சூட்டைத் தணிக்க வாரிகளா

This entry is part [part not set] of 5 in the series 20000326_Issue

வெங்கடரமணன்


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் பெங்களுரில் வசித்தபொழுது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகளில் ஒன்று அதிகாலைக் குளிரில் மல்லேஸ்வரம் பகுதியில் மிதஓட்டத்தில் ஈடுபடுதல். அதிலுள்ள சுகமே தனி; சற்றே குளிர், இடையிடையே சாலையோர மரநிழல்களை விட்டு வெளியே வந்தால் கதிரவனின் கருணை, மஞ்சள் நிறக் கொன்றைப் பூக்கள், வீட்டுச் சுவர்களுக்கு வெளியே தலைநீட்டிச் சிரிக்கும் பலவண்ண ரோஜாப்பூக்கள், சுத்தமான காற்று, ஆஹா! ஆனால் கடந்த முறை நான் சென்றபொழுது இவற்றில் எதுவும் அங்கு இல்லை. தோட்டங்களுடன் கூடிய வீடுகளை இடித்து அந்த இடங்களில் பலமாடிக் குடியிருப்புகள், தரை பெயர்ந்த சாலைகள், இப்பொழுதெல்லாம் கடையில் விற்கும் ரோஜாப்பூக்களை வாங்கி எல்லோரும் வீட்டின் உள்ளே பூச்சட்டியில் வைக்கிறார்கள், முக்கியமாக அருகிவிட்ட ஒரு பொருள் சுத்தமான காற்று, எங்கு பார்த்தாலும் புகை, தூசி எல்லோரும் எல்லா நேரங்களிலும் தங்கள் சன்னல்களைச் சாத்தி வைக்கின்றார்கள். சாலையோர மரங்கள் வெட்டப்பட்டு அவ்விடங்களில் சிறிய பெட்டிக்கடைகள், கையேந்தி பவன்கள். அதிகாலைக் குளிரும் காணமல் போய்விட்டது. இன்றும் பெட்டி நிறையப் (கிட்டத்தட்ட ஹர்ஷத் மேத்தா பெட்டியளவு) பணம் கொண்டுபோனால் மல்லேஸ்வரத்தில் நீங்கள் வீடு வாங்கலாம் வீட்டைச் சுற்றிச் சுவர் எழுப்பலாம், ரோஜாச் செடி நடலாம். பெரிய மனது இருந்தால் சாலையைச் செப்பனிடலாம், ஆனால் முடியாத காரியம் பழைய இதமான குளிர்ச்சியையும், சுகமான காற்றையும் அனுபவித்தல். இது உங்கள் கையில் இல்லை.

இது பெங்களுரின் கதை என்று நினைக்காதீர்கள். அடுத்த வாரம் தோக்கியோவில் நடக்கவிருக்கும் உலக மண் ஈர மாற்றம் குறித்த மாநாட்டில் வெளிவரவிருக்கும் தோக்கியோ பல்கலைக் கழக ஆராய்ச்சிக் கட்டுரைப் படி இன்னும் இருபது வருடங்களில் உலகெங்கிலும் பூமி வறண்டுவிடும். அமெரிக்காவில் அதிகம் கோதுமைப் பயிரிடப்படும் மாநிலங்களில் நிலம் வரண்டுபோய் அங்கிருக்கும் நீர்ப்பாசன நிபுணர்களுக்குப் புதிய சோதனைகள் ஏற்படும், தென்னமெரிக்கக் கண்டத்தின் பெரும்பகுதி வரண்டுவிடும். இதற்கு எதிர்மாறாக இந்தியா, குறிப்பாத் தென்னிந்தியா அதிக மழை பெற்று வெடியுண்ட இராமநாதபுரம் மாவட்ட நிலங்கள் கூட இருபோகத்திற்கும் முப்போகச் சாகுபடிக்கும் தயாராகலாம். ஆஹா, இராமநாதபுரத்தில் முப்போகம் நெல் – கேட்கவே இனிமையாக இருக்கிறது அல்லவா ? அவசரப் படாதீர்கள் – நான் சொன்னது முப்போகச் சாகுபடி – அறுவடையல்ல!! மழை பெய்யும், ஆனால் காலத்தில் அல்ல நாற்றுகள் வாடவும் கதிர்கள் மழையில் அழியவும் கூடும். ஏனென்றால் மழைக்காலத்தைத் தீர்மானிக்க முடியாது. உலகம் முழுவதும் பருவகாலங்கள் மாறிவருகின்றன. இதைக் கடந்த பத்தாண்டுகளாக தமிழகத்தில் இருப்பவர்கள் நன்றாக அறிவார்கள். ஒவ்வொரு வருடமும் எதிர்பாராமல் மழை பெய்து கன்னடியர்களின் வஞ்சத்தை முறியடித்துத் தஞ்சையில் சாகுபடி நடந்து வருகின்றது. வராத வீரணம், தெலுகு கங்கை இன்னபிற அரசியல் மோசடிகளையும் மீறிச் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு சமாளிக்கப் படுகின்றது. பொதுவில் பருவங்கள் மாறுகின்றன, வெய்யில் சுட்டெரிக்கின்றது, பெய்யும் மழை பேய்மழையாகப் பெய்கின்றது.

