சு.ரா.வுக்கு இறப்பே இல்லை! ( சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன்.)

This entry is part [part not set] of 35 in the series 20061012_Issue

தாஜ்


காலச் சுவட்டில் சுந்தர ராமசாமி மறைவையொட்டி ‘சு.ரா: நினைவின் தடங்கள்’ என்கிற தலைப்பின் கீழ், பல படைப்பாளிகள் அவரைப் பற்றிய நினைவுகளை பதிவு செய்தார்கள். அந்த வரிசையில் திரு.அ.கா.பெருமாள், தனது டைரியில் குறிப்பிடத் தகுந்த சு.ரா.பற்றியத் தகவல்களை வருடம், தேதி கிரமமாகத் தொகுத்து பதிவு செய்திருந்தார். திரு.அ.கா.பெருமாள் சு.ரா.வின் இல்லத்திற்கு அருகான்மைக் காரர் என்பது இங்கே குறிப்பிடத் தகுந்தது. காலச்சுவட்டில் அவர் பதிவு செய்திருக்கிற 7.1.1984 டைரி குறிப்பு சு.ரா.வையும் என்னை யும் பற்றியது.

7.1.1984 – சனி
மாலையில் சு.ரா. வீட்டிற்குப் போனேன். அங்கே தாஜ் என்னும் இளைஞர் இருந்தார். ஜே.ஜே.சில குறிப்புகள் படித்துவிட்டு சு.ரா.வைப் பார்ப்பதற்கென்றே நாகர்கோவில் வந்திருந்தார். இவர் சிதம்பரம் அருகே சீர்காழியைச் சேர்ந்தவர். சவுதி அரேபியாவில் மோட்டார் மெகா னிக் வேலை. சு.ரா.விடம் நாவலைப் பற்றி நிறையக் கேள்விகள் கேட்டார். சு.ரா., “என் நாவலில் வரும் கதாபாத்திரங்களுடன் வேறு யாரையாவது தொடர்புபடுத்திப் பேசினால் நான் என்ன செய்யமுடியும். அதற்கு நான் பொறுப்பல்ல. சிட்டுக் குருவியுடன் இந்துமதியோ சிவசங்கரியையோ ஒப்பிடுவதும் முல்லைக்கல்லுடன் ஜெயகாந்தனை இணைப் பதும் வாசகர்கள் செய்த வேலை. இப்படியே ஒப்பிடுவ தாக இருந்தால் இந்தியாவில் பல எழுத்தாளர்களை ஜே.ஜே. நாவலின் பாத்திரங்களுடன் ஒப்பிட முடியும். இதற்கு நான் என்ன செய்ய முடியும்?” என்றார்.

அந்த இளைஞர் இரவு 11 மணிவரை சு.ரா.வுடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் நானும் சு.ரா.வும் அவர் தங்கியிருந்த பாஸ்கர் லாட் ஜில் கொண்டு விட்டுவிட்டுத் திரும்பி வர மணி 12 ஆகிவிட்டது.

– திரு.அ.கா.பெருமாள் அவர்கள் பதிவு செய்திருக்கிற தகவலின் சம்பவங்கள் அத்தனையும் சரியே. தேதிதான் மாற்றமாக இருக்கிறது. சு.ரா.வை நான்சந்தித்தது 7.1.1984 அல்ல1.1.1984. திரு.அ.கா.பெருமாள் அவர்கள் குறிப்பிட்டிருக்கிற தேதி, அச்சுப்பிழையாகக் கூட இருக்கலாம்! ‘ஜனவரி ஒன்று வாருங்கள், உங்களை நினைவில் வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும்’ யென சு.ரா. எழுதி அழைக்க, நான் சென்று அவரை சந்தித்த தேதியது.

*****

கடிதம் எழுதினால் உடனுக்குடன் பதில்எழுதும் படைப்பாளிகளில் சுந்தர ராமசாமியும் ஒருவர். நாம்எழுதியதை ஒட்டியச் செய்திக்கு,நிச் சயம் அதில் பதிலிருக்கும். அவரதுகருத்துக்கள் என்னளவில் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளக் கூடியதே. மேம்போக்காக எழுதுவதென்பது அவரிடம் எப்பொழுதும் கிடையாது. எனக்கு அவர் உடனுக்குடன் பதில் எழுதியதாகச்சொல்வது சுமார் இருபத்திமூன்று ஆண்டுகளுக்கு முன்! ஜே.ஜே.சில குறிப்புகள் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்ட நேரம்!

சு.ரா.வின் ஜே.ஜே.சில குறிப்புகளை முதன்முதலில் படித்தபோது, வியந்து பிரமித்துப் போனேன்! அந்தவயதில். அதன் தாக்கம் எனக்கு அப்படிதான் இருந்தது. காணாததைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில், அவருக்கு சௌதியிலிருந்து கடிதம்எழுதினேன். என்கடிதத்திற்கு பதில் எழுதிய சு.ரா. என்னை யொத்த வியப்பில்’ அந்த புத்தகம் அங்கே எப்படி கிடைத்தது?’ எனவும், நாவலை வாசித்து உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கடிதம் எழுதியிருப்பதாகவும் எழுதியிருந்தார். நான் உணர்ச்சிவயப்பட்டது அவருக்கு தெரிந்து போனதில் வெட்கமாகம் மேவி யது. தவிர அந்த கடிதத்தில், என்ரசனைக் குறித்தறிய எனக்கு இஸ்டமான இசை/ நாடகம் / சினிமா / சித்திரம் போன்றவற்றை கேட்டு எழுதியிருந்தார். பொறுப்பாக பதில் எழுதினேன். கடிதத் தொடர்பு துளிர்த்தது.

ஜே.ஜே.சிலகுறிப்புகள் வெளிவந்த சில மாதங்களுக்குப் பிறகுகே, அப்படி ஒரு புத்தகம் வந்திருப்பதை அறிந்தேன். சூழ்நிலை அந்த புத் தகம் வெளிவந்த நாளில் நான் சௌதியில் இருந்தேன். அடுத்த ஆறுமாதம் கழித்து ஊர்வந்திருந்தபோது, சென்னை தி.நகரில் எனக்குத் தெரிந்த புத்தகக் கடைகளில் அந்த புத்தகத்தை தேடிப் போனபோது, அது கிடைப்பதாகவே இல்லை. பாண்டிபஜார் கலைஞன் பதிப்பகத் திற்கு சென்றபோது, அதன் உரிமையாளர் தனக்கு கிடைத்த ‘காம்லிமெண்ட்ரி காப்பி’ ஒன்றுதான் தன்னிடம் இருக்கிறது என்றும், இத்த னை ஆர்வமாய் சௌதியிலிருந்து அதை தேடி வந்திருப்பதினால் உங்களுக்குத் தருகிறேன்யெனத் தந்தார்.தொடர்ந்து, தான் இன்னும் அதைபடிக்கவில்லை என்றுகூறியவர், என்னை நேர்நோக்கி வியந்தப்படி’அந்த புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறதென்றார்?’

