சூபி இசை – இதயத்திலிருந்து ஒரு செய்தி

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

ஹெச்.ஜி.ரசூல்


1. இஸ்லாமிய இசைக்கு சமய வாழ்வின் பின்னணி உண்டு. பொதுவாழ்வின் கூட்டு வழிபாடுகளிலும், தனிமனித உணர்வு நிலைகளிலும் இதன் இயக்கத்தை உணரலாம். அரேபியா, மத்திய கிழக்கு நாடுகள், வட ஆப்பிரிக்கா, எகிப்து ஈரான் மத்திய ஆசியா, பாகிஸ்தான், வடஇந்தியா என பரவிக்கிடக்கும் நிலப்பரப்பின் எல்லைக்குள்ளும், வெளியேயும் இதன் செல்வாக்கு நீண்டுள்ளது. ஒவ்வொரு நாட்டின் கலாச்சார சூழலை உள்வாங்கியவாறு இந்த இசைமரபு பன்முகத் தோற்றங்களைக் கொண்டுள்ளது. இந்தோனேஷியா, மலேஷியா, தெற்கு பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலும் இஸ்லாமிய இசைமரபின் மாறுபட்ட தடயங்களை கண்டு கொள்ள முடியும்.
அரபு, பாரசீக மற்றும் வடஇந்திய செவ்வியல் இசை மரபுகள் இஸ்லாமிய பூர்வீக இசை மரபின் மிக முக்கிய கூட்டு வடிவங்களாக திகழ்கின்றன. அரபு முஸ்லிம் கலீபாக்களின் ஆட்சிக்காலத்திலேயே நிகழ்ந்த வர்த்தக தொடர்புகளோடு பல நாடுகளிலும் இசையின் வழியாக சூபிகளும், முஸ்லிம் மறைஞானிகளும் தொடர்புகளை பெருக்கிக் கொண்டுள்ளனர்.
இஸ்லாமியர்களின் இசைத் தொடர்பு அன்றாட சமய வழிபாடுகளின் பல நிலைகளிலும் வெளிப்படுவதை கவனிக்கலாம். தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் ‘அதான்’ என்னும் பாங்கு சப்தம் குரலின் வழி இவை வடிவத்தில் சொல்லப்படுகிறது. ஒருநாளின் ஐந்து வேளை தொழுகையிலும் இமாமின் வழியாக உச்சரிக்கப்படும் குர்ஆன் ஆயத்துக்களும் பாத்திகாசூரா, துணை சூராக்களும் இவ்வகை இசை வடிவத்தையே உள்வாங்கியுள்ளன. இது தவிர பிற சூழல்களில் மாறுபட்ட ராகங்களில் திருக்குர்ஆனை ஓதுதல் நிகழ்கிறது.
குர்ஆன் தொகுக்கப்பட்ட காலத்தில் பல வட்டார வழக்குகளில் இருந்தவற்றை குறைஷி மொழிப்படி பேணிட கலிபா உஸ்மான் ஆணையிட்டதும், அப்போது ஏழு பிரபலமான ராகங்களிலான ஓதல் முறைகள் இருந்ததாகவும் புகாரி ஹதீஸின் ஒரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது. திருக்குர்ஆனை மனப்பாடம் செய்து அழகிய ராகங்களில் விதவிதமாக ஓதும் திறனுள்ள ஆலிம்களை மதரசாக்கள் என்னும் இஸ்லாமிய மதவழி கல்வி நிறுவனங்கள் உருவாக்கித் தருகின்றன. இவாகள் குறிப்பாக காரீக்கள் என்றழைக்கப்படுகின்றனர். ரம்சான் மாத இரவுத் தொழுகை தராவீஹில் இருபத்தேழு நாட்களுக்குள் திருக்குர்ஆனின் முப்பது ஜுசுவையும் ராகமாக ஓதி முடிக்கும் வழக்கமும் தமிழகத்தில் நிலவி வருகிறது. உலக அளவில் பிரபலமடைந்த ஏறத்தாழ 271 திருக்குர்ஆன் ஓதல் முறைக்குரல்கள் ஒலி வடிவில் அண்மைக்காலத்தில் தொகுக்கப்பட்டும் வெளிவந்துள்ளன.
2. சூபிகளின் ஞான வழிபாட்டு நிலைகளிலும் இத்தகையதொரு குரல்வழி இசைமரபு நிகழ்த்தப்படுகிறது. திக்ர் மஜ்லிஸ் அல்லது ஸிக்ர் என்பதாக இது அழைக்கப்படுகிறது. இதுவும் கூட்டு வழிபாட்டு வடிவத்தையும், சுயதியான வடிவத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சூபி மறைஞான இசைமரபின் வாஸிபா, ஸிக்ர், உள்ளிட்ட வடிவங்களும் வெவ்வேறு தொடர்புடைய இசை அடையாளங்களாக உருமாறியுள்ளன.
தெற்கு ஆசிய முஸ்லிம்களின் மத்தியில் திக்ர் ஓதுதல் இறைத் தேடலை உருவாக்கும் நிகழ்வாக வடிவம் பெற்றுள்ளது. துருக்கி பேரரசு காலத்தில் நிகழ்வுற்ற புனித மிகு இசைக்கு (mehfil-e-sama) சாமாவின் ஒன்று திரட்டுதல் என்பதாக அழைக்கப்பட்டது. இந்த இசைவடிவங்கள் இறை மற்றும் நபிவாழ்த்துப் (ilahi and Nefe) பாடல் பகுதிகளை கொண்டிருந்தவையாகும். பாரசீக இசை மரபின் மூல ஊற்றாக திகழ்ந்தவர்களில் மெளலானா ரூமிக்கு முதன்மைப் பங்குண்டு. எட்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாகி பதினொன்றாம் நூற்றாண்டின் சாமா இசை மரபு வடிவம் பாரசீகத்திலிருநூது துருக்கி, உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் இந்திய துணை கண்டங்களில் பரவியது. மெளலானா ரூமியின் மெளலவியா தரீகா மத்திய ஆசியாவில் இதனைப் பரப்பியது. மேற்குலகிலும், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் மெளலவி தரீகானவைச் சார்ந்த சூபிகள் மனதை எளிதில் ஈர்க்கும் விதத்தில், இசை வடிவ நடன அசைவுகளை நிகழ்த்துபவர்களாக வெளியிட்டுள்ளனர்.
