சூடானில் கறுப்பினத்தவருக்கு எதிரான தொடரும் இனப்படுகொலை

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

ஆஃப்ரோ நியூஸ்


மேற்கு சூடான் பிரதேசமான டார்பார் பகுதியில் இனச்சுத்திகரிப்பும் இனப்படுகொலையும் தீவிரமடைந்து வருகிறது என்று சூடான் மனித உரிமைக்குழுக்கள் மக்கள் கவனத்தைக் கோருகின்றன. கார்த்தோம் அரசாங்கம் அராபிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக, இவர்கள் டார்பார் பகுதியிலும் மற்ற இடங்களிலும் ‘அடிமைகள் ‘ என்று அழைக்கப்படும் கறுப்பினத்தவருக்கு எதிரான படுகொலைகளை ஆதரிக்கின்றது என்றும் இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் கார்த்தோம் அரசு இந்த போராட்டத்தில் ‘நடுநிலை ‘ வகிப்பதாகவும், டார்பார் பகுதியில் நடக்கும் வன்முறையை எதிர்த்துப் போராடுகிறது என்றும் கூறுகிறது.

டார்பார் அஸ்ஸோஷியேஷன் கனடாவைச் சார்ந்த அஹ்மது அப்தல்லா அவர்கள் டார்பார் பகுதியில் நடக்கும் மனித உரிமை அழிவு மிகவும் தீவிரமடைந்து வருகிறது என்று கூறுகிறார். இந்தப் பகுதியில் நடந்திருக்கும் புதிய இனப்படுகொலைகளை ‘இனச்சுத்திகரிப்பு ‘ என்றே அழைக்கப்படவேண்டும் என்றும் கோருகிறார். இதே போலத்தான் ர்வாண்டா நாட்டிலும் நடந்தது. ‘ர்வாண்டா நாட்டில் நடந்ததுபோலவே இந்த இனப்படுகொலை இனச்சுத்திரிப்பை அகில உலக நாடுகள் கண்டுகொள்ளாமல் காலம் தாழ்த்துகின்றன ‘ என்றும் குற்றம் சாட்டுகிறார்.

இவர் சூடான் நாட்டிலிருந்து அதன் அரசாங்கத்தால் நாடு கடத்தப்பட்டவர். அராபியரல்லாத மக்கள் மீது டார்பார் பகுதியில் தொடர்ந்து புதுப்புது தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன என்று கூறுகிறா. டிஸம்பர் 31ஆம் தேதியன்று பல அராபிய இனக்குழுக்கள், ந்யாலா நகருக்கும் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கிடா கிராமத்தை தாக்கின என்றும், இந்த சிங்கிடா படுகொலைகளில் சுமார் 800 வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன என்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்றும் கூறுகிறார்.

அக்டோபர் 1இலிருந்து டிஸம்பர் 2002வரைக்கும் தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் மேற்கண்டது சமீபத்தியது. மூன்று மாதங்களில் ஒன்பது கிராமங்கள் இப்படி தாக்கப்பட்டன என்றும், இந்த தாக்குதல்களை நடத்தும் ‘அரபு தீவிரவாதிகள் ‘ டார்பர் நகரங்களையும் கிராமங்களையும் தாக்கினார்கள் என்றும் கூறுகிறார். இதில் 109 டார்பர் கறுப்பினத்தவர் கொல்லபட்டார்கள் என்றும் பலர் கால் கைகளை இழந்தார்கள் என்றும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த பகுதியை விட்டு ஓடிவிட்டார்கள் என்றும் கூறுகிறார்.

முன்பு சூடானின் மனித உரிமை சேவகர்கள் அளித்த அறிக்கைகளைப் போலவே அப்தல்லா அவர்களின் கவலையும் இருக்கிறது. ‘1980இலிருந்து சூடான் அரசாங்கம் சூடானின் கறுப்பினத்தவருக்கு எதிரான இனப்படுகொலையை தொடர்ந்து நடத்திவந்திருக்கிறது. சூடான் முழுவதும் அரபியர்களால் நிறைந்திருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த அரசு பயங்கரவாதம் தொடர்ந்து நடக்கிறது ‘ என்றும் சூடானிலிருந்து வெளியேற்றப்பட்ட மாஸெலெய்ட் Massaleit என்னும் கறுப்பின சமூகம் குறிப்பிடுகிறது.

