‘சும்மா வருவாளா சுகுமாரி ? ‘ – இசை விழா விமர்சனம் – II

This entry is part [part not set] of 44 in the series 20041230_Issue

லலிதா ராம்


‘இந்த தடவை முத்ரா-ல ஃப்ரீ கச்சேரி இல்லையாமே ? ஆஸ்தீக சமாஜத்துல கூட 15-ரூபாய்க்கு டிக்கெட்டாம் ? ‘.

மாமா talk-இல் பிரதானமாய் அடிபடும் டாபிக் இதுதான். (மாமி talk-இல் இந்த வருடம் ‘மாம்பலம் சிஸ்டர்ஸ்-ஐப் பத்திதான் நிறைய பேச்சு. கர்நாடிகா ப்ரதர்ஸ், ராகம் சிஸ்டர்ஸ், பத்மா சேஷாத்ரி சிஸ்டர்ஸ் என்றெல்லாம் vocal-duet பாடும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இதே நிலையில் போனால், kilpakkam kins, kanchipuram cousins என்றெல்லாம் அடுத்த சீஸனில் யாரேனும் கிளம்பினால் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை.)

இந்த முறை நிறைய சபாக்கள் டிக்கெட் விலையைக் கணிசமாக ஏற்றியிருக்கின்றன. ஃப்ரைம் டைம் ஸ்லாட்டில் ஓசியில் கச்சேரி நடக்கக் கூடிய சபைகளும் குறைந்திருக்கின்றன. கிருஷ்ண கான சபையில், மினிமம் டிக்கெட் விலை ரூ.100-ஆக உயர்ந்துள்ளது என்றொரு நண்பர் சொன்னார். பாரத் கலாச்சார், வாணி மகால் போன்ற இடங்களில் மினிமம் 50 ரூபாய். பல காலமாய் சும்மா கிடைத்த சங்கீதத்தைக் கேட்டவர்களுக்கு இந்நிலை அத்தனை செளகரியமாக இல்லை. ‘சங்கீதத்தை வெச்சு வியாபாரம் பண்றான். தியாகராஜர் பாட்டை பாடறானே, அவருக்கு என்ன ராயல்டி குடுக்கறான் ? ஷாமியானா பந்தல்-ல 50 சேரைப் போட்டு, ஐம்பது, நூறு-னு டிக்கெட்டுக்கு வாங்கறான். ஆத்மார்த்த சங்கீதம் எல்லாம் போயாச்சு ‘ என்றெல்லாம் இவர்கள் புலம்புவதைக் கேட்க முடியும். இப்படிப் புலம்புவதால் இவர்களெல்லாம் காசில்லா ஓட்டாண்டிகள் என்றெண்ண வேண்டாம். இவர்கள் நினைத்தால் ஆளுக்கொரு சபை ஆரம்பித்து, சென்னையே ஓசியில் கச்சேரி கேட்கச் செய்ய முடியும்.

சங்கீதம் முதலில் கோயில்களில் ஆராதனைக்குரியதாக இருந்தது. பின்பு ராஜாக்கள், மிராசுதார்கள், பிரபுக்களின் ஆதரவில் இருந்தது. அப்பொழுதுதெல்லாம் எவனோ ஒரு புண்ணியவான் எல்லா செலவையும் ஏற்றுக் கொண்டுவிட ஊரே கச்சேரி கேட்டது. அது என்றைக்கு சபைக்கு வந்ததோ அன்றே டாக்டர், சார்டட் அக்கெளண்டெண்ட் என்றெல்லாம் profession இருப்பதுபோல், இசைக் கலைஞராக இருப்பது, சங்கீத சபை நடத்துவது போன்றவைகளும் தொழில்களாகிவிட்டன. ஒரு வேலையை நல்ல வேலை என்று நாம் சொல்வாமாயின், நம் ஊர் அகராதிப்படி, அந்த வேலைக்கு நல்ல சம்பளம் என்று அர்த்தம். சபா வாசலில் அறுசுவையரசு காண்டானில் ஒரு தோசைக்கு இருபது ரூபாய் கொடுக்க யாரும் தயங்குவதில்லை. குளிர்பதன வசதியுடன் கூடிய ஹாலில் 3 மணி நேரம் உட்கார்ந்து பாட்டு கேட்பதற்கு 50 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால் மாத்திரம் மனது வரமாட்டேன் என்கிறது. (அதுவும் சாயங்கால வேளையில் நடக்கும் கச்சேரியைத் தவிர மற்ற கச்சேரிகளுக்கெல்லாம் அனுமதி இலவசம்.)