3. இஸ்லாமிய மக்கள் இசை வடிவங்களில் மெளலிது இசை நபிகள் நாயகத்தின் பிறப்பை ஒட்டி பல்வேறு வட்டாரங்களில், பல்வித ராகங்களில் பாடப்படும் பாடல்களின் வடிவமாக உள்ளது. இது தவிர ஷியா முஸ்லிம்களின் மக்களிசை வடிவங்கள் கவனத்திற்கு உரியவையாகும். ஆஷ¤ரா இசை ,மாம் ஹ¤சைனும், அவர் தம் தோழர்களும் கொல்லப்பட்ட தியாக நினைவுகளை கிளப்பும் விதமாக முகரம் பண்டிகை தினத்தில் நிகழ்த்தப்படுகிறது. இதுபோன்ற தக் இசை (Ta’zieh music) ஈரானுக்கு வெளியே இமோம் ஹ¤சைனின் தியாகத்தை ஞாபகப்படுத்தும் விதத்தில் நிகழ்த்தப்படும் இசை நாடக வடிவ நிகழ்வாகும். எத்தியோப்பியா மக்கள் மத்தியில் பாடப்படும் மன்ஸ¤மா – அற ஒழுக்கப்பாடல்களும், முகம்மதுநபியின் புகழ்பாடும் அரபி ஹைமன் பாடல்களும் இவ்வகையில் கவனத்திற்கொளள் வேண்டியவையாகும்.
இஸ்லாமிய இசை வடிவக்கூறுகளாக நிலைப்பெற்றிருப்பவையில் மகாம் (maqam) தஸ்த்கா (Dasgah) ராகம் (Raga) முக்கியமானவையாகும்.
இசையில் குரல்வடிவத்தோடு இசைக்கருவிகளின் ஒலிகள் இணைதல் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டே வந்துள்ளன. பக்தி சமய மரபு பாடல்களில் மரபு வழி இசைக்கருவிகளின் சேர்க்கை மூன்று விதமாக நிகழ்கிறது. முதலில் தோல் கருவிகள், நரம்பு கருவிகள்.
துளைக்கருவிகள் உள்ளிட்ட பல வாத்தியங்களை குறிப்பிடலாம். நவீன காலை இசை வடிவத்தில் முஸ்லிம்களின் பயன்பாட்டில் ஹார்மோனியம் மிக முக்கியமாக உள்ளது.
4. இஸ்லாமிய அறிஞர்களின் சலபிகள், வகாபிகள், தேவ்பந்த்கள் எனப்பலரும் இஸ்லாத்தில் இசையை தடுக்கப்பட்ட ஒன்றாக முன்வைக்கின்றனர். திருக்கு¡ஆனிலும், ஹதீஸ்களிலும் இதற்கான அனுமதியைக் காணமுடியாது என்பதாக விவாதிக்கின்றனர்.
இஸ்லாத்தில் இசை தடுக்கப்பட்ட ஒரு விஸயம் என்பதாகக் கருதிக் கொண்டிருந்த வேளையில் இமாம் கஸ்ஸாலி இசை குறித்த ஆழ்ந்த சிந்தனைகளை வெளிப்படுத்தினார். இஹ்யாவு உலூமித்தீன்நூலின் கிதாபுஸ்ஸமா பகுதியில் இமாம் கஸ்ஸாலி இது குறித்து தெளிவுபடுத்துகிறார். இஸ்லாமிய வரலாற்றின் துவக்க காலங்களில் திருக்குர்ஆன் ஓதுவது காதில் விழாமல் தடுப்பதற்காக முரசுகள் கொட்டப்பட்டன. மதுவில் மயங்கிக் கிடந்தவர்கள் நரம்புக் கருவிகளின் இசையை போதைக்கு பயன்படுத்தினார்கள். ஆனால் இந்த நோக்கங்கள் அற்ற நிலையில் இசை மரபை பயன்படுத்த வழிகாட்டுதல்கள் சொல்லப்பட்டது.
குரல், நாதம், பாடல் உணர்ச்சி என்கிற நான்கு பகுதிகளின் சேர்க்கையாக இசை உருவாகிறது. குயில் உள்ளிட்ட பறவை மற்றும் உயிரினங்கள் எழுப்பும் ஓசையும் மனிதக் குரலின் ஓசையும் குரலின் அடையாளங்களாக வெளிப்படுகின்றன. இது உணர்ச்சி சார்ந்தும் மொழி வழி அர்த்தம் சார்ந்தும் இயங்குகின்றன. புல்லாங்குழல், யாழ், மத்தளம் என கருவிகள் துணையோடு எழுப்பப்படும் ஓசை நாதமாக வெளிப்படுகிறது. தொட்டிலில் அழும் குழந்தை தாயின் தாலாட்டைக் கேட்டு கண்ணுறங்குவது இசை மனரீதியான மாற்றத்தை உருவாக்குகிறது என்பதற்கான சாட்சியாகும். குழந்தையிடம் அழுகை துக்கமாகும் விசித்திரம் நிகழ்கிறது.