ஒருமாத விடுமுறையில் ஊர்வந்த எனக்கு, பகலில் பெரும்பாலும் ஓய்வின்றிப் பணிகள்! இரவிலோ மனைவியோடு ஆற்ற வேண்டிய கடமைகளின் தவிர்க்க முடியாமை வேறு! இதையெல்லாம்விட மேலாக அந்த புத்தகத்தை படிக்க வேண்டிய மனநிர்பந்தம் இன்னொரு புறம்! வேறுவழியின்றி அந்நாவலை வாசிப்பதற்கென நான் வகுத்துக்கொண்ட நேரம், நள்ளிரவு ஒருமணிக்குமேல். எங்கள் ஊரில் அந்த காலக்கட்டத்தில் மின்சாரம்தடையும், குறையழுத்த மின்சாரத் தொல்லையும் சகஜம். தொடர்ச்சியான இந்த குறைப்பாடுகள் எங்களுக்கு பழகிகூட இருந்தது. செல்லப் போனால் இரவு பத்து மணிக்குப் பிறகு நள்ளிரவு ஒரு மணிவரை அது தேவையும் இருக்காது. விளக்கை வலிய அணைத்துவிடும் நேரம் அது! தமிழனின் கலாச்சாரப்படி தாம்பத்தியம் இருளில்தான் ஜொலிக்கிறது! நள்ளிரவில் படிக்கவென்று கிளம்பும்போது வெளிச்சமில்லாது என்ன செய்வது? இருளில் வாசிக்கும் மந்திரமும் தெரியாதவன் நான்! வித்தைக்காரர்கள் யாரிடமா வது அதை கற்றிருக்கலாம்!

அப்படியான வித்தைக்காரர்கள் இங்கு இல்லாமலில்லை! சமீபத்தில், நவீன இலக்கிய எழுத்தாளர் ஒருவர் சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களுக்கு ஒரே நேரத்தில் விமர்சனக் குறிப்புகள் எழுதியிருந்ததை ஒருதரம் வலைப்பதிவில் கண்டேன். இத்தனைக்கு அதீத காரி யம் செய்ய ஒருவருக்கு சராசரி வாசிப்பு நேரங்கள் போதாது. தூக்கத்தில்கூட வாசிக்க முடிகிறவரால்தான் அது நடக்கும்! இந்தகையத் திறன் பெற்ற எழுத்தாளர் இன்றைக்குத்தான் என்றில்லை, அன்றைக்கும் இவருக்கு அண்ணன், பெரியண்ணனெல்லாம் இருக்கவே செய்
ததர்கள்!

தினைக்கும் விதியேயென சிம்னி வெளிச்சத்தில்தான் ஜே.ஜே. யோடு அடுத்த சல்லாபம்! கணவன் இப்படி தள்ளிப்போய் திளைப்பதென் பது மனைவிமார்களுக்கு பிடிக்காது. இன்னொன்றோடு என்பதே அவர்களுக்கு ஆகாது! அதுவும் இரவில் என்றால் சொல்லவே வேண் டாம்! தமிழ்ப் பெண்களுக்கு இந்த உணர்வு கொஞ்சம் கூடுதல் சங்கதி! ஜெ.ஜெ.யோடு அன்னோனியம் கொண்ட அடுத்த நிமிடம் அவன் என்னை விஸ்தீரணவெளிக்கு இட்டுச் சென்றுவிடுவான்! அங்கே மனிதர்களின் வேஷங்களும், நடிப்பும், அவலங்களும், அலங்கோலங்க ளும், உண்மைகளின் வீழ்ச்சியும், அற்பங்களின் ஜொலிப்பும் நம்மை நிலைகுலைய வைக்கும்!

நல்ல புத்தகங்களைப் படிக்கிறபோது, அது மனதை வருடாமல் விடாது. அதன் கவிநயம்கொண்ட வரிகள் மூளையின் மடிப்புகளில் சிக் கியும் கொள்ளும். கருத்தாழம் கொண்ட பாராக்கள் நம்மை திக்கு முக்காடவேறு வைத்துவிடும். வாசிக்கிறபோது இப்படியான வைகளை அடிக்கோடிடுவது என்னளவில் தவிக்கமுடியாது! பழக்கம் அப்படி! ஜே.ஜே.சிலகுறிப்புகளை வாசித்தபோதும் அப்படித்தான் நடந்தது.ஒவ் வொருநாளும் மண்ணெண்ணை வாசனையோடு கொஞ்சம்கொஞ்சமாக ஒருவார காலத்தில் அந்த நாவலை வாசித்து முடித்தேன். வாசி த்து முடித்தபோது, அந்த புத்தகம் இன்னொருப் பங்கிற்கு உப்பலாகி விட்டது! கிட்டத்தட்ட அந்த புத்தகத்தின் எல்லாப் பக்கங்களிலுமே அடிக்கோடிட்டிருந்தேன்!

விடுமுறைமுடிந்து திரும்பவும் சௌதிபோனபோது அந்தப்புத்தகத்தை கையோடு கொண்டுபோனேன். விமானம் பறக்கிறப்போது அதில் சிலஅத்தியாயங்களைப் படித்தேன். குறிப்பாய் ஜே.ஜே.எழுதிய குறிப்புகள் அடங்கியப்பகுதி. ரொம்பவும் இஸ்டமானப் பக்கங்கள் அவை! ஜே.கிருஷ்னமூர்த்தியின் தத்துவக் குறிப்புகளை படித்தபோது ஏற்பட்ட மனதாக்கத்தையொத்த, நெகிழ்ச்சித் தந்த பக்கங்கள் அவை! பூமி யின்மட்டத்திலிருந்து மிகஉயரத்தில் விமானம் பறந்தபோது, அதனை நான்படித்தேன் என்பது, அந்த படைப்பாளியின் தீவிர உழைப்புக்கு செய்கிற மரியாதையாகவே நினைத்தேன். அதிலோர் திருப்தி!

சௌதியில் எனது இலக்கிய நண்பர்கள் சிலர் அந்த நாவலை என்னையொத்த ஆர்வத்துடனேயே படித்தார்கள். ஒரு விடுமுறை தினத் தில் நண்பர்கள் ஒன்றுகூடி அதை சர்ச்சிக்கவும் செய்தார்கள். பொதுவில் அந்த நாவல் எல்லோருக்கும் பிடித்துதிருந்தது. சிலர் அதை உன்னதம் என்றார்கள். ஹாஜா அலி என்கிற நண்பர் தனது கருத்தாக ஒன்றைச் சொன்னார். அது எனக்குப் பிடித்திருந்தது. ‘உன்னதம் நோக்கியப் பயணத்தில் நம்பிக்கைத் தரும் நாவலிது’ என்றார்.

அன்றைக்கு சௌதியில் நான் நடத்திய சிற்றிதழான ‘தமிழ்ப் பூக்களில்’ அந் நாவலுக்கு ஒருபக்கம் விளம்பரம் வெளியிட்டு, திரு.சுஜாதா அவர்கள் கணையாழியில் அந்நாவலுக்கு எழுதியிருந்த விமர்சனத்தையும் மறுபிரசுரம் செய்திருந்தேன். அது வழக்கமாதிரியான சுஜாதா தனமான விமர்சனம்தான். இத்தனைக்கும் அன்றைக்கு கணையாழியின் ஆசிரியர் பொறுப்பை வகித்த ஜானகி ராமன் அவர்கள் சுஜாதா வைக் கூப்பிட்டு தமிழிழ் ஒரு நல்ல நாவல் வந்திருக்கிறதென்று சு.ரா.வின் ஜே.ஜே.சில குறிப்புகள்பற்றி குறிப்பிட்டு, “கணையாழியில் பிரசுரிக்கவேண்டி, டேமேஜ் இல்லாமல் அதற்கோர் விமர்சனம்எழுதித்தாருங்கள்” யென கேட்டும், திரு.சுஜாதா அவர்கள் தனது பாணியி லான சுவாரசியத்தோடே அந்த விமர்சனத்தை எழுதியிருந்தார்.

சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ தமிழில் புதிய வடிவங்களைக் கொண்ட நாவல். “ஒருகுட்டியை ஏக காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டன்கள் காதலிக்கும் தொடர் கதைகளை” “மாய காம உறுப்புகளை மாட்டிக்கொண்டு அவ்வுறுப்புகளை ஓயாமல் நம்மேல் உரசிக் கொண்டிருக்கும் அற்பங்கள்” எழுதும் “தமிழ் சீதபேதி” சூழ் நிலையில் ஆழ்ந்திருக்கும் நம் வாசகர்களுக்கு இதன் வடிவம் லேசில் அகப்படாது. திரு. சுஜாதா அவர்கள் இப்படி அந்த விமர்சனத்தை தொடங்கியிருந்தாலும், ரொம்பவும் பெருமைப் படத்தான் கடைசியில் முடித்திருந்தார்.

ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலைமெச்சி வெளிவந்த ‘தமிழ்ப்பூக்களை’யொட்டி, அறிமுகமே இல்லாத ஒருவர் திண்டுக்கல்லிலிருந்து என் சௌதி முகவரிக்கு கடிதம் எழுதியிருந்தார். ‘தமிழக முற்போக்கு இலக்கியச் சிற்றிதழ்’ அமைப்பின் காரியதரிசியாம் அவர்! “பிற்போக்கு த்தனமான ஒரு நாவலுக்கு நீங்கள் இத்தனை முக்கியத்துவம் தந்திருக்கக் கூடாது” என்று கோபத்தைக் காட்டியிருந்தார். அந்த கடிதத் தை வாசித்ததுடன் தோன்றிய முதல்கேள்வி அந்நாவலில் எதை பிற்போக்குத்தனம் என்கிறார்? என்பதுதான். திரும்பத் திரும்ப யோசி த்தும் அன்றைக்கது விளங்கவில்லை. அதன்பின் தொடர்ச்சியாக மூன்றுகேள்விகள் எழுந்தது. 1.தமிழ்ப் பூக்கள் அவருக்கு எப்படி கிட்டி இருக்கும் 2. இடதுசாரிகள் ஏன் இந்த நாவலை எதிர்க்கிறார்கள் 3. சௌதியில் வெளிவரும் ஒரு சா தாரண சிற்றிதழைக் கூட விடாது விரட்டிப்பிடித்து மறுப்பு செய்யும் அளவுக்கு ஜே.ஜே.சில குறிப்புகள் நாவல் மீது அவர்களுக்கு அப்படி என்ன காழ்ப்பு?

முதல் கேள்விக்கு பதில் கிட்டவில்லை. அடுத்த இரண்டுக்கும் ஓரளவு பதில் கிடைத்தது. சு.ரா.இடதுசாரி இயக்கத்தில் இருந்தவர் என் றும், ஸ்டாலினின் சிந்தனை / செயல்பாடுகளை ஒட்டி இடதுசாரிஇயக்கம் இரண்டாகப் பிரிந்தபோது, அவர் இடதுசாரி இயக்கத்தை விட் டே வெளியேறிவிட்டவர் என்றும், ஜே.ஜே.சிலகுறிப்புகளில் பிரதானப் பாத்திரமான ‘முல்லைக்கல்’ வழியாக இடது சாரிகளை விமர்சன த்திற்கு உள்ளாக்கியிருக்கிறார் என்பதால் அவர்கள் சீற்றம்கொள்கிறார்கள் என்றும் அறிந்தேன். அரசியல், எல்லாத்துறைகளையும் படுத் தும்பாட்டிற்கு குறையாமல் இலக்கியத்தையும் சீண்டுகிறதென்பது புரிய வந்தபோது, இந்திய அரசியல் களம் இன்னும் எனக்கு தெளிவா னது.

ஒருவருடம் கழித்து மீண்டும் ஊர் வந்திருந்தேன். அன்றைக்கு, நவீன தமிழ் இலக்கியத்திற்கு பெயர்சொல்லும்படி விலங்கிய ஒரே பதிப் பகமான க்ரியாவுக்கு சென்று, அங்கே தேங்கிக் கிடந்த சிற்றிதழ்கள் அனைத்துப் பிரதிகளையும் பொறுக்கியெடுத்து, தூசித் தட்டி வாங்கி னேன். அவற்றை வாசித்த வகையில், அனைத்து சிற்றிதழ்களிலும் ஜே.ஜே.சில குறிப்புகள் குறித்து, ஒன்றுக்கு மேற்பட்ட விமர்சனங்க ளும், கலந்துரையாடல்களும் வெளிவந்திருப்பது தெரிந்தது! இடதுசாரி சிந்தனைக்கொண்ட ‘இனி’ என்கிற மாத இதழில், அந் நாவலுக்கு தொடர்விமர்சனம் வெளிவந்தப்படி இருப்பது கண்டும் வியந்தேன். இடதுசாரி மனோபாவம் கொண்ட பிரபல எழுத்தாளரான சாரு நிவே திதா, ஜே.ஜே. சில குறிப்புகளுக்கு தனியே ஒரு விமர்சனப் புத்தகம் வெளியிட்டிருந்தார்! ( அவரது அந்த விமர்சனத்தையொட்டி பாண் டிச்சேரிபோய் அவரைப் பிடித்து வலிய தர்க்கம் புரிந்ததை இன்றைக்கு நினைக்கிறபோது சிரிப்பு வருகிறது.) புத்தக விமர்சனப் பக்கமே தலைவைக்காத, சிறுகதைகளையும் நாவல்களையும் மட்டுமே எழுதி வந்த எழுத்தாளர்களில் பலர் இந்த புத்தகத்திற்கு விமர்சனம் எழு தியிந்ததையும், கருத்துக்கள் சொல்லியிருந்ததையும் கண்டு வாசித்து கணித்தவகையில் ‘ஒரு நாவலுக்கு இத்தனை சக்தியா? யென தோணியது.

ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலுக்கு விமர்சனங்கள் ஒருபாடு வந்து முடிந்தும், வந்திருந்த பல்வேறு விமர்சனங்களில் தங்களது விமர்ச னமே துல்லியமென சிலஎழுத்தாளர்கள் அடுத்த ரவுண்டில் அந்நாவலைப் பற்றி மீண்டும் பேசத்துவங்கிய வேடிக்கை நடந்தேறிய நாளி லும் கூட, விமர்சனமே தங்களது ஆத்மார்த்தப் பணியென இயங்கி வந்த திரு.க.நா.சு.வும், திரு.வெங்கட்சாமி நாதனும் அந் நாவலுக்கு விமர்சனம் என்கிற அளவில் விரிவாக எதையும் எழுதாதுப் போனதை இங்கே குறிப்பிடவேண்டும். க.நா.சு.மட்டும் ஏதோ சில கருத்து கள் (ஜே.ஜே.சில குறிப்புகள், ‘வித்தைத்தனம்’ கொண்டதென க.நா.சு.கூறியதாக அப்பொழுது ஒரு பேச்சு உண்டு) கூறியதாகவும், அது குறித்த தெளிவை அறிய சு.ரா. முயன்றதாகவும் அறிந்தேன். என்னைக் கேட்டால், அந்த இரண்டு ஜாம்பவான்களும் அந்நாவல் குறித்த விரிவான விமர்சனத்தை வைத்திருக்கவேண்டும். அவர்களின் ஆத்மார்த்தப் பணியின் பங்கமற்ற உயர்வை அது இன்னும் கூட்டியதாக வே அமைந்திருக்கும்.

க.நா.சு. / வெங்கட் சாமிநாதன் தவிர்த்து, ஜே.ஜே.சில குறிப்புகளுக்கு பலரின் விமர்சனங்கள் பலகோணங்களில் தொடர்ந்து வந்து கொ ண்டிருந்தபோதும், சு.ரா. எந்தவொரு விளக்கமோ, எதிர்வினையோ செய்தாரில்லை! தனது நாவலை வெளியிட்டு விட்டு இலக்கியப் பர ப்பின் பரப்பரப்பை அவர் மிக நிதானமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதாகப் பட்டது. இந்த மனோநிலை சராசரிக்கு மீறியவே தோன்றியது. இரண்டு வருடங்களுக்கு மேலாக அந் நாவலுக்கு வந்து கொண்டிருக்கும் விமர்சனங்களுக்கு அவரது அபிப்ராயம் எனக்கு முக்கியமெனப் பட்டது. அது குறித்து நேரிடையாக கேட்டரிந்தால் என்ன? என்பதாக தோன்றியயுடன் பரபரப்புக்கு ஆளானேன்.

1993 – டிசம்பர் மாத இரண்டாம் வாரத்தில் அவரைச் சந்திக்க அனுமதி மற்றும் தேதி, நேரம் கேட்டு சு.ரா. வுக்கு கடிதம் எழுத பதில் வந்தது. அடுத்த வாரத்தில் ஓர் தேதியைக் குறிப்பிட்டு, வாருங்கள் என எழுதியிருந்தார். சீர்காழியில் இருந்து சென்னை யைவிட, நாகர் கோவில் இன்னும் தூரம்அதிகம். அந்த பயணத்திற்கு ஆயத்த ஏற்பாடுகளோடு இருந்தபோது, சு.ரா.விடமிருந்து தந்தி வந்தது. தவிர்க்க முடியாத பணியின் காரணமாக வெளியூர் செல்வதாகவும், வரவேண்டியத் தேதியினைக் குறிப்பிட்டு அடுத்து கடிதம் எழுதுவதாகவும் அதில் தகவல் செய்திருந்தார். ஒரு சில நாளில் அந்த கடிதமும் வந்தது. ‘ஜனவரி முதல் தேதி வாருங்கள், உங்களை நினைவில் வை த்துக் கொள்ள வசதியாக இருக்கும்’ என்று எழுதியிருந்தார்.

புத்தாண்டு பிறக்கும் இரவில், எங்கள் ஊர் பஸ்ஸ்டாண்டில் பயணம் புறப்பட நின்றேன். தூரத்தில் கத்தோலிக்க தேவாலயத்தின் பிராத் தனை ஒலி மிதந்து வந்தது. பஸ்ஸ்டாண்டின் மையத்தில் மாணவர்கள்குழு ஒன்று, எதிர்பாராத தருணத்தில் வந்து ஆக்கிரமித்தப்படி, இரவு பண்ணிரெண்டு முடிந்த நொடியில் வெடிகளை வெடிக்கச் செய்து ‘சில்க் ஸ்சுமீதா வாழ்க’ கோஷமிட்டனர்.

மறு நாள் பகல் நாகர்கோவில் போய் இறங்கியபோது ஊரே புத்தாண்டு குதூகலத்தில் இருந்தது. எனக்கு ‘பெத்தலெகம்’ வந்து சேர்ந்து
விட்ட மகிழ்ச்சி ! வாடகைஅறையில் என்னை சரி செய்துக்கொண்டு, சு.ரா.தரிசனத்திற்காக புறப்பட்டேன். சு.ரா.வீட்டில் இருந்தார். வர வேற்றார். காலில் போட்டிருந்த ‘ஸ்ஸூ’வுடன் வீட்டின் உள்ஹாலுக்கு அனுமதித்தார். ஸ்வீட், காரம், பில்டர் காஃப்பியெல்லாம் ஆனது. வீட்டின் மாடியில் உட்கார்ந்து பேசலாமென அழைத்தார். ஒரு சிறுரூம் தடுப்பும், மெட்டைத்தளமுமான அந்த இடம், அதன் சுற்று புறத் தோடு எனக்குபிடித்திருந்த்து. ‘காகங்கள்’ என்கின்ற இலக்கியஅமைப்பின் மாதாந்திரக்கூட்டம் இங்குதான் நடக்கும் என்றார் சு.ரா.! நான் வேறுயோசிப்பில் கொஞ்சம் படபடப்பாக இருந்தேன். அதை சு.ரா.புரிந்துக் கொண்டவராக, ‘நீங்கள் புகைப் பிடிக்கனுமென்றால், புகைக்க லாம் என்றார். ‘ அவரிடம் நான் சிகிரெட்பாக்கெட்டை திறந்து நீட்டியபோது, சமீபத்தில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி விட்டதாகச் சொன்னார்.

அந்த வீடு அழகான சூழலில் அமையப்பெற்றிருந்தது. நாலாபுறமும் பசுமையான மரங்கள். மெயின் ரேட்டையொட்டி அது இருந்தாலும், வெளிச் சப்தம் எட்டாத உட்புறத்தில் இருந்தது. இடைப்பட்ட தூரத்தை மூடி மறைப்பது மாதிரி வயது கூடிய சப்போட்டா மரம் ஒன்று ஏகத்திற்கும் கிளைவிட்டு தழைத்து, பூத்து, காய்த்து, அடித் தரையெல்லாம் போர்வையாக காய்ந்த உதிரிப் பூக்கள். மரத்தின் ஒரு பகுதி கிளைகள் மொட்டை மாடியை எட்டித் தொட்டுக்கொண்டிருந்தது. மாடியின் முகப்பில் பசுஉருவின் பின்புலத்தோடு புல்லாங்குழல் வாசி த்தப்படி ஸ்டைலான கண்ணன். அந்த’சுந்தர விலாஸ்’ இன்னும் மனதில் அதேபசுமையோடுதான். அதன் வசீகரம், இன்றைக்கும் அங்கே அப்படியே இருக்கிறதா? தெரியவில்லை!

