செக்கும் சிவலிங்கமும்..

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

பத்ரிநாத்


கண்ணிகி சிலை விசயத்தில் கலைஞருக்கு மனக் கசப்பு, கெளரவப் பிரச்சனை என்று மதிப்பிற்குரிய சகோதரி ஜோதிர்லதா கிரிஜா எந்த கோணத்தில் சொல்கிறார் என்பது தெரியவில்லை. கலைஞரின் மன வருத்தம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பைப் பற்றித்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் ஜெக்கும் கலைஞருக்கும் கோபம் என்பதை ஒன்றாகப் பார்க்க முடியாது. ஜெக்கு ஒரு விசயத்தில் இருக்கும் விருப்பு வெறுப்பு கலைஞருக்கும் அதே கோணத்தில்தான் இருக்கும் என்று நி¨ப்பதே தவறு. பொதுவாக கலைஞர் தன்னுடைய கவலை கோபம் என்பதே ஒர் இனத்தின் பண்பாடு மொழி சார்ந்ததுதான் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த விசயத்திலும் அதுதான் பிரதானம் என்பதை ஜோ.கி புரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணகிக்கு சிலை ஏன் தேவையில்லை என்று கேட்கிறோம். பிறப்பால் மட்டுமே ஒருவன் உயர்ந்தவன் இன்னொருவன் தாழ்ந்தவன் என்று நம்புவது மட்டுமல்ல அதை பிரச்சாரம் செய்யும் சனாதனிகளுக்குச் சிலைகள் இருக்கலாம், ஜோ.கியின் வாதப்படி ஒரு சதாரண முட்டாள் பெண்ணிற்குச் சிலை கூடாதா.. ஆம் அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை நல்லவர்கள் மெளனமாக (அல்லது முட்டாளாக) இருப்பதால்தான் பேய்கள் நாட்டில் சுதந்திரமாக நடமாட முடிகிறது. இறுதியில் முட்டாளுக்கும் கோபம் வந்தால் என்ன ஆகும் என்பது தெரிந்ததா இல்லையா..?

சகோதரி ஒரு விசயத்தைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.. அது.., இராமாயண மகாபாரதத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் அடிப்படையில் இன வேறுபாடு இருக்கிறது. இரண்டும் ஒன்று அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் இன்னாள் முதல்வருக்கும் முன்னாள் முதல்வருக்கும் உள்ள நுட்பமான வேறுபாடு. சுப்பிரமணிய பாரதிக்கும் சுப்பிரமணிய சாமிக்கும் உள்ள வேறுபாட்டைப் போன்றது.

கண்ணகி ஆணாதிக்கம் போன்ற சொற்றொடர்களைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்றும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். திருக்குறளில் ஆணாதிக்கம் என்று சிலர் கூறத் தொடங்கியதற்குச் சமம். காரல் மார்க்ஸ் ஏகாதிபத்தியத்தைப் பற்றி சொல்லவில்லை அதனால் அவருக்கு எதுவும் தெரியவில்லை என்று சொன்னால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட கூற்று இது.

ஒருவர் வாழ்ந்த காலம் அப்போதைய நிலைமை போன்றவற்றையும், மொழி பண்பாடு மக்கள் பற்றியும் தெரிந்து கொண்டு ஒரு விசயத்தை எதிர்த்தால் நன்மை பயக்கும்

பத்ரிநாத்
prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்