பாலைவனவாழ்வில் ஒட்டகமோட்டிகளின் பாடல்கள், க·பாவை தரிசிக்க நடைபயணமாய் செல்கையில், போர்க்காலங்களில் எதிரிகளை தாக்குகையில் துக்கங்கள், சந்தோஷங்களை வெளிப்படுத்துகையில் இசையின் மீது மீளாக்காதல் கொண்ட வஜ்த் நிலையில் பேரின்ப காட்சியான முஸாதபா நிலையில் என வாழ்வின் விடுபடா சுவடுகளாக இஸ்லாமிய இசை மரபு மாறியுள்ளது. இவ்வகையில் அல்ஹிந்தி (Al-kindi) அல்பராபி (Al-Farabi) அவிசீனா (Avicenna) மற்றும் சபி அல்தீன் (safial din) இசைக் குறித்த கோட்பாடுகளை உருவாக்கி தந்துள்ளனர்.
தாவூத் நபியின் குரலைக் கேட்க பறவைக் கூட்டமெல்லாம் அவரின் தோள்களிலும் தலையிலும் உட்கார்ந்திருந்தன என்பதையும், உயிரினங்கள் மனிதர்கள் ஜின் கூட்டம், தாவூத் நபியின் குரலில் உறைந்து போயிருந்ததான வாய்மொழி வரலாறுகளையும், யூனானி மொழியில் வழங்கப்பட்ட சபூர்வேதம் கூட இசை வடிவத்தில் அமைந்திருப்பதையும் இவ்வேளையில் கவனத்தில் கொள்ளலாம்.
5. இந்திய செவ்வியல் இசை கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை மரபுகளாக உருவாகியுள்ளன. வேதகால சமய இசை மரபின் செவ்வியல் வடிவமாக தெனனிந்தியாவில் பேணப்படும் கர்நாடக சங்கீதம் சமஸ்கிருத பின்னணியை கொண்டது. யசூர், சாம, அதர்வண வேதங்களில் சாம வேதம் முற்றிலுமூ – இசை வடிவங்களைச் கொண்டதாகும். கர்நாடக இசை ராகம், தாளம் என்கிற இருபகுதிகளின் இணைப்பின் நிகழ்த்திக் காட்டப்படுகிறது.
கர்நாடக இசையில் ராகம் என்பதில் சுருதி, ஸ்வரங்கள் (ஸட்ஜம், ரிஸபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தய்வதம், நிஸாபம்) – ஸரிகமபதஸ – ஏழு வகை மற்றும் ஒவ்வொரு ராகத்தின் துவக்கத்தைச் சொல்லும் ஆரோகணம் – அவரோகணம் உள்ளிட்ட பகுதிகள் அடிப்படையாகும். சம்பூரண ராகங்களின் எழுபத்திரண்டு வகை மேளகர்த்தா ராகங்கள் முக்கியமானவையாகும். இந்த ராகங்கள் உச்சஸ்தாயி, நடுஸ்தாயி அடிப்படையில் ஆறுவகைகளாக பகுக்கப்பட்டுள்ளன. இதற்கு சக்ராஸ் (chakras) என்று பெயர். மேலும் இந்த ராகங்களை தாய் ராகங்கள் எனப்படும் ஜனக ராகங்கள் (Janakaragas) மற்றும் குழந்தை ராகங்கள் எனப்படும் ஜன்யராகங்கள் (Janyaragas) என பகுத்துப் பார்ப்பதும் உண்டு.
தாளவகைகள் லகு (laghu) த்ருதம் (dhurtam) அனுதருதம் (Anudhrutam) என மூன்று முறைமைகளைக் கொண்டுள்ளது. இத்தாளம் ஏழு வகைகளாக வடிவம் பெற்றுள்ளன. துருவ தாளம் (Dhruvatalam) மத்யதாளம் (matyatalam) ரூபதாளம் (Rupakathalam) ஜம்பகதாளம் Thampathalam) திரிபுத தாளம் (Triputatalam) ஆதி தாளம், ஏக தாளம் என இவை உருவம் பெறுகின்றன. ஐந்து ஜதி கலம், ஏழு வகை தாளத்தோடு இணைந்து புதிதாய் முப்பத்தைந்து தாள வகைகளை உருவாக்கும் சாத்தியமும் இதில் உள்ளது.
கர்நாடக இசைப்பாடல் கீர்த்தனை, பல்லவி, அனுபல்லவி, சரணம் என்கிற முப்பகுதிகளை கொண்டது. ஒரு ராகத்தின் முழுமை வடிவமாக வர்ணம் அமையப்பறுகிறது. இத்தோடு கீதம் மற்றும் ஸ்வரஜதியையும் இணைத்துப் பார்க்கலாம்.
கர்நாடக இசையின் வெளிப்பாட்டு முறைகளாக ராக ஆலாபனை, நிரவல், கல்பனாஸ்வரம், தானம், பல்லவி, துக்கடா மங்களம் என பகுதிகள் அமையப்பெற்றுள்ளன. கர்நாடக குரலிசையை முழுமைப்படும் விதத்திலான இசைக் கருவிகளின் சேர்க்கை உருவாகிறது. தம்பூராவின் சுருதியும், வயலின் அல்லது வீணையின் நிரவலும் மிருதங்கம், கடம், கஞ்சீரா, மற்றும் மோர்சிங்கின் தாளவகைப்பட்ட ஓசையும் இணைந்ததொரு வெளிப்பாடாகவும் அமைகிறது.
தென்னிந்திய இசை மரபின் முன்னோடியாக கன்னடத்திலும், சமஸ்கிருதத்திலும் மிக அதிகமான கீர்த்தனைகளை உருவாக்கியவராக புரந்தர தாசர் (1480-1564) கருதப்படுகிறார். இவரின் அடியொற்றியே தியாகராஜர் (1759-1827) கர்நாடக இசையின் மும்மூர்த்தியாக பேசப்படுகின்றனர். தெலுங்கில் உருவான தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் முத்துசாமி தீட்சதரின் நவகிரககீர்த்தனைகள் இவற்றில் புகழ் பெற்றவைகளாகும்.
இஸ்லாமியர்களின் வருகையை ஒட்டி 12-13ம் நூற்றாண்டில் குறிப்பாக டில்லி சுல்தான்களின் ஆட்சி காலம் மற்றும் முகலாய பேரரசு காலத்தில் இந்திய இசை மரபில் அரேபிய இசை வடிவத்தின் தாக்கம் ஏற்பட்டதன் விளைவாக கர்நாடக, மற்றும் அரபு இசை மரபின் சேர்ந்துருவாக்க இந்துஸ்தானி செவ்வியல் இசை மரபு உருவாகிறது. சிஸ்தியா தரீகா இந்த இசை மரபுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. இந்தியாவிற்கு வெளியே பரவலாக்கம் செய்யப்பட்ட இந்துஸ்தானி இசை வடிவம் வெகுஜன மக்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் இசை வடிவமாக மாறியுள்ளது. இவ்விசையை பாடும் இந்து மதக்கலைஞர்கள் பண்டிட்டுகள் எனவும் இஸ்லாமியர்கள் உஸ்தாதுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இதன் தற்போதைய வடிவ உருவாக்கங்களை இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் நாடுகளின் இசைக்கலைஞர்களால் பேணப்படுவதை குறிப்பிடல’ம். இது கவ்வாலி, கஸல் என்பதான காவிய இசை வடிவங்களுக்கு வித்திட்டது. 13-ம் நூற்றாண்டின் அமீர் குஸ்ரு வேதகால இசையிலிருந்து அடிப்படைகளை உள்வாங்கியும், பாரசீக இசைமரபின் நுட்பங்களை ஒன்றிணைத்தும் கவாலி இந்துஸ்தானி இசைவடிவத்தையும், சிதார் நரம்பு இசைக்கருவியின் பயன்பாட்டையும் ஒன்றுபடுத்தினார். பாரசீக இசைமரபை தெற்காசிய இசை மரபுடன் இணைத்தொரு புதுவடிவமாய் கவாலி இசைவடிவம் அறிமுகமானது. உருது, பஞ்சாபி, சிந்தி மொழி வழியாக இந்தப் பயணம் நிகழ்ந்தது.
மொகலாய பேரரசுக்காலத்தில் குறிப்பாக ஜலாலுத்தீன் அக்பர் ஆட்சிக் காலத்தில் இசையும் நடனமும் முக்கியத்துவம் பெற்றன. அக்பரின் அரசவையில் இருந்து புகழ்பெற்ற இசைக்கலைஞன் தன்சேன் நிகழ்த்திய ராக ஆலாபனைகள் வரலாற்றின் குறிப்புகளின் கவனிப்பிற்கு¡ய இடம் பெற்றுள்ளது. இருபதாம் நூற்றாண்டில் இந்து மகாராஜாக்கள் முஸ்லிம் நவாவுகள் வீழ்ச்சிக்கு பின்னரும் ஜனநாயக இசை வடிவமாக இந்துஸ்தானி இசை உருமாறியுள்ளது.
இந்துஸ்தானி குரலிசையைத் தாண்டி ராகங்களை மீட்டும் இசையாக சிதார், சாரட் சாரங்கி தாளவகைக்கு தபேலா புல்லாங்குழலையொத்த பன்சுரி என இசைசேர்க்கை வடிவமெடுத்துள்ளன. இந்துஸ்தானி செவ்வியல் இசைமரபை துலங்கவைக்கும் வடிவங்களாக துருபத், தரனா, தும்ரி பஜன், கஸல் உள்ளிட்டவை விளங்குகின்றன. இந்துஸ்தானி ராக அடிப்படையின் கூறுகளாக ஏழு சர்கம்கள் (ஸரிகமபதநிஸ) அமைகின்றன. இதுவே கர்நாடக இசையில் ஏழு ஸ்வரங்களாகும்.
6. பாகிஸ்தானிலும், வட இந்தியாவிலும் புகழ் பெற்ற இசைவடிவங்களின் ஒன்று கவாலி (qawwali) என அழைகூகப்படுகிறது. ஒரு மரபு வழி கவாலி பாடல் என்பது நான்கு பகுதிகளை கொண்டுள்ளது. ஹ்மது (hamd) அல்லாஹ்வின் புகழ் சொல்லும் துதி, நாட் (Naat) முகம்மது நபிகளின் புகழ் சொல்லுதல் மன்குவ பட்ஸ் (marqabats) சூபி மூலவர்களை போற்றுதல் இசை ஞானிகளில் கஸல் (Ghazals) ஆன்மீக இறைக்காதலை வெளிப்படுத்துதல் என்பதாக இவை அமைந்துள்ளன.
ஷியா முஸ்லிம்கள் இமாம் அலியின் புகழ் சொல்லுதலையும், மர்சியா (marsiya) என்னும் கர்பலா போர்க்களத்தில் உயிர் நீத்த தியாகிகளை நினைவு கூர்தலை இவ்விசை வடிவத்தில் கூடுதலாக இணைத்திருப்பதை கவனத்தில் கொள்ளலாம்.
கவாலி மக்கள் மத்தியில் புகழ்பெற்ற பிரபல இசைவடிவமாக உருவாகியுள்ளது. தற்போதைய நிலையில் மரபு வழி கவாலியின் இசைப்பகுதிகளில் ஹம்துவில் துவங்கி கஸலுக்கு நேரடியாக வந்துவிடும் பாணியாக நிலைபெற்றுள்ளது. இது ஆன்மீக இசை என்ற எல்லையைத் தாண்டி, ஒரு கலாச்சாரத்தின் பிரபல இசை வடிவமாக மாறுபாடடைந்துள்ளதையும் குறிப்பிடவேண்டும்.