இவையெல்லாவற்றுக்கும் காரணமென்ன ? உலகளாவிய சூடேற்றம் எனச் சூழல் நிபுணர்களால் அழைக்கப்படும் புதிர்தான். பொதுவில் பூமி சூடாகின்றது, கடந்த பத்தாண்டுகள்தான் புவியின் வரலாற்றில் மிகவும் சூடானவை. வட தென் துருவங்களில் இருக்கும் பனி உருகுகின்றது, இதனால் கடல்மட்டம் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. இதே முறையில் போனால் பல சிறிய தீவுகள் 2025 முதல் 2050 ஆண்டுக்குள் கடலில் மூழ்கி அழியக்கூடும். நம்பிக்கையற்ற சில சூழியலார் சொல்லும் சோதிடங்கள் நம்மைப் பயமுறுத்துகின்றன.

என்ன ஆயிற்று நம் பூமிக்கு ? கதிரவனுக்கு ஏனிந்த கோபம் ? மதவியலார் சொல்லும் ஊழிப்பெருக்கு நம் கண்முன்னால் நடந்துகொண்டிருக்கின்றதா ? சொல்லப் போனால் ஒருவகையில் நாம்தான் நம் வீடுகளை அழித்துக் கொண்டிருக்கிறோம். எப்படி என்பதைப் புரிந்துகொள்ள பசுமைஇல்ல விளைவு என்பதைப் பற்றி நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் வாழும் பூமிக்குக் கதிரவன் தன் கதிர்களால் வெப்பமூட்டுகின்றான். இயற்பியல் விதிகளின் படி ஆற்றல் எப்பொழுதும் சமநிலையில் இருக்க வேண்டும், எனவே உள்வாங்கும் கதிரளவுக்குப் பூமியும் அதனை எதிரொளிக்கின்றது. இது எப்பொழுதும் சமநிலையில் இருக்கும். பூமியச் சுற்றி வளியடுக்கு உள்ளது, இது பல்வேறு வளிகளால் ஆன ஒரு மேகமூட்டத்தைப் போன்றது, இதில் முக்கியமான அங்கத்தினர்கள், நைட்ரஜன், ஆக்ஜிஸன் எனும் உயிர்வளி, கார்பன் டைஆக்ஸைடு, சதுப்புவளி எனப்படும் மீத்தேன். என்பவை இயற்கையில் அமைந்தவை, இவை விடுத்து மனிதன் தொழிற்சாலைகளில் உற்பத்திக்கழிவாக வெளியேற்றும் என்னற்றக் கலவைகளும் ஒரு சிறு சதவிதத்தில் உள்ளன. இவற்றில் காஆ, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, மற்றும் என்னற்ற குளோரோபுளூரோ கார்பன்கள், ஹைட்ரோபுளூரோ கார்பன்கள் (இவற்றைப் பொதுவில் பசுமையில்ல வளிகள் என அழைப்போம்) போன்றவற்றுக்குச் சூட்டைத் தேக்கும் திறன் உண்டு, இவற்றின் பங்கு வளியடுக்கில் அதிகரிக்க அதிகரிக்க, பூமியிலிருந்து செல்லும் வெப்பக் கதிர்வீச்சு வளியடுக்கில் தேக்கப் பட்டு, பூமிக்கே திருப்பப் படுகின்றது. இதனால் புவியின் வெப்பச் சமநிலை பாதிக்கப் பட்டு பூமி சூடாகத் தொடங்குகின்றது. இது வேளாண் தொழில்நுட்ப அறிஞர்கள் பயன்படுத்தும் பசுமையில்லம் போலச் செயல்படுகின்றது. பசுமையில்லம் என்பது பெரிதாக ஒன்றுமில்லை, ஒரு கண்ணாடிக்கூரையாலான வீடுதான். குளிர் நாடுகளில் சூரியக்கதிரும், வெப்பமும் கிடைத்தற்கரியவை, இவற்றைப் பாதுகாக்க அவர்கள் கண்ணாடி வீடுகளுக்கு உள்ளே விவசாயம் செய்வார்கள், இதில் மேலிருந்து கதிர் உள்ளே எளிதில் வரும், உள்ளேயிருக்கும் வெப்பம் கண்ணாடிக்கூரையால் சேமிக்கப்பட்டு இல்லம் வெதுவெதுப்பாக இருக்கும், இவற்றில் செடிகள் செழித்து வளரும், இதே முறையை குளிர்ச்சியை சேமிக்க நம்மூரில் இப்பொழுது பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். எப்படி ஒரே முறையில் குளிர்ச்சியையும் வெப்பத்தையும் சேமிக்க முடியுமென்கிறீர்களா, இதற்கு நான் விடை சொல்லப் போவதில்லை, குளிரோ வெய்யிலோ – வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஏன் மிதமாகவும் சுகமாகவும் இருக்கிறது என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

