தெலுங்கில் வோல்கா (P.லலிதகுமாரி) தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்
தலைவலி அதிகமாக இருந்ததால் எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்த பைலை முடினாள் ரேவதி. கடியாரத்தைப் பார்த்த போது முன்று மணியாகியிருந்தது. “குளிர்காலத்தில் மதியம் முன்று மணிக்கு பிறகு கடியாரம் ரொம்ப தாமதமாக ஓடும். ஐந்து மணியாவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது” என்றாள் பக்கத்து இருக்கையில் டைப் அடித்துக் கொண்டிருந்த பாரதி.
ரேவதி லேசாக முறுவலித்துவிட்டு “அதான் லீவ் போட்டுவிட்டு வீட்டுக்குக் கிளம்பலாம்னு பார்க்கிறேன். தலைவலி ரொம்ப அதிகமாக இருக்கு” என்றாள்.
“இரண்டு மணி நேரத்திற்காக லீவ் போடுவானேன்? பர்மிஷன் வாங்கிக் கொண்டு போகலாமே?”
பாரதியின் வியப்பை பொருட்படுத்தாமல் மறுநாளைக்கும் சேர்த்து லீவ் லெட்டர் எழுதினாள்.
“லீவ் இருந்தால் போடுவதுதான் நல்லது. வருஷத்திற்கு ஒரு முறை பர்மிஷன் கேட்டாலும் இந்த பெண்களுக்கு எப்போதும் வீட்டின் நினைப்புதான். பர்மிஷன் போட்டு வீட்டுக்குப் போகலாம் என்று பார்ப்பார்களே தவிர ஆபீசு வேலை எப்படி முடிப்பது என்று யோசிக்க மாட்டார்கள் என்று முணுமுணுப்பதுதான் நம் மேனேஜரின் வேலை.” ரேவதி லீவ் போட்டதில் தன்னுடைய ஒப்புதலை வெளிப்படுத்தினாள் ரமா.
ரேவதி ரமாவின் பேச்சை ஏற்றுக் கொள்வதுபோல் அவள் பக்கம் திரும்பி முறுவலித்தாள். லீவ் லெட்டரை கொடுத்துவிட்டு ஆபீசை விட்டு வெளியே வந்தாள். பஸ்ஸ்டாப் அருகில் அந்த நேரத்தில் கூட்டம் இருக்காது. உட்காருவதற்கு இடம் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் தன்னையும் அறியாமல் சுறுசுறுப்பாக பஸ்ஸ்டாப்பை நோக்கி நடந்தாள். பஸ்ஸ்டாப்பில் ஏற்கனவே உட்கார்ந்திருந்த சந்திரிகாவைப் பார்த்து வியப்படைந்தவளாக மணி என்னவென்று தெரிந்திருந்தாலும் மற்றொரு முறை வாட்ச்சை பார்த்தாள். இந்த நேரத்தில் சந்திரிகா இங்கே இருப்பானேன்?
“சந்திரிகா… இன்றைக்கு ஆபீசுக்குப் போகவில்லையா?
சந்திரிகா நிமிர்ந்து பார்த்துவிட்டு கொஞ்சம் தடுமாற்றமடைந்தாள். வாடிப் போன முகம், சிவந்த கண்கள், ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருப்பது போன்ற தோற்றம்…
ரேவதி வியப்புடன் பார்த்தாள். அதற்குள் பஸ் வந்துவிட்டது. சந்திரிகாவை அப்படியே விட்டுவிட்டு போய் பஸ்ஸில் ஏறுவதற்கு விருப்பமில்லை. “சந்திரிகா… இந்த நேரத்தில் உங்கள் வீட்டுக்குப் போகும் பஸ்கள் அதிகம் இருக்காது. நம் வீட்டுக்கு வந்து கொஞ்சம் நேரம் இருந்துவிட்டுப் போகலாமே?”
சந்திரிகா பதில் சொல்ல முடியாதவள் போல் இயலாமையுடன் பார்த்தாள்.
“பரவாயில்லை. மாலை வரையில் இருந்துவிட்டு போகலாம்.” சந்திரிகாவின் கையைப் பற்றிக் கொண்டு அவசர அவசரமாக பஸ்ஸை நோக்கி நடந்தாள்.
பஸ் முழுவதும் காலியாக இருந்தது. இருவரும் உட்கார்ந்துகொண்ட பிறகு பஸ் நகர்ந்தது. ரேவதி பரிசீலிப்பது போல் சந்திரிகாவைப் பார்த்தாள். சந்திரிகா பேசாமல், மறுப்புச் சொல்லாமல், கையை விடுவித்துக் கொள்ளாமல் பஸ் ஏறிய தோரணை ரேவதிக்கு வியப்பாகத்தான் இருந்தது.
“உடம்பு சரியாக இல்லையா?”
ரேவதி கேட்ட கேள்விக்கு நலமாகத்தான் இருப்பதாக சொல்லிவிட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள் சந்திரிகா. ரேவதி மேலும் கேள்விகள் எதுவும் கேட்காமல் மௌனமாக உட்கார்ந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவது போல் இருந்தது அவள் போக்கு.
“என்ன நடந்திருக்கும்? எதற்காக இவ்வளவு கவலையுடன் இருக்கிறாள்? ரவியுடன் ஏதாவது பிரச்சினையா? இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்களா? அசல் தன்னிடம் வருவதற்காகத்தான் கிளம்பினாளா? தான் கூப்பிடவில்லை என்றாலும் தன்னிடம் வந்திருப்பாளா?” ரேவதிக்கு எல்லாமே பெரிய புதிராக இருந்தது.
