சுயசரிதை

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

புதியமாதவி


—-

இலைகளின் ராகத்தை
எழுத முடிவதில்லை.
எழுத நினைக்கும்
ஒவ்வொரு கணமும்
வெவ்வேறு முகங்களின்
வெளிச்சம் துரத்துகிறது.

பாசாங்கில்லாத நிர்வாணம்
பசப்புகளில்லாத நிமிடத்தில்
இருட்டில் எழுதிவிடலாம்
சுயசரிதையை.
நரம்புகளின் பிணைப்பில்
கட்டுண்டு கிடக்கிறது
உண்மையின் கைகள்.

கதிரவனின் அணைப்பில்
கண்மூடிய ஸ்பரிசத்தில்
எழுதிவிடலாம் தான்
அதிகார வெட்பத்தில்
அடங்கமறுக்கும்
இலைகளின் ஆளுமையை.
பச்சையங்கள் பயமுறுத்துகின்றன.

தென்றலின் தீண்டலில்
தெளித்துவிடலாம்தான்
அடைக்கப்பட்டிருக்கும்
கண்ணீர்த்துளிகளை.
கிளைகளின் பன்னீர்த்துளிகள்
ரத்தம் சிந்தி அழுகின்றன.

நிலவின் மவுனத்தில்
வரைந்துவிடலாம்தான்
நட்சத்திரங்களின் இருட்டை.
ஆகாய பூமி
அதிர்வுகள் காட்டி
எரிமலை வெடித்து
எல்லாம் எரிக்கிறது.

எல்லாம் கடந்து
எல்லாம் எழுதிவிடலாம்தான்.
சுட்டெரிக்கிறது சூரியன்.
புயலாகிறது தென்றல்.
கதவடைக்கிறது பச்சையம்.
வேர்களும் விலக்கி வைக்கிறது
இலைகளை.
உதிர்கிறது இலைகள்
சருகுகளாக.

—-
புதியமாதவி, மும்பை.
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை