சுப்புணியின் நாடக அரங்கேற்றம்

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

கௌரி கிருபானந்தன்


கலா நிலையம் நாடகக் குழுவினர் “ஸ்ரீகிருஷ்ண தூது” என்ற புராண நாடகத்தை நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

மறுநாள் மாலை செட்டியார் ஹாலில் நாடகம் போடுவதாக ஏற்பாடு. அந்த ஊர் மக்கள் புத்திசாலிகள். வசன உச்சரிப்பில் சின்ன குறை தென்பட்டாலும் உடனே கத்தி கூச்சல் போட்டு ரகளை செய்வார்கள். பழைய செருப்புகளை குறி தவறாமல் வீசி தங்களுயை திறமைக்கு ஏற்ப நடிகர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்.

இது போன்ற திறமை மிக்க பார்வையாளர்கள் இருப்பது தெரிந்துதான், அந்த ஊரில் நாடகம் போடும் போது எல்லா நடிகர்களுமே ஏனோ தானோ என்று இருக்காமல் நடிப்புதான் உயிர்மூச்சு என்பது போல் மனதை, உடலை ஒருமுகப்படுத்தி நடிப்பார்கள். ஒரு விதமாக சொல்லப் போனால் அந்த ஊரில் நாடகம் போடுவதை ஒரு சவாலாக, உரைகல்லாக நினைத்தார்கள். அந்த ஊரில் நாடகம் வெற்றிகரமாக அரங்கேறிவிட்டால் போதும். இனி கவலையில்லை. ஒரு பட்டிதொட்டி பாக்கியில்லாமல் தமிழ்நாடு முழுவதும் நாடகத்தை தைரியமாக நடத்திவிடலாம்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. விருந்துச் சாப்பாட்டில் முதல் கவளம் சாப்பிடும் போதே பல்லுக்கு இடையில் கல் அகப்பட்டது போல் எதிர்பாராத விதமாக தடை ஒன்று வந்து சேர்ந்தது. மறுநாள் நாடகம் அரங்கேற வேண்டிய நிலையில், திருதராஷ்ட்ரனாக நடிக்கும் சரவணன், வண்டியிலிருந்து கீழே விழுந்து காலில் அடிபட்டுக் கொண்டுவிட்டான். நாடகத்தில் கண்களை முடி சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்வதற்குப் பதிலாக, ஆஸ்பத்திரி படுக்கையில் கண்களை மூடிப் படுத்துக் கிடந்தான். மகாபாரதக் கதையில் திருதராஷ்ட்ரனுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போகலாம். ஆனால் திருதராஷ்ட்ரன் இல்லாமல் ஸ்ரீகிருஷ்ணர் தூது போகும் காட்சியை எப்படி நடத்த முடியும்? குழுவினருக்கு மயக்கமே வந்து விட்டது. ஒரு அவசரத் தேவை ஏற்பட்டால் கிருஷ்ணர், துரியோதனன் போன்ற முக்கியமான வேடங்களுக்கு குழுவில் இருந்த மற்ற நடிகர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டார்களே தவிர, போயும் போயும் திருதராஷ்ட்ரன் வேடத்திற்கு மாற்று ஆள் தேவைப்படும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்தது இல்லை. ஒரு நாள் அவகாசத்தில் இப்போது மாற்று ஆளுக்கு எங்கே போவது?

பிரச்னை தீரும் வழியைத் தேடினார்கள். அந்த சமயத்தில்தான் சுப்புணி என்று செல்லமாக அழைக்கப்படும் சுப்பிரமணியம் அவர்கள் கண்களில் பட்டான்.

சுப்புணி அவர்களுடைய ஆபீசிலேயே கிளார்க்காக இருந்தான். அவ்வப்போது அவர்கள் போடும் நாடகங்களைப் பார்க்க வருவான். பொழுது போகாத நேரத்தில் ஒத்திகை நடக்கும் இடத்திற்குப் போவதும் உண்டு. அதுநாள் வரையில் சுப்புணியை ஒரு அற்ப பிராணியாகக் கூட யாரும் மதித்தது இல்லை. ஆனால் இந்த சமயத்தில் சுப்புணி அவர்கள் கண்களுக்கு சமயசஞ்சீவனியாகக் காட்சியளித்தான். சாதாரணமாக இருந்தால் சுப்புணியின் முகத்தில் பிரேதக்களைதான் தென்பட்டிருக்கும். ஆனால் இப்பொழுது அரசகளை, அதாவது திருதராஷ்ட்ரனின் குருட்டுக் களையுடன் சுப்புணியின் முகம் ஒளி வீசுவது போல் அவர்களுக்குத் தோன்றியது.