சந்திரிகா தன்னிடம் வருவது என்பது சாதாரண சூழ்நிலையில் நிச்சியமாக நடக்கும் காரியம் இல்லை.
ரவியைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்னாடியே தனிக்குடித்தனம் என்ற நிபந்தனையை விதித்த சந்திரிகா தொடக்கத்திலிருந்தே ரேவதியிடமிருந்து விலகியே இருந்தாள். மாமியாரை நெருங்க விடவில்லை. கல்யாணம் ஆன இரண்டாவது மாதமே வேறு வீடு பாத்துக் கொண்டார்கள். முதல் மாதத்தில் பத்து நாட்கள் கூட மாமியார் வீட்டில் இருந்தது இல்லை. பிறந்த வீட்டுக்கும், தேநிலவிற்கும், நண்பர்களின் வீட்டிற்கு போகவே சரியாக இருந்தது. தனிக்குடித்தனம் போன பிறகு தன் வீட்டு விவகாரங்களில் மாமியார் தலையிடுவதற்குக் கொஞ்சமும் அவகாசம் தரவில்லை. எந்த சூழ்நிலையிலும் மாமியாரின் உதவியை நாடவில்லை. வேலைக்குப் போய்க்கொண்டு வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்வது சிரமமாக இருந்தாலும் மாமியாரை மட்டும் அண்டவிடவில்லை.
ரேவதியின் உறவினர்கள், நெருங்கியவர்கள் கதை கதையாக பேசிக்கொண்டார்கள். ஓரிருவர் பொறுத்துக்கொள்ள முடியாவல் ரேவதியிடமே கேட்டு விட்டார்கள். “இருப்பது ஒரு மகன். அவனும் உள்ளூரில் இருந்துகொண்டு நீயும் அவனும் தனித் தனியாக இருப்பதாவது? போகட்டும், ஒரு வருடமோ இரண்டு வருடமோ சேர்ந்து இருந்துவிட்டு, ஏதாவது காரணத்தினால் ஒத்துப்போகவில்லை அவரவர்கள் வழியில் போய்க் கொள்கிறோம் என்று சொன்னால் அது ஒரு நியாயம். இப்படி கல்யாணம் ஆன கையோடு தனிக்குடித்தனம் போவது எந்த நியாயத்தில் சேர்த்தி? வேண்டுமானால் ரவியை நாலு கேள்வி கேட்டு புத்திமதி சொல்லச் சொல்கிறாயா?” என்று ரேவதியைப் பிடுங்கி எடுத்தார்கள்.
ரேவதி அவர்களுடைய உற்சாகத்திற்கு தடை போட்டாளே தவிர ரவியைப் பற்றியோ, சந்திரிகாவைப் பற்றியோ அவர்களிடம் ஒரு வார்த்தை குறை சொன்னதில்லை.
“இரண்டு வருடங்கள் சண்டை போட்டுக் கொண்டு பிறகு தனியாக போவதைவிட முன்னாடியே தனியாக இருந்தால் ஒருவர் மீது மற்றவருக்கு வெறுப்பு இல்லாமல் இருக்கும்” என்று ரவியை சப்போர்ட் செய்து பேசுவாள்.
நான்கு வருடங்களாக அப்படியேதான் நடந்து வருகிறது. இந்த நான்கு வருடங்களில் ரேவதிக்கும் சந்திரிகாவுக்கு இடையே உள்ள தூரம் குறையவும் இல்லை. கூடவும் இல்லை. ரேவதி ஏதாவது ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் அவர்கள் வீட்க்குப் போய் வந்தால், அவர்களும் எப்பொழுதாவது ரேவதியிடம் வந்து போவார்கள். சந்திரிகா பிள்ளைப் பெறுவின் போது பிறந்த வீட்டுக்குப் போயிருந்த ஒரு மாதம் தவிர ரவியும் என்றுமே வந்து தாயுடன் தங்கியது இல்லை. மகனையும் எப்படியோ திண்டாடிக்கொண்டு வளர்த்து வருகிறாளே ஒழிய மாமியாரின் உதவியை ஒரு நாளும் நாடியதில்லை. அப்படிப்பட்டவள் இன்று தன் வீட்டுக்கு வருகிறாள் என்றால் ரேவதிக்கு வியப்படன் சந்தோஷமும் ஏற்பட்டது. விஷயம் என்னவென்று தெரிந்துகொள்வதற்கு வீட்டுக்குப் போகும் வரை காத்திருக்க முடியவில்லை. “நேரம் கெட்ட வேளையில் ஆபீசுக்குக் கிளம்பியிருக்கிறாயே?” பஸ் சத்தத்தில் சரியாக கேட்காது என்று உரத்தக் குரலில் கேட்டாள்.
“ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டு சரத்தின் ஸ்கூலுக்குப் போய் வருகிறேன்.”