ஏற்கெனவே நுபா, டிங்கா-அபயயே (கார்டோபன்), பிஜா என்ற செங்கடல் பிரதேசம் ஆகியவற்றில் சூடான் அரசாங்கம் இனச்சுத்திகரிப்பை செய்து முடித்து கறுப்பினத்தவரை வெளியேற்றியது போலவே, மாஸெலெய்ட் மற்றும் டார்பார் பகுதியிலும் கறுப்பினத்தவரை இனப்படுகொலை மூலம் இனச்சுத்திகரிப்பு செய்ய முயல்கிறது என்று மாஸெலெய்ட் சமூகம் குறிப்பிடுகிறது. 1990 மேமாதத்திலிருந்து 2002 மே வரைக்கும் சுமார் 5000 டார்பார் கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்டார்கள் என்றும் 80800 குடும்பங்கள் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள் என்றும், 18500 வீடுகள் கொளுத்தப்பட்டன என்றும், 514 கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு 2,00,000 கால்நடைகள் கொல்லப்பட்டன என்றும், பல கோடி சூடானிய பணம் இந்தப் பகுதியிலிருந்து வீடுகளிலிருந்தும் கடைகளிலிருந்தும் கொள்ளையடிக்கப்பட்டது என்றும் இந்த குழு குறிப்பிடுகிறது.

சூடான் நாட்டில் சிறுபான்மையாக இருக்கும் அரபு சிறுபான்மை சூடான் நாட்டின் அரசதிகாரத்தில் உட்கார்ந்திருப்பதால், அது அரபு அல்லாதவர்கள் இவ்வாறு இனப்படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு கோரிக்கைகளை முழுவதுமாக நிராகரிக்கிறது. முஹம்மது அஹ்மது டிர்டியரி என்ற கென்யாவின் சூடான் தூதர், சூடானில் நடக்கும் இனப்போராட்டங்களையும் திருட்டுக்களையும் வன்முறையையும் கட்டுப்படுத்த முயன்றுவருகிறது என்றும் கூறுகிறார்.

‘பழங்குடி மக்கள் தங்களுக்குள் போரிட்டுக்கொள்வது நாட்டின் இந்தப்பகுதிக்குப் புதியதல்ல ‘ என்று டிர்டியரி கூறுகிறார். ‘இது நாடோடிகள் வாழும் பகுதி. இவர்கள் தண்ணீரையும் மேய்ச்சல் நிலங்களையும் பங்கிட்டுக்கொள்வதால், மேய்ப்பர்கள் அடிக்கடி தங்களுக்குள் போரிடுவது பழக்கம். ‘ என்றும் கூறுகிறார். மேலும் ‘இந்தப் பகுதியில் வன்முறை அதிகமாவதற்கு இந்த மூலப்பொருட்கள் அருகுவதும், இந்த பகுதிக்குள் சாட் நாட்டிலிருந்தும், மதிய ஆப்பிரிக்க குடியரசு நாட்டிலிருந்தும் ஆயுதங்கள் இங்கே கொண்டுவரப்படுவதும் காரணம் ‘ என்றும் கூறுகிறார்.

முஹம்மது சுலைமான் என்ற லண்டனைச் சார்ந்த இன்ஸ்டிட்யூட் ஃபார் ஆப்ரிகன் அல்டர்னேடிவ்ஸ் என்ற அமைப்பின் ஆராய்ச்சியாளரைப் பொறுத்த மட்டில், இப்படிப்பட்ட வன்முறை வெடிப்புக்கு அருகி வரும் மூலங்கள் ஒரு முக்கிய காரணம் என்று கூறுகிறார். ‘அமைதியாக இருந்த வடக்கு டார்பார் பகுதியில் 1980இல் ஒரு நீண்ட வறட்சி வந்தது. அது இந்த அமைதியைக் குலைத்துவிட்டது ‘ என்று கூறுகிறார்.

இந்த வறட்சிக்கு முன்னர், இனம் பற்றிய உணர்வு மிகவும் குறைவாக இருந்தது என்றும், 1916 வரை பெருமை வாய்ந்த தனி சுல்தானேட்டாக இது 2000 வருடம் இருந்தது என்றும், 1916இல் பிரிட்டிஷார் இந்த சுல்தானை துரத்திவிட்டு, இந்த பகுதியை சூடானுடன் இணைத்துவிட்டார்கள் என்றும் இவர் கூறுகிறார். இந்த வறட்சி விவசாயிகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் இடையே இருந்த உறவை கெடுத்துவிட்டது என்றும், இது இன ரீதியான போரை உருவாக்கிவிட்டது என்றும், இதுவே அரபுக்களுக்கும் டார்பாரியர்களுக்கும் இடையே 1980லிருந்து 1990வரைக்குமான போரை உருவாக்கிவிட்டது என்றும் சுலைமான் முடிக்கிறார்.

