சுற்றம்..

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

– மோகனா


சுற்றி நின்று சுகம் கெடுக்கும்
உன்னை உன் மனசாட்சியை விடவும்
உன்னிப்பாய் உற்று நோக்கும்.

முகம் கண்டால் பல் இளிக்கும்
முதுகின் பின்னால் பரிகசிக்கும்
சிரிக்க பேசினால்
அடக்கம் அற்றவள் என ஏசும்
அளந்து பேசினால்
முகம் கொடுக்காது முசுடு எனும்.

எல்லோரிடமும் நட்பு கொண்டால்
உன் கற்பு சந்தேகிக்கும்.
ஒருவனிடம் நட்பு பாராட்டினால்
காதல் என ஒலிபரப்பும்..

தனித்து வாழ தலை கொண்டால்
படித்த திமிர் என தலைத் தட்டும்.
உத்தியோகத்தில் உயர்ந்தால்
உன் பெண்மையை காரனமாக்கும்.

உன் தன்னம்பிக்கையை
தகர்த்து எரிய – இரட்டை நாக்குடன்,
முகத்திரைக்குள் தலை விரிகோலமாய்
சுற்றித் திரியும்..

பிணம் தின்னும் கழுகை போல
உடன் இருந்தே
உன் வலிகளை
கிளறி சுகம் தேடும் சுற்றம்..

இது என்றால் அது என்றும்
நல்லது என்றால் கெட்டது என்றும்
தடித்த வார்ததைகளால்
உன் செய்கையை விமர்சிக்கும்.

உன்னை நொண்டி குதிரையாய்
பின்னுக்கு தள்ள
எல்லா சாகசமும் செய்யும் – நீயோ
பந்தய குதிரையாய் ஓடு.

புலிகளின் பாய்ச்சல்களுக்கு
பதுங்கலாம் – ஓநாய்களின்
ஊளைகளுக்கு நீ ஏன்
செவி சாய்க்க வேண்டும்..

காரனம் இல்லாமல்
கரையும் காக்கை போல
கரைந்து கரைந்து
தானே அடங்கட்டும்
இல்லை வேறு செவி தேடி
செல்லட்டும்..

உன் நியாயங்களை
முயற்சியின் முந்துதல்களை
சுற்றம் எனும் சுயநல
கூட்டத்துக்காய் பலி கொடுக்காதே!

T_Mohana_Lakshmi@eFunds.Com

Series Navigation

மோகனா.

மோகனா.

சுற்றம்

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்


பார்வை மட்டுமட்டாயிருந்தும் சந்தியால் திரும்பிய ஆளின் அசைவு தூரத்தில் தெரிந்த போதே அது அவன்தானென்று மட்டுக்கட்டிக் கொள்ள முடிந்தது. காலை எட்டிப் போட்டு விசிறி நடக்கிறதும், மாற்றிப் போட இல்லாதது மாதிரி பட்டையடித்து வெளிறிப்போன பச்சைச் சட்டையும், தின்று விளைந்த சதிரமும்… அவனேதான். சின்னனிலிருந்து அவருக்கு பழகிப் போன தோற்றம்.

அவனை நிமிர்ந்து பார்ப்பதே பாவம் என்பது அவர் கணிப்பு. அழுக்கில் ஊர்ந்து திரியும் கறப்பொத்தான் பூச்சியைப் பார்க்கிற அருவருப்பு. நேருக்கு நேர் பார்த்தே ஆறு மாசமாச்சு. இத்தனைக்கும் ஒரு வேலி, அண்ணன் தம்பி பிள்ளைகள் –

ஒன்றுவிட்ட தம்பி. ஆறு மாசமாக தொடுசலேதும் இல்லையென வெளியில் சொன்னால் சங்கைக் குறைவு.

ஆருடைய கண்ணில் விழிக்கக் கூடாதென இருந்தாரோ, அவன் இதோ முழுசாக சந்தியடியில் வந்து கொண்டிருக்கிறான். இந்த நேரமென்று பார்த்து தெருவில் ஈ காக்கை கூட இல்லை. ஆரும் நின்றாலாவது புதினம் கேட்கிற சாட்டில் அவன் கடந்து போகுமட்டும் முகத்தில் விழிக்காமல் மினக்கெடலாம்….அவர் அங்குலமாய் நகர்ந்தார் நீரில் தவறி விழுந்து வெளியேறத் துடிக்கும் பூச்சியின் தவிப்பில்.

‘காற்றிறங்கிய சைக்கிளுக்குப் பச் போடவென்று உருட்டிக் கொண்டு தெருவில் இறங்கியாச்சு. இனித் திரும்பிப் போகேலாது. தன்னைக் கண்டு பயத்தில் போகிறாரென்று நினைத்தாலும் நினைப்பான். அப்படிக் கொந்தவன்தான். எனக்கென்ன பயம். பண்ணின காரியத்துக்கு அயலட்டைக்குள் மொக்காடு போட்டுத் திரிய வேண்டியவன் அவன்தான்;. வாழும் வளரும் பிள்ளையென்றும் பாராமல் என்னுடைய பிள்ளையை வம்பில் மாட்டிவிட்ட சகுனி. என்ன செய்யிறது பொறுமையாப் போக வேண்டியதாப் போச்சு. நாய் கடிச்சா திருப்பிக் கடிக்க முடியுமா ?’

‘சித்தப்பாவுக்கு இப்படியொரு பிள்ளை வந்து வாய்ச்சானே. அப்பாவுக்கு ஐஞ்சு வயசு இளமை சித்தப்பா. மொய்க்கிற இலையானுக்கு விசுக்கினாலும் பட்டுவிடுமோவென்று பயந்து கொண்டுதான் விசுக்குவார். புல்லில் நடந்தாலும் நோகாமல்தான் நடப்பார். அப்படிக் கொந்தவருக்கு பிறந்தவன் செய்து விட்ட வேலை!’

அவரது தகப்பனும் சிறிய தகப்பனும் சீவனோட இருந்த காலத்தில் தோட்டமில்லாத காணிகள் குறைவு அந்தப் பகுதியில். இரண்டு பேருக்கும் பக்கத்துப் பக்கத்துக் காணி. மணியோசை கேட்கும் சமீபத்தில் முத்துக்குமாரசுவாமி கோயில் இருந்ததால் அண்ணனுக்கு பெயர் முருகேசு, தம்பிக்கு வேலாயுதம். தமக்கு அன்னியோன்யமாகிப் போன கடவுளின் பெயர்களை பிள்ளைகளுக்கு வைக்கும் பெற்றோர் அப்போது ஏராளம்.

வெற்றிலை முருகேசு என்றால் ஊரில் நல்ல மாதிரி. வீட்டை வளைத்து ஆளுயரத்துக்கு பச்சைப் பசேலாய் கொழுந்து வெற்றிலைத் தோட்டம். பக்குவமாகப் பராமரிக்கா விட்டால் சோர்ந்து போகும் துடக்குத் தாங்கமாட்டாத பயிர். குழந்தைப் பிள்ளைக்கு நேரத்துக்கு பால் கொடுக்கிற மாதிரி நீர் பாய்ச்ச வேனும். படர்ந்து சிலிர்க்கிற கொடிகளுக்கு பாத்தி நெடுக வரிச்சுத்தடி நட்டு தாங்கிப் பிடிக்க வேனும். ஒவ்வொரு வெற்றிலைக் கொடியும் முருகேசுவிற்குப் பெற்றபிள்ளை மாதிரி. முற்றிய வெற்றிலைகளை பறிக்கும் போது நோகாமல் கிள்ளுவார், பகழி அடுக்கும் போது அழகு பார்த்து, அளவு பார்த்து செல்லம் பொழிவார். அவ்வளவு பக்குவம்.

அவரது ஜாக்கிரதையான பார்வையில் ஒவ்வொரு வெற்றிலையும் சடைச்சுக் கொண்டு நிற்கும். அதில் ஒன்றைக் கிள்ளி சுண்ணாம்பு தடவி நாறல் பாக்கு சேர்த்து ஒருவாய் போட்டால் காரமும் மணமும் ஆளைத் தூக்கும். முருகேசு வெற்றிலை போட்டதில்லை.

தம்பி வேலாயுதம் நாள் முழுக்க வெற்றிலை போடுவார். சாப்பாடு ரெண்டாம் பட்சந்தான். அவரின் காணியில் கத்தரியும் மிளகாயும் பயிரிடுவார். இடுப்பளவு உயரத்தில் நாவல் கட்டியாகத் தொங்கும் கத்தரிக்காய்களைக் காண கண் ரெண்டும் பத்தாது. ஞுாயிற்றுக்கிழமைச் சந்தைக்காக அறுவடை செய்து கடகப்பெட்டி நிறைய வழிய வழியக் கொண்டு வந்து வீட்டு முற்றத்தில் இறக்கினால் கண்ணூறு பட்டுப் போகும்.

வெள்ளி அறுநாக்கொடிக் கச்சைக் கட்டோடு அண்ணனும் தம்பியும் கிணற்றில் துலா மிரிப்பதைப் பார்க்க வேனும். மூத்தவரின் காணிக்குள் இருந்தாலும் துலாக்கிணறு ரெண்டு பேருக்கும் பொது. அடக்கமாக இழைத்த பெரிய கடகப் பெட்டிதான் வாளி. கயிறுக்கு பூட்டு;க்கம்பு. அண்ணன் கடகப் பெட்டியை கிணற்றில் இறக்கி நீரைக் கோலி அள்ள, தம்பி துலா மிரிப்பார். இராகம் தவறாத பாட்டுக்கு தாளம் தப்பாத மேளம் மாதிரி ஒரே சீரில் துலாமிரிப்பு நடக்கும். சீவியம் முழுக்க அவர்களுக்கு தோட்டந்தான். உறவில் விரிசல் வந்ததில்லை. காணிகளுக்கும் வேலி கிடையாது.

அதெல்லாம் ஒரு காலம். அவர்களின் கண்ணோடு தோட்டமெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போச்சு. துண்டு துண்டாய்ப் பிரித்து பெண் பிள்ளைகளுக்குச் சீதனமாக் குடுத்தாச்சு. புதுச் சொந்தங்களின் வரவுகளோடு வேலிகள் முளைத்தன. ஒவ்வொரு துண்டிலும் தனித்தனிக் கிணறுகள் ஆகின.

சிறிய தகப்பனின் பிள்ளைகள் தண்ணிப் பாவனையை தங்கள் தங்கள் கிணற்றிலேயே வைத்துக் கொண்டார்கள் ஒரு சின்ன விதி விலக்கோடு. செத்த வீட்டுக்குப் போய் வருகிற துடக்கை மட்டும் மூத்தவரின் வளவிலிருந்த துலாக்கிணறில் கழுவி தங்களுக்கு அதில் உள்ள பங்கினை நிறுவிக் கொண்டார்கள். சொந்தமாக தனிக்கிணறு இருக்க துடக்குக் குளியலுக்கு மட்டும் தன் கிணற்றுக்கு வருவதைக் காண அவருக்குப் பற்றிக் கொண்டு வரும். வயசில் மூத்ததால் பெரிசு படுத்த முடியாமல் அடங்கிப் போவார். நாடு கிடக்கிற கிடையில் இதுகளைத் தூக்கிப் பிடிக்கக் கூடாதென மறந்து போவார். ஆவேசம் மட்டும் மனசுக்குள் புகைந்து கொணடிருக்கும். அவரின் மூத்த மகன் ஒருநாள் பொறுக்க மாட்டாமல் கேட்டான்.

“இது என்ன நியாயமப்பா ?”

“என்னப்பு செய்யிறது. ஒன்டுக்குள்ள ஒன்டு”

அவன் சமீபித்துக் கொண்டிருந்தான். முகத்தில் முழிக்கக்கூடாதென்பதற்காக குமர்ப்பிள்ளை போல குனிந்து போக அவர் தயாராயில்லை. அதற்காக வானம் பார்க்க நிமிர்ந்து நடக்கவும் முடியவில்லை. வேலியோரம் ஒதுங்கவும் இஷ்டமில்லை. தெருவில் தனக்குள்ள பாத்தியதையை அவனுக்காக விட்டுக் கொடுக்க முடியாது. அவன் வருவது தெரிய வேண்டும். நேராகப் பார்க்கவும் கூடாதுஸஸஸஸஸஅதற்கேற்றாற் போல் விழிகளை வீதியிலிருந்து உயர்த்தாமல் நடந்தார் அவர்.

ஆறுமாசமாக அண்ணனின் முகத்தில் முழிக்க முடியாத வெக்கத்திலும் துக்கத்திலும் ஒளித்துத் திரிந்தவன் அவன். இப்படித் திடுமுட்டாக எதிரே வருவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. மளிகைச் சாமான் வாங்குகிற சாட்டில் சந்திக்கடையில் நின்றிருக்கலாம். இனித் திரும்பிப் போக முடியாது. நடந்து முடிக்கத்தான் வேண்டும். நெருங்க நெருங்க நெஞ்சு டக்கு டக்கென்று அடிப்பது அவனுக்குக் கேட்டது.

‘என்னை மீறி எல்லாம் நடந்திட்டுது. அண்ணனின் மூத்த மகன் மட்டும் அன்றைக்கு அலவாங்கோடு சண்டித்தனம் காட்டியிருக்காவிட்டால் ஒன்றும் நடந்திருக்காது. நீங்கள் துப்புரவாகத் திரிய வேனும். நாங்கள் துடக்குப் பிடிச்சு சீரழிய வேனும் அப்பிடித்தானே. இனிமேல்பட்டு எங்கட கிணத்தில காலை வைக்கட்டும் வெட்டித் தறிச்சுப் போட்டுறுவன்ஸஸஸஸஸ…சிறிய தகப்பன் என்கிற மட்டுமரியாதை கூட இல்லாமல் கண்மண் தெரியாமல்; திட்டிப்போட்டான். சூட்டோடு சூடாக கதியால் தறிச்சு பொதுவழியை மறிச்சு வேலியும் போட்டு விட்;டான். அண்ணன் ஒரு சொல்லுச் சொல்லியிருக்கலாம். அதுதான் எனக்குச் சரியான கவலை.”

‘பிழையிருந்தாலும் அதைச் சொல்வதுக்கு ஒரு முறைதலையிருக்கு. வயசு வித்தியாசம் வரம்பிருக்கு. என்னைக் கூப்பிட்டு – “தம்பி இன்னன்ன விசயம் இன்னன்ன மாதிரியென்று காதோடு சொல்லியிருந்தால் கிணத்து விசயம் அதோடு முடிஞ்சிருக்கும். கூத்தாடிக் குழப்பின மாதிரி மகனை ஏவிவிட்டு வேலியும் அடைச்சிட்டார். நான் மறித்தும் கேளாமல், அலவாங்கால் அடிக்க வந்தானென்று என் மகன் பொலிசில் என்றி போட்டுட்டான். எங்கேயென்று இருக்கிற பொலிசும் அண்ணனின் மகனைக் கொண்டு போய் நல்லாச் சாத்திப் போட்டாங்கள்.’

“அதோடு எங்கள் உறவில் வேலி விழுந்து போச்சு. கதைபேச்சு முற்றாக அற்றுப் போச்சு.”