சந்திரிகா சொன்ன பதிலைக் கேட்டதும் ரேவதின் முகம் கறுத்துவிட்டது. அதாவது சந்திரிகா தன்னிடம் வருவதற்காகக் கிளம்பவில்லை. சரத்தின் ஸ்கூல் ரேவதியின் ஆபீசுக்கு அருகில்தான். ஸ்கூலில் பீசை கட்டிவிட்டு வீட்டுக்குப் போய்க் கொண்டிருப்பவளை அனாவசியமாக தான்தான் திசை திருப்பிவிட்டாள். ஆனால் வா என்று கூப்பிட்டதும் வந்தது அதிசியம்தான். பின்னால் வருகிறேன் என்று சொல்லி இப்பொழுது தப்பித்துக் கொள்ளலாம் இல்லையா? கிடைத்ததைக் கொண்டு திருப்தி பட்டுக் கொள்ளும் சுபாவம் என்பதால் தன் கூட வருவதற்கு ஒப்புக்கொண்டதற்கே சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் என்று தோன்றியது. மறுபடியும் கடைக்கண்ணால் சந்திரிகாவின் பக்கம் பார்த்தாள். சந்திரிகா ரொம்ப அமைதியற்று இருப்பது போல் தென்பட்டாள். கீழ் உதட்டை பற்களால் கடித்துக் கொண்டு பெருமூச்சு விட்டாள் சந்திரிகா. ஏதோ விஷயம் இருக்கிறது. ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருப்பாளாய் இருக்கும்.
சந்திரிகாவைப் பார்க்கும் போது ரேவதிக்கு இரக்கம்தான் ஏற்பட்டது. பலமுறை மருமகளை பார்க்கும் போது ரேவதிக்கு இரக்கம்தான் ஏற்படும். எப்பொழுதாவது மாலை வேளைகளில் மகனை பார்த்துவிட்டு வருவதற்காக போனால் சந்திரிகாவை நினைத்து இரக்கப் படுவதற்கே ரேவதிக்கு நேரம் சரியாக இருக்கும். சந்திரிகா ஒரு நாளும் ஏழுமணிக்கு முன்னால் வீட்டுக்கு வந்தது இல்லை. வந்ததும் வராததுமாக குக்கரில் அரிசி களைந்து போட்டுவிட்டு குளிக்கச் செல்வாள். காலையில் மீதியிருக்கும் சாம்பார், பொரியலுடன் இரவு சாப்பாட்டை முடித்துக்கொள்வார்கள். மறுபடியும் அவற்றை சுட வைக்கும் பொறுமையோ, திராணியோ சந்திரிகாவுக்கு இருந்தது இல்லை. அந்த சாப்பாட்டில் ருசியோ பசியோ இருக்காது. ருசி எங்கேயிருந்து வரும்? காலையில் ஏழுமணிக்கு எழுந்துகொண்டால் ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டை விட்டு கிளம்பியாகணும். காபி, டிபன், மதிய உணவு எல்லாமே ஒண்டியாக செய்து கொள்ளணும். படிக்கும் நாட்களில் வீட்டு வேலைகள் செய்து பழக்கம் இல்லாததால் சந்திரிகாவால் மளமளவென்று வேலை செய்ய முடியவில்லை. வீட்டு வேலைகள் செய்து பழக்கம் இல்லையே தவிர அவளுக்கு வீட்டு வேலைகளிடம் வெறுப்பு இல்லை. எப்படியோ நிதானமாக வேலைகளை செய்து கொண்டுதான் இருந்தாள்.
உண்மையிலேயே ரேவதி வீட்டுக்கு வந்தால் சந்திரிகாவுக்கு கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கும். மாமியாருக்கு தன் வீடு, தன்னுடைய பழக்க வழக்கங்கள், தன்னுடைய சமையல், பரிமாறும் முறை, சாப்பிடும் முறை எதுவும் பிடிக்காது என்று சந்திரிகாவுக்கு மனதில் சந்தேகம்… இல்லை இல்லை… நம்பிக்கை. மாமியார் கிளம்பிப் போகும் வரையில் முட்கள் மீது அமர்ந்திருப்பதுபோல் தவிப்பாள். சந்திரிகா அப்படி சங்கடப்படுவது எதற்காக என்று ரெவதிக்கு ஒருநாளும் புரிந்தது இல்லை. அவள் ஒரு நாளும் சந்திரிகாவை ஒரு வார்த்தை சொன்னது இல்லை. அவளிடமிருந்து எந்த மரியாதைகளையும் எதிர்பார்த்தது இல்லை. வீட்டை எடுத்து வைப்போம் என்று உள்ளமும் உடலும் பரபரத்தாலும் மருமகளின் காரியத்தை குறை சொன்னாற்போல் ஆகி விடுமோ என்று எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருப்பாள். பிசுக்கு டம்ளரில் சந்திரிகா கொடுத்த காபியை முறுவலுடன் வாங்கிக் குடிப்பாள். மாமியார் எதுவும் சொல்லாமல் காபியைக் குடித்தாலும் சந்திரிகாவுக்கு நிம்மதியாக இருக்காது. காபியை குடித்துவிட்டு டம்ளரை பளபளவென்று தேய்த்து கவிழ்த்து வைக்கும் மாமியாரை இயலாமையுடன் பார்ப்பாள்.
பஸ் நின்றது. இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள். சந்திரிகா சோர்வுடன் நிதானமாக நடந்து கொண்டிருந்தாள்.
“உடல்நலம் சரியாக இல்லாவிட்டாலும் வேலை செய்யாமல் இருக்க மாட்டாள். ஆபீசுக்குப் போவதை நிறுத்தவே மாட்டாள்.” நினைத்துக் கொண்டாள் ரேவதி.