1990க்குப்பின்னர், கார்த்தோமின் அரபு அரசாங்கம் இந்த டார்பார் கலவரத்தில் முக்கியப்பங்கெடுத்துவருகிறது என்று டார்பார் கறுப்பின போராளிகள் குற்றம் சாட்டுகிறார்கள். கார்த்தோம் அரபு அரசாங்கம் இனப்படுகொலையிலும் இனச்சுத்திகரிப்பிலும் தீவிரமெடுப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். டார்பார் மானிட்டரிங் குரூப் என்ற சேவைக்குழுவைப் பொறுத்த மட்டில், டார்பார் பகுதியில் படுகொலை செய்யும் அரபு தீவிரவாதிகள் அரசாங்க ஆதரவுடன் செயல்படுகிறார்கள். கார்த்தோம் அரசாங்கம், இவர்களுக்கு ‘ஆயுதங்களையும் குண்டுகளையும் கொடுத்து அவர்கள் அட்டூழியங்கள் செய்து முடிக்கும் வரைக்கும் அவர்களுக்கு பாதுகாப்பும் வழங்குகிறது ‘ என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

மாஸெலெய்ட் சமூகம் சூடானின் அரசாங்கம், அரபு அல்லாத மக்கள் அனைவரின் ‘கலாச்சாரங்களையும் மொழிகளையும் அமைப்பு ரீதியில் அழிக்க ‘ திட்டமிட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறது. கார்த்தோமின் அரபு அரசாங்கம் ஆரம்பித்து ஆதரவு தரும் ‘மஷரு அல்டாவாஹா அல்ஹாதுரி ‘ Mashru ‘ Altawajuh Alhadari திட்டம் என்பது சூடான் நாட்டிலிருந்து அரபு அல்லாத மக்களையும், அவர்கள் மொழி கலாச்சாரம் ஆகியவற்றையும் சுத்தமாக துடைத்தெறிந்துவிட்டு சுத்தமான அரபு சமூகத்தை சூடானில் கட்டுவதே என்று இந்த குழு குறிப்பிடுகிறது. பல தீவிரவாதக்குழுக்கள் இந்த நோக்கத்தை நிறைவேற்ற உருவாக்கப்பட்டுள்ளன.

டார்பார் பகுதியில் நடக்கும் இந்த போர் உலகத்தின் கவனத்தைப் பெறவே இல்லை. இஸ்லாமிய கார்த்தோம் அரசாங்கத்துக்கும், தெற்கு சூடானில் இருக்கும் கிரிஸ்துவர்கள் மற்றும் ஆப்பிரிக்க பழங்குடி மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் இடையே நடக்கும் போர் உலக நாடுகளின் பத்திரிக்கைகளின் கவனத்தைக் கவர்ந்த அளவை ஒப்பிடும்போது இது பேசப்படவே இல்லை. தெற்கு சூடானைச் சேர்ந்த கறுப்பின கிரிஸ்துவர்கள் மாதிரி அல்லாமல், கார்டோபன் மற்றும் டார்பார் பகுதி கறுப்பினத்தவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாமைத் தழுவியவர்கள். சூடான் அரசியலில் வலிமையுடன் விளங்கும் அராபியர்கள் அராபியர்கள் அல்லாதவர்களை அப்த் ‘abd (ஆண் அடிமை) மற்றும் கதிம் khadim (பெண் அடிமை) என்ற பெயர்களிலேயே விளிக்கிறார்கள்.

‘டார்பாரில் நடக்கும் இந்த விஷயங்களை ‘ கண்டுகொள்ளாமல் மெளனமாக ஐக்கிய நாடுகள் சபையும் மனித உரிமைக் குழுக்களும் வெட்கமின்றி இருக்கின்றன என்று டோரண்டோ டார்பார் அஸ்ஸோஷியேஷனைச் சார்ந்த அப்தல்லா குறை கூறுகிறார். ‘உடனே கார்த்தோம் அரசை தடுக்க வேண்டும். இல்லையேல் சூடான் அரசாங்கத்திடமிருந்தும் அதன் அரபு தீவிரவாதிகளிலிடமிருந்தும் டார்பார் மக்களையும் சூடானின் பழங்குடி மக்களையும் காப்பாற்ற இயலாமல் போய்விடும் ‘ என்று சூடானின் மனித உரிமை சேவகர்கள் குறிப்பிடுகிறார்கள்.

**

http://www.afrol.com/News2003/sud001_darfur_conflict.htm

http://www.irinnews.org/report.asp ?ReportID=37871&SelectRegion=East_Africa&SelectCountry=SUDAN

http://www.genocideprevention.org/darfur_monitor1.htm

http://www.sudanstudies.org/dinar03.html

Series Navigation

ஆஃப்ரோ நியூஸ்

ஆஃப்ரோ நியூஸ்