நுஸ்ரத் பத் அலிகான் (Nesrat Faten Alikhan – 1948/1997) அபிதாபர்வீன் சப்ரீ சகோதரர்கள் (sabri Brothers) வடலி சகோதராகள் (Waddali Brothers) ஷாஹ்ரம் நஸ்ரி (sahram Nazeri) ¡ஷ்வான் – முஸாம் கவாலி குழு (Rizwan – muazzam qawwali Group) உள்ளிட்ட இசைக்கலைகளின் சமகால இசைப் பங்களிப்பு இதில் முக்கியமானதாகும்.
பாரசீக கவிதை வடிவத்திலிருந்து உருவான கஸல் வடஇந்திய உருது கவிதையின் வடிவத்தில் தீவிர செல்வாக்கை செலுத்தியது. மிர்சாகாலிப், மிர்தாகுமிர் செளதா கவிஞர்களிடம் இதன் பிரதிபலிப்பை காணலாம். இது மக்கள் மத்தியிலான பிரபல இசைவடிவமாக உருவாகினாலும் ஈரான், மத்திய ஆசியா, துருக்கி, இந்தியா பாகிஸ்தான் நிலப்பகுதிகளில் நாட்டுப்புற இசை வடிவம், வெகுஜன இசை வடிவம், செவ்வியல் இசை வடிவம் என பன்மைத்தன்மைமிக்க அடையாளங்களை கொண்டிருந்தன. உஸ்தாத் அமனாத் அலிகான், மெகதிஹஸன், பரீதா கானம், (Farida Khanum) இக்பால் பானோ (Iqbal Nano) மற்றும் குலாம்அலி உள்ளிட்டோர் கஸல் இசை வடிவத்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களாக திகழ்கின்றனர்.
சூபி இசை மரபின் தொடர்ச்சியாக இந்திய இசை மரபால் மேதையாக விளங்கிய ஹஸரத் இனயத்கானை (1882-1927) குறிப்பிடலாம். கிழக்குலகையும், மேற்குலகையும் இசை மரபால் ஒன்றுபடுத்தி ஐரோப்பிய நாடுகளிலும் இவரது இசைப்பயணம் நிகழ்ந்துள்ளது. அரபு, பார்சி, சமஸ்கிருத மொழிப் புலமையும், இந்திய வகைப்பட்ட இசையில் தேர்ச்சியும் சூபிச தத்துவ நிலைப்பாட்டில் ஆழ்ந்த ஈடுபாடும் ஒருங்கே பெற்றவர். அஜ்மீரின் குவாஜா முகீனுதீன் தோற்றுவித்த சிஸ்திதரீகாவின் மற்றுமொரு சூபியான நிசாமுத்தீன் அவுலியாவின் வழித்தோன்றலாக ஹஸரத் இனயத்கான் அடையாளம் பெறுகிறார்.
1910களில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகளிடையே பயணம் செய்து அங்குள்ள பல்கலைக் கழகங்களில் இந்திய வகைப்பட்ட இசை குறித்த ஆய்வுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். சூபியிசம் குறித்தும் அவர் படைத்துள்ள நூல்கள் முக்கியத்துவமிக்கவை. உலக அளவிலான சூபி இயக்கத்திற்கான தலைமையகத்தை 1920களில் ஜெனிவாவில் உருவாக்கினார். தற்போது இது பாரிசுக்கு அருகாமையில் அவரது மகன் விலாயத் இனயத்கானால் வழி நடத்தப்படுகிறது.
ஹசரத் இனயத்கானின் ஏறத்தாழ 31 செவ்வியல் இந்திய இசைமரபு சூபிபாடல்கள் ஒலிவடிவில் வெளிவந்துள்ளன. ஹஸரத் இனயத்கானின் வாரிசான ஹீதாயத் இனயத்கானின் ”இதயத்திலிருந்து ஒரு செய்தி” (message from the Heart) ஆன்மீக தியான இசை வாஸிபா, ஸிக்ர் உள்ளிட்ட சூபி இசை ஒலித்தொகுப்புகள் சூபி இசைமரபை திரும்பவும் உயிர்ப்பித்தெழச் செய்கின்றன.
சூபிகள் ‘சாதேசர்மத்’ என்ற சொல்லாடலின் வழியாக அரூப ஒலியை உணர முயல்கின்றனர். ஹிராமலைக்குகையில் முகமது நபிகள் ஜிப்ரயீல் அலைகிஸ்லாம் மூலமாக கேட்ட இக்ரஹ் – ஓதுவீராக இறைவசனமும் தூர்சினா மலைமுகட்டில் மூசா நபி இறையோடு பேசியதும் இவ்வகையில் ஞாபகப்படுத்தலாம். உடல், மனம், ஆத்மா என்கிற நிலையில் புலனுணர் நிலை கடந்த சஞ்சரிப்பின் தடங்களாக ஹ¤வின் ஒலி தாவரங்கள், பறவைகள், விலங்கினங்கள், கடலினங்கள் என பிரபஞ்சம் தழுவி ரகசியமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. மெய்மைத் தேடிய பயணமாய் சூபிகள் இதனை புரிந்து கொள்கின்றனர். கொண்டதாளகதி சதுரா, மூன்றடிகளைக் கொண்ட திஸ்ரா, ஐந்தடிகளால் ஆன காந்தா, ஏழு அடிகளைக் கொண்ட மிஸ்ரம், ஒன்பதடிகளால் ஆன சங்கரியான் என்பதாக தாளலயங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாளலயத்தின் பின்னணி சார்ந்தே உடல் நடன அசைவுகளும் உருவாகின்றன. பறவையினங்களும், விலங்கினங்களும் பிற உயிரினங்களும் தங்களின் பேரானந்த வெளிப்பாட்டை மெய்மறந்து நடனத்தின் வழி வெளிப்படுத்துகின்றன. தோகை விரித்தாடும் மயிலின் நடனம், மகுடிக்கு ஆடும் பாம்பின் நடனம் இதனை உய்த்துணரலாம்.