சு.ரா.விடம், ஜே.ஜே.சில குறிப்புகள் எழுதிய அனுபவத்தைக் கேட்டேன். நீண்டகால அவகாசம் எடுத்துக்கொண்டு அந்த நாவலை எழுதி யதாகச் சொன்னவர், ‘புளிய மரத்தின் கதை’ எழுதி முடித்தப்பின் தொடங்கிய நாவலிது என்றும், ‘புளிய மரத்தின் கதை’ எழுதி முடித்து இருபது வருஷமாவதாகவும் கூறினார். படைப்பின் மீது அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை மற்றும் கால அவகாசத்தை யூகித்த எனக்கு, ஜே.ஜே.சில குறிப்புகள் வாசித்த நாழியில் நான் சொக்கிய தருணங்கள் நினைவுக்கு வந்தது. இத்தனை சிரத்தையும், இத்தனை கால அவகாசமும்தான் அந்த நாவலை அத்தனை உயரத்திற்கு உயர்த்தியிருப்பதாக தோன்றியது.

சு.ரா.வுக்கு முன்பாகவும், அவர் வாழ்ந்தகாலத்திலும் தனிமனிதன் தூக்கமுடியாத அளவுக்கு புத்தகங்கள் எழுதுகிறவர்களையும், அதற்கு அவர்கள் வைத்த சொத்தை வாதங்களையும் நாம் கவனித்தப் படித்தான் இருக்கிறோம். வியபார நோக்கும், புகழ்ச்சி வேண்டி தனக்கு இல்லாத கீர்த்திகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதையும் தாண்டி அந்த புத்தகச் சுமையைப் படைத்ததில் வேறு என்ன இலக்கிய காரணம் இருக்க முடியும்?

ஜே.ஜே.சிலகுறிப்புகள் எழுதும் போதே, தனது இலக்கிய நண்பர்கள் அதன் சில பகுதிகளைப் படித்து, சிலாகித்து அபிப்ராயம் சொன்னப் பிறகே தெடர்ந்தெழுத ஆவல் கொண்டதாகச்சொன்னார். அந்த நாவலின் இரண்டாம்பகுதியான ஜே.ஜே.யின் டைரி குறி ப்புகளை எழுதி முடித்தபோது, தலை தெறிக்கும் படியானதோர் வலியினை தான் கொண்டதாகச் சொன்னார். நிச்சயம் அப்படி யோர் வலியின் அவஸ் த்தையை அவர் கொண்டிருக்கக் கூடும். நம்பவும் நம்பினேன். அந்த டைரி குறிப்பின் உள்ளார்ந்த வெளிப்பாடு கனமான சங்கதிதான்.

ஜே.ஜே.யின் டைரி, ஜே.கே.கிருஷ்ண மூர்த்தியை நினைவூட்டுகிறதே என்றதற்கு, அதை ஒப்புக்கொண்டவர் கொஞ்ச காலம் அவரைப்
பின் தொடர்ந்ததையும் சொல்லி விட்டு, உங்களால் ஜே.கே. வை பின்பற்ற முடிகிறதா? யென என்னைக் கேட்டார். பின்பற்ற நிறைய
ஆசையிருந்தும் முடியவில்லை என்றேன். அப்படித்தான் அதுயென ஒப்புக்கொண்டார்.

என்னோடு அண்ணாமலையில் படித்த செலவராஜ் என்ற நண்பர்தான் எனக்கு ஜே.கே.வின் எழுத்துகளை அறிமுகம்செய்தான். அன்று ஜே.கே. யை படித்து முடித்ததும் அவனோடு அது பற்றிப் பேசியபோது, ஜே.கே.யுடைய தத்துவங்கள் அனைத்தும் யோசிக்கும் படியும்,
யோசித்தவைகளை ஒப்புக்கொள்ளும் படியும் இருக்கிறது. ஆனால், ந்ம்முடைய இந்த வயதில் அதைப் பற்றிக்கொள்ள முடியும் என்று
தோனவில்லை என்றேன். அதற்கு அந்த நண்பன் சொன்னான்,” இன்றைய நம் உணர்வுகள் சதையோடும், இரத்தத்தோடும் கலந்து விட்
டவைகள். திடுமென இன்றைக்குப்போய் அந்த தத்துவங்களை வாழ்வில் பிணைத்துக் கொள்ள முடியாது என்றவன், இன்றைக்கு நாம்
பரம்பரைப் பணக்காரனாக இருந்தோமெனில் எதுகுறித்தும் கவலைப்படாமல் அவரோடு தாராளமாகப் போகலாம் என்றான். அவன் கூறி யதை திரும்பத்திரும்ப யோசித்ததில் சரியென்றுதான் பட்டது . அதனால்தான் சு.ரா. அது குறித்து கேட்டபோது உடனே அப்படிச் சொன் னேன்.

கணையாழி இதழ், அன்றைக்கு இலக்கிய வாசகர்களின் பெரியவரவேற்பைப் பெற்ற இலக்கியஇதழ். பல படைப்பாளிகள் அதில் எழுதிய போதும் சு.ரா. அதில் எழுதுவதில்லை. அது குறித்தும் கேட்டேன். கணையாழியின் போதாமையைச் சொல்லியவர், இந்த இதழ் கணை யாழியை வாசித்தீர்களா? என்று கேட்டார். வாசித்தேன் என்றேன். நடந்துக் கொண்டிருக்கும் தமிழீழப் பிரச்சனை எத்தனை கனமானது? அதை அவர்கள் அணுகும் விதத்தைப் பார்த்தீர்களா? என்றார். அவர் குறிப்பிட்டசெய்தி, கணையாழில் நான்கு விசயதானங்களுக்கு எழு தப்பட்ட ஒரே தலையங்கத்தில், தமிழீழம் குறித்த சங்கதி நான்கு வரியில் இடம் பெற்றிருந்தது.

தொடர்ந்த சம்பாசனையில், நான் எதுகுறித்து அவரைச் சந்திக்க நினைத்தேனோ அந்தமுனைக்கு வந்தேன். ஜே.ஜே.சில குறிப்புகளுக்கு கடந்த இரண்டுவருடங்களாக எல்லாதரப்பிலிருந்தும் ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துவிட்டது, உங்கள் நாவலில் முல்லைக்கல் நாயரை இடதுசாரி சிந்தனை கொண்ட எழுத்தாளராகக் காட்டி, அவரை விமர்சனத்திற்கு உள்ளாக்கியதின் பொருட்டே, இடதுசாரி சிந்தனையாளர் கள் அநியாயத்திற்கு உங்களையும், உங்களது நாவலையும் விமர்சிக்கிறார்கள். நீங்களோ எந்தவொரு விமர்சனத்திற்கும் இன்றுவரை பதில் செய்யவில்லை! உங்களது விளக்கத்தையோ, எதிவினையையோ பதிவு செய்வதுதான் சரியாக இருக்கும் என்றேன்.

அந் நாவலுக்கு இன்னும் விமர்சனங்கள் வந்தபடி உள்ளது என்றும், கொஞ்சம் காலம் கழித்து நிச்சயம் பதில் செய்வேன் என்றும் கூறி னார். சிலஆண்டுகள் கழித்து அப்படியொரு எதிர்வினையையும், தன்னிலை விளக்கத்தையும் பதிவு செயயவே செய்தார். ஆனால், விம ர்சனம் செய்தபலரின் குறைகளுக்கு அதில் பதில்இருந்ததாகத் தெரியவில்லை. ஒரு வகையில் எல்லோரின் விமர்சங்களுக்கும் பதில் சொல்வதென்பது ஆகிற காரியமுமில்லை.

அந்த நாவலின் ஓரிடத்தில், ‘இந்த பறவைகளின் இறப்பை நாம் காணமுடிவதில்லை! அவைகள் எங்கே போய் இறக்கின்றன?’என்பதாக சு.ரா. வியந்திருப்பார். அது ஒரு கவிதை நயம் கொண்ட வரி! சு.ரா.வுக்கு இதுகூட தெரியாதுப் போனதே யென நாம் நினைத்துவிடமுடி யாது. ஏனெனில் அது அவருக்குத்தெரியும்! நாவலில் ஏதோ அர்த்தத்தில் அப்படி அந்தவரியினை கவிதையாக்கியிருக்கிறார் என்றுதான் நினைக்கத்தேன்றும். அதுதான் சரியான வாசிப்பின் அடையாளமாகவும் இருக்கும். ஆனால், அந் நாவலுக்கு விமர்சனம் எழுதிய தருமு. சிவராம் அந்த வரியினைச் சுட்டி, இதுகூட சு.ரா.வுக்கு தெரியாதாயென எள்ளி நகையாடி, பறவைகள் எங்கே எப்படி இறக்கிறதெனறும், இறந்தப் பறவைகள் எந்தந்த மிருகங்களுக்கும் ஜந்துக் களுக்கும் இரையாகிறதென்றும் பெரியதோர் வியாக்கியானமே செய்திருந்தார். இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கெல்லாம் யாரால்தான் பதில் தந்து மாளும்!

ஜே.ஜே பற்றியும் முல்லைக்கல் பற்றியும் கேட்ட ஒரு கேள்விக்கு, ஜே.ஜே.யும் முல்லைக்கல்லும் எல்லா மொழி எழுத்தாளர்களிலும் இருக்கிறார்கள் என்றும், அவர்களை நாம் வாசர்களின் பார்வைக்கு கொண்டுவந்து சர்ச்சிக்க வேண்டியது அவசியம் என்றார்.

ஜே.ஜே.யின் சில கோபங்களை யதார்த்தகோணத்தில் பார்க்கிறபோது, அதில் பெரிய அர்த்தமிருப்பதாக தெரியவில்லையே என்ற நான், ஒரு மாட்டின்மீது யாரோ ஒருவன் வெற்றிலையைக் குதப்பிய எச்சியலைத்துப்பினான் என்பதற்காக அவன்கொள்ளும் பெரும்கோபமும், அதுகுறித்த அவனது அநியாயத்திற்கு மன உலைச்சலையும் முன் வைத்தேன்.

ஜே.ஜே. ஒரு ‘prfectionist’ என்றும், அவனால் இந்த ரீதியிலான மனிதசெயல்களை ஜீரனிக்க முடியவில்லை என்பதாகவும் கூறினார். அப்படி அவர் கூறினாலும், அந்த பதில் ஏற்கத்தகுந்ததாக இல்லை. மனித கோமாளித்தனங்களும், சேட்டைகளும் நிரவிக்கிடப்பதுதான் சமூகம். அது ஓர் ஓர் யுனிவர்சல் சாபம்! எந்த ஒரு தேசத்தின் எந்த ஒருசமூகமும் இதற்குவிதிவிலக்கல்ல. இங்கே நூறு சதவீதம் யா ரும் சரியானகோணத்தில் உருகொள்வதும் சாத்தியமில்லை. இப்படியேதொடர்ந்து, தான் ஒரு ‘perfectionist’ என்கிற விரைப்பில் அவன் கோபப்படுவானேயானால், அவனுக்கு நாளின் இருபத்திநாலு மணி நேரமும் அதற்கே போதாது. யோசிக்கிறபோது பச்சை இந்தியனான ஜே.ஜே. கூட சிறு நீர் கழிக்க வெளியில், பாதையோரத் திருப்பங்களைப் பயன்படுத்தவும் தவறியிருக்க மாட்டான். சு.ரா.விடம் இப்படி யெல்லாம் அதுகுறித்து அடுத்தடுத்து பேசுவது சரியாகப்படவில்லை. அவர் வீட்டில் பருகிய பில்டர்காஃப்பியின் மணமும், அதன் சுவை யும் இன்னும் நாவில் மீதம் இருந்தது. சிகிரெட் பாக்கெட்டைத் திறந்தேன்.

இந்த நாவல் தமிழுக்குப் புதுமையான ஒன்று என்கிறரீதியில் கேட்கிறேன், வாசகர்கள் இந்த நாவலை எப்படி அணுகுகிறார்கள்? உங்க ளுக்கு அது திருப்தி தருகிறதா? வாசகர்கள் இந்த நாவலை வித்தியாசமாகப் பார்கின்றார்கள் என்றும், பிற தீவிரப் படைப்புகளை வாசி க்க சிரமப்படுவது மாதிரி இந்த நாவல் வாசிப்பும் அவர்களுக்கிருப்பதாகத் தெரிவதை, அவர்களின் கடிதம் வழியே அறிய முடிகிறதென் றார். நாவலில் கடைசியாக இணைக்கப்பட்டுள்ள அனுபந்தத்தில் காணும் ஜே.ஜே.யின் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்பதாககூட கடிதத்தில் கேட்டு எழுதுகிறார்கள் என்று அவர் சொன்னபோது, முகத்தில் கீற்றாய் அர்த்தப் புன்னகை.

ஜே.ஜே.சிலகுறிப்புகளில் அவர் வகுத்த அப்படியான அமைப்பியலின் நேர்த்தியினால், வாசகர்கள் சிலர் அந்த அனுபந்தத்தை நாவலோ டான கடைசிப் பக்கங்கள்யென உள்வாங்கிக்கொள்ள முடியாமல், தனியாக பிரித்துப்பார்த்து விட்டார்கள்! ஜே.ஜே.யை நிஜத்தில் வாழ் ந்த எழுத்தாளனாக கூட அவர்கள் நம்பியிருக்கக் கூடும்!

நான் அந்த நாவலை முதல்வாசிப்பு செய்தபோது, என் இலக்கிய நண்பரான ஹாஜா அலியிடம் டெலிபோனில் பேசினேன். அவர் அந் நாவலை எனக்கு முன் வாசித்திருந்ததினால், அதைப்பற்றிபேச சௌகரியமாகவும் இருந்தது. ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலைவிட,பின் னால் இருக்கிற ஜே.ஜே.யின் டைரி குறிப்பு நன்றாக இருந்தது என்றேன். அவர் சிரிப்பது கேட்டது. என்ன விசயம் என்றேன். “அது அப் படி இல்லிங்க ‘It’s totaly a noval’ என்றார். எனக்கு குழப்பமாக இருந்தது. Fast page – திருப்பிப் பாருங்க, அதிலே நாவலுன்னுப் போ ட்டிருக்கும், டைரின்னுயெல்லாம் தனியா ஒன்னும் கிடையாது” என்றார். கொஞ்ச நேரம் கழித்துதான் அந் நாவலின் அமைப்பியலிலான மயக்கம் புரிந்தது. அவரும் இந்த அமைப்பியல் வெற்றியை உணர்ந்தவராகத்தான் இருந்தார். அதனால்தான் அந்த புன்னகைக்கீற்று! இந்த அமைப்பியலை யூகித்துதான் அந்நாவலை க.நா.சு. வித்தை என்றாரோ?**