“சுப்புணீ! இந்த இக்கட்டிலிருந்து நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். இது உன் கைகள் இல்லை. கால்கள் என்று நினைத்துக் கொள்.”

திடீரென்று டைரக்டர் சுந்தரம் சுப்புணியின் கைகளை அழுத்தமாக பற்றிக்கொண்டான். அவன் பின்னால் நின்றிருந்த மற்ற நடிகர்கள் எதிர்பார்ப்புடன், வேண்டுகோள் விடுப்பது போல் சுப்புணியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சுப்புணி திகைத்துப் போய் விட்டான். தன்னுடைய கைகால்கள் இடம் மாறிவிட்டனவோ என்று பதட்டமடைந்து விட்டான். கண்களை கசக்கிக் கொண்டு கைகளை சரி பார்த்துக் கொண்டான்.

“என்ன ஆச்சு சுந்தரம்? உனக்கு என்ன வேண்டும்?” கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல் பலவீனமான குரலில் கேட்டான்.

“சுப்புணீ! மிகப் பெரிய இக்கட்டில் நாங்கள் எல்லோரும் சிக்கிக் கொண்டு விட்டோம். நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். மாட்டேன், முடியாது என்று மட்டும் சொல்லக் கூடாது.” சுந்தரம் சுப்புணியின் கைகளை மேலும் அழுத்தினான்.

“என்ன நடந்தது?” மறுபடியும் கேட்டான் சுப்புணி.

“திருதராஷ்ட்ரன் ஆஸ்பத்திரியில் இருக்கிறான்.” மொட்டையாகச் சொன்னான் சுந்தரம். “திருதராஷ்ட்ரனா? அவன் யாரு?”

“உனக்கு விஷயத்தை விளக்கிச் சொல்வதற்குள் என் உயிரே போய் விடும். அதான், திருதராஷ்ட்ரனாக எங்க நாடகத்தில் நடிப்பானே சரவணன் …. அவன் வண்டியில் போகும்போது ஆக்சிடெண்ட் ஆகி இப்பொழுது ஆஸ்பத்திரியில் இருக்கிறான்.

“அடப் பாவமே! இப்போ எப்படி இருக்கிறான்? நீங்கள் யாராவது போய்ப் பார்த்தீங்களா?” அக்கறையாக கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் சுப்புணி.

“இதோ பாரு சுப்புணீ! நான் ரொம்ப சீரியஸாக பேசிக் கொண்டிருக்கிறேன். நான் சொல்வதை முழுவதுமாகக் கேள். குறுக்கே கேள்வி கேட்காதே.”

விஷயம் புரியாமல் சுப்புணி திரு திருவென்று விழித்தான்.

“சுப்புணீ! விளக்கி சொல்ல நேரம் இல்லை. நாங்கள் கேட்கப் போவதை நீ மறுக்கக்கூடாது. நாளை நாடகத்தில் திருதராஷ்ட்ரனாக நீதான் நடிக்க வேண்டும்.” சுப்புணியின் கைகளை மற்றொரு முறை பற்றிக் கொண்டான் சுந்தரம்.

“ஆமாம் சுப்புணீ! இந்த வேடத்தில் நீ நடித்துத்தான் ஆக வேண்டும். எங்களை இக்கட்டிலிருந்து காக்கும் பொறுப்பு உன்னுடையது.” எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

சுப்புணிக்கு தலை சுற்றியது. அவன் முகத்தில் அதிர்ச்சி வெளிப்படையாகத் தெரிந்தது. “என்ன? கிண்டலாக இருக்கா? நானாவது … நடிப்பதாவது? இன்னிக்கு ஏப்ரல் ஒண்ணாம் தேதி கூட இல்லையே?”

“நாடகத்தில் நடிப்பதற்கு தலையில் இரண்டு கொம்புகள் இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்.” தைரியம் சொன்னான் சுந்தரம்.

