சுயபுராணமே வரலாறாக…,தொட்டாச்சிணுங்கிகள் எழுத்தாளர்களாக…

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

கருப்பரசன்


—-

திண்ணை தளத்தில் மலர்மன்னன் எழுதிவரும் தன் வரலாறும் – அதன் நம்பகத்தன்மை குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்ட மாத்திரத்தில் அவர் துறவறம் பூணுவதும் – உடனே சில என்.ஆர்.அய்.கள் அவரது வரலாற்று அருள்வாக்குக்காகத் `தவமிருப்பதும் ‘ – திண்ணை ஆசிரியர் குழு வருந்தி அழைப்பதுமான போக்கும் வியப்பை அளிக்கின்றன.

முதியவர் மலர்மன்னன் இதுகாறும் எழுதிவந்த யாவும் – அவரே ஒப்புக்கொண்டவாறு – விருப்பு வெறுப்பின்பாற்பட்ட, முற்றிலும் சார்பு நிலை கொண்ட, அவர் மட்டுமே அறிந்த சில நிகழ்வுகளாகும். சர்ச்சை தொடங்கியது சுரா பற்றிய குறிப்பை மையமாகக்கொண்டு. மண்டைக்காட்டில் இந்துத்துவ கும்பலால் கலவரம் உருவாக்கப்பட்டபோது – அவர்களில் ஒருவராக – அக்கருத்தில் ஊறியவரான ம.ம. களப்பணி ஆற்ற உள்ளே நுழைகிறார். அப்போது சு.ரா. அடைக்கலம் தந்து உபசரித்ததாக நீள்கிறது ம.ம.வின் குறிப்பு.

சுந்தர ராமசாமியின் பிற்கால இடதுசாரி, திராவிட இயக்க வெறுப்பு அணுகுமுறையில் எனக்கு மாற்றுக் கருத்து உண்டு. ஆனால் அவர் தன்னளவில் ஒரு நாத்திகர், தனது உடலை மதச்சடங்குகளின்றி அடக்கம் செய்ய மரண சாசனம் எழுதிய பெருமைக்குரிய மதச்சார்பின்மையாளர். மரண தண்டனையை, சட்ட புத்தகத்தில் இருந்தே அகற்றிடக்கோரி மாநாடு நடத்திய மனிதாபிமானி. எந்த நிலையிலும் ஆர் எஸ் எஸ் அமைப்போடு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவர். அப்படிப்பட்டவர் கலவரக் களப்பணியாளருக்கு தன் வீட்டில் தங்க இடமளித்தார் என்பதை நம்ப இயலாமல் – சந்தேகத்தின் அடிப்படையிலேயே வினவி இருந்தார் கற்பக விநாயகம்.

அதற்கு நேர்மையான பதிலைத் தருவதுதான் அந்த முதியவருக்கு அழகேயன்றி – பெரிய மனிதர்கள் பலரைக் குறிப்பிட்டு அவர்களுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக சாங்கோ பாங்கமாக விவரிக்கிறார். பிரபஞ்சனில் தொடங்கி பிரபல எழுத்தாளர்கள் பலரையும் துணைக்கு அழைக்கிறார். அரசியல்வாதிகளில் இல.ஜியோடு நிறுத்திக் கொண்டுவிட்டார். ஏனோ அடல்ஜியை துணைக்கு அழைக்க்வில்லை. It is sheer name dropping.

ஆனால் எவரும் சாட்சிக்கு வரவில்லை. அரவிந்தனைத் தவிர.

எனக்குத் தெரிந்து எந்த சீரியஸ் இலக்ககியவாதியோ, மூத்த எழுத்தாளரோ ம.ம.வைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ‘விஜய பாரதமும் ‘, ‘ஒரே நாடு ‘வும் விதிவிலக்காக இருக்கக்கூடும். சொல்லவே தேவையில்லை திண்ணை சில காலமாக அவரது பண்ணை என்பதை.

அவரது சுயபுராணத்தைப் படிக்கும்போது ஒரு திரைப்படக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது. “எனக்கு அய்.ஜ.ியைத் தெரியும். ஆனா… அவருக்கு என்னைத் தெரியாது ‘ ‘என்று சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வார் விவேக். அதுபோலத்தான் இருக்கிறது இந்த அளப்பும்.

சற்று ஆழமாக யோசித்தால் ம.ம.வின் சிணுங்கலைப் புரிந்து கொள்ளலாம். தான் எழுதுவதெல்லாம் வரலாறு… அவை யாவும் அக் மார்க் உண்மைகள்… அருள்வாக்கு என்று போற்றினாலும் தவறில்லை… இதை எவரும் கேள்வி கேட்கலாகாது… அப்படி எவரும் கேட்டால் நான் நடந்தே பாரத யாத்திரை போய் விடுவேன்… என்று நீள்கிறது அவரது போக்கு. அது மட்டுமன்றி திண்ணையிலேயே அவர் பாட்டுக்கு எசப்பாட்டா ? இப்போது ஒருவர் ஆதாரங்களோடு அறிவார்ந்த வாதங்களை முன் வைத்ததும் முதியவருக்கோ ஆற்றாமை… அரவிந்தன்களுக்கோ ஆத்திரம். என்ன செய்வது ?

க.வி.யின் இரண்டொரு கேள்விகளை எதிர்கொள்ளக்கூட நிதானமில்லை. பிறகெங்கே ஆழமாக வாதிட்டு உண்மையை அகழ்ந்தெடுப்பது ? முதியவர் ஒருவர் மனம் வருந்தி விட்டார் என்பதற்காகக் கசிந்துருகும் ஆசிரியர் குழாத்துக்குச் சில கேள்விகள். அய்யா, மனம் புண்படுவது என்பது ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு மட்டுமே உரித்தான குலச் சொத்தோ ?

95 அகவை வரை மூத்திரச் சட்டியைச் சுமந்த நிலையிலும் தன் நலம் கருதாது ஜாதிகள், மதங்களின் பேரால் கல்வி மறுக்கப்பட்டு, இழிவுக்கு ஆளான கோடானுகோடி மண்ணின் மைந்தர்களைக் கைதூக்கிவிட்ட ஏந்தல் பெரியாரை – சிறியார் என்று வலிந்து எழுதித் தன் அரிப்பைத் தீர்த்துக் கொண்டிருக்கிறார் அரவிந்தர். இதுதான் திண்ணை வலியுறுத்தும் விமர்சனப் பண்பாடோ ?

ம.ம.வின் வருத்தத்தை மதிக்கும் திண்ணை, பெரியாரைத் தூற்றி பலர் மனத்தைப் புண்படுத்தியமைக்காக, யாரிடம்போய் மன்னிப்புக் கோரப் போகிறது ? அல்லது பெரியார், எந்த வகையில் சிறியார் என்பதையாவது சொல்ல முன்வருமா ? கத்திரிக்கோல் ஒரு தரப்புக்கு மட்டும்தானோ ?

ஊருக்கெல்லாம் உபதேசிக்கும் ம.ம., தம் தொண்டரடிப் பொடிக்குப் போதிக்கலாமே ? அயோத்திதாசர் என்ற பெயரே மமவுக்கு கிளுகிளுப்பூட்டுகிறது. ஆனால் அயோத்தியின் `ராமசாமி ‘ பெயரைக் கேட்டாலோ எட்டிக்காயாகக் கசக்கிறது. இந்துத்துவ சக்திகளுக்கு இன்றளவும் சிம்ம சொப்பனம் பெரியார் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும் ? இந்துத்துவம் அண்ட முடியாத கருஞ்சூரியனே நீ வாழி!

குருசி கோல்வால்கர் நூலை ஆதாரம் காட்டுக்கிறார் அரவிந்தன். “இதுதான் இந்து தர்மம் என்று எங்காவது எழுதி இருக்கிறாரா கோல்வால்கர் ? ‘ என்று கேட்கிறார் அரவிந்தன்.

சரி. பின் எதற்காக அய்யா ஒரு பார்ப்பன பியூன் காலில் நாயுடு அதிகாரி விழுந்த சம்பவத்தை சிலாகித்து விஸ்தாரமாக எழுதினார் உங்கள் தத்துவ மேதை ? சும்மா பக்கத்தை நிரப்பவா ? அதுவும் அவர் வாழ்வில் நடவாத – பிறர் சொன்ன தகவலைக் கேட்டு, அதற்கு இங்கிலாந்தில் ஆதாரம் வேறு இருக்கிறது என்று பிரஸ்தாபிப்பதன் மூலம் குருசி நிறுவ வரும் மூலச் சங்கதிதான் என்ன ?