சு.ரா. வைச் சந்தித்தபின்னர் சில ஆண்டுகள் கழித்து க.நா.சு.வை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவர் டெல்லியிலிருந்து சென்னைக்கு தனது ஜாகையை மாற்றிக்கொண்டு வந்திருந்த நேரமது. ‘ஏன் ஜாகையை மாற்றிக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டீர்கள்?’ என்ற பத் திரிகைப் பேட்டி ஒன்றின் கேள்விக்கு ‘சாவதற்காக சென்னைக்கு வந்துள்ளேன் என்றிருந்தார். அவரது பதில் யோசிக்கும்படி இருந்தது. தவிர, அவரைப் பார்க்கவும் தூண்டியது. சாவதற்காக சென்னை வந்திருந்த அவரை, மகிழ்ச்சியுடன் சந்தித்தேன். மதிப்பிற்குறிய ‘க்ரியா’ திலிப்குமார்தான் வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தார். போனஇடத்தில் அவரிடம் ஏகப்பட்டகேள்விகள். ‘நீங்கள் ஏன் ஜே.ஜே.சில குறிப்புகளை ஒப்புக்கொள்ளவில்லை?’ என்ற கேள்விக்கு, கொஞ்சமும் நேரம் எடுத்துக்கொள்ளாமல், “அவரது புளிய மரத்தின் கதையை நான் நாவ லாக ஒப்புக்கொள்வேன்”என்றார். தொடர்ந்து அந்நாவல் குறித்து பேசுவதை அவர் தவிர்ப்பது மாதிரி தெரிந்தது. ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலை நாம், நாவலின் புதிய வடிவம் என்று சிலாகித்த அதே வேளை அதை அவர் நாவல் வடிவமாகவே ஒப்புக் கொள்ளவில்லை என்பதாக உணர்ந்தேன்.

ஓர் ஆறு ஆண்டுகளுக்கு முன், கணையாழி அலுவலக வாசலில் வைத்து பெரியவர்.வெ.சா. சந்தித்தேன். அவருக்கு வணக்கமெல்லாம் செய்தப் பிறகு கூடுதல்நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அவரிடம் மறக்காமல் கேட்டது, ‘நீங்கள் ஏன் ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலுக்கு விமர்சனம் எழுதவில்லை?’ என்பதுதான். இல்லை, நான் எழுதியிருக்கிறேன் என்றும், கர்நாடகாவிலிருந்து வரும் ஆங்கில நாளிதழில் அது வந்தது என்றும் சொன்னார். தொடர்ந்து அது குறித்து பேச முற்படும் முன் அவர் பக்கத்திலிருந்தவரிடம் வேறுபேச்சுக் குப் போய் விட்டார். பிறகும்கூட நிறைய நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், டீயெல்லாம்கூட குடித்தோம் ஆனால் அவர் நான் எதிர்பார்திருந்த முனைக்குவரவில்லை. அந்த ஆங்கிலநாளிதழில் அவர் என்னஎழுதியிருந்தார்? என்பது இன்றுவரை எனக்கு தெரியாது. அதை யாரேனும் தமிழில் பதிந்திருக்கிறார்களா? என்பதும் தெரியாது.

நீண்ட நேரத்திற்குப் பிறகு, சு.ரா.வுடன் அவர் வீட்டு மாடியைவிட்டு இறங்கி முன்புறம்உள்ள பிரதானசாலையில் வலது புறமாக நடந் தப்படி பேசிக்கொண்டே போனோம். அந்த சாலையின் முடிவில், இரண்டு மூன்று சாலைகள் சந்திக்கும் மிகப்பெரிய வட்ட வடிவிலான இடம் தென்பட்டது. அதன் மையத்தில் சிதைந்த, வயதுகூடிய ஓர் புளிய மரம்! பார்க்க பரிதாபகரமாகத் தெரிந்தது. எங்கள் ஊர் பக்க சா லையோரங்களில் மையில்கணக்கில் ஏகத்திற்கும் பெருத்த வளமான புளிய மரங்களை பார்த்திருக்கிற எனக்கது அப்படித் தெரிந்ததில் ஆச்சரியமில்லை! அந்த புளியமரத்தைச் சுட்டிக்காட்டிய சு.ரா., புளியமரத்தின் கதையில் பேசப்பட்ட புளியமரம் இதுதான் என்றார். அவர் சொன்னார் என்பதற்காக அதை விசேசமாகப்பார்த்தும் அதுஎனக்கு அதே பரிதாபத்தோடுதான் தெரிந்தது. தவிர, புளியமரத்தின் கதையை அன்றைக்கு நான் படிக்கவுமில்லை. படித்திருந்தேன் என்றாலும், நாவலின் கட்டியக்காரன் மாதிரி கதைகூறிய அந்த வித்தகக்காரக் கிழ வனைத்தான் தேடியிருப்பேன்!

இன்னொரு திருப்பத்தில் நடந்துக் கொண்டிருந்த போது, அந்த சாலையில் இருந்து இன்னொருசாலைக்கு குறுக்கு வழியாக ஓர் உயர் நிலைப் பள்ளிக்கட்டிடத்தைக் கடந்தபோது, தான்படித்த பள்ளிக்கூடம் என்றார். அவரது சிறுகதைகள் சிலவற்றில் அந்த பள்ளிக் கூடம் இடையோட்டமாக காட்டப்பட்டிருப்பதை வாசித்திருக்கிறேன்.அந்த பள்ளிக்கூடத்தையும் அதையொட்டிய பெரிய விளையாட்டு மைதான த்தையும், அந்த மாலை வேளையில் மாணவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருந்ததையும் ஓர் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கைப் பார் த்தோம். சிறிது நேரத்திற்குப்பிறகு நான்மட்டும் எழுந்துநின்று, அந்த உயர்நிலைப் பள்ளியின் நான்குபுற காம்பௌண்ட் சுவரையும், நடை ப்பாதையின் ஓரமாக ஓங்கி வளர்ந்து நின்ற ‘நெட்லிங்’கையும் பார்த்தேன். நான் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருப்பதாக சு.ரா. நினைத்தி ருக்கக் கூடும்! அப்படி அவர் நினைத்திருந்தால் அது தவறாகப் போயிருக்கும். சீர்காழியில் நான் படித்த ‘சபாநாயக முதலியார் இந்து உயர் நிலைப்பள்ளி’யின் கட்டிடமும் அந்த நடைப்பாதை நெட்லிங்கும் அப்படியே இங்கே பேர்த்து வைத்த மாதிரி தெரிந்ததினாலோ என்னவேதான் அப்படி கண்கொட்டாமல் பார்த்தேன்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சாலையில் வெகுதூரம் நடந்தோம். ஒரு திருப்பத்திலிருந்த டீ கடையில் டீ சாப்பிட்டு விட்டு மீண்டும்
வீடுநோக்கி திரும்பினோம். அவரது வீட்டின் அருகான்மையில் ஒரு புத்தகக்கடை! ஏதோ பல சரக்குகடை மாதிரி அல்லது அதை விட மோசமான நிலைக்கொண்டதாக இருந்தது. புத்தகங்களை கீரைக்கட்டு மாதிரி திட்டுத்திட்டாக குவித்து வைத்திருந்தார்கள். என்றாலும், அந்த கடையில் புத்தகம்வாங்கவே நினைத்தேன். அந்த காலக்கட்டத்தில் புத்தகக்கடையைப் பார்த்துவிட்டால் எனக்கு ஏற்படும்ம் பரபர ப்பு சொல்லிமாளாது. அறிவே புத்தகத்திலிருந்துதான் என்பதாக ஓர் மாயை. சு.ரா. அவர்களை அவரது டேஸ்டிற்கு ஒருபுத்தகத்தை தேர் ந்தெடுத்து தரும்படிச் சொன்னேன். முதலில் தயங்கியவர், ‘வா.ரா. வாசகம்’ என்கிற புத்தகத்தை பின் தேர்வு செய்து தந்தார். இன்றைக் கும் என் புத்தக அடுக்கில் அது தலைக்காட்டுகிறது.

இரவென்றும் பாராது நான் தங்கிருந்தலாட்ஜ்வரை உடன்வந்திருந்து சு.ரா என்னை வழியனுப்பி வைத்தார். சு.ரா.வுடன் இன்னொரு எழு த்தாளரும் உடன் வந்தார். அவர்தான் திரு.அ.கா.பெருமாள் அவர்கள். சு.ரா.வுடன் நான் சம்பாசனைகள் தொடங்கிய போதே அவர் வந் தார். சு.ரா.எனக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு முன்னால் நான் அவரது எழுத்தைப் படித்தது இல்லை. சரியாகச் சொ ன்னால், இலக்கிய வட்டத்திற்குள் அவரை அறிய நேர்ந்துஅப்பொழுதுதான். அன்றைக்கு இலக்கியத்தில் அத்தனைக்கு பொடுசு. திரு.அ. கா.பெருமாள் அவர்கள் ஆரம்பம் தொட்டு கடைசிவரை அன்பு கொண்ட பார்வையல்லாமல் வேறொன்றும் என்னோடு பேசினாரில்லை! ஜே.ஜே.சிலகுறிப்புகள் படித்துவிட்டு எல்லைகள் பலதாண்டி வந்துவிட்ட பொடியன் என்றறவர் நினைத்திருக்கலாம். நிஜமும் அதுதான்.
***

சு.ரா.வேடு எனக்கு அதன்பிறகும் சிலகாலம் கடிததொடர்பு இருந்தது. எனது தந்தை இறந்ததையொட்டி என்ஆற்றாமையை சு.ரா.வுக்கு எழுதியிருந்தேன். சு.ரா.விடமிருந்து பதில் வந்தது. ஒரு கவரில் இரண்டு கடிதங்கள். ஒன்று, அதற்கு முன் நான் எழுதிய இலக்கியம் சார்ந்த சங்கதிகளுக்கானது. இன்னொன்று, என்துயரத்தை துல்லியமாக அவர் புரிந்துக் கொண்டதிற்கான பதில். அவரது ஆருதல் வரி கள் எனக்கன்றைக்கு சரியான மனவைத்தியம்.

இன்றைக்குகூட எனக்கு, ஒருவரின் இறப்பு குறித்து அவரின் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆருதல் சொல்லி எழுத வராது. இயற்கையின் தத்துவத்தையும், நடைமுறை வாழ்வின் போதாமையுமாக பெருவெளித் தத்துவங்களை அதில் மொழுவி, சம்பந்தப்பட்டவர் மதவாதி யாக இருந்தால், ஆண்டவனையும் ஆன்மாவையும் துணைக்கழைத்து, பெரிய கஷ்டம்! வாசிக்கும் சம்பந்தப்பட்டவனுக்கோ, இருக்கிற சோகம் போதாதென்று அந்த கடிதத்தமும் கூடிக்கொள்ளும். சு.ரா. மறைவையொட்டி அவரது மகன் கண்ணனுக்கு ஆறுதல்கூற நினை த்தபோது, நல்லப்பிள்ளையாக சு.ரா. எனக்கு எழுதிய அந்தஆருதல் கடிதத்தவரிகளையே காப்பிசெய்து அவருக்கு அனுப்பிவைத்தேன்.

சு.ரா.வை நாகர்கோவிலில் வைத்து சந்தித்தப்பிறகு, அடுத்து அவரை சந்தித்தது பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு! ‘குழந்தைகள் பெண் கள் ஆண்கள்’ புத்தக வெளியீட்டின் விழாவின் போதுதான் அவரை பார்த்தேன். அந்த நாவலை அரங்கத்தில் வாங்கிய நான், விழா முடி ந்த நேரத்தில் அதில் அவரிடம் கையெழுத்து வாங்கப்போனேன். கையெழுத்து இட்டுத்தந்தார். ‘என்னை நினைவிருக்கிறதா ஸார்?’ என் றேன். ஏறிட்டுப்பார்த்து யேசித்துவிட்டு ‘தெரியவில்லையென’ உதட்டை பிதுக்கி தலையை ஆட்டினார். ‘ஜனவரி ஒன்னில் வாருங்கள் உங்களை நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக இருக்கும்’ என்ற அவரது கடித வரி ஞாபகத்திற்கு வந்தது. நிஜமாகவே அப்பொழுது ரெம்பவும் அவர் தளர்ந்திருந்தார். முதுமை மனிதர்கள்மீது ரொம்பவும்தான் ஆளுமைச் செய்கிறது. மனிதர்களை அது மறதியின்பால் தள்ளுவது ஆகப் பெரிய கொடுமை. யார்தான் தப்பிக்க முடியும்?

‘தமிழ் இனி 2000’ விழாவின் முதல்நாளன்று சென்னை மியூசியம்அரங்கில் கவிஞர்.சல்மாவின் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது. அந்த வெளியீட்டு விழாவில் மீண்டும் சு.ரா.வை காணும் வாய்ப்பு கிடைத்து. இந்த முறை தூரத்தில் மேடையில் வைத்துக் கண்டேன். அவரது முகம் சரிவரப் பார்க்க கிடைக்காது போனதில் சங்கடமில்லை. அவரது உருவம் மனதில் தெளிவாக இருந்தது!

இன்றைக்கு சு.ரா. இல்லை. ஜே.ஜே.சிலகுறிப்புகளில், ஜே.ஜே.மாதிரி ஆகனுமென பாலு என்கிற இளைஞன் ஆசை கொள்வான். அதை எழுதிய சு.ரா. மாதிரி ஆகனுமென்று அந்நாவலைப் படித்த இளைஞர்கள் பலரும் ஆசைக் கொண்டார்கள். அவர்களது ஆசை வீண்போக வில்லை. அவர்களில் சிலர் தங்களின் படைப்பின் வழியே முயன்று சாதித்தும் இருக்கிறார்கள். அந்த தொடர்ச்சியான முயற்ச்சிகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு சு.ரா.வுக்குப் பதிலாக பல சு.ரா.க்களை காலத்தில் நாம் பார்க்கலாம். சு.ரா.வுக்கு இறப்பே இல்லை!

***
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation