. ‘ என்றான்.

****

எங்களுடைய கதையைப் பற்றி அல்லது எங்களுடைய அப்பாவைப் பற்றி சேரனிடம் யார் சொன்னார்கள் ? வாழ்க சேரன்.

அன்புடன்

எஸ். பாபு

agribabu@rediffmail.com

Series Navigation