இந்த இலவசம் என்ற சொல் ஏன் நம்மை இப்படி ஆட்டிப் படைக்கிறது என்று தெரியவில்லை. ‘இந்த இதழ் குங்குமத்துடன் சந்திரமண்டலத்தில் 2050-இல் திறக்கப் போகும் சரவண பவனில் ஒரு மசால் வடை இலவசமாகப் பெறுவதற்கான கூப்பன் இலவசம் ‘ என்று அறிவித்தால் கூட, அதற்காக குங்குமத்தை வாங்க சில பேர் நிச்சயம் இருப்பார்கள். இந்த விஷயத்தில் படித்தவர் பாமரர் பேதமெல்லாம் இல்லை. இந்த e-mail-ஐ நூறு பேருக்கு அனுப்பினால் 10 நிமிடம் long distance பேசலாம் என்றொரு stray email நமக்கு வந்தால், அதை forward செய்ய வேலை மெனெக்கெட்டு புதிய மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்கும் பிரகஸ்பதிகளை நான் பார்த்திருக்கிறேன். நாம் அனுபவிக்கும் ஒரு செளகரியத்திற்காக காசு கொடுக்க ஏன் மனசு வரமாட்டேன் என்கிறது ?

நம் மக்களின் கலாச்சாரத்தில் ஊரிய விஷயம் என்று இதை முழுமையாக ஒதுக்கிவிட முடியவில்லை. sony, nike போன்ற brand name-களுக்காகவே premium கொடுக்க தயங்காத நாம், சங்கீதம் பாடுபவனும் சபை நடத்துபவனும் மாத்திரம் லாபமே பார்க்காமல் பரோபகாரியாக வெறும் ஆத்ம திருப்திக்காக மாத்திரம் உழைப்பவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் என் சிற்றறிவுக்கெட்டாத ஒன்றாக இருக்கிறது.

கச்சேரி பிரபலமான, தேர்ந்த வித்வானால் இருக்க வேண்டும். அதுவும் நல்ல செளகரியமான சபையில் இருக்க வேண்டும். அதுவும் ஆபீஸ் முடிந்து கச்சேரிக்குத் தோதாய், 6.00 மணிக்கு மேல் இருக்க வேண்டும். சுதா ரகுநாதன் பாடும் பொழுது பாட்டு சங்கதிகள் மட்டும் கேட்ட்டால் பத்தாது. அவருடைய ஜிமிக்கி அசையும் அழகும் தெரிய வேண்டும். இது எல்லாம் காலணா காசு செலவழியாமலும் கிடைக்க வேண்டும். எனக்கு மட்டும் அடுத்த மாதத்திலிருந்து சம்பளத்தை இரண்டு மடங்காக்கினால் தேவலாம். என் ஆபீஸ் மாத்திரம் கஞ்சப் பிசிநாரி.

சரி…எது எப்படியோ, இன்றைக்கு வளையப்பட்டியின் நாதலயா ட்ரஸ்ட், ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் இசை விழாவைத் தொடங்கியிருக்கிறது. உன்னிகிருஷ்ணன் கச்சேரியை இன்று பலர் (ஓசியில்) இரசித்திருப்பார்கள். All are welcome வாசகத்தை பூதக்கண்ணாடி கொண்டு தேடுபவர்கள் ஹேமமாலினிக்குப் போகட்டும். எனது கவலையெல்லாம், சென்னைக்கு வந்து 4 நாட்கள் ஆகியும் இன்னும் ஒரு டி.என்.கிருஷ்ணன் கச்சேரி கூட கண்ணில் படவில்லையே என்றும். திருச்சி சங்கரனின் தனியாவர்தனத்தை எப்பொழுது கேட்போம் என்றும்தான்.