இதன் நுட்பமான மற்றொரு வெளிப்பாடுதான் மெளலானா ஜலாலுதீன் ரூமியின் மெளலவியா தரிகாவினர் பின்பற்றும் தியானச் சுழல் நடனமாகும். (sufiwhirling) பாதங்கள், கால்கள், தோள்கள், உள்ளங்கைகள், கண்கள் என உடலின் பகுதிகள் தனித்தனி முத்திரைகளோடு முதல் பதினைந்து நிமிடங்களுக்கு மெதுவாக புதுவகை உடல்மொழியைப் பேசுகின்றன. இறுதி பதினைந்து நிமிடங்களில் விரைவு சுழற்சியாக இந்த ஞான நடனம் முற்று பெறுகிறது.
7. இந்திய நாட்டுபுற இசைவடிவம் ஒவ்வொரு வட்டாரம் சார்ந்து மக்களிசையாகவும் நடனமுறைமைகளை உள்ளடக்கியதாகவும் வெளிப்படுகின்றன. பஞ்சாபி மக்களின் பங்காரா நடன இசை, மகாராஷ்டிராவின் லாவணி இசை, குஜராத் மக்களின் கலாச்சார வடிவ டாண்டியா (Dandiya) இசை, நவராத்திரி விழாவில் இசைக்கு கர்பா (Garba) இசை, ராஜஸ்தானியின் லங்காஸ் (Langas) ஸபீரா (Sapera) போபா (bhopa) ஜோகி (Jogi) இசை, வங்காளத்தின் தாந்திரீக மரபு, சூபி மரபு இணைந்த பவுல்களின் (Bauls) இசை எனப் பலப்பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. இந்த வரிசையில் இடம்பெறும் கேரள முஸ்லிம் மக்களின் மலபாரின் மாப்பிள்ளை பாடல்கள் மக்களது வடிவமாக நடனமும் இசையும் கலந்த வடிவமாக இன்றும் நிலவி வருகிறது.
தமிழக நாட்டார் இசைப்பாடல்களோ நிலம் சார்ந்த இசைக்கூறுகளையும் வடிவங்களையும், ஒலிக்குறிப்புகளையும் கொண்டுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என மலைவெளி, காடுவெளி, வயல்வெளி, கடல்வெளி சார்ந்த மண்ணில் அடையாளங்கள் இசையில் வெளிப்படுகின்றன. மலைப்பகுதியில் லாலி, லாலி காட்டுப் பகுதியில் னன்னானே. னானே னன்னே வயல்வெளியில் தன்னானே னானே கடலோரம் ஏலோலோ, ஜலசா என்பதான ஒலிக்குறிப்புகளும் நாட்டார் இசையில் வெளிப்படுகின்றன. நாட்டார் இசையின் பிரதான இசை வடிவங்களாக தெம்மாங்கு, சிந்துவைக் குறிப்பிட வேண்டும்.
தெம்மாங்கு மேலும் சில உட்பிரிவுகளாகி ஒத்தையடி தெம்மாங்கு, நாலடித் தொம்மாங்கு இழுவைத் தெம்மாங்கு, தெக்கத்தி தொம்மாங்கெனவும் வடிவம் பெற்றுள்ளன. சிந்து வகையினம் நொண்டிச் சிந்து, வழி நடைச் சிந்து, காவடிச் சிந்து என முப்பெரும் வடிவங்களாக உள்ளன. உறுமி, துந்தனா ஆட்டக்கலைகருவிகள், நாயனம், கத்துக்குழாய், குழலிசைக் கருவிகள், நையாண்டிமேளம், தவுல் என தாள இசைக்கருவிகளின் பயன்பாடும் தொகையறா, பின்பாட்டு என பாடல் முறை அமைப்பும் இவற்றில் இணைந்திருக்கின்றன.