சொல்லப்போனால் இந்த பசுமையில்ல விளைவு பூமி தோன்றிய நாளிலிருந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. அப்படியில்லையென்றால் பூமி இப்பொழுது இருப்பதைவிட இன்னும் 60 செல்சியல் குறைவாகத்தான் இருக்கும் எனக் கணக்கிட்டுள்ளார்கள், அந்தக் குளிரில் நாம் வாழ்க்கை நடத்தமுடியாது. பின் ஏன் எப்பொழுதுமில்லாத அளவிற்கு பசுமையில்ல விளைவைக் குறைகூறவேண்டும் ? அதற்குக் காரணம் புவியின் வெப்பச் சமநிலை பாதிக்கப்பட்டு சூடேறத் தொடங்கியிருப்பதுதான். பசுமையில்ல வளிகளுக்குள்ளே சூட்டை அதிகம் திருப்பியனுப்ப வல்லவை கலவைக் கரிவளிகள், இவை குளிர்பதன சாதனங்களால் (குளிர்ப்பதனப் பெட்டிகள் மற்றும் அறைக்குளிரூட்டிகள்) வெளியேற்றப் படுகின்றன. தற்பொழுது மாசுக்கட்டுப்பாடு விதிகள் நடைமுறைப் படுத்தப்பட்டு இவற்றின் அளவு பெரிதும் குறைக்கப் பட்டுவருகின்றது.

இன்னொரு முக்கிய காரணம் நாம் எப்பொழுதும் இல்லாத அளவிற்குக் காடுகளை அழித்து வருகின்றோம், முக்கியமான பசுமையில்ல வளியான காஆ தாவரங்கள் உணவு உற்பத்தியில் பயன்படுத்தப் படுகின்றது. உலகின் தாவர அளவு குறைய காஆ வின் அளவு அதிகரிக்கும். இதுதவிர நாம் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிக அளவிலான கரிவளிகளை வெளியேற்றுகின்றன. தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளில் இவற்றின் அளவு மிக அதிகம். உலகின் பசுமைஇல்ல வளிகளில் ஐந்தில் ஒருபங்கு அமெரிக்காவுடையது. காடுகளை அழிப்பதில் தென்னமெரிக்க நாடுகள் முன்னே நிற்கின்றன. கால்நடைகளின் கழிவுகளிலிருது அதிக அளவு மீத்தேன் வெளியாகின்றது, இயற்கைப் செல்வங்களான கால்நடைகளை அளவுக்கு அதிகமாகப் பெருக்குவதும் ஒரு காரணம்தான் – ஆனால் இதன் பங்கு மிகக் குறைவு.

நாம் மேலே கூறியிருக்கும் கருத்துக்களைத் தொகுத்தோமானால் இந்த உலகளாவிய சூடேற்றம் என்பது பல்வேறு இயற்கை மற்றும் செயற்கைக் காரணிகளின் தொடர்புடையது என விளங்கும் (படம் 2). இப்பொழுது அரசியலுக்கு வருவோம். சூடேற்றத்தால் எல்லா நாடுகளும் பாதிக்கப் படுகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் நடந்த இயற்கைப்பேரழிவுகளை இந்த அட்டவணை நமக்குக் காட்டுகின்றது. இதில் எல்லா கண்டத்திலும் இருக்கும் நாடுகளும், ஏழை, பணக்கார வித்தியாசமில்லாமல் துன்புறுவதைக் காணலாம். ஆனால் ஒவ்வொரு நாடுகளும் மற்றவற்றைச் சுட்டுகின்றன. தொழிற்சாலை மாசுக்குற்றவாளிகளான அமெரிக்கர்கள் ஏழை நாடுகளிலிருந்து சம்பாதித்த பணத்தைக்கொண்டு அமேசான் நதிக்கரைக் காடுகளைக் காப்பாற்றுவதாகப் பறைசாற்றுகின்றர். ஏழை நாடுகள் தங்கள் முன்னேற்றத்திற்கும், ஏன் அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கும் காடுகளை அழிக்க வேண்டியிருக்கிறது. நியூயார்க் நகர அடுக்குமாடிக் கட்டிடத்திலிருந்து இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் காடுகளை அழிப்பதைக் காட்டுகின்றனர். வளரும் நாடுகளோ, மேலைய நாடுகளின் ஆடம்பர ஊர்திகளையும், வேதிப்பொருள் தொழிற்சாலைகளையும் சுட்டுகின்றன. வேறெப்பொழுதுமில்லாத அளவிற்கு நாம் எல்லோரும் இணைந்து புவியைக் காக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

1999ஆம் ஆண்டில் நடந்த இயற்கையின் சீற்றங்கள்

எங்கே ?

Series Navigation

Scroll to Top