சுழற்சியில் பிரபஞ்சம் ( ‘cyclic ‘ Universe) – கேள்வி பதில்கள்

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue

டாக்டர் டேவிட் ஒயிட்ஹவுஸ்கேள்வி :பிரபஞ்சம் ஆரம்பிக்கவில்லை என்றால், அது எப்படி இப்போது இருக்கிறது ?

பதில்: இப்போது பிரபஞ்சம் இருக்கிறது என்பதற்காக அதற்கு ஒரு ஆரம்பம் இருக்கவேண்டும் என அவசியமில்லை. காலம்காலமாக இருந்துகொண்டே இருக்கலாம்.


கேள்வி: சரி, இதற்கு ஆரம்பம் இல்லை என்றால், எப்படி நான் சமீபத்தில் பிரபஞ்சம் 14 பில்லியன் வருடங்கள் முதியது என்ற அறிக்கையைப் படித்தேன் ?

பதில்: பிரபஞ்சத்தை விளக்க இதுவரை இருக்கும் விளக்கங்களிலேயே சிறந்த விளக்கம் பெருவெடிப்பு தேற்றம் (Bigbang theory) தான். இப்போது இருக்கும் நட்சத்திரக் கூட்டங்கள் (galaxy) ஒன்றை ஒன்று விட்டு விலகி ஓடுவதால், பெரும்பாலான வானவியலாளர்கள் முன்பு இந்த நட்சத்திரங்கூட்டங்கள் நெருங்கி இருந்திருக்க வேண்டும் என எண்ணுகிறார்கள்.

திரைப்படம் போல கருதினால், இந்த ஓட்டத்தை பின்னோக்கி ஓட்டினால், சுமார் 14 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒரு பெரிய வெடிப்பில் காலமும் வெளியும் தோன்றியிருக்க வேண்டும்.

இந்த பெருவெடிப்புக்கு முன்னர் என்ன நடந்தது என்பது விவரிக்கக் கடினமானது. ஏனெனில் அதற்கு முன்னர் காலமே இல்லை.

இந்த பெருவெடிப்பு தேற்றம் (அல்லது கோட்பாடு) பல வானவியலாளர்களுக்கு பிடித்தமாக இல்லை. ஏனெனில், வானத்தில் இருக்கும் சில குணாம்சங்களை இதனால் விளக்க முடியவில்லை.


கேள்வி: பெருவெடிப்பையும், பின்னர் வரப்போகும் பெரு அமுக்கத்தையும் அறிவியல் விளக்கமுடியவில்லை, இதுதானே பிரச்னை ?

பதில்: சமீபகாலத்தில், M-தேற்றம் அல்லது M-கோட்பாடு என்ற ஒன்று பேசப்பட்டு வந்தது. இரண்டு ஆரம்பகால பிரபஞ்சங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால் வந்ததுதான் பெருவெடிப்பு என்று இந்த தேற்றம் கோரியது. சில வானவியலாளர்கள், புவியீர்ப்பு விசையை ஆராய்ந்து முன்னர் இருந்திருக்கக்கூடிய ஆரம்பகாலப் பிரபஞ்சத்தைப் பற்றி அறியமுடியும் எனக்கருதுகிறார்கள்.


கேள்வி: இருட்சக்தி என்றால் என்ன ?

பதில்: சில வருடங்களுக்கு முன்னர், வானவியலாளர்கள் கண்டறிந்தது ஆச்சரியத்துக்கு காரணமானது. அதாவது நட்சத்திரக்கூட்டங்கள் (கேலக்ஸிகள்) ஒன்றைவிட்டு ஒன்று விலகி ஓடினாலும், அவை ஓடும் வேகம் அதிகரிக்கிறது என்பதைக் கண்டார்கள். பெருவெடிப்பு நடந்திருந்தால், பெருவெடிப்பு முடிந்து நிலையானபின்னால், பிரபஞ்சம் சீராக ஒரே வேகத்தில்தான் விரிவடையவேண்டும், அல்லது சுருங்க ஆரம்பிக்க வேண்டும். இந்த வேக அதிகரிப்பை விளக்க, வானவியலாளர்கள் இருட்சக்தி என்ற ஒன்றை கணக்கில் சேர்த்துக்கொண்டார்கள். அதாவது இந்த இருட்சக்தி எல்லா நட்சத்திரக் கூட்டங்களையும் ஒன்றைவிட்டு ஒன்று விலகி ஓட வைக்கிறது என்ற பொருளில்.


கேள்வி: காஸ்மோஸ் (பிரபஞ்சம்) என்பது என்ன ?

பதில்: காஸ்மோஸ் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தை. இது ஒழுங்கு என்ற பொருளில் (குழப்பத்துக்கு எதிர்ப்பொருளில்) அர்த்தமாகிறது. இதுவரை இருந்ததும், இதற்குபின் இருக்கப்போவது அனைத்தையும் விளக்க இந்த வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது.


கேள்வி: சரி, ஆக நிறைய பெருவெடிப்புகள் இருக்கின்றன என்றும் முடிவற்ற சுழற்சி என்றும் ஒப்புக்கொண்டால், அடுத்த பெருவெடிப்பு எப்போது ?

பதில்: பழைய தேற்றத்தின் படி, பிரபஞ்சம் உண்மையிலேயே அதிகரிக்கும் வேகத்தில் விரிவடைகிறது என்று கொண்டால், இன்னொன்று இருக்காது. ஆனால், ஸ்டெயின்ஹார்ட், டுரோக் சொல்வது படி பார்த்தால், விரிவடைந்து கொண்டே போய், இருட்சக்தியின் குணாம்சம் மாறி, மாபெரும் வெற்றிடத்தில் இன்னொரு பெருவெடிப்பு நடக்கும்.


கேள்வி: ஆக, பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமும், அதிவிரைவில் ஒன்றை ஒன்று விலகி ஓடினால், நாம் சூரியனைத் தாண்டி போய், உறைந்து சாவோமா ?

பதில்: பிரபஞ்ச அளவில் அது குறிப்பிடத்தக்க விரைவாக இருந்தாலும், அருகாமையில் அதன் விளைவு மிக மிகக்குறைந்ததாகத்தான் இருக்கும்.


கேள்வி: ஏன் பொருட்கள் இது போல இருக்கின்றன ?

பதில்: மனித குலம் மனிதகுலமாக இருப்பதன் காரணம் நாம் கேள்விகள் கேட்பதனால்தான். கேள்விகள் இதைவிடப் பெரியதாக இருக்கப்போவதில்லை. இந்த பூமியின் ஒரு மூலையிலிருந்து இவ்வளவு விஷயத்தை நாம் அறிந்து கொண்டிருப்பதற்கு உண்மையிலேயே பெருமைப்படவேண்டும்.

Series Navigation