இந்த வகையில் தமிழ் முஸ்லிம்களின் இசை மரபுகளையும் கவனப்படுத்தமுடியும். அரபு வகைப்பட்ட கூட்டு வாழ்வியல் முறை சார்ந்த மெளலூதுகள், மாப்பிள்ளை பைத்துகள், பதங்கள் உள்ளிட்டவை இவற்றில் முக்கியமானவையாகும். தாலாட்டு, ஊஞ்சல்பாட்டு, கப்பல்பாட்டு ஆனந்தக்களிப்பு, கும்மி, லாவணி, சிந்து என்பதான பாடல் வகையினங்கள் உண்டு. கிஸ்ஸா (எடுத்துரைத்தல்) நாமா (வரலாறு) மசாலா, படைப்போர் உள்ளிட்ட கதைப்பாடல் வடிவங்கள், நாடக வகையினங்கள என பரந்துபட்டதொரு இசைசார்ந்த உலகம் தமிழ் முஸ்லிம்களிடம் புதையுண்டு கிடக்கிறது. இவ்வாறே செவ்வியல் இசை வடிவங்களிலும் ஆழ்ந்த புலமைமிக்க படைப்பாளிகளையும் காணலாம். முன்பு பள்ளிவாசல்களில் பயன்படுத்தப்பட்ட பாங்கிற்கு முன்பு அடிக்கும் நகரா த·ப்சு என்னும் சலங்கைகள் கட்டாத சிறுபறை, (இதனை கொட்டு என்று சொல்வதுண்டு) தாயிரா என்னும் சலங்கைகள் கட்டிய சிறுபறை உள்ளிட்டவைகள் முஸ்லிம்கள் அதிகமும் பயன்படுத்தும் நாட்டுப்புற இசைக்கருவிகளாகும். இக்கலை வடிவத்தை அழியா காப்பாற்றுவதில் பக்கிர்களுக்கு முக்கிய பங்குண்டு.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம் போல 1892-களில் குலாம் காதிறு நாவலர் இசை நுணுக்கம் சார்ந்த இசை இலக்கண நூலொன்றை படைத்தளித்துள்ளார். செவ்வியல் இசை மரபின் தொடர்ச்சியை புதுக்கோட்டை அரசவைப்புலவராக இருந்த சோட்டுமியான், தலைமுறை வாரிசுகளான கெளஸ்மியான், தாவூதுமியான் மற்றும் டி.என்.காதர்பாட்சா, நாதஸ்வர கலைஞரான ஷேக் சின்ன மெளலானா, இசை மணி எம்.எம்.யூசுப், நாகூர்.இ.எம்.அனீபா, உசேன் பாகவதர், ஏ.ஆர்.ஷேக் முகம்மது, சாகுல் ஹமீது அண்மையில் வெளிவந்த முதல் தமிழ் சூபி பாடல் ஒலி இசைத்தொகுப்பான மஜ்லிஸ் வழி அறியப்பட்ட ராஜா முகம்மது என நீளவரிசைப்படுத்தலாம்.
8. மொழியின் அடிப்படை இயங்கு தளங்களை பிரதானப்படுத்துகிறது. ஒன்று ஒலித்தளம் மற்றொன்று உணர்தளம், ஒலித்தளத்திலிருந்து இசையின் துவக்கமும் உணர் தளத்திலிருந்து படைப்பிலக்கிய உருவாக்கமும் நிகழ்கிறது.
இசை இயலின் தனித்தனி இசைக் குறிப்புகளுக்கு அர்த்தம் எதுவும் இல்லை. வெறும் ஓசையாக இருக்கும் இவற்றின் பல குறிப்புகள் ஒன்றிணையும் போது இசை பிறக்கிறது.
மேற்கத்திய நவீன கால இசையின் உருவாக்கம் பாரம்பர்ய தோல், நரம்பு, துளைக் கருவிகளிலிருந்து மாறுபாடடைந்து நவீன தொழில் நுட்பக் கருவிகளின் வளர்ச்சியாகி மின்சாதன இசைக்கருவிகளாகவும் கிடார், பியானோ, ரிதம், சிந்தசைசர், கீபோர்டு என்பதான மாறுபட்ட வகையினங்களாகவும் உருவாகியுள்ளன.
17-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரஸ்கோபால்டி அதோல், 18-ம் நூற்றாண்டில் பாக் அதைத் தொடர்ந்து மோஸாட், பீத்தோவன், வாக்னர் உள்ளிட்ட இசை மேதைகளிடம் மேற்கத்திய இசை முழு வடிவத்தை பெற முனைந்தன. வாக்னரின் நாற்பரிமான படைப்பான த ரிங் இசை நாடகம் மிகவும் புகழ் பெற்றதாகும். இவ்வகையில் பியூக் (Fegue) சிம்பொனி சொனடா ரொண்டோ, டொக்காடா என்பதான இசை வடிவங்களும் கவனம் பெறுகின்றனர்.
ஐரோப்பியச் சூழலிலே மேற்கத்திய இசை வடிவங்களில் ஜாஸ் இசையைத் தொடர்ந்து மாறுபட்டு மிதக்கும் தன்மை இல்லாமல் போராடும் குணம் கொண்டதாக ரேப் இசை (Rap music) விளங்குகிறது. அமெரிக்காவில் வெள்ளை இனவெறி ஆதிக்கத்தால் நசுக்கப்பட்டுக் கிடக்கும் ஆப்ரிக்க கறுப்பின மக்கள் தங்களின் விடுதலைக்கான அடையாளமாக ரேப் இசையைப் பயன்படுத்துகின்றனர். எலிஜா முகமதுவால் வழி நடத்தப்பட்டு மால்கம் எக்ஸ் மற்றும் குத்துச் சண்டை வீரர் காஸியஸ் கிளே என்னும் முகமது அலியால் பிரபலப்படுத்தப்பட்ட இஸ்லாத்தின் தாயகம் (Nation of Islam) இயக்கமும் அதனை முன்னெடுத்துச் செல்லும் பாரகான் ரேப் இசை ”உலகின் குழந்தைகளை எல்லாம் உன்னிடம் அழைத்து வருகிறது” என்பதாக பிரகடனப்படுத்துவதைக் குறிப்பிடலாம்.
இஸ்லாமிய சமய அரசியல் அடையாளமும், ஆப்பிரிக்க மைய கறுப்பின விடுதலை உள்ளமும் கொண்ட முஸ்லிம் ரேப் இசைக்குழுக்கள், பப்ளிக் எனிமி, நேட்டிவ் டீம், ஸ்கின்னி பாய்ஸ் உள்ளிட்ட பல்வகைப்பட்டவையாய் இயங்குகின்றன. உலக அளவில் ஆப்கன், ஈராக், பாலஸ்தீனம், போஸ்னியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கமயப்படுத்தப்பட்ட உலக பன்னாட்டு ஏகாதிபத்தியம் ஆக்ரமிப்பு போரின் மூலம் முஸ்லிம்களை அழித்தொழிக்கிறது. இதற்கு எதிர்வனையாக ஜிகாத்ரேப் என்னும் வடிவிலான இசை ஆல்பம் மோசமான நிராகரிப்பாளர்கள் (Dirty Kuffars) என்ற பெயரில் வெளிவந்துள்ளது. ஈராக்கில் அப்பாவி மக்களை வெறி கொண்டு குண்டு வீசி கொன்ற அமெரிக்க ராணுவ படையின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிரான கோப உணர்வை இது பரப்பிச் சல்கிறது. ”ரொனால்டு ரீகன் ஒரு மோசமான நிராகரிப்பாளன் மிஸ்டர் டோனி பிளேயர் ஒரு மோசமான நிராகரிப்பாளன். ஒரே ஒரு மிஸ்டர் புஸ் மோசமான நிராகரிப்பாளன். தீயில் தூக்கி வீசுங்கள் அவர்களை” என்பதாக ஜிகாத்ரேப் இசையின் பாடல் வரிகள் ஒலிக்கின்றன.