தொலைக்காட்சிகளில் குட்டிக்கதை சொல்லும் பட்டிமன்றப் பேச்சாளர்கூட, தான் சொல்லும் கதை மூலம் ஒரு நீதி சொல்கிறார். இங்கே வர்ணாசிரம அதர்மத்தைக் கிள்ளி எறியவே அவதரித்த உங்கள் குருசி சொல்ல முனையும் நீதியும்,சேதியும் என்ன என்பதை அரவிந்தன் விளக்கினால் என்னைப் போன்ற சற்சூத்திரர்களும் கொஞ்சம் விளங்கிக் கொள்வோம்.

‘ஆங்கிலேயனின் ஆற்றாமைக்கு இங்கிலாந்து அலுவலகத்தில் ஆதாரம் இருக்கிறது ‘ என்று சொல்லும் உங்கள் குருசியிடம், ஒரு மனிதன் காலில், மற்றவன் விழுவது அநாகரிகம், அவனது சுயமரியாதையைக் குலைக்கும் செயல் என்ற போதனையை எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம், ‘எல்லோரும் இந்துக்கள் – நம்மில் ஏற்றத்தாழ்வு கூடாது ‘ என்ற எண்ணம் துளியாவது அவர் மனதில் இருந்திருக்குமானால் – ஒன்று இந்தச் சம்பவத்தைக் கண்டித்திருப்பார் அல்லது அவரது சிந்தனைக் கொத்தில் சுட்டிக்காட்டி யிருக்க மாட்டார். ஒருவேளை அவரது நூற்றாண்டிலாவது அரவிந்தன் போன்றவர்கள் இப்படியெல்லாம் குருசி சொல்லவில்லை என்று பொழிப்புரை நல்க வாய்ப்பாக எழுதினார் என வாதிடுவரோ என்னவோ ?

பாபர் மசூதியை வன்முறை வெறியாட்டம் நடத்தி இடித்த காவிக்கூட்டத்தை ஆதரிப்பதில் அருவருப்பு கொள்ளாத ம.ம.வுக்கு, ‘முரளி கபே ‘யில் ‘பிராமணாள் விடுதி ‘ என்ற எழுத்துக்களைப் பெரியார் அழித்தது, வன்முறையாகவும், நான்சென்ஸாகவும் தெரிகிறது. இழிவுபடுத்தலுக்கு எதிரான ஓர் உரிமைப் போரை இதைவிட மலினப்படுத்த முடியாது. பழைய வாதம்தான் என்றாலும் பெரியாரின் பாசையில் சொன்னால்தான் எளிதில் விளங்கும். ‘ஒரு வீதியில் ஒரு வீட்டார் மட்டும் இது பத்தினி வீடு என்று எழுதிவைத்தால் மற்றவர்கள் சும்மா இருப்பார்களா ? ‘ என்று கேட்டார் அவர். அப்படித்தான் இதுவும். அக்கிரகார ஆதிக்கம் தாண்டவமாடிய காலத்தில் இது ‘பிராமணாள் கபே ‘ என்று பலகை வைப்பது வேறென்னவாம். மற்றவர்களைக் காயப்படுத்தி, இழிவுபடுத்துவதுதானே (ம.ம.வை அல்ல). இதைப் பார்த்துக் கொதித்தெழாமல் – இன்னும் கொஞ்சம் பெரிதாக டிஜிட்டல் பேனர் வையுங்கள் என்றா சொல்ல முடியும் ?

ம.ம. எழுதாவிட்டால் வானமே இடிந்து விடும் என ஒப்பாரிக் கடிதங்கள் வேறு.. சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்க இணையத்தில் புறப்பட்டிருக்கும் இவர்களின் பெருஞ்சப்தம் திண்ணையை வேண்டுமானால் அசைக்கலாம். க.வி.!, இவர்களின் பேரிரைச்சல் = அச்சுறுத்தல் தந்திரத்தில், சோர்ந்துவிட வேண்டாம். பெரியார், அம்பேத்கர் துணைகொண்டு தொடருங்கள் பணியை புதுவீச்சோடு!

****

karupparasan@gmail.com

Series Navigation

author

கருப்பரசன்

கருப்பரசன்

Similar Posts