திருவாரூரும் தியாகராஜனும் – 21/12/2004 OST@ Krishna Gana Sabha, 4.00 P.M

—-

திருவாரூர் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது பிரம்மாண்டமன கோயிலும், அங்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கும் தியாகராஜப் பெருமானும்தான். தியாகராஜன் என்கிற பெயருக்கும் அவ்வூருக்கும் இருக்கும் உன்னத பந்தம், சங்கீத மும்மூர்த்திகளுள் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளால் பலப்பட்டது. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இன்றைய நிலையில் தியாகராஜனின் கசேரிக்குச் சென்றால் திருவாரூர் உடனில்லாதபடிப் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். நான் சொல்லும் தியாகராஜன், பிரபல வித்வான் ஓ.எஸ்.தியாகராஜன். நான் குறிப்பிடும் திருவாரூர் ஊரல்ல, மிருதங்க வித்வான் ஸ்ரீ திருவாரூர் பக்தவத்ஸலத்தைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்.

கச்சேரி முழுவதும் தோய்வில்லாமல் பாடுவது, ஜிகினா வேலைகளைத் தவிர்த்து ராக பாவத்துக்கு முக்கியம் அளிப்பது, சாஹித்யத்தை சிதைவில்லாமல் பாடுவது என்றெல்லாம் OST-இன் கச்சேரிகளில் பல நல்ல விஷயங்கள் இருப்பினும், நம்மை அதியெல்லாம் ரசிக்க விட வேண்டுமே. ‘Bang-the-vessel-um ‘ என்று இணையத்தில் ஒருவர் திருவாரூர் பக்தவத்ஸலத்தின் வாசிப்பை வர்ணித்திருந்தார். அது நூற்றுக்கு நூறு உண்மை. என்னதான் பெரிய மிருதங்க வித்வானாக இருக்கட்டும், பாடகர் ஆலாபனையின் பொழுது மிருதங்கத்தில் ஸ்ருதி சேர்ப்பது அத்தனை நாகரீகமாக இல்லாததோடன்றி நாராசமாகவும் இருக்கிறது. ஏதோ ஒருமுறை செய்தால பரவாயில்லை, எல்லா ராகங்களின் போதும் கொஞ்சம் ரவையை எடுத்துத் தொப்பியில் சேர்த்து, ‘தொம் தொம் தொம் ‘ என்று ஆசைதீர அறைய வேண்டியது. ஓ.எஸ்.டி எப்பொழுது எல்லாம் உச்சஸ்தாயித் தொட்டு ஒரே ஸ்வரத்தில் கொஞ்ச நேரம் நிற்கிறாரோ அப்பொழுது மட்டும், ‘சபாஷ், பலே ‘ போன்ற வார்த்தைகளை அவுத்து விட வேண்டியது, மத்தபடி, தானுண்டு, தன் கையுண்டு, மிருதங்கத்தின் தொப்பி உண்டு, ரசிகர்களின் காது உண்டு என்று சமர்த்தாக இருந்தார் பக்தவத்சலம். பாடகர் பாடாவது கொஞ்சம் பரவாயில்லை, வயலின் வித்வான் வி.வி.ரவியின் பாடு பெரும் திண்டாட்டமாய்ப் போய்விட்டது. அவர் வாசிக்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல் அப்படி ஸ்ருதி சேர்த்தாரா அல்லது ‘நீ வாசித்தது போதும், சீக்கிரம் முடி ‘ என்று மறைமுகமாகச் சொல்ல நினைத்தாரா தெரியவில்லை. மிருதங்கத்தைப் போட்டு அந்த அடி அடித்தார் (கவனிக்கவும்: அடித்தார் என்கிறேன், வாசித்தார் என்று சொல்லவில்லை). இப்படியெல்லாம் ஆலாபனையின் பொழுது ஸ்ருதி சேர்த்துவிட்டு, ஆலாபனை முடிந்ததும் வேறு ஒவ்வொரு முறையும் மிருதங்கத்தை திருப்பி வைத்து கல்லால் தட்டி தட்டி வலந்தலைப் பக்கத்தை ஸ்ருதி சேர்க்கிறார். பக்தவத்ஸலம் வாசித்தாரானால் வாத்யத்தில் அத்தனை முறை ஸ்ருதி பிசகி மறுபடியும் சேர்க்க நேரிடாது, அவர் போட்டு அடிக்கிற அடியில் தனது அழுகையை, இந்த ஸ்ருதி விலகல் மூலம் மிருதங்கம் காட்டிவிடுகிறது. இத்தனைக்கும் கச்சேரி முழுவதும் ஒரே மிருதங்கத்தில் கூட வாசிக்க வில்லை. பாதி கச்சேரிக்கு ஒரு மிருதங்கம், அடுத்த பாதிக்கு மற்றொன்று. (அந்த புது மிருதங்கத்தை எல்லோருக்கும் இடைஞ்சலாகும் வகையில் ஸ்ருதி சேர்க்கும் நற் காரியத்தை பக்தவத்சலத்தின் சிஷ்யர் செய்தார்.)