“நன்றாகச் சொன்னாய் போ. ஸ்டேஜ் என்றாலே நான் பயந்து போய் விடுவேன். போன மாதம் கிளப் ஆண்டுவிழா அன்று யாருக்கோ மாலையைப் போட ஸ்டேஜ் மீது ஏறியபோது கால்கள் நடுங்கி கீழே விழுந்து விடுவேனோ என்று பயந்து விட்டேன். என்னை விட்டு விடுங்கள். வேறு யாரையாவது போடுங்கள்.” சொல்லிக் கொண்டே அங்கிருந்து வெளியேறுவதற்காக ஒரு அடி முன்னால் வைத்தான் சுப்புணி.

போகப் போனவனின் தோள் மீது பலமாக கையைப் பதித்து பின்னால் இழுத்தான் சுந்தரம். “இதோ பார் சுப்புணீ! நீ நடிக்கப் போவது திருதராஷ்ட்ரனின் வேடம். ஸ்டேஜில் நின்றால்தானே உனக்கு கால்கள் நடுங்கும்? அரசவையில் சிம்மாசனத்தின் மீது ஜம்மென்று உட்கார வேண்டியதுதான் திருதராஷ்ட்ரனின் வேலை. அழகாக வேலைப்பாடு செய்யப்பட்ட குஷன் நாற்காலியை உனக்காகப் போடச் சொல்கிறேன். கவலையில்லாமல் சமர்த்தாக உட்கார்ந்துகொள். போதுமா?” சுப்புணியின் முதுகில் லேசாகத் தட்டினான் சுந்தரம்.

“சரி. நிற்க வேண்டிய தேவையில்லை என்பதால் கால்கள் நடுங்காமல் இருக்கலாம். ஆனால் மக்களைப் பார்த்தால் என் உடல் முழுவதும் நடுங்குமே? அதற்கு என்ன செய்வது?” புதிதாக பிரச்னையைக் கிளப்பினான் சுப்புணி.

“முட்டாப் பயலே! உன்னுடைய வேடம் என்னவென்று மறந்து போய்விட்டாயா? நீ நடிக்கப் போவது திருதராஷ்ட்ரனின் வேடம். திருதராஷ்ட்ரனோ பார்வையற்றவன். கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருப்பான். நீ செய்ய வேண்டியதும் அதுதான். பார்வையாளர்கள் உன் கண்ணில் படாத போது எதற்காக நீ பயப்படப் போகிறாய்?” லாஜிக்கான பாயிண்டை எடுத்துவிட்டான் சுந்தரம்.

“எல்லாம் சரி. ஆனால் வசனம் பேச வேண்டாமா? ஒருநாள் அவகாசம் கூட இல்லை. அதற்குள் வசனத்தை எப்படி மனப்பாடம் செய்வது?” முணுமுணுத்தான் சுப்புணி.

“சுப்புணீ! அனாவசியமாகக் கவலைப்பட்டு எங்களை கஷ்டப்படுத்தாதே. நாடகத்தில் கிருஷ்ணன் தூது வரும் காட்சியில் திருதராஷ்ட்ரன் கடைசி வரையில் ஸ்டேஜ் மீது இருப்பானே தவிர அதிகமாக வாயைத் திறக்க மாட்டான். அவனுக்கு இருக்கும் வசனங்கள் இரண்டோ மூன்றோதான். அதுவும் ரொம்ப சின்னச் சின்ன வசனங்கள். அவற்றை மனப்பாடம் செய்ய உனக்கு பத்து நிமிடங்களுக்கு மேல் தேவைப்படாது. புது மாப்பிள்ளை போல் ரொம்பவும் பிகு செய்து கொள்ளாமல் ஓ.கே. சொல்லு.” வேண்டுகோள் விடுத்தான் சுந்தரம்.

“வசனம் குறைவாக இருந்தால் மட்டும் போதுமா? முகத்தில் ஏதாவது உணர்ச்சிகளைக் காட்ட வேண்டாமா?” சுப்புணி சந்தேகத்தை வெளியிட்டான்.

“உன் சந்தேகத்தை பெட்ரோலை ஊற்றி கொளுத்து. திருதராஷ்ட்ரனோ கண்ணில்லாத குருடன். அப்படியிருக்கும் போது முகத்தில் நவரசம் சொட்ட சொட்ட நடித்தாக வேண்டுமா என்ன?” சள்ளென்று எரிந்து விழுந்தான் சுந்தரம்.

“பின்னே?” சுப்புணி விடவில்லை.

“பின்னும் இல்லை. ஊசியும் இல்லை. அதிகமாகப் பேசினால் பல்லைத் தட்டி கையில் கொடுத்து விடுவேன். எக்ஸ்ப்ரெஷனுக்காக நீ அதிகம் சிரமப்படத் தேவையில்லை. தலையை இட வலமாகவோ, மேலிருந்து கீழாகவோ ஏதோ ஒரு விதமாக ஆட்டிக் கொண்டிரு. பார்வையாளர்கள் தங்கள் மனதிற்கு தோன்றிய விதமாக உன் தலையாட்டல்களுக்கு விளக்கம் சொல்லிக்கொள்வார்கள். போதுமா? தெரியாமல்தான் கேட்கிறேன். மக்கள் கிருஷ்ணரையும், துரியோதனனையும் பார்ப்பார்களே தவிர, திருதராஷ்ட்ரன் என்ன செய்கிறான் என்று யாரும் கவனித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள். இனியும் கேள்விகள் கேட்டு என்னைக் கொலைக்காரனாக்கி விடாதே.” சுந்தரம் கோபமாகச் சொன்னான்.

“சரி. நீங்கள் இவ்வளவு தூரம் சொல்லும் போது மாட்டேன் என்று எப்படி சொல்வது? நீங்கள் கஷ்டத்தில் இருக்கும் போது உதவி செய்யாமல் இருப்பதும் சரி இல்லை ……..” இழுத்தான் சுப்புணி. “அது வந்து … ஒன்றுமில்லை. திறமை மிக்க நடிகர்கள் இவ்வளவு பேர் இருக்கும் போது நான்தான் பலிகடாவாக கிடைத்தேனா?” கடைசியாக கேட்டே விட்டான் சுப்புணி.

“சுப்புணீ! சரவணனுக்கு விபத்து ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தது முதல் எங்கள் எல்லோருக்கும் மூளையே கலங்கிப் போய் விட்டது. மாற்று திருதராஷ்ட்ரனைத் தேடிக்கொண்டு தெருத் தெருவாக சுற்ற வேண்டிய நிலைமை. எங்களுடைய நல்ல காலமோ, இல்லை உன்னுடைய பொல்லாத வேளையோ நீ எங்கள் கண்ணில் பட்டாய். அதோடு திருதராஷ்ட்ரனுக்கு இருக்க வேண்டிய ஒளிவட்டம், குருட்டுப் பார்வை எல்லாமே உன்னிடம் இருந்தது. இனி உன் சந்தேகங்களை, குறுக்குக் கேள்விகளை நிறுத்திக் கொள். நேராக வீட்டுக்குப் போய் சாப்பாட்டை முடித்துக் கொண்டு சரியாக நான்கு மணிக்கெல்லாம் சமுதாயக் கூடத்திற்கு வந்து சேரு. இரண்டு மூன்று முறை ஒத்திகை பார்த்துக் கொண்டால் போதும். உனக்கு வசனம் பழகிவிடும்.” சுந்தரம் தைரியம் சொன்னான்.

“ஆகட்டும். இவ்வளவு தூரம் சொன்ன பிறகு தவிர்க்கத்தான் முடியுமா? வருகிறேன்” என்று சொல்லிவிட்டு சுப்புணி கிளம்ப முற்பட்டான்.

“தவிர்க்கத்தான் முடியுமா என்று சொல்லிவிட்டு, வராமல் தப்பித்து விடலாம் என்று நினைத்தாயோ தெரியும் சேதி! சரியாக நாலு மணிக்கு ஒத்திகைக்கு வராமல் போனால் உன்னை உண்மையிலேயே திருதராஷ்ட்ரனாக்கி ஒரு மூலையில் உட்கார வைத்து விடுவேன் ஜாக்கிரதை!” சுந்தரம் மிரட்டினான்.

“இந்த சுப்புணி வாக்குக் கொடுத்தால் கொடுத்துதான். ஆற்று வெள்ளத்தில் இறங்கிய பிறகு சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன? இந்த அதிரடி தாக்குதலில் நான் நடிகனாக ஆகணும், இல்லையா …..”

செட்டியார் ஹால் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ‘ஸ்ரீகிருஷ்ணண் தூது’ பிரபலமான நாடகம் என்பதால் அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்தார்கள்.

நாடகம் தொடங்கிவிட்டது. கிருஷ்ணனுக்கும் துரியோதனனுக்கும் இடையில் காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருந்தது. பார்வையாளர்கள் உற்சாக மிகுதியில் கைதட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

திருதராஷ்ட்ரன் வேடத்தில் இருந்த சுப்புணி கண்களை மூடி சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு அவ்வப்போது தலையை அசைத்துக் கொண்டிருந்தான். ஆரம்பத்தில் கொஞ்சம் பயமாக இருந்தாலும் போகப் போக அந்த பயம் காணாமல் போய்விட்டது. கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருப்பது போல் கண்களை மூடி உட்கார்ந்திருந்தான்.

நாடகம் ரொம்ப ஜோராக போய்க் கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக பிரச்னை வந்தாலும் நினைத்ததை விட வெற்றிகரமாக நாடகம் அரங்கேறிக் கொண்டிருந்ததால் சுந்தரமும், மற்ற நடிகர்களும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

நாடகம் கடைசிக் கட்டத்தை அடைந்தது. கிருஷ்ணனின் தூது தோல்வி அடையும் காட்சி அது. ஐந்து கிராமங்களையாவது பாண்டவர்களுக்கு தரச் சொல்லி கிருஷ்ணன் கேட்ட போது ஊசி முனை அளவு நிலம் கூட தர முடியாது என்று துரியோதனன் ஆணவமாகச் சொல்கிறான். மகனுக்கு புத்திமதி வழங்கச் சொல்லி கிருஷ்ணன் திருதராஷ்ட்ரனுக்கு அறிவுரை வழங்குகிறான்.

இதுவரையில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் முதல்நாள் இரவு சரியான தூக்கம் இல்லை என்பதாலும், போறாத குறைக்கு கண்களை மூடி அமர்ந்திருப்பது, மெத்தென்று இருந்த குஷன் நாற்காலி … எல்லாமாகச் சேர்ந்து திருதராஷ்ட்ரன் வேடத்தில் இருந்த சுப்புணிக்கு கண்களை சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்துவிட்டது. தலையாட்டல் நின்று போய் கழுத்து ஒருபக்கமாக சாய்ந்துவிட்டது. குறட்டை சத்தம் மெதுவாகக் கிளம்பியது. சூடான வசனங்களை எடுத்து வீசிக் கொண்டிருந்த கிருஷ்ணன் ஆகட்டும், துரியோதனன் ஆகட்டும் இதைக் கவனிக்கவில்லை.

கிருஷ்ணன் திருதராஷ்ட்ரன் பக்கம் திரும்பி “அரசே! உன் அருமை மைந்தனின் ஆணவம் மிகுந்த பேச்சுகளைக் கேட்டாயா? உன் அருமை புத்திரனின் நியாயமற்ற செயல் உன் கண்ணில் படவில்லையா? நீ பிறவியில் குருடனே தவிர உன் மனக்கண் இன்னும் செயலற்றுப் போகவில்லை இல்லையா? இப்பொழுதேனும் விழித்துக்கொள். உன் மகனுக்கு நல்ல வார்த்தைகளைச் சொல்லி அவனுக்கு சரியான வழியைக் காட்டு” என்று சொன்னான்.

சுப்புணியோ குறட்டையின் சத்தத்தை அதிகப்படுத்தினான். நல்ல வேளையாக மைக் அருகில் இல்லாததால் குறட்டை சத்தம் பார்வையாளர்களின் செவிகளில் விழவில்லை. ஆனால் கிருஷ்ணன் வேடத்தில் இருந்த சுந்தரம் வரப்போகும் ஆபத்தை ஊகித்துவிட்டான்.

‘சுப்புணீ! காரியத்தை கெடுத்துவிட்டாயே’ என்று நினைத்துக்கொண்டே திருதராஷ்ட்ரனின் அருகில் சென்றான்.

“மகாராஜா! என் சொற்கள் உன் செவிகளில் விழவில்லையா? அரசனாக இருந்தும் மகனுக்குக் கடமையை உணர்த்த உன்னால் முடியவில்லையா?” என்று சொந்தமாக வசனத்தை எடுத்துவிட்டான்.

அப்படியும் திருதராஷ்ட்ரனின் துயில் கவலையில்லை. போறாத குறைக்கு குறட்டையின் சத்ததுடன், விசில் ஊதுவது போன்ற சத்தமும் வரத் தொடங்கியது.

சுந்தரம் இனிமேலும் பொறுமையாக இருக்க முடியாமல் “அரசே! ஏன் இந்த மௌனம்?” என்று சுப்புணியின் தோள்களைப் பற்றி பலமாக ஆட்டினான்.

அந்தச் செயலில் பதட்டமடைந்து எழுந்து நிற்கப் போன சுப்புணி, உடல் தள்ளாட தடாலென்று குப்புற விழுந்தான்.

அடுத்த நிமிடம் ஸ்டேஜ் மீது பழைய செருப்புகள் மழையாகப் பொழிந்து இருக்க வேண்டியதுதான். ஆனால் அனுபவம் மிகுந்த சுந்தரம் சட்டென்று சபையில் வீற்றிருந்த பெரியவர்களைப் பார்த்து “பீஷ்ம, துரோண, கிருபாசாரியாரியார் முதலான பெரியோர்களே! திருதராஷ்ட்ரனின் இக்கட்டான நிலைமையைப் பார்த்தீங்களா? தூதுவனாக வந்த என்னுடைய வேண்டுகோளை மறுக்கவும் முடியாமல், தன் பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாத மகனுக்கு எடுத்துச் சொல்லவும் முடியாமல் தர்மசங்கடத்தில் தவிப்பதைக் கண்டீர்களா? மனதில் ஏற்பட்ட போராட்டத்தினால் நிலை தடுமாறி தரையில் சரிந்து விட்டான் பாவம்!” என்று சொல்லிக் கொண்டே சுப்புணியின் அருகில் சென்றான்.

“திருதராஷ்ட்ரா! மனதைத் தேற்றிக் கொண்டு ஆக வேண்டியதைப் பார்ப்பதுதான் அரசனுக்கு உகந்த செயல். என் கையைப் பற்றி எழுந்து கொள்ளும்.” சுந்தரம் சுப்புணியின் கையைப் பற்றி எழுப்பி சிம்மாசனம் வரையில் அழைத்துச் சென்று உட்காரவைத்தான்.

கீழே விழுந்ததும் சுப்புணிக்கு விழிப்பு வந்து விட்டது. நிலைமையைப் புரிந்து கொண்டு வாயைத் திறக்காமல் சிம்மாசனத்தின் மீது அமர்ந்துகொண்டான்.

பிறகு “கிருஷ்ணா! என் கையில் எதுவும் இல்லை. நடந்தது, நடப்பது, நடக்கப் போவது எல்லாம் அறிந்திருக்கும் உனக்கு இந்தப் பேச்சு வார்த்தையின் விளைவு எப்படி இருக்கும் என்று தெரியாதா? உன் விருப்பம் எப்படியோ அப்படியே ஆகட்டும்” என்று மனப்பாடம் செய்திருந்த வசனத்தை ஒப்பித்துவிட்டு மறுபடியும் தலையை மேலும் கீழும் ஆட்டத் தொடங்கினான்.

நாடகத்தில் புதிதாக நுழைக்கப்பட்ட இந்தக் காட்சி நாடகத்தை மேலும் மெருகேற்றுவதற்காக இயக்குனர் சேர்த்திருக்கிறார் என்று மக்கள் நினைத்து விட்டார்கள். அந்தக் காட்சி இயற்கையாக இருந்ததுடன் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டதால் கைகளைத் தட்டி தங்களுடைய ஆதரவை, உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.

பாக்கியிருந்த நாடகத்தை சுந்தரம் வெற்றிகரமாக நடத்தி முடித்தான்.

அன்று முதல் அந்தக் காட்சி அவர்கள் போடும் ‘ஸ்ரீ கிருஷ்ண தூது’ நாடகத்தில் தவறாமல் இடம் பெற்றது. அது மட்டுமில்லை. மன உளைச்சல் தாங்காமல் திருதராஷ்ட்ரன் கீழே விழுந்த காட்சியில் இயற்கையாக நடித்த சுப்புணி இந்த நாடகத்தின் மூலம் நடிகனாக மாறிவிட்டான். திருதராஷ்ட்ரன் வேடத்தில் நாடகக் குழுவில் சாசுவதமாக இடம் பெற்றுவிட்டான்.

முற்றும்

தெலுங்கில் திரு. K.R.K.Mohan

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
tkgowri@gmail.com

மஞ்சரி டிசம்பர் 2003

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்