சரத் பிறந்த புதிதில் ஒரு நாள் மதியம் சந்திரிகாவின் ஆபீசுக்குப் போனாள் ரேவதி. பேரனுக்காக ஸ்வெட்டர் பின்னியிருந்தாள். வீட்டுக்குப் போய் கொடுப்போம் என்றால் முடியவே இல்லை. கடைசியில் ஆபீசுக்குப் போய் சந்திரிகாவிடம் கொடுப்போம் என்று நினைத்தாள். அவள் போயிருந்த போது சந்திரிகா சீட்டில் இல்லை. பத்து நிமிடங்களுக்கு பிறகு பாத்ரூம்லிருந்து வந்தாள். ரொம்ப சோர்வாக தென்பட்டாள். கூர்ந்து பார்த்த போது ரேவதிக்கு விஷயம் புரிந்தது. பால் கட்டுவலி தாங்க முடியாமல் பாத்ரூமுக்கு சென்று பிழிந்து விட்டு வந்திருக்கிறாள். ரேவதியின் மனம் இளகிவிட்டது.
“இன்னும் ஒரு மாதம் விடுமுறை எடுத்துக் கொள்வதுதானே?” என்றாள் இரக்கம் ததும்பும் குரலில்.
“ஆபீசில் நிறைய வேலை தங்கிவிட்டது அத்தை. லீவ் கிடைக்காது.”
“போகட்டும். பால் வற்றுவதற்காக மருந்து மாத்திரை ஏதாவது பயன்படுத்தக்கூடாதா?” வேண்டாம் என்று நினைத்துக் கொண்டாலும் கேட்டுவிட்டாள் ரேவதி.
மாமியார் தன்னை குறை சொல்வதாக நினைத்துக் கொண்ட சந்திரிகாவுக்கு முகம் கறுத்துவிட்டது. “காலையிலும் இரவிலும் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். இரவில் அவன் பாட்டிலில் பால் அசல் குடிக்கவே மாட்டான்.” சங்கடப்பட்டுக்கொண்டே சொன்னாள்.
தாய்மைக்கும், வேலைக்கும் நடுவில் நலிந்து போய்க் கொண்டிருக்கும் பெண்களை பார்ப்பது ரேவதிக்குப் புதிது ஒன்றுமில்லை. ஆனால் மருமகள் கஷ்டப்படும் போது தன்னால் எதுவும் செய்ய முடியாமல் போவதை நினைத்து வருத்தப்பட்டாள்.
“பெண்கள் சரியாக வேலை பார்க்க மாட்டார்கள் என்று பெயர் வாங்குவது எனக்குப் பிடிக்காது. பெண்கள் நன்றாக, திறமையாக வேலை செய்வார்கள் என்று நிரூபிக்க வேண்டுமென்று தோன்றும்.”
ரவியிடம் சந்திரிகா சொல்லிக் கொண்டிருந்தது ரேவதியின் காதில் விழுந்தது. ஆபீஸ் வேலையை தேவைக்குமேல் செய்கிறாய் என்று ரவி கோபித்துக் கொண்ட போது சந்திரிகா சொன்ன பதில் அது. அதைக் கேட்ட போது ரேவதியின் நெஞ்சம் கரைந்துவிட்டது. ரவிக்கு வேண்டுமானால் அந்த வார்த்தைகள் புரியாமல் இருக்கலாம். ஆனால் ரேவதிக்கு ஏன் புரியாது?
ரேவதியை எத்தனையோ பேர் எத்தனையோ முறை அந்த வார்த்தையைச் சொல்லியிருக்கிறாகள். இந்தப் பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்வது போன்ற முட்டாள்தனம் வேறு இல்லை என்றார்கள். அந்த வார்த்தை வரக்கூடாது என்று எத்தனை முயற்சி செய்தாலும் சொல்லத்தான் சொன்னார்கள்.
பெண்கள் நிறைமாதம் சுமந்து கொண்டு வேலைக்குப் போனாலும், தீட்டு வலியைப் பொறுத்துக் கொண்டு வேலையைப் பார்த்தாலும், குழந்தைக்கு தர வேண்டிய பாலை வற்றவைத்துவிட்டு வந்து வேலை பார்த்தாலும் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். சின்ன குறை ஏற்பட்டால் போதும் உடனே பெண்களை வேலைக்கு வைத்துக் கொள்வது போன்ற முட்டாள்தனம் வேறு இல்லை என்ற ஞானோதயம் ஆண்களுக்கு வந்துவிடும்.
பாவம்… அந்த பேச்சு வாங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கும் மருமகளைப் பார்க்கும் போது ரேவதிக்கு மார்போடு அணைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றும். ஆனால் சந்திரிகா அனுமதிக்க மாட்டாள்.
மாமியாரிடமிருந்து அன்பு கலந்த பார்வையோ, இதமான சொற்களோ சந்திரிகாவுக்கு சங்கடமாக இருக்கும். அந்தப் பெண்ணின் கண்களில் ஏதோ இனம் புரியாத மிரட்சி தென்படும். அதை உணர்ந்த பிறகு ரேவதி சந்திரிகாவிடமிருந்து விலகியே இருந்தாள்.
ரேவதி பூட்டைத் திறந்துவிட்டு உள்ளே நடந்தாள். பின்னாலேயே சந்திரிகாவும் வந்தாள். வீட்டுக்குள் வந்ததும் அதுவரையில் அடக்கி வைத்திருந்த துக்கம் ஒரேயடியாக பொங்கி வந்தது. வலுக்கட்டாயமாக அடக்கிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.
மாமியார் வீடு எப்போ, எந்த நேரத்தில் வந்தாலும் துப்புரவாக மனதிற்கு குளிர்ச்சி தருவது போல் இருக்கும். வீட்டை இவ்வளவு சுத்தமாக பராமரிப்பது இவளுக்கு மட்டும் எப்படி சாத்தியமாயிற்று?
“முகத்தை அலம்பிக் கொண்டு வாயேன்” என்றாள் ரேவதி.
சந்திரிகா எழுந்து பாத்ரூமுக்குள் போனாள். அங்கேயும் அப்படித்தான். டிராயிங் ரூம் போல் பாத்ரூம் கூட சுத்தமாக இருந்தது. வாளி நிறைய தண்ணீர். சோப்புப் பெட்டி புதியது போல் காட்சியளித்தது. எங்கேயும் சோப் ஈஷியிருக்கவில்லை. பாதிக்கு மேல் சோப் தேய்ந்திருந்தாலும் புதிதாக தென்பட்டது. மாமியார் வீட்டில் சோப்புப் பெட்டி ஒரு நாளும் தண்ணீரில் மூழ்கியதில். இதுவே தன் வீடாக இருந்தால் பெட்டி நிறைய எப்போதும் தண்ணீர் நிரம்பியிருக்கும். சொப்பை கையில் எடுத்தாலே துண்டு துண்டாக கொழகொழவென்று கையில் ஒட்டிக்கொள்ளும்.
குளிர்ந்த நீரில் முகத்தை அலம்பிக் கொண்டு வந்த போது ரேவதி கையில் டவலுடன் நின்றிருந்தாள்.
வெள்ளை நிற டவல். பழைய டவல்தான் என்றாலும் எங்கேயும் சின்ன கறை கூட இல்லை. வெள்ளை நிற டவலை, பழைய டவலை இவ்வளவு வெண்மையாக வைத்துக் கொள்வது எப்படி சாத்தியம்?
முகத்தைத் துடைத்துக்கொண்டாள் சந்திரிகா.
“இந்த முறை அபார்ஷன் செய்து கொள்வேன் என்று சொல்ல மாட்டாள் இல்லையா. வேலையை விட்டு விடுவாளா? ரவி எப்போதுமே சந்திரிகாவின் வேலையைத்தான் தாக்குவான். நீ வேலைக்குப் போகாமல் இருந்தால் நாம் சந்தோஷமாக வாழலாம் என்பான். வேலைக்குப் போகாமல் உன் சம்பளத்தில் நான் வாழ மாட்டேன் என்பாள் சந்திரிகா. இந்த பிரச்சினை பெரிதாகி பிரிந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்களா? அது மட்டும் உண்மையாக இருந்தால் தான் ரவியின் பக்கம் இருக்க மாட்டாள். அவனைத்தான் கண்டிப்பாள். சந்திரிகா ரொம்ப நல்ல பெண். சுயகௌரவம் கொண்டவள். கஷ்டப்பட்டு உழைக்கும் சுபாவம். வேலையிடம் மதிப்பு கொண்ட பெண். வீட்டிலேயே இருந்துகொண்டு, பொறுப்பாக சமைத்துப் போடுபவர்கள், பனிவிடை செயபவர்கள் நிறையபேர் கிடைப்பார்கள். ஆனால் சுயகௌரவத்துடன், அதைக் காப்பாற்றிக்கொள்ள நித்தியமும் முயற்சி செய்யும் பெண்கள் கிடைப்பது ரொம்ப அறிது. அப்படிப்பட்ட பெண்களின் மதிப்பு ரவி போன்றவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு வேண்டியது சுகம் மட்டும்தான். சுயகௌரவம், போராட்டம், அதனுடைய மதிப்பு இவற்றைப் பற்றி யோசிக்க வேண்டிய தேவையில்லாதவர்களுக்கு எப்படி புரியும்?
முகத்தை அலம்பிகொண்டு வந்த ரேவதி டவலால் துடைத்துக்கொண்டு அதை கொடியில் பிரித்துப் போட்டாள். சந்திரிகா துடைத்துக் கொண்ட டவலுக்காக தேடினாள். அது ஈரமாக நாற்காலியில் குவியலாக கிடந்தது. ரேவதி அதை எடுத்து உதறிவிட்டு கொடியில் உலர்த்தினாள்.
“அத்தை! இந்த வேலைகளை எல்லாம் உங்களால் எப்படி இவ்வளவு நேர்த்தியாக செய்ய முடிகிறது? முகத்தை துடைத்துக் கொண்டதும் டவலை கொடியில் பிரித்துப் போடணும் என்று உங்களுக்கு எப்படி நினைவு இருக்கும்? பழைய டவலாக இருந்தாலும் எப்படி இவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்ள முடிகிறது? வீட்டை இவ்வளவு துப்புரவாக தூய்மையாக எப்படி வைத்துக் கொள்றீங்க?” சந்திரிகா தான் என்ன கேட்கிறோம் என்று தனக்குப் புரியும் முன்பே கேட்டுவிட்டாள்.
ரேவதி பதிலுக்கு முறுவலித்துவிட்டு சும்மா இருந்துவிட்டாள். என்னவென்று பதில் சொல்லுவாள் அவள்?
வாழ்நாள் முழுவதும் செலவழித்து கடைபிடிக்கக் கற்றுக் கொண்ட பழக்க வழக்கங்களைப் பற்றி திடீரென்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லச் சொன்னால் யாராக இருந்தாலும் என்ன சொல்ல முடியும்? இருபது வயது நிரம்பியபோது கையில் ஒரு வயது குழந்தையுடன், கணவனால் கைவிடப் பட்டவள் என்ற பட்டப் பெயருடன் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த தான் எவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு இந்த ஒழுக்கங்களை எல்லாம் கற்றுக்கொண்டாளோ எப்படிச் சொல்லுவாள்?