இந்தத் தொந்தரவுகளையெல்லாம் மீறி கச்சேரி ரசிக்கும் படியாக இருந்தது. அன்னமாச்சாரியாரின் ஹம்சத்வனி ராகப் பாடலில் (வந்தேஹம்) தொடங்கி, தியாகராஜரின் ‘விநாயகுனி ‘ பாடலில் முடிக்கும் வரை, OST-இன் இசை தங்கு தடையின்றி பொங்கி வழிந்த வண்ணம் இருந்தது. 2.30 மணி நேராத்துக்குள் எக்கெச்செக்கமாய்க் கீர்த்தனைகளைத் திணிக்காகமல், ஏழே ஏழு கீர்த்தனைகளைப் பாடினார். வி.வி.ரவியின் வயலின் வாசிப்பும் கச்சேரியின் வெற்றிக்கு பெரிதும் பலம் சேர்த்தது. கச்சேரி தொடங்கும் முன்பு, கெளரி மனோஹரி ராகத்தைப் பாடுமாறு என்னுடைய request-ஐ வைத்தேன். ஒரு ரசிகனின் கோரிக்கையை புறக்கணிக்காது, கெளரிமனோஹரியில் ஆலாபனை, கல்பனை ஸ்வரம் எல்லாம் பாடி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். கெளரி மனோஹரியைத் தொடர்ந்து, பூர்வி கல்யாணி படிப்படியாக வளர்ந்து, பெரும் காட்டாறாய் மாறி (அதிகம் ஆளில்லா) அரங்கையே நனைத்தாள். OST, தனது பலம், விளம்ப காலக் கீர்த்தனைகளிலும், அவசரமில்லாத ஆலாபனைகளிலும்தான் இருக்கிறது என்பதை நன்குணர்ந்து, தனக்கு சாதகமாக இருக்கும் விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி, அதற்கேற்றார் போல கீர்த்தனைகளைத் தேர்வு செய்து கொள்கிறார். ஜெயதேவரைப் பற்றி ஊத்துக்காடு வெங்கடகவி எழுதியுள்ளப் பாடலான ‘பத்மாவதி ரமணம் ‘, தியாகராஜரின் தேவகாந்தாரி ராகப் பாடலான ( ‘க்ஷீர ஸாகர ‘ அல்ல) ‘விநராதா ‘ மற்றும் அன்றைய main ராகமான சங்கராபரணத்தில் அமைந்த ‘எதுட நிலசிதே ‘-வும் இதற்குச் சான்று.

