சுனாமி உதவி

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

வரதன்


பல காலமாக சமூக சேவையே தங்கள் பணியாக கொண்ட தொண்டுள்ளங்கள், மற்றும் அமைப்புகள் ஒரு பக்கம் களமிறங்கி சுனாமி துயர் துடைக்க வேலை பார்க்க, தற்போது பல அமைப்புகள் சுனாமி சேவைக்காக புதிதாய் இறங்கியுள்ளன. எல்லோருக்கும் நல்ல எண்ணம் இருக்கலாம். ஆனால், எல்லோருமே துணி கொடுக்கிறேன், சாப்பாடு போடுகிறேன் என்று இறங்கியதன் விடை, மலையாய் குவிந்து கிடக்கும் துணிகளும், யார் யாரோ வாங்கிப்போகும் சாப்பாடு பொட்டலங்களும்.

———- தற்போது அது தாண்டி, ஒரு முகப்படுத்தப்படும் சேவையே நல் விளைவை ஏற்படுத்தும் என்ப்து கண்கூடாகிப் போனது.

இப்போதெல்லாம், நமது மின்னெஞ்சல் பொட்டியைத் திறந்தால், யாராவது ஒருத்தர் சுனாமி நிதி கேட்டு புதிதாய் அனுப்பிய கடிதம் எப்போதும் ஒன்று இருக்கிறது.

அதனால், உதவும் உள்ளங்களுக்கும் சில யோசனைகள்.

1. பண உதவி கேட்டும் அமைப்பின் திட்ட வடிவு கேளுங்கள். தமிழ்நாடு பூராவும் என்பது மாதிரி திட்டம் சொன்னால் மறுத்து விடுங்கள். இதற்கு விதி விலக்காக, அரசு அமைப்புகளும், ரெட் கிராஸ், அமையட்டும்.

2. அந்த அமைப்புகளின் திட்டம் ஒரு முகப்படுத்தப்பட்டதா எனக் கேளுங்கள். எல்லா இடத்திலும் நாய் வாய் வைத்த மாதிரி இல்லாமல், ஒரு கிராமத்தை தத்து எடுத்த அமைப்புகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அது தான் உங்கள் உதவி சரியாகச் சென்றடைய உதவும்.

3. சிறு சிறு நிறுவனங்களாக இருப்பின், அவர்களை ஒன்றினைந்து ஒரு கிராமத்தைக் கூட்டாக தத்தெடுத்து மீண்டும் கட்டமைக்க திட்ட வடிவு கேளுங்கள்.

ஒவ்வொருவரிடமும் ஒரு பலம் இருக்கும். அது இணைந்தால் தான் விடை சரியாக வரும். இல்லாவிடில் இவர்களின் ஆர்வமே, ஆர்வக்கோளாறாக ஆகிவிடும். சிறுசிறு துளியாக சேர்ந்து ஆறாக பெருகும் உதவி, விழலுக்கு இறைத்த நீர் ஆகி விடக்கூடாது.

4. கிராமத்திட்டம் சரியாகும் என்பதற்கு ஹிந்தி நடிகர். விவேக் ஓபராய் , செயல்பாடே சாட்சி.

5. கடலூர் ஆட்சியாளர் கூட, கிராமத் தத்து திட்டமே தீர்வாகும் என்று சொல்லிவிட்டார்.

6.என்னவெல்லாம் செய்யலாம்:

– ஒவ்வொரு நாட்டில் உள்ள தமிழ் சங்கங்களும் இணைந்து ஒரு கிராமத்தைத் தத்தெடுப்பது அவசியம். எப்படி நடந்தது எங்கோ என்றாலும் அமெரிக்கா முதல் கொண்ட நாடுகள் ஓடி உதவுகிறதோ அது போல் இவர்கள் ஒரு கிராமத்தையாவது தத்தெடுப்பது அவசியம்.

– நிதி ஆதார வசதி கொண்ட இந்தியாவிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அமைப்புகள், ஒவ்வொன்றும் ஒரு கிராமத்தை தத்தெடுப்பது அவசியம்.

அது விட்டு, கன்னியாகுமரி, கடலூர் முதற்கொண்டு அந்தமான் வரை நாங்கள் உதவக் கிளம்பி விட்டோம் அதனால் நிறைய உதவி வேண்டும் என்று சொன்னால், நிச்சயம் அவர்களைப் புறந்தள்ளுங்கள்.

– மருத்துவர்கள் மாதிரி, ஒவ்வொரு கிராமத்திலும் பத்து இருபது பொறியியல் வல்லுனர்கள் சென்று, கட்டமைப்பு வேலைகளுக்கு உதவி செய்தல் வேண்டும்.

– உதவும் கரங்கள் போன்ற அமைப்புகள் சில கிராமங்களின் குழந்தைகள் காப்பக வளர்ச்சி மையம் ஆரம்பிக்கலாம். அது தாண்டி, காப்பகங்கள் ஆரம்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் நடத்துமுறைகள் பற்றி எண்ணப் பரிமாற்ற கலந்துரையாடல் நடத்தலாம்.

– எக்ஸ்ஸொனரா போன்ற அமைப்புகள், தங்களின் மனித சங்கலி சக்தியை வைத்து திட்ட வடிவு தீட்ட உதவுதல், மற்றும் அந்த உதவி சரியான மக்களுக்கு சேர்கிறதா என்பன போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம். இவர்கள், உதவும் அமைப்புகளுக்கும், உதவுபவர்களூக்கும் பாலமாக இருக்கலாம்.

– அரசியல் அமைப்புகள், கிராமங்களை பலவாறாகப் பிரித்துக் கொண்டு போட்டி போட்டு சரி செய்யலாம் ( செய்வார்களா.. ? )

– இந்த நடிகர்கள், அதுவும் தமிழர் பிரச்சனை, தமிழர் நலன், நாளைய முதல்வர் என்று பேசிப் பேசியே, தங்களின் வளர்ச்சி கண்டவர்கள் கட்டாயம் ஒரு கிராமத்தை இல்லாவிடில் ஒரு தெருவையாவது தத்தெடுக்க வேண்டும். இரசிகர் மன்றம் வைத்து பிழைப்பு நடத்து ஒரு படத்திற்கு 3 கோடி, பத்து கோடி வாங்குபவர்கள் ஒரு லட்சம், 21 லட்சம் என்று கொடுப்பது காணும் போது மனது நிம்மதியற்றுப் போகிறது.

– தன்னார்வ அமைப்புகள், சேவை அமைப்புகள் கண்டு அரசு பயப்படத் தேவையில்லை. அரசு, கணக்கு எடுத்தல் வேலையை சரியாக செய்தாலே மிகப் பெரிய நன்மை தரும்

-இந்த மத்திய அரசு, நெஞ்சு நிமிர்த்தி இந்தோனேஷியாவில் போய், எங்களிடம் சுனாமி தொழிநுட்பம், அறிஞர் உதவி உள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்டாலும் அனைவருக்கும் உதவோம் என்ற உதார் விடும் முன், சுனாமி சீரமைப்புப் பணி இந்தியாவில் ஒழுங்காக நடந்திட நடவடிக்கை எடுத்தாலே கோடிப் புண்ணியம். அமெரிக்கா தெனாவெட்டு காட்டும் முன் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளது. அதிலும் காமெடி, நமது விஞ்ஞான சனாதிபதி, இன்னும் ஐந்து வருடங்களுக்குள் சுனாமி எச்சரிக்கை தொழில் நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் கண்டு பிடிக்க வேண்டும் என்று சொன்ன ஒரு வாரத்திற்குள் மத்திய அமைச்சரின இந்த மார்தட்டு.

முதலில் கபில் சிபிலை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். முன்பு லால்பகதூர் சாஸ்திரி தான் காரணமில்லா ஒரு ரயில் விபத்திற்கு ராஜினாமா செய்ததை நினையுங்கள்.

கண்ணீரும் கம்பலையுமாய் பரிதவிக்கும் மக்கள், கொடையாளிகள் டஹ்ரும் பணத்தால் மற்றும் அல்ல, ஜாக்கிரதை உணர்வாலும் தான் மீண்டு வர முடியும்.

—————————- வரதன்

—-

Series Navigation