தன் வீட்டில், தன்னுடைய பொருட்களின்மீது எந்த அழுக்கோ, தூசியோ இல்லாமல் வந்தவர்களின் கண்களுக்கு பளிச்சென்று தூய்மையுடன் காட்சி தருவதற்காக தான் எவ்வளவு முயற்சி செய்தாளோ அதற்கு நூறு மடங்கு தன் உடலும், உள்ளமும் எந்த கறையும் இல்லாமல் புநிதமாக இருப்பதை எல்லோருக்கும் நிரூபிப்பதற்காக முயற்சி செய்தாள். வீடும், உடலும் என்றுமே தூய்மைதான். ஆனால் இந்த தூய்மை என்றால், ஒழுக்கம் என்றால் தனக்கு எவ்வளவு வெறுப்போ யாருக்கும் தெரியாது. வீடு முழுவதும் தூசியாய், குப்பையாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றும். தன் உடல் முழுவதும் சேற்றை, மண்ணை அள்ளி பூசிக்கொண்டு உரத்தக் குரலில் சிரிக்க வேண்டுமென்று தோன்றும். நான் தூய்மையாக இருக்க மாட்டேன். உங்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்கத் தொன்றும். நான் எப்படி இருந்தால் உங்களுக்கு என்ன வந்தது? எனக்கோ என் குழந்தைக்கோ ஒரு வேளையாவது ஒரு கவளம் சாப்பாடு போடுவீர்களா என்று சமுதாயத்தைக் கேட்கத் தோன்றும். ஆனால் எதுவும் செய்யவில்லை. அந்த வெறியை தனக்குள்ளேயே எரித்துவிட்டு தான் மட்டும் தூய்மையாக ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தாள். அப்படி இருப்பதற்காக உடலுடன், உள்ளத்துடன் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. அதனுடைய தேவைகளை நிர்தாட்சண்யமாக கொன்று புதைத்துவிட்டாள்.
இதையெல்லாம் இப்பொழுது சந்திரிகாவால் புரிந்து கொள்ள முடியுமா? தன்னை நெருங்கவே அனுமதிக்காத இந்த பைத்தியக்காரியிடம் தன்னால் மனம் விட்டு எப்படி பேச முடியும்?
ஆனால் ஒரு முறை மனம் விட்டுப் பேச அனுமதித்தால் நன்றாக இருக்கும். சந்திரிகாவால் தன்னைப் புரிந்தகொள்ள முடியும் என்ற நம்பிக்கை ரேவதிக்கு இருந்தது. தன் மனதில் இருப்பதை உடனே சொல்லி விடவேண்டும் என்ற உத்வேகத்துடன் சந்திரிகாவின் பக்கம் பார்த்தாள்.
சந்திரிகாவின் கண்களில் நீர் திரையிட்டிருந்தது. ஏன்? என்னவாகிவிட்டது? யார் என்ன சொன்னார்கள்? ரவி அவசரப்பட்டு எதாவது சொல்லி அவள் மனதை காய்படுத்திவிட்டானோ? கையை நீட்டியிருப்பானோ? அது மட்டும் உண்மையாக இருந்தால் மகனின் கன்னத்தில் அறைந்து அவனுக்கு புத்தி சொல்லுவாள்.
சந்திரிகாவின் தோளில் கையைப் பதித்தாள் ரேவதி. சந்திரிகாவின் கண்களிலிருந்து நீர் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது.
“என்ன நடந்ததும்மா?” ரேவதி பதற்றத்துடன் §க்டாள்.
“சரத்தை பள்ளியிலிருந்து நீக்கிவிட்டார்கள் அத்தை. அவனுக்கு படிப்பு வரவில்லை. எல்லாவற்றிலும் பெயில். ரொம்ப விஷமம் செய்கிறான். நேற்று ஒரு பையனைக் கல்லால் அடித்து ரத்த காயமாகிவிட்டதாம். இன்று பிரின்சிபால் என்னை அழைத்து அவனை பள்ளியிலிருந்து நீக்கி விடப் போவதாக சொன்னாள்.”
விஷயம் புரிந்ததும் ரேவதியின் பதற்றம் குறைந்தது. சந்திரிகாவின் அழுகை மட்டும் நிற்கவே இல்லை.
“எனக்கு குழந்தையை வளர்க்கத் தெரியாதா அத்தை? என்னால் முடிந்த வரையில் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அவன் மாறவில்லை. இனிமேல் என்னால் முடியவில்லை. எனக்குக் குழந்தையை வளர்க்கத் தெரியவில்லை என்று உங்கள் மகன் என்னை ஏசிக் கொண்டிருக்கிறார். நான் என்ன செய்யட்டும்?”
“கிழித்தான். அவன் சின்ன வயதில் சரத்தைவிட ரொம்ப விஷமம். எத்தனை குழந்தைகளை அடித்திருக்கிறான் தெரியுமா? படிப்பிலும் ரொம்ப சுமார்.”
“உண்மையாகவா அத்தை?” சிவந்து விட்ட சந்திரிகாவின் கண்களில் வியப்பு எட்டிப் பார்த்தது.