சங்கராபரணம், இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுக்கும் தங்கமாய் OST-யின் கையில் மாறியது. அதை வைத்து அழகியதொரு ஆபரணத்தை உருவாக்கி அதை அப்படியே வயலினிஸ்ட் வி.வி.ரவியிடம் கொடுக்க, அவர் அந்த ஆபரணத்திற்கு இன்னும் நிறைய அலங்காரங்களை நுணுக்கமாக செய்தார். வெறும் தங்கம் சங்கரன் அணியக்கூடிய ‘சங்கராபரணமாய் ‘ அரை மணி நேரத்தில் உருமாறியது. ஓ.எஸ்.டி-இன் சாஹித்ய சுத்தத்தைப் பற்றி போன வருடமே சொல்லியாகிவிட்டது. (மரத்தடி.காம்-இல் படிக்கலாம்). ஒவ்வொரு வார்த்தையும் தெளிவாகப் புரியும்படி ஓ.எஸ்.டி பாடிக் கொண்டிருக்கையில், பாடலில் எந்த வரியை நிரவலுக்கு எடுத்துக் கொள்வார் என்று அனுமானித்துக் கொண்டிருந்தேன். ‘தரான தொரகனி பராகு நாயெட ‘ என்ற சரணத்தின் வரிகளைதான் நிரவலுக்கு எடுத்துக் கொள்வார் என்று நான் நினைத்ததற்கு மாறாக, ‘கால் இடம் தள்ளி ‘ எடுப்பு இருக்கும் அனுபல்லவியை எடுத்துக் கொண்டார். ஆலாபனையில் உருவான தங்க ஆபரணத்தில் பொன்னும் மணியும் முத்தும் பதித்தார்போல நிரவலும் ஸ்வரமும் அமைந்தது. அதனைத் தொடர்ந்த தனி ஆவர்த்தனத்தை அப்படிச் சொல்வதற்கில்லை. வேகம் வேகம் வேகம், அதை அடைய சத்தம் சத்தம் சத்தம். கஞ்சிரா வாசித்த பி.புருஷோத்தமன் என்ன செய்வார் பாவம், மிருதங்கக்காரரை ஃபாலோ பணீதானே ஆக வேண்டும், அவரும் தனது கஞ்சிராவை முடிந்தவரை அறைந்தார். சதுஸ்ர நடையை திஸ்ரத்துக்கு மாற்றி அதிலேயே குறைப்பும் செய்தார்கள். சமையத்தில் மிருதங்கம் நையாண்டி மேளம் போல ஒலித்தது. தனி ஆவர்த்தனம் முடிந்ததும் பலத்த கைதட்டல், அது தனி ஆவர்த்தனம் முடிந்ததற்கா அல்லது நன்றாக இருந்ததற்கா என்பதை நாமறியோம்.

இந்த அற்புதமான கச்சேரி நேற்றைய தின சந்தோஷத்தின் தொடக்கம்தான். அதனைத் தொடர்ந்த பேரானந்தத்தையும், அதை வஞ்சனையின்றி வழங்கிய சஞ்சய் சுப்ரமண்யத்தைப் பற்றி விரைவில்….

பின் குறிப்புகள்:

1) kutcheribuzz.com போன வெள்ளியன்று மட்டும்தான் கச்சேரிக்கு இடைஞ்சலாய் அவர்களது daily update-ஐ விநியோகம் செய்தார்கள், மற்ற நாளெல்லாம், 2-3 பேர் சபா வாசலில் விநியோகம் செய்கிறார்கள்.

2) சமுத்ரா பத்திரிகை போன வருட புத்தகங்களையே இந்த வருடமும் வைத்திருப்பதாக எழுதியிருந்தேன். அது மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் மாத்திரம்தான் போல. இன்று முத்ராவில் நவம்பர் 2004 இதழ் வரை அடுக்கி வைத்தொருந்தார்கள். தவறான செய்திக்கு மன்னிக்கவும்.

3) போன வாரம் நான் கேட்டுக் கொண்டது இறைவன் காதுக்கு எட்டிவிட்டது போலும். ஆல் இந்தியா ரேடியோவும் தூர்தர்ஷனும் இப்பொழுது கொஞ்சம் ரெக்கார்டிங்குகளை வெளியிட்டிருக்கின்றன. மியூசிக் அகாடெமியில் இசை விழாவைத் தொடக்கி வைத்த ஜஸ்டிஸ் பக்தவத்சலமும் நிறைய ரெக்கார்டிங் வெளியிடுமாறு ஆல் இந்தியா ரேடியோவை விண்ணப்பித்துள்ளார்.

விளைந்த பயிர் – 21/12/2004, Sanjay Subramaniam @ Indian Fine arts, 7.30 P.M

—-

விளையும் பயிர் முளையிலேயே தெரியுமாம் ? முளையில் தெரிந்த பயிர்கள் அனைத்துமே விளைந்துவிடுகின்றதா என்ன ? அதுவும் சங்கீதத் துறையில் ஆயிரத்தில் ஒரு பயிரைக் காண்பதே அபூர்வம். அந்தச் சிலரில், சில வருடங்களுக்கு முன் முளையிலேயே தெரிந்த பயிராக இருந்த சஞ்சய் இன்று விளைந்த பயிராய் விருந்தளிக்கும் சஞ்சய் சுப்ரமண்யமும் ஒருவர். சில மாதங்கள் முன்பு சஞ்சயின் கச்சேரியை பெங்களூரில் கேட்டேன். பெங்களூர் பனியானாலோ என்னவோ தெரியவில்லை, குரல் எக்கச்செக்கமாய் மக்கர் செய்து அடிக்கடி ஸ்ருதியிலிருந்து விலகிய வண்ணம் இருந்தது. இதனாலேயே அன்று பாடிய எந்த ஒரு ராகமும் நிறைவாகவில்லை. ஆனால் நேற்றைய கச்சேரியின் theme பூர்ணத்துவம் என்றால் அது மிகையாகாது. 5 நிமிடம் பாடிய பேகடா ஆலாபனையாகட்டும், விஸ்தாரமாய் பாடிய கேதார கெளளை ஆலாபனையாகட்டும், பாடிய விதத்தில் ஒரு completeness இருந்தது. இன்னும் கொஞ்சம் பாடியிருக்கலாமே என்ற எண்ணம் துளியேனும் எழவில்லை.

சஹானா ராகத்தில் அமைந்த ‘கருணிம்ப ‘ வர்ணத்தைத் தொடங்கிய பொழுதே ஒரு relaxed ambience உருவாகிவிட்டது. சஹானாவைத் தொடர்ந்து சஞ்சய் ஸ்ரீ ராகத்தை ஆரம்பித்த பொழுது, இன்று ரோலர் கோஸ்டர்ல் எல்லாம் போகப் போவதில்லை, நல்ல வேலைப்பாடுகள் கொண்ட ரதத்தில் கம்பீரமாய் பவனி வரப்போகிறோம் என்பதை ரசிகர்கள் உணர்ந்திருப்பார்கள். விளம்ப காலத்தில் அமைந்த பாடலில், பல்லவி வரியில் வரும் ‘ஸ்ரீ ஸாரஸ பதே ரஸ பதே ஸபதே பதே பதே ‘ (சாஹித்யமும் லய விவகாரமும் கலந்து, ஸாரஸபதே என்கிற வார்த்தையை ஒவ்வொரு எழுத்தாய்க் குறைத்து, அர்த்தமும் கெடாம அமைந்திருக்கும் தீக்ஷதரின் கீர்த்தனையில்தான் எத்தனை அழகு!!!) என்கிற வரியை துரிதகாலத்திலும் பாடிய விதம் வெகு அழகாக இருந்தது.

சுத்த மத்யம ராகங்கள் எண்ணிக்கையில் வேண்டுமானால் பிரதி மத்யம ராகங்களை மிஞ்சிவிடலாம், அழகில் நிச்சயம் பிரதி மத்யம ராகங்களை மிஞ்ச முடியாது என்பது என் எண்ணம். (என் எண்ணம் மட்டுமே, நிறைய பேருக்கு இதில் மாற்றுக் கருத்திருக்கலாம்). ஸ்ரீ ராகத்துக்குப் பிறகு ஒரு பிரதி மத்யம ராகம் பாடுவார் என்று நான் நினைத்திருக்கையில், சஞ்சய் பேகடாவை ஆரம்பித்ததில் கொஞ்சம் ஏமாற்றம். அந்த ஏமாற்றம் எல்லாம் சஞ்சயின் ஆலாபனையில் கரைந்தோடியது. சஞ்சயின் வாயிலிருந்து உதிர்ந்த ஒவ்வொரு ஸ்வரத்தையும் ஸ்ரீராம்குமாரின் வயலின் நிழல் போலத் தொடர்ந்தது. ஆலாபனை மற்றும் ஸ்வரப்ரஸ்தாரத்தின் பொழுது ஸ்ரீராம்குமார் கொடுத்த response அவரது திறைஐயைப் பறைசாற்றும் விதமாக இருந்தது. சஞ்சய், பேகடாவில் தியாகராஜரின் ‘நாதோபாசனா ‘ கிருதியைப் பாடிவிட்டு, தோடியை sub-main-ஆக எடுத்துக் கொண்டார்.

சஞ்சயின் தோடி ஆலாபனை, அதனைத் தொடர்ந்து வயலின் ஆலாபனை, அதனைத் தொடர்ந்து பாபநாசம் சிவனின் ‘தணிகை வளர் சரவணபவா ‘ என்ற கிரிதி, கல்பனை ஸ்வரம் எல்லாம் அரை மணிக்குள் முடிந்து விட்டது. தோடி என்னும் பிரவாகத்தில் எத்தனை நேரம் வேண்டுமானாலும் முங்கி முத்தெடுத்துக் கொண்டேயிருக்கலாம். இங்கு சிக்கல் என்னவென்றால், நிறை நேரம் பாடியும் திருப்தி ஏற்படாமல் போகக்கூடிய சாத்தியக்கூறு இந்த ராகத்தில் ரொம்பவே அதிகம். அரை மணியில், ஒரு சிறந்த சிறுகதைக்குரிய precision-டன் தோடு அரங்கெங்கும் புரண்டோடி மிளிர்ந்தது.

இத்தனை அற்புதமாய்ப் பாடும் சஞ்சய் சாஹித்யத்தை மாத்திரம் கொஞ்சம் புரியும்படி பாடிவிட்டாரானால், அவரைப் பிடிப்பதற்கு ஆளில்லை. பாடலில் சங்கதிகள் பாடுவதென்பது கம்பியில் நடப்பது போல. ஒவ்வொரு சங்கதியிலும் ராகத்தின் உருவம் விரிவடைந்துகொண்டே போக வேண்டும். ஆனால், அப்படி ராகம் விரியும் பொழுது சாஹித்யமும் குலையாமல் இருக்க வேண்டும். சஞ்சயின் சங்கதிகளில் ராகம் அற்புதமாய் விரிகிறது, ஆனால் சாஹித்யம் செமர்த்தியாய் அடி வாங்கிக் குலைகிறது. நாகநந்தினி (என்கிற சற்றே அபூர்வமான) ராகத்தில் ‘ஸத்தலேனி ‘ என்ற பாடலை ‘வட்டலேனி ‘ என்று (தோராயமாய் அனுமானித்து) குறித்துக் கொண்டேன். வீட்டிற்கு வந்து புத்தகத்தில் பார்த்தால் ‘ஸத்தலேனி ‘ என்றிருக்கிறது.

நாகநந்தினியைத் தொடர்ந்து கேதாரகெளளையை main ராகமாய் எடுத்துக் கொண்டு ஆலாபனை செய்தார். பிருகா பிருகா என்றொரு சமாசாரம் இருக்கிறதே, அதைப்போல டேஞ்சர் ஆசாமி உலகத்தில் இல்லை. இவர் ஒன்று எத்தனை பிரயாசைப்பட்டாலும் வரமாட்டார். அப்படியே வந்துவிட்டாரானால், தன் அளவறிந்து நடக்கமாட்டார். அதுவும் கேதாரகெளளை போன்ற ரக்தி ராகங்களில் அவர் இல்லையென்றால் ஆலாபனை தோய்வடைந்துவிடும், அவரின் இருப்பு அதிகமாகிவிட்டால் ராக பாவம் போய்விடும். இதையெலலம் உணர நிறய கச்சேரி கேட்டிருக்க வேண்டும். சஞ்சயின் அன்றைய கச்சேரியை மாத்திரம் கேட்டவர்கள், சஞ்சய் effortless-ஆக ஒரு அற்புதக் கலவையை உருவாக்கி கேதாரகெளளையைப் பார்த்து, இந்த பிருகாவைக் கையாள்வது ரொம்பவே சுலபம் என்றெண்ணியிருக்க மாட்டார்கள். ஆலாபனையைத் தொடர்ந்து, ‘சரகுண பாலிம்பவை ‘ நன்றாக இழைத்து இழைத்துப் பாடிவிட்டு (Is there an alternative/equivalent way of expressing இழைச்சுப் பாடறது ? Not that I know of.) இரண்டு களை ஆதிதாளத்தில் முக்கால் இட எடுப்பில் பாடிய கல்பனை ஸ்வரங்கள் அனைத்தும் அருமை. குறிப்பாக, விளம்ப காலத்தில் பாடிய ஸ்வர்ங்களை, முதலில் சதுஸ்ர நடையில் ஆரம்பித்து, கடைசி அரை ஆவர்த்தனைத்தை திஸ்ர நடைக்கு மாற்றி சாஹித்யத்துக்கு வந்தது வெகு அழகாக இருந்தது. இந்த சீஸனில் நடந்த கச்சேரிகள் அனைத்திலும், கல்பனை ஸ்வரம் பாடும் பொழுது, முதலில் சில ரவுண்டு சாஹித்யத்தின் எடுப்புக்குப் பாடிவிட்டு, குறைப்பு பாடும் பொழுது சமத்துக்கு வந்துவிட்டார்கள். சஞ்சய் அன்று பாடிய கேதாரகெளளை கல்பனை ஸ்வரங்களில், குறைப்பை 3/4 இட எடுப்புக்கே பாடி, தனது லய விந்யாசத்தையும் அற்புதமாய் வெளிப்படுத்தினார்.

கல்பனை ஸ்வரத்துக்குப் பின் தஞ்சாவூர் முருகபூபதி ஒரு short and sweet தனி ஆவர்த்தனம் வாசித்தார். அதிக ஜிகினா வேலைகள், அதீதமான வேகமெல்லாம் இல்லாமல், ஆங்காங்கே கொஞ்சம் மிஸ்ரம், கொஞ்சம் திஸ்ரம் எல்லாம் தொட்டுக் கொண்டு அழகாக வாசித்தார். கடைசியில் வைத்த கோர்வை ரொம்பவே சாதாரணமாக இருந்தது, கொஞ்சம் complex-ஆக வைத்திருக்கலாம். தனி ஆவர்தனத்துக்குப் பின் சுசரித்ரா ராகத்தின் சாயையைக் காட்டிவிட்டு கோடாஸ்வர ஐயரின் ‘வேலும் மயிலும் ‘ கீர்த்தனையைப் பாடினார். (இதுவும் புத்தகத்தைப் பார்த்துதான் புரிந்தது.) கமாஸ் ராகத்திலும், யமுன கல்யாணியிலும் துக்கடா பாடிவிட்டு. பைரவியில் பரமசிவனின் மேல் ஒரு விருத்தம் பாடினார், அதனை ஸ்ரீராம்குமாரும் அழகாக வயலினில் follow செய்ய, விருத்தம் ஹிந்தோலத்தில் தொடர்ந்தது. ஆனால், விருத்தத்தின் நாயகன் இப்பொழுது நாரயணனாக மாறிவிட்டார். இதென்னடா புதுமை என்று நான் வியந்து கொண்டிருக்கையில், ‘மா ரமணன் ‘ ஈர்த்தனையை ஆரம்பித்தார். சிவன், விஷ்ணு இருவர் மேலும் எழுதப்பட்ட பாபநாசன் சிவன் கீர்த்தனையை சஞ்சய் எடுத்துக் கொண்டவுடந்தான், அந்த விருத்தத்தின் காரணம் புரிந்தது.

concert review என்று சொல்லிவிட்டு குற்றம் கண்டுபிடிக்காவிட்டால் எப்படி ? கச்சேரிக்கு 200 ரூபாய் டிக்கெட் வாங்கிப் போகும் ஆசாமிகள் மிகக் குறைவு. 30 ரூபாய் டிக்கெட்டுக்குதான் கூட்டம் அதிகமிருக்கும். ஜெர்மன் ஹாலில் முப்பது ரூபாய் டிக்கெட்டுக்குரிய கடைசி வரிசைகள் முழுவதும் பல தகர நாற்காலிகள் நெருக்கி நெருக்கிப் போடப்பட்டுள்ளன. இதனால், ரசிகர்களின் ஒவ்வொரு அசைவின் பொழுதும் தகரம் தரையின் கிரீச்சிடும் நாராசம் நமை இடைஞ்சலில் ஆழத்திக் கொண்டே இருக்கிறது. அடுத்த சீஸனுக்குள் இந்த நிலைமை மாறும் என்று நம்புவோம்.

அன்புடன்

‘லலிதா ‘ – ராமச்சந்திரன்

http://classical-music-review.blogspot.com/

Series Navigation