9. இன்றைய தமிழ் சூழலில் ஒற்றைப்படுத்தப்பட்ட அரசியல், பொருளியல் கலாச்சாரச் சூழலில் அழிக்கப்படுகிற அல்லது ஓரம் கட்டப்படுகிற கலாச்சார அடையாளங்களை மையநீரோட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. செவ்வியல் இசை, திரை இசை என ஏதோ ஒன்றை மட்டும் மையப்படுத்தி அதுவே எல்லாவித இசை வடிவங்களுக்கு அடிப்படை என்கிற பார்வை நிலை பெற்றுள்ளது. இஸ்லாமிய சூழலிலோ இசையை விலக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்வதும் அல்லது ஷிர்க் வைக்காத இசை என்று பகுத்துப் பார்ப்பதும் சூபிகளை இஸ்லாமிய எல்லையிலிருந்து வெளியேற்றி காபிர்கள் என தீர்ப்பு வழங்குவதுமூ ஒரு இஸ்லாமிய அடிப்படைவாத மனோநிலையாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இவ்வேளையில் சூபி கவிஞர்களின் புதைக்கப்பட்டு கிடக்கிற இசை மரபை கண்டெடுத்து வெளிக்கொண்டு வருவதும் இஸ்லாமிய இசை அரசியல் குறித்த தெளிவினை உருவாக்க இடமளிக்கும்.
மாறுபட்ட அடையாளங்களை ஒன்றிணைக்கும் பன்மை இசை வடிவத்தை (Poly stylism) முதன்மைப்படுத்தும் பின் நவீன இசை பல்வித இசை மூலங்களிலிருந்து தேர்விடப்பட்ட எதிர்மறைப்பண்பு கொண்டதொரு சுயவிளக்கத் தன்மைமிக்க பகுதிகளை ஒன்றிணைப்பதாக விளங்குகிறது. உயர்தரப்பினருக்கான இசை, அடித்தள மக்களுக்கான இசை என தரப்படுத்தும் மரபு வழி சிந்தனையை எதிர்த்து கலகம் செய்து இந்த இரு வேறு எல்லைகளை உடைத்து ஒன்றுபடுத்த முயல்கிறது. பெரும்பான்மை மக்களுக்கான நுகர்விய கலைப்பண்டமாகவும் இது தன்னை வேறுபடுத்திக் காட்டிக்கொண்டிருக்கிறது. பின்நவீன இசை ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் குழுமத்தின் அடையாளமாகவும், அதன் உட்கலாச்சார வெளிப்பாடாகவும் முன்வைக்கப்படுகிறது. இந்த வகையில் முஸ்லிம் குழுமத்தின் உட்பகுதியான சூபி கலாச்சார தமிழ் அடையாளத்தை பன்மை இசை வடிவ நுட்பங்களோடு அரபு முஸ்லிம் இசை கர்நாடக, இந்துஸ்தானி, நாட்டார் இசை என வெகுஜன மக்களின் மத்தியில் மறுஉருவாக்கம் செய்வதும் மிக முக்கியமான எதிர்கொள்ளலை வேண்டி நிற்கிறது. இசை அறிஞர் நா.மம்மது, கீற்று வெளியீட்டக முஸ்தபா குழுமம் இணைந்து வெளியிட்டிருக்கும் சூபி ஞானி பீர்முகம்மது சாகிபுவின் சில பாடல் பகுதிகள் மஜ்லிஸ் என்ற பெயரின் தமிழின் முதல் சூபி இசைப்பாடல் ஒலித்தொகுப்பாகியுள்ளது. இதிலிருந்து கூட புதிய பயணத்தை துவக்கலாம்.
தமிழ் சூபி ஞானிகளான தக்கலை பீர் முகம்மது சாகிபு, ஞானியார் சாகிபு, குணங்குடி மஸ்தானி சாகிபு, ஜவ்வாது புலவர் அருணகிரிநாதருக்கு இணையாக இசைவடிவில் திருப்புகழ் படைத்த காசிம்புலவர், வண்ணப் பரிமளப்புலவர், காளை அசனலிப்புலவர் ரசூல்பீவி, கச்சிப்பிள்ளையம்மாள் உள்ளிட்ட பலப்பல இசைவாணர்களின் பா வடிவங்களும், கீர்த்தனைகளும், ஞானக்குறம், ஆனந்தக்களிப்பு, பூவடிச் சிந்து உள்ளிட்ட எண்ணற்ற நாட்டுப்புற பாடல் வடிவங்களும் இவற்றில் முக்கியத்துவம் பெறுகின்றன. வரிகளாய் வார்த்தைகளாய் வாழும் சூபி இசைமரபின் அரியபொக்கிஷங்களான இவை ஒலியாய், இசையாய் மறுவடிவம் பெறும் போது நிகழும் அற்புதங்களை மனதால் மட்டுமே உணரமுடியும்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்