“உண்மையாகத்தான் சொல்கிறேன்.” ரேவதி சின்ன வயதில் செய்த விஷமத்தை, செய்யாததையும் சேர்த்து கதையாகச் சொன்னாள். “இப்போ சரத் படிக்கும் ஸ்கூல் தரமானது இல்லை. சும்மா அடிப்பதும் நொற்றுப் போட வைப்பதும் தவிர குழந்தைகளுக்கு படிப்பு என்றால் பிரியம் ஏற்படும் படியாக சொல்லித் தருவதில்லை. போன வாரம் தான் ஒரு நல்ல பள்ளியைப் பற்றி பேப்பரில் படித்தேன். அங்கே குழந்தைகளை அடிக்க மாட்டார்களாம். பள்ளிக்கு புத்தக மூட்டையை சமக்கத் தேவையில்லையாம். வீட்டுப் பாடம் தர மாட்டார்களாம். அந்தப் பள்ளியில் சரத்தை சேர்ப்போம்.”
“உண்மையிலேயே அப்படி ஒரு ஸ்கூல் இருக்கிறதா?” மாமியார் தன்னை தேற்றுவதற்காக சொல்கிறாளோ என்ற சந்தேகம் வந்து சந்திரிகா கேட்டாள்.
“இரு. கொண்டு வந்து காட்டுகிறேன்.” ரேவதி எழுந்து உள்ளே சென்று நான்கு நாடகளுக்கு முன்னால் வந்த பேப்பரைக்கொண்டு வந்த காண்பித்தாள்.
சந்திரிகாவின் முகத்தில் இருந்த கவலை மாயமாமகிவிட்டது.
“ரவி சொன்னதை எல்லாம் பொருட்படுத்தாதே. அவன் ஆண்பிள்ளை. தாய்மார்களின் கஷ்டங்களைப் பற்றி அவனுக்கு எப்படி தெரியும்?”
ரேவதி சொன்னதைக் கேட்டு சந்திரிகாவின் முகம் மலர்ந்தது.
அந்த வாய்ப்பை நழுவவிட ரேவதி விரும்பவில்லை.
பேசினாள். பேசினாள். தாமிருவரும் ஒரே இனம்… பெண் இனம் என்று சந்திரிகா உணரும் வரையில் பேசிக்கொண்டே இருந்தாள்.
“எனக்கு முதலிலிருந்தே, சொல்லப் போனால் கொஞ்சம் யோசிக்கத் தெரிந்ததிலிருந்தே மாமியார் என்ற சொல்லைக் கேட்டாலே பயம். மருமகளை துன்புறுத்துவார்களாம். மாமியாரின் தொல்லையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மருமகள்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். மாமியாரிடமிருந்து விலகியே இருக்கணும் என்று ரவியுடன் அறிமுகம் ஏற்படுவதற்கு முன்பே தீர்மானித்திருந்தேன். ரவி ஒரே மகன் என்றும், உங்களுக்கு வேறு யாரும் இல்லை என்றும் தெரிந்த பிறகு என் பயம் மேலும் அதிகரித்துவிட்டது. மருமகளாக வந்த பிறகு நீங்கள் என்னை துன்புறுத்துவீர்களோ என்று பயந்தேன். உங்களைப் பார்த்த பிறகு அந்த பயம் மேலும் அதிகரித்துவிட்டது. நீங்கள் என்னை குறை சொல்வீர்கள் என்றும், கிண்டல் செய்வீர்கள் என்றும் அஞ்சினேன். நீங்கள் வீட்டுக்கு வந்தால் குற்ற உணர்வால் தவிப்பேன். என்னிடம் குறையைக் கண்டுபிடிப்பீர்களோ என்று சங்கடப்பட்டேன்.”
ரேவதி அன்பு கலந்த பார்வையுடன் மருமகளைப் பார்த்தாள். பெண்பளுக்கு சில குணாதிசயங்களை, மாமயார் லட்சணங்களை, மருமகளின் லட்சணங்களை, நாத்தானாரின் லட்சணங்களை வலுக்கட்டாயமாக திணித்துவிட்ட சமுதாயம் அவளிடம் இயற்கையாக இருக்கும் மனித நேயத்தை அடக்கி விடுகிறதா? மனிதர்களுக்கிடையே இருக்க வேண்டிய நியாயமான உறவுகள் இப்படி வக்கிரித்துப் போவானேன்? நான்கு வருடங்கள் கழிந்த பிறகும் இருவருக்குமிடையே நட்பு ஏற்படவில்லை என்றால் மனித உறவுகள் எந்த அளவுக்கு மோசமாகிக் கொண்டு வருகின்றன?
சந்திரிகா முதல் முறையாக லேசாகிவிட்ட மனதுடன் மாமியாரை நட்புடன் நோக்கினாள்.
“முகம் முழுவதும் மை ஈஷிவிட்டது. பைத்தியம் போல் அழுதிருக்கிறாய். போய் முகம் அலம்பிக் கொண்டு வா” என்றாள் ரேவதி.
சந்திரிகா பாத்ரூமுக்குச் சென்று முகத்தை சோப் போட்டு அலம்பிக் கொண்டு வந்தாள். ரேவதி கொடுத்த டவலுடன் முகத்தைத் துடைத்துக் கொண்டு கையோடு அதை உலர்த்தப் போனாள்.