அவரும் அவனும் எதிரும் புதிருமாக கண்டும் காணாமல் பட்டும் படாமல் சீவித்த அந்த முறுகலான காலத்தின் ஒரு மாலைப் பொழுதில் மூலைவீட்டுக் கந்தவனம் அவர் வீட்டுக்கு வந்தார். உன்னுடைய தம்பி சரியாக் கவலைப்படுறான்டாப்பா, கோபதாபத்தை மறந்து தன்னோட கதைக்கட்டாம். அவனுக்கும் இப்ப சலரோகம் மருந்தெடுத்தும் அடங்குதில்லை பாக்கப் பாவமாயிருக்கு என்றார். கந்தவனத்திற்கு தான் நோர்வே வெளியுறவு மந்திரி என்ற நினைப்பு. இரண்டு குடும்பமும் சேரட்டும் என்ற ஆசையில் கையால் மடியால் போட்டு உண்மையாகவே வாதாடினார்.

இந்த ஆறு மாசமாக ஐந்தாறு தரம் சமாதானக்கொடி பிடித்தபடி கந்தவனம் வந்து போன சீர்தான். எதுவும் பெரிதாக நடக்கவில்லை.

இருவரும் நெருங்கி வந்து விட்டார்கள். அவன் அந்தப் பக்கம் இவர் இந்தப் பக்கம் – பத்தடி இடைவெளியும் இராது. ஆறு மாதமாக ஆளையாள் முகம் பாராமல் பிடிக்கிற மெளன யுத்தம். இடையில் கந்தவனம் பிடிக்கிற சமாதானக் கொடி. ஒன்று என்றவுடன் ஓடி வந்து நிற்கிற ஒன்றுக்குள் ஒன்றாயிருந்த சொந்தம்ஸஸஸஸஎல்லாம் ஒரு கணத்துள் அவரது மனத்தட்டில் நிரம்பி வழிந்தது.

சலரோகமாம். எப்படியிருக்கிறானோ தெரியேல்லை. ஒரு தரம் நிமிர்ந்து பாத்தால் என்ன. வேண்டாம். செய்ததெல்லாம் சரியென்று அங்கீகாரம் கொடுத்தது மாதிரி ஆகிவிடும். அதற்;காக குனிந்து கொண்டே நடந்தால் பிழை செய்தவன் நான் என்று நினைத்துப் போடுவான்….திடாரெனத் தாக்கிய கெளரவக் காய்ச்சலில் அவர் அலட்சியமாகத் திரும்புவது போல் நிமிர்ந்தார்.

அந்தப் பக்கம் வந்த அவனும் அதே நேரத்தில் தற்செயலாக நிமிர, இருவர் கண்களும் ஒரு கணம் சந்தித்துக் கொண்டன.

அவர் வருகிற வரத்தில் தன்னை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டார் என்றே அவன் எண்ணியிருந்தான். இந்த லட்சணத்தில் அவரோடு பேச முற்பட்டால் என்ன நடக்கும் என்பது அவனுக்குத் தெரியும். கண்கடை தெரியாமல் பேசி விட்டுத்தான் போவார்.

வேறு யாருமில்லாத அந்த வேளையில் வெகு அருகாமையில் நேருக்கு நேர் சந்தித்த அதிர்ச்சியில் அவர்கள் பேச்சேதும் வராமல் ஒரு கணம் விக்கித்து நின்றார்கள். அடுத்த கணம் ஆளையாள் விலத்திச் சென்றார்கள். இருவருக்குமே விலத்தி வந்ததில் தர்மசங்கடத்திலிருந்து தப்பி வந்த ஆறுதல்.

நடக்க நடக்கத்தான் நெஞ்சுக்குள் என்னவோ செய்தது.

‘சே…மெல்லீசா சிரிச்சிருக்கலாம்’!

***

karulsubramaniam@hotmail.com

Series Navigation

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்