“பரவாயில்லை. அப்படியே இருக்கட்டும். அப்புறமாக உலர்த்திக் கொள்ளலாம். இன்று முதல் நானும் கொஞ்சம் சோம்பேறியாக இருக்க பழகிக் கொள்கிறேன். என்னதான் நடக்கிறதோ பார்ப்போம் ” என்றாள் ரேவதி சந்திரிகாவின் கையிலிருந்து டவலை வாங்கிக் கொண்டே.
“வேண்டாம் அத்தை. எனக்கு பொறுப்பும் பொறுமையும் இல்லாததால் வந்த சோம்பேறித்தனம்தான். அந்தந்த வேலைகளை அப்பொழுதே செய்து முடிப்பதுதான் அழகு” என்றாள் டவலை உலர்த்திக்கொண்டே.
“யாருக்கு எப்படி முடியுமோ அப்படி இருப்பார்கள். சும்மா அதையே நினைத்து கவலைப்படாதே” என்றாள் காபி கலப்பதற்காக சமையலறைக்குள் சென்றுகொண்டே.
ரேவதியின் பின்னாலேயே சந்திரிகாவும் சமையலறைக்குள் சென்றாள். மாமியாரிடம் சொல்லுவதற்கு இன்னும் ஏதோ இருந்தது. ஆனால் அதைச் சொல்வதற்கு தயக்கமாகவும் இருந்தது. இத்தனை நட்பு ஏற்பட்ட பிறகு அந்த வார்த்தை சொல்லாமல் இருப்பது அநியாயம் என்று ஒரு பக்கம் மனச்சாட்சி துளைத்துக் கொண்டிருந்தது. மாமியார் காபி கலந்து முடிக்கும் வரையில் மனதிலேயே ஒத்திகை பார்த்துக்கொண்டாள். காபி டம்ளர்களை எடுத்துக் கொண்டு இருவரும் ஹாலுக்கு வந்தார்கள்.
சந்திரிகா ஒரு மடக்கு காபியைக் குடித்துவிட்டு “காபி ரொம்ப நன்றாக இருக்கிறது அத்தை. உங்களுக்கு எங்களுடன் சேர்ந்து இருக்கலாம்னு தோன்றுகிறதா? எல்லோரும் ஒன்றாக இருப்போமா?” தவறு செய்து விட்டவள் போல் தலையைக் குனிந்துகொண்டே கேட்டாள்.
ரேவதி சிரித்தாள். ” இல்லை சந்திரிகா! எனக்கு இப்படியே நன்றாக இருக்கிறது. உங்களுடைய திருமணமான புதிதில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது உண்மைதான். ஆனால் இப்பொழுது இப்படி இருப்பதே நன்றாக இருக்கிறது. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்கிறேன். யாருக்காவது இடைஞ்சலாக இருக்குமோ என்ற கவலை இல்லை. யாருக்கும் இடைஞ்சலாக இல்லாமல் யாராலும் இடைஞ்சல் ஏற்படாமல் இப்படி இருப்பது நிம்மதியாக இருக்கிறது. நீ மறைமுகமாக எனக்கு உதவிதான் செய்திருக்கிறாய். என்னுடைய நேரத்தை என் விருப்பம் போல் செலவழித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னால் ஏதாவது ஒரு பொறுப்பு இருந்துகொண்டே இருந்தது. எனக்கு ரொம்பவும் முடியாவிட்டால் உங்களிடமே வருகிறேன், சரிதானே.” மருமகளின் மனதில் குற்ற உணர்வை குறைத்து இருவருக்குமிடையே பந்தத்தை மேலும் வலுப்படுத்தும் முயற்சி செய்தாள் ரேவதி.
சந்திரிகா முதல் முறையாக ரேவதியை மாமியாராக அல்லாமல் ஒரு மனுஷியாகப் பார்த்தாள்.
தெலுங்கில் வோல்கா (P.லலிதகுமாரி) தமிழாக்கம் கௌரி கிருபானந்தன்
email id tkgowri@gmail.com
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- நிருத்தியதானம்
- இது பின்நவீனத்துமல்ல-2 (மொழி அறிவும் ஆதிக்க மனோபவாமும்)
- சமஸ்க்ருதம்: யோசிக்கும் வேளையில்…..
- குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009
- கவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை – ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டுவிழா
- தேறுக தேறும் பொருள்
- தமிழ் இலக்கியத்தோட்டம் விண்ணப்பப்படிவம்
- ஜெயமோகன் நிகழ்ச்சி நிரல்
- யுகமாயினியின் ஆகஸ்ட் மாத இலக்கியக் கூடல்
- படைத்தல் விதி
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 47 << காதலி கனல் அரங்கு >>
- நஞ்சூட்டியவள்
- பாரமா ? ஞானமா?
- நான்கு கவிதைகள்
- என் காதலி வருவது போல்
- வேத வனம் – விருட்சம் 45
- வழியனுப்பு
- சிங்கப்பூர் தேசிய தினம் 44
- சுவர்கள்
- மூனாவது
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஏழு
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினைந்தாவது அத்தியாயம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – 1
- மக்களாட்சியும் மணிமண்டபங்களும்
- பேருந்து பயணத்தில் ஏற்பட்ட சிறு அனுபவம்
- ‘ரிஷி’யின் கவிதைகள்
- பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா (1925-2004)
- பசி:
- நேற்று தொடங்கிய ஒரு மழைக்காலம்
- உடைந்த பொம்மைகள்
- சம்பவம்
- இடைவெளி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு காதலனின் அழைப்பு >> கவிதை -14 பாகம் -2 (முன் பாகத் தொடர்